• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25. ஹரிணி அரவிந்தன் - என்னோடு நீ இருந்தால்...

ஹரிணி அரவிந்தன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
18
"இரவும் என் பகலும் உன் விழியின் ஓரம் பூக்கின்றதே…

உதிரும் என் உயிரும் ஒரு சொல் தேடி அலைகின்றதே…

என்னானதே…என் காதலே…
மண் தாகம் தீரும் மழையிலே…

அழுகை எனும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே…

நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் இழைந்தேனே….

ஏன் என்னை பிரிந்தாய்? உயிரே…உயிரே…",அந்த வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் என் அருகில் இருந்த வாகனத்தில் அமர்ந்து என்னைப் போலவே சிக்னலுக்காக காத்து இருந்த யாரோ ஒருவரின் செல்போன் தான் ஒலித்தது. அந்த பாடலின் வரிகள் எனக்கு என் அம்மு தங்கத்தை நினைவுப் படுத்தியது. கண்களை இறுக ஒரு கணம் மூடிக் கொண்டேன்.

"ராஸ்கல்…",

என்று சிவந்த கன்னங்களுடன் காதல் வழியும் கண்களோடு என்னைப் பார்த்து சிரித்தாள்.

"நீயில்லனா உன் அம்முவை நீ உயிரோடயே பார்க்க முடியாதுடா ராஸ்கல்...",

என்று என்னைக் கட்டிக் கொண்ட அவளின் ஸ்பரிசம் என் கண் முன்னே வர, என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதில் என் நண்பனால் எனக்கு அனுப்பப்பட்ட திருமண பத்திரிக்கையை பார்த்தேன்.

"நம்ம மேரேஜ் பண்ணிட்டு இந்த கோயம்புத்தூர் விட்டே போயிடலாம் அபி..., நீ, நான் அப்புறம் நம்ம பாப்பானு நமக்கு ஒரு அழகான உலகம்...",

என்று என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு என்னிடம் காதல் மொழி பேசிக் கொண்டு இருந்த என் காதலிக்கு தான் இன்று கல்யாணம். அதற்கு தான் சென்று கொண்டு இருக்கிறேன்.

"அழைப்பில்லாமல் உன் நெஞ்சத்தில் குடி வந்தவனுக்கு..
அழைப்பில்லாமல் உன்
திருமணத்துக்கு வர தெரியாதா..
என் காதலி...?",


இது தான் நான் அவளுக்கு அனுப்ப நினைத்து பின் அவள் எதிர்காலம் கருதி அழித்து விட்ட குறுஞ்செய்தி.


"யோவ்......, சிக்னல் விழுந்துடுச்சி! வண்டியை எடுயா...!",

எனக்கு பின்னால் இருந்து வந்த ஹாரன் சப்தத்தில் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவனாய் என் ராயல் என் பீல்டை நான் செலுத்த ஆரம்பித்தேன். என் அம்முவுக்கு ராயல் என்பீல்ட் மிகவும் பிடிக்கும். அது என்னவோ தெரியவில்லை, அந்த வண்டியை கண்டாலே பரவசமாவாள். இத்தனைக்கும் அவள் வீட்டில் அத்தனை கார்கள் வரிசை கட்டி நிற்கும். தினமும் ஒரு காரில் கல்லூரிக்கு வருபவள் அவள். அவளின் காரில் இருந்து அவள் என்ன உடை உடுத்தி இருக்கிறாள் என்பது வரை எனக்கு அத்துப்படி.

"டாடிக்கு தெரிந்தவங்க யாராவது பார்த்திட போறாங்க...சீக்கிரம் போ அபி..."

"அதெல்லாம் பாக்க மாட்டாங்கடி...அதான் முஸ்லிம் பொண்ணு மாதிரி பர்தா போட்டு இருக்கல மேல...",

"இருந்தாலும் பயமா இருக்குல? சப்போஸ் நீ போற ஸ்பீடுக்கு அதோ அந்த பில்லரில் மோதிட்டனு வை....என்ன ஆகும்?",

"ஏய்...நல்ல பேச்சு பேசுடி... மொத தடவை வெளியே வந்து இருக்கோம்.. பேசுறா பாரு எப்படி...",

"கோயம்புத்தூர் ஹண்டரட் பீட் ரோட்டை ரவுண்ட் அடிக்கிறதுக்கு பேரு அவுட்டிங்கா...?",

அவள் என்னை கேலி செய்தாலும் என் தோளில் கட்டிய கணவன் போல் உரிமையாக சாய்ந்து கொண்டு வந்தது எனக்கு இனித்தது. அவளின் நினைவுகளை நான் இப்போது பயணித்துக் கொண்டு இருக்கும் அதே ஹண்டரட் பீட் சாலை கண்ணில் வந்து நிப்பாட்ட, கண்களில் நீருடன்,

"மடார்.....!!!!!!!!!!!",

அதே தூண் மேலே மோதிக் கொண்டேன். அதற்குள் கூட்டம் கூடி விட்டது.

"இப்ப இருக்கிறதுலாம் காதில் போன் இருந்தால் உலகத்தையே மறந்துடுதுங்க...",

நான் போன் பேசிக் கொண்டு வந்ததால் தான் மோதி கொண்டேன் என்று எண்ணிக் கொண்டு யாரோ ஒருவர் திட்டினார் என்னை.

"அந்த தம்பிக்கு தண்ணி கொடுங்கப்பா...",

என்னை சுற்றி அதற்குள் சூழ்ந்து கூட்டத்தில் இருந்து எதையும் கண்டுக் கொள்ளாது நான் கிளம்பினேன். என் கைகள் இறுக்கமாக என் அம்முவின் திருமண பத்திரிக்கை புகைப்படம் இருந்த செல்போனை பிடித்துக் கொண்டது.

"திராட்சை…! அரைக்கிலோ அம்பது…! சப்போட்டோ அரைக்கிலோ இருபது…",

அந்த சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டியில் கூவிக் கொண்டு செல்லும் அந்த வியாபாரியை பார்த்தவுடன் எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. காந்திபுரம் மார்கெட்டில் தான் என் தந்தை பழக்கடை வைத்து இருந்தார், இது போல் சாலையை கடந்து செல்லும் போது தான் லாரி ஒன்றின் மீது மோதி என் பத்தாவது வயதில் என்னை விட்டுட்டு சென்று விட்டார். அதன் பின் என் அம்மா தான் பத்ரி நாராயணன் வீட்டில் வேலைக்கு சென்று என்னைக் காப்பாற்றினார்.


குறைந்த பட்சம் ஒரு மாதமாகவாது நீங்க கோயம்புத்தூரில் குப்பைக் கொட்டி இருந்தால் பத்ரி நாராயணன் பற்றி தெரிந்து இருக்கும். நாட்டாமை, கட்ட பஞ்சாயத்து, ரவுடிகள் என்று சினிமாவில் காட்டும் அத்தனையும் பொய் என்று நீங்கள் நினைத்து இருந்தால் அந்த எண்ணத்தை அவரைக் கண்டால் நீங்க மாற்றிக் கொள்வீர்கள். அப்படியேப்பட்டவருக்கு பங்களா போன்ற வீட்டுகளுக்கா பஞ்சம்?, அது போன்ற ஒரு வீட்டில் தான் என் அம்மா வேலைக்கு சென்று வந்தார். மற்ற விஷயங்களில் எப்படியோ எனக்கு தெரியாது, தன்னோடு இருப்பவர்களின் கஷ்டம் கண்டு இரக்கம் கொண்டு உதவி செய்யும் ஈரம் மனம் உடையவர் தான் பத்ரி நாராயணன். இதை நான் என் பதிமூன்றாம் வயதில் நான் என் தாயை நெஞ்சு வலியில் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாது நின்றப் போது என்னை அவரது பங்களாவிலே வேலைக்கு அமர்த்தி எனக்கு படிப்பையும் கொடுத்தப் போது நான் உணர்ந்தேன்..அரிதாக கிடைத்த எதையுமே தக்க வைத்துக் கொள்ள மனித மனம் விரும்பும். நானும் எனக்கு கிடைத்த அந்த கல்வியை நன்றாக பயன்படுத்திக் கொண்டேன், பள்ளியிறுதி படிப்பில் வெற்றி பெற்றேன், எனது மதிப்பெண்ணுக்கு பொறியியல் சீட் அந்த பகுதியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் இலவசமாக கிடைத்தது. ஆனாலும் நான் பத்ரி நாராயணன் வீட்டில் பார்த்து வந்த வேலையை விடவில்லை. காரணம், நான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டப்போது எனக்கு கைக் கொடுத்த வேலை, அதனாலே கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் அங்கே வந்து ஏதாவது வேலை செய்துக் கொண்டு இருப்பேன்.

ஓர் அழகான மழை மாலை நேரம்…அப்போது தான் என் அம்முவைப் பார்த்தேன், அந்த நாள் இப்போதும் என் நெஞ்சில் நினைவு இருக்கிறது. தோட்டத்து வேலைகளை பார்த்து விட்டு கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

"அம்மு….! வாம்மா…",

என்று பத்ரி நாராயணன் தன் கையில் இருந்த விரிக்கப்படாத குடையுடன் மழையில் நின்று யாரிடமோ கெஞ்சிக் கொண்டு இருந்தார்.

"அய்யோ…! அய்யா! கொட்டும் மழையில் போய் நனைந்துக் கொண்டு இருக்கீங்க!!!",

என்று அவரைப் பார்த்து பதறிப் போய் குடையை விரித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி அவர் மழையில் நனையா வண்ணம் குடையை விரித்து அவர் தலைக்கு மேல் பிடிக்க, அவர் நிமிர்ந்து என்னை முறைத்தார். அப்போது தான் அவர் கையில் குடை இருப்பதை நான் உணர்ந்தேன்.

"நீங்க அவுட் டாடி…! நான் சொன்னேன்ல? உங்களால் என்னை போல மழையில் நனைய முடியாது…அதுக்குள் உங்க ஆளுங்க யாராவது குடை எடுத்துட்டு வந்துடுவாங்கனு…ஹா…ஹா…",

துள்ளலும் உற்சாகமும் நிறைந்து ஒரு பெண்குரல் கேட்க, நான் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தேன்…அங்கே மல்லிகை மலர் ஒன்று மழையில் நனைந்து உயிர் பெற்று ஆடிக் கொண்டு இருப்பது போல் வெள்ளை நிற சுடிதாரில் மழையில் நனைந்து நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். அவள்! என் அம்மு தங்கம். பால் நிறத்தில் இருந்த அவளின் முகத்தில் புன்னகை பூக்க பெரிய கண்களுடன் அவள் அந்த மழையில் நனைந்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்த காட்சி எனக்குள் எதோ செய்தது. என்னுடைய இத்தனை வருடத்தில் நான் இதுப் போன்ற அழகான பெண்ணை பார்த்ததே இல்லை என்று என் மனம் சத்தியம் செய்தது. அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என் கண்களும் மனமும் என்னிடம் கெஞ்சியது.

"ஹலோ மிஸ்டர். கனவில் இருந்து வெளியே வாங்க…",

என்று அவள் என் முகத்தின் முன் சொடக்கி என்னை நிஜ உலகிற்கு கொண்டும் வரும் அளவுக்கு நான் நின்றேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

"டேய் அபி…இது என் பொண்ணு…அம்மு தங்கம்…நீ படிக்கும் காலேஜ்ல தான் பர்ஸ்ட் இயர் சேர்த்து இருக்கேன்…",

என்ற பத்ரி நாராயணன் சொன்னதில் அவளுக்கு மரியாதையாக வணக்கம் வைத்தேன். என்னுடைய அத்தகைய செய்கையை எதிர்ப்பாரதவளாய் அவள் புன்னகைத்தாள்.

"உன் அரைநொடி புன்னகைக்கு..

என் ஆயுளை எழுதி..

தருவேனடி பெண்ணே..",


அன்று இரவு இப்படி ஒரு கவிதை என் டைரியில் எழுதினேன் நான். எதற்கு எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் மனதில் அவள் முகமே வந்து நின்றது. பத்ரி நாராயணன் எப்போதும் தன் குடும்ப விஷயங்களை பொது வெளியில் பேச மாட்டார், காட்ட மாட்டார். அது மட்டும் இன்றி அவர் தன் பெண்ணை பனிரெண்டாம் வகுப்பு வரை சென்னையில் படிக்க வைத்து விட்டதால் அம்முவை யாரும் அதிகமாக பார்த்தது கிடையாது. அதனாலே அவளை நான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைத்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்று இரவு முழுவதும் கண் மூடினால் அவளின் முகமே கண் முன் வந்து நின்றது.

காலையில் நான் கல்லூரி சென்றப் போது ராகிங் என்று பயந்தவளை சீனியர் எனும் ஹோதாவில் நான் கூட்டிச் சென்று பத்திரமாக அவளின் வகுப்பில் விட்டேன். என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு அவள் தன் வகுப்பறைக்குள் சென்ற போது எனக்கு அது எதோ செய்தது. அதன் பின் அவள் கல்லூரியில் எங்கு சென்றாலும் அவளை நிழல் போல அவளுக்கே தெரியாமல் தொடர்ந்தேன். நான் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண்ணுக்கு சொந்தக்காரன் என்பதால் எனக்கு அந்த கல்லூரியில் செல்வாக்கு இருந்தது. அதைப் பயன்படுத்தி அவள் எங்கு சென்றாலும் அவளைத் தொடர்ந்தேன். கல்லூரி நூலகத்தில் அவள் வாசிக்க நினைத்த புத்தகம் வேறு யாராவது எடுத்து இருந்தால் அடுத்த சில நிமிடங்களில் அவள் கையில் இருக்கும். காண்டீனில் எத்தனை கூட்டம் இருந்தாலும் அவள் ஆசைப்பட்ட சமோசா அவளுக்கு முன்னால் வந்து நிற்கும். அவளை அங்கு படிக்கும் மாணவர்களில் இருந்து பேராசிரியர்கள் வரை பார்க்கும் பார்வையில் மரியாதை இருக்கும். இது எல்லாவற்றிக்கும் பின்னால் நான் இருந்தேன். அதை அவள் உணரவில்லை என்பது அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும் செய்கையிலும் நான் உணர்ந்தேன்.

"குட் மார்னிங் அபி சார்…",

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் இருந்த போது அவள் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். பயபக்தியுடன் தலைக் குனிந்து கொண்டேன். நான் அப்படி தான், கல்லூரியில் மறைந்து அவளுக்கே தெரியாமல் நிழலாக அவளை பின்தொடர்ந்தவனுக்கு இங்கே அவளின் அப்பாவுக்கு சொந்தமான வீட்டில் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் அப்படி இல்லை. அவள் தான் உற்சாக மின்னல் ஆயிற்றே…!

"என்ன அபி சார்…அந்த காலேஜ்ல தான் நீங்க படிக்கிறதா டாடி சொன்னாங்க, நானும் சேர்ந்து ஒரு செமஸ்டரே முடிந்ததுட்டு. உங்களை ஒரு நாள் கூட நான் அங்கே பார்த்ததே இல்லை…?"

அவள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அதிகாரமாக கேட்ட போது என் மனது அவளின் அதிகாரத்துக்கு அடங்கிப் போக ஆசைப்பட்டது. அவள் கேட்ட கேள்வியில் அவள் வகுப்பறையின் வாசலில் அவளைப் பார்ப்பதற்காக நின்றுக் கொண்டு இருந்த தருணங்களும், காண்டீன் பின்னால் இருந்த மரத்தில் மறைந்து நின்று அவள் சாப்பிடும் அழகையும், அவள் கார் வரும் பாதையில் உள்ள வாத நாராயணன் மரத்தின் அருகே நிற்கும் இளைஞர் கூட்டத்தின் நடுவே நான் நிற்கும் தருணங்களும் என் மனதில் வந்து சென்றது.

"நானும் உங்களை ஒருநாளாவது பார்த்து விட மாட்டோமானு தேடி பார்க்கிறேன்…கண்ணில் சிக்கவே மாட்டுறீங்களே…",

அவள் சொல்லி புன்னகைத்து விட்டு சென்றாள். அவள் சாதாரண மாக சொன்ன வார்த்தைகள் தான், ஆனாலும் என் நெஞ்சில் இனிமையை கொண்டு வந்து இருந்தது. அவள் அப்படி சொன்னதற்காகவே அதன் பின் அவள் கண்ணில் அடிக்கடி பட ஆரம்பித்தேன். சில நேரங்களில் அவள் என்னை பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேச வேறு செய்தாள். இப்படியே அவளின் முதல் வருடமும் என் மூன்றாம் வருடமும் ஓடிப் போக, அவள் இரண்டாம் வருடத்தில் காலெடுத்து வைத்து இருந்தாள். நான் நான்காம் வருடத்தில் காலெடுத்து வைத்து இருந்தேன். அதற்குள் அவள் என்னிடம் தன் காதலை சொல்லி இருந்தாள். அவள் காதலை சொல்லி இருந்த அந்த தருணம் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஒரு தேர்வுக்காக நான் ஒருமுறை திருச்சி வரை இரண்டு நாட்கள் செல்ல வேண்டி இருந்தது. நான் இல்லாத அந்த இரண்டு நாட்களும் அவளுக்கு கல்லூரி பிடிக்கவே இல்லை என்பதை அன்று நான் உணர்ந்தேன். அன்று வழக்கம் போல் நான் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டு பார்க்கிங் அருகே இருந்த வாத நாராயணன் மரத்தின் கீழ் அவள் நின்றுக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் இருந்த தவிப்பில் நான் வேக வேகமாக அவள் அருகே சென்றேன்.

"அம்மு…! காலேஜ் விட்டு ரொம்ப நேரம் ஆகிட்டு…இன்னும் இங்கே என்னப் பண்ணுற?",

அவளை சற்று அதட்டினேன். அந்த அதட்டலில் அவள் முகம் லேசாக மாறியது. அதை உணர்ந்து நான் என்னைத் திட்டிக் கொண்டேன்.

"உங்களுக்காக தான் அபி வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…",

அவள் தலைக் குனிந்தாள்.

"அப்பாகிட்ட சொல்லிட்டேனே…நாளை தோட்டத்துக்கு தென்னை கன்னு வந்துடும்னு…",

நான் பத்ரி நாராயணன் தான் என்னை அழைக்கிறார் என்று எண்ணி சொல்ல, அவள் என்னைப் பார்த்தாள்.

"அது இல்ல அபி..இது……..",

என்று தயங்கி இழுத்தவளின் செய்கையில் நான் புரியாது அவளைப் பார்த்தேன்.

"என்ன அம்மு…ஏதாவது பிரச்சனையா? மேம் யாராவது உன்னை திட்டினாங்களா? இல்ல யாராவது ஏதாவது உன்னை சொன்னாங்களா?",

கண்களில் கூர்மையுடன் நான் அவளை வினவினேன். அதற்கு அவள் இல்லை என்பதாய் தலை அசைத்து விட்டு நிமிர்ந்தாள். அவள் கண்கள் கலங்கி எப்போது வேண்டுமானாலும் கண்ணீர் துளி கன்னம் தொடுவேன் என்று என்னிடம் சொன்னது.

"ஏன் ரெண்டு நாளா என்னைப் பார்க்க வரல..?",

கண்களில் இருந்து கன்னம் தொட்ட அந்த கண்ணீர் துளியில் அவள் மனதை நான் அறிந்தேன். அந்த கண்ணீர் துளிகள் எனக்காக அவள் சிந்தியது எனும் போதே என் மனம் என் வசம் இல்லை.

"எக்சாமுக்காக திருச்சி போயிருந்தேன்…அப்பா கிட்ட சொல்லிட்டு போயிருந்தேனே…",

"டாடியும் நானும் உங்களுக்கு ஒண்ணா?",

ஒரே கேள்வியில் என் மனதின் ஆழத்தில் அவள் இறங்கினாள்.

"அம்மு……!!!",

நான் திகைத்துப் போய் பார்த்தேன் அவளை.

"உன் அரைநொடி புன்னகைக்கு..

என் ஆயுளை எழுதி..

தருவேனடி பெண்ணே..",

நான் என்றோ எழுதி வைத்து இருந்த கவிதையை அவள் என்னிடம் சொல்லி விட்டு,

"அந்த அரைநொடி புன்னகை என் கிளாஸ் வாசலிலும், காண்டீன் பின்னால் இருக்கும் மரத்துக்கு அடியிலும் அவள் கார் வரும் பாதையிலும் இந்த ஒரு வருடமாக கிடைத்ததா அபி?",

அவளின் கேள்வியில் நான் திகைத்துப் போய் நின்றேன்.

"நீங்க இல்லாத போது யதார்த்தமாக நீங்க இருக்கும் அந்த தோட்டத்து வீட்டுப்பக்கம் போனேன்..அப்போ கிடைத்தது உங்க காதலை சொன்ன இந்த டைரி…",

அவள் என் டைரியை நீட்டியப் போது நான் முகம் வெளுத்துப் போய் நின்றேன். அவள் அதை உணர்ந்து என்னை நெருங்கி என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"அபி…நீங்க என்னை அந்த மழைநாளில் பார்த்தது தான் உங்களுக்கு முதல் முறை. ஆனால் நான் உங்களை பிளஸ் டூ படிப்பதில் இருந்தே பார்த்து வருகிறேன்…தலைக் குனிந்தப்படி பெண்களை நிமிர்ந்து கூடப் பார்க்காது டாடி சொல்லும் வேலையை செய்யும் உங்களை நான் லீவுக்கு ஊருக்கு வந்தாலே என் ரூமில் இருந்து ஒளிந்து ஒளிந்து பார்ப்பேன்…ஆனால் ஒவ்வொரு முறையும் சென்னை போனப் பிறகு உங்களை நான் மறந்து விட்டு ஸ்கூல், எக்சாம்னு பிசி ஆயிடுவேன்…அதுக்கு அப்புறம் உங்களை காலேஜ்ல பார்த்தப்போ எனக்கு பெருசா எந்த உணர்வும் ஏற்படல…ஆனால் இந்த ரெண்டு நாள் உங்களைப் பார்க்காமல் இருந்தப்போ தான் எனக்கு உங்க மேல் இருப்பது வெறும் ஈர்ப்பு மட்டும் இல்ல.. அதையும் தாண்டி ஒரு உறவுக்கான தொடக்கம்னு..",

என்றவள் என் மார்பில் சாய்ந்தாள். நான் அவளை தயக்கத்தோடு பார்த்தேன்.

"அம்மு…உன் மேல் எனக்கு காதல் இருப்பது உண்மை தான்…ஆனால் உன்னோடு வாழ வேண்டும் அப்படிங்குற அளவுக்குலாம் பேராசை இல்லை..நீ சந்தோஷமா இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்…ஏன் என்றால் எனக்கு என் தகுதி தெரியும்..அம்மு! நீ மகாராணி…உன் வாழ்வில் ஒரு மகாராஜா தான் வர வேண்டும்..நான் ஏழை அம்மு…! கடவுள் தன் ஸ்தானத்தில் இருந்து இறங்கி வரக் கூடாது…",

நான் அவள் காதலை மறுத்தேன்.

"ஏன் வரக்கூடாது? தூய்மையான பக்திக்கு கட்டுப்பட்டு கடவுள் பக்தர்களுக்காக வரவில்லையா..? என்னை கடவுள் ஆக்கியது உங்கள் காதல் அபி…நீங்க என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிஜமாகவே நான் கடவுள் கிட்ட போயுடுவேன்…",

"ஏய்….!!!!",

அவள் சொன்ன வார்த்தையின் வேகம் தாங்க முடியாமல் சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

"ஐ லவ் யூ ராஸ்கல்…",

அவள் சொன்ன வார்த்தையில் அவளின் காதலின் ஆழத்தை அறிந்த நான் என்ன நிலை வந்தாலும் அவளை மட்டும் விடவே கூடாது என்று என் மனதில் உறுதி வந்தது. அப்போது நான் இறுதியாண்டு. கேம்பஸ் இன்டர்வியூயில் மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் நான் தேர்வாகி இருந்தேன். அதை நான் அவளிடம் சொன்னப் போது என்னை தன் அப்பாவிடம் பேச சொல்லி நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

"பேசுடா…ராஸ்கல்…",

அவளிடம் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தியை நான் பார்த்து அதற்கு ஒரு முத்தத்தை அனுப்பினேன். அது என்னவோ தெரியவில்லை..அவள் ராஸ்கல் என்று என்னை அழைத்தாலே மயங்கி விடுகிறேன்.. நான் அவளிடம் காதலை உடனே ஒப்புக் கொள்ள வில்லையாம் அதனால் நான் ராஸ்கலாம் ஒருநாள் அவள் விளக்கம் சொல்லி என்னை செல்லமாக அடித்தப் போது நான் உலகம் மறந்தேன். அதுவே அவளின் கன்னத்தில் நான் அந்த நேரத்தில் முத்தம் பதித்தால் அந்த ராஸ்கல் ஸ்வீட் ராஸ்கலாகவும் அவள் கோபமாக இருந்தால் அது பிளடி ராஸ்கலாகவும் மாறும்.


டிங்….டிங்…!

கோயிலில் ஒலித்த மணியோசையில் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவனாய் அந்த கோயிலை கடந்தேன். அன்றும் இதே சித்தி விநாயகரை கும்பிட்டு தான் பத்ரி நாராயணனை பார்க்க சென்றேன். நான் அப்போது தான் அமெரிக்காவில் இருந்து வந்து இருந்தேன். என் வேலைத்திறமைக்கு அங்கேயே புரமோஷன் கிடைத்து விட்டது. என் அம்மு மட்டும் என் மனைவியாக மாறி விட்டால் நான் நிரந்தர அமெரிக்க குடிமகனாக மாறி விட கூட வாய்ப்பு இருக்கிறது. அதை எல்லாம் எனக்கு எடுத்து சொல்லி அம்மு தான் என்னை இன்றாவது பேசி விடுடா ராஸ்கல் என்று என்னை அனுப்பி இருக்கிறாள்.

"அய்யா……!",

என் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த பத்ரி நாராயணன் முகத்தில் புன்னகை வந்து இருந்தது.

"வாய்யா…அபி..",

வாய் நிறைய வரவேற்றவரிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினேன். அவர் அப்படி இல்லை, நேராக விஷயத்துக்கு வந்தார்.

"அபி…உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும்..இதை உதவினு சொல்லுவதை விட செய்நன்றி என்று வைத்துக் கொள்ளேன்…",

அவர் பேச்சில் நான் நிமிர்ந்தேன்.

"சொல்லுங்க அய்யா…",

"நம்ம அம்முவுக்கு நான் எங்க ஜாதியில் நல்ல பணக்கார மாப்பிளை பார்த்து வைத்து இருக்கேன், ஆனால் அவள் மனதில் இருக்கும் காதல் அதை ஏற்றுக் கொள்ள மறுக்குது…அதனால் நீதான் அவளிடம் எடுத்து சொல்ல வேண்டும்…",

அவரின் பேச்சில் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தேன்.

"எனக்கு அமெரிக்காவில் ஒரு பொண்ணுடன் கல்யாணம் ஆகிட்டு…அதனால் என்னை மறந்து நீ கல்யாணம் பண்ணிக்கோ, உன்னிடம் நான் பழகியது எல்லாம் பொய்னு நீ அம்முகிட்ட சொல்லணும்..",

"அய்யா…..!!!!!!!!!!!",

"உன்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்த நிலையில் இருக்கும் இடத்தில் அவளுக்கு மாப்பிளை பார்த்து வைத்து இருக்கேன், நான் அவங்க கிட்ட வாக்கும் கொடுத்து விட்டேன், எனக்கு தெரியும், நீ இதை செய்வனு.. அனாதையாக நின்றவனை ஆதரவு அளித்து இப்போ அமெரிக்காவில் இஞ்சினியராக இருக்கும் அளவுக்கு உன்னை நான் உயர்த்தி இருக்கும் நன்றி உன்கிட்ட இருக்கும்னு நான் நம்புறேன்…அபி…! நான் சொன்னால் அம்மு நம்ப மாட்டாள், அதே நீ சொன்னால் நிச்சயம் நம்புவாள். இதையும் மீறி உனக்கு அவள் வேண்டும் என்றால் சொல்லு…என் பிணத்திற்கு கொள்ளி வைத்து விட்டு அவளை கல்யாணம் செய்துக் கொள்..",

நான் அப்படியே இடிந்து போய் அமர்ந்தேன்.

"உன்னோடு இருப்பதை விட அம்மு அங்கே சந்தோஷமா இருப்பா..",

"நீ எனக்கு நன்றியோடு இருப்பவன்..",


அவர் குரல் என் காதில் மாறி மாறி ஒலிக்க, அப்படியே வெடித்த மனதோடு அமர்ந்தேன். வெகு நேரத்திற்கு பின் நான் எடுத்த முடிவை அவரிடம் சொல்லி விட்டு வந்தேன். மாலை என்னை தேடி வந்த அம்முவின் முகம் அழுது வீங்கி இருந்தது. அது தான் நான் அவளை கடைசியாக பார்த்தது.

"உனக்கு கல்யாணம் ஆகிட்டாமே…டாடி சொன்னார்..நான் நம்பல…அதுக்கு டாடி இந்த போட்டோவை காட்டினார்..",

யாரோ ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் நான் திருமண கோலத்தில் நின்றுக் கொண்டு இருந்த காட்சி அது. எல்லாம் பத்ரி நாராயணனின் போட்டோ எடிட்டிங் வேலை தான்.

"அம்மு…! அந்த போட்டோ உண்மை தான்..அது என்னோடு வேலை பார்க்கும் எலிசா..",

நான் சொன்ன பொய்யில் மறுநொடி என் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்து இருந்தது.

"ஏன்டா இப்படி பண்ணுன? அய்யோ…!!!!!!",

அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்த போது என் உயிரே இல்ல.

"நான் உன்கிட்ட சாதரணமாக தான் பழகினேன், நீதான் அதைக் காதல்னு நினைத்துட்ட…எனக்கு இவளை தான் பிடித்து இருக்கு..",

நான் சொல்லி முடிக்க என்னை கண்ணீர் வழியும் முகத்தோடு பார்த்தாள்.

"பொய் தானே சொல்லுற அபி? இந்த போட்டோ எடிட்டிங் தானே? என்னை பிராங்க் பண்ணுற தானே?",

அவள் கேட்டதில் நான் கண்களை மூடிக் கொண்டேன், அவளின் முகத்தைப் பார்க்க எனக்கு சக்தி இல்லை.

"உன்னிடம் நான் எதுக்கு பிராங்க் பண்ணப் போறேன்? நமக்குள் இருந்தது ஒரு அட்ராக்க்ஷன் அவ்வளவு தான். மத்தப் படி வேற ஒண்ணும் இல்ல.. தயவு செய்து என் வாழ்க்கையில் வராதே, எனக்கு உன்னை விட அவள் தான் முக்கியம்…என்னைத் தொடாதே! நான் இன்னொருத்திக்கு சொந்தம்",

இந்த வார்த்தையை என் அம்முவிடம் சொல்ல நான் அன்று உயிரோடு இறந்தேன். அந்த வார்த்தையில் அதிர்ந்து போய் பார்த்தவள் தான் அப்படியே அழுது கொண்டே சென்று விட்டாள்.

"நீ நன்றி உடையவன் தான்ய்யா",

என்னைப் பாராட்டிய பத்ரி நாராயணனிடம்,

"உன்னை சாகாமல் காப்பாற்ற என்னையும் என் மனதையும் உயிரோடு கொன்று விட்டேன்…த்தூ…, நீயெல்லாம் ஒரு மனுஷன்..",

என்று கோயம்புத்தூரை வெறுத்து யூஎஸ் வந்த நான் தான் அவளின் நினைவில் என் வாழ்க்கையில் கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன். இதோ வந்து விட்டது திருமண மண்டபம். கூட்டம் நிரம்பி வழிகிறது. வாசலில் இருந்த பேனரில் மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் அவளின் புகைப்படத்தை பார்த்த எனக்கு கண்ணீர் முட்டுகிறது. உள்ளே செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. அப்போது என் மேல் ஒரு ஸ்பரிசம் பட திரும்பிப் பார்த்தேன். என் அம்மு தான் மணப்பெண் அலங்காரத்தில் தங்க நிறப் புடவையில் சிரித்த முகத்தோடு நின்றுக் கொண்டு இருந்தாள். கண்ணில் நீரும் காதலும் வழிய,

"அபி….!!!!",

என்று அவள் சொல்லும் போதே அங்கே திருமண மண்டபத்தின் உள்ளே ஒரு பரபரப்பு குரல் கேட்டது.

"அய்யோ….! கல்யாண பொண்ணு விஷம் குடித்துட்டு…!!!!!!",

அங்கே கேட்ட பரபரப்பு குரலில் அந்த திருமண மண்டபம் களேபரமாக சற்று நேரத்தில் வந்த ஆம்புலன்சில் மணப்பெண் அலங்காரத்தில் தங்க நிறப் புடவையில் உயிரற்ற உடலாக என் அம்மு தங்கம் ஏற்றப்பட்டுக் கொண்டு இருக்க, அதை கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டு இருந்த என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.

"ச்சே…காலையில் இருந்து இத்தோட ரெண்டு சாவு..இதே போல தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர வழியில் அந்த ஹண்டரட் பீட் ரோடு பில்லரில் அபிமன்யுனு ஒரு பையன் மோதி ஸ்பாட்லயே அவுட்…",

யாரோ சொல்லிக் கொண்டு சொன்னதில் நான் அவளை அர்த்தத்தோடு பார்த்தேன்.

"ராஸ்கல்…பொய் சொல்லிட்டல, அதான் உன்னைத் தேடி நான் வந்துட்டேன்..இனி நம்மளை யாராலும் பிரிக்க முடியாது…",

என்றவள் கைகளை நான் இறுக பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்..இப்போது யாருடைய கண்ணீரும் கதறலும் என்னை எதுவும் செய்யவில்லை. சாலையின் ஓரம் நாங்கள் இருவரும் சுற்றி திரிந்த இடங்களை காதலோடு ரசித்துக் கொண்டே போய் கொண்டே இருக்கிறோம், யாருக்கும் பயப்படாமல் நிம்மதியாக, நிறைவாக.. எங்களுக்கான வாழ்வை வாழ..!

- முற்றும்

Screenshot_20230205_132215_Text On Photo.jpg
 
Top