• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
514
அத்தியாயம் 41

ஒருவித பதற்றத்துடனே மணமேடையில் அமர்ந்திருந்தான் ராஜீவன். அவனது வாழ்வில் நிகழப் போகும் மிகப் பெரிய மாற்றம். தனி ஒருவனாய் இருந்தவன், இனி இருவராய் துணையுடன் இறுதி காலம் வரை பயணிக்க வேண்டும்.

திருமணம் நிகழப் போகும் பெண்ணிற்குத் தான்.. புது வாழ்வைப் பற்றியதான குழப்பங்களும், பயமும், தயக்கமும் இருக்குமா என்ன.? ஆணிற்கும் அதேபோலான உணர்வுகள் உண்டு. அதன் சதவிகிதம் மாறுபடலாம் அவ்வளவே!

அத்தோடு 'தான் ஆண்' என்ற எண்ணம்.. அந்தப் பதற்றத்தை வெளிக்காட்ட விடாது அவனிற்குள்ளேயே, அடங்கி விடுகிறது. ராஜீவனும் அதைச் செய்யத்தான் முயற்சித்தான். ஆனால் முடியத்தான் இயலவில்லை.

பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த குணாளன், மாமன் மகளின் தெளிவற்ற முகத்தைப் பார்த்துவிட்டு அருகில் வந்தான்.

"எதுக்குடா இப்படித் திருவிழால காணாம் போன பிள்ள மாதிரி திருதிருனு முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க?"

"மாமா, நிஜமாவே அப்படித்தான் ஃபீல் வருது!"

குணா மெலிதாய்ச் சிரித்து, "ஏன்டா?"

"கூட்டத்தைப் பார்த்தா மதுரை வண்டியூர் தெப்பத் திருவிழா மாதிரியே இருக்கு. இதுல மேக்கப் எல்லாம் போட்டு, என்னை மட்டும் இப்படித் தனியா உட்கார வச்சிட்டீங்க!"

அவன் சிரிப்பை அடக்க இயலாது, "என்னது மேக்கப்பா? பட்டுவேட்டி, பட்டுசட்டை தானடா போட்டுருக்க? எனக்குத் தெரியாம மேக்கப் ஆர்ட்டிஸ்ட் யாரும் வந்தாங்களா என்ன?"

"அதைத்தான் மாமா நானும் சொல்லுறேன். டிரஸ்ஸைப் பாரேன், ஒரு மாதிரி சிலுசிலுனு இருக்கு. அதுனால மூஞ்சி எல்லாம் டால் அடிக்கிது. புதுசா இருக்கு. அதோட.."

"அச்சோ, வேட்டி எதுவும் கழண்டிடுச்சா என்ன?

"ஐயோ மாமா, ஒருமாதிரி வெட்கமா இருக்குனு சொல்ல வந்தேன்!"

"நீ வெட்கப்பட்டது போதும். அந்தா வராப்பாரு, என்னோட தங்கச்சி. காலையில இருந்து செல்லத்தாயி ஆச்சி, கொஞ்சமாவது கல்யாணம் ஆகப் போறவ மாதிரி இரேனு சொல்லி சொல்லி ஓய்ஞ்சிட்டாங்க. சித்ராவுக்கு வெட்கப் படுற மாதிரி நடிக்கக்கூடத் தெரியல. வந்து உட்கார்ந்ததும், கொஞ்சம் அதைச் சொல்லிக் கொடு!" என்றுவிட்டு நகர எத்தனிக்க, "மாமா எங்க போற? சப்போர்ட்டுக்குக் கொஞ்சம் பக்கத்துலயே இரு!" என அவனைத் தன்னுடன் இருத்திக் கொண்டான் ராஜீவன்.

"கஷ்டம்டா உன்னோட! இதுக்கே இந்தப் பாடுபடுற, கல்யாணத்துக்குப் பின்னாடி எப்படிச் சமாளிப்ப.?"

"அதைச் செல்லக்கிளி பார்த்துக்குவா!" என்றவனைப் பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது குணாவால்.

ராஜ் அதைக் கண்டு சிரிக்க.. மற்றவனின் முகத்திலும் புன்னகை அரும்ப, மிதுலாவும் தீபிகாவும் மணப்பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர்.

எழிலன், தந்தை மற்றும் மாமனுடன் விருந்தினர்களை வரவேற்பதில் ஈடுபட்டிருக்க.. அங்கே சென்ற அகிலன், "கர்ணா அப்பா முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு, ஜெயந்தி அம்மாவ கூட்டிக்கிட்டு நீங்க மணமேடைக்குப் போங்க!" என்று அனுப்பிவிட்டு, பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.

சிறிது நேரத்திலேயே தாய்மாமன் முறை செய்வதற்கு அழைக்க.. காசியும், எழிலனும் வந்து சேர்ந்தனர்.

அன்பு, ராஜீவனுக்கு மச்சினன் முறை செய்திட.. காசி சித்தாராவிற்கு மாலை மட்டும் அணிவித்துவிட்டு, மற்ற அனைத்தையும் மகன் எழிலனின் மூலமாய் நடத்தினான்.

முழுமுதற் கடவுளான யானை முகனிற்கான பூஜையில் துவங்கி, தொடர்ந்து திருமண வைபவங்கள் நடந்தேறின. கெட்டிமேளம் ஒலித்ததும்.. புரோகிதர் நீட்டிய மஞ்சள் கயிறை தன்கையில் வாங்கிய ராஜ், சற்றுத் தயக்கம் கலந்த குழப்பத்துடனே அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருகில் நின்றபடி அதைக் கவனித்த ஆதி, "என்னடா, எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க.?"

"இல்ல அத்தான், இதுக்கு முன்னாடி நான் தாலி எல்லாம் கட்டினதே இல்லையா? அதான்.."

சுகேதர், "அடப்பாவி அதுக்காக, முன்னாடியே ரிகர்செலா செஞ்சு பார்க்க முடியும்.?"

அவன் முகத்தைச் சுருக்க.. அர்ஜுன், "மூணே முணு முடிச்சுத் தானடா போட போற.?"

"இல்ல.. கயிறு இம்புட்டு நீளமா இருக்கே, முடிச்சுப் போடுறப்ப சிக்கு எதுவும் விழுந்திட்டா. எனக்கு அதை எடுக்கவும் தெரியாதே.?" என்றவனைக் கண்டு அனைவருமே முறைக்க.. அன்பு, "தங்கச்சிய கட்டிக்கப் போறியேனு பொறுமையா இருக்கேன். மகனே, இன்னொரு வார்த்த பேசின.. ரெண்டு இன்ஜெக்ஷனைக் குத்தி விட்டுடுவேன்!"

ராஜ் பாவமாய், "என்ன மாமா..?"

அவன் மறுமொழி பேச வாயெடுக்க.. சித்ரா சிரிப்புடன் தமையனைக் கெஞ்சல் பார்வைப் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தி, "ஏய் கீர்பிள்ள."

அவளின் குரலில் திரும்பியவன், "என்ன செல்லக்கிளி?" என்றிட, "கயிறுல சிக்கு விழாம எப்படி முடிச்சுப் போடுறதுனு சொல்லித் தர்றேன். பக்கத்துல வா.."

அவன் கழுத்தருகே தாலியைக் கொண்டு செல்ல.. நாத்தனார் முறைக்காகப் பின்னே நின்றிருந்தவர்களில் மூத்தவளான மலர், மணமகளின் பின்னலைத் தூக்கிப் பிடித்தாள்.

பொற்தாலியை தனது மார்பிற்குக் கீழே இழுத்துப் பிடித்துக் கொண்ட சித்தாரா, "முதல்ல ஒரு முடிச்சை மட்டும் போட்டு, ரெண்டு பக்க கயிறையும் நல்லா பிரிச்சுக்கோ. முதல் முடிச்சை இறுக்காம அடுத்ததைப் போட்டு, இரண்டும் ஒட்டி ஒட்டி வர்ற மாதிரி செய். லூசா இருந்தாலும் பரவாயில்ல, பதினொரு நூல் சேர்த்து கயிறு திரிச்சதால, அவ்வளவு சீக்கிரம் கழண்டு வராது. அதுக்கு அப்புறம் அடுத்ததைப் போட்டுட்டு, மிதுலாகிட்ட கொடுத்திடு. அவ அட்ஜெஸ்ட் பண்ணிடுவா.." என ஒவ்வொன்றாய் உரைக்க, செய்து முடித்து அவளின் முகம் நோக்கினான் ராஜீவன்.

"என்ன ஓகேவா.?"

"தேங்க்ஸ் செல்லக்கிளி!" எனப் புன்னகைத்தவனைக் கண்டு அவளிற்கு மேலும் சிரிப்பு வர, அடுத்ததாய் குங்குமம் வைக்கும் படி உரைத்தனர் பெரியவர்கள்.

எந்த விரலால் வைப்பது எனக் குழம்பியவனிற்கு ஆரா சொல்லிக் கொடுக்க, வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் இட்டான். அவர்களது குடும்ப முறைப்படி சித்தாராவும், அவனிற்குச் சந்தனமும் குங்குமமும் வைத்து விட்டாள். அதற்குள் மிதுலா, அவளின் கழுத்தில் ஏறிய உறவு கயிறை சரி செய்திட.. திருமண நிகழ்வு கலகலப்புடனும் சிரிப்புடனும் தொடர்ந்தது.

தாலி கட்டும் வைபவம் முடிந்ததுமே, ஆண்கள் அனைவரும் பந்தி பரிமாறும் பணியைக் கவனிக்கச் சென்றுவிட.. பெண்கள் அடுத்தடுத்த சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

தேர்விற்கு அவசரமாய்க் கிளம்பிய மிதுலா.. மணமகளின் தமையன் என்பதால் பணிகளில் ஈடுபட்டிருந்த அன்புவை எதிர்பாராது தானாகவே வெளியேற, சரியாய் இரு சக்கர வாகனத்தில் வந்து நின்றான் குணாளன்.

"என்ன செல்லக்குட்டி, ரெடியா?"

முகம் மலர்ந்தவள், "எங்க.?"

"எக்ஸாமுக்குப் போக வேணாம்.?"

"உங்களுக்கு யார் மாமா சொன்னா.?"

அவன் சிரித்து, "அன்பு அண்ணே, நேத்து ராத்திரியே சொல்லிட்டாரு. என்னால வேலையில அங்க இங்க நகர முடியாதுடா, அதுனால மிதுவை கரெக்ட் டைமுக்கு டவுனுக்குக் கூட்டிப் போறது உன்னோட பொறுப்புனு!"

கணவனிற்குத் தொந்தரவாய் இருக்கும் என நினைத்து அவள் கிளம்ப, அவனோ அவ்வளவு பரபரப்பிலும் தன்னவளைச் சார்ந்த எந்த ஒரு விசயத்தையும் மறவாது அதற்கான ஏற்பாடை முன்பே செய்து வைத்திருந்தான்.

'லூசு மிது நீ! சொல்லாம கூடக் கிளம்பிட்ட. ஆனா மாமா பாரு, உனக்காக என்ன எல்லாம் செஞ்சிருக்காரு.?' என மனம் இடித்துரைக்க.. "ஒரு நிமிசம் மாமா, இதோ வந்திடுறேன்." என்று உட்பக்கம் சென்றாள்.

மாமன் மகளின் மனதை உணர்ந்த குணா, "அன்பு அண்ணே மாப்பிள்ள ரூமுல, தாம்பூல பை எடுத்து வச்சிட்டு இருக்காரு!" என்றிட.. திரும்பிப் பார்த்தவள் கண்களால் நன்றி உரைத்துவிட்டு, மணமகன் அறையை நோக்கி ஓடினாள்.

அகிலன், சுனித்தா, அன்பு, மலர், மதி, ஆராத்யா, வசந்தி என எழுவரும்.. வந்திருக்கும் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக மஞ்சள் பையில் தேங்காய், வாழைப் பழத்தோடு இனிப்புகளைப் போட்டு வைத்துக் கொண்டிருந்தனர்.

எவரோடும் ஒட்டாது இருந்த தமையனின் மருமகளிற்குப் பணி உரைத்து இவர்களுடன் அமர வைத்திருந்தாள் மல்லிகா. மூத்தவள் பேசிய விதத்தில்.. விருப்பம் இல்லை என்றாலும், மறுக்க வழியில்லாது வேலை செய்து கொண்டிருந்தாள் வசந்தி.

ரோஜா.. சித்தாராவிற்குத் துணையாய் அவளுடனே இருக்க, ராசாத்தியும் தன்னால் இயன்றதை உறவுகளுக்கு உதவியாய்ச் செய்தார். உண்மையில் முதல்நாள் ஊரிற்கு வந்த நொடியில் இருந்து, நிதானமாய் எவருடனும் பேசுவதற்குக் கூட நேரம் கிடைக்க வில்லை.

காசி மணமகளின் தாய்மாமன் என்பதால்.. கணவனுடன் இணைந்து மல்லிகாவுமே, ஜெயந்தி கர்ணாவிற்கு உதவியாக அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டி இருந்தது. நாத்தனாரிற்குத் தோள் கொடுப்பதாய், ராசாத்தியும் தன்னை அவர்களுடன் ஈடுபடுத்திக் கொண்டாள்.

வசந்திக்குத்தான் நடப்பது எதுவும் புரிய வில்லை. அரசநல்லூர் மனிதர்களை உணர்ந்து கொள்ளவும் முடிய வில்லை.

அறை வாயிலில் கேட்ட, "மாமா." என்ற அழைப்பில் திரும்பி, "கண்ணம்மா, எக்ஸாமுக்கு டைமாச்சே? இன்னும் கிளம்பாம என்ன செய்யிற? குணாவை நான்.." என்ற அன்புவின் பேச்சு, அவள் கன்னத்தில் பதித்த முத்தத்தில் பாதியிலேயே நின்று போனது.

அவன் வியப்பும் திகைப்பும் காதலும் கனிவுமாய்ப் பார்க்க, "தேங்க்ஸ் மாமா, கிளம்பிட்டேன். குணா மாமா வெளிய நிக்கிறாரு, எனக்காக. மதியம் வந்து பேசுறேன்!" என அவசர கதியில் விடைபெற்று ஓட.. அங்கிருந்த இருவரைத் தவிர, மற்ற அனைவரும் நடந்ததைக் கண்டு கொள்ளாது பணியைத் தொடர்ந்தனர்.

மலர் இடையில் கிள்ளியதில்.. அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த சுனித்தா சட்டென்று கத்த, வசந்தியும் இணைந்து தெளிந்தாள்.

மலர், "எதுக்கு இப்படி, என்னோட மாமாவ வெறிச்சு வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்க.?"

'இதற்கு மேல் இங்கு இருந்தால், நிலை கவலைக்கு இடமாகி விடும்!' என அன்புவின் உள்மனம் எச்சரிக்க.. "அக்கா, ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க!" என்று ஆரா மற்றும் மதியிடம் உரைத்துவிட்டு நழுவினான்.

"டேய் தடிமாடு, எங்கடா எஸ்கேப் ஆகுற?" என மலர் அவனை நிறுத்தி வைக்க முயல, "நான் உன்கிட்ட சிக்கத் தயாரா இல்ல. நீ, என்னை வச்சு செஞ்சிடுவ குட்டிப்பிசாசு!" என்று உரைத்தவாறே சென்றான்.

"ஓடியா போற? இரு உன்னை, அப்புறம் கவனிச்சிக்கிறேன்!"

"கவனிக்கத் தான? நான் போய் ஆதியை அனுப்புறேன். நல்லா கவனிப்பான் உன்னை!" எனச் சிரித்தபடியே, அவ்விடம் விட்டு மறைந்தான் அன்பு.

"போ போ! அவனை எப்படிச் சமாளிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்!" எனச் சென்றவனிற்குப் பதில் கொடுத்தவள் சுனித்தாவிடம், "என்னவாம்? மேடம் அப்படி ஷாக் ஆகுறீங்க?"

"இல்ல! மிதுவா இப்படினு? சத்தமா பேசக்கூட மாட்டாளேனு தான்."

"யாரு, அவளா? எங்களை விட, கேடி. ஃபர்ஸ்ட் பிரபோஸ் பண்ணதே, அவதான்!"

சுனித்தா நம்பாது, "பொய் சொல்லாத மலர்!"

"என்ன அகி மாமா, உங்க பொண்டாட்டி நம்ப மாட்டிறா.?"

அவன் பதிலேதும் உரைக்காது சிரித்தபடி வேலையைத் தொடர.. வசந்தி தனக்குள் உண்டான ஆர்வத்தை அடக்க இயலாது, "அப்ப, அவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜா.?"

மதி சிரித்து, "அன்பு மட்டும் இல்ல.. அகில், ராஜைத் தவிர எல்லாருமே லவ் மேரேஜ் தான்!"

"எப்படி, உங்க வீட்டுல எல்லாம் ஒத்துக்கிட்டாங்க.?"

ஆரா, "எங்க பேரண்ட்ஸூம் லவ் மேரேஜ். அதுனால தான்!"

சுனித்தா, "எல்லாருமே வா.?"

மலர், "காசி அப்பாவையும், அய்யனாரையும் தவிர!"

வசந்தி, "அய்யனாரு யாரு.?"

ஆரா, "தமிழ் அப்பாவைத் தான், அப்படிச் சொல்லுறா அவ!"

"ம்ம்.. முப்பது வருசத்துக்கு முன்னாடியே பிள்ளைகளோட விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து நடந்திருக்காங்க, பெத்தவங்க. எவ்வளவு நல்ல விசயம் இல்ல? என்னோட அம்மா அப்பா லைஃப்லையும் அதுமாதிரி நடந்திருந்தா, ஒருவேளை இப்ப ரெண்டு பேருமே உயிரோட இருந்து இருப்பாங்களோ என்னவோ.?" எனச் சுனித்தா தன்னை மறந்து.. மனதில் இருந்த வலியையும் இழப்பையும் உரைக்க, சூழ்நிலை இறுக்கமானது.

ஆரா.. பார்வையால் அகிலனிடம் செய்தி பரிமாற, மனைவியின் ஒரு கரத்தை மென்மையாய்ப் பற்றினான் அவன்.

அதில் இயல்புக்கு மீண்டவள்.. கையை விலக்கிக் கொண்டு, "எல்லாருக்கும், சடனா என்னாச்சு? அப்படியே அமைதி ஆகிட்டீங்க? நான் சும்மா எதார்த்தமா சொன்னேன்பா, நீங்க வருத்தப்படுற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்ல!" என இயல்பாய்ப் பேசுபவளைக் கண்டு, அனைவருக்குமே மனம் கனக்கத்தான் செய்தது.

"அதான? இப்ப என்ன ஆகிப்போச்சு? எவ்வளவு நாளைக்குத்தான், சுனித்தாவோட அப்பா அங்க தனியாவே இருப்பாரு? பாவமில்லயா.? இப்ப இவளோட அம்மாவும் போயிட்டாங்க. இனி பாட்டுதான், டான்ஸ்தான், லவ்ஸ்தான், ஜாலிதான்! ஜாலியோ ஜிம்கானா!" என்ற மலரின் அதிரடி வார்த்தைகளில் அனைவரது இதழ்களிலுமே சிரிப்பின் ரேகைகள்.

 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
168
கீரிப்பிள்ளைக்கி
கல்யாணத்தையே ( தாலி கட்ட) சொல்லிக் கொடுக்கும் செல்லக்கிளி....
சோ cute .......
 
Top