• வைகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

37. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
523
ஒரு மணியை தாண்டி, இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
வழமையாக ஒரு மணிக்கு சாப்பாட்டிற்கு வருபவன் ஏனோ இன்று வரவில்லை.


எல்லோரும் உண்டு முடித்து, தத்தம் வேலையினை பார்க்க சென்றதும் தான் வந்தவன்.


மைலி கிளாஸ்கு போயிட்டாளா?" என்றான் தெய்வானையிடம் எடுத்த எடுப்பில்.


வந்ததும் அவளை கேட்பது அவளுக்குள் பல கேள்வியினை விதைத்தாலும், பதிலை எதிர்பார்த்திருப்பவனிடம்,


"இப்போ கொஞ்சம் முன்னாடி தான் போனா", என்றாள்.


"ம்ம்... அம்மா தூங்கிட்டாங்களா? அவங்க கூட கொஞ்சம் பேசணுமே!"


"இப்போ தான் தம்பி படுக்க வைச்சிட்டு வந்தேன். இப்போ போன பேசலாம்" என்றவளிடம்,


"சரிக்கா..." என்றவாறு தாயின் அறையில் நுழைந்தான்.

இங்கு விஜயாவும் நீட்டி நிமிர்ந்து விட்டத்தை பார்த்தவாறு தூங்காது யோசனையில் அமர்ந்திருக்க,

"அம்மா..." என்று அவர் அருகில் வந்தவன்,
ஓரமாக இருந்த இருக்கையை இழுத்து அமர்ந்து,


"தூங்காம யோசிச்சிட்டு இருக்கிங்க போல?" என்றான்.

"க்ஹூம்...." என்று பெரிய மூச்சொன்றை வெளியேற்றியவர்,


"என்ன செய்ய....? கனவில மட்டும் தானே என்னோட ஆசையை நிறைவேற்ற முடியும்.. நிஜத்தில அதெல்லாமல் நடக்கிற காரியமா என்ன? இல்ல நீ தான் அதை நிறைவேத்திடுவியா?" என்றார் விரக்தியாய்.


"எது உங்க ஆசை? எதை நீங்க கேட்டு நான் மறுத்தேன்.?" என்றான் அவனும் விடாது.

"இந்த வயசில எனக்கு என்ன ஆசை வரப்போகுது..?
காலகாலத்துக்கு உன்னை ஒருத்திக்கிட்ட பிடிச்சு குடுத்து, என் பேரப்பசங்கள பார்த்திடுவோம்னா.. க்ஹூம்....


அந்த பேச்சை எடுத்தாலே எல்லார் வாயையும் அடைச்சிடுறியே!

காலத்துக்கும் இந்த மாதிரியே ஏங்கிட்டே போய் சேரவேண்டியது தான்." ஏக்கத்தோடு கூறி முடித்தார்.

"அது வந்து...." என சங்கடமாக இழுத்தவன், பின் ஒரு திடத்தினை தன்னுள் கொண்டு வந்தவனாய்,


"நானும் அதை பத்தித்தான் பேசணும்னு வந்தேன்." என்று பொடி வைத்து பேசியவன்.
முகத்தினில் எந்த வித உணர்வினையும் காட்டாமல்,

"எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்மா!" என்றதும் அதிர்ந்து தெளிந்த விஜயா முகத்தில், எல்லை இல்லா சந்தோஷம்."ஸ்ரீ.... நீ உண்மையை தான் சொல்லுறீயா? என்கூட விளையாடலையே!" என்றார் மகன் மாற்றத்தை நம்பாமல்."இல்லம்மா...! எனக்கு சம்மதம் தான்.
ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன்." என்றவனது பதிலில்,
விஜயா முகத்தில் எரிந்த அத்தனை மின்குமிழும் ஒரு நொடியில் மங்கி கலையிழந்தது,


"என்ன ஸ்ரீ அது?" என்றவர் மனமோ,

:எங்கு மகன் தன்னை மகிழ்விப்பதற்காக சம்மதம் சொல்லிவிட்டு, தனக்கு வரப்போகிறவள், அப்படி இப்படி வேண்டும் என்று ஆயிரம் நிபர்ந்தனை இட்டு, இப்படியானவள் இந்த உகிலே இல்லை என தேட முடியாத அளவிற்கு பெண் கேட்பானோ!' என நினைத்து, அவன் பதிலுக்காய் காத்திருக்க.

"உங்க ஆசைப்படியே நான் கல்யாணம் செய்துக்கிறேன். அது மைலியா இருந்தா மட்டும் தான்.

அவளை எனக்கு கட்டி வைக்கிறீங்கனா சொல்லுங்க. நாளைக்கே தாலி கட்டிக்கிறேன்." என்று உறுதியுடன் கூறியவனுக்கு என்ன பதில் கூறுவதென தெரியவில்லை."என்னடா சொல்லுறே? அவ சின்ன பொண்ணுடா... அதோடு அவ நல்ல பொண்ணு வேற, இதுக்கு அவ ஒத்துக்க மாட்டா....


வேற நல்ல பொண்ணா, உனக்கு ஏத்த பொண்ணா... அம்மா கட்டி வைக்கிறேன்.
இல்லன்னா யாரை உனக்கு பிடிக்குதோ சொல்லு... உடனே அவங்க வீட்டில போய் பேசுறோம். இவ வேண்டாம்டா." என்றவரை முறைத்தவன்,

"அவ நல்ல பொண்ணுனா என்னம்மா அர்த்தம்? நான் கெட்டவன்னு சொல்ல வரீங்களா? " என்றான் கோபமாய்.
அவனது இந்த கேள்வியில்,
பொருள் பிழையினை அறிந்து கொண்ட விஜயா,


"நான்.. அந்த அர்த்தத்தில சொல்லலைடா.." என தடுமாறியவர்,


"என் பையனை நான் தப்பா சொல்லுவேனா? நீ தப்பே செய்தாலும், பெத்தவளுக்கு அது சரியாத்தான் படும். நான் நீ சொன்ன அர்த்தத்தில சொல்லல.


மைலி உனக்கு ஏத்தவ இல்ல.
அவ வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுட்டா.... அதில இருந்து அவ மீண்டு வர ரொம்ப நாள் ஆகும் ஸ்ரீ.


அதுவுமில்லாமல் அவ சின்ன பொண்ணு... அவ குடும்பத்தை தாங்கிற பொறுப்பு அவ கையில தான் இருக்கு. இப்போ போய் இதைபேசி நாமளும் அவளை நோகடிக்கணுமா?

வேண்டாம்டா... அவள விட்டிடுவோம்." என ஒவ்வொன்றாக எடுத்து சொல்ல,


"அம்மா நீங்க என்ன அர்த்தத்தோட பேசுறீங்கனு எனக்கு புரியல.. ஆனா நீங்க சொல்லுற பார்த்தா, அவளை ஏதோ பூதத்துக்கிட்ட பிடிச்சு குடுக்கிறது போல பேசுறீங்களோனு தோணுது.


அதோடு அவ ஒன்னும் சின்ன பாப்பா கிடையாது. அவளுக்கு இருபது வயசாகிடிச்சு.. பெண்களோட கல்யாண வயசே பதினெட்டு தான்.


அப்புறம் அவளை எனக்கு கட்டி வைச்சா... அவ குடும்பம் என் குடும்பமில்லையா? நான் பாத்துக்க மாட்டேன்.." என தன் பக்க வாதத்தை முன் வைத்தவன்,

"அம்மா இப்போவும் சொல்லுறேன்... எனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அது மைலியா இருக்கிற பட்சத்தில.


உங்க பையனை கல்யாண கோலத்தில பாக்கணும்னு நினைச்சீங்கன்னா, மைலிகிட்டையோ, இல்ல அவங்க அம்மா கிட்டையோ பேசுங்க." என அறுதியாகக் கூறியவன்,

"எனக்கு என்னமோ மைலிக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, அவங்க அம்மாக்கிட்ட பேசுறது தான் சரினு படுது.

இப்போ அந்த ரஞ்சித் ஏமாத்திட்டான்ன வேதனையில்சம்மதிக்க மாட்டா,
அதுவே அவ வீட்டு பெரியவங்க எடுத்து சொன்னால் ஒத்துக்க வாய்ப்பிருக்கு.
இதுக்கு மேல உங்க இஷ்டம்." என்றவன்.

"எனக்கு வேலை இருக்கும்மா! நல்ல முடிவா எல்லாருமா சேர்ந்து பேசி சொல்லங்க" என எழுந்தவன், விஜயாவின் யோசனை படிந்த முகத்தினை பார்த்தவாறே வெளியேறினான்.இருக்காதா பின்னே!

இதுவரை திருமணத்திற்கு சம்மதிக்காதவன், இன்று தானாகவே முன்வந்து சம்மதித்து விட்டு, இப்படி இரு நிபர்ந்தனை முன் வைப்பான் என்று அவர் நினைக்கவில்லை.


அதுவும் திருமணம் செய்வதென்றால் மைலியை மட்டும் தான் திருமணம் செய்வானாமே!

'அப்படி என்றால் இவனது பார்வை எப்போதும் மைலியை மேய்வதற்கான காரணம் இது தானா?
மைலியை சந்தித்ததற்க்கு பின் இவனது மாற்றத்திற்கு காரணமும் அவள் தானா.?' என சிந்தித்தவளுக்குத்தான் தெரியும்,


தனக்குத் தெரியக் கூடாது என்று பெரியவர்கள் மறைக்கும் பல விஷயங்கள்.


அது மாத்திரமல்ல..
மைலி மீதான ஸ்ரீயின் பார்வை... அவனது முன்னைய நடவடிக்கைகள் என அறிந்தும் அறியாதவளாக இருந்த விஜயாவிற்கு, ஸ்ரீயினது மாற்றத்திற்கான காரணம் இது தான் என்பது புரியாமல் போனது தான் விந்தை.

உண்மையில் விஜயா இந்த கோணத்தில் ஒரு நாளும் சிந்திக்கவில்லை.


அதற்கு காரணம் ஸ்ரீ தான்.
திருமணத்தின் மீதான அவனது எதிர்ப்பும்,
பெண்களை அவன் பார்க்கும் விதமும் அப்படியானதே!


மற்றைய பெண்களிடம் அவன் எதிர் பார்ப்பதை போல் தான் இவளிடமும் அவன் எதிர்பார்கிறான்.
தன்னை நல்லவனாக காட்டி, தன் தேவையை அவளிடம் நிறைவேற்றி கொள்ள நினைக்கிறான். என்று நினைத்தவருக்கு தெரியும்,


மைலி நெருப்பு என்பதும். அதை மீறி நெருங்கினால், அந்த நெருப்பில் இவனே சாம்பலாகிவிடுவான் என்பதும்.

ஆனால் ஸ்ரீயின் இந்த மாற்றம் மைலியை தனது மனைவி ஆக்கிக்கொள்ள என்பது தான் அவளுக்கு ஆச்சரியமே.


இதில் அவளுக்கு விருப்பம் இல்லையென்றில்லை.
அவள் தன் மகனுக்கு மனைவியாக வந்தால், நிச்சயம் அவனது தடம்மாறிய வாழ்க்கை சரியாகும் என்பதிலும் ஐயம் இல்லை.

விஜயாவிற்கு மைலியை மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை, அவளை காணும் முன்பே வந்தது என்பது தான் உண்மை.

ஆம்... ரங்கசாமி நகுலேஸ்வரத்திற்கு போய் வந்ததும்,

'இப்படி ஒரு பெண்ணை கண்டேன்.
இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணை காண்பதே அரிது.
அவளை கண்ட ஒரு நொடி தன் பேரனுக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.' என்றவர்,

"சின்ன பெண் எங்களோட சுயநலத்துக்காக அவள் வாழ்க்கை சீரழிக்க எனக்கு விரும்பமில்லை." என்று கூறிவிட்டு, பின் தன் மனைவியையும், மருமகளையும் நினைவில் வர சுதாரித்தவராய்,


"படிப்பு முடிக்காம எப்படி அவள் வாழ்க்கையை நம்ம முடிவு பண்ண முடியும்? கல்வி எவ்வளவு முக்கியமானது.


அவசரப்பட்டு அவள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்." என பேச்சை மாற்றிவிட்டு சென்றுவிட்டார்.


அதிலிருந்து மைலி தான் மருமகளாக வரவேண்டுமென ஆசை கொண்டவளுக்கும் தெரியும், இது நடக்காத காரியம் என்று.

பின் மைலியை முதலில் அறிமுகம் செய்த ஈஸ்வரியும், மைலிக்கு புரியாத விதமாக நகுலேஸ்வரம் கோவிலில்.. மாமா சாென்னாரே என்று ஜாடை காட்டியதும் தான்.
மைலியை ஏற இறங்க பாத்தவருக்கு, தன் மகனுக்கு கொடுப்பனை இல்லையே! என்று ஏங்கவும் செய்தார்இன்று மகனது இந்த பேச்சில் உள்ள உறுதியில், இவளை தவிர யாரும் தனக்கு மனைவியாக முடியாது. என்பது சந்தோஷமாக இருந்தாலும்,

'இது நடக்குமா?' என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது.


"எப்படி மைலியிடம் சம்மதம் வாங்குவது?"

'இதற்கு மைலி சம்மதிப்பாளா? அவளுக்கும் இவனை பற்றி உண்மைகள் தெரிந்திருக்குமோ?' என நினைக்கும் போது, அன்று மைலி தனதறையில் காரணமில்லாமல் அழுதுவிட்டு, பொய்யான காரணம் கூறி தன்னை சமாளித்தது நினைவில் வர,


அதற்கு காரணம் ஸ்ரீயாகத்தான் இருக்க வேண்டும். என்பதை அப்போதே உறுதியாக நம்பினாள்.மைலி திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்பது நிச்சயமானது.
'அப்படி அவள் மாட்டாள் என்றால், தன் மகன் வாழ்க்கை வெறுமையாகவே போய்விடுமா?' என சுயநலமாக நினைத்தவள்,

மைலியின் மனதை உணராமல்,
தன் மகனிற்கு தாயாகவே சிந்திக்க ஆரம்பித்து, அதை செயற்படுத்தவும் தொடங்கினார்.

ஆம் அடுத்து அவர் எடுத்த முடிவானது, மைலியால் கூட மறுத்து மறு வார்த்தை சொல்ல முடியாதளவிற்கிருந்தது.
அன்று காலையில் மதிய சமையலுக்கு தயாரான மைலி. விஜயாவினை அழைக்க,
விஜயாவோ என்றுமில்லாத பதட்டத்தோடு,


"எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல்லடா! இன்னைக்கு மாத்திரம் தெய்வானையை கூப்பிடு! நாளைக்கு வறேன்." என பாவமாக சொல்ல.


உடம்பு முடியவில்லை என்றதும், அவரை தொட்டு ஆராய்ந்தவாறே,


"உடம்புக்கு என்ன.? ஏன் பதட்டமா இருக்கிங்க?"


"ஒன்னுமில்லடா! கொஞ்சம் ரிலாக்ஸ்ஸ இருந்தேன்னா சரியாகிடும்.. நீ தெய்வானையை அழைச்சிட்டு போ!" என அவளை விரட்ட,

விஜயாவை முறத்த மைலி,


"ஆ.... பாவமேனனு அக்கறையா விசாரிச்சா.. ரொம்ப தான் விரட்டுறீங்க.
நான் போவேன் இல்லனா பாயவிரிச்சு மல்லாக்க படுப்பேன். உங்களுக்கென்ன வந்திச்சு?" என்றாள் வடிவேல் பாணியில் விஜயாவிடம் மல்லுக்கட்டவது போல் பேசியவள் செவிகளில் எட்டியது,


"அக்கா..." என ஆர்பரித்து ஒலித்தது அவளது தங்கையின் குரல்.

முதலில் அதை நம்ப முடியவில்லை என்றாலும், ஏதோ உந்துதலில் வாசலை திரும்பி பார்த்தவளை நோக்கி ஆரவாரமாய் ஓடிவந்து தாவிக்கட்டிக்கொண்டவள்."அக்கா..அக்கா..." என பலமுறை ஆசையாக அழைத்து, அவளது கன்னத்தில் முத்தத்தினை பதித்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காதவளால் நடப்பவற்றை உணர்வதற்கே சிறு வினாடிகள் பிடித்துக்கொண்டது.தானும் தன் பங்கிற்கு கட்டிக்காெண்டவள், தங்கையின் அணைப்பு இறுகுவதை உணர்ந்து,

"ஜனா.." தங்கையை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவள், தங்கையின் கண்கள் கலங்கியிருக்கவும்,

"ஏய்...! என்னடி இது? சின்ன பிள்ளை போல.." என கேலி செய்தாலும் அவளுக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது.

"தனியேவா வந்த?" என பேச்சினை மாற்றியவள் கேள்வியில் வாசலை பார்த்தாள் ஜனா.

அவள் பார்வையின அர்த்தம் புரிந்தவளாய், அவளையே பின்தொடர்ந்தவள்,
அங்கு இந்திராவை கண்டதும்.


"அம்மா... " என அதிசயத்தவள்,

"வாங்கம்மா.." என ஓடிச்சென்று அவரையும் ஒரு முறை அணைத்து விடுவித்தவள்,

"என்னம்மா... புதுசா பாசத்தை பொழியுறா? முன்னாடி எல்லாம் என்கூட மல்லுக்கு நிக்கிறவளாம்மா இவ?
என்னமோ இன்னைக்கு புதுவிதமா என்னை கண்டு கட்டிபிடிக்கிறா, முத்தம் கொடுக்கிறா.. அது போதாதுன்னு மடை உடைச்ச வெள்ளம் போல கண்ணால கண்ணீர் வேற.." என கேலியாக கூறினாலும் அவள் குரலும் கறகறக்கத்தான் செய்தது.

பெத்தவளுக்கு தெரியாதா பிள்ளையின் மனநிலை.


"என்ன தான் இருந்தாலும் அக்காவாச்சே...
பிரிவு வரப்ப தான் தெரியும். சகோதர பாசம்னா என்னன்னு..

எப்பவும் உன்னை பத்தித்தான் பேச்சே....
"நீயும் தவிச்சிருப்பேல்ல மைலி?" என அவர் பரிவோடு வினவ.


"ரொம்ப நாளைக்கு இந்த கஷ்டம் இல்லம்மா... சீக்கிரம் கடனை அடைச்சிட்டு, வீட்டுக்கு வந்திடுவேன். அப்புறம் நம்ம பிரிய வேண்டிய அவசியமே இருக்காது." என்க.

சிறு புன்னகை நடுவே அவள் தலையினை வருடியவர்,


"நீ நல்லா இருக்கியா மைலி?" என்றார்.

"நீயே பாத்து சொல்லும்மா... நான் எப்படி இருக்கேன்" என்று விலகி நன்று தன்னை சுற்றாக்காட்டியவள் செயலில் புன்னகைத்தார்.

இந்தக்குறும்பினை கண்டு எத்தனை நாட்கள் ஆகின்றது.


"உனக்கென்ன....?ரொம்ப நல்லாத்தான் இருக்க." என்றார் தன் பங்கிற்கு குறும்பாக.


இவர்களது உரையாடல் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த விஜயாவிற்கு, இருந்த பதட்டம் விலகி, புது தைரியம் உண்டானது."வீட்டுக்கு வந்தவங்களை இப்பிடித்தான் நிக்க வைச்சு பேசிட்டு இருப்பியா? அவங்கள உக்கார வைச்சு பேசு" கண்டிப்பதைப்போல் கூறினார் விஜயா.

தன் தவறை உணர்ந்தவளாய்.

"இவங்கள கண்ட சந்தோஷத்தில மறந்திட்டேன்ம்மா....

வாங்கம்மா... ஜனா.... நீயும் வாடி! இது நம்ம வீடு! வெக்கபடாத சரியா?" என்றவள்
பேச்சில் தமக்கையை முறைத்தவள்,"நான் ஒன்னும் வெக்கப்படல. நமக்குத் தான் அதுன்னா என்னனே தெரியாதே!" என்றாள் தமக்கை காலை வாருவதைப்போல்.நீண்ட நாட்களின் பின்னர் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணமதை மனதில் நிறைத்துக்கொண்டிருந்தார் இந்திரா."என்னம்மா.... சொல்லாமல் கொள்ளாம திடீர்ன்னு...? எப்படி வீடு தெரிஞ்சிச்சு? வரப்போ எதில வந்தீங்க? ஊர்லயிருந்து சீக்கிரமாவே கிளம்பியிருப்பீங்கல்ல." என அடுக்கிக்கொண்டே போனவள் கேள்வியில், இந்திரா திகைத்தாளோ இல்லையோ!

விஜயா திணறிப்போனார்.

"மைலிம்மா...... அம்மா ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்காங்க.. குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வா!" என்றார்.


"ஆமால்ல..." என மீண்டும் தன் தலையில் தட்டிக்கொண்டவள்,


"இன்னைக்கு என்னாச்சுனு தெரியலம்மா, சந்தோஷத்தில என்ன செய்யணும்னு மறந்திடுது.
அம்மா கூட பேசிட்டிருங்க.. அஞ்சே நிமிஷத்தில ஓடி வந்துடுறேன்." என உள்ளே ஓடினாள்.

சொன்னது போல் ஐந்தே நிமிடத்தில் வர,
தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்த விஜயாவும், இந்திராவும் மைலி வருவதை உணர்ந்து பேச்சினை மாற்றி, பரஷ்பரமான விசாரிப்போடு நிறுத்திக்கொண்டனர்.

மைலி கொண்டுவந்த ஜூஸ்ஸினை குடித்து முடித்தவுடன்,


"இவங்களை உன் ரூம்கே கூட்டிட்டு போ மைலி! கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்."


"சரிம்மா... நீங்க வாங்க.. நம்ம ரூம்க்கு போகலாம்." என்று அழைத்து சென்றவள்,


"இதில படுத்துக்கோங்கம்மா.. என் வேலைய முடிச்சிட்டு வறேன். நீங்களும் தூங்கி எந்திரிக்க சரியா இருக்கும்." என திரும்பியவளை,

"மைலி..." என அழைத்தார்.


"நீ உண்மையில சந்தோஷமா தான் இருக்கியா?" என இம்முறை தீவிரமாக வினவ,"எனக்கு என்ன குறை? நான் நல்லா தான்ம்மா இருக்கேன்."


"இல்ல... நீ நல்லா இல்ல... எப்படி நல்லா இருக்க முடியும்?
படிக்க வேண்டிய வயசில, குடும்ப பாரத்தை உன்னோட தலையில சுமத்திட்டேனே....!

அப்படி இருக்குறப்போ நீ நல்லா இருக்கேனு சொன்னா நம்புறமாதிரியா இருக்கு?" என்றார் கவலையாய்.

"என்னம்மா பேசுறீங்க?
இது நம்ம குடும்பம்... உனக்கு கஷ்டம்னா, அது எனக்கு இல்லையா? இதெல்லாம் பழசும்மா.. அதை விடும்மா....


இப்பவும் கனகரட்ணம் தொல்லை பண்றதில்லையாம்மா...." என மைலி பேச்சை மாற்ற,


"இல்லம்மா வரதில்லை... ஆனா ஊரில யாருக்கோ கடனை குடுத்திட்டு, அவங்க கூட தகராரு பண்ணியிருக்கான் போல.

எல்லாரும் நம்மள போல ஏமாந்தவங்க இல்லையேடா!
அவங்க கிட்டையும் ரொம்ப ஆடியிருக்கான்.


அது தான் ஆளையே உருத்தெரியாமல் ஆக்கிட்டாங்க. இப்போ எழுந்து நடக்க கூட முடியாமல் இருக்கான்.

பாவம் அவன் சம்சாரம். அவதான் இவனை தாங்கிட்டிருக்கா,
யாருக்கும் இப்போ வட்டிக்கு விடுறதில்லையாம். " என்க.

"அவனுக்கே இந்த நிலையாம்மா? யாரும்மா இந்த வேலையை செய்தாங்க?"

"அவனுக்கே தெரியலையாம். நமக்கு எப்படித் தெரியும்.? முடிஞ்சவர அவனோட கடனை அடைக்க பாக்கலாம். அவன் நம்மள ஏமாத்திட்டான் என்கிறதுக்காக நம்ம யாரையும் ஏமாத்த கூடாதுடா." என்றவர்,


"மைலிம்மா நான் ஒரு விஷயம் கேள்வி பட்டனே.. அது உண்மையாடா?" என்றார்.

"என்ன...? கேளும்மா"


"உன் அத்தான்." என ஆரம்பிக்கவும்,
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டவள்,


"உண்மை தான்ம்மா." என விரக்தியாக கூறியவள்,

"எனக்கு அதில வருத்தமில்லம்மா.... எல்லாமே நன்மைக்கு தான்.


இனி எனக்கு பிரச்சினை இல்ல... என் கடமையை நான் எந்தவித குறுக்கீடும் இல்லாம செய்யலாம் இல்லையா?

அத்தைக்கும் இஷ்டமில்ல.. எதுக்கு விருப்பமில்லாதவங்கள கட்டாயப்படுத்தணும்..?" என பொய்யாக புன்னகைத்தவளை, உற்று நோக்கினார் இந்திரா.

"என்னம்மா.... அந்த மாதிரி பாக்கிற? உண்மை தானே!
என் கடமையை செய்ய எந்த தடையும் இனி இல்லல்ல... இதோ இந்த மேடத்தை இனி ரொம்ப பெரிய படிப்பு படிக்க வைக்கணும்," என்று தங்கை தலையை வருடியவள்,


"அப்புறம் நீ எங்களுக்காக பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.
இதுக்கப்புறம் உன்னை காலம்பூர சந்தோஷமா வைச்சிருக்கணும். உன்கூட இருக்குற வரைக்கும், நீ அழவே கூடாது." என கூறிய மகளின் முகத்தினையே பார்த்தவர் முகத்தில் இயலாமையின் சாயல்.


"கேட்க நல்லா தான் இருக்கு.... ஆனா அந்தளவுக்கு நான் சுயநல வாதியில்லையே!


கால காலத்துக்கு உனக்கும் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா..?

உன்னை ஏமாத்தின அவனுக்கே ஒருத்தி அமையுறப்போ, என் ராஜாத்திக்கும் ஒருத்தன் அமையாமலா போயிடுவான்?" என்றார் மகளின் மனதினை அறிய,

"ம்ம்.. அமையலாம்மா... ஆனால் எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லம்மா.. என அந்தப்பேச்சை நாசுக்காக தட்டிக்கழிக் கழித்தாள்.

"ஐடியா இல்லையா..? உன்னோட தலையில எல்லா பாரத்தையும் போட்டுட்டு, நான் நிம்மதியா இருந்திடுவேனா?


இல்லனா உன் அப்பா ஆத்மா தான் அதை தாங்கிடுமா?
சீக்கிரம் உன்னை ஒருத்தன் கையில புடிச்சு குடுக்கணும்"


"ஏன்ம்மா இந்த மாதிரி பேசற..?
உனக்கு நான் பாரமா போயிட்டேனா? அது தான் என்னை துரத்திவிட பாக்குறியா?" என கண் கலங்கியவளை,
வாரி தன் நெஞ்சோடு அணைத்தவள்.


"என்னடி பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? அந்த மாதிரியா நான் சொன்னேன்?
எனக்கும் மத்த அம்மா போல என் பொண்ணை ஒரு நல்லவன் கையில ஒப்படைக்கணும் என்கிற ஆசை இருக்கக் கூடாதா?" என மகளை சமாதானம் செய்தவர்,

"அப்பாவை போல நானும் திடீர்னு உங்கள விட்டுட்டு போயிட்டா உங்க நிலை....." என ஏதோ கூற வந்தவர்
வாயினை அடைத்தவள்,

"என்னை அழவைக்கணும்னு தான் ஊரில இருந்து வந்தியா?
எங்க நீ தான் போயேன் பாக்கலாம்.." என்று தாயிற்கு சாவால் விடுவது போல் கூறியவள்,


"வேணாம்மா....! இந்த மாதிரில்லாம் இனி பேசாத... உன்னையும் விட்டா எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல.


உனக்கே தெரியும்.. அப்பா இறந்தப்போ, ஆறுதல்னு சொல்லிக்க யாருமே வரலங்கிறது." என்றாள் உடைந்த குரலில்.

பொய்யாய் புன்னகைத்தவர்,


"என் பொண்ணு ரொம்ப பொறுப்பா நடந்துக்கிறா.... உலகம் உனக்கும் புடிபட்டுட்டு, பெரிய பொண்ணா மாறிட்டான்னு நினைச்சேன்.
ஆனா நீ இன்னுமே சின்ன பொண்ணாத்தான்டா இருக்க.

அப்பா நம்மளை விட்டு போறப்போ, சந்தோஷமா ஒன்னும் போகலம்மா...
அவரு சந்தோஷமே நீயும் ஜனாவும் நல்லா இருக்கிறத பார்க்கணும் என்கிறது தான்.


"அதை அவர் பார்க்காம போனது போல நானும் போகக்கூடாதுனு ஆசைப்படுறேன்.

சீக்கிரம் உன்னை கட்டிக்குடுத்து, என் பேரனையோ, பேத்தியையோ பாக்கணும்.
என்னோட ஆசைய நிறைவேற்றுவல்லம்மா.." என்றார் கெஞ்சலாய்.இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? இத்தனை நாள் தமக்காய் கஷ்டப்பட்ட தாயின் ஆசைக்கு முடியாது என்றா சொல்ல முடியும்?

பெற்றவளாய் எல்லோருக்கும் இருக்கும் ஆசை தானே!

'அத்தான் தன்னை ஏமாற்றியதன் தாக்கத்தினால், குடும்ப வாழ்வை வேண்டாம் என்று வெறுத்து விடுவேனாே என்ற பயத்தில் தான் கூறுகிறார்.' என நினைத்தவள்,

அந்த நிமிடம் தாயை சமாளிப்பதற்காக

"இப்போ என்னம்மா ? நான் கல்யாணம் செய்துக்கணும் அவ்வளவு தானே? சரி சொல்லு.... யாருக்கு கழுத்தை நீட்டணும்.. எப்ப நீட்டணும்...? இந்த நிமிஷமே நீட்டுறேன்.
அப்புறம்.... வருஷத்துக்கு ஒன்னு பெத்து போடுவேன்... நீயே கழுவி பணிவிடை செய்துக்கணும்" என்றாள் எதைப்பற்றியும் சிந்திக்காமல்.

அதை கேட்டதும் உச்சி குளிர்ந்தவர்,


"நிஜமாத்தான் சொல்லுறீயா?" என்றார் நம்ப முடியாது


"உன்கிட்ட விளையாடுவேனாம்மா! சரி நீ சொல்லு.. யாருக்கு கழுத்த நீட்டணும்?" என்றாள் இன்னமும் தீவிரம் புரியாது...


"அதானே பாத்தேன்...! என் பொண்ணு குறும்புக்காரிதான். ஆனா அம்மா பேச்ச தட்ட மாட்டா." என்றவர்,


"அம்மாடி....! உன்னை கேக்காமலே ஒருத்தங்களுக்கு வாக்கு குடுத்திட்டேன்டா!
என்னை ஏமாத்திட மாட்டியே!" எனறவரை புரியாது பார்த்தவள்,

"யாருக்கு என்ன வாக்கு தந்தீங்க?" என்றாள் பயந்து.


" ஒருத்தங்க உன்னை புடிச்சுப்போய், பொண்ணு கேட்டாங்க. நானும் நல்ல இடம்னு நானும் சம்மதிச்சிட்டன்.


இப்போ யேயசரகமகாம அவசரப்பட்டிட்டேனோனு தோணுது.

இது உன்னோட வாழ்க்கை.
உன்னையும் ஒரு வார்த்தை கேட்டு முடிவை சொல்லிருக்கணும். அதுவும் இந்த இக்கட்டான நிலையில எதையும், யோசிக்காம வாக்கு குடுத்திட்டேன்ம்மா.
அம்மாவை மன்னிப்பியாடா?" என இந்திரா கவலையோடு கையெடுத்து கும்பிட்டவாறு கேட்க்க,

தாய் கூறியது மைலிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தன்னை ஒரு வார்த்தை கேட்காமல் எடுத்த முடிவில் தாய் வருந்துவதை தாங்காதவளாய்,


"அம்மா...." என கண்டிக்கும் தோரணையில் அவர் கையிலை விலக்கியவள்,


"இதுல்லாம் என்னம்மா? என்னை நீ சங்கடப்படுத்துற..
நான் உன் புள்ளம்மா.. நீ என்ன முடிவு பண்ணாலும் என்னோட நல்லதுக்குத்தான் பண்ணுவேனு எனக்கு தெரியாதா?


இல்லனா உன் புள்ளை வாழ்க்கையை முடிவு பண்ணுற உரிமை தான் உனக்கில்லையா?

ஆனாம்மா நாம இருக்கிற நிலையில இப்போ கல்யாணம் வேண்டாம்.

வரதட்சணை, அது இதுன்னு நிறைய கேப்பாங்க.
முதல்ல கடனை அடைப்போம். அப்புறம் இந்த கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்." என்று மகள் நாசுக்காக தட்டிக்கழிக்க.

"அம்மாடி அவங்க வரதட்சணை எதுவுமே எதிர்பாக்கலை.
நம்ம வீட்டில வாங்குற அளவுக்கு அது சாதாரண குடும்பம் கிடையாது.


அது யாருன்னு சொன்னா நீயே சம்மதிப்பா.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்." என்றவரது பொடி வைத்த பேச்சில்,

"ரொம்ப வசதியானவங்க என்கிறீங்க. அப்புறம் எதுக்கு நம்ம குடும்பத்தில பொண்ணு கேக்கணும்? எனக்கு இது நல்லதா படல?" என்றாள்.

அவளைப் பார்த்து புன்னைகைத்தவர்,

"அதுக்கும் காரணம் இருக்கு. அவங்க பையனுக்கு இதுவரை கல்யாணத்தில நம்பிக்கையே இல்லையாம்.. எப்போ உன்னை பார்த்தாரோ அப்போதிருந்து உன்னை புடிச்சுப்போய், கல்யாணம் ஒன்னு செய்தா அது உன்னை தான்னு ஒத்தை கால்ல நிக்கிறாராம்.

ஏன்டா... உன்னை கேட்காம அம்மா அவசரப்பட்டுட்டனாடா?" என மீண்டும் கவலையாய்.


"இல்.... இல்லம்மா... நீ சரியாத்தான் செய்திருக்கா.
ஆனா என்னை பாத்த மயங்கின அந்த மன்மதன் யாருன்னு தான் யோசிக்கிறன்?" என பொய்யாக கேலி செய்தவளிடம்.
"உன்னோட விஜயா அம்மா பையன் தான்" என்றதும் தான்
மைலியின் இதயம் ஒரு முறை நின்றே துடித்தது.


சில நொடி அதிர்ந்து விழித்தாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,397
ஆஹா நல்லாவே காய் நகட்டியிருக்கான் எங்க பேசுனா மைலி சம்மதிப்பாண்ணு தெரிஞ்சு செய்திருக்கான் 😀😀😀😀😀😀
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
523
ஆஹா நல்லாவே காய் நகட்டியிருக்கான் எங்க பேசுனா மைலி சம்மதிப்பாண்ணு தெரிஞ்சு செய்திருக்கான் 😀😀😀😀😀😀
ஆமா ஆமா.. அவனோட டீச்சர் நானு
 
Top