• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. பூமாலையே தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஒருவார காலமாக சத்யபாரதி எதையோ பறிகொடுத்தார் போல இருக்கிறாளே என்று மன மாற்றத்திற்காக மகாபலிபுரம் அழைத்து வந்திருந்தாள் ரூபா.

வந்த இடத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச் சென்றாள் ரூபா. சத்யா கைப்பேசியில் வெண்ணை உருண்டை பாறையை படம் பிடிக்க கோணம் பார்த்தவாறு ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒதுங்கினாள்..

அந்த மரத்தின் மறுபுறம் ஒரு இளம் பெண்ணோடு கிருஷ்ணா பேசிக்கொண்டு இருப்பதை சத்யபாரதி பார்த்தாள். உடனடியாக அங்கிருந்து சென்று விடவேண்டும் என்று முடிவு கட்டினாள். ஆனால் இருவாரத்திற்கு பிறகாக கேட்ட கிருஷ்ணாவின் குரல் அவளை கட்டிப்போட்டது. கூடவே எல்லா பெண்களை போல தான் விரும்பும் ஒருவனின் மனம் கவர்ந்த பெண் யாரென்பதும் தன்னை விட எந்தவிதத்தில் அவள் உயர்வு என்றும் தெரிந்து கொள்ள விரும்பினாள்.

ஒட்டுக் கேட்பது தவறு என்று தெரிந்தபோதும் அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை, அவன் தொடர்ந்து பேசுவதை கவனித்தாள். "அனி, அன்றைக்கு நான் உன் வீட்டிற்கு வந்தபோதே உனக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துவிட்டது. நான் எப்படி கேட்டாலும் நீ பதில் சொல்ல மாட்டேனு உனக்கு பின்னால் ஆள் போட்டு வைத்தேன். அதனால் தான் சரியான சமயத்தில் ரவி, உன்னை இங்கே பார்த்து எனக்கு தகவல் கொடுத்து விட்டான். இல்லை என்றால் என்னவாகியிருக்கும்? மாமாவிற்கு இப்போது தான் உடம்பு ஓரளவுக்கு தேறி வருகிறது. உனக்கு ஒன்று என்றால் அவர் எப்படி தாங்குவார் அனி? எதுவென்றாலும் நீ என்னிடம் வந்திருக்க வேண்டாமா? சரி, விடு தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி முட்டாள்தனம் செய்யமாட்டேன் என்று நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணு… அத்தோடு, உன்னை நான் நல்லபடியாக வாழவைப்பேன் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா அனி? "

"ப்ராமிஸ் அத்தான். நீங்க சொல்கிறபடி கேட்கிறேன்.. நிச்சயமாக.. இப்போதைக்கு இந்த உலகில் நான் முழுமையாக நம்பும் ஒரே ஆள் நீங்கள் மட்டும்தான். அப்பா அம்மாவை நினைச்சாதான் கொஞ்சம் பயமாக இருக்கு அத்தான், அம்மா எப்ப பார்த்தாலும் என் கல்யாணத்தை பற்றித்தான் பேசுகிறாள். நான் படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டு இருக்கிறேன் அத்தான்."

"தட்ஸ் குட் மை கேர்ள். நீ படிப்பை முடிப்பதில் கவனம் செலுத்து. அதற்குள் நானும் அக்காவிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கி, கல்யாணத்தை நடத்திவிட்டால் நம் பிரச்சனையும் தீர்ந்துவிடும். அத்தை வாயையும் அடைத்துவிடலாம். என்ன சொல்கிறாய்?"

கிருஷ்ணாவின் குரலில் இலகுத்தன்மை வந்துவிட்டிருக்க..."அதுதான் சொன்னேனே அத்தான். உங்கள் விருப்பம் தான், என் விருப்பம். இனி நீங்கள் என்ன சொல்றீங்களோ அதை மட்டும் தான் செய்வதாக இருக்கிறேன் ’’ என்றவள் "சரி, அத்தான் வாங்க எனக்கு ரொம்ப பசிக்கிறது காலையில் கூட நான் சாப்பிடவில்லை" என்று சற்று முன் கலக்கமாக ஒலித்த அந்த பெண்ணின் குரலில் குதூகலம் நிரம்பியிருந்தது..

"சரி சரி வா,” என்ற கிருஷ்ணா எழுந்து சுற்றுமுற்றும் பார்க்க சட்டென தன்னை மறைத்துக் கொண்ட சத்யபாரதியின் இதயம் வேகமாக அடித்து கொண்டது. அவர்கள் வாயில்புறமாக செல்ல, அவர்களோடு எங்கிருந்தோ வந்து இணைந்த அந்த உயரமான இளைஞனை கண்ட சத்யபாரதி திடுக்கிட்டாள்.

கிருஷ்ணாவின் முன்னாள் காரியதரிசி ரவி. சில தினங்களுக்கு முன்பு தான் பார்த்திருந்ததால் அவனை நன்றாக அடையாளம் தெரிந்தது. மூவரும் செல்வதை பார்த்தவாறு நின்றவளின் அருகே வந்த ரூபா, “அது கிருஷ்ணா சார்தானே சத்யா”,என்று வினவினாள்.

மனதில் ஏதேதோ எண்ணங்களின் கலவையில் லயித்திருந்த சத்யபாரதி, "ம்ம்.. என்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை. அவள் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை உணர்ந்த போதும் சாப்பிட போகவேண்டுமே என்று

"சத்யா சாப்பிட போகலாமா? மணி 2 ஆகப் போகுது. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம். அதனால் இன்னும் லேட்டா போனால் சாப்பாடு காலியாகிவிடும்"

தன்னிலிருந்து மீண்டு ஒருவாறு ரூபாவின் பேச்சை கேட்ட சத்யபாரதி,“எனக்கு பசிக்கவில்லை ரூபா. நீ மட்டும் போய் சாப்பிட்டு இங்கேயே வந்து விடுகிறாயா?” என்றாள்.

"நல்லா இருக்கு, நீ சொல்றது நான் மட்டுமாக போய் எப்படி சாப்பிடறது? காலையில் கூட நீ சரியா சாப்பிடலை. எப்படி இப்ப பசிக்காமல் போகும்? எந்த விஷயத்தையும் பசிச்ச வயித்தோட யோசிச்சா முடிவெடுக்க முடியாதுன்னு எங்க ஆசிரமத்தில் சொல்லுவாங்க"என்றுவிட்டு தொடர்ந்து "பேசாமல் வா போய் சாப்பிட்டுவிட்டு கடற்கரையில் கொஞ்சம் நேரம் தண்ணியில விளையாடிட்டு வீடு போக சரியா இருக்கும் " என்று ரூபா அழுத்தமான குரலில் சொல்லி அவள் கைப்பற்றி அழைத்துப் போக பதில் பேசாமல் உடன் சென்றாள் மற்றவள்.

சத்யபாரதிக்கு அதற்கு மேல் அந்த சுற்றுலா தலம் ரசிக்கவில்லை. ஆனாலும் ரூபாவிற்காக சாப்பாட்டை ஒருவழியாக முடித்துவிட்டு கடற்கரைக்கு சென்றனர். அங்கே தண்ணீரில் நிற்கலாம் என்று சத்யபாரதியை ரூபா அழைத்தாள். அவளுக்கு தண்ணீர் என்றாலே பயம். அதிலும் சிறுவயதில் தண்ணீரில் விழுந்து கிருஷ்ணா காப்பாற்றிய பிறகு அவளுக்கு ரொம்பவே பயம் தான். அதனால் வரவில்லை என்று கரையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலானாள்.

மனதுக்குள் சற்று முன் கிருஷ்ணா பேசியதே ஒலித்துக் கொண்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்தது. சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் தண்ணீரில் நனைந்து விளையாடிக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தனர். அதில் ஒரு இளம் பெண் அவளது கருத்தை கவர்ந்தாள். அவள் அன்று மருத்துவமனையில் பார்த்த அனு. அன்று அவள் கர்பமாக இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவளோ குதித்து ஓடிப்போய் நிற்பதும் பிறகு கரைக்கு வருவதுமாக சின்ன குழந்தையாக விளையாடிக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் தடுமாறிக் கீழே விழ அவளையே கவலையாய் பார்த்திருந்த சத்யபாரதி எழுந்து ஓடிச் சென்று தூக்கிவிட, சிரித்தபடியே நிமிந்தவளின் முகம் மாறியது, சட்டென்று அவளது கைகளை உதறிவிட்டு,அங்கிருந்து கரையை நோக்கி ஓடிப்போனாள்.

அவ்வப்போது சத்யபாரதியின் மீது ஒரு கண்ணை வைத்தபடி தண்ணீரில் கால்களை நனைத்தபடி நின்றிருந்த ரூபா, திகைப்புடன் நின்ற சத்யபாரதியை கண்டு விட்டு அருகில் சென்றவள் அவளது கரத்தைப் பற்றியவாறு, "சத்யாம்மா வா, தண்ணியில கொஞ்சம் நேரம் நின்றால் ரிலாக்ஸாயிடுவே" என்று தண்ணீருக்குள் அழைத்துச் சென்றாள். நீரலைகள் பாதம் நனைத்ததும் நிகழ்வுக்கு திரும்பிய சத்யபாரதி, பதற்றத்துடன் "இல்லை, வேண்டாம் ரூபா, என்னை விடு" என்று தன் கையை விடுவிக்கும் போதே பெரிய அலை வேகமாய் வந்து அவர்களை நனைக்கவும், இருவரும் தடுமாற பற்றியிருந்த பிடிமானம் விலக தண்ணீருக்குள் அடித்து செல்லப்பட்டாள்.

ரூபா நடந்தததை உணர்ந்து கத்தும்போதே உயரமான இளைஞன் தண்ணீரில் குதித்தான். அவன் கிருஷ்ணா. ...

கிருஷ்ணா தண்ணீரில் முழ்கிக் கொண்டிருந்த சத்யபாரதியை தூக்கி வந்து கரை சேர்த்துவிட்டு அவளது கைகளை தேய்த்து விட்டவாறு,"அவளுக்கு தான் தண்ணீர் என்றாலே பயம் என்று உனக்கு தெரியாதா ரூபா? அப்புறமும் ஏன் தண்ணிக்குள்ள கூட்டிட்டு போனாய்?? கேட்டவனின் குரலில் கடுமை தெரிய...

அவன் செய்வதைப் பார்த்து அவளும் சத்யபாரதியின் கால்களை தேய்த்துவிட்டபடி ரூபா, "அது எனக்கு தெரியாது சார். மனசு ஏதோ சரியில்லாமத்தான் தண்ணீரில் நிற்க வரலைன்னு நினைச்சு இழுத்துட்டுப் போனேன்". வருத்தமான குரலில் ரூபா சொல்ல, கிருஷ்ணாவின் கவனம் முழுதும் சத்யபாரதியிடம் இருந்தது.

அனிஷா கொணர்ந்து தந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை முகத்தில் தெளித்த பின்னும் அவளிடம் அசைவின்றி போகவும் மனது பதற,"ரவி சீக்கிரம் காரை ஸ்டார்ட் பண்ணு" என்று கட்டடளையிட்டுவிட்டு, சத்யாவை தூக்கிக் கொண்டு முடிந்தவரை மணலில் வேகமாக நடந்தான். இரண்டு பெண்களும் அவனை தொடர, ரவி கார் பார்க்கிங் நோக்கி ஓடிப்போனான்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு சத்யபாரதியை கொண்டு சென்றனர். ஸ்ட்ரெக்ச்சருக்கு காத்திராமல் தானே அவளை உள்ளே சுமந்து சென்றான் கிருஷ்ணா.

மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த மருத்துவர், "பயப்படும்படியா ஒன்றைமில்லை. சரியாக சாப்பிடாததால், தூங்காததால், ரொம்ப அனீமிக்கா இருக்காங்க. அதனால் ஏற்பட்ட மயக்கம்தான். இப்ப யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். தூங்குறாங்க. ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. அது முடிஞ்சதும் கூட்டிட்டுப் போகலாம்." என்று விட்டுப்போனார்.

அங்கிருந்த இருக்கையில் ஆசுவாசமாக சிலகணங்கள் யோசனையாய் அமர்ந்திருந்த கிருஷ்ணா, மணியை பார்த்துவிட்டு, ரவியை அழைத்து அனிஷாவுடன் சென்னைக்கு கிளம்பச் சொன்னான்.

இருவரும் கிளம்பிச் சென்றபின், கிருஷ்ணா வெளியே சென்று திரும்பிய போது கையில் இருவருக்கும் உடைகள் இருந்தது. அதை ரூபாவிடம் கொடுத்து விட்டு, மறுபடியும் சென்று இரண்டு கோப்பைகளில் தேனீர் வாங்கி வந்து ரூபாவிற்கு ஒன்றை கொடுத்து மற்றதை தான் அருந்தலானான்.

சிலகணங்கள் மௌனமாய் கழிந்தபின், "நீ அப்போ என்னவோ மனசு சரியில்லை என்று ஏதோ சொன்னாய், ஏன் என்னாச்சு ரூபா?" என்று வினவினான்.

"அது ஆமா சார். ஒருநாள் புது வேலைக்குப் போறேன்னு சொன்னாள். ஆனால், அன்னையில் இருந்து அவள் சரியா சாப்பிடறது, தூங்குகிறது இல்ல. நானும் ஏதேதோ முயற்சி செய்து பார்க்கிறேன். இன்றைக்கு கூட மாறுதலுக்காக தான் இங்கே கூட்டிட்டு வந்தேன் சார். கொஞ்சம் நல்லபடியாகத்தான் இருந்தாள், திடீரென்று என்னாச்சோ தெரியவில்லை. சாப்பிடக்கூட கட்டாயப்படுத்திதான் கூட்டிப்போனேன். பிறகு, கடல் காற்றிலும், தண்ணீரில் நின்றால் கொஞ்சம் மனநிலை மாறும்னு நினைச்சேன். அது இப்படி ஆயிடுச்சு" ரூபாவின் விழிகள் கலங்கிற்று.

“ஓ! என்றவனின் மனம் குற்றவுணர்வில் மனம் சுட்டது. அவள் மனம் அறிகிறேன் பேர்வழி என்று அவளை மொத்தமாக தொலைக்க அல்லவா வழி செய்துவிட்டான். ம்ஹூம், இனி இதை இப்படியே விடக்கூடாது.பேசி .முடித்து
விட வேண்டும், என்று தீர்மானித்தவன், “உன் மேல் தப்பில்லை ரூபா. அவளுக்கு நல்லது என்று நீ நினைத்து செய்திருக்கிறாய். அது தெரியாமல் நானும் திட்டிவிட்டேன்.. சாரிம்மா”, என்று ரூபாவை தேற்றுகையில் அவனது கைப்பேசி ஒலிக்க, கனகவல்லியின் அழைப்பு.

அவன் இருந்த மனநிலையில் பேசப்பிடிக்கவில்லை. ஆனாலும் அன்னையாய் வளர்த்து விட்டவளை புறக்கணிக்கவும் முடியவில்லை. ஒத்துழைக்க மறுத்த குரலை சீர் செய்தபடி, கைபேசியை உயிர்பித்ததும் அவனைப் பேசவே விடாமல், "கண்ணா எங்கே இருக்கிறப்பா, உங்க மாமா நம்மை மோசம் பண்ணிடுவாரு போலருக்கு. நீ உடனே கிளம்பி வா கண்ணா" என்று ஓவென்று அழுகை குரலில் ஒப்பாரி வைக்க,

பதற்றத்தை அடக்கிக் கொண்டு ,"அத்தை ப்ளீஸ் அமைதியாக இருங்கள். மாமாவுக்கு ஒன்றும் ஆகாது. இதோ நான் உடனே கிளப்பி வர்றேன்" என்று தொடர்பை துண்டித்தான்.

சத்யபாரதியை இந்த நிலையில் விட்டுவிட்டு செல்ல மனமே இல்லை. ஆனால் அங்கே அவனை தகப்பன் போல வளர்த்தவர் உடல் நலமில்லாது இருக்கிறார். அங்கே அருகே அனிஷாவும் இல்லை.

அவன் போயே ஆகவேண்டும். இங்கே சத்யபாரதிக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. கூடவே ரூபா இருப்பதால் பயப்பட ஒன்றுமில்லை என்று வேகமாக எண்ணியவன், பெணகள் இருவரும் சென்னை செல்வதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்துவிட்டு,"ரூபா, என் மாமாவிற்கு உடம்பு சரியில்லை என்று அத்தை போன் செய்தார்கள். நான் அவசரமாக போகவேண்டும். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொஞ்சம் நாள் தான் ஆகுது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இங்கே பாரதியை இந்த நிலையில் விட்டுவிட்டு செல்ல எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது" என்றவனின் பேச்சில் குறுக்கிட்டு,

“உங்கள் சூழ்நிலை எனக்கு புரிகிறது சார். நீங்கள் கிளம்புங்க. நான் சத்யாவை பார்த்து கூட்டிட்டு போயிடுவேன்"என்றாள் ரூபா.

"நன்றி ரூபா, நீ இருக்கிற தைரியத்தில் தான் நானும் கிளம்புறேன் ரூபா. நீங்கள் கிளம்புவதற்கு வண்டிக்கு சொல்லி விட்டேன். ஆஸ்பத்திரிக்கு பில்கூட நான் கட்டிவிட்டதால் நீ எதுவும் தரவேண்டாம், அப்புறம் நாளைக்கு பாரதியை வேலைக்கு அனுப்பாதே. நான் முடிந்தால் நாளை வந்து பார்க்கிறேன் என்று சொல்லு, எனக்கு நேரம் குறைவாக இருக்கு" என்று அவளிடம் விடைபெற்று ஓட்டமும் நடையுமாக விரைந்தான் கிருஷ்ணா.

சென்னை நோக்கி காரில் செல்லும் போதே மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்துவிட்டு, அனிஷாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி ரவியிடம் சொல்லிவிட்டு நேராக மருத்துவமனைக்கு சென்றான் கிருஷ்ணா.

அங்கே. ...

 

Attachments

  • images (10).jpeg
    images (10).jpeg
    31.5 KB · Views: 3