• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

39. அதியா - வாழவைக்கும் காதலுக்கு ஜே!

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

- அதியா

மாலை மயங்கி வானம் இருட்டத் தொடங்கியது. திலோத்தமா விறுவிறுவென தன் வீடு நோக்கி நடந்தாள்.

கையில் சுமந்த இரு உணவு பொட்டலத்துடன், இரவிற்கான சமையலை இன்று செய்ய வேண்டாம் என்ற நிம்மதியுடன், கண்களில் கனிவுடன் தனக்காக வீட்டில் காத்திருக்கும் ஜீவனைக் காண விரைந்தாள்.

அனைவரின் வீடுகளும் விளக்கொளியில் பளீரென்று இருக்க, தன் வீடு மட்டும் இருளில் மூழ்கி இருப்பதைக் கண்டு, சிறிது அச்சத்துடன் கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

அறையினை ஒளிரச் செய்து, கட்டிலில் கண்மூடி படுத்திருந்தவனின் தலையை ஆதுரமாய் தடவினாள் நிம்மதிப் பெருமூச்சுடன். அவள் வர நேரமாகியதால் செல்லக் கோபத்துடன் கண்மூடி படுத்திருந்தவன், அவளின் தொடுகையில் உருகி, கோபத்தை மறந்து அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"திலோ இன்னைக்கும் இவ்வளவு நேரமா? என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.

பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் இருக்கும் நான் எல்லாம் ஒரு ஆண்மகனா?" அவமானத்தில் முகம் கன்றியவன் தலையை திருப்பிக் கொண்டான் அவளை பார்க்காமல்.

சிவந்த தன் உள்ளங்கையில் அவன் முகத்தினை சுமந்து, அவன் மீது வாகாய் படுத்துக் கொண்டவளும், அவன் மீசை நுனியினை திருக்கி, நாசியோடு நாசி இழைத்து, நெற்றியில் செல்லமாய் முட்டி, "ஜித்து பேபி" என்றாள் மயக்கும் தன் வசீகரக் குரலில்.

"உலகையே தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் சூரியனே ஆனாலும் மேகம் வந்து மறைத்தால் மறையத் தான் வேண்டும்.

இந்தக் கஷ்டம் எல்லாம் நிரந்தரம் அல்ல. எனக்காக இல்லை... இல்லை... நம் காதலுக்காக உங்கள் குடும்பம், செல்வம், வசதி வாய்ப்பு அனைத்தையும் துறந்து, இருவர் ஒருவராய் வாழ்கிறோமே, இந்த வாழ்விற்கு ஈடு இணை எதுவும் இல்லை ஜித்து பையா...

அம்மா அப்பா என்ற உறவுகளின் அர்த்தம் தெரியாத எனக்கு, அனைத்துமாக மாறி அன்பை வாரி வாரி பொழிந்தாயே! உங்களின் இந்த நிலை விரைவில் மாறும். நம் காதலின் மேல் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு" என்றாள் அவன் காதல் தந்த நம்பிக்கையில்.

"எனக்கு நிச்சயம் சரியாகிவிடுமா? அன்று டாக்டர் உன்னிடம் தனியாக என்ன சொன்னார்?" என்றான் ஆர்வமாக.

அவளின் வார்த்தைக்காக அவன் காத்திருக்க, அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றது.

" மிஸஸ் திலோத்தமா இந்திரஜித்! சாரி உங்களிடம் இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. உங்கள் கணவருக்கு மூளையின் நரம்புப் பகுதியில், பைக்கில் இருந்து கீழே விழுந்ததால், ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் வெளியேறி, காய்ந்து, அந்த இடத்தில் வடுவாக மாறி இருக்கிறது. அந்த வடுவின் மேல் சிறிய அழுத்தம் பட்டால் , இப்படி அவ்வப்போது கை கால்கள் நிதானம் இன்றி செயல்படும்.

இனி உங்கள் கணவர் வண்டி ஓட்டக்கூடாது. யார் துணையும் இன்றி நடக்கக்கூடாது. எதிர்பாராத நேரத்தில் இப்படி நடந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
ஆப்ரேஷனுக்கான முழுத் தொகை இருபத்தி ஐந்து லட்சத்தையும் நீங்கள் கட்டினால் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், அவருக்கு எந்தவிதமான ஆபத்தையும் தரலாம். மன அழுத்தம் தரும் செய்திகளை அவருக்கு அறவே தவிர்க்க வேண்டும். காது, மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகினால் அவருக்கு நிலைமை கை மீறிப் போகிறது என்று அர்த்தம். இனி முடிவு உங்கள் கையில்" என்று தலைமை மருத்துவர் கூறியது நினைவிற்கு வந்ததும், தன்னுடைய இயலாமையை நினைத்து கண்ணோரம் கரித்துக் கொண்டு வந்தது.

அதனை அவனுக்கு காட்டாமல் அவன் மார்புச் சட்டையோடு உரசி, சட்டையின் இடைவெளியில் கண் சிமிட்டிய அவன் நெஞ்சுரத்தில் முத்தம் பதித்தாள்.

அதில் சிலிர்த்தவன், அவளின் கூந்தலை மென்மையாக பற்றிக் கொண்டு, " ஓகே. மேடம் இன்னைக்கு செம குஷி மூடு போல... " என்றான் அவளின் வருத்தத்தை உணராமல்.

உள்ளத்து வலிகளை மறைத்து உதட்டினில் சிரிக்கும் சிரிப்பு, மரணத்தின் வலியை விட கொடுமையானது என்பதை அந்த நொடியில் உணர்ந்தாள்.

தலையை நிமிர்த்தி தன்னவனை ஆழ்ந்து பார்த்தாள். விழியாலே தன்னை விழுங்கும் அந்த ஆண்மையைக் கண்டதும் அவளது பெண்மை நாணம் கொண்டது.

அவளின் முகவர்ணம் மாறுவதைக் கண்டவன், அவளின் தோள் வளைவில் தன் முகத்தை பதித்து, காதோடு இதழ்கள் உரசி, " ரொம்ப பசிக்கிறது திலோ" என்றான் நெகிழ்ச்சியான குரலில்.

" அச்சச்சோ மறந்தே போய் விட்டேன்! ஜித்துமா இதோ எடுத்து வருகிறேன்" என்று அவனிலிருந்து எழப்போனவளை தடுத்து, " எனக்கு சாப்பிட நீதான் வேண்டும் திலோ" என்றான்.

" ராட்சசா... எத்தனை முறை என்னை தின்றாலும், உன் பசி அடங்கவே அடங்காதா?" என்றாள் மென்குரலில் விழிகளை தாழ்த்தி.

அவளின் இமைகளை தொட்டுத் தடவி, " இந்தக் கண்கள் என்னை உள்ளே இழுத்துக் கொள்கிறதே, சுகமாய் கொல்கிறதே! மீண்டும் மீண்டும் உனக்குள் புதைந்து மரணிக்க தூண்டுகிறதே. நீ ராட்சசி அவதாரம் எடுக்கும் போது, நான் ராட்சசன் அவதாரம் எடுப்பதில் தவறில்லையே " என்றவன் கை மெல்ல அவளுடைய வலது பக்க உடையை தளர்த்தி, வெற்றுத்தோளில் வீற்றிருந்த மச்சத்தில் கோலமிட ஆரம்பித்தது.

சாதாரண மேக்கப் ஆர்டிஸ்ட் உதவியாளராக பணிபுரிந்தவள், இந்திரஜித்தின் மருத்துவ செலவிற்காக நடன காட்சிகளில் இணைந்து நடனமாடும் வாய்ப்பையும் கேட்டுப் பெற்றாள் அவனுக்குத் தெரியாமல்.

மேக்கப் போடத் தெரிந்தவளுக்கு எளிதில் மேக்கப்பை கலைக்கவும் தெரிந்தது. மானத்தை விற்று பிழைக்காத எந்த ஒரு தொழிலையும் செய்ய முன் வந்தாள் தன் காதல் கணவனுக்காக. வெற்றிகரமாக இன்று வரை அவனுடைய உடல் நிலையையும், அதற்காக பாடுபடும் தன்னுடைய நிலைமையையும் அவனுக்குத் தெரியாமல் மறைத்து வந்தாள்.

அவளுடைய நடன குரூப்பில் இருக்கும் பிரபல நடன மாஸ்டர் பலராம், திலோத்தமாவை முழுமையாக அடைவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். தெரு நாய் போல் அவள் பின்னாடி அலைந்து, அவளுடைய நிலைமையை தனக்கு சாதகமாய் பயன்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் முகம் மறைத்த முகமூடிக்குள், வக்கிரமாய் திலோத்தமாவை ரசித்துக்கொண்டிருந்தான். வெளியில் அவளுக்கு உதவுவது போல் தனக்குத் தெரிந்த இயக்குனர்களிடம் அவளுக்கு நடன வாய்ப்பு வாங்கித் தந்தான்.

அதிகாலையில் விரைந்து பணிக்கு வருபவள் இரவிற்குள் வீடு திரும்பி விடுவாள். இந்திரஜித்தை கவலை சிறிதும் அண்டாமல் தன் காதலால் நிறைத்து அவனை கண்ணுக்குள் பொத்திவைத்து பாதுகாத்தாள்.

அன்றைய சூட்டிங்கில் கதாநாயகிக்கு நடன அசைவு சரியாக அமையாததால், ஒரே நடன அசைவை கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் செய்தனர் அனைவரும்.
"பிரேக்..." என்று இயக்குனர் சப்தமிட்டு கத்தியதும், ஆசுவாசமாக ஒரு தூண் மறைவில் சென்று அமர்ந்தாள் திலோ.
கையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை வேகமாக அருந்தினாள். பதட்டத்தில் தண்ணீர் சிந்தி விடவே, வழக்கம்போல் துப்பட்டாவை எடுத்து துடைப்பதற்காக இயல்பு போல் கையை கொண்டு சென்றாள்.

அணிந்திருந்த கையில்லாத ரவிக்கையும் குட்டைப் பாவாடையும் துணிப் பஞ்சத்தை எடுத்துக்காட்ட விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்.


உடல் வலியில் கெஞ்ச, உள்ளம் அவமானத்தில் இறுக, உடலைக் குறுக்கிக் கொண்டு அப்படியே சாய்ந்து கண்மூடி, தன்னவனின் இனிய காதல் நினைவுகளை நினைவுப்படுத்தி, வலிக்கும் தன் இதயத்திற்கு மருந்தாக பூசிக் கொள்ள ஆரம்பித்தாள்.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
யாருமற்ற திலோத்தமாவிற்கு பௌர்ணமி இரவு கடற்கரை அவ்வளவு பிடித்தமான ஒன்று. அன்று இரவு எட்டு மணி கடந்ததும் அவளுடன் மேக்கப் பணியாற்றும் தோழியர், " திலோ! நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. நீ வருகிறாயா? அல்லது நாங்கள் செல்லட்டுமா? " என்றனர்.

" நீங்கள் எல்லாம் போங்கப்பா. என்னை கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? இன்னும் சிறிது நேரம் இருந்து விட்டு வருகிறேன் நீங்கள் கிளம்புங்கள்" என்றாள் கடற்கரை காற்றின் சிலுசிலுப்பில் கைகளை தன் தோள்களுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.

நேரம் செல்ல செல்ல கடற்கரையில் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. சுற்றுப்புறம் மறந்து மோனநிலையில் அமர்ந்திருந்தாள்.

சற்று தூரத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஒரு நண்பர் கூட்டம் கலகலத்து கொண்டிருந்தது. தன் காரில் சாய்ந்து நின்றபடி தன் நண்பர்களின் விளையாட்டுகளை ரசித்துக்கொண்டிருந்தான் இந்திரஜித்.

ஒருவரை பிடித்து ஒருவர் நீரில் தள்ளி விடுவதும், பிடிக்க முடிவதுமாக தொடர்ந்த விளையாட்டில் இந்திரஜித்தை பிடிக்க நண்பர் கூட்டம் முயல, சிரித்துக் கொண்டே பின்னால் நகர்ந்து சென்றவன், கால் தடுக்கி, திலோத்தமாவின் மடியில் சாய்ந்தான்.

பௌர்ணமி ஒளியில், நிர்மலமான அழகுடன், பளிங்குச் சிற்பம் ஒன்று தன் முன்னே இருப்பதைக் கண்டவன், "வாவ்..." என்றான் அவள் அழகில் மெய் மறந்து.

அவனின் பாராட்டில் சுயம் தெளிந்தவள், அவனைப் பார்த்து திகைத்து, அவனை கீழே தள்ளி கடற்கரை மண்ணில் உருட்டினாள்.

'ஹாய்... ஐ ஆம் இந்திரஜித்" என்றான் மணலில் பள்ளி கொண்ட பெருமாளை போல் கைகளால் கன்னத்தை தாங்கி, நீண்டு படுத்தபடி.

" ஸ்டுப்பிட்... " என்று கடுகடுத்த முகத்துடன் கையை தட்டிக்கொண்டு மணலில் இருந்து எழுந்து நின்றாள்.

செல்லும் அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரஜித். "மச்சி... நண்பா... டேய்..." என பல குரல்கள் அவனை அழைக்க, அவனோ அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு மாதம் கடந்த நிலையில், அதே பௌர்ணமி கடற்கரையில் திலோத்தமாவின் முன் இந்திரஜித் அமர்ந்திருந்தான்.

" நான் எங்கு போனாலும் என்னை பின்தொடர்ந்து, ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள்?" என்றாள் திலோத்தமா.

அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் தன் கையை நீட்டி அவளை தடுத்து நிறுத்தினான்.

" திலோத்தமா! உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால் உனக்கு என்னை எப்பொழுது பிடிக்கும் என்று தெரியாது. ஆனால் ஒரு நாள் உனக்கு நம்மை ஒருவன் உண்மையாக காதலிக்கிறான் என்று தோன்றும், அந்தக் காதலோடு தான் உன் வாழ்வு என்று நீ நினைக்கும் போது , என்னை தயங்காமல் அழைத்து விடு.
நீ அழைத்த அடுத்த நொடி, நான் என்ன செய்து கொண்டு இருந்தாலும், ஏன்.... இன்னொரு பெண்ணின் முன் மண்டியிட்டு காதலிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தாலும், உன் முன்னால் இருப்பேன்.
நீ உன் அம்மா, அப்பாவின் அன்பிற்காக ஏங்கியிருக்கிறாய். நான் நல்ல தகப்பனாய், தாயாய் மாறி உன்னை சீராட்டுவேன். நல்ல காதலனாய் தாங்குவேன். நல்ல கணவனாய் பாதுகாப்பேன். நீ இல்லாமல் போனால் வாழ்க்கை முழுதும் இருட்டாகவே இருக்கும்.
இது நமக்காக..." என்று கூறி சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தை அவள் முன் நீட்டினான்.

கம்பீரமான ஆண்மகன் தன் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்டதும், கன்னி மனதும் கரைந்தது அவன் காதல் உரைத்த விதத்தில்.

அவள் அசையாது நின்றதும், சோர்ந்த முகத்துடன் திரும்பினான் இந்திரஜித்.

" ஹலோ இவ்வளவு பேசிட்டு தனியா போனா எப்படி? " என்றாள் திலோத்தமா.

"வாட்?" என்றான் இந்திரஜித்.

" வாட் இல்ல நீ வாத்து " என்றவள் வெட்கத்துடன் ரோஜா பூங்கொத்தை வாங்கி, அதில் தன் முகத்தை புதைத்து மறைத்துக் கொண்டாள்.

சட்டென்று எழுந்த இந்திரஜித் கடலுக்குள் ஓடினான். பதறிய திலோத்தமாகவும் எழுந்தாள். கால் முட்டி நனையும் வரை கடலில் நின்று கொண்டு, இரு கைகளையும் பறவை போல் விரித்து, "ஹே.... என் பொண்டாட்டி என்னை லவ் பண்ண சம்மதம் சொல்லிட்டா..." என்று கடல் அலைகளின் இரைச்சலோடு சப்தமிட்டு கத்தினான்.

மெல்ல திரும்பி, விரித்த கைகளை மடக்காமல், திலோத்தமாவை தன்னருகில் வரும்படி தலையசைத்தான்.

மறுப்பாக தலையசைத்து ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் திலோத்தமா.

அவள் வந்து தான் ஆக வேண்டும் என்பது போல், 'வா...' என்று தலையசைத்து, இந்திரஜித்தும் கடலை நோக்கி பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தான்.

அவனின் பிடிவாதத்தில் அவள், அவனை நோக்கி முன்னே வர, அவனும் அவளை நோக்கி வந்தான்.
கடல் அலைகள் பாதங்களை உரசி கொஞ்ச, அவள் கரத்தோடு தன் கரத்தை சேர்த்துக் கொண்டு, மெல்லத் தன் உதட்டருகில் கொண்டு வந்து, தளிர்க்கரங்களுக்கு குளிர் முத்தம் வைத்தான்.

நடுங்கிச் சிலிர்த்தவளும் கையை உதறப் பார்க்க, அவளின் இடையை மறு கையால் வளைத்துக் கொண்டான். "ஐ லவ் யூ..." என்றவனின் மீசைகள் கன்னத்திலும் காதிலும் உரசியது.

தடுமாறியவள் அவன் சட்டையினை இறுக்கிப்பிடிக்க, தன்னோடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

தனக்கே தனக்காக ஒரு உறவு கிடைத்ததும், மெல்ல மெல்ல தன் வசம் இழந்தவள், தலையை சரித்து அவன் மார்பில் சாய்ந்தாள்.

தனக்காக, தங்களின் காதலுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்தவனிடம் சரணடைந்தாள் அவனின் மனைவியாக. அன்று தொடங்கிய அவர்களின் காதல் வாழ்வு தித்திப்பாய் இனித்தது இடையில் நடந்த இந்திரஜித்தின் விபத்து வரை.


விபத்திற்குப் பிறகு வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலேயே அடைப்பட்டிருந்தான் இந்திரஜித்.

அவனுக்காக அவன் பெற்றோரிடம் அவள் மண்டியிட்டபோது, அவனை விட்டுப் பிரிந்தால் மட்டுமே தாங்கள் அவனுக்கு உதவி செய்ய முடியும் என்று உறுதியாய் கூறிவிட்டனர்.

'அவனை விட்டுப் பிரிவதா?' தன்னால் அவனை காப்பாற்ற முடியும் என்ற வைராக்கியத்துடன் இந்த நொடி வரை போராடிக் கொண்டிருக்கிறாள்.

'இப்படி அரைகுறை ஆடையில் தன்னை பார்த்தால் என்ன நினைப்பான்?' என்று மனதோடு மறுகியவளை டைரக்டரின் "ஷாட் ரெடி" என்ற குரல் கேட்டதும் மனதில் குடியேறிய உறுதியுடன் எழுந்து நடந்தாள்.

யாருடைய கண்ணுக்கும் தெரியாதவாறு நடன குழுவில் கடைசியில் நின்று தன்னை முடிந்தவரை மறைத்துக் கொண்டாள்.

வேலை முடிந்ததும் விறுவிறுவென தனது மேக்கப் பொருட்கள் அடங்கிய கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறியவளை, பலராம் தெரியாமல் இடிப்பது போல் இடித்தான்.

"சாரி..." என்று சொல்லி, சிதறிய பொருட்களை சேகரித்து தருவது போல் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு பொருளை எடுத்து அவள் கைப்பைக்குள் ஒளித்து மறைத்து வைத்தான் வக்கிர புத்தியுடன்.

இந்திரஜித்தை விரைந்து பார்க்க வேண்டும் என்ற எண்ண பதட்டத்தில் இருந்தவள் அதனை கவனிக்காமல் வீடு திரும்பினாள்.

அவள் வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு அவள் வீட்டிற்குள் நுழைவதற்கு ஓர் கால் மணி நேரத்திற்கு முன், நடன குழுவில் இருந்த மற்றொரு பெண் மூலம் இந்திரஜித்க்கு போன் செய்தான்.

" சார் நான் திலோவோட ஃப்ரெண்டு ரதிமாலா. கை கழுவும் போது நான் கழட்டி வைத்த மோதிரத்தை காணவில்லை. திலோவின் மேக்கப் பைக்குள் இருக்கிறதா? என்று கொஞ்சம் பார்த்து தாருங்கள். திலோவின் எண்ணுக்கு முயற்சி செய்தால், அவள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்றே அப்பொழுது இருந்து சொல்கிறது. அப்படி யார் கூட தான் பேசுவாளோ? அது சரி அது எதுக்கு எனக்கு. கொஞ்சம் மோதிரம் இருக்கிறதா? என்று மட்டும் பார்த்து சொல்லுங்கள்" என்று அவனுக்கு பேச வாய்ப்பளிக்காமல் போனை கட் செய்தாள்.

பலராமிடம் தான் பேசியது சரியா? என்பது போல் கேட்டுவிட்டு நகர்ந்து சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் கைப்பையை வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் திலோத்தமா.
" ஏய் திலோ உன் பிரண்டு ரதியோட மோதிரத்தை காணமாம். உன்னிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னாள்" என்றான் சத்தமாக இந்திரஜித்.

"ஓ..." என்று சுரத்தே இல்லாமல் பதில் சொன்னாள் சோர்வில்.

அவளின் சோர்ந்த குரலை கண்டு கொண்டவன், அவளின் கைப்பையை எடுத்து மோதிரம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தான். கைப்பையின் அடியில் பலராம் மறைத்து வைத்த கருத்தடுப்பு சாதனம் தெரிந்ததும், இந்திரஜித்தின் முகம் சுருங்கியது.

' அவளிடம் கேட்போமா? வேண்டாமா?' என்று சலனம் கொண்டான்.

" என்ன என் ஜித்து பேபிக்கு இன்னைக்கு ஒரே யோசனை? " என்றவள் அவன் நெற்றியில் முட்டி முத்தம் பதிக்க, " என்னிடம் நீ எதையாவது மறைக்கிறாயா திலோ? " என்றான் அவள் கண்களை நேராகப் பார்த்து.
நடனம் ஆடுவது தெரிந்து விட்டதோ என்ற பயத்தில், "ஒன்னும் இல்லை....யே...." என்றாள் படபடப்பாக.

அவளின் பொய்மை கண்களில் நடனமாட தன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான் இந்திரஜித்.

மறுநாள் அமைதியாகவே இருந்த தன் கணவனிடம், "வருகிறேன்..." என்று கூறிவிட்டு வேலைக்கு வந்தவளை, கடுமையான நடனம் முழுமையாக உள்ளே இழுத்துக் கொண்டது.

பெரிய முரசு போன்ற அமைப்பில் ஏறி நின்று நடனமாடி குதிக்க வேண்டும். கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் செய்து முடித்ததும் வயிற்றில் விடாது வலி எடுத்தது திலோத்தமாவிற்கு.

ஓய்வறை சென்று விட்டு திரும்பியவளின் முகம் பாறை போல் இறுகிக் கிடந்தது.

இனிய உறவில் உருவாகிய கரு உருத் தெரியாமல், ஒழுகிப்போனதை எண்ணி புழுவாய் உள்ளம் துடித்தாள்.

உடலை முந்திக் கொண்டு அவளின் மனம் அவளை பலவீனமாக்க, " எனக்கே எனக்காய் இந்திரஜித் இருக்கும்போது நான் எதற்கும் கவலைப்பட கூடாது... " என்று தன் மனதிற்கு கட்டளையிட்டாள்.

இயந்திரமாய் வீட்டிற்குள் நுழைந்த மனைவியை யோசனையுடன் பார்த்தவன், மெல்ல அவள் கைகளைப் பிடித்து நிறுத்த முயன்றான்.

அவன் முகத்தைப் பார்த்தால் எங்கே தன் உணர்வுகள் உடைப்பெடுத்து விடுமோ என்று நினைத்தவள், அவன் கைகளை நழுவவிட்டு குளியலறையில் மூச்சு முட்ட அழுதாள்.

அவளின் விலகல் அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களை அனர்த்தமாய் சொல்லியது.

ரதிமாலாவின் மூலம் திலோத்தமாவின் சில அங்க அடையாளங்களை தெரிந்து கொண்ட பலராம், இந்திரஜித்க்கு நேரடியாகவே போன் செய்தான்.

" என்னடா கையாலாகாத புருஷா, உன்னால் தான் உன்னையே கவனித்துக் கொள்ள முடியவில்லையே. அதனால்தான் போனால் போகிறது என்று பரிதாபப்பட்டு உன் பொண்டாட்டியை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் " என்ற பலராம் பாம்பு விஷத்தை கக்கியது.

"யாருடா நீ? கொன்று போட்டு விடுவேன் ஜாக்கிரதை" என்று உறுமினான் இந்திரஜித்.

" டேய் அந்த வாழைத்தொடையில் இருக்கும் பளபள மச்சம், இப்போது நினைத்தாலும் சும்மா..." என்று சிலாகித்து பேசிய பலராமை, " நிறுத்துடா நாயே... " என்று கத்தி தடுத்தான் இந்திரஜித்.

தான் காதலின் சின்னமாய் கொண்டாடிய தருணங்கள் எல்லாம் நினைவிலாட, அவன் பேச பேச தன் காதல் கற்பிழந்தது போல் உணர்ந்தான் இந்திரஜித்.

" டேய் இன்னும் உனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கா? அப்ப கிளம்பி வாடா ஸ்டுடியோவுக்கு. அச்சச்சோ உன்னால்தான் வர முடியாதே! பரவாயில்லை உனக்கும் சேர்த்து நானே... " என்று வக்கிரச் சிரிப்புடன் போனை கட் செய்தான் பலராம்.

அன்று திலோத்தமாவிற்கு பலராம், கதாநாயகனுடன் நெருங்கி ஆடும் ஒரு ஆபாச நடனப் பாடலுக்கு வாய்ப்பு தந்தான். " முடியவே முடியாது" என்று திட்டவட்டமாக மறுத்த திலோத்தமாவை அவளின் இயலாமையை குறி பார்த்து அடித்தான்.

" மூன்று பேர் ஆடும் நடனத்தில் நீயும் ஒரு ஆள் அவ்வளவே. மேலும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு தானே நடனமாடப் போகிறாய். உன்னை யாருக்கும் அடையாளம் தெரியப்போவதில்லை. பத்து லட்சம் சம்பளம். உன் கணவனை எளிதாக குணப்படுத்த ஒரு வாய்ப்பு" என்று சலனமில்லாத அவள் மனக்குளத்தில் கல்லை இருந்து சலனத்தை ஏற்படுத்தினான்.

இந்திரஜித்தை காப்பாற்ற ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அடையாளம் தெரியாமல் என்றதும் அவள் தலை சரியென்று அசைந்தது.

அரங்கமே அமைதியாய் இருக்க, ஒரு இடத்தில் மட்டும் ஒளிர்ந்த ஒளியில் கதாநாயகனுடன் கல்லாயிறுகிய மனதுடன் இழைந்து ஆடிக்கொண்டிருந்தாள் திலோ.
கதாநாயகன் அவள் உடல் வனப்பை இறுக்கிப்பிடிக்க, அவன் தோளில் நாடியை பதித்து, கண்கள் சொக்கிப் போனவள் போல் கிறங்கி நடிக்க, உள்ளே ஊறிய வலியில் முகம் மறைத்த முகமூடியின் வழியே கண்கள் திறக்க, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரஜித்.

சர்வமும் உடைந்து, ரத்தம் உறைந்தது அவளுக்கு. ஆயிரம் மறைத்தாலும் தன் திலோவை அவனுக்குத் தெரியாமல் போகுமா?

"நீயா?" என்று அவன் விழிகள் கேட்ட கேள்வியில் செத்தே போனாள் திலோத்தமா. நடன காட்சிக்கு ஏற்ப கதாநாயகன் அவள் உடலில் எல்லை மீற, அதனைப் பார்க்க முடியாமல் தன் நண்பர்களுடன் வந்த இந்திரஜித் மீண்டும் திரும்பிச் சென்றான்.

நடந்த காட்சிகளை மனம் குளிர கண்டு களித்தான் பலராம்.

இறுகிய முகத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்த இந்திரஜித்தின் காலடியில் இருந்தாள் திலோத்தமா.

"ஜித்து என்னை நம்பு! என்னை நம்பு!" இதைத்தவிர வேறு விளக்கங்கள் சொல்லவில்லை திலோத்தமா.

"அப்போ வேற எதுவும் நீ சொல்ல மாட்ட?" என்றவனின் கேள்விக்கு இல்லை என்பது போல் கண்ணீருடன் தலையசைத்தாள்.

" நான் பார்த்தது கேட்டது எல்லாமே பொய்யாக இருக்கட்டும். இப்பொழுது கேட்கிறேன் உண்மையை சொல் திலோத்தமா. நம் காதலின் மீது சத்தியமிட்டு கேட்கிறேன் " என்றவனின் உறுதியான குரலே சொல்லியது அவனின் அழுத்தத்தை.

அவனின் உயிருக்கு முன், தன் மானம் எதுவும் பெரிதில்லை என்று நினைத்தவள் எதையும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

"ஓ... அப்போ எல்லாம் உண்மைதானா? அவன் என்னை விட உன்னை நன்றாக திருப்தி படுத்தினானா?" என்றான் தனலை அவள் தலையில் கொட்டியபடி.

உயிர் மரித்த பார்வை பார்த்தவள், எல்லாம் முடிந்துவிட்ட உணர்வுடன், "கடைசி வரை நீ என்னை நம்புவாய் என்று நினைத்தேன் இந்திரஜித். என் குழந்தை கலையும் போது இருந்த வலியை விட, இந்த நொடி நம் காதல் கலைந்த வலி தான் என்னை கொன்று விட்டது"

" அது யாருடைய குழந்தை? " என்றான் ஈவிரக்கம் இல்லாமல்.

எவனைக் காப்பாற்ற பாடுபட்டாளோ அவனே தன்னை நம்பாமல் போனதை எண்ணி விரக்தியாய் சிரித்தவள், காதலின் அச்சாணியான நம்பிக்கை தூள் தூளாய் சிதறிய பிறகு, நடந்ததை விவரித்து கூறினாள்.

அதிர்ந்து நின்ற இந்திரஜித் அவளிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியாமல் முழித்தான். தன் உயிரை காப்பாற்ற அவள் உயிரை வெறுத்து வாழ்ந்ததை எண்ணி குமைந்தான்.

உன்னதமான காதலுக்கு களங்கம் விளைவித்த தான் உயிரோடு இருக்கவே கூடாது என்று, அறைக்குள் சென்று, பாட்டிலில் இருந்த அனைத்து தூக்க மாத்திரைகளையும் விழுங்கினான்.

தன் மரணமே தன்னால் மரணித்த தன் காதலை மீட்டெடுக்கும் என்று எண்ணியவன், ஓய்ந்து போய் விழிகள் மூடி அமர்ந்திருந்தவள் முன் மண்டியிட்டான்.

" உன் காதலுக்கு என் உயிரை காணிக்கையாய் ஏற்றுக்கொள் திலோத்தமா!" என்றவனின் குரலில் விழித்துப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

காதிலும் மூக்கிலும் ரத்தம் ஒழுக, தன் முன்னே மயங்கி சரிந்தவனைப் பார்த்தவளின் உயிர் ஊசலாடியது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவனின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருந்தது.

மனதில் இருந்த காதல் விஸ்வரூபம் எடுத்து அவனைக் காப்பாற்ற அவளுக்கு கட்டளையிட்டது. காதலுக்காக அவனை விட்டுக் கொடுக்க முன் வந்தவள் கை நடுங்கியபடி அவனின் பெற்றோர்களுக்கு அழைப்பெடுத்தாள் .

கடைசி முறையாக அவனை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டவள், மறைந்து நின்று கவனித்தாள்.

மருத்துவக் குழுவினர் அவனுடைய குடும்பத்தாருக்கு அவன் அபாய கட்டத்தை கடந்து விட்டான் என்ற செய்தியை உரைத்ததும், மருத்துவமனையை விட்டு சாலையில், இருளில் நடந்தாள் தனியாக.

அவள் முன் வந்த பலராம் ஓநாய் பல்லைக் காட்டி இளித்தது. நடந்ததை எல்லாம் சொல்லி சிரித்தது. இனி தன்னை விட்டு அவள் எங்கும் செல்ல முடியாது என்று அவளை கட்டம் கட்டி, அவளின் புடவை நுனியை பிடித்து இழுத்தது.

பெண்மையின் பலம் அறியாத அந்த முட்டாளை துச்சமாய் ஒரு பார்வை பார்த்தவள், அவன் முகத்தில் காரி உமிழ்ந்தாள். ஆத்திரத்தில் தடுமாறியவனை, தன் புடவை முந்தியோடு சேர்த்து இழுத்து சாலையில் வீசினாள்.

அவள் வீசிய வேகத்தில், அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று இடித்ததில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தான் பலராம்.

மீண்டும் இருளில் நடந்தாள் தன் ஒளியை தொலைத்து விட்டு.

ஒரு வருடம் கழித்து...
அந்த மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஆட்டிசத்தால் பாதிப்படைந்திருந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா.

பாலை குடிக்கும் போது உடல் முழுவதும் ஒழுகவிட்ட குழந்தையை ஈரத்துணி கொண்டு சுத்தமாய் துடைத்து விட்டாள்.

இயற்கை உபாதையால் ஆடைகளை அழுக்காகிய குழந்தைகளுக்கு முகச்சுழிப்பு இல்லாமல் ஆடையை மாற்றி விட்டாள்.

அந்தக் குழந்தைகளை தோட்டத்திற்கு அழைத்து வந்து, சிறிய சிறிய பூச்செடிகளை நடுவதற்கு பயிற்சி அளித்தாள். தோட்டக்காரரின் உதவியுடன் அந்த குழந்தைகள் பூச்செடியை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி மகிழ்வதை பார்த்து ரசித்தாள்.

அனைவரும் உணவு உண்பதற்காக உள்ளே செல்ல, பூத்திருந்த அடர் சிவப்பு ரோஜா செடிகளுக்கு மத்தியில் ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளின் முன் சிகப்பு நிற ரோஜா பூங்கொத்து ஒன்று நீட்டப்பட்டது.

நிமிர்ந்து பார்த்தவளின் முன்,
"திலோத்தமா! என் முட்டாள்தனத்தை மன்னித்து விட்டு, என்னை ஏற்றுக் கொள் கண்மணி! மீண்டும் புதிதாக காதலிக்கலாம்!" என்றான் கண்களில் கண்ணீருடன், இதழ்களில் புன்னகையுடன்.

அவள் அசையாமல் நின்றதும், அவள் இதயத்தை சுட்டிக்காட்டி, "இங்கு ரத்தம் மட்டும்தான் சுத்தப்படுத்தப்படுமா? என் காதலும் சுத்தப்படுத்தப்படாதா? " என்றான் ஏக்கமாக.

அவளின் பேச்சற்ற மௌனம் அவனை ஏமாற்ற, அவளை வருத்த வேண்டாம் என்று நினைத்தவன் மெல்ல திரும்பி நடந்தான்.

" ஹலோ இவ்வளவு பேசிட்டு தனியா போனா எப்படி? " என்றாள் திலோத்தமா.

"வாட்?" என்றான் இந்திரஜித்.

" வாட் இல்ல நீ வாத்து " என்றவள் கண்ணீருடன் ஓடி வந்து அவன் மார்பில் சரண் புகுந்தாள்.

காதல் வலி நிறைந்தது தான். ஆனால் அந்த வலி தான் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று இதயமும் விரும்புகிறதே.
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
வாழ வைக்கும் காதலுக்கு ஜே!!!!!
வாழ்வில் தனிமையாக
வாழும் திலோத்தமா...
வாழ்வின் ஒளியாய் காதலுடன்
வாழ அழைக்கும் இந்திரஜித்....
விதியின் பிடியில்
விபத்தில் சிக்க
வாழ்வாதாரம் பாதிக்கப்பட....
சோகம் வாட்டினால் தாங்கலாம்
சந்தேகம் வாட்டினால்
சதி இருவரை பிரிக்க....
காதலின் வாசம்
காலம் கடந்தாலும்
கண்மனியை தேடி வரும்.....
வாத்து......வா என்று சொல்லிட்டு
வராம போற????? வரும் ......
வாழ வைக்கும் காதலுக்கு ஜே ......

வாழ்த்துகள் சகி 💐💐💐💐
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
வாழ வைக்கும் காதலுக்கு ஜே!!!!!
வாழ்வில் தனிமையாக
வாழும் திலோத்தமா...
வாழ்வின் ஒளியாய் காதலுடன்
வாழ அழைக்கும் இந்திரஜித்....
விதியின் பிடியில்
விபத்தில் சிக்க
வாழ்வாதாரம் பாதிக்கப்பட....
சோகம் வாட்டினால் தாங்கலாம்
சந்தேகம் வாட்டினால்
சதி இருவரை பிரிக்க....
காதலின் வாசம்
காலம் கடந்தாலும்
கண்மனியை தேடி வரும்.....
வாத்து......வா என்று சொல்லிட்டு
வராம போற????? வரும் ......
வாழ வைக்கும் காதலுக்கு ஜே ......

வாழ்த்துகள் சகி 💐💐💐💐
என் நட்பின் பாராட்டில் மகிழ்ந்த நான்
அன்புடன் ஆயிரம் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்🙏🙏
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
வலி நிறைந்த காதலில் தான், இனிமையும் அதிகமுண்டு போலவே 😜😜😜

அவள் மீது நம்பிக்கை இல்லாமல் போனது, அவன் மீதான தாழ்வு மனப்பாங்கினாலா 🤔🤔🤔

அவனவளை தேடி வர ஒரு வருட காத்திருப்பா 😔😔😔
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,938
காதல் கணவனுக்காக தன் துயரங்களை மட்டுமா சகித்தாள் அவனின் நலனுக்காக அவன் கொடுத்த உயிரும் மரித்ததை தாங்கிய திலோத்தமை,
கணவனின் சந்தேகத்தை பொருக்க முடியாமலும், அவனின் உயிரை காக்கவும் பிரிந்த அவளின் காதல் அவனை வாழவைத்து, உணர்ந்து சேர வைத்தது சிறப்பு 😍😍😍😍😍😍அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top