• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

51. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"இல்லம்மா... எனக்கு வேண்டாம்.
நீ போய் ஓய்வெடுத்துக்கோ. உன்னோட முகத்திலேயே தெரியுது.. நீ எந்தளவுக்கு தலைவலியில இருக்கேன்னு.


காஃபி தானே! நான் எப்பவேனாலும் உன் கையால வந்து குடிச்சுக்கிறேன்.
ஸ்ரீக்கு வேற அவசரம்னு சொன்னான்.. நாங்க கிளம்புறோம்டா!


இன்னொரு நாள் வந்து குடிச்சிட்டா போகுது." என்றவன்.


"வாடா..! தங்கச்சிக்கு சரியானதும் தினமும் வந்து காஃபி என்ன..? விருந்தே சாப்பிட்டுப்போம்." என்றவாறு ஸ்ரீயின் கையினை பிடித்திழுத்துக்கொண்டு செல்ல.


செல்வத்தின் இழுவைக்கு இணங்கி போனவன் பார்வையோ மைலியையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்தது.


அவனுக்கு நன்கு தெரியும்... அவளது இந்த மாற்றத்திற்கு காரணம் தலைவலியாக இருக்காது.
இதன் பின் வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்று.


வரும் போது நன்றாக இருந்தவளுக்கு, திடீரென்று என்ன ஆயிற்று? என்று தான் அவனால் ஊகிக்க முடியவில்லை.


இருந்த மீட்டிங்கினால் மைலியின் மாற்றத்திற்கான காரணத்தை என்ன ஏது என்று விசாரிக்காமல் சென்றவன் அறியவில்லை.


இனி அவளிடம் அதன் காரணம் என்ன வென அறியாமலே அவளை பிரியப்போகிறான் என்று.


ஸ்ரீயையும் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவள், அவன் வாசலை தாண்டி விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு,


தனதறைக்குள் ஓடிச்சென்று கதவடைத்தவளுக்கு சுமக்க முடியாது பாரமொன்றை சுமப்பவள் போல் கட்டிலில் சோர்ந்து அமர்ந்தவள் தான்
உடலில் எந்தவித அசைவையும் வெளிப்படுத்தாமல்,

சுவற்றையே வெறித்தவள் விழிகளோ அவள் அழாமலே ஊற்று நீரைப்போல் பொங்கிப்பெருக்கெடுத்தது.


வாழ்க்கையின் ஏமாற்றத்தை தாங்க முடியாத வலியினை தேய்க்கி வைத்தவளாய்,

அவளது அனுமதி கேளாமலே வடிந்த கண்ணீரை கூட துடைக்க திரானியற்றுப்போய் அமர்ந்திருந்தவள் மனதினில் என்ன ஓடியதோ!

தீ சுட்டதைப்போல் இருந்த கட்டில் மேலிருந்து திடுதிடுப்பென எழுந்துகொண்டவள்,


மெத்தையினை தூக்கி பிடித்த அடியில் இருந்ததை பறபறவென கிழறி இழுத்து வெளியே எடுத்து மறுபடியும் கட்டில் மேல் அமர்ந்தவள், எடுத்த அந்த காகிதத்தில் இருந்து கண்களை அசையாது அதையே வெறிக்கத் தொடங்கினாள்.


நான்கு விதத்தில் பைல் இருக்க இதில் எந்தப் பைலை ஸ்ரீ கேட்டான் என்று குழம்பியவள்,
ஸ்ரீயிடமே கேட்டு வருவோம். என நினைத்துத்தான் திரும்பினாள்.



பின் போகிற போக்கில் 'நீல நிற பைல்கள் எல்லாவற்றையும் எடுத்து செல்வோம். எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளட்டும்' இரண்டு தடவைகள் நடப்பதற்கு சோம்பல் கொண்டவளாய்,



சிதறிக்கிடந்த பைல்களுக்கு நடுவே பேன் காற்றின் வேகம் தாளாது, சிறகொடிந்த பட்டாம் பூச்சியாய் துடிதுடித்துக் கொண்டிருந்த பின்னில் மாட்டிய காகிதங்கள் இதோ கிழிந்து விடுகிறேன். என்ற வேகத்தில் சத்தம் எழுப்பியவாறு இருந்தது.



ஒரு சில காகிதங்கள் பின்னின் பிடியினையும் மீறி அந்த அறையினில் சுற்றிக்கொண்டிருப்பதை பெரிது படுத்தாத மைலி.



அத்தனை பைல்கள் மத்தியிலும் நீல நிறத்தினாலான நான்கு பைல்களையும் ஒன்றாக திரட்டி, அதை எடுத்துக்கொண்டு வாசல் வரை வந்தவள் காதினில் நண்பர்கள் இருவரது பேச்சுக் குரலும் கேட்க.


'ஹால்ல இருந்து பேசுங்கனு சொன்னா மாடிக்கே வந்திட்டிங்களா? அப்பிடி என்ன அவசரம்?' என நினைத்ததை கேட்க வந்தவள், அவர்கள் பேச்சின் போக்கு வித்தியாசமாக இருப்பது பாதி திறந்திருந்த கதவு வழி தெளிவாக காதினில் விழவே,



அவர்கள் பேச்சிற்கு காது கொடுக்கத் தொடங்கினாள்.
இது தான் விதி என்பதோ!
மைலியின் கெட்ட நேரமோ! இல்லை ஸ்ரீயின் கெட்ட நேரமோ இறைவன் தான் அறிவான்.




அவள் வந்த நேரம் செல்வம் தான் பேசிக்கொண்டிருந்தான்.


"உன்னை பொறுக்கினு சொன்ன ஒரு காரணத்துக்காக, ஒரு நாளாவது அவ அழகையும் பெண்மையையும் அழிக்கணும்ல்ல நினைச்சல்ல." என ஆரம்பத்தவன் பேச்சிலிருந்து,




"அவ வாழ்க்கையை அழிக்க பாத்தே. இப்போ அவ தானேடா உன் வாழ்க்கையை அழகாக்குற." என்றது வரை கேட்டவளுக்கு, தான் காது பட கேட்டது அனைத்தையும் சிறிதும் நம்பமுடியவில்லை.


ஏனெனின் ஸ்ரீ காட்டும் அன்பினில் அவளால் எள்ளளவு கூட சந்தேகம் கொள்ள முடியாது.



அன்பு காட்டுவது போல் பிடிக்காத ஒருவரிடம் நடிக்கும் போது, ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் பொறுமையிழந்து வெறுப்பை பிரதிபலித்தே ஆகவேண்டும்.
அதனால் தான் ஸ்ரீயின் அன்பினில் அவளால் போலி இருப்பதாக நம்பவே முடியவில்லை.


அதுவும் தன் பகையை தீர்த்துக்கொள்ள கல்யாணம் என்ற ஒன்றை ஸ்ரீ கையில் எடுத்தான் என்பதுவும்,
அதன் பின் தன் காரியமானதும் டிவோர்ஸ் என்ற பேச்சு அத்தனையையும் ஸ்ரீ எதிர்க்காக வைத்து செல்வம் பேசியதை கேட்டும் மைலியால் நம்ப முடியவில்லை.



தலையில் கனம் கூடி, கால்கள் தரையில் நிற்க முடியாமல் தள்ளாடத்தொடங்கியும் மனமோ போகாதே நில், பாதிப்பேச்சில் சென்றால் உண்மை எதுவென தெரியாமல், ஸ்ரீயினது உண்மையான அன்பை கூட நீ சந்தேகக் கண் கொண்டு தான் காலம் முழவதும் பார்க்கத்தோன்றும்.


நண்பர்கள் மத்தியில் இது ஒரு கேலிக்கையாகக்கூட இருக்கலாம்.


பலநாள் கழித்து உங்கள் இருவரையும் சந்தோஷமாக பார்த்ததில், செல்வம் அண்ணா ஸ்ரீயை சீண்டி பார்க்க நினைத்து இந்த மாதிரி பேசி. அவனை கோபப்படுத்தி பார்க்க நினைத்திருக்கலாம் இல்லையா?


படிக்கும் வயதிலிருந்து நண்பர்கள் எனும்போது இவர்கள் சீண்டல் இந்த அளவில் கூட இருக்கவில்லை என்றால் எப்படி?' என நினைத்தவளுக்கு ,


'நண்பர்களுக்கிடையே தானே கேலிச்சீண்டல்கள் இருக்க வேண்டும்?
இந்த பேச்சு ஒன்றும் கேலி பேச்சு போல் இல்லையே! கேலி பேச்சுக்களில் டிவோர்ஸ் என்று இல்லாத ஒன்று வருமா என்ன?'


'பொறுக்கி என்றதற்கு தண்டனையாக ஸ்ரீ என் பெண்மையை அழிக்க நினைத்தானா?' என நினைத்தவளுக்கு ஸ்விம்மின் பூல் அருகே,



'நானா பொறுக்கி... இந்த பொறுக்கி நாய் யாருனு காட்டுறேன்டி!
இந்த பொறுக்கி நாயோட கட்டிலை உன்னை போட்டு ஒவ்வொன்னா பொறுக்கி எடுத்து உன்னை கதறவிடல.... நான் ஸ்ரீராமன் இல்லடி!
அதுக்கப்புறம் இந்த பொறுக்கி என்ற வார்த்தை என்கிட்ட மட்டுமில்ல.... எவன்கிட்டவும் சொல்ல நீ பயப்பிடனும்."
என அவன் கூறிய வார்த்தைகளும், அவனது ரௌத்திரப்பார்வையும் இப்போது நடப்பவைபோல் மைலி கண்களுக்குள் காட்சியாய் பதிய,


'அப்போ செல்வம் அண்ணா சொன்னது எல்லாமே உண்மையா?
அப்படின்னா அவர் சொன்னது போல இத்தனையும் நாடகம் தானா?" என தன்னிடமே கேட்டவள்.



"இல்லை.. என் ஸ்ரீ அப்படி பண்ண மாட்டாரு.
முன்னாடி என் பேச்சுக்கு கோபப்பட்டது என்னமோ உண்மை தான். ஆனா இப்போ என்னை அவர் உயிரா நேசிக்கிறாரு...
என்மேல உள்ள உண்மையான காதலினால தான் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டாரு.


அதை அவரு வாயாலயே என்கிட்ட சொல்லிருக்காரு.
அவர் காதல் பொய் இல்லை. அவரோட பார்வையிலேயே உண்மை காதலை உணரமுடியுது.


செல்வம் அண்ணா தான் சும்மா உலறிட்டிருக்காரு.'
என தன்னை தானே சமாதானம் சொன்னவள் காதினில்,


"ஆமாடா ஆமா!". என ஆரம்பித்தவன் பேச்சு மைலி காதினில் ஈட்டியாய் குத்தி நின்றது.



"எனக்கு அவ முதல் முதலா என்னை பொறுக்கின்னு சொன்னதும் எப்பிடி இருந்திச்சு தெரியுமா?
என்னை பத்தி எதுவுமே தெரியாமல் அந்த மாதிரி அவ சொன்னா கோபம் வராதா?
முகத்துக்கு முன்னாடி யாருமே அதுவரை சொன்னதில்லை.


அவ சொன்னதும் கோபம் வந்திச்சு... அதுவும் என் இயல்பு தெரியாம சொன்னதும் பழி வாங்கணும் என்ற வெறி வந்திச்சு.


அதனால தான் அந்த வெறியை தீர்த்துக்கணும்ன்னு அவளை என் கட்டில் வரை கொண்டுவந்து ஆசையை தீர்த்துக்கணும்னு பாத்தேன்.
என்னால அவளை நெருங்க கூட முடியல.



அதுவுமில்லாமல் என் வீட்டிலேயே நான் அவளை நெருங்கிற நேரம் எல்லாம் என்னை ஒரு புளுவைப்போல பாத்தா..
அதனால தான் கல்யாணம், டிவோர்ஸ்னு மனசுக்கு என்ன செய்யணும்னு தோணிச்சே எல்லாத்தையும் செய்திட்டேன்." என்ற வார்த்தைகளை கேட்டவளுக்கு,




'அதற்கு மேல் எதை உறுதி செய்ய வேண்டும்?
அது தான் தன் வாயாலே வாக்கு மூலம் தந்து விட்டானே!
இதற்குமேல் இவர்களது பேச்சில் என்னென்ன சதிகள் வெளிவருமோ?' என நினைத்தவள்,


'வேண்டாம்... வேண்டாம்.... இதுவோ போதும். இதற்குமேல வேறு ஏதாவது சதியிருந்தாலும் அதை கேட்க வேண்டாம்.



அதை தாங்கும் மனத்திடமும் என்னிடம் இல்லை.' என்பதாய் காதிரண்டையும் பொத்தியவாறு ஓடிவந்து கட்டிலில் அமர்ந்தவள் கண்களோ குளம் உடைத்த நீர்போல் உதடுகள் துடிக்க, தாரை தாரையாய நீரை இறைத்தது,
கேட்டது தான் கேட்டாள்.

முழுமையாக கேட்டிருந்தால் இந்த கண்ணீருக்கு அவசியம் இருந்திருக்காதே!
பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? கண்ணால் பார்ப்பதும் பொய்!
காதால் கேட்பதுவும் பொய்!
தீர விசாரிப்பதே மெய் என்று.
என்ன தான் வாழ்க்கையில் ஜெயித்திடப் போராடினாலும்.

விதி என்று ஒன்று தான் இருப்பதை காட்டுவதற்காக கோரத்தாண்டவம் ஒன்றை அரங்கேற்றித் தானே தீரும்.
இதில் விதி விலக்கு யாருமே இல்லையே!


அப்படியிருக்கும் போது, யாரை குற்றம் கூற முடியும்?
மைலி வாழ்விலும் விதி அவள் எதிரில் நின்று கைகொட்டி சிரிப்பதை மைலியால் ஏனோ உணரமுடியாமல் போனது தான் பரிதாபம்.


'எப்படி இவன்கிட்ட ஏமாந்தேன்?
இல்லை.... நான் ஏமாறல.. அவன் காதல் உண்மையில்லையே தவிர... என் காதல் பொய்யில்லை.


அதனால் தான் அவனோட பொய்யான முகத்தை கூட என்னோட காதல் கண்ணால பார்க்குறப்போ, பொய்யாகத் தெரியல்லை." என தனக்கு தானே கூறியவள் மனம் ஏனோ ஒப்பவில்லை.
எத்தனை திடமானவள் அவள்.


அவன் நாடகத்தினை உண்மை என நம்பும் அளவிற்கு அவளை இத்தனை பலவீனமானவள் என்று அவளால் இப்போது வரை நம்ப முடியவில்லை.


அவள் பலவீனமானவாளா? இல்லை அவளது காதல் பலவீனமானதா? என்று கேட்டால் இரண்டிற்கும் இப்போது அவளிடம் நிச்சயம் விடையில்லை.


நடிப்பில் இவ்வளவு தத்துரூபமாக அன்பை காட்டலாமா என்ன?
அவன் நடித்திருக்கிறானே!



எத்தனை இன்னல்கள் வந்தபோதும், சாதாரணமாக தூக்கி எறிந்து விட்டு நடை போட்டவள், இன்று மறு அடி எடுத்து வைக்கத் திரானியற்று நடு தெரிவில் நிற்கின்றாளே!


முதல் ஊடலின் பின் அன்று அவன் கூறிய காதல் வார்த்தைகளை கூட உண்மை என்று நம்பி எவ்வளவு ஆனந்தம் கொண்டாள்.



அத்தனையுமே பொய் எனும்போது மனம் ஏனோ அன்றைய நினைவில் இன்று கசந்தது.



'எதற்கு தன் இயல்பில் இருந்து எனக்காக தன்னை மாற்றிக்கொண்டதாக இன்னும் அந்த நாடகத்தை தொடர்கிறான்.' என்பது தான் புரியவில்லை மைலிக்கு.



'இன்னும் என்மேலான வக்கிரம் அடங்கவில்லையா என்ன?
அவன் எண்ணப்படி எல்லாம் தான் முடிந்த விட்டதே!
முகமூடியை கழட்டுவதற்கான மனமிலாலையோ..!' என தனக்குள் குமுறிய
மைலிக்கு தான் ஸ்ரீயிடம் ஏமாற்றதை விட,


தகுதியற்றவனிடம் உண்மையான அன்பை வைத்து விட்டேன் என்று வலித்தது.



அவன் காதல் வேண்டுமானால் பொய்யாய் இருக்கலாம், என் காதல் எவ்வகையிலும் போலியானதல்ல. என்னை பழி வாங்குவதற்காக வேண்டுமானால் என்னை அவன் அனுபவித்திருக்கலாம்.
ஆனால் அவள் உண்மையான காதலோடும், முழ மனதோடும் தான் தன்னை அவனுக்கு கொடுத்தாள்.



இதில் அவளுக்கு வருத்தமாே, தலைகுனிவும் இல்லை.
தொட்டு தாலி கட்டியவனுக்கு அவளாகவே விரும்பித்தான் முந்தானையை விரித்தாள்.



அவளது இப்போதைய வருத்தம் என்னவென்றால்,
ஒரு வார்த்தை....! ஒருவள் வாழ்க்கையை நாசம் செய்யக்கூடிய அளவுக்கு வீரியமானதா? என்பது தான்.


சரி முன்னாடி தான் நான் அவனை தெரியாது பொறுக்கி என்றேன்.



இப்போது அவனை உருகி உருகி ஒரு நாய் குட்டியை விட மோசமாக அவனே கதி என அவன் பின்னே சுற்றுவதில் கூடவா அவன் மனம் மாறவில்லை.



பொறுக்கி என்று தெரியால் கூறிய வார்த்தைக்கு உள்ள வீரியம்,
அவள் உண்மையான அன்புக்கு இல்லாமல் போனது தான் அவள் வேதனை.



இனி அவனுடனான பொய்யான வாழ்க்கை எப்படி இருக்கும்?
உண்மை தெரிந்த அவள் மனம் தான் அவனை நெருங்குமா?


பொய்யிற்கு கூட அவனை அருகில் செல்லத்தயங்குமே!
அவன் நெருக்கத்திற்கு பின்னால், என்ன சதி வைத்திருக்கிறான் என்றே எண்ணத்தோன்றும்.

"போச்சு.... எல்லாமே போச்சு." என தலையில் அடித்துக்கொண்டு கதறியவள் கால்களை எதுவோ வருடுவது போல் தோன்ற.



முதலில் அதை கவனிக்க மனம் வராமல் தன் வாழ்க்கையின் திசை மாற்றத்தை நினைத்து கதறியவளை மீண்டும் மீண்டும் வருடியது அது.


அழுகையின் மத்தியிலும் அது என்னவென குனிந்து கால்களை பார்த்தாள்.



ஏதோ காகிதத்தை அவள் மிதித்திருக்க, அதன் முனை பாகம் அவளது கால்களுக்குள் அடங்காமல் வெளியே நீட்டியவாறு இருந்ததனால், பேனி காற்றின் வேகத்தில், அசைந்த அந்த காகிதமானது அவள் கால்களை கூசச்செய்தவாறு இருந்தது.


அந்த வேதனையிலும் ஸ்ரீயினுடைய ஆஃபீஸ் பைலில் இருந்து விழுந்த முக்கிய பேப்பராக இருக்க கூடும். என்று பயந்தவள்,
வேகமாக அந்த பேப்பரை எடுத்து,

அதில் ஒட்டியிருந்த மண்ணை தட்டினாள்.


மண் அகன்று அழுக்கும் போகாதிருக்காவே,


'என்ன முக்கியாமான காகிதமோ! அழுக்கு போகலையே' என பயந்தவளாய் அதில் இருந்ததை அப்போது தான் கவனித்தாள்.


ஆம்... அது ஸ்ரீ தேடிக்கிடைக்காத அதே பத்திரம் தான்.
அதில் இருப்பதை படித்தவளுக்கு,
பூமி பிளந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உள்ளிழுத்து கொண்டிருப்பதைப்போல் அதிர்ச்சியில் கால்கள் நிற்க தென்பின்றி தொய்ந்து போக.



கட்டிலில் தொப்பென விழுந்தவளுக்கு,
சற்று முன் டிவோர்ஸினை பற்றி செல்வமும், ஸ்ரீயும் மாறி மாறிப்பேசிய பேச்சுக்கள் அத்தனையும் அவளை மீண்டும் மீண்டும் வட்டமடித்தது.


அதை இன்னும் மைலியின் மனம் ஏற்க மறுத்தது.
ஸ்ரீயின் பார்வையிலோ,


அன்பிலோ பொய் இருப்பதாக நம்பவே முடியவில்லை.
ஆனால் நம்பும் படியாக ஒன்றல்ல... அவனே கூறிய வார்த்தைகளும், இந்த பத்திரம் என்று இரண்டு ஆதாரங்கள் அவளை நம்ப வைக்க படாத பாடு படுத்தும் போது, எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

'இனி என்னுடைய வாழ்க்கை..?
நான் எங்கு போவேன்?
நானே நிற்கதியாய் நிற்கும் போது, என்னை நம்பியிருக்கும் என் குடும்பத்தை, இந்த வேதனை கடந்து, எபாதுகாத்திட முடியுமா?



இல்லை என்றால் இந்த வாழவெட்டி கோலத்தோடு தான், என் ஊர் மண்ணை மிதிக்க முடியுமா?


இதற்காகவே காத்திருந்தால் போல என் அத்தையின் வசை பேச்சுக்களை தான் இன் நிலையில் என் குடும்பத்தால் எதிர் கொள்ள முடியுமா?
அவ்வளவு ஏன் இந்த செய்தி அறிந்தால், அம்மா உயிரோடு இருப்பாள் என்பதுவே கேள்வியாக இருக்கும் போது,
இதை எப்படி என்னால் எதிர்கொள்ள முடியும்?



பாவியர் பாதம் படும் இடம் முழுவதும் பள்ளமும் திட்டியும் என்றால் வாழ்க்கை ஓட்டத்தில் எப்படி வெற்றி காண்பது?'


அதற்கு மேலே சிந்திக்க முடியாது, அந்த காகிதத்தையே வெறித்தவள் கண்களில் ஓயாது ஓழுகிய கண்ணீர் துளி அந்த காகிதத்தையே மூழ்கடித்துவிடும் என்பது போல் பெருக்கெடுத்தது.


மூளை செயலிழந்து அப்படியே சமைந்திருக்க.


அறைக்கதவை திறந்த கொண்டு உள்ள வந்தான் ஸ்ரீ.



அவள் அதிர்ந்து போய் அந்த பேப்பரையே பார்த்தவாறு இருக்க.


அவள் பார்வையே தான் வந்தது தெரிந்தும் தன்னை கண்டு கொள்ளாது அவள் கையிலிருந்த ஒரு காகிதத்தில் கவனம் இருப்பதை கண்டான்.



"என்ன டார்லிங்க்...
பைல் எடுத்திட்டு வறேன்னு உள்ள வந்திட்டு, இங்க அப்படி என்ன ஆர்வமா பாத்திட்டிருக்கா?" என அவளருகில் வந்தவன், அந்த காகிதத்தில் இருப்பதை தானும் படித்துக்கொள்வதற்கு வசதியாய் பின்புறம் நின்றவன்,



"என்னை விட அந்த பேப்பரில சுவாரஷியமா என்ன இருக்கு?" என்றவாறு அவள் இடையை பற்றி, வயிற்றோடு அவளை இறுக்கி, கன்னத்தோடு கன்னமுரசி அந்த காகிதத்தில் அப்போது தான் பார்வையை பதித்தான்.
சட்டென அவள் இறுக்கத்தில் இருந்து தன்னை விலக்கி விட்டு அவள் முன்பு வந்து நின்றவன்,



அவளை ஒரு இழக்கார பார்வை பார்த்தவாறு, உதட்டினை சுழித்து புன்னகைத்து,


' என்ன?' என்பதாக சைகை செய்தவனை காணக் கூசியவளாய்,
கண்களில் கண்ணீரோடு,



"இது என்ன?" என தன் இயலாமை முழுவதையும் ஒன்று திரட்டி கேட்டாள்.


"ஏன் உனக்கு படிக்க தெரியாதா தாரை? நீ தான் உன் கிளாஸ்ல நம்பர் ஒன்னாமே!


அப்போ அது எல்லாம் கட்டுக்கதையா?" என கேலி பேசியவன்.



"சரி.. அது எப்பிடி வேணா இருக்கட்டும்..., உனக்கு படிக்க தெரியலனா என்ன? நானே படிக்கிறேன்...." என்றவாறு அவளது கையிலிருந்த அந்த பத்திரத்தை பிடுங்கியவன்,


அதையே சிறுதி நேரம் கண்ணிமைக்காது படிப்பது போல் பாசங்கு செய்து விட்டு.



"அட இது தான் விஷயமா?" என பத்திரத்தையே பார்த்து கேட்டவாறு.
அதாவது தாரை இதில என்ன இருக்குன்னா.


"திரு ஸ்ரீராமன் அவர்களுக்கு, திருமதி ஸ்ரீராமன் கூட சேர்ந்து வாழ்றதில இஷ்டமில்லையாம்... அதாவது எனக்கு உன்கூட சேர்ந்து வாழ்றதில இஷ்டமில்லனு பத்திரம் சொல்லல்ல.... நான் சொன்னதனால இந்த பத்திரம் சொல்லுது.



அதனால நீயும் ரொம்ப யோசிக்காம, இந்த பத்திரத்தில கையெழுத்து போட்டிட்டு போயிடு!" என்று எந்த வித தயக்கமும் இல்லாமல் கூறியவனை உடைந்த பார்வை பார்த்தவள்,


"ஏன் இந்த மாதிரி? நான் என்ன செய்தேன்?." என வார்த்தையே வராமல் தந்தியடித்த உதடுகளையும், காற்றினையும் தாண்டி தட்டு தடுமாறி கேட்டாளன.


"உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டிருக்கணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல.


உன்கூட வாழ இஷ்டமில்ல.. அவ்வளவு தான்." என்றான் எடுத்தெறிந்து.
அதில் கோபமானவள்.


"ஏன் ஏன்...? நான் கேக்க கூடாது? இது நீங்க மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லையே...! என்னோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது.
எனக்கு ஒரு அநீதி நடக்கும் போது நான் கேட்காமல் யாரு கேட்பா.!


நான் என்ன தப்பு பண்ணேன்னு டிவோர்ஸ் கேக்கிறீங்க?" என வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள்.



"என்னடி ரொம்ப துள்ளுற? இந்தமாதிரி கத்தினா.. பயந்திடுவேனா? இந்த கத்தலுக்கெல்லாம் பயப்பிட நீ வேறு யாரையாவது பாக்கணும்." என்று மைலி கத்தலில் கோபம் தலைக்கேற அவளது குரல் வளையை நெரித்தவாறு கேட்டவள், அவளை உதறி கீழே தள்ளி விட்டு,



"என்னடா.... உருகி உருகி காதலிச்சவனா உன்னை காயப்படுததுறது போல பேசுறான்னு யோசிக்கிறியா?


ஆமான்டி...! உன்ன உருகி உருகி காதலிச்சேன் தான். அது எதுவுமே நிஜம் கிடையாது.



இப்போ என்ன பாத்திட்டிருக்கியோ. அது தான் நிஜம்" என்றவன் பேச்சில் அப்பாவியாய் நிமிர்ந்து பார்த்தாள்.



"என்ன பாக்கிற? அது தான் உண்மை! பாக்குறப்பல்லாம் பொறுக்கி பொறுக்கினா.... பொறுக்கி என்ன செய்வான்னு உனக்கு காமிக்க வேணாம்....


நானும் உன்னை நெருங்கி பாத்தேன். நெருப்பா சுட்ட......
உன்னை என் கட்டில்ல விழ வைக்க எனக்கு வேற வழி தெரியல.... அதான் எனக்கு பிடிக்காத இந்த காதல், கல்யாணம் என்கிற நாடகம் எல்லாம் ஆடவேண்டியதா போச்சு.


டிவோர்ஸ் பேப்பர் என் கையில கிடைக்கிற வரைக்கும் என் நடிப்பை உன்கிட்ட காட்டாததுக்கு காரணமே! பணமே குடுக்காம உன்கிட்ட கிடைக்கிற சுகத்தை எதுக்கு இழப்பான்னு தான்.

ஆனா இத்தனை இலகுவா உன்னை ஏமாத்தலாம்னு நான் எதிரே பாக்கல....


பக்கத்தில வரும்போதெல்லாம் என்ன அருவருப்போட பாத்து முறுக்கிட்டு போன.
கடைசியா உன்னையே என்னை தேடி வர வைச்சிட்டேன்ல." என பெருமையாக பேசியவன்.



"சரி சரி...! பேசிட்டிருக்க எனக்கு நேரமில்லை.
அதுவுமில்லாமல் எப்படிடா இதை பத்தி சொல்லுறதுன்னு திணறிட்டிருந்தேன்.


நீயே அதை பாத்திட்ட....
இனி அந்த கவலையும் இல்லை. என்னாலையும் இதுக்கு மேல நல்லவன் போல கன்டினியூ பண்ணவும் முடியாது.




அது இதுன்னு ட்ராமா பண்ணி எனக்கு தொந்தரவு தராம, பத்திரத்தில கையெழுத்து போட்டுட்டு, குடும்பத்தோட கிளம்பு.



பாவம் போல முகத்தை வைச்சு சும்மா ஓவர் சீன் கிரியேட் பண்ணி என்னோட நேரத்தை வீணாக்காத" என்றவனை எதுவும் செய்ய முடியாமல் முகத்தை மூடி அழுதவாறு சுவற்றோடு ஒதுங்கி நிற்க.



"இந்திரா" என்ற ஈஸ்வரியின் திடீர் அலறலில் வாசலை திரும்பி பார்த்தாள் மைலி.
யாருடைய பிடிமானமில்லாமல் இந்திரா தரையில் சரிவதை கண்டாள்.



ஆம் முன்னைய ஸ்ரீ பேச்சில் கோபம் கொண்டு மைலி கத்திப் பேசியதில் இருவருக்குள்ளும் ஏதோ தகராரு என நினைத்து ஓடி வந்த பெரியவர்கள்,
அங்கு நடந்தவற்றை கேட்டு கொண்டிருந்தார்கள்.



இறுதியாக ஸ்ரீ பேசிய வார்த்தைகளை கேட்டு,
இந்திரா நெஞ்சினை பிடித்துக்கொண்டு தரையில் சாய்வதை கண்ட ஈஸ்வரி,


"இந்திரா" என்று பெருங்குரலெடுத்து கத்தியதனால் தான் இவர்கள் எல்லோரும் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பதே தெரியும் இருவருக்கும்.



கன்னத்தினை தட்டி இந்திரா என ஈஸ்வரி அழைக்க
கண்விழித்தார் இந்திரா.
தாயின் நிலை கண்டு அதிர்ந்து நின்ற மைலியை,

'வா!' என சைகையால் அழைத்தார்.
தயங்கியவாறு வந்தமர்ந்தவளன
கைகளை தன் கையில் பொத்திக் கொண்டவர்.


"அம்மாவ மன்னிச்சிடும்மா.. அம்மா சொன்னதனால தானே! மறு பேச்சு பேசாம கழுத்த நீட்டின.....
பொண்ணு கேட்டதும்... பெரிய இடம்...
இதுவரை என் பொண்ணு பட்ட கஷ்டமெல்லாம் தீரப்போகுது.. போற இடத்திலயாவது நீ நின்மதியா இருக்கட்டும்ன்னே நினைச்சு தான்டா அம்மா சம்மதிச்சேன்.



உன் வாழ்க்கையை நானே அழிச்சிட்டனே..!
இனி என் பொண்ணு வாழ்க்கை என்னாகுமோ!
எப்பிடி ஊர் முன்னாடி தலை நிமிந்து நடக்க போற?" என கூறிக்கொண்டு போனவர்,
மூச்சு விட சிரமப்பட்டவராய், கொஞ்சமாக உதடு சுழித்து,



"அம்மாடி.... அம்மா பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் உனக்கு பண்ண தப்புக்காக உன் தங்கையை கை விட்டுடாத... அம்... அம்மா..." என்று திணறலுக்கிடையில் இழுத்தவர், சிறிது இடைவெளி விட்டு.




"அம்மா உங்க ரெண்டு பேரையும் இப்பிடி ஒரு இக்கட்டில தவிக்க விட்டிட்டு... அப்பா போன இடத்துக்கே போக போறேன்" என நெஞ்சினை அழுத்திப்பிடித்தவரை,


அதுவரை பேச திரானியற்று கண்களால் மட்டும் நடப்பவற்றை வேதனையோடு பார்த்திருந்தவள், தாயின் இறுதி வார்த்தையை கேட்டு பயந்தவளாய்,

"அம்மா.... அந்த மாதிரி எதுவும் பேசாதம்மா! எனக்கு இந்த வாழ்க்கை இல்லன்னா கூட நான் வாழ்ந்திடுவேன்....
ஆனா நீ எனக்கும் ஜனாவுக்கும் வேணும்மா!


நீ என் கூடவே இருந்திட்டா இந்த கஷ்டம் எல்லாம் என்னை எதுவும் செய்யாது.... நீ எங்கள விட்டு மட்டும் போயிடாதம்மா" என தாயின் கைகளை அழுத்தி பிடித்து கதறியவள் கண்ணீரை மறு கையினால் துடைத்தவர் கை தெய்ந்து தரையில் விழுந்தது.
 
Top