• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
கலைந்த அந்த உருவத்தையே கண்ணிமைக்காது பார்த்திருந்தவள், அது காற்றோடு கலைந்து போனதும், வேறு எங்காவது தோன்றுகிறதா என தேடுவதற்குள் நெருங்கிவிட்டார் அந்த மண்டையோட்டு மாலைக்குச் சொந்தக்காரன்.

நிலா வெளிச்சத்தில் அவன் நிழலானது அவள் விழி சென்ற திசை விழவும் தான் திரும்பிப்பார்த்தாள்.

இரண்டு அடிகளே அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி.

இப்போதும் நினைத்தாள் அவன் பிடிக்குள் சிக்காது ஓடி விடுவாள் தான். ஆனால் அதற்கு அந்த மரவேர் சம்மதிக்க வேண்டுமே..

மருண்டவிழிகள் அவனை நோக்க. இறுதி நிமிடம் வரை போராடிய பின்னர் தோற்று மடிவோம் என நினைத்தவளாய், கால்களை இழுத்தவள் காலானது எந்த வித பிடிமானமுமற்று சாதாரணமாக வந்தது.

சந்தேகமாக திரும்பியவள் விழிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.

ஆம் அவள் கால்கள் அந்த வேரிடமிருந்து விடுதலை பெற்றிருந்தது. அவ்வளவு ஏன்..? தாரைக்கிழித்துக் கொண்டு ஏதோ மரத்தின் வேர் அவளை அசையவிடாது செய்தது என்று சொன்னால் இப்போது அவளால் கூட நம்பமுடியாது.

உண்மை தான். வீதியில் எந்த வித பிளவும் இல்லாது அவ்வளவு நேர்த்தியாக இருக்க.. மெதுவாக திரும்பி அந்த துறவியை நோக்கினாள்.

அவளையே பார்த்திருந்தவர் உதடுகளோ சினேகமாய் ஓர் புன்னகையினை உதிர்த்தது.

அந்த சாந்தமான முகமா சற்று முன்னர் அத்தனை ஆக்ரோஷத்தை காட்டியது..? இல்லவே இல்லை.. இவருக்குள் அப்படி ஒரு முகம் இருக்கும் என்று சத்தியம் செய்தால் கூட கமலினியால் சிறுதும் நம்பமுடியாது.

இமைக்கும் நொடிகளில் பாவத்தை மாற்றி, நெருங்கியவரை கண்டு இம்முறை பயங்கொள்ளாது எழுந்து நின்றாள்.



"என்ன தாயே நடப்பவை எவையும் நம்பும் படியாக இல்லையா..? இவை அனைத்துகமே இயற்கைக்கு அப்பாற்பட்டவை. இதை எண்ணி நீ பயம் கொள்ளாதே." என்றவர் குரலில் தாய்மை பொங்கிப் பெருக்கெடுத்தது.

பெண்மைக்குள் தாய்மை உண்டு என்பது அவள் அறிந்தது தான். ஆண்மைக்குள்ளும் தாய்மையை இன்று தான் காண்கிறார். அதனாலேயே அவர் வார்த்தைகளாக உரைத்தது அவளது செவிகள் ஏற்கவில்லை.. மாறாக அவரையே விழியசையாது நோக்கி நின்றாள்.


அவள் நிலையினை உணர்ந்தவராய், அவள் அருகில் சென்று அவள் சிரலில் கரம் பதித்தவர்.

"நீ என் குழந்தையம்மா... உனக்கென்று ஓர் துன்பம் நேரும் போது, உடனிருந்து காப்பது என் கடமை." என்றவரது கரமானது அவள் சிரசில் பட்டதும் தான் சுயநினைவை அடைந்தவள் கரங்கள், தானாக அவரை வணங்கி நின்றதும்.

மீண்டும் அதே மந்திரப் புன்னகையினையே உதிர்ந்தார் அந்த துறவி.



"இப்போது உன் பயம் தெளிந்ததா..? தெளிந்தது என்றால் சிவ ரகசியம் ஒன்றினை உன்னிடம் கூறவேண்டும். அதை நீ உடனேயே நிறைவேற்றினாலே மாத்திரமே உன் மைந்தனை உன்னால் காப்பாற்ற முடியும்" என்றார்.

அவளது பேச்சில் அதிர்ந்து விழி விரித்தவளுக்கு, ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிப்போக.

"சாமி..." என்றாள் உள்ளே போன குரலில்.

"ஆம் மகளே...! இவன் தற்போது உன் மகனே ஆகினும், சிவனின் திருவருள் நிரம்பப்பெற்ற, சிவனது அம்சத்தவன்.

முன்ஜென்மத்தில் தன் ஆசையினை அடைய முடியாத ஓரே காரணத்தினால், இப்பிறவியிலாவது அதை அடைந்திட வேண்டுமென்று, மறு ஜென்மம் எடுத்துள்ளான்.

அதை தெரிந்து கொண்ட இவனது எதிரிகளில் ஒருவன் தான், இப்போது இவன் உயிரை எடுக்க முயற்சித்துள்ளான்." என்றார்.

கோவிலில் ஓதப்படும் மந்திரங்களை காதால் கேட்டிட முடிந்தாலும்.. அதன் அர்த்தம் புரியாதவளைப்போல்..

"எனக்கு எதுவுமே புரியலையே சாமி.." என்றாள் விழிகளை உருட்டி.

"எதுவும் புரியாமல் இருப்பது தான் எல்லோருக்கும் நன்மையளிக்கும்." என்றவாறு அந்த குச்சியில் சுற்றியிருந்த கலர்கலரான நூல்களில் கறுப்பு நிறத்து நூல் ஒன்றினை கழட்டி, அதை குழந்தையின் இடையில் கட்டியவாறு.

"இது பரம்பொருளான சிவனது பாதத்தில் வைத்து அர்சித்த சிவசின்னம். இது இருக்கும் வரை எந்த ஒரு தீங்கும் இவனை நெருங்காது. ஆனால் ஒன்று.... இந்த நூலிற்கு சத்தி என்பது எழுபத்து ஐந்து நாட்களே... அதன் பிறகு இவனை யாராலும் காப்பாற்ற முடியாது." என்று எச்சரித்தார்.

"ஐய்யோ சாமி..!" என ஆதிர்ந்தவள்..

"நீங்களே இப்படி சொல்லலாமா..? என் பிள்ளைய இவங்ககிட்டயிருந்து எப்படி காப்பாற்றுவது..?" என்றாள் பெற்ற வயிறு பதை பதைக்க.

"கவலை கொள்ளாதே..! சிக்கல் என்ற ஒன்று உண்டெனில்.. தீர்வு என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தே தீரும்.
நான் கட்டிய கயிறு குழந்தையை அந்த தீய சத்தியிடம் இருந்து மறைப்பதற்காக கயிறு தான். இவன் மூச்சுக்காற்றைக்கூட இந்த எழுபத்தைந்து நாட்களுக்கு, அந்த சீயசத்தியால் இணங்கான முடியாது. அதற்குள் இங்கிருந்து அவனை அழைத்து சென்று விடு!" என்றார்.



"அழைச்சிட்டு போறதுன்னா... எங்க சாமி அழைச்சிட்டு போகணும்..? எனக்கு எதுவுமே புரியலையே.." என்றவளுக்கு கால்கள் நடுக்கம் கண்டிருந்தது..

"குழந்தையை என்னிடம் கொடு! சொல்கிறேன்." என்றார்.

நடப்பவை எல்லாவற்றையும் கண்முன்னே கண்டவளால், ஏனோ அவரிடமும் குழந்தையினை கொடுக்க பயமாக இருந்தது.


உண்மை தானே..! இப்படி ஓர் சூழலில் யாரைத்தான் அவளால் நம்ப முடியும்.? இவனுமே நல்லவன் போல் வேசமிட்டு, குழந்தையை கொல்ல நினைத்தால்...?

அவரிடம் குழந்தையை கொடுக்காது, பின்னால் இழுத்துக்கொண்டவளை பார்த்து முன்னையது போலவே புன்னகைத்தவர்.

"இன்னமுமா செக்கையும் சிவலிங்கத்தையும் உன்னால் இணங்காண முடியவில்லை...? நான் அர்த்த இராத்திரியில் சுடுகாட்டில் தவம் புரிபவன் தான்... அதற்காக உயிர்களை நேசிக்க தெரியாதவனல்ல... இங்கிருக்கும் அத்தனை உயிர்களையும் என் குழந்தையாக நினைப்பவனா.. உன் குழந்தையை கொல்வேன்..?

அவனை என்னிடம் கொடம்மா....!" என்றவர் பேச்சில் தானாகவே குழந்தையை அவர் முன் நீட்டியவளையே பார்த்தவாறு குழந்தையினை வாங்கியவன்.

"இவன் மண்ணை மாத்திரமல்ல.. அந்த விண்ணையுமே ஆழப்பிறந்தவன்... அவனது போதாத காலம்.. எதிரிகளிடமிருந்து இவனை பாதுகாக்க வேண்டும் எனில், பதின் எட்டு ஆண்டுகள் இவன் ஒழிந்திருக்க வேண்டும் என்பது விதியின் நியதி.

அதனால் குழந்தையை இந்த எழுபத்து ஐந்து நாட்களுக்குள், இந்த மண்ணின் காற்று படாத தேசத்திற்கு அழைத்து செல்லவேண்டும். அதுவும் பெரும் சமுத்திரம் தாண்டி அழைத்து செல்ல வேண்டும்.

இல்லையேல் இவன் உயிரை அந்த தீய குணம் கொண்ட அரக்கனுக்கு பலியாக்க நேரிடும்." என்றார் குழந்தையின் முகத்தையே பார்த்தவாறு.

"ஐய்யோ..!" என வாயில் கைவைத்து அதிர்ந்தவர் புறம் திரும்பியவர்,

"இதில் அதிர்ச்சி கொள்ளவதற்கு எதுவுமே இல்லை மகளே...!
இது சாத்தியமான ஒன்று தான். ஆனால் இந்த ரகசியம் உன்னை அன்றி.. பிறருக்குத் தெரிய வருமேயானால்.. யாரை காக்க வேண்டுமென போராடுகிறாயோ.. அந்த குழந்தையின் தலை மறு நொடியே வெடித்து சிதறும்.

உன்னால் உன் மைந்தான் மடிவான். இந்த வாக்கு உன் கணவனுக்குமே பொருந்தும்." என்றார்.

"அய்யோ...! இல்ல சாமி... இல்ல... நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்." என வாயினை மூடிக்கொண்டவளை கண்டு மீண்டும் அதே புன்னகையினை சிந்தியவர்.

"இவன் வளர்த்து பருவம் எய்யும் போது.. நீயாக இவனுக்கு மனைவியை தேடிச்செல்லாதே.. இவனுக்கானவள் இவனே வேண்டாம் என்று தூர விலகிடினும்.. தானாகத்தேடி உன்னிடம் வருவாள். அன்று உன் மறு மகளை கண்டு கொள்! அதுவரை இவனை மணந்து கொள் என்று நிர்பந்திக்காதே...

அத்தோடு இப்போது இவனுக்கு நீ தேர்ந்தெடுத்த நாமம் நன்றாக இல்லை. அ..ஆ.. என்ற உயிரெழுத்து தவிர்ந்த.. வேறு ஒரு நாமத்தை சூட்டிக்கொள்! வேண்டுமாயின் நானே இவனுக்கு நாமம் சூட்டிக்கொள்ளவா..?" என்றார் அவளிடம் தலை திரும்பி.

தன்னிச்சையாய் அவள் தலை சம்மதமாய் அசை..

"நல்லது.. இன்றிலிருந்து இவன் நாமம் சௌந்தரீகன். இதேயே வைத்துக்கொள்!" என்றவர், குழந்தையினை மூடியிருந்த போர்வையினை விலக்கி.. முதுகுப்புறம் திருப்பியவர்,



"இந்த இடத்தை நினைவில் கொள் சௌந்தரீகா.. உன் எதிரிகள் யாருடைய விரலாவது இந்த இடத்தை தீண்டினால் மாத்திரமே.. உன் பூர்வ ஜெம்மம் உனக்கு நினைவில் வரும். இல்லையேல் எப்போதும் நீ சௌந்தரீகன் தான்." என்று குழந்தையின் காதில் மட்டும் கேட்கும் படி கூறியவர்,


அவனது இடுப்பிற்கு கீழ் பகுதியில் தன் கட்டை விரலால் சற்று பலமாக அழுத்தி எடுத்ததில், மதுஸ்ரீ உடலில் இட்ட அதே திரிசூழ மச்சம் பதிந்தது.

அதை வருடிவிட்டவாறே அவனை கமலியின் கையில் கொடுத்தவர்,

"நான் சொன்னது அனைத்தையும் நினைவில் கொள்! இல்லையேல் உன் மைந்தன் உயிர் போய்விடும்." என எச்சரித்து விட்டு அவளது எதிர்திசை நடந்தார்.


அதன் பின் ஏதேதோ கூறி அங்கிருந்து கணவனை அழைத்து சென்றவர், அடுத்த மாதத்திலேயே ரஜேந்திரனை கட்டாயப்படுத்தி அந்த நாட்டைவிட்டு அழைத்து சென்று விட்டாள்.

மனைவியின் இந்த அதிரடி முடிவை அவரால் ஏற்க முடியவில்லை என்றாலும்.. காரணமின்றி எதவும் செய்யமாட்டாள் என நம்பியவரும் அவளுடன் செல்ல சம்மதித்தார்.

அதன் பின் எக்காரணத்தை கொண்டும் அவரும் இந்த நாட்டிற்கு வரவில்லை.. கணவனையும் அனுப்பவில்லை.

பதினெட்டு வருடங்கள் இல்லை.. இன்னமும் எத்தனை வருடங்கள் ஆனாலும், அங்கு மகனை அழைத்து வர அவர் விரும்பவும் இல்லை.

ஆனால் ராஜேந்திரன் தான், மனைவிக்கு தெரியாது இங்கு பல நிறுவனங்களை நிறுவி.. ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாக ஒவ்வொருவரை நியமித்து, அதை நல்ல முறையில் அங்கிருந்தே வழிநடத்திக் கொண்டிருந்தார்.

இது இருபத்தி ஆறு வயதை அடைந்த போது தான் சௌந்தரீகனுக்கே தெரியவந்தது.
தெரிய வந்ததுமே ஏதோ ஒன்று அவனை ஊந்த.. புதிதாக ஒரு தொழிலையும் தானன செய்யப்போவதில்லை.. இங்கு ராஜேந்திரன் ஆரம்பித்த தொழிலையே தான் தொடரப்போவதாக ஒற்றைக்காலில் நின்று, பெற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.


மகனது ஆபத்து காலம் தாண்டிய பின்னர் பயம் கொள்ளத் தேவையில்லைத்தான். ஆனால் நடந்தவற்றை நேரில் கண்டவளாயிற்றே..


இன்னும் அந்த காட்சி அவள் மனக்கண்ணிலிருந்து மறையாது அவளை பயமுறுத்தவே செய்தது.

அப்போது நடந்தவற்றையே சிந்தித்திருந்தவள் சிலையாய் சமைந்து, சில நிமிடங்கள் தாண்டியிருந்தது.

"ஆன்ட்டி...!" என அழுத்தமாக அழைத்ததுமல்லாது.. அவரை உழுக்கியே சுமூக நிலைக்கு கொண்டு வந்தவளை கண்டது அதிர்ந்து விழித்தார்.


"ஏன் ஆன்ட்டி... நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா..? நான் கூப்பிட்டதை கூட கேட்காம ரொம்ப நேரமா எதையோ தீவிரமா சிந்திச்சிட்டே இருந்திங்களே... ஏதாவது பிரச்சினையா...?" என்றாள் மதுஸ்ரீ அவரது அமைதிக்கான நிலை புரியாது.

"இல்லம்மா..." என்று அழுத்தமாய் இமைகளை மூடித்திறந்தவர்,

"சரி வா! உக்காந்து பேசலாம்...." என்று சோபாவை நோக்கி அழைத்துச்சென்று அமர்த்தி, தானும் எதிரே அமர்ந்து கொண்டவர்..

"சரி சொல்லு.. நீ என் பையன தீவிரமா விரும்புறேன்னு உன் பேச்சில தெளிவா தெரியுது.. அவன் உன்னை விரும்புறானா..?" என்றார் ஆர்வமாக.

"யாரு அவனா..?" என கீழ் உதட்டினை பிதுக்கியவள்,

"ஏன் ஆன்ட்டி! உங்க பையனோட லட்ஷணம் உங்களுக்கு தெரியாதா..? சுத்த வேஸ்ட் ஆன்ட்டி" என சேர்த்துபோய் சொன்னவள்,

சட்டென வசதியாக நிமிர்ந்து அமர்ந்து கமலியின் கையினை பற்றி,

"ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன் ஆன்ட்டி..! அவன் வெளிய தான் ரோபோ மாதிரி சீனு போடுறான்... ஆனா உள்ளுக்குள்ள என்மேலான காதல் இப்போ மட்டுமில்ல.. எப்போவுமே இருக்கும்.. அதை என்ன காரணம்ன்னு தெரியல.. வெளிய காமிக்கிறான் இல்லை." என்றவள் விழிகளையே கூர்ந்து கவனித்தவர்,


"நான் ஒன்னு கேட்பேன்.. மறைக்காம உண்மை சொல்லுவியா..?"

"ஓ...! சொல்லுறேனே.. கேளுங்க..."

"என் பையன் மேல உனக்கு எந்தளவுக்கு அன்பிருக்கு..?" என்றார்.

"அவனுக்காக இந்த உலகத்தையே எதிர்க்கிற அளவுக்கு ஆன்ட்டி..!" என்றவள் விழிகளில் அத்தனை பிரகாசம்.

"ம்ம்..." என எதுவோ புரிந்தவளாய் தலையசைத்தவர்,

"உன்னோட காதலை அவன் புரிஞ்சுக்கிட்டு ஏத்துப்பான்னு நினைக்கிறியா?"

"கண்டிப்பா.. ஏன்னா நானும் சரி.. அவனும் சரி! இந்த பிறவி எடுத்ததுக்கு காரணமே நாங்க சேரணும்ன்னு தான்... என்னோட அர்த்தநாரீஸ்வரர் கண்ணிடிப்பா சேர்த்து வைப்பார்." என்றாள் நம்பிக்கையாய்.

தன்னையே அறியாது சட்டென அவளை வாரி அணைத்து, அவள் நெற்றியில் இதழ் ஒற்றி மீட்டவர்..

"நீ தான்ம்மா என் மருமக.. இந்த விஷயத்தில நான் உன் பக்கம் தான். கண்டிப்பா உங்க காதல் சேரும்.. நானும் அந்த பரமேஸ்வரனை வேண்டிக்கிறேன்." என்றவர் அதன் பின்னர் பரஸ்பர விசாரிப்பில் மூழ்கியிருந்த நேரம், அவளது செல்போனானது சிணுங்கியது.


"இருங்க ஆன்ட்டி..!" என செல்போனினை உயிர்ப்பித்து, காதில் பொருத்திக்கொண்டவள் காதினில், ஹம்சி இடியுடன் கூடிய மழையினை பொழியவும் தான் நினைவே வந்தது.


"என் செல்லக்குட்டில்ல... ப்ளீஸ்டி.... இதோ கிளம்பிட்டேன்.. அப்பாக்கு மட்டும் கால் பண்ணிடாத பட்டு... இதோ.. இதோ.. இப்போ கிளம்புறேன்." என செல்போனினை அணைத்தவள்.

"ஆன்ட்டி ரொம்ப சாரி...! நான் ஆ... சௌந்தரீகனை பார்க்கணும் என்கிறதுக்காக, பொய் சொல்லிட்டு கிளம்பிட்டேன்... ஆஃபீஸ்ல மேனேஜர் சௌண்ட்டு விடுறாராம்... இன்னொரு நாளைக்கு சந்திப்போம்." என அரைகுறையாக சொல்லிவிட்டு வாசல் வரை ஓடியவள்.


என்ன நினைத்தாளோ மீண்டும் அவரிடம் ஓடிவந்து, அவர் கையில் பர்சிலிருந்த பேனாவை எடுத்து எதையோ எழுதியவள்,

"இது என் நம்பர் ஆன்ட்டி..! கால் பண்ணுங்க.. நம்ம நிதானமா பேசலாம்." என்று விட்டு ஓடியவளை பார்க்கும் போது சிரிப்பாகவே இருந்தது அவருக்கு.
 
Top