• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

31. புனிதா பார்த்திபன் - உயிர் உருகும் ஓசை

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
875
உயிர் உருகும் ஓசை
புனிதா பார்த்திபன்

பெத்தவாள எதிர்த்து விவாகம் செய்றேள். அவா மனசு ரொம்பக் காயப்பட்டிருக்கும். அதுக்கு மருந்து என்ன தெரியுமோன்னோ நீங்க வாழ்ந்து காட்டுற சிறப்பான வாழ்க்கை தான். காதலிச்சுட்டா மாத்திரம் போதாது அத வாழ்க்கை முழுக்க காத்துக்கணும்

ரெண்டு பேரும் செய்வேள்னு, தன் உடல்லையும், இருதயத்துலையும் உமையவளுக்கு பாதி இடம் கொடுத்த ஆண்டவன் ஈசன் சன்னதியில நின்னுன்டு நானும் நம்பறேன்.

ரெண்டு பேரும் இறைவன மனசார வேண்டிண்டு இந்த உறுதி மொழியச் சொல்லுங்கோ.


"எந்த நிலையிலும், இன்ப துன்பங்களிலும், குறைவில்லாத அன்போடு இன்று பற்றும் இரு கரத்தை எந்நிலையிலும் விடாது இல்வாழ்வின் அறத்தைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் ஒப்பற்ற துணையாய் குறையைப் பொறுத்து நிறையைப் போற்றி வாழ்வோம் என உறுதி மொழி அளிக்கின்றோம்."


என்று அர்ச்சகர் சொன்ன உறுதிமொழியை அன்று இருவரும் தங்கள் வாய் மொழியில் உதிர்த்தபடி தானும், அபர்ணாவும் ஒருவருக்கொருவர் கண்ணீர்த் ததும்பிய விழிகளில் பார்த்துக் கொண்ட ஞாபகங்கள் அகரனின் விழிகளுக்குள் படமாகிக் கொண்டிருந்தது.


இருள் சூழ்ந்த அறையில் அவன் விழிகள் மட்டும் திறந்திருக்க, அமைதியான அவன் மனதிற்குள் பெரும் ஆரவாரத்தோடு ஒரு யுத்தம் அரங்கேறிக்கொண்டிருந்தது.


சிந்தையைக் கலங்கடிக்கத் துடித்த சிந்தனையை மறக்க கைப்பேசியை கையில் எடுத்தான்.


எழில் புன்னகை சூடிக் கைப்பேசி திரையில் அழகாய் மின்னிக் கொண்டிருந்தாள் நேற்று வரை அவனுடையவளாய் இருந்து இன்று வாழ்வில் இருந்து முறிந்து சென்ற அவனுடைய அபர்ணா.


"அபர்ணா" அவள் காதலின் ஆழம் பலமுறை அகரனை திக்குமுக்காட வைத்திருக்கிறது. "அகரா, அகரா" என நொடிக்கு நூறு முறை கூப்பிடும் அவள் காதல் குரல் அவன் காதுகளுக்குள் ரீங்காரமிட, உடையத் துணிந்த மனதை மீட்க, படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து மின்விளக்கை உயிர்ப்பித்தான்.


காற்றாடியின் வேக நடையில் மேசை மீது இருந்த விவாகரத்திற்கான உறுதிச் சான்றிதழ் பறந்து கொண்டிருந்தது.


அதைப் பார்த்தவனின் இதயத்திற்குள் பெருத்த சுத்தியலால் அடித்தது போன்று இருந்தது.


சொகுசு நாற்காலியில் தலையை சாய்த்து அமர்ந்து விழி மூடியவனின் மனம் அவள் ஸ்பரிசத்தைத் தேடி ஏங்கியது. இதே சொகுசு நாற்காலியில் அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஞாபகமும், அவள் அவனின் கேசத்தை மெல்ல வருடி நெற்றியில் முத்தமிடும் ஞாபகமும் வந்து அவன் உள்ளத்தை மெல்ல தின்று கொண்டிருந்தன.


கடந்த ஆறு மாதங்களாக விவாகரத்து, விவாகரத்து என ஓடியதில் இருவரைப் பற்றி இருவரின் மனங்களுமே சிந்திக்க மறந்து போனது. இன்று விவாகரத்து உறுதியாகி, "வரேன் அகரன், இனி என் வாழ்க்கைப் பாதையில நீ இருக்கப்போறதில்லையே. நான் எங்க போறேன்னு உனக்கு ஏன் தெரியணும்" எனச் சொல்லிவிட்டு அவள் சென்றபின், வீடு திரும்பியவனின் மனதுக்குள் அவளில்லா வீடு அவள் நினைவுகளால் அவனை ஒரு முள்ளைப் போல் குத்திக் கொண்டிருந்தது.


விவாகரத்துப் பத்திரத்தைக் கையிலெடுத்து வாசித்தவளின் மனம் பரிதவித்தது. "தப்பா முடிவெடுத்துட்டனா அப்பு, இன்னும் கொஞ்ச நாள் நான் பொறுமையா இருந்துருக்கலாமே, இப்ப எங்க என்ன பண்ணிட்டு இருக்க அப்பு" என்று வாய் விட்டுப் பேசியவன் வேகமாய் கைப்பேசியைத் திறந்து "அப்பு" என சேமிக்கப்பட்டிருந்த இலக்கத்தைத் திறக்க, அவள் இவனிடமிருந்து முற்றிலும் உறவற்றுப் போனதன் அடையாளமாய் அகரனின் இலக்கம், ப்ளாக் செய்யப்பட்டிருந்தது.


செய்வதறியாது நெற்றியில் கைவைத்தபடி சாய்ந்தவனின் மனதிற்குள் காதலியாய் இருந்து மனைவியாய் ஆன அபர்ணாவின் ஒவ்வொரு நொடிகளும் இதயத்தில் படமாகிக் கொண்டிருந்தன.


"அகரன், என்ன உன் வாழ்க்கைத் துணையா ஏத்துக்குவியா?" எனக் கல்லூரி முடிவு நாளில் அபர்ணா அகரனிடம் வந்து கேட்டபோது அதிர்ந்து போனவனின் மனதுக்குள் அபர்ணாவும் இருக்கத்தான் செய்தாள். அதன் பிறகான அவர்களின் நாட்கள் பூலோகத்தின் ஒரு அழகியலாகவே இருந்தது. படிப்பிற்கு பின் வேலை என கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அவர்கள் காதல் தொடர்ந்த போதும், அகரனின் விரல்கள் அவள் கையைப் பற்றியதைத் தவிர ஒரு துளி கூட அத்துமீறியதில்லை.


"அகரா, எப்படி இவ்வளவு கண்ணியமா இருக்க? ஒரு பெண்ணோட அதிகபட்ச ஆசையே தனக்கு வரப்போற துணை பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமா இருக்கணும்னு தான். ஐ ஆம் ப்லெஸ்ட்" என அவள் காதலோடு அவன் தோள் சாய்ந்த போது கூட அவன் காதல் இதயமான புன்னகையாக மட்டுமே வெளிப்பட்டது.


வருடங்கள் கடக்கக் கடக்க, எந்த உறவாகினும் காதலும், மோகமும் குறையும் என்பர். ஆனால், வருடங்கள் கடக்கக் கடக்க தன் அன்பை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அபர்ணா. "அவன் தான்".....அவன் தான் அவளுக்கு எல்லாம். எங்கும் அவளுக்கு அவன் வேண்டும. திசையெட்டும் அவன் முகம் வேண்டும். தூங்கும் போதும் விழிக்கும் போதும் அவன் குரல் தான் முதலில் வேண்டும். அவன் பேசும் போது, விழி அசையாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் சட்டை வாசத்தை நுகர்வதை அவள் பாதுகாப்பாக உணர்ந்தாள். காலம் கனிய திருமணப்பேச்சை எடுத்த போது தான் அபர்ணாவின் வீட்டில் பூகம்பம் வெடித்தது. காதலுக்கு எதிர்ப்பாய் வரும் சமூகத்தின் பொதுவான ஒரு பிரச்சனை அவளையும் சூழ்ந்து கொண்டது. பிடிவாதம் பிடித்ததன் விளைவு சொந்தம் பந்தம் என வருவோர் போவோர் எல்லாம் வார்த்தைகளால் அவள் மனதை ரணப்படுத்தியும், சிலர் அடித்து அவள் உடலையும் ரணப்படுத்தியிருந்தனர்.


தனக்கென அத்தனை வலிகளையும் தாங்கி, "அகரா, என்னால வலி தாங்க முடியலடா. ப்ளீஸ் என்னக் கூட்டிட்டுப்போ" என்றவளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து மனைவியாக அழைத்து வந்தவனுக்கு, அவள் உடம்பில் இருந்த காயங்கள் இப்போதும் நினைவில் நின்று ரணப்படுத்தின.


சாய்ந்திருந்தவனின் கடைக்கண் ஓரத்தில் அவன் அறியாமலே கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் "அகரா, காதலனா கண்ணியத்த மீறாத உன்ன என்னால காக்க வைக்க முடியாது. ஆனா காயம்லாம் ரொம்ப வலிக்குது அகரா" என முதலிரவில் அழுதவளை, பதினைந்து நிமிடங்கள் கட்டிப்பிடித்து அழுதவனின் நினைவுகளை அசைபோட்டபடி ஒரு பெண்கள் விடுதியில் தூக்கத்தைத் தொலைத்து படுத்திருந்தாள் அபர்ணா.


ஏழு வருடம் அவள் உணரா அவன் தீண்டலில் இருந்த மெய்யன்பில் நனைந்தவளுக்கு இப்போதும் நினைவிருக்கிறது இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட அகரன் அவள் அனுமதி பெறாமல் கணவனாய் உரிமை எடுத்துக் கொண்டதில்லை.


அலுவலகத்தில் வேலையை முடித்து விட்டு, வீட்டில் சமையல் வேலையை செய்து அசதியாக உணர்ந்தாலும், தன்னவனுக்காக அவனுக்குப் பிடித்தபடி தன்னை அலங்கரித்துக் கொண்டு வலம்வரும் அவளின் நினைவுகள் வீட்டைச் சுற்றி அவள் பிம்பத்தைக் காண்பித்து இங்கு அகரனை வேதனைப்படுத்தின.


'நேர்த்தியான முத்துக்களைக் கோர்த்ததைப் போல் அழகான வாழ்வாகத்தானே இருந்தது. ஊடலும், கூடலும் காதலின் அடையாளமாகத்தானே அழகாய் அரங்கேறின. தாலி எடுத்துக் கொடுத்த ஐயரின் வாக்கு போல் பெற்றோர் பெருமைப்படும்படி தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். பின் ஏன் இப்படி ஒரு முடிவில் வாழ்க்கை வந்து நின்றது?' என சிந்தித்தவன், நித்தம் நித்தம் வானவில் பூத்த நாட்களிடையே கருமேகம் எப்போது நிறங்களை மறைத்தது என வேதனையோடு சிந்திக்கலானான்.


அவளின் அதீதக் காதல், அளவுகடந்த நேசம், பொங்கி வழிந்த பால் அடுப்பை அணைப்பது போல், ஒரு கட்டத்தில் வாழ்வை திசைமாற்ற ஆரம்பித்திருந்தது.


இருவரும் வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகையில், அகரனுக்கு டீம் லீடராக அவன் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்திருந்தது. அதன் காரணமாக அவன் தன் குழுவில் இருக்கும் உறுப்பினர்களோடு அதிக அளவில் உரையாட வேண்டிய கட்டாயம் எழுந்திருந்தது.


எப்போதும் போல் அகரனின் கைப்பேசியை அன்று பயன்படுத்திக் கொண்டிருந்தாள் அபர்ணா.


அப்போது நோட்டிபிகேசனில் தாரணி என்ற பெயரில் வந்த இதய எமோஜி அவளுக்குள் ஏதோ சொல்ல, குறுந்தகவலைத் திறந்து பார்த்தாள்.


முதலாவதாக அகரன் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட சில தகவல்களைத் தந்திருக்க, அதற்கு பதிலாய் "தங்க்யூ அகரன்" என்ற வரிகளோடு இதய எமோஜியையும் அனுப்பியிருந்தாள் அப்பெண்.


அன்று அபர்ணாவின் மனதில் சிறு துளியாய் துளிர்விட்ட சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் மெறுகேற ஆரம்பித்தது. அமைதியாக கடந்து சென்றவள் ஒருநாள், "ஏன் அகரன், அந்தப் பொண்ணு எப்பவும் ஹார்ட் அனுப்புறா" எனக் கேட்டபோது, வியப்பாய் பார்த்து சிரித்த அகரன்,


"எனக்கெப்படிடா தெரியும், அந்தப் பொண்ணு கொஞ்சம் ஜோவியல்" என்றான் இயல்பாய்.


"நீ இயல்பா பழகாம ஒரு டீம் லீடுக்கு யாராவது ஹார்ட் அனுப்புவாங்களா?" என்று அவள் குரலில் கடினத்தோடு கேட்க,


"அட அப்புமா, அந்தப் பொண்ணு கேசுவலா அனுப்புதுடா. இதுக்குப் போய் எப்படிலாம் யோசிக்குற பாரு நீ. என்ன என் அப்புக்கு என் மேல சந்தேகமா? " என அவளின் கன்னத்தைக் கிள்ளியவனை தட்டி விட்டவள்,


"இதல்லாம் எனக்குப் பிடிக்கல அகரா, எப்போப் பாத்தாலும் பொண்ணுங்க போன் பண்றதும் நீ அவுங்களுக்கு டவுட் கிளியர் பண்றேன்னு பேசுறதும் ஒரு மாதிரி இருக்கு" என்றாள்.


"அப்பு நான் என்ன சொந்தக் கதையவாடா பேசுறேன்? ஆபிஸ் விஷயம் தானடாமா, அப்ப என் மேல டவுட் அப்படித்தான" என்று அவன் புன்னகை மாறாமலே கேட்க,


"உன் மேல எப்படி டவுட் படுவேன் அகரா. என் அகரா ரொம்ப கண்ணியமானவனாச்சே. அதான் யாரும் எங்கிட்ட இருந்து எடுத்துப்பாங்களோன்னு பயமா இருக்கு" என முகம் சுருங்கிப் போனவளின் முகவாயைப் பற்றியவன்,


"அழகா இருக்கு அப்பு உன்னோட இந்தப் பொசசீவ்னெஸ். யாரும் உன் அகரன உன்ட்ட இருந்து பிடுங்கிக்க மாட்டாங்க" என்றவன் விளையாட்டுக்காக, பொசசீவ்னெஸில் இப்படிச் செய்கிறாள் எனத் இயல்பாக அதைக் கடந்து சென்றான். ஆனால், அவள் அவன் மீது கொண்ட காதலைப் போல, சந்தேகமும் ஆழமாய் ஏற்பட்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


அதன் விளைவு அவனுடைய எல்லா முடிவுகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் முரண்பட ஆரம்பித்தாள் அபர்ணா. நீயா நானா எனப் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்தது போல் அவள் எல்லா விஷயங்களிலும் அவனோடு தர்க்கம் செய்ய, சமாதானம் செய்யப் பார்த்த அகரனும் ஒரு நிலைக்கு மேல் பொறுமை காக்காமல் எதிர்வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான்.


வாரம் ஒருமுறை என ஆரம்பித்த இந்தப் பிரச்சனை வாரம் மூன்று, நான்கு நாட்கள் என நீடித்தது.


ஆனாலும், அபர்ணாவின் மனம் கோணும்படி அவன் பேசியதில்லை. 'அபர்ணாவின் செயலை வெறுமனே ஒரு பொசசீவ்னெஸ் எனக் கடந்து சென்று விட முடியாது. இது ஒருவிதமான மன அழுத்தமாகக் கூட இருக்கலாம்' என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அபர்ணா தன் மீது கொண்ட அதீத பற்றின் ஒருவிதமான வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொண்டவன், அவளிடம் கோபப்பட்டுவிடக் கூடாது என மனதுக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அபர்ணா அவன் நினைத்துப் பார்க்கா எல்லைகளையும் கடப்பாள் என்பதை அவன் துளியும் சிந்திக்கவில்லை.


தினமும் அவன் தூங்கிய பின் அவனுடைய போனை அவள் பார்ப்பது அவளுக்கு வழக்கமாகிப் போனது. ஒரு நாள் இரவில் எழுந்த அகரன் அதைப் பார்த்துவிட்டாலும், கவனியாதவன் போல் மீண்டும் படுத்துக் கொண்டான்.


"எதையோ நினைச்சுட்டு அப்பு தன்னக் கஷ்டப்படுத்திக்கிறாளே" என நினைத்தவன் அவளுடன் இன்னும் நெருக்கம் காண்பித்தான். அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது போன் செய்து, "அப்பு, இன்னைக்கு அந்த ப்ளீ கலர் சாரி கட்டேன்" என்பான். தன் நெஞ்சோடு அணைத்து அவளை உறங்க வைப்பான். மாதவிடாய் சமயங்களில் எண்ணெய் தேய்த்து கால்களை அமுக்கி விடுவான். மெல்ல மெல்ல அபர்ணா மனதில் இருந்த சந்தேகப் போர்வை விலகும் போது விதி பெரிய அடியைத் தரக் காத்திருந்தது.


அன்று இரவு உணவை முடித்து அறைக்குள் அவன் நுழைய ஏதோ மாத்திரையை விழுங்கிக் கொண்டிருந்த அபர்ணா அவன் வருவதைக் கண்டு வேகமாய் கப்போர்டை மூடினாள்.


"என்னாச்சு அப்பு, என்ன மாத்திரை சாப்புடுற?" எனக் கேட்டபடி அவன் அருகில் வர, "அது... அது... விட்டமின் டேப்லெட்ஸ் அகரா" என்றவளின் கண்கள் பொய் சொல்ல, தடுத்த அவள் கைகளைப் பிடித்து கப்போர்டை அவன் திறந்து பார்த்து மாத்திரையின் பெயரைப் படித்துவிட்டு கூகுளில் தேட அது கருத்தடை மாத்திரை எனக் காண்பித்துக் கொண்டிருந்தது.


மாத்திரையைத் தூக்கிக் கீழே எறிந்தவன்,"என்ன அபர்ணா இது? "எனக் கோபமாய் கேட்டான்.


"அகரா அது... கொஞ்ச நாளுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சேன்" என்றவளின் வார்த்தைகள் முடியும் முன்,


"அத நீ மட்டும் எப்படி முடிவு பண்ண முடியும? ரெண்டு பேரும் சேர்ந்து தானே பண்ணனும், இது நம்ம வாழ்க்கைமா, இதெல்லாம் நாம முடிவு பண்ண முடியாது டா. கடவுள் கைல தான் இருக்கு. இன்னைக்கு நாம வேணாம்னு தள்ளிப் போட்டா நாளைக்கு நம்ம கேக்குறப்போ கிடைக்காமயேக் கூட போய்டும்.


என்று அவன் பேசிக் கொண்டே போக," போதும் அகரா, உன்னோட குழந்தை பெத்துக்க எனக்கு விருப்பமில்லை, ஐ பீல் இன்செக்யூர் வித் யூ" எனக் கத்தியவளின் வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போனவன்,


"என்ன சொன்ன அப்பு?" எனக் கேட்டான்.


"உங்கூட நான் பாதுகாப்பா பீல் பண்ணல அகரன், நீ என்ன விட்டுட்டு வேற பொண்ணு கூட போய்டுவியோன்னு எனக்குத் தோணுது. போன்ல பேசாதனாலும் நீ கேட்கல, ஆபிஸ் மாறச் சொன்னாலும் மாற மாட்டேங்குற, என்னால நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில குழந்தை பெத்துக்க முடியாது" என்றவளின் குரலில் உடைந்து அமர்ந்தவன்,


"உன்ன விட்டு இன்னொரு பொண்ணத் தேடிப் போவேன்னு நீ எப்படி நினைக்கலாம் அப்பு? ஒன்பது வருசக் காதல்ல நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு தானா!"என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது அவன் கைப்பேசி சிணுங்கியது.


அவனுடைய அலுவலகப் பெண் தாரணி தான் அழைத்திருந்தாள். நேரத்தை நிமிர்ந்து பார்த்த அபர்ணா,"பத்தரை மணிக்கு ஆபிஸ் விஷயமா தான் பேசுவீங்க இல்லையா அகரன். நான் என்ன உனக்கு பெட்ல கம்பெனி குடுக்க வந்த.... " என அவள் வாயெடுத்த போதே அகரனின் கை அவள் வலது கன்னத்தில் பதிந்திருந்தது.


"என் பொறுமைய ரொம்ப சோதிக்குற அபர்ணா. இஷ்டம்னா வாழு இல்லேன்னா உன் வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போ. உன்ன மாதிரி ஒரு சந்தேகப் பேயோட இனி என்னால வாழ முடியாது " என அவன் சொன்ன அடுத்த நொடியில் அவள் கழுத்தில் இருந்த தாலி அவன் கைகளில் இருந்தது.


கோபப்பட்டாலும் வார்த்தைகளைத் தூக்கி வீசி விடக்கூடாது என்கின்ற தன் உறுதியை இழந்திருந்த அகரனின் வார்த்தைகள் அச்சூழலை மிகக் கடினமாக மாற்றியிருந்தன. பிரச்சனைகளின் போது முடிவெடுக்கக் கூடாதென்ற நியதியை மறந்து அவசரமாக எடுத்த விவாகரத்து முடிவு இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது.


நினைவுகளிலிருந்து திரும்பியவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. "நான் தான் தேவையில்லாம வார்த்தைய விட்டுட்டேன். இன்னும் பொறுமையா உனக்குப் புரிய வச்சுருக்கலாமே அப்பு. ஒன்பது வருச உறவ தூக்கிப் போட நானே அஸ்திவாரம் போட்டுட்டனே" என நினைத்தவன் மெழுகாய் உருகிக் கொண்டிருக்க,


ஏதோ ஒரு இடத்தில், தனிமைச் சிறையில் கிடந்த அபர்ணாவின் மனமும் அகரனைச் சுற்றிக் கொண்டிருந்தது.

புரியாத பிரியம் பிரிந்த பின் புரிகிறதோ இல்லையோ, வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த அழகிய நினைவுகள் நிச்சயம் பிரிதலில் புதிதாய் மனதிலிருந்து பிரசவிக்கின்றது. அருகிலிருந்து பார்த்த போது ஆகாசமாய் தெரிந்தவையெல்லாம் தூரமாய் பார்க்கையில் தூசியெனது தெரிந்தன.


முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் அபர்ணா அவனை ப்ளாக் செய்திருக்க, "அப்பு உங்கூட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்" என மின்னஞ்சலில் அனுப்பினான் அகரன். அடுத்த நிமிடத்தில் அதிலும் அவன் ப்ளாக் செய்யப்பட அபர்ணாவிற்கு அவன் மீண்டும் தன்னைத் தேடுவது கர்வமாக இருந்தது. இது பிரச்சனையால் ஏற்பட்ட பிரிவல்ல வெறும் ஈகோவால் ஏற்பட்ட ஒரு நாடகம் என்பதை ஏதோ ஒரு புள்ளியில் அவள் மனம் ஒப்புக் கொண்டு தான் இருந்தது.


"நீ எனக்கு வேணும் அப்பு. சாரிமா. நான் இன்னும் புரிய வச்சுருக்கணும். ப்ளீஸ் எங்கிட்ட வந்துடு" என ஒவ்வொரு நாளும் அவள் அலுவலக வாசலில் அவளைத் தேடிக் காத்திருந்தவனின் தூய்மையான காதலுக்கு பிரபஞ்சமும் தலைசாய்க்கத் தானே செய்யும். ஆழமாய் நேசிக்கப்படும் ஒன்றிற்காக உலகமே காய் நகர்த்தும் என்பதற்கேற்ப, அன்றை நாள் அபர்ணா விடுதி அறையில் இருக்க, எதிர் படுக்கையில் இருந்த பெண் அபர்ணாவைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.


உண்மையைச் சொல்லாமல் மழுப்பிய அபர்ணா, பேச்சை மாற்ற அப்பெண்ணை பற்றி விசாரிக்க,


யாரிடமாவது கொட்டிவிட மாட்டோமா என மனபாரத்தோடு போராடிக் கொண்டிருந்த அப்பெண், "நான் என் வீட்ட விட்டு வந்துட்டேங்க. நானும் என் கணவரும் லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டோம். நான் வேலைக்குப் போறேன். தொட்டதுக்கெல்லாம் அவருக்கு என் மேல சந்தேகம். வேலை செய்யுற இடத்துல எந்த ஆண்கள்கிட்டயும் பேசக் கூடாதுன்னு ஒரே டார்ச்சர். இந்தக் காலத்துல என்னங்க ஆண், பெண் பாகுபாடு. எல்லாருமே மன முதிர்ச்சியோட இருக்காங்க. சக பணியாளர ஒரு நல்ல தோழியா தோழனாப் பாக்குறாங்க. மனசுல கசடு இல்லாம இயல்பா பழகுறாங்க. ஆனா இந்த மாதிரி சின்ன புத்தி உள்ளவங்களுக்கு அது எங்க புரியுது" என்று அப்பெண் சொன்ன போது அபர்ணாவின் முதுகில் சாட்டையால் அடித்தது போல் இருந்தது.


"இத எல்லாம் விட, நம்பிக்கை தானங்க வாழ்க்கையோட அஸ்திவாரம். எனக்கு என் மனைவி மேல நம்பிக்கை இருக்கு, என் கணவன் மேல நம்பிக்கை இருக்குன்னு முழு மனசோட இருக்குறவுங்க வாழ்க்கை தான் வெற்றியடையுது. இத்தன வருசம் என்ன காதலிச்சோம்னு தெரியல" என்ற அப்பெண்ணின் கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.


"ப்ளீஸ் அழாதீங்க" என்ற அபர்ணவின் மனதிலும் ரகசியமாய் அதே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.


தான் அப்பெண்ணின் கணவனை ஒத்த ஒரு சின்ன புத்தி கொண்ட பெண் தானே என மனதுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு மனம் வலித்தது.


அழகாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அர்த்தமின்றி ஒரு சந்தேகத்தை விதைத்து, அதை இத்தனை தூரம் வளர விட்டு விட்டதை எண்ணிக் கலங்கியவளின் மனம் அகரனின் மடியைத் தேடியது.


எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி அவனைப் பார்ப்பது என இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்தவள், "என் அகரன் தானே, என்ன வேணும்னாலும் திட்டட்டும், நீ எனக்கு வேணும் அகரன்" என விரல்கள் நடுங்க விடிந்தும் விடியாத பொழுதிலே கைப்பேசியில் அவனுக்கு அழைத்த இரண்டாவது நொடியில், அழைப்பை ஏற்றவன், "அப்பு" என உடைந்த குரலில் அழைக்க,


"அகரா, நான் வீட்டுக்கு வந்துடட்டுமா ப்ளீஸ், பழைய அப்புவா உங்கூட இருக்கணும், என்ன மன்னிப்பியா"என்றவளின் வார்த்தைகளுக்குப் பின் அகரனின் அழுகை மட்டுமே அவள் செவிகளை எட்டியிருந்தது.


பத்து நிமிடத்தில் பறந்து வந்தவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவளின் புதிப்பிக்கப்பட்ட மனது காதலை மீட்டு முத்தக் கவிதை வாசித்தது. இனி அகரன், அபர்ணா எனும் இரு அன்றில்களுக்கும் பிரிவென்பதே இல்லை. சந்தேகம் வாழ்வின் மிகப்பெரும் உயிர்க்கொல்லி. நம்பிக்கை எனும் உரமிடுகையில் அவ்வுயிர்க்கொல்லி அழிந்து ஒழிந்தே போகும். ஆழமான காதலின் அஸ்திவாரம் நம்பிக்கை தானே! புரிதலோடு எதையும் பார்த்தால், அனைத்தும் சரியாக இருப்பதைஉணர முடியும்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
புனிதா பார்த்திபன்
உயிர் உருகும் ஓசை

பெற்றவர்களை எதிர்த்து திருமணம் புரிதலில் போகும் இல் வாழ்க்கை
சந்தேகம் என்னும் பேய் வந்துவிட்டு சந்தோஷத்தை எடுத்துச் சென்றது..
ஆனந்த கீதம் பாடிய இதயத்தில் சோக கீதம் பாடிய வேதனை.....

தவறாய் புரிந்து கொண்டு தன்னவனிடம் இருந்து பிரிந்து செல்ல
தள்ளி நின்று அபர்ணா
தனிமையில் சிந்திக்கும்போது தவறை உணர்ந்து
தானே திருந்தி வருவது
தன்னலமற்ற அன்பின் அடையாளம்

பாசத்தை அள்ளிக் கொடுத்தாலும் பார்த்து பார்த்து செய்தாலும் புரியாமல் பிரிந்து சென்றதை எண்ணி
பதறி துடிக்கும் கணவனாய் அகரன்.....

புரிதலும் நம்பிக்கையுமே பக்கபலமாய் உறவுகளுக்கு என பிரிந்து சென்றவர்கள்
புரிந்து கொண்டு
இணைந்து கேட்கும்
இதயத்தின் உயிர் உருகும் ஓசை.....
இன்னிசையாக
இனி அவர்கள் வாழ்வு... 💐💐💐💐

வாழ்த்துக்கள் சகி 👏👏👍👍👍
 
Last edited:

Punitha Parthipan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 10, 2023
Messages
2
புனிதா பார்த்திபன்
உயிர் உருகும் ஓசை

பெற்றவர்களை எதிர்த்து திருமணம் புரிதலில் போகும் இல் வாழ்க்கை
சந்தேகம் என்னும் பேய் வந்துவிட்டு சந்தோஷத்தை எடுத்துச் சென்றது..
ஆனந்த கீதம் பாடிய இதயத்தில் சோக கீதம் பாடிய வேதனை.....

தவறாய் புரிந்து கொண்டு தன்னவனிடம் இருந்து பிரிந்து செல்ல
தள்ளி நின்று அபர்ணா
தனிமையில் சிந்திக்கும்போது தவறை உணர்ந்து
தானே திருந்தி வருவது
தன்னலமற்ற அன்பின் அடையாளம்

பாசத்தை அள்ளிக் கொடுத்தாலும் பார்த்து பார்த்து செய்தாலும் புரியாமல் பிரிந்து சென்றதை எண்ணி
பதறி துடிக்கும் கணவனாய் அகரன்.....

புரிதலும் நம்பிக்கையுமே பக்கபலமாய் உறவுகளுக்கு என பிரிந்து சென்றவர்கள்
புரிந்து கொண்டு
இணைந்து கேட்கும்
இதயத்தின் உயிர் உருகும் ஓசை.....
இன்னிசையாக
இனி அவர்கள் வாழ்வு... 💐💐💐💐

வாழ்த்துக்கள் சகி 👏👏👍👍👍
பேரழகான, ஊக்குவிக்கும் விமர்சனத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள் சகி.
 
Top