• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

36. என்னாளும் உன் பொன்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அவர் மனதிலோ 'என்னையையே காட்டிக்குடுக்க பாக்குறியா? எப்பிடி பேச்சை திருப்பிவிட்டேன் பாத்தியா? என்னை உதாசீனம் பண்ண உனக்கு நான் தர தண்டனையே என் குழந்தைய நீ சுமந்தே ஆகணும்.


அது உன் கையில உயிராகி, அத பாக்கும் போதெல்லாம் உனக்கு நெருடலா இருக்கணும்.
இதை தவிர உனக்கு பெரிய தண்டனை வேற எதுவுமில்ல.
மகனுக்கு வாக்கப்பட்டிட்டு அப்பன் குழந்தைய சுமக்கிற பாக்கியம் அவ்வளவு சீக்கிரம் யாருக்குமே கிடைக்காது துளசி!
உனக்கு கிடைச்சிருக்கு சந்தோஷமா ஏத்துக்கோ!' என வஞ்சகமாய் சொல்லிக்கொண்டவர் உதட்டிலே மர்மமான புன்னகையின் சாயல்.


மீசையினை முறுக்கியவாறு உள்ளே சென்று மறைந்தார் அந்த பெரியமனுஷன்.


ஒரு மணிநேரம் கடந்திருக்கும், வீட்டில் நுழைந்தவனுக்கு பேசி வைத்ததைப்போல் கதையினை திரித்து அவனிடம் கூறினார்கள் பெற்றவர்கள்.


ரிப்போர்ட்டின் பதில் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் அதற்கு அவனுள் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதே சமயம் பெற்றவர்களின் எண்ணத்திற்கும் அவன் உடன் படுவதாக இல்லை.


“அவ செய்தது சரி தம்மா!
எனக்கும் என் பொண்டாட்டி இன்னொருத்தன் பிள்ளைய சுமக்கிறதுல இஷ்டமில்லை. என்னால ஒரு குழந்தைக்கு அப்பனாக முடியாட்டிக்கும் பரவாயில்ல, கடைசிவரைக்கும் எனக்கு பொண்டாட்டியா இருந்தா போதும்.” என்றான் அவன் துளசியின் மறுப்புக்கு ஒத்துப்போபவனாட்டம்.


அவன் பேச்சில் எங்கே தாம் நினைத்தது நடக்காதோ என பயம் கொண்ட பாக்கியா,


“அப்போ துளசிய நீ மறந்திடு ராஜா!” என்றார் எடுத்த எடுப்பில்.


“அம்மா!!” என கோபமாக குரலை உயர்த்தியவனிடம்,


“பின்ன என்னடா? உன் பொண்டாட்டிய கைபடாத மெழுகு பொம்மையாட்டம் வைச்சிருந்தா யார் வேணும்ன்னாலும் தொட்டுப்பாக்கத் தான் நினைப்பாங்க. உன்னால முடியாது என்கிறப்போ அதுக்கான அடுத்த கட்டத்த துளசியும் தேடிப்போக ஆரம்பிச்சா, நீ ஏமாந்து தானே போகணும்.


இதுவே அவளுக்கொரு குழந்தை இருந்திச்சுன்னா குழந்தைக்காகவேனும் வாழணும்ன்னு வாழ்க்கையில ஒரு பிடிப்பு இருக்கும், அப்போ கடைசி வரைக்கும் உன்கூடவே இருப்பா,
அதே எதுவுமில்லாத பட்சத்தில எதுக்கு தண்டத்துக்கு இங்க இருக்கணும்ன்னு நினைப்பாளா இல்லையா??


அதுவும் அந்த டாக்டர் பையன் முரளி இன்னும் கல்யாணமே கட்டிக்காம இவ நினைப்பிலயே சுத்திட்டு திரியிறானாம். உன்னோட வாழ்க்கைய தக்க வைச்சுக்கிறது உன் கையில தான் இருக்கு.” எனக் கூறியவருக்கு நன்கு தெரியும்,


மகனுக்கு எங்க பற்ற வைத்தால் பற்றிக்கொள்ளும் என்று.
துளசிமேல் பைத்தியமாக இருப்பவனுக்கு அவள் அவனை விட்டு செல்ல ஒரு காரணம் சொன்னாலே போதுமே!


தாயின் 'முரளி' என்ற பேச்சில் சிறுநிமிடம் விழிகளை உறுட்டியவாறு யோசித்தவன்,


“சரிம்மா எனக்கு சம்மதம், அவள சம்மதிக்க வைக்கிறதும் என் பொறுப்பு. இப்போ அவ எங்க?” என அவன் கேட்டதும்,
உதட்டில் புன்னகை அரும்ப, “அதாே அந்த ரூம்ல தான் இருக்கா” எனக் கைகாட்டினார்.


தாய் காட்டிய அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தவனை கண்டதும், “என்னங்க..!!” என ஓடிச்சென்று அவன் நெஞ்சினில் தஞ்சம் புகப் போக, ஒரு அடி பின் நகர்ந்து விலகி நிற்கும் படி கூறியவன் முகமோ இறுகிப்போய் இருந்தது.


“எதுக்கு அம்மா சொன்ன ரீட்மெண்ட்டுக்க சம்மதிக்க மாட்டேன்னு சொன்ன?” என்றான் காராறான குரலில்.


அவன் குரலில் தெரிந்த மாற்றத்தில் அவளும் பயத்தில் அவனை நெருங்காது தூரவே நின்றவள் விழிகளில் ஏக்கமானது அப்பட்டமாக தெரிந்தது.


“எப்பிடிங்க முடியும்? நான் உங்க சம்சாரம்ங்க, அவங்க சொல்லுறத போல செய்தா எல்லாமே தப்பாகிடும்.
அதுவுமில்லாம என்னை மாமா…”


“எனக்கு எல்லாமே தெரியும் துளசி! நீ புதுசா எந்த விளக்கமும் சொல்ல தேவையில்ல. எல்லாமே தெளிவா அவங்க என்கிட்ட சொல்லிட்டாங்க. பெரியவங்க என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும், வேற பேச்சுக்கு இடமில்லாம நீயும் சம்மதிச்சே ஆகணும்” என்றான். அவள் சொல்ல வந்ததை காதிலும் வாங்காது.


“என்னது எல்லாம் சொன்னாங்களா? எதை சொன்னாங்க? மருமக மகளுக்கு சமமானவன்னு நினைக்காம தப்பா பேசினாங்களே அதை சொன்னாங்களா?” என ஆக்ரோசமாக தலை சிலுப்பி கேட்டவள்,


“ச்சீ.. இதெல்லாம் ஒரு குடும்பம்? நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்க..” என சொன்னதும் தான் தாமதம் அவன் கை தடம் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது.


“என் குடும்பத்தை என் முன்னாடியே தப்பா பேசுறியா? இது குடும்பமில்லன்னா வேற எதுடி குடும்பம்.
உன்னை வேணாம்ன்னு பாதியிலயே கழட்டி விட்டு போனானே அந்த முரளி அவனோடதா நல்ல குடும்பம்?


இங்க பாரு ஒழுங்கு மரியாதையா அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு நீ சம்மதிக்கிற, இல்ல… நானே உன்னை கொன்னு புதைச்சிடுவேன்..” என அவனும் ஆக்ரோஷமாகக் கத்தினான்.


“ஏன்க அவங்க சொல்லுறது சரின்னு தோணுதாங்க..?
அவங்க சொல்லுறது போல செய்தா குடும்பத்துக்குள்ள குழப்பம் வராதா? இந்த பேச்சு ஆரம்பிச்ச நாளே இவ்ளோ பிரச்சினை வந்திருக்கிறப்போ, அது மட்டும் நடந்திச்சுன்னா என்னெல்லாம் ஆகும்ன்னு கொஞ்சமாச்சு யோசிச்சு பாருங்க..” என அவளும் விடாது கெஞ்ச,


“என்னடி எதிர்த்தெதிர்த்து பேசிட்டிருக்க, உன் பிளான் நல்லா புரிஞ்சு போச்சிடி எனக்கு.


குழந்தைய பெத்துக்காம விட்டா, என்னை விட்டுட்டு மறுபடியும் அந்த முரளிக்கூட ஒட்டிக்கலாம்ன்னு திட்டம் போடுறியா? அது மட்டும் நடக்க விடமாட்டேன்” என மீண்டும் இரைந்தான்.


“தெரிஞ்சு தான் பேசுறீங்களா? நான் அவனை மறந்து போயே ரொம்ப நாள் ஆச்சு. உங்கள கட்டிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அவனை நினைச்சுக்கூட பாக்கல.
இது தான் நீங்க என்மேல வைச்சிருக்கிற நம்பிக்கையா?” என நொந்துபோய் கேட்டாள்.


“நம்பிக்கையா? உன்மேலயா?
இல்லடி! சுத்தமா இல்ல.
நம்பிக்க மட்டுமில்லை, உன்மேல காதலும் கொஞ்சம்கூட இல்லை.


அதனால என்கிட்ட இந்த சென்டிமென்ட் படமோட்டி உன் காரியத்தை சாதிச்சுக்கலாம்ன்னு நினைக்காத.
இப்போ எங்களுக்கு இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணும், முதல்ல அதை பெத்து குடுக்கிற வழியப் பாரு!” என்றவன் கதவடைத்து போய்விட்டான்.


அதன் பிறகு துளசியும் மன்றாடவில்லை.
ஒரு கணவனுக்கு மனைவி மேல் முக்கியமாக எது தேவையோ அது இரண்டும் இல்லாதவனிடம் எதை பேசி எதை புரியவைக்க முடியும்.


இப்போது அவர்கள் வம்சம் என் வயிற்றில் வளரவேண்டும். அது தான் இப்போது அவர்களுக்கு ஆகவேண்டிய காரியம்.


ஆனால் அதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். அதுவும் பெரிய மனுஷன் என்ற போர்வையில் மருமகளையே படுக்கைக்கு அழைக்கும் ஒரு கேடுகெட்டவன் வம்சம் தன் வயிற்றில். நினைக்கும் போது ஓங்களித்துக்கொண்டு வந்தது.


எத்தனை நாட்கள் அடைத்து வைப்பார்கள், பார்க்கலாம். எத்தனை வருஷம் ஆனாலும் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். என திடமாகவே இருந்துகொண்டவளுக்கு கணவன் மேல் இருந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு போக ஆரம்பித்தது.


நாட்கள் மாதங்களாகின, துளசியின் முடிவில் மாற்றமில்லை.
முடிவை மாற்றிக் கொள்ளாதவளை அந்த அறை சிறையிலிருந்தும் விடுவிக்க யாரும் தயாராக இல்லை.


அறை வாசம் என்றாலும் வேளா வேளைக்கு உணவுகள் வந்த வண்ணம் தான் இருந்தது.
துளசி தான் எதையுமே சரியாக உண்பதில்லை.
தோன்றினால் உண்டு கொள்வாள், இல்லையெனில் அது வைத்த இடத்திலேயே அப்படியே கிடக்கும். சுத்தம் செய்யும் போது மொத்தமாக அள்ளி குப்பையில் கொட்டிவிடுவாள் மல்லிகா.


அவள் கணவனுக்கு ஏனோ அவளை இப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை தான். ஆனால் அவள் காலம் முழுவதற்கும் தன்னோடு வேண்டும் என்ற சுயநலம் அவனை மேலே யோசிக்க விடாது தடுத்தது.


எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதற்காகவே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் போதைக்கு அடிமையாக தொடங்கினான்.
அது மட்டுமல்லாது துளசியையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.


அவன் நிலையினை காணும்போது இந்த பேச்சையே விட்டு விடலாமோ என நினைத்த பாக்கியாவை அவர் கணவன் தான் “வேண்டாம் பாக்கியா! வெண்ணெய் திரண்டு வரப்போ நீயே தாளியை உடைக்காதே” என மாறி வந்த பாக்கியா மனதினையும் மாற்றினான்.


கட்டிலே கதியென படுத்திருந்து கரைந்தவள் சரியாக சாப்பிடாத காரணத்தினாலும், கணவனது துன்புறுத்தலாலும் மனம் மாத்திரமல்ல, உடலளவிலும் சோர்ந்து போய் இதற்குமேல் இவர்கள் செய்பவற்றையெல்லாம் தான் ஏன் பொறுத்துப்போக வேண்டும் என்ற எண்ணமே தலைதூக்கலாயிற்று.


எப்படியாவது இவர்கள் அறியாது வீட்டை விட்டு தப்பித்து விடுவோம் என தக்க சமயம் எதிர் பார்த்திருந்த போது தான்,


அறையினை சுத்தம் பண்ண வந்த மல்லிகா அறை கதவினை சாதாரணமாக சாற்றிவிட்டு பூட்ட மறந்து சென்றுவிட்டாள்.


அதையே கவனித்திருந்தவளும் வெளியே அரவம் கேட்காத சமயம் பார்த்து மெதுவாக கதவினை திறந்து பார்த்தாள்.


மதிய வேளை ஆகையால் யாருமே ஹாலில் தென்படவில்லை. கணவனும், மாமனாரும் அலுவலகம் சென்றிருப்பார்கள் . அத்தை சாப்பிட்டு உறங்க போயிருப்பாள். என நினைத்து பூனை போல் மெதுமெதுவாக அடிகளை எடுத்து வைத்தவள் யார் கண்களிலும் அகப்படாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்.


ஆனால் எங்கே செல்வதென்று தான் தெரியவில்ல. பார்வையினை அக்கம் பக்கமாக பார்த்துப் பார்த்து நடந்து கொண்டே சென்றவள் அருகினில் காரானது சடென் பிறேக் இட்டு நின்று கொண்டதில் திரும்பியவளுக்கு காரிலிருந்து இறங்கியவனைக் கண்டு பீதியானது.


“எங்கடி தப்பிச்சு போற? யாரு உன்னை தப்பிக்க விட்டது?” என வீதியென்றும் பாராது ஒரே இழுவையில், இழுத்து காரில் போட்டு வண்டியை ஸ்டார்ட் எடுத்து முன்றே நிமிடத்தில் வாசலில் கொண்டுவந்து விட்டவன்,


அவள் வேண்டாம் என கதறக்கதற இழுத்து வந்து அறையினில் போட்டு கதவை அடைத்தான்.


அடுத்த நிமிடம் என்ன ஆகுமாே என தெரியாது பயந்து போய் தலையிலடித்து அழுதுகொண்டிருந்தாள் துளசி.


பின்னே யார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து போனாளோ அவனிடமே அகப்பட்டால் சும்மா விட்டுவிடுவானா? ஒன்றும் இல்லாததற்கே அடித்து துன்புறுத்துபவன், இந்த தவறிற்கு என்ன செய்யப் போகிறானோ? என இதயமாே துடிப்பின் உச்சத்தை தொட்டிருந்தது.


சரியாக பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். கதவை உதைந்து திறந்து கொண்டு உள்ளே வந்தவன் பின்னால் வந்த இரு வேலை ஆட்களை அவளை நகரவிடாது பிடித்து கட்டிலில் அமர்த்தும்படி கூறினான்.


முதலாளியின் வாக்கிற்கு பணிந்து அவன் கூறியவற்றை அவர்கள் செய்ய.


“ஏய் பொண்ணு அதை கொண்டு வா!” என அவன் குரல் கொடுத்ததும்,
அவன் முன்னால் வந்து நின்றவள் கையிலோ அனலானது தகதகக்க நன்கு பழுக்க காய்ச்சியிருந்த இரும்பு கம்பி இருந்தது.


மரப்பிடியினை கையில் பிடித்திருந்தவளுக்கே அதன் வெப்பம் தாங்க முடியவில்லை போல.
கையினை மாற்றி மாற்றி ஏந்தி நின்றவளிடமிருந்து அதை வாங்கியவன் கொஞ்சமும் ஈன இரக்கம் என்பது பாராமல் அவள் துடிக்கத்துடிக்க உள்ளங்கால்கள் இரண்டுலும் வைத்தான்.


“இனிமே வீட்ட விட்டு ஓட முயற்சி செய்வ? அப்பிடி ஓடப்பாத்தேன்னு வையி இனி சூடெல்லாம் கிடையாது கால் ரெண்டையும் வெட்டிடுவேன்” என வசனம் பேசிவிட்டு அவளை திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.


கால்கள் ரெண்டும் புண்ணாகிப்போக வலி தாங்காது வீரிட்டு அழுதவள் ஓலம் அந்த வீடு முழுவதும் ஒரு வார மாகக் கேட்டது.


ஆனால் அவளுக்கென்று இரக்கப்படத் தான் அந்த வீட்டில் யாருமே இருக்கவில்லை.


மல்லிகா மட்டுமே மணிக்கொரு முறை வந்து புண்ணிற்கு மருந்திடுவாள். மருந்திடும் போதெல்லாம் இவள் கதறுவதைப் பார்க்கும் போது அவளுக்கும் வேதனையாகத்தான் இருக்கும்.
ஆனால் அவளுக்கு சாதகமாக பேசினால் தனக்கும் அதே நிலை வந்துவிடுமோ என பயந்தே அவளிடம் பேச்சு கொடுக்காமல் செய்யும் வேலையினை மென்மையோடு செய்துவிட்டு வந்துவிடுவாள்.


சூடு பட்ட காயம் ஆறுவது போல் தெரியவே இல்லை. எங்கே அது ஆறுவது. அதற்கு சரியாக சாப்பிட்டால் தானே அதுவும் ஆறுவதற்கு. நடக்கக்கூட முடியாது கிடந்தவள் நிலையினை மல்லிகாவே பாக்கியாவிடம் கூற.


பலநாட்கள் கடந்து அவளை பார்க்க அந்த அறை புகுந்தார் அவர்.
கட்டிலில் கிடந்தவள் உறக்கத்தில் தான் இருக்கிறாள் என நினைத்து,


“ஏய் எந்திரி! இந்த மாதிரி சாப்பிடாம அடம்புடிச்சா உன் இஷ்டத்துக்கு விட்டிடுவோமா..? எந்திருச்சு சாப்பிடு!” என அதிகாரமாகச் சொன்னவர் பேச்சினையும் மீறி துளசி அதே போல் படுத்திருக்க.


அவள் கன்னத்தில் அடித்து “நான் கத்திட்டே இருக்கேன் நீ தூங்கிறியா?” எனக் கேட்டவருக்கு அவள் கிடக்கும் தோறணை வித்தியாசமாக தெரிய,


பின்னால் நின்றிருந்த மல்லிகாவை அழைத்தவர்,
“ஏய் இவளை என்னன்னு பாரு!” எனக் கட்டளையிட்டார்.


அவளும் அவளை எழுப்ப முயற்சி பண்ணிப்பார்த்தாள். துளசி பெயருக்கு கூட கண்ணசைக்கவில்லை.


“அம்மா துளசி சுயநினைவோட இல்லம்மா!” என்று அவள் கூற,


“பயப்பிடாத மல்லிகா! அவளுக்கு எதுவுமில்ல, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்” என வீட்டிலிருந்த ஆண் வேலையாள் ஒருவனை அழைத்து காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றார் பாக்கியா!
கூடவே மல்லிகாவையும் அழைத்து சென்றிருந்தார்.
 
Top