• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25. உறவாக வருவாயா?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"மச்சா இப்போ என்னடா பண்றது? எனக்கு மது வேணும்.. எதாவது உதவி செய்டா!" என்றான் கெஞ்சலாய்.


"விளையாடுறியா கேஷி? அது ஒரு கொலைகார குடும்பம்.. அவங்களுக்கிருக்கிற செல்வாக்குக்கு நானே அவங்ககிட்ட மண்டியிடணும். இதில அவங்கள எதிர்க்கிறது கனவில கூட நினைச்சு பாக்காத... அதுவுமில்லாம ஈவு இரக்கமில்லாம கொன்னு போட்டுட்டு போயிட்டிருப்பாங்க. நானே என் பொண்டாட்டிக்குன்னு இருக்கிற ஒரே ஒரு புருஷன்" என்றான்.


"என்னடா நீயே பின் வாங்கினா? யாருடா உதவி பண்ணுவாங்க? எனக்கு நண்பன்னு இருக்கிறது நீ ஒருத்தன் தானேடா!"


"போதும் லிஸ்ட் பெருசாகிட்டு போகுது.. போனை தூக்கி போட்டுட்டு.. மூட்டை முடிச்சை கட்டிட்டு கிளம்பி வா!
என் உயிர் உன்னால தான் போகணும்ன்னு இருந்தா. யாரால மாத்தமுடியும்?" என சோகமாக கூறியவாறு போனை வைத்தான் முரளி.


முரளி சொன்னதும் தான்... ரயில் டிக்கட்டினை போனில் புக் செய்தவன், அவசரஅவசரமாக தன் உடைகளை ஒரு பையில் அள்ளிப்போட்டுக்கொண்டான்.


"ஸ்ரீம்மா.....! அப்பா அம்மாவை அழைச்சிட்டு வர வெளியூருக்கு போறேன். நீங்க அத்தை, பாட்டிகூட சமத்தா, அடம்பிடிக்காம இருக்கணும். அப்பிடி இருந்தா வரும்போது ஸ்ரீக்கு விளையாட ஒரு குட்டி பாப்பா வாங்கிட்டு வருவேன்... சரியா!" என அவளுக்கு புரியும் படி எடுத்து கூறி, பையுடன் அவளையும் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்.


இன்னும் அவர்கள் நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் திக்குத்திக்காக அமர்ந்திருக்க.. பரமானந்தனும் சட்னெ வெளியேறினால் தன்மேல் சந்தேகம் வந்துவிடுமோ என நினைத்தவர் இன்னமும் முறுக்கிக்கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தார்.


சந்தேகம் என்ன சந்தேகம். அவர் தானே அத்தனைக்கு காரணகர்த்தா.

அன்று கோவிலில் கால் அடிபட விழுந்தபோது அவள் பார்த்து பயந்தது
வேறு யாருமல்ல... மதுவின் மாமனது மூத்த புதல்வனை கண்டுதான்.

அவன் கண்ணில் அகப்பட்டால் அவளை அந்த இடத்திலேயே கொன்று விடுவான் என்பதை நன்கு அறிந்து தான் அவன் கண்களில் அகப்படாமல் சென்றாள்.
ஆனால் அவளது போதாத காலம். பரமானந்தம் கண்ணில் பட்டுவிட்டாள்.


அவர்கள் போனதும் காரிலிருந்து இறங்கி நேராக சென்றது அவனிடம் தான்.
அவனும் அதே நேரம் கையில் மதுவின் போட்டோவினை வைத்து விசாரிக்க, அவளை பற்றி எந்த தகவலும் கூறாது விசாரித்தவர், அவள் பெரிய வீட்டு பெண் என்று தெரிந்ததும்,


'யாருமில்லன்னு நாடகமா ஆடுற? இரு ஒரு நாளைக்கு உன் முகத்திரைய அத்தனை பேரு முன்னாடியும் கிழிக்கிறேன்' என நினைத்தவர்.


"சரி எங்கேயாச்சும் இந்த பொண்ண கண்டா.. எப்பிடி தகவல் தரதுன்னு சொல்லுங்க" என்றவரின் கையில் தனது விசிட்டிங்க் கார்டினை கொடுத்தவன்,

"இந்த நம்பருக்கு கூப்பிடுங்க.. உடனேயே வரோம்" என்றவன் சென்றுவிட்டான். அதை வைத்துத்தான் நேற்று அவர்களை அழைத்தார்.

அவரை பார்த்தவாறே வந்தவன்,

"ம்மா......! ஸ்ரீய கொஞ்ச நாளைக்கு பத்திரமா பாத்துக்கங்க... நான் மதுவ அழைச்சிட்டு வரேன்" என்றான்.


"கேஷி....!" என தயக்கமாக மீனாட்சி அவனை பார்க்க.


"என் பொண்டாட்டிய விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நான் தியாகி இல்லம்மா... அவங்களால எனக்கு எதுவும் ஆகாது... என்கூட முரளி இருக்கான். அவனுக்கும் சமூகத்தில நிறைய செல்வாக்கு இருக்கு. அதனால எனக்கு எதாவது ஆகிடும்ன்னு பயப்படாதீங்க. நான் வரதுன்னா மதுகூட தான் வருவேன். இவளை மட்டும் நல்லா பாத்துக்கங்க" என கிளம்பினான்.


"இன்னும் என்னென்ன கண்டராவிங்கள பாக்கணுமோ!" என அவர் ஆரம்பிக்கும் நேரம் இலக்கியா மூலம் தகவலறிந்து உள்ள வந்த சிவா..


"யாருடா அவங்க? எதுக்கு உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போனங்க?" என்றான் பரபரத்தவாறு..


"ஆமா அவ பெரிய சீதை! அவள தூக்கிட்டு போயிட்டாங்க.
ஏப்பா உன் வேலை எதுவோ அதை பாக்குறியா? சோத்துக்கு வழியில்லன்னாலும் அடுத்தவன் பஞ்சாயத்துக்கு மட்டும் எப்பிடி வரீங்களோ!" என்ற கேவலமாக பேச்சில் ஆத்திரம் மேலிட அவரை திட்டவந்த கேஷியினை முந்திக்கொண்டு லாவண்யா சத்தமிடத்தொடங்கினாள்.


"யாருகிட்ட பேசுறோம்ன்னு அளந்து பேசுங்க? சோத்துக்கு வழியில்லன்னா உங்ககிட்டையா வந்து பிச்சை கேட்டாரு... இல்ல நீங்க தான் மாதமாதம் படி அளக்குறீங்க? இனி அவரு மனசு நோகிறது போலயோ.. இல்லை என் காதில விழுறமாதிரியோ எதாவது பேசினிங்கன்னா.. அசிங்கமாகிடும். அவர பத்தி பேச உங்களுக்கு என்ன அருகத இருக்கு.

அவரு சோத்துக்கு வழியில்லாமல் எல்லாம் இல்லை... என்னை பார்த்துக்கிற அளவுக்கு சம்பாதிக்கிறாரு" என்றவள், அவன் கையினை தன் கையோடு பிணைந்து ஒட்டியே நின்று கொண்டாள்.

சிவாவுக்கு தான் இங்கு என்ன நடக்கறது என்று புரியவில்லை.
சிவா தோள்களை ஆதரவாய் அழுத்தி விடுவித்த கேஷி,


"பெத்த மகளே அவமானப்படுத்திற இந்த அசிங்கம் வேண்டாம்ன்னு தான் முன்னாடியே சொன்னேன். கேட்டாத்தானே!
இதுக்குமேல சொல்ல எதுவுமில்லை. என்னைப்பத்தி நல்லாவே உங்களுக்கு தெரியும், இதை மீறி எதாவது செய்யணும்ன்னு நினைச்சிங்கன்னா, அப்போ அனுபவிக்காத தண்டனைய இனி அனுபவிக்க வைச்சிடுவேன்" என்றான்.


"டேய் சிவா! வீட்டில சூழ்நிலை இப்போ சரியில்லை... எல்லாருமே உடைஞ்சு போய் உக்காந்திருக்காங்க. நீ தான் என்னோட இடத்தில இருந்து பாத்துக்கணும்டா! நான் மதுவ அழைச்சிட்டு வரேன்..
உன்னை நம்பித்தான்
போறேன். பாத்துக்கடா!" என கூறிவிட்டே விடைபெற்றான்.



மயூரியை பங்களாவிற்கு இழுத்து வந்தவர்களோ... அவளை ஒரு அறையினில் வைத்து பூட்டிவிட்டு,


"ஏழு வருஷமா எங்களுக்கே தண்ணி காட்டிட்டு இருக்கியா? இனிமே வீட்டை விட்டு ஓடினேன்னு வையி.. கால் ரெண்டையும் வெட்டி மூலையில போட்டிடுவேன்" என மிரட்டுவிட்டு சென்றார் அவள் மாமனான ரவிச்சந்திரன்.


அந்த அறையினை ஒருமுறை ஆராய்ந்தாள் மது.
அது அவளுக்கென்று முன்னர் கொடுக்கபட்ட அதே அறையே தான். இப்போது இன்னும் நவீனமயமாக்கப்பட்ட பிரமாண்ட அலங்கார அறையாக காட்சி தந்தது.


பெற்றவர்களை இழந்து.. மூன்று மாதங்களில் அந்த பங்களாவினை விட்டு சென்றவள், தம்பியின் இறப்பிற்கு கூட வரவில்லை. இறந்த தகவல் தெரிந்தால் தானே அவள் வருவதற்கு.. கடைசிவரை அவனை பார்க்கவிடாது செய்துவிட்டார்களே என்று அவள் அழுத அழுகை அவளுக்கு தான் தெரியும்.


திரும்பும் திசை எங்கும் அவளுடன் அவளது மொத்த குடும்பத்தினரதும் சந்தோஷ தருணங்கள் பெரிய புகைப்படங்களாக மாட்டப்பட்டிருக்க, படத்தின் அருகே வந்து அதை வருடியவள்,


"என்னை மட்டும் ஏம்மா இவங்ககிட்ட தனியா விட்டுட்டுப் போனீங்க. தம்பிய கூப்பிட்டது போல என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல்ல.
முடியலம்மா.....


என்னால இவங்ககிட்டயிருந்து ஓடிட்டே இருக்க முடியல.. பதினாறு வயசில துரத்த ஆரம்பிச்சவங்க, இன்னைக்கு வரைக்கும் துரத்திட்டே இருக்காங்க.
இது நம்ம வீடுதான்.. இங்க தான் நாம எல்லாருமே சந்தோஷமா இருந்தோம்.

ஆனா இப்போ எனக்கு இது வீடு மாதிரியே தெரியலம்மா... உங்க எல்லாரையும் கொன்னு புதைச்சு அந்த நினைவுகளை சுமந்திட்டிருக்கிற கல்லறை மாதிரி இருக்கு.
வேண்டாம்.... எனக்கு இந்த சொத்து, சுகம் எதுவுமே வேண்டாம்.


உயிரே இல்லாத அற்ப பொருளுக்கு ஆசைப்பட்டவங்களால நான் இழந்தது போதும்.
நிம்மதியையோ.. சந்தோஷத்தையோ எப்பவும் இந்த பணமும், பொருளும் தராது என்கிறத இந்த வயசிலயே நல்லா நான் உணர்ந்துட்டேன்.


மயூரியா இருக்கிறதை விட மதுமிதாவா இருக்கிற வாழ்க்கை தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
ஓலை குடிசையில ஒருவேளை கஞ்சி குடிச்சாலும், போலியில்லாம சிரிக்கணும் என்கிறத துளசி அக்காக்கூட இருக்கிறப்போ நல்லாவே உணர்ந்துட்டேன்.


அப்பிடி ஒரு வாழ்க்கை கிடைச்சாக்கூட நான் சந்தோஷமா ஏத்துப்பேன்.
ஆனா இந்த சொத்துக்காக கூடப்பிறந்த தங்கச்சியையே கொல்லுறவங்க கிட்ட ஏன்ம்மா திரும்ப கொண்டுவந்து சேர்த்தீங்க?.
உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தானேப்பா....
ப்ளீஸ்ப்பா.... உங்க பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டிங்கன்னா கேஷிகூடவே என்னை சேர்த்திடுங்க... எனக்கு கேஷிய ரொம்ப பிடிச்சிருக்குப்பா..


கால் போன திசையில ஓடிட்டிருந்த எனக்கு வாழணும்ன்னு ஆசைய கொடுத்தவரே அவருதான்.
கேஷியால மட்டும் தான்ப்பா என்னை குழந்தை மாதிரி பாத்துக்க முடியும்.
எப்பிடியாவது அவருகிட்ட சேர்த்துடுங்கப்பா..." என கண்ணீரோடு மன்றாடியவள் அப்படியே கால்களை மடிந்து தரையில் அமர்ந்தவளுக்கு தெரியும் அந்த வீட்டின் காவலை மீறியோ, இல்லை வீட்டினை தாண்டியோ ஒரு அடி எடுத்து வைக்க முடியாதென்பது.



பின்னே அடிக்கு ஒருவர் என வீட்டை சுற்றி காவலுக்கு அத்தனை பேரினை போட்டிருந்தால் அவளால் எப்படி தப்பிக்க முடியும்?
அத்தனை பெரிய வீட்டை தாண்டுவதே சந்தேகம்... இதில் அவர்களை....! வாய்ப்பே இல்லை.


செய்வதறியாது கால்களை குறுக்கி குளிர் தரைமீதே படுத்திருந்தவள் கதவு திறக்கபடும் ஓசை கேட்டு எழுந்து வாசலை பார்த்தாள்.
அவளது அத்தையே தான். கையில் பெரிய தாம்பாளத் தட்டோடு உள்ளே வந்தாள்.


"என்னம்மா... தூக்கம் வந்தா இவ்ளோ பெரிய கட்டில் இருக்கிறப்போ ஏன் தரையில படுத்திருக்க?" என தட்டை கட்டிலில் வைத்துவிட்டு அவளை கைகொடுத்து தூக்கி அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி.. தானும் அமர்ந்தவள்,


"ஏம்மா இவ்ளோ கேவலமா போயிட்ட..? சின்ன பொண்ணா இருக்கிறப்போ குண்டு கண்ணு, மொழுமொழு கன்னம்ன்னு பாக்க அவ்ளோ அழக இருப்பியேம்மா... இப்போ கை கால் எல்லாம் குச்சி குச்சியா பாக்க சாப்பாட்டுக்கே பஞ்சத்தில அலைஞ்சவ போல இருக்கியே....!


உன் மாமா சொன்னாரு, யாரோ ஒரு பிச்சைக்கார பொண்ணு வீட்டில ரெண்டு வருஷமா வேலை பாத்திட்டிருந்தியாமே!
எனக்கு தெரியும் அவதான் உன்னோட இந்த நிலைக்கு காரணமா இருந்திருப்பா... அவளால தான் நீ தரையிலையும் படுக்க பழகியிருக்க.


பாவிமக... என்வீட்டு மகாலஷ்மிய ரொம்ப கொடுமை படுத்தியிருக்கா போல" என அவள் நிலையினை கண்டு பரிதாபப்பட்டவர் பேச்சில் மதுவிற்கு அவளை அறியாமலே உதட்டோர புன்னகையினை தோற்றுவித்தது.


நிஜத்தில் அவள் பார்ப்பதற்கு அவர் சொல்வதைப்போல் கேவலமாக ஒனனறும் இல்லை... அந்த வயதில் எப்படி மெல்லிடையாளாக இருக்க வேண்டுமோ. அப்படி சிக்கென்று அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவருக்கு ஏன் தான் அப்படி தோன்றியதோ?
இருக்கத்தானே செய்யும்,

சோத்துக்கு திண்டாடியவர்களை அரண்மனையில் கொண்டு வந்து வைத்தால் தின்றுதின்று அரிசி மூட்டைபோல் உடம்பை வளர்த்திருப்பவர்களுக்கு அவள் தோற்றம் சின்னதாகத்தான் தெரியும்.
துளசியை பிச்சைக்காரி என்பதற்கு முன் தன் நிலை என்னவென்று யோசித்திருக்கலாம்..


இதில் மது போக்கிடமின்றி திணறியபோது உதவியவர்களையே குற்றம் சுமத்துவது வேறு.
இவர்கள் அவளை கொல்வதற்காக துரத்தியதனால் தானே துளசியிடம் தஞ்சம் புகுந்தாள்.
அந்த கஷ்டமான சூழ்நிலையில் கூட முடியாது என்று அவளை விரட்டாமல்.. பாதுகாத்தவளை எப்படித்தான் மனசாட்சியே இல்லாது வஞ்சிக்கிறார்களோ? எதுவுமே பேசாது அமைதியாக அமர்ந்திருந்தவள் கையினை பற்றியவர்,


"மயூரிம்மா.... சீக்கிரம் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கடா! அப்போதா கல்யாணத்தப்போ அழகா இருக்கும்" என்றவறை மின்சாரம் தாக்கியதுபோல் நிமிர்ந்து பார்த்தாள்.


"ஆமாம்மா... உனக்கும் உன் சின்ன மாமன் எழிலரசனுக்கும் இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம்னு முடிவு பண்ணியிருக்கோம். நாளைக்கு ஊரை கூட்டு நிச்சயம் பண்ணி விருந்தே வைக்கலாம்ன்னு ஏற்பாடாகியிருக்கு... அதனால கண்டதை போட்டு குழப்பிக்காம, நல்லா தூங்கி எந்திரிச்சதும் நாளைக்கு இந்த புடவை நகை எல்லாத்தையும் போட்டுட்டு நில்லு...! நான் வந்து அழைச்சிட்டு போறேன்.,
இப்போ சாப்பாட்டை ரூம்கே அனுப்பி வைக்கிறேன்.. மிச்சம் வைக்காம சாப்பிடு" என எழுந்து சென்றவளையே வெறித்திருந்தாள்.

மது இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை..

தன்னை அழைத்து வந்து கொடுமை படுத்தியே சொத்தினை தம் பெயருக்கு மாற்றிவிட்டு.. தன்னையும் தன் குடும்பத்தை போல கொலை செய்துவிடுவார்களோ என்று தான் நினைத்திருந்தாள்.


ஆனால் திடீரென தாய் மாமன் தன் சின்ன மகனை கட்டிவைப்பதாக ஓர் முடிவினை அறிவிப்பார் என்று அவள் நினைக்கவில்லை.


"எனக்கு கல்யாணமா? என் கழுத்தில தான் கேஷி தாலி கட்டிட்டாரே! முதல் புருஷன் உயிரோட இருக்கிறப்போ இன்னொரு கல்யாணமா?
முடியாது என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே முடியாது.
யாரு என்ன சொன்னாலும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்" என தனிமையில் புலம்பியவள் ஏனோ மறந்து போனாள்.

ரவிச்சந்திரன் ஓர் முடிவினை எடுத்துவிட்டால்... அதை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை.


கேஷவனை நினைத்தே உருகியவள், இரவானது கண்ணீரோடு கரைந்து போக... விடியும் தருவாயில் தான் அயர்ந்து போனாள்.
படபடவென்று அவள் அறை கதவானது பெரிதாக தட்டும் ஓசையில் தூக்கம் கலைந்தவளுக்கு, நடப்பினை உணர்ந்து கொள்ள சிறு வினாடிகள் எடுத்தது.


"யாரு.......?" என குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.


"நான் தாம்மா... கதவை திற!" என்றார் அவளது அத்தை.


"ம்ம்....." என்ற முணகலோடு எழுந்து கதவினை திறந்தவளை தள்ளிக்கொண்டு வந்தவளோ,


"வெளிய தான் நாங்க தாழ் போட்டு வைச்சிருக்கோம்ல்ல... எதுக்கு நீ உள்ள தாழ் போட்ட?" என்றார் ஆத்திரத்தின் உச்சியில் நின்று.


"இ... இல்லத்த... வெளிய கதவுக்கு வெளிய ஆம்பளங்க பேசிட்டிருக்கிற மாதிரி சத்தம் கேட்டிச்சு.. அதான் ஒரு பாதுகாப்புக்கு..." என அவர் மிரட்டலில் தயக்கமாய் மது பதில் கூற.


"என்ன பெரிய பயம்? நீ ஓடிப்போயிருவியோனு நாங்க தான் கதவுக்கு கிட்ட ஆள் வைச்சோம். நீ சரியா இருந்தா நாங்க ஏன்டி ஆள் வைக்குறோம்?" என்றவர்.


"நேத்தே உன்னை சீக்கிரம் எழுந்து ரெடியாக சொன்னேல்ல.. இது தான் நீ ரெடியாகிற லட்சணமா? இன்னும் பத்து நிமிஷத்தில திரும்ப வருவேன் அதுக்குள்ள ரெடியாகுற," என்றவரிடம்.


"முடியாது அத்தை. நான் எழில் மாமாவ கட்டிக்க மாட்டேன். எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல" என தைரியத்தை இழுத்துபிடித்து கூறினாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அட கடவுளே மயூரி அத்தை முதல் நாள் ரெம்ப அக்கரையா பேசிட்டு இன்னைக்கு ரெம்ப கெடுபிடியா பேசுறாங்க,🙄🙄🙄🙄🙄🙄
மயூரி வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லுறா 😲😲😲😲😲😲😲
 
Top