• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24. அதியா - காதல் தவிர்!

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
காதல் தவிர்!

- அதியா


ஒரு காதலர் தினம்...
தன் முன்னே வீற்றிருந்த சிகப்பு ரோஜா கொத்துக்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்தாள் மதிவதனி. தன் சுட்டும் சுடர் விழியை நாற்புறமும் திருப்பி, தன் அலுவலக அறையில் யார் இதனை வைத்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சி செய்தாள்.

விடை அறிய முடியாத தன் வினாவினை நினைத்து பெருமூச்சுடன் தன் மதிய உணவினைத் திறந்தாள். டிபன் கேரியர் முழுவதும் நிரம்பி வழிந்த டைரி மில்க் சாக்லேட்டைக் கண்டதும் மனம் எல்லாம் இனித்தது அவளுக்கு.

தன்னை கலாட்டா செய்வதற்காக யாரும் இப்படி செய்கிறார்களா? என்று நோட்டமிட்டாள். அலுவலகத்தில் அனைவரும் தத்தம் வேலையை அமைதியாய் செய்து கொண்டிருக்க, குழப்ப மேகங்கள் அவள் வானில் தவழ ஆரம்பித்தது.

அந்த மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில், சாதாரண டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்தாள்.

பணியில் சேர்ந்த இந்த இரண்டு ஆண்டுகளில் யாருடனும் அவளுக்கு நெருக்கமோ பழக்கமோ கிடையாது. அலுவலக வண்டியில் காலையில் வருவதும் மாலையில் போவதும் அவளது வழக்கம்.

வெகு நேரம் அவள் யோசனையில் இருந்ததால், ஸ்லீப் மோடில் இருந்த கம்ப்யூட்டர் திரை கருப்பாக இருந்தது. அந்தத் திரையில் தன் முகத்தினை உற்று நோக்கினாள்.

குறை சொல்ல முடியாத திருத்தமான தோற்றம். கவி பேசும் கண்கள், கூர் நாசி, செப்பு இதழ்கள், அழகில் ஒன்றும் குறை இல்லை. ஆனால்...

ம்ஹூம்... என்று தலையசைத்து விட்டு, கண்ணுக்குத் தெரியாத குறை கூட கண்ணாடியில் தெரிகிறதே! என்ற விரக்தி புன்னகை அவள் இதழ்களில் மலர்ந்தது. அதையும் மீறி எப்படி ஒருவனால் தன்னை விரும்ப முடியும்? எல்லாம் விளையாட்டு என்று நினைத்துக் கொண்டவள்,

சாக்லேட்டுகளை எல்லாம் அள்ளி குப்பைத் தொட்டியில் போடலாம் என்று எழும்போது, அவளது அலைபேசியில் வரிசையாக மெசேஜ் வருவதற்கான ஒலி எழும்பியதும், நின்று நிதானமாக தன் அலைபேசியை நோக்கினாள்.

விதவிதமான இதய சின்னங்கள் அன்பை கொட்டிக் கொண்டிருந்தன அந்த அலைபேசியில். அலைபேசி எண் தெரியாததாக இருந்ததும் யோசனையாக நெற்றியைச் சுருக்கினாள்.

ஒரு பெண் தன்னை பெண் என்று உணராத வரை அவளது உணர்வுகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த பூட்டைத் திறக்கும் சாவி கைவசமாகும் போது பூட்டுக்கள் எல்லாம் பூவாய் மலர்ந்து சிரிக்கும்.

புரியாத உணர்வில் ஆட்பட்டிருந்த மதிவதனியும் தன்னுடைய எதார்த்தத்தை உணர்ந்து வறண்ட சிரிப்புடன் அனைத்தையும் ஒதுக்கி விட்டு மதிய உணவிற்காக கேண்டீனுக்கு சென்றாள்.

கையை உயர்த்திக்கொண்டே அவள் உள்ளே நுழைந்ததும் அவளுக்கான உணவினை. மேசையில் வருவித்து தந்தனர்.

தனக்கென இருக்கும் அந்த சின்னஞ்சிறு நிமிடங்களையும் ரசித்து, உணவை ருசித்தாள். கடைசி வாய் உணவை கண்மூடி ருசித்து விழுங்கி விட்டு கண்ணைத் திறந்ததும் அவள் முன்னே அமர்ந்திருந்தான் அவன்.

ஆகாய வண்ண முழு நீள சட்டையில், கம்பீரமாக அமர்ந்திருந்த அவனை புருவங்கள் சுருக்கி யோசனையுடன் பார்த்தாள்.

அவளின் துடிக்கும் மெல்லிதழ்களை பார்த்துக் கொண்டே, எழுந்து நின்றான் அவன். கீழே குனிந்து எதையோ எடுத்துவிட்டு, அவளின் முன் நீண்ட அவனின் வலியக்கரம் தன்னை அடிக்க போவதாக நினைத்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.


சட சடவென தன் மேல் விழுந்த மென்மையான, குளுமையான உணர்வில் கண்களை மெல்ல திறந்தவள், பூக்குவியலுக்குள் நின்றிருந்தாள்.

விழிகள் விரித்து, அவள் முகம் காட்டிய வர்ணஜாலத்தில் வியப்பே மிகுந்திருந்தது. எதிரில் நின்றிருந்தவனின் கண்களிலோ காதல் கரை புரண்டோடியது.

அவள் தன்னைப் பற்றி சொல்வதற்கு கைகளை உயர்த்திய போது, "ம்ஹூம்... நான் துருவன். சிஸ்டம் அனாலிசிஸ் அண்ட் டிசைன் இன்ஜினியர். நீ வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை உன் பழக்கவழக்கங்கள் எனக்கு அத்துபடி. ஆரவாரம் இல்லாமல் என் அடி மனதில் என்றோ நீ குடியேறி விட்டாய்.

இயந்திரத்துடன் போராடிய நான் இந்தக் காதலர் தினத்தில் உன் இதயத்துடன் போராடி காத்திருக்கிறேன். நிச்சயம் வெற்றி எனக்குத்தானே வதனா?" என்றான் தேக்கி வைத்த காதலை மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டி.'தன்னைப் பற்றி முழுவதாகத் தெரியுமா?' என்ற கேள்வியை தன்விரல் நுனியில் தேக்கி தன்னை நோக்கி சுட்டிக் காட்டினாள்.

துருவ் இமைகள் மூடித் திறந்து, 'ஆம்' என்பதைப் போல் தலையசைத்தான்.

பாவையவளின் கண்கள் கலங்க, அவளின் சுட்டு விரலை பற்றிக்கொண்டு தன்நுனி மூக்கில் உரசி, "என்னை ஆள என் தேவதைக்கு சம்மதமா? " என்றான் புன்னகையுடன்.

நடப்பதை நம்ப முடியாமல் சட்டென்று திரும்பிக் கொண்டாள். அவள் முன்னே தன் அலைபேசியை பின்னிருந்து நீட்டி, அதிலிருந்த அவளது புகைப்படங்களை ஒன்றன்பின் ஒளிரச் செய்தான்.

பட்டாம்பூச்சியை பிடிக்க துரத்தும், மழையில் நனையும், குருவியோடு கத்தும், புறாவைப் போல் கைகளை அசைக்கும், இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் மதிவதனி அந்த அலைபேசியை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தாள்.

அவள் நகர முற்படும்போது அவள் காதில் ஹெட்போனை பொருத்தி, இசையை இசைக்க வைத்தான்.

"மெல்லினமே... மெல்லினமே...

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்!
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்!

நான் தூரத் தொியும் வானம்!

நீ துப்பட்டாவில் இழுத்தாய்!

என் இருவத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?"

பாடல் முடியும்போது அவன் காதல் தந்த அழுத்தத்தில், காதலிக்கப்படும் சுகத்தில் கண்களில் நீர் வழிந்தது மதிவதனிக்கு.

" நீ மறுத்தால், நிச்சயம் உன்னை நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை. என் காலண்டரில் காதலர் தினத்தை, என் காதல் மரித்த தினமாக எழுதிக் கொள்வேன்" என்றான் துருவ்

மதிவதனி அசையாமல் நிற்கவும், "உன் காதலுக்கு நான் தகுதி இல்லையா?" என்றான் ஏக்கமாக.

அடுத்த நொடி தரையில் மடங்கி, கைகளால் வாயினை பொத்தி கதறி அழுதாள்.

அவளிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காதவன் அவள் முன் மண்டியிட்டு அமர, குனிந்த தலையை நிமிர்த்தி இரு கரங்களாலும் அவனை வணங்கினாள்.

மதிவதனி இதுவரை தன் வாழ்நாளில் செய்யாத அந்த செயலைச் செய்தாள். அவனைப் பார்த்து, ' தான் அவனுக்கு பொருத்தம் இல்லை ' என்று கைகள் அசைத்து புரியாத மொழியில் ஒழுங்கற்ற உதட்டசைவால் சப்தம் எழுப்பினாள்.

அவளின் உணர்வுகளை உணர்ந்த துருவும் அந்த மௌனக்கிளியை தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டான். அவள் காதில் மெதுவாக, "ஐ லவ் யூ" என்றான்.

பிடிவாதமாக அவனிடமிருந்து விலகத் துடித்தவளை மீண்டும் தன் பிடிக்குள் நிறுத்தி, "காதலர் தினத்தில் கல்யாணம் செய்து கொண்டால், காதல் ஆயுள் வரை நீடிக்குமாம். இப்போதே கல்யாணம் செய்து கொள்ளலாமா?" என்றான் காதில் கிசுகிசுப்பாக.

அதிர்ந்து போனவள் வேகமாக தலையசைத்தாள். அவளை கைபிடித்து மெதுவாக எழும்பி நிற்கச் செய்தவன், மேசை மீது பல ஆவணங்களை பரப்பி வைத்தான். அவனின் அனைத்து அடையாள அட்டைகளும், தற்பொழுது திருமணத்திற்காக பதிந்த ரசீதும் அதில் அடங்கி இருந்தது .

'தனக்கு பேச வராது. இது சரி வராது ' என்பதைப் போல் சைகை செய்தவளிடம், "என்னை பிடிச்சிருக்கா?" என்றான் துருவ்.

யாருமற்ற, பேச்சற்ற அந்தக் கிள்ளைக்கு அவன் காதல் காணக் கிடைக்காத பொக்கிஷமாய் இருந்தது. குழப்பத்தில் அனைத்து திசைகளிலும் தலையசைத்தாள்.

" மை பேபி... " என்றவன் அவளை அழைத்துச் சென்ற இடம் பதிவாளர் அலுவலகம் தான்.

' நான் சம்மதிப்பேன் என்று எப்படி இவ்வளவு உறுதி?' என்றவளின் விழிகள் சுமந்த கேள்விக்கு, " என் காதல் மீது எனக்கு அதீத நம்பிக்கை!" என்றான் கண்ணடித்து.

துருவனின் நண்பர்கள், அம்மா, அப்பா, அக்கா, மாமா மற்றும் அவர்களின் குழந்தை என அனைவரும் ஆஜராகி நிற்க, அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது அந்த காதலர் தினத்தில்.

துருவன் தந்த ரோஜா வண்ணப் பட்டில் தேவதையாய் மிளிர்ந்தாள் மதிவதனி. ஒரே நாளில் காதல் அவளை உலகின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அடைந்தவளாக மாற்றியது.

துருவன் வீட்டில் மருமகளாக அடியெடுத்து வைத்ததும், அத்தனை உறவுகளும் அவளை அன்பாய் பார்த்துக் கொண்டது அவளின் குறையை துளியும் கணக்கில் கொள்ளாமல்.

அவளுக்கும் சேர்த்து துருவன் ஆயிரம் கதை பேசினான். மந்திரக்கோல் ஒன்று தட்டி தன் வாழ்க்கை மாறியதை போல் முதலில் திகைத்தவள், பின் அந்த பாசக் கூட்டிற்குள் ஐக்கியமானாள்.

அவளுக்கு நம்பிக்கை தருவதற்காகவே திருமணத்தை முடித்தவன், மனதளவில் அவள் தன்னை முழுதாய் நெருங்கும் வரை, கட்டிலில் அவளை தள்ளி வைத்தான்.

சென்னையில் இருக்கும் அவர்களது ஐடி நிறுவனத்திற்கு இருவரும் ஒரே நேரத்தில் கிளம்பி ஒரே நேரத்தில் வீட்டிற்கு திரும்பினர் காதலும் சீண்டலுமாக.

அவளுக்காகவே சைன் பாஷையை நன்றாக கற்றுத் தேர்ந்த துருவ், அவளின் சைகைகளை எளிதாக புரிந்து கொண்டான்.

கணிப்பொறியில் வெறும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருப்பவளை மென்பொருள் வகுப்பில் சேர்த்து விட்டான். திறமை வாய்ந்தவள் வாய்ப்பு கிடைத்ததும் அதனை அருமையாக பயன்படுத்திக் கொண்டாள்.

இரவு இருவரும் உறங்குவதற்கு முன், துருவ் தன் விரல்களால் இதய அமைப்பை செய்து காட்ட, கட்டிலின் மறுபக்கத்தில் இருக்கும் மதிவதனி தன் விரல்களாலும் இதய அமைப்பை செய்து காட்டுவாள்.

நாட்கள் செல்லச் செல்ல விரல் இதயங்களுக்கு இடையே இருந்த தூரம் குறைந்து கொண்டே வந்தது.

இருவரும் வீடு திரும்பும் போது மழை வெளுத்து வாங்கியது. துருவின் அக்கா வீட்டிற்கு சென்ற அவனது பெற்றோர்கள், இன்று இரவு வர முடியாது என்று அவனுக்கு அலைபேசியில் தகவல் அனுப்பினர்.

கதவைத் திறந்ததும், கரண்ட் இல்லாமல் இருளில் மூழ்கிய வீடே அவர்களை வரவேற்றது. அலைபேசியில் உள்ள டார்ச்சை ஆன் செய்து வெளிச்சத்தை பரப்பிக் கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர்.

யாரும் இல்லாமல் இருளில் மூழ்கி, குளிரும் இரவு துருவுக்கு உஷ்ணத்தை அதிகரித்தது.

கசியும் மெல்லிய ஒளியில் நனைந்த உடையுடன் இதய வடிவத்தை அவன் காட்ட, எப்பொழுதும் போல் விளையாட்டாய் பதிலுக்கு அவளும் இதயக்கூட்டை செய்து காட்ட, மதிவதனியின் இதய வடிவ விரல்களுக்கிடையே இருந்த இடைவெளியை துருவின் இதழ்கள் நிறைவு செய்தது.

விரல்களில் பட்டுத்தெரித்த அக்கினி முத்தம், பாவையவளை பற்றிக் கொண்டது. கைகளை பின்னே இழுத்துக்கொண்டு தலைகுனிந்தவளின் உச்சந்தலையில் மீண்டும் ஒரு மோக முத்தம்.

பதறிக் கொண்டே சுவற்றில் மோதி நின்றவளின் நெற்றியில் சத்தமாய் ஒரு முத்தம்.

நாணத்துடன் அவனுக்கு முதுகு காட்டி சுவற்றில் மோதிக்கொண்டாள். அவளை தன் புறம் திருப்பி, "சம்மதமா?" என்றான்.

சம்மதத்துடன் இமை தாழ்த்திய அவளின் இமைகள் சுமந்து கொண்டது அவன் இதழ்களின் சுமையை சுகமாய்.

வாழ்க்கை இத்தனை ஆனந்தமா? காதல் இத்தனை சுகமா? என்ற கேள்விகளோடு அவன் உயிரில் அவளும், அவள் உயிரில் அவனும் குடியேறினர்.

அந்த வருட முடிவில் அவர்களது அலுவலகத்தில், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தேக்கடியை அனைவரும் தேர்வு செய்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பில் அனைவரும் மெய்மறந்து திளைத்தனர். யானை சவாரி, படகு சவாரி, ஜீப் சவாரி என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.
தேக்கடியில் உள்ள பெரியார் புலிப்பாதையில் மலையேற்றம் செய்வதற்கு தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

இரண்டு இரவு, மூன்று பகல்கள் ஆகும் அந்த மலையேற்றத்தில் பங்கு கொள்ள சற்றே நடுங்கிய மதிவதனியை தோளோடு அணைத்துக் கொண்டு, 'நான் இருக்கிறேன்' என்று பாதுகாப்பு தந்தான் துருவ்.

கணவனின் கரம் தந்த கதகதப்போடு, தன் காதல் தந்த பாதுகாப்பில் புன்னகையுடன் அவனோடு இணைந்தாள் மலையேற்றத்தில்.

கடைசி நாள், எதிர்பாராமல் வந்த யானைக் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திசைக்கு ஒருவராக சிதறினர். எங்கும் புழுதி பறந்து, அனைவரின் கண்ணையும் மறைக்கவே காட்சிகள் தெளிவில்லாமல் போனது.

சிறிது நேரம் சென்ற பிறகு புழுதிப் புயல் அடங்கிய பின், அனைவரும் ஒன்று சேர்ந்தனர் மதிவதனியைத் தவிர.

" மதிவதனீ..... " என்று காடு அதிர கத்தினான் துருவ். தன் மனைவியால் பதில் பேச இயலாது என்பதை மறந்து போனான் அந்தக் காதல் கிறுக்கன்.

கண்ணீரோடு காடு முழுவதும் கத்தி தேடவே, அவள் சென்ற தடயம் ஒன்றும் இல்லாமல் போனது. பல நெடிய பள்ளத்தாக்குகள் மற்றும் புலிகளின் நடமாட்டம் இருந்ததால் தேடுதல் மிகவும் சிக்கலாக இருந்தது.

தொடர்ந்து பல பகல்கள், பல இரவுகள் தேடியும் அவர்களின் தேடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. "நிச்சயம் ஏதோ ஒரு காட்டு விலங்குக்கு பலியாகி இருக்க வேண்டும்" என்ற வனத்துறையினர், "இனி அவள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்று கூறி அவள் கோப்பை மூடினர்.

தன்னறையில் தன் படுக்கையில், தினமும் இரவில் விரல்களால் இதயக்கூடு கட்டி பறந்து போன தன் பறவைக்காய் காத்திருந்தான் துருவ். பணிக்கும் செல்லாமல், சுற்றம் மறந்து, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு, அவளின் மௌன பாஷையை தனதாக்கிக் கொண்டான்.

துருவின் நடவடிக்கையால் அதீதமான மன அழுத்தத்திற்கு ஆளான அவனின் தாயார் பவானி, மயங்கி கீழே விழுந்துவிட, பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்த்தனர்.

உணர்வற்ற முகத்துடன் அவர் முன்னே துருவ் நிற்க, பெற்ற வயிறு பற்றி எரிந்தது பவானிக்கு.

" துருவா! கண்ணா! இந்த அம்மாவிற்காக நீ ஒரு காரியம் செய்வாயா? " என்றார் தன் உள்ளங்கையை அவன் புறம் நீட்டி.

அவர் கேட்பதை அவர் சொல்லும் முன்னே அறிந்தவனின் தலை மறுப்பாக கண்ணீருடன் அசைந்தது.

" இந்த அம்மாவிற்காக நீ மீண்டும் ஒரு திருமணம் செய்தே ஆக வேண்டும். என் பிள்ளையின் வாழ்வு என் கண் முன்னே அழிவதை விட, நான் அழிவதே மேல் " என்று கூறி தன் சுவாசத்திற்காக வைத்திருந்த ஆக்சிஜன் மாஸ்கை தூக்கி எறிந்தார்.

மூச்சுக்காக திக்கித் திணறி அவர் உயிர்வதைபடுவதை பார்த்த மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து, ஆக்சிஜன் மாஸ்கை அவருக்கு அணிய வர, அவர்களின் அனைத்து முயற்சிகளையும் தடுத்தார் பவானி.

குடும்பத்தினர் அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையும் துருவ் மேல் விழ, உயிர் இருந்தும் மரித்தது போல், கைகள் நடுங்க ஆக்சிஜன் மாஸ்கை அவர் தாயின் நாசியில் பொருத்தினான், தந்தையின் கைகளில் சிறைப்பட்டிருந்த தன் பாதத்தை விடுவித்தபடி.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
வருடங்கள் மூன்று உருண்டோடியது...

குமுளியில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்தில், அருவியின் நீரோடைக்கு அருகில் இருந்த அந்த வைத்திய சாலையில், மெல்ல கண் விழித்தாள் மதிவதனி.

மலங்க மலங்க விழித்தவளின் முன் ஒரு கூட்டமே ஆச்சரியத்துடன் இருந்தது. அதில் ஒரு பெண் அவளது முகத்தை வருடி, " கண்ணு இப்போ உனக்கு மேலுக்கு தேவலயா? " என்றார்.

"ம்..." என்று தலையசைத்தாள்.

" என்ன கண்ணு உன்ன அப்பாரு அம்மா மாதிரி கவனிச்சுக்கிட்டவங்களுக்கு உம்முன்னு சொல்ற. நல்லா இருக்கேன்னு நாலு வார்த்தை வாயைத் திறந்து பேசு கண்ணு" என்றார்.

"எனக்கு பேச..." என்று ஆரம்பித்தவளின் வார்த்தை அவளது செவிகளில் விழ ஆச்சரியத்துடன் அதிர்ந்தாள்.

தன் தொண்டையை வருடியபடி, "துருவா..." என்றாள் பேச கற்றுக் கொண்ட மழலை போல் சத்தமாக.

" அம்மாடி நீ அந்த சுருளி அருவியில் மேலிருந்து கீழாக விழுந்து, மூலிகை பறிக்க போன எங்க வீட்டுக்காரர் வைரவன் கைகளில் சேர்ந்ததும், உடம்பு எல்லாம் பல காயத்துடன், முகம் எல்லாம் சிதைந்து பயங்கரமாக இருந்த உன்னை எங்க வைத்தியசாலையில் கடந்த மூன்று வருடமாக வைத்து மூலிகை சிகிச்சை கொடுத்து வந்தோம். உன் காயத்தை, முக அமைப்பை மீட்ட எங்களுக்கு உன் நினைவை மீட்டெடுக்க முடியவில்லை.

அந்த மலசாமி புண்ணியத்துல இன்னைக்கு தான் உனக்கு நினைவு திரும்பி இருக்கு தாயி " என்றாள் காத்தாயி.

தன்னைக் காப்பாற்றிய காத்தாயி குடும்பத்திற்கும் மற்றும் அங்கு பணி புரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் தன் இருகரம் கூப்பி வாயைத் திறந்து, "நன்றி" என்று உரைத்தாள்.

காட்டு யானை கூட்டம் துரத்தியதும், பள்ளத்தில் சரிந்ததும், காட்டுப்பன்றிகள் தன்னைத் தாக்கியதும், தாங்க முடியாத வலி வேதனைகளோடு ஆற்றில் விழுந்ததும் நினைவிற்கு வந்தது மதிவதனிக்கு.

" இந்தக் காட்டில் விளையும் மூலிகைகளுக்கு பல சக்திகள் இருக்கிறது தாயே. பல மூலிகைகளின் கலவைதான் உன் உயிரை காப்பாற்றி வைத்திருந்தது அம்மா. சதைகள் கிழிந்து ரத்தமாய் இருந்த உன் முகத்தை சீராக்கியதும் இந்த மூலிகைதான்" என்றார் காத்தாயி.

" அப்படியா? " என்று ஆச்சரியத்துடன் அவர் பக்கம் திரும்பியவள், அங்கே இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அதிர்ந்து அலறினாள்.

கண்ணாடியின் அருகே வேகமாக ஓடி, தன் முகத்தை இரு கைகளாலும் மேலும் கீழும் தடவி, மாறிப்போன தன் முகத்தில் பழைய வடிவைத் தேடினாள்.

அந்தோ பரிதாபம் எவ்வளவு தேடியும் அவளின் புதிய முகம் பழைய முகத்துடன் பொருந்த மறுத்தது.

கண்விழித்தவுடன் கண்ட காட்சியை நம்ப முடியாமல் மயங்கி விழுந்தாள். அவளின் நாடியை பரிசோதித்த வைத்தியர், அதிர்ச்சி மயக்கம் என்றே கணித்து நீர்த்தெளித்து அவளின் அயர்வை போக்கினார்.

தனக்கு குரல் வந்ததை நினைத்து மகிழ்வதா? இல்லை தன் புதிய முகத்தை நினைத்து மறுகுவதா? என்று புரியாமல் குழம்பி தவித்தாள் மதிவதனி.

பின் தன்னை நிலைநிறுத்தி, தன் வலது கையை இதயத்தில் வைத்து, கண்மூடி தன் இதயத்தின் துடிப்பை உணர முற்பட்டாள்.

"துருவ்... துருவ்..." என்று அவள் இதயம் சத்தம் எழுப்ப, தன் காதலிடம் சேர்ந்தால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை அவளுள் எழுந்தது.

முடிவெடுத்த பின், தன்னை கவனித்துக் கொண்ட அந்த பாசமிகு குடும்பத்திற்கு நன்றியை செலுத்திவிட்டு, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு பயணமானாள் வண்ண வண்ண கனவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு.

" துருவ் தன்னை கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை அவனிடம் சற்று விளையாட்டு காட்ட வேண்டும்" என்று மணல் வீடு கட்ட ஆரம்பித்தாள் மனதிற்குள்.

சென்னை பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கால்கள் நடுங்கியது. மனமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது மதிவதனிக்கு. கண்களை சுழல விட்டவளின் பார்வையில் விழுந்தது அந்தக் காதலர் தின வாழ்த்து.

ஆம் அன்று மீண்டும் ஒரு காதலர் தினம்.

தளர்ந்த கால்களுக்கு சக்தி மீண்டது. ஆனந்தத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தாள் தன் காதலைத் தேடி.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் துருவ் வீட்டின் முன் வந்து நின்று, நடுங்கும் கரங்களுடன் அழைப்பு மணியை அழுத்தினாள்.

'கதவை துருவ் திறக்க வேண்டும்' என்று மனதிற்குள் அனைத்து தெய்வங்களையும் வேண்டினாள்.

கதவு திறந்ததும் துருவின் அம்மா வெளியில் வந்தார். சற்றே முகம் வாடியது மதிவதனிக்கு.

" யாரம்மா நீ? " என்றார் ஆராய்ச்சி பார்வையுடன்.

" மதிவதனி... " என்றவள் பேச ஆரம்பித்ததும் அவள் கைகளை பிடித்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, சற்று தள்ளி இருந்த அந்த சிறிய கோயிலில் அமர வைத்தார்.

"நான்..." என்றவள் பேச ஆரம்பிப்பதற்குள், " அம்மா தாயே உனக்கு ஒரு கோடி கும்பிடு. இப்பதான் என் புள்ள மதிவதனிய மறந்துட்டு சந்தோஷமா இருக்கான். அந்த மகராசி போனதுக்கு அப்புறம் இப்பதான் என் குடும்பம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

எங்க நிம்மதியை கெடுப்பதற்குன்னு நீ வந்தியா? உன்ன கையெடுத்து கும்பிடுறேன். நீ கேட்கிற பணத்தை கூட கொடுத்துடுறேன். அவ பேர மட்டும் என் பிள்ளை கிட்ட சொல்லி அவ நினைவை மீண்டும் அவனுக்குள் விதைத்து விடாதே!" என்ற பவானிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

அவள் திருதிருவென விழிப்பதை கண்டு, " நீ யாரு? " என்றார் பவானி.

" நான் மதிவதனி பிரண்டு" என்றாள் எச்சிலை விழுங்கிக் கொண்டு.

"அதுக்கு...."

துருவை பார்த்தே ஆக வேண்டும் என்ற வேட்கையில், "எங்க ஊரு ரொம்ப தூரம். இன்று ஒரு நாள் மட்டும் மதிவதனி வீட்டில் இருந்துவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். இந்த ஊரில் எனக்கு வேறு யாரையும் தெரியாதே " என்று கைகளை பிசைந்தாள் பவானியை பார்த்துக் கொண்டே.

தன்னை துருவிடம்தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பேராவல் மதிவதனிக்கு.

"ஹோ... நான் கூட என்னமோ ஏதோ என்று பயந்து விட்டேன். சரி நீ மதிவதனி என்ற பெயரை மட்டும் பயன்படுத்தக் கூடாது. இன்று ஒரு நாள் இந்த வீட்டில் உன்னை தங்க வைப்பது என் பொறுப்பு " என்றார் ஆசுவாசமாக.

இந்த விளையாட்டு கூட மதிவதனிக்கு ரொம்ப பிடித்தது. துள்ளும் மனதை அடக்கியபடி அவர் பின் பணிவாக நடந்து சென்றாள்.

துருவின் அப்பா வரவேற்பறையில் அமர்ந்திருக்க, " நம்ம எதிர் வீட்டு பார்வதியோட சொந்தக்காரப் பொண்ணு. பார்வதியை தேடி வந்திருக்கு. பார்வதி தான் ஊரில் இல்லையே. அதனால் இன்று ஒரு நாள் மட்டும் நம் வீட்டில் தங்கி விட்டு நாளை சென்று விடுவாள். அப்படித்தானேமா" என்றார் பவானி.

மதிவதனி, "ஆமாம் சார்" என்றாள் பணிவாக.

வாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கண்கள் முழுவதும் துருவைத் தேடி அனைத்து திசைகளிலும் பயணம் செய்தது.

துள்ளும் தன் மனதிற்கு கடிவாளமிட்டு, அவர்கள் காட்டிய விருந்தினர் அறையில் சென்று அமர்ந்தாள்.

வெகு தூரம் பயணம் செய்த அலுப்பில், அவள் உடல் ஓய்வுக்கு கெஞ்ச சற்றே கண்ணுறங்கினாள்.

கண்விழித்ததும் கட்டிலில் தன்னருகே ஒரு மழலை அமர்ந்திருக்க, சிரித்த முகத்துடன் எழுந்து அமர்ந்தாள் மதிவதனி.

" குட்டிமா... " என்றாள் வாஞ்சையாக.

" நீ ஆரு?" என்று மழலையில் குறுக்கு விசாரணை செய்தது அந்த சிட்டு.

மனம் எல்லாம் துருவ் நிறைந்திருந்ததால், விரல்களை மடக்கி இதயக் கூட்டை காட்டினாள்.

தன் பிஞ்சு கரங்களால் இதயக் கூட்டை செய்து மகிழ்ந்தது அந்த குழந்தை. தான் கற்ற வித்தையை அனைவரிடமும் காட்ட கட்டிலில் இருந்து இறங்கி ஓடியது.

'துருவின் அக்கா பொண்ணு அப்படியே துருவ் போல் இருக்கிறாள். துருவா... இதற்கு மேல் தாங்காதடா... " என்று சிரித்துக் கொண்டே கட்டிலில் இருந்து இறங்கி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்தாள்.

" எழுந்துட்டியா? இந்தா பொண்ணு காப்பி " என்று காபி டம்ளரை நீட்டினார் பவானி.

மெல்ல கைகளை நீட்டி காபியை பெற்றுக் கொண்டாள். நின்றபடியே சுவற்றில் சாய்ந்து, நீண்ட நாட்களுக்கு பிறகு தன் அத்தை தந்த காபியின் நறுமணத்தை நாசியில் நிறைத்துக் கொண்டு, உதட்டருகே கொண்டு செல்லும்போது, மாடிப்படியில் சப்தத்தை கேட்டதும், உடல் விறைத்து துருவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டுக் கொண்டே, ஆண்மையின் கம்பீரத்துடன் கீழ் இறங்குபவனை கண் சிமிட்டாமல் பார்த்து நின்றாள்.

'ஓடிச் சென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன?' என்று வெட்கம் விட்டு எண்ண வைத்தது காதல் மனது.

சுவற்றில் சாய்ந்து நின்ற மதிவதனியை கண்டு கொள்ளாமல், அவளை கடந்து உணவு மேஜையின் நாற்காலியில் அமர்ந்தான்.

"அப்பா..." என்று கத்திக்கொண்டே அவன் மடியில் தாவியமர்ந்த குழந்தையைக் கண்டதும் கையில் இருந்த காஃபி டம்ளரை கீழே தவறவிட்டாள் மதிவதனி தன் வாழ்க்கையைப் போல்.

" தேனு பேபிக்கு சாப்பாடு கொடுத்து விட்டாயா? " என்று துருவ் கேட்டதும், "உங்க வாண்டு பெத்த என்கிட்ட எல்லாம் சாப்பிடாதாம். அப்பாகிட்ட தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்வது?" என்று கொஞ்சினாள் அவன் மனைவி தேன்மொழி.

சத்தம் இல்லாமல் ஒரு உயிர் உடலை விட்டு பிரிவதை அறியாமல் கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

தான் தேடி வந்த கூடு எரிந்து சாம்பலாகி பல ஆண்டுகள் ஆனதை உணர்ந்த நொடி வீட்டை விட்டு வெளியேறி, வீட்டின் பின்புறச்சுவற்றில் சாய்ந்து ஆகாயத்தை வெறித்துக் கொண்டு, உண்மையை விழுங்க முயற்சி செய்தாள்.

காலையிலிருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் தான் செய்து காட்டிய இதயக் கூட்டை, தன் தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு துருவுக்கும் செய்து காட்ட உண்ணும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது துருவுக்கு.

மெல்ல தன் மகளை கீழே இறக்கி விட்டு, குளியலறைக்குள் சென்று பூட்டிக் கொண்டான். தண்ணீர் சத்தம் வர, குழாயை திறந்து விட்டு, தன்னுள்ளே பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், "ஓ...." என்று கதறினான்.

சுவற்றின் இந்தப் பக்கம் சாய்ந்து துருவ் கதற, சுவற்றின் மறுபக்கம் மதிவதனி சாய்ந்து கதற, அவர்களைப் பார்த்த காதலும் கதறியது.

" ஏன்டி என்ன விட்டுப் போன? எத்தனை ஆழத்தில் புதைத்தாலும் மீண்டும் மீண்டும் பொங்கிப் பெருகுகிறாயே! நீ நான் செய்த பாவமா? புண்ணியமா? உண்மையாகவும் வாழ முடியாமல், உன் நினைவுகளோடும் வாழ முடியாமல்.... ஆ... காதல் இருந்தால் தானே உன் நினைவுகள் வரும்! என் காதலே என்னை விட்டு போ...." என்று சுவற்றில் கைகளால் குத்தினான் துருவ்.

"துருவா... ஏன் துருவ்? எனக்காக காத்திருக்க மாட்டாயா? என் காதல் அவ்வளவுதானா?

துருவ் என்னைத் தழுவிய உன் கைகள் வேறு ஒரு பெண்ணை எப்படி தழுவியது? என் காதலை எப்படி நீ பகிர்ந்து தரலாம்? உன் காதலுக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரி நான் தானே!

உடலில் ஊனம் ஒரு குறை இல்லை என்று எனக்கு காட்டியவனே, இன்று என் உயிரை, காதலை ஊனமாக்கி விட்டாயே!

என்னை நிரூபித்து உன்னை நான் மீட்டுக் கொள்ளலாம். ஆனால் சிதைந்து போன என் காதலை மீட்டுக் கொள்ள முடியாதே. அப்படி என்றால் அந்தக் காதலே எனக்கு வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்..." என்று சுவற்றில் பின் தலையை இடித்து உயிர் கரைந்தாள் மதிவதனி.

வேகமாய் மலர்ந்த காதல், மாயமாய் விதியில் கரைந்து,
நெஞ்சின் அடியில் உறைந்தது!
ஆதலால் காதலே!

உயிரோடு சதிராடும் காதல் தவிர்!
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
265
Idhukku nan enna solla, valiyoda oru kadhal than vathanikka sonnaanka, adhukkaka kadhalai pirichi avankalai pirikka sollala, rombave edhirparppu illama padichathunal perusal feelaakala, but not accepted..
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
265
#விமலா_ரெவியூஸ்..

அதியா - காதல் தவிர்.
தலைப்பே முரணாக இருக்க, அந்த ஆர்வத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பம் எல்லாம் மிக அருமை. மதியின் கஷ்டத்தை அதை அவன் புரிந்து அவளுக்கு தன் காதலை எடுத்துரைத்து, புரியவைத்து என அவளை திருமணம் செய்து, அவர்கள் வீட்டாட்களே கொண்டாடும் அளவிற்கு அனைத்தும் சரி. ஆனால் அதன் பிறகு அவள் இல்லையென்றதும் அம்மாவிற்காக இரண்டாவது திருமணம் செய்து குழந்தை வரை சென்றதை ஏனோ ஏற்கமுடியவில்லை. இதில் அவன் காதல் எந்த வகையில் சரி. இதுவே மதி இருந்து அவன் இல்லாமல் போயிருந்தால் அவள் இப்படி செய்திருப்பாளா என்ற கேள்வி முளைப்பதை தடுக்க முடியவில்லை. ஆரம்பித்ததும் அவசரம். முடித்ததும் அவசரம். எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் அழுகையில் இருந்து வருத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த முடிவை ஏற்கவே முடியல. சாரி ஆத்தர்ஜி.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
#விமலா_ரெவியூஸ்..

அதியா - காதல் தவிர்.
தலைப்பே முரணாக இருக்க, அந்த ஆர்வத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பம் எல்லாம் மிக அருமை. மதியின் கஷ்டத்தை அதை அவன் புரிந்து அவளுக்கு தன் காதலை எடுத்துரைத்து, புரியவைத்து என அவளை திருமணம் செய்து, அவர்கள் வீட்டாட்களே கொண்டாடும் அளவிற்கு அனைத்தும் சரி. ஆனால் அதன் பிறகு அவள் இல்லையென்றதும் அம்மாவிற்காக இரண்டாவது திருமணம் செய்து குழந்தை வரை சென்றதை ஏனோ ஏற்கமுடியவில்லை. இதில் அவன் காதல் எந்த வகையில் சரி. இதுவே மதி இருந்து அவன் இல்லாமல் போயிருந்தால் அவள் இப்படி செய்திருப்பாளா என்ற கேள்வி முளைப்பதை தடுக்க முடியவில்லை. ஆரம்பித்ததும் அவசரம். முடித்ததும் அவசரம். எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் அழுகையில் இருந்து வருத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த முடிவை ஏற்கவே முடியல. சாரி ஆத்தர்ஜி.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விமலா அசோகன் என் மதிப்பிற்குரிய நட்பே...

காதல் தொலைந்தால் தேடிக் காணலாம்...

காதல் விலகினால் நெருங்கலாம்...

காதல் நொறுங்கினால் அள்ளி எடுத்து ஆறுதலாகலாம்...

காதல் அடித்தால் அணைக்கலாம்...

காதலே காதலை கொன்றால்...

ஆகவே காதல் தவிர்!

( சில நேரங்களில் காதலும் சூழ்நிலை கைதிதான் )

தங்களின் மதிப்பான விமர்சனத்திற்கு என்றும் நன்றிகள் 🙏🙏🙏.
எதிர்மறை எண்ணங்களை விதைத்திருந்தால் மன்னிக்கவும்...
வலிகள் சுமக்கும் கதைகளை தேடி நான் சென்ற பாதை தவறு என்றால் என் பாதையை செம்மைப்படுத்துவேன் 🙏🙏🙏
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
Idhukku nan enna solla, valiyoda oru kadhal than vathanikka sonnaanka, adhukkaka kadhalai pirichi avankalai pirikka sollala, rombave edhirparppu illama padichathunal perusal feelaakala, but not accepted..
வாழ்க்கையின் பாதைகள் என்றும் நேர்கோடுகள் அல்லவே...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,640
அருமை சகி 😍😍😍😍😍😍😍😍
ஒரு ஆண் தன் மனைவிமீது வைத்திருக்கும் அதீத காதலால் அவள் இறந்தும் இன்னொரு பெண்ணை நினையாமல் இருக்க முடியும் ஆனால் அவனின் உற்றார்களால் அவன் இக்கட்டான சூழ்நிலையில் நீர்பந்திக்க படும்போது அங்கே ஆத்மார்த்தமான காதல் தவிர்க்கப்படும் (மறக்கப்பட்டு அல்ல )சூழல் ஏற்படுகிறது அங்கே பெற்ற பாசம், கடமை நிலைக்க படுகிறது இது சிர்சிலருக்கு மட்டுமே நடக்கும் வேதனை பக்கங்கள், அனுபவித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு தவிர்க்கப்படும் காதல் 😊😊😊😊👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹👌🌹🌹👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
அருமை சகி 😍😍😍😍😍😍😍😍
ஒரு ஆண் தன் மனைவிமீது வைத்திருக்கும் அதீத காதலால் அவள் இறந்தும் இன்னொரு பெண்ணை நினையாமல் இருக்க முடியும் ஆனால் அவனின் உற்றார்களால் அவன் இக்கட்டான சூழ்நிலையில் நீர்பந்திக்க படும்போது அங்கே ஆத்மார்த்தமான காதல் தவிர்க்கப்படும் (மறக்கப்பட்டு அல்ல )சூழல் ஏற்படுகிறது அங்கே பெற்ற பாசம், கடமை நிலைக்க படுகிறது இது சிர்சிலருக்கு மட்டுமே நடக்கும் வேதனை பக்கங்கள், அனுபவித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு தவிர்க்கப்படும் காதல் 😊😊😊😊👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹👌🌹🌹👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌
எத்தனையோ நேரடி மறைமுக எதிர்ப்புகள் எதிர்மறையான முடிவுக்கு....
நான் சென்ற பாதையை சரியாக கனித்த என் அன்பு நட்பிற்கு கோடான கோடி நன்றிகள் இதயத்தில் இருந்து 🙏🙏🙏🙏

அது ஒரு தொலைந்த காதல்.....
ஆனால் என்றென்றும் வாழும் வாழ விடாமல் செய்யும் காதல்....

எந்தன் எழுத்து ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை என்னுடன் உடன் இருக்கும் பாரதி சிவகுமார் தோழமைக்கு ஆயிரம் வணக்கங்கள் 🙏🙏🙏

புரிதல் கொண்ட நட்பு அழகானது😍
 

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
57
இரண்டாவது கதையா சிஸ் 😀👏செம வாழ்த்துக்கள் 💐
அழகான காதல் மதி, துருவினது ...ஆசைப்பட்டவளை ஆசையா காதலித்து கரம் பிடித்தவளை இப்படி தொலைத்து விட்டானே....😢
இவனின் காதல் தான் அவள உயிர்தெழ வைத்தது ...ஆசையாய் ஓடி வந்தவளுக்கு .....இப்படி ஒரு ஏமாற்றம் 😥
அம்மாக்காக திருமணம் இல்லை என்கல .....கட்டிக்கிட்டு வந்தவள அவன் ஏமாற்றவும் இல்ல வாழ்ந்தான்....
தன்னுடைய காதல கொன்னு விட்டு ..???அப்படித்தான் நினைத்தான்..????ஆனால் கொன்னு விட்டானா ???இல்லை
இதோ அவனின் நினைவை தட்டி எழுப்பியது அந்த சின்ன சிட்டின் செயல்.....வாழ்க்கை முழுதும் இந்த வலி அவனுடன் பயணிக்கும் ....😢
யாரின் மேல குற்றம் சுமத்த அம்மாவையா..?அவனையா..??விதியையா...???
இங்கு அனைவரும் சூழ்நிலை கைதிதான்😥
ஆனால் ரொம்ப ரொம்ப பாதிக்கப்பட்டவள் மதி😢
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் சிஸ்💐
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
252
காதல் தவிர்.....
அதியா

காதலர் தினம்
பூங்கொத்தும்
போகும் இடம் எல்லாம் அவள்
பார்க்கும் படி பரிசுகள் காத்திருக்க
பிரமிப்பாக இருந்தது
பூக்களுக்கு நடுவில் வீற்றிருக்கும்
பூ மகள் மதிவதனி
புரியாமல் விழித்திருக்க
பார்வையால் காதல்
பேசி கொண்டு இருந்த துருவன்
தன் முன் பேச்சற்று நிற்கும் மதியிடம்
மனதில் உள்ள காதலை சொல்லி
பேச முடியாத அவளின் நிலை அறிந்து _ தானே
பேசியே காதலை சம்மதிக்க வைத்து கல்யாணமும் செய்து கொண்டு
காதலில் திளைத்து கொண்டாட
காலம் சதி செய்து பிரித்துவிட...
துக்கம் தாளாமல் துவழும்
துருவை கண்டு தாய் மனம் தவிக்க
தாய்க்காக மறுமணம் .....
மறைந்தவள் மீண்டும் உயிர் பெற்று
மீண்டு வர _ தன் துரு
மனைவி குழந்தையுடன் வாழ்வதை
மறைந்து இருந்து பார்த்துவிட்டு
மரித்தே போயிருக்களாம் என
மனம் விட்டு கதற...... 😭😭😭😭

மற்றவர்களுக்காக என்றாலும்
மறுமணம் செய்து வாழும் துரு
மனதில் காதல் இல்லாத வாழ்வு
மனைவிக்கு செய்யும் துரோகம்.....
மனதை ரணமாக்கும் காதல்
மண்ணோடு மண்ணாக
மக்கி போகட்டும்....
மனதை கொல்லும்
காதல் தவிர்.....

வாழ்த்துக்கள் சகி 👏👏👏💐💐💐
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
காதல் தவிர்.....
அதியா

காதலர் தினம்
பூங்கொத்தும்
போகும் இடம் எல்லாம் அவள்
பார்க்கும் படி பரிசுகள் காத்திருக்க
பிரமிப்பாக இருந்தது
பூக்களுக்கு நடுவில் வீற்றிருக்கும்
பூ மகள் மதிவதனி
புரியாமல் விழித்திருக்க
பார்வையால் காதல்
பேசி கொண்டு இருந்த துருவன்
தன் முன் பேச்சற்று நிற்கும் மதியிடம்
மனதில் உள்ள காதலை சொல்லி
பேச முடியாத அவளின் நிலை அறிந்து _ தானே
பேசியே காதலை சம்மதிக்க வைத்து கல்யாணமும் செய்து கொண்டு
காதலில் திளைத்து கொண்டாட
காலம் சதி செய்து பிரித்துவிட...
துக்கம் தாளாமல் துவழும்
துருவை கண்டு தாய் மனம் தவிக்க
தாய்க்காக மறுமணம் .....
மறைந்தவள் மீண்டும் உயிர் பெற்று
மீண்டு வர _ தன் துரு
மனைவி குழந்தையுடன் வாழ்வதை
மறைந்து இருந்து பார்த்துவிட்டு
மரித்தே போயிருக்களாம் என
மனம் விட்டு கதற...... 😭😭😭😭

மற்றவர்களுக்காக என்றாலும்
மறுமணம் செய்து வாழும் துரு
மனதில் காதல் இல்லாத வாழ்வு
மனைவிக்கு செய்யும் துரோகம்.....
மனதை ரணமாக்கும் காதல்
மண்ணோடு மண்ணாக
மக்கி போகட்டும்....
மனதை கொல்லும்
காதல் தவிர்.....

வாழ்த்துக்கள் சகி 👏👏👏💐💐💐
இனிய தமிழ் நட்பே....
கவிதையின் வழி தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது...
தித்திக்கும் தமிழில்
கவிக்குயிலின் ஓசையில்
மனமெல்லாம் மத்தாப்பு பூத்தது!
காதல் வலியில் மிகக் கொடுமையான ஒரு பக்கத்தை
நான் புரட்டிட...
உடன் வந்த நட்பின் உறுதுணையில் மெய்சிலிர்க்க நன்றியை சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
150
நட்பின் எழுத்தை கண்டு வியக்கின்றேன் 😍😍😍

தலைப்பின் விளக்கம் கதையின் முடிவில் புரிய வைத்து வீட்டீர்களே 😊😊😊

காதலர் தினத்தில் பூத்த பூ அதே தினத்தில் உதிர்ந்தும் விட்டதே 😭😭😭

இதில் அதிகமாக தங்களின் காதலால் காயம் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டுமோ 😔😔😔
 
Last edited:

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
256
நட்பின் எழுத்தை கண்டு வியக்கின்றேன் 😍😍😍

தலைப்பின் விளக்கம் கதையின் முடிவில் புரிய வைத்து வீட்டீர்களே 😊😊😊

காதலர் தினத்தில் பூத்த பூ அதே தினத்தில் உதிர்ந்தும் விட்டதே 😭😭😭

இதில் அதிகமாக தங்களின் காதலால் காயம் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டுமோ 😔😔😔
இனிய கருத்தொருமித்த நட்பே...
ஆழ்ந்த புரிதலுக்கு ஆனந்த நன்றிகள் 🙏🙏🙏
எதிர்மறை கருத்துக்களை விதைத்தேன் என்று எதிர்ப்புகள் கிளம்பினாலும்...
எதார்த்தத்தில் தோற்ற ஒரு காதலின் வலியை உரைத்தேன்...
நிந்தன் புரிதலில் வானம் வசப்பட்டது எனக்கு😍
வளர் நட்புடன்
அதியா ❤️
 
Top