• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

35. பானுரதி துரைராஜசிங்கம் - குந்தவையின் காதலன்...!!!

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219

நடுநிசியைத் தாண்டி நேரம் ஒன்றுக்கு மேலும் போய் விட்டதால், அந்தப் பெரிய மாளிகை வீட்டில் மயான அமைதி நிலவியது.வெளியே வானத்தில் வெண்ணிலவு அமாவாசை என்கிற பெயரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பங்களாவில் பணி புரியும் சேவகன் தொடங்கி முதலாளி வரை ஆழ்ந்த உறக்கத்துக்குள் தங்களைத் தொலைத்தாகி விட்டது. வாசலில் காவல் இருக்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்து நாய் மட்டும் ஓரமாக நின்றிருந்த வேப்பமரத்தையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தது. குந்தவையும் மொட்டைமாடியின் சுவற்றில் அமர்ந்து கொண்டு, கறுப்புப் போர்வை போர்த்திருந்த வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது விழிகள் தூங்காமல் அதிக நாட்கள் விழித்திருந்ததாலோ அல்லது அழுது வடிந்ததாலோ தெரியவில்லை கொவ்வைப்பழம் போலச் சிவந்திருந்தது. காரணம், விடிந்தால் அவளுக்குப் பிடிக்காத கட்டாயக் கல்யாணம்.

திடீரென வாசலில் படுத்திருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் மேல் நோக்கிப் பார்த்து விநோதமாக உறுமியது. திடுக்கிட்டுப் போன குந்தவை மாடியில் இருந்தபடியே கீழே எட்டிப் பார்த்தாள். இருளில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் கூட, அவளது வீட்டு நாயின் விழிகள் அந்த இருளிலும் கோலிக் குண்டுகள் போல ஜொலித்துக் கொண்டிருந்தன.
சில நொடிகள் தன் நாயையே உற்றுப் பார்த்த குந்தவை அதன் உறுமல் ஒலி நிற்காமல் நீளவும், "வீரா சத்தம் போடாதே ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளில் நொந்து போயிருக்கிறேன் நீ வேறு என்னைக் கடுப்பாக்காதே..." குந்தவையின் குரலில் இயலாமையுடன் கூடிய கோபம் தெரிந்தது.
வீரனும் உறுமலை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு முறை வேப்பமரத்தைப் பார்த்து விட்டு விழுந்து பேசாமல் படுத்துக் கொண்டது.

பெருமூச்சுடன் மீண்டும் மாடிச் சுவரோரமாகக் குந்தவை சாய்ந்து கொள்ள, அறுந்து போன அவளது எண்ணங்கள் மீண்டும் ஒட்டிக் கொண்டன. அவளது அவனை முதன்முறை பார்த்த பொழுதுகள், பேசிய பொழுதுகள், காதல் சொன்ன பொழுதுகள், விட்டுப் பிரிந்தபொழுதுகள் என அனைத்துமே ஊற்றெனப் பாய்ந்து வந்து மனதைக் குளிர்விப்பதற்குப் பதில் வெம்மையையே கொடுத்துக் கொண்டிருந்தன.

கண்ணீரைத் தேக்கி வைத்திருந்த குந்தவையின் கருவிழிகள் எதேச்சையாக வீட்டின் வெளிப்புறமாகப் போய் வரவே அப்போது தான் வெளியே இருளில் தெரிந்த உருவங்களை உற்றுக் கவனித்தாள். பெண்ணொருத்திக்கு இத்தனை கட்டுக்காவலா என்று ஏளனமாகக் கூட அவளுக்குத் தோன்றியது.

ஏளனச் சிரிப்போடு திரும்பியவளது பக்கவாட்டில் நின்றிருந்த வேப்பமரம் ஒரு பேயாட்டம் ஆடி ஓய்ந்தது. அதன் கிளையொன்று மொட்டைமாடியோடு ஒட்டி நின்றதால், அங்கிருந்து யாரோ மொட்டைமாடியில் குதிக்கும் சத்தம் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.
திருமண வீட்டில் யாரேனும் திருடுவதற்கு வந்திருப்பார்களோ என்ற எண்ணம் சட்டெனக் குந்தவையின் உள்ளத்தில் தோன்றவே, சுவரோரம் சாய்த்து வைக்கப் பட்டிருந்த இரும்புக் கம்பியை அவளது கை தன்னிச்சையாகப் பற்றிக் கொண்டது.

சில நொடிகளின் பின்னால், அவள் முன்னால் வந்து நின்றான் அவளது எண்ணங்களின் நாயகன்.
அவள் இரண்டு கிழமைகளுக்கு முன்னால் பார்த்தவனது தோற்றத்துக்கும் இப்போது முன்னால் நிற்பவனது தோற்றத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தன.
உடம்பிலும் முகத்திலும் ஒரு விதமான தேஜஸ்; என்ன உணர்வென்று சொல்ல முடியாத, கண்களைக் கூசச் செய்கின்ற விழி வீச்சு; முகத்தில் தேவதூதனைப் போன்றதொரு பாவனை. அந்த மாற்றங்களைக் குந்தவையின் விழிகள் கண்டு கொண்டாலும் மனம் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு அவளவன் இத்தனை கட்டுக்காவலை மீறித் தனக்கே தனக்காக வந்திருக்கிறான் என்பதே உவப்பாக இருந்தது.

"மாறா இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்? எப்படி உள்ளே வந்தீர்கள்? நான் ஒருத்தி இந்த நரகத்துக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது போதாதா? நீங்கள் வேறு இந்த அரக்கர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டுமா?" குந்தவையின் குரல் தடுமாறியது.
அவளது குரலின் தடுமாற்றத்தையும், பயத்தில் வியர்த்து வடிந்த அவள் முகத்தையும் பார்த்துக் கொண்டு பதில் பேசாமல் அமைதியாக நின்றவனைப் பார்க்கப் பார்க்கக் குந்தவைக்குப் பயத்தில் தொண்டை அடைத்தது.

"மாறா உங்களுக்கு என்னுடைய பயம் புரியவில்லையா? யாருடைய கண்ணிலாவது நீங்கள் மாட்டினால் என்னாகும்? நினைத்துப் பார்த்தாலே எனக்குக் குலை நடுங்குகிறது"
நேரம் ஆக ஆகக் குந்தவைக்கு நடுக்கம் அதிகரித்தது.
அவளது பயத்திற்கு மேலும் தூபம் போடுவது போல, மாடிப்படிகளில் யாரோ ஆட்கள் தடதடவென ஓடி வரும் சத்தமும் கேட்டது. ஒரு நொடி திரும்பி வாசலைப் பார்த்தவள் அடுத்த நொடியே மாறனை இழுத்துக் கொண்டு அடுத்த பக்கம் ஓடினாள்.
வெளியே பனி பெய்து கொண்டிருப்பதாலோ என்னவோ மாறனைப் பிடித்திருந்த குந்தவையின் கையும் சில்லிட்டுப் போயிருந்தது.

இருவரும் அடுத்த பக்கத்தில் ஒளிந்து கொண்டதுமே, மாடியில் ஆளரவம் கேட்டது. ஒரு சில நிமிடங்கள் "அங்கே பார் இங்கே பார்" என்ற சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
மாறனது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு "முருகா முருகா காப்பாற்று" எனக் குந்தவை உருப்போட, அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மொட்டைமாடி நிசப்தத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

"மாறா அவர்கள் போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன் இனியும் தாமதிக்க வேண்டாம் நீங்கள் வந்த வழியே தப்பித்துப் போய் விடுங்கள்"

"நான் உனக்காகத் தான் அத்தனை தூரம் கடந்து இங்கே வந்திருக்கிறேன் குந்தவை"

"அது எனக்கும் புரிகிறது ஆனால் இந்த நரகத்திற்குள் இருந்து இருவரில் ஒருவர் தான் தப்பிப் போக முடியும்"

"அதுவும் எனக்குத் தெரியும் குந்தவை. அதனால் தான் நான் உன்னைத் தேடி வந்தேன்."

"ஐயோ மாறா! பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. நீங்களாவது தப்பித்துப் போய்விடுங்கள். இங்கே இருப்பவர்கள் உங்களைக் கொலை செய்வதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள்."

"என்னை இனிமேல் கொலை செய்ய அவர்களால் முடியாது. என்னைக் கண்டுபிடிக்கவும் முடியாது. நீ முதலில் என்னோடு வா உன்னை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க வேண்டும். அது மட்டும் தான் எனக்கு நிம்மதி."

"புரிந்து தான் பேசுகிறீர்களா? இங்கிருந்து எப்படி இருவரும் தப்புவது?"

"அப்படியானால் இங்கிருந்து இந்தக் கல்யாணத்தைச் செய்து கொள்ளப் போகிறாயா?"

"இறந்து போனாலும் போவேனே தவிர அந்த அரக்கனைக் கட்டிக் கொள்ள மாட்டேன். ஏற்கனவே மூன்று கல்யாணம் செய்து, இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கிற கிழத்துக்கு என்னைக் கட்டிக் கொடுக்கும் அளவுக்கா என் உறவுகளுக்குக் காசுபணம் கண்ணை மறைக்கிறது."

"பிறகு பேசிக்கொண்டே நேரத்தைக் கடத்தாமல் புறப்படு."

"புறப்பட்டு எங்கே போவது மாறா? என் பயமெல்லாம் ஒன்று தான் என்னை இங்கே காணவில்லை என்றதும் அவர்கள் உங்களைத் தான் தேடி வந்து துன்பம் செய்வார்கள்"

"இல்லை குந்தவை என்னை யாருமே தேட மாட்டார்கள். நீ தைரியமாகக் கிளம்பு. இப்போது புறப்பட்டால் தான் விடிவதற்குள் ஊர் எல்லையைக் கடக்க முடியும்."

"புறப்படு புறப்படு என்கிறீர்களே இந்த நேரத்தில் எங்கே போவது எப்படிப் போவது."

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு, கண்களை மூடு எக்காரணத்தைக் கொண்டும் கண்களைத் திறக்கக் கூடாது."
மாறனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுக் கண்களை இறுக மூடிக் கொண்டாள் குந்தவை.

காற்றில் மிதப்பது போன்றதொரு உணர்வு உருவானது. அவன் தன்னைச் சுமந்து செல்கிறான் என்பது மட்டும் குந்தவைக்கு நன்கு புரிந்தது. யார் கண்ணிலும் மாட்டி விடக் கூடாது என்ற எண்ணமும், மாட்டிக் கொண்டால் என்னவாகும் என்ற எண்ணமும் அவளை ஆட்சி செய்யத் தொடங்கவே அவள் மறந்தும் கண்களைத் திறக்கவில்லை.

குந்தவையைக் கையில் சுமந்தபடி மாறன் பயணம் செய்ய, அவனுடனான காதல் நினைவுகளை மீட்டிப் பார்த்தபடி அவனுடன் பயணம் செய்யத் தொடங்கினாள் குந்தவை.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பே குந்தவைக்கும் மாறனுக்குமான காதல் மலர்ந்து விட்டது. ஆனால் அவள் பணக்காரி அவன் ஏழை என்றும் அவள் உயர்ஜாதி அவன் தாழ்ஜாதி என்றும் சொல்லி ஆரம்பத்திலேயே அவர்களைப் பிரிக்கப் பார்த்தார்கள்.

எதற்கும் பயம்கொள்ளாத காதல்ஜோடிகள் காதல் வானில் சந்தோஷமாகத் தான் சிறகடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இருக்கையில் குந்தவையின் பக்கத்தில் திடீரெனப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. ஆரம்பத்தில் அதன் தீவிரம் குந்தவையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பு மாறன் திடீரெனத் தலைமறைவாகும் வரை நீடித்தது.

மாறனை உயிரோடு வாழ விட வேண்டுமென்றால், தாங்கள் கை காட்டுபவனுக்குத் தலை நீட்ட வேண்டும் என்ற முரட்டுத் தனமான கட்டளைக்கு, வேறு வழியே இல்லாமல் குந்தவை சம்மதம் சொன்னாள். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த குந்தவைக்கு உறவுகளது கள்ளத்தனம் ஆதிக்கம் எல்லாம் மாறனது வருகைக்குப் பின்னரே புரிவதாக இருந்தது. அதன் பின்னரே தன்னைப் பாதுகாவலர் என்ற போர்வையில் பார்த்துக் கொண்ட சித்தி, சித்தப்பா, மாமா, மாமி என்கிற குள்ளநரிகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள்.

தனக்காக யோசித்து, தனக்காகவே சிறு சிறு சந்தோஷங்களைக் கூட செய்து கொடுத்த மாறனது நட்பு அவளுள் அவளையறியாமலேயே காதலாக அரும்பு விடத் தொடங்கியது. சற்றும் யோசனை செய்யாமல், கூச்சப் படாமல் தன் காதலை அப்படியே மாறனிடம் குந்தவை கொட்டி விட்டாள்.

அவளது வசதி வாய்ப்புக்களைக் காரணங் காட்டி மாறன் காதலை மறுத்தான்.
"நீயும் மற்றவர்களைப் போல எனது மனதைப் பார்க்க மறுத்து விடாதே மாறா! நான் துடிப்போடு இருப்பதே உன்னால் தான் நான் யார் எவள் என்பதை மறந்து விட்டு, இந்த குந்தவையை மட்டும் பார் அப்போது நிச்சயம் எனது காதல் புரியும்."
என்ற குந்தவையின் வார்த்தைகளும் அவளது உண்மைக் காதலும் மாறனது மாறாத மனதைக் கூட மாற்றத் தான் செய்தது. அவனும் மனதார அவளை ஏற்றுக் கொண்டான். ஒரு தோழனாய் அவளுக்குத் தோள் கொடுத்தவன் அதன் பிறகு காதலனாய் அவளைக் கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பார்க்கத் தொடங்கினான்.

மலர்ந்த காதல் மணம் வீசாமல் இருக்குமா? அவர்கள் காதலும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள, சொத்துக்காக ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த குந்தவையின் சொந்தம் அவளது காதலை எதிர்த்தது. அவள் முடிந்தவரை போராடிப் பார்த்தாள். மாறன் பக்கத்தில் இருக்கும் போது அவளுக்குத் தோன்றும் துணிச்சல் ஏனோ அவன் இல்லாத போது மருந்துக்கும் கூட எட்டிப் பார்ப்பதில்லை.

அவளது காதலுக்கு எதிர்ப்புக் கொடி காட்டுவது போல அவசர அவசரமாக வயசான ஊர் ஜமீனை அவளுக்குக் கட்டி வைக்க முடிவு செய்த வேளை, உங்கள் சொத்தும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என் மாறனே எனக்குப் போதும் என்று மாறன் கொடுத்த தைரியத்தில் அனைத்தையும் விட்டு குந்தவை வீட்டை விட்டு வெளியேற முயன்ற வேளை அவளது மாறன் காணாமல் போனான்.

எங்கு விசாரித்தும் அவனைக் காணவில்லை. அவனைக் கொன்று விடுவோம் என மிரட்டி இதோ விடிந்தால் நடக்கப் போகும் திருமணத்திற்குக் குந்தவையைச் சம்மதிக்க வைத்திருந்தார்கள் அவளது உறவுகள்.

உறவுகளது விஷ எண்ணங்களை விடவும் அவள் மாறன் மீது கொண்ட காதலுக்கு வலிமை அதிகம் என்பதால், தன்னவளை மீட்க அவன் காற்றாகப் பறந்து வந்தும் விட்டான்.

குந்தவை கண்களை மூடியபடி மாறனது கைகளில் கிடந்தது கிட்டத்தட்ட அரைமணி நேரம் என்று சொல்லலாம். மெல்ல மெல்ல இருளுள் நடந்து வெளிச்சத்துக்குள் வந்தது போல ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.

"மாறா கண்களைத் திறக்கட்டுமா"
அவளது குரலில் ஆர்வம் தெரிந்தது.

சில நொடிகளில் அவளது கால்கள் தரையை உணரவே வேகமாகக் கண்களைத் திறந்தாள் குந்தவை. அவளது பார்வை வட்டத்தினுள் சிறுவர் இல்லம் ஒன்று தெரிந்தது.

"இது எந்த இடம் மாறா"

"இனிமேல் நீ வாழப் போகும் இடம் இது தான் குந்தவை"

"புரியவில்லை மாறா"

"இந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் உனது குழந்தைகள் குந்தவை. அவர்களுக்கு இனிமேல் நீ தான் அம்மா. இவர்களை இதுநாள் வரை நான் தான் பார்த்துக் கொண்டேன். இன்றிலிருந்து நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்."

"என்னை இங்கே தனியாக விட்டு நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் மாறா"

"நான் எங்கே போக முடியும். என்னைத் தான் உன் மனதினுள் சிறை வைத்து விட்டாயே. நான் என்றுமே உனக்குள் இருப்பேன். எனது காதல் உன்னை அந்த நரகத்தில் இருந்து மீட்ட இன்று தான் ஆரம்பிக்கிறது குந்தவை. உனது காதல் இந்தப் பிள்ளைகளுக்கு அன்னையாவதில் இருந்து ஆரம்பமாகட்டும்."

"மாறா என்ன மாறா என்னவோ எல்லாம் பேசுகிறீர்கள்"

"என்னவோ எல்லாம் பேசவில்லை குந்தவை. என் காதலை உன்னிடம் சொல்கிறேன். நான் உன்னோடு எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்துப் பல கனவுக் கோட்டைகளைக் கட்டினேனோ அதைப் பற்றிச் சொல்கிறேன். உனக்காக காதலைக் கொடுக்க நானொருவன் மட்டுமில்லை இந்த இல்லத்தில் இருக்கும் நூறு மாறன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அழகிய விடயத்தைச் சொல்கிறேன். உனது கனவு என்னவென்று சொன்னாயே நினைவு இருக்கிறதா?"

"நினைவில்லாமல் போகுமா? அதைத் தான் இதோ இப்போது நிறைவேற்றிக் கொடுத்து விட்டீர்களே"

"பணம் பகட்டு எல்லாவற்றையும் கடந்து, தனியே சிறகடிக்க வேண்டும். என் போலத் தாய் தந்தை இல்லாத நிர்க்கதியான பிள்ளைகளுக்கு ஒரு தாய் போல இருக்க வேண்டும். அவர்களது கனவுகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டும். அப்போது அந்தக் குழந்தைகளது முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை இரசிக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து அதை நானும் அனுபவிக்க வேண்டும். இது தான் எனது கனவு என்றபடி எனது தோள் சாய்ந்து சொன்னாயே அன்றே முடிவு செய்து விட்டேன் எனது உயிரைக் கொடுத்தேனும் உனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்று. நான் நினைத்ததைச் செய்து முடித்து விட்டேன். இந்த இல்லத்திற்குப் பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் நன்கொடை கொடுப்பதால் பொருளாதாரத்தை நினைத்து நீ கவலை கொள்ளத் தேவையில்லை. அதோடு உனது சொத்துகள் கூட காலப் போக்கில் உன் கைக்கு வந்து சேரும் குந்தவை."
மாறனது வார்த்தைகளுள் தேவதூதனைக் கண்டாள் குந்தவை.
அவளது விழிகளது ஓரத்தில் கண்ணீர் கீழே இறங்கவோ வேண்டாமோ என்பது போல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவளது விழிநீரை மெல்லத் துடைத்து விட்டவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் குந்தவை.
"அப்படி நான் உங்களுக்கு என்ன செய்து விட்டேன் மாறா. எனக்காகவா இவ்வளவும் செய்தீர்கள். என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? என்னை எவ்வளவு பிடிக்கும் உங்களுக்கு."
குந்தவை குரலில் காதல் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது.

"ஒரு காலத்தில் எனக்கு என் அம்மா முகம் தெரியாது குந்தவை. ஆனால் இப்போது அப்படியில்லை."
என்றவனது விரல்கள் அவளது முகவடிவை வருடிக் கொடுத்தது. குந்தவைக்கு மெய்சிலிர்த்துப் போனது. இப்படியொரு காதல் கிடைக்கத் தான் அப்படியொரு நரகத்தை அனுபவித்தேனா என்பது போல இருந்தது அவளுக்கு.
அவளது எண்ணங்களை நடப்புக்குக் கொண்டு வந்தான் மாறன்.

"நான் புறப்படும் நேரம் வந்து விட்டது குந்தவை. எனக்கு விடை கொடு. எப்போதும் தைரியமாக இரு. என்னுயிர் எப்போதும் உன்னுள்ளேயே இருக்கும்."

"ஐயோ மாறா! இன்று வந்ததில் இருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, என்னை விட்டு எங்கே போகப் போகிறீர்கள்."

"உன்னை விட்டு என்னால் போக முடியாது என்று சொன்னேன் அல்லவா குந்தவை. விடிந்தால் உனக்கே எல்லாம் புரியும். எந்தச் சூழ்நிலையிலும் மனதைத் தளர விடாதே. உன்னை நம்பி நூறு மாறன்கள் இருக்கிறார்கள் ஞாபகம் இருக்கட்டும்."
என்றபடி தன் குந்தவையின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தவன் அங்கிருந்து விலகி இருளில் மறைந்து போனான்.

அவன் சென்றதும் இல்லத்தின் பொறுப்பானவர்கள் வந்து குந்தவையை அழைத்துக் கொண்டு போனார்கள். விடிவதற்கு ஒரு மணி நேரமே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக குந்தவை இல்லத்தோடு ஒன்றிப் போனாலும் அவளது விழிகள் மாறன் எப்போது வருவான் என வாசலையே தான் பார்த்திருந்தன.

காலையில் செய்தித்தாளை விரித்த குந்தவையின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலை குத்தி நின்றது. பெரிய எழுத்துகளில், மாறனின் படத்தைப் போட்டு, மர்மமான மரணம் இரண்டு கிழமைகளுக்கு முன்னால் கொலை செய்யப் பட்டவரின் சடலம் இன்று மீட்பு என்றும் காதலியின் வீட்டினரே கொலை செய்தார்கள் என்றும் போடப் பட்டிருந்தது.

குந்தவை உறை நிலைக்குப் போய் விட்டிருந்தாள். அடிக்கடி அவளது மாறனோடு, உன் காதலா என் காதலா பெரிது எனச் சண்டை போட்டவளுக்கு இறந்தும் அவளுக்காய் வந்த அவன் காதலது ஆழம் விழி நீரையே வற்றச் செய்து விட்டிருந்தது.

அதே நேரம் இல்லத்துக்கு ஒரு புதுக் குழந்தையைக் கொண்டு வந்தார்கள் பிறந்து இரண்டு கிழமைகளேயான குழந்தையை தாய் விட்டுச் சென்று விட்டாள் என அவளிடம் சொன்னார்கள். ஒரு நொடி எதையோ யோசனை செய்து பார்த்தவள் மறு நொடியே செய்தித்தாளைக் கீழே போட்டு விட்டு, குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அதன் காதில்
"மாறா என்னோடு எப்போதும் இருப்பேன் என்று சொன்னதன் அர்த்தம் இது தானா? உன்னை யாரும் இனிமேல் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று சொன்னாயே அதற்கு அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. என்னுள் இருக்கும் உன்னை யாரால் கண்டு பிடிக்க முடியும். உன் காதலைப் பெற நான் என்ன தவம் செய்தேன்."
என முணுமுணுத்தாள்.
விழிகளில் வடிந்த கண்ணீர் குழந்தையின் பாதங்களில் பட்டுச் சிதறியது.
 

Attachments

  • eiNAUX756063~2.jpg
    eiNAUX756063~2.jpg
    73.3 KB · Views: 21

Dvi Raj

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 15, 2023
Messages
1
பானு மா எண்ணத்தையும் வார்த்தையையும் சிறை செய்து விட்டாய். கண்களுக்கு நீரால் திரை போட்டு விட்டாய். மனதில் பாரத்தை ஏற்றிவைத்து விட்டாய். உன்னதமான காதலில் நெகிழ வைத்துவிட்டாய்.

முதலில் நான் பாராட்ட விளைவது உனது எழுத்து நடையையும், கதையோடு ஒன்ற வைத்த சுற்றுப்புறத்தை மறக்க வைத்த உனது உயிரோட்டமான வார்த்தை ஜாலத்தையும்தான்.

'என்னை இனிமேல் கொலை செய்ய முடியாது...' என்ற அவனது வரிகளைப் படிக்கும்போதே மனதில் ஏதோ திக் என்றது. அவன் குழந்தையாய் அவளிடம் சேர்ந்த போது மனம் நெகிழ்ந்து கண் நீர் வழிந்தது டா.

காதல் என்பதே கேலிக்குரியதாகவும் போலியான ஒன்றாகவும் வலம் வரும் இந்நாட்களில் இப்படி ஒரு உன்னத காதலைப் உணர்ந்ததன் மூலம் மனதில் ஒரு ஆத்ம திருப்தி நிலவியது. இந்தப் படைப்புக்கு நன்றி டா.

😍😍😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
 

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
பானு மா எண்ணத்தையும் வார்த்தையையும் சிறை செய்து விட்டாய். கண்களுக்கு நீரால் திரை போட்டு விட்டாய். மனதில் பாரத்தை ஏற்றிவைத்து விட்டாய். உன்னதமான காதலில் நெகிழ வைத்துவிட்டாய்.

முதலில் நான் பாராட்ட விளைவது உனது எழுத்து நடையையும், கதையோடு ஒன்ற வைத்த சுற்றுப்புறத்தை மறக்க வைத்த உனது உயிரோட்டமான வார்த்தை ஜாலத்தையும்தான்.

'என்னை இனிமேல் கொலை செய்ய முடியாது...' என்ற அவனது வரிகளைப் படிக்கும்போதே மனதில் ஏதோ திக் என்றது. அவன் குழந்தையாய் அவளிடம் சேர்ந்த போது மனம் நெகிழ்ந்து கண் நீர் வழிந்தது டா.

காதல் என்பதே கேலிக்குரியதாகவும் போலியான ஒன்றாகவும் வலம் வரும் இந்நாட்களில் இப்படி ஒரு உன்னத காதலைப் உணர்ந்ததன் மூலம் மனதில் ஒரு ஆத்ம திருப்தி நிலவியது. இந்தப் படைப்புக்கு நன்றி டா.

😍😍😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
உங்கள் கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466

பானுரதி துரைராஜசிங்கம் - குந்தவையின் காதலன்...!!!​

குந்தவையின் காதலன்
கட்டாய கல்யாணம் செய்து வைக்க
காவலில் இருக்கும் காதலியை
காதலன் நடு இரவில்
காப்பாற்ற வர....
குந்தவை காதலன்
கைப்பற்றி தப்பித்து செல்ல....
கனவை நிறைவேற்ற
காதலன் சொல் படி கேட்கும்
குந்தவை......
மாறாத நேசம் கொண்ட மாறன்....
மரணித்தும் மீண்டு வந்து
மங்கையை காப்பாற்றி
மறுபடியும் பிறந்து வரும் மாறன்....
கனவு போல காதல் கதை.....
கனவுகளை நனவாக்கும் காதல்....
அற்புதம்.... வாழ்த்துகள் சகி 💐💐💐💐
 

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219

பானுரதி துரைராஜசிங்கம் - குந்தவையின் காதலன்...!!!​

குந்தவையின் காதலன்
கட்டாய கல்யாணம் செய்து வைக்க
காவலில் இருக்கும் காதலியை
காதலன் நடு இரவில்
காப்பாற்ற வர....
குந்தவை காதலன்
கைப்பற்றி தப்பித்து செல்ல....
கனவை நிறைவேற்ற
காதலன் சொல் படி கேட்கும்
குந்தவை......
மாறாத நேசம் கொண்ட மாறன்....
மரணித்தும் மீண்டு வந்து
மங்கையை காப்பாற்றி
மறுபடியும் பிறந்து வரும் மாறன்....
கனவு போல காதல் கதை.....
கனவுகளை நனவாக்கும் காதல்....
அற்புதம்.... வாழ்த்துகள் சகி 💐💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி சகி
 
Top