• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
631
அத்தியாயம் 52


"சரிண்ணா.. நான் அப்படியே கால் டேக்சி பிடிச்சுப் போறேன்!" என அகிலன் ஆதியிடம் விடைபெற, "எங்கடா போற?"

"வீட்டுக்கு!"

"அங்கதான் யாரும் இல்லையே? போய், என்ன செய்யப் போற?"

"என்ன செய்யிறது? ஆஃபிஸ் கிளம்ப வேண்டியது தான்!"

"அதை எங்கக்கூட வந்தும் செய்யலாம்."

"அதுசரி, அதுக்காக வீட்டுக்குப் போகாம இருக்க முடியுமா? என்னோட திங்க்ஸ் எல்லாம் அங்கதான இருக்கு.?"

மலர், "ஆமா பெரிய திங்ஸ்? நாலு செட்டு டிரஸ்ஸும் லேப்டாப்பும் பத்தாதா அகிப்பையா? ஒரு மாசமா அதை வச்சுதான அரசநல்லூர்ல ஓட்டுன?" என்றிட, "வாய்லயே உன்னை நல்லா போட போறேன் பாரு!" என்றான் அவன்.

"உண்மையைச் சொன்னா, அடிக்க வர்ற?‌ போ!" என இதழ்களைச் சுளித்து விட்டு அவள் திரும்பிக் கொள்ள, "திங்க்ஸ் எல்லாம் அப்புறம் போய் எடுத்துக்கலாம். அம்மா அப்பாவும் இல்ல. சுனித்தாவுக்கும் புது இடம். பேசாம எங்களோடவே இருந்திடு. பேரண்ட்ஸ் இங்க வர்றப்பப் பார்த்துக்கலாம்!" என ஆதி உரைத்திட, அவனோ சிந்தனையுடன் நோக்கினான்.

அன்பு, "தனித்தனியா இருக்கிறதுக்கு, இது பெட்டர் இல்ல? மலரும் சுனித்தாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்குவாங்க."

அகி, "சரிதான்! ஆனா இந்தக் குட்டிப்பிசாசு, இவளோட சேட்டையை எல்லாம் சொல்லிக் கொடுத்து என் பொண்டாட்டியையும் கெடுத்திடுவாளே.?"

மலர் முறைத்து, "அத்தான் வாங்க, இவன் ஒண்ணும் நம்மக்கூட வர வேண்டாம்‌. உன்னோட பொண்டாட்டிய கூட்டிட்டுப் போயி, நல்ல பிள்ளையாவே வச்சிக்கோடா!" என்றுவிட்டு, ஆதியின் கையைப் பற்றிக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளிப்பக்கம் நோக்கி நடந்தாள்.

அவன் சிரித்தபடி அன்புவிடம் பார்வையால் செய்தி பரிமாறிவிட்டு மனையாளின் இழுப்பிற்குச் செல்ல.. அகிலன் சுனித்தாவிடம், "ஆதிண்ணா மலர் கூட இருக்கிறதுக்கு, உனக்கு ஓகேவா?"

தோளைக் குலுக்கியவள், "எனக்கு உங்க வீடோ, அவங்க இருக்கிற இடமோ.. எல்லாமே புதுசு தான? எதுனாலும் ஓகே!"

அன்பு, "அதான் சரினு சொல்லிட்டாளே? வாங்க போகலாம்!" என்றவன் மிதுலாவின் கைப்பிடித்துச் செல்ல, புதுமணத் தம்பதியர் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

திருமணத்திற்குப் பின் பெங்களூருக்கு அவர்களின் முதல் வருகை இதுதான் என்பதால், இரு ஜோடிகளையும் ஆலம் சுற்றி வரவேற்றார் யமுனா.

அவரை வியப்புடன் நோக்கிய அன்பு, "நீங்க எப்ப அக்கா, இங்க வந்தீங்க.?"

"ஆதி தம்பிதான் வரச் சொல்லுச்சு!" என்றிட.. அகில் குழப்பத்துடன், "யார் இவங்க.?"

"அம்மு, மலர், நான் மூணு பேரும் தனியா இருந்தப்ப, எங்கக்கூட இருந்தாங்க!"

"வினோத் சார் தான், என்னை உங்கக்கிட்ட வேலைக்கு அனுப்பினாரு. நீங்க எல்லாம் எப்ப வர்றீங்க, போறீங்க? வீட்டுக்கு யார் யார் வர்றாங்க.. எல்லா விபரமும் அவருக்கும் விஷ்வா சாருக்கும் போயிடும். ஆதி தம்பிக்கூட நீங்க வந்ததும், இனி அவர் பார்த்துப்பாருனு என்னைப் போகச் சொல்லீட்டாங்க. சரி, உள்ள வாங்க. டிஃபன் ரெடியா இருக்கு!" என்றுவிட்டு அவர் உள்ளே செல்ல.. அன்பு, "இப்ப எதுக்கு ஆதி இவங்களை வர வச்சிருக்க.?"

"மலருக்காகத் தான். தனியா இருக்கா, நானும் ஆஃபிஸ் போயிடுறேன். ஒருத்தர் துணைக்கு இருந்தா நல்லதுனு தோணிச்சு. அதோட இப்ப நீங்களும் வந்திட்டீங்க. இனி கொஞ்சம் நிம்மதியா ஆஃபிஸ் வேலைய பார்க்கலாம்!"

"நல்லா நிம்மதிய தேடின போ, இந்தக் குட்டிப்பிசாசை வச்சுக்கிட்டு. ஒரு சிலதை, ஒரு சிலரால தான் செய்ய முடியும். உன் பொண்டாட்டி, உன்னோட பேச்சைத்தான் கேட்பா."

"அது என்னமோ உண்மைதான்! இவக்கூடவே இருபத்திநாலு மணி நேரமும் சுத்தணும் போல!" எனப் பொய்யாய்ச் சலித்துக் கொண்டவனைப் பார்வையாலேயே எரித்த மலர், "போங்கடா.. ரொம்பத்தான் புலம்புறீங்க. இனிமேல் உங்க ரெண்டு பேரையும் எதுக்கும் கூப்பிட மாட்டேன். நீங்களும் ஒண்ணும் வர வேண்டாம். நானும் பேபியும், டூ. மொளகா கிளகானு எந்தத் தடிமாடாவது வரட்டும், அப்புறம் இருக்கு!" என்றுவிட்டு தனக்கான அறைக்குள் சென்றாள்.

மிது பாவமாய், "ஏன் அத்தான்? இப்ப பாருங்க, நீங்க விளையாட்டுக்குச் சொன்னதை, அக்கா சீரியஸா எடுத்துக்கிட்டுக் கோபமா போயிடுச்சு!"

"அவளை எப்படிச் சமாதானம் செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க. டைமாச்சு, சாப்பிடலாம்!" என்ற ஆதி, "யமுனா அக்கா.." எனக் குரல் கொடுத்தான்.

"என்ன தம்பி?"

"அந்த ரைட் சைடுல இருக்கிற ரூமை மட்டும் கொஞ்சம் ரெடி பண்ணீடுங்க. அகில், நீ அதுல தங்கிக்கோ. அன்பு கொஞ்சம் பார்த்துக்கோடா. அவ ஏதாவது ஒரு வேலைய செய்யிறதுக்கு உள்ள, நான் போய் என்னனு பார்க்கிறேன்!" எனத் தனதறை நோக்கி ஓடினான்.

உடை மாற்றிக் கொண்டிருந்த மலர், "ஏய் மொளகா!" என்ற குரலில் திரும்பி, "உன்னைத் தான் என்கிட்டப் பேசாதனு சொன்.."

அவள் முடிக்கவில்லை. ஆதியின் இதழ்கள் கழுத்தோரம் பதிய, கைகளோ மேடிட்ட வயிறை வருடிக் கொடுத்தது.

"நான் உன்கிட்ட பேசல, சரியா? என் பேபியோட பேச வந்தேன்!" என்றவன் கீழே குனிந்து அவளின் வயிற்றில் முத்தமிட்டு, "ஹாய் பேபி, உள்ள என்ன செய்யிறீங்க? அப்பா பேசுறது கேட்குதா உனக்கு.?" என்றிட, உள்ளே இருந்த சிசு மெல்ல அசைந்தது.

ஆடவனின் பார்வைக்கு வெளிப்பக்கம் தெரியவில்லை எனினும், உள்ளே சுமப்பவளால் உணர முடிந்தது. இது, மலருக்கு முதல் அனுபவம்.

இதற்கு முன்பு இரண்டு மாதங்களிலேயே குழந்தை அசைவது போன்று தோன்றும், ஆனால் அதன் அசைவை துல்லியமாய் உணர இயலாது அவளால். பலநாட்கள் குழப்பத்திலேயே அதைக் கடந்திருக்கிறாள்.

அன்புவிடம் கேட்டதற்கு, "நீ பேபிய பத்தியே யோசிச்சுக்கிட்டு இருக்கிறதால, உனக்கு அதுமாதிரி ஃபீல் ஆகுது. நாலு மாசம் முடிஞ்சதுக்குப் பின்னாடி தான் லைட் லைட்டா மூவ்மெண்ட் இருக்கும். அது வரைக்கும் ஹார்பீட் மட்டும் தான், நீ ஸ்கேன் பண்ணுறப்ப கேட்கலாம்!" என்று விட்டான்.

ஆனால் இன்று அதை முழுமையாக உணர முடிந்தது. மலர் தனக்குள்ளேயே குழந்தையின் அசைவை வியந்து உள்வாங்கிக் கொண்டிருக்க, ஆதி இன்னும் உரையாடிக் கொண்டிருந்தான்.

தனது தோளில் கை வைத்தவளை கேள்வியாய் நோக்கி, "என்னாச்சு.?" எனப் பதற்றத்துடன் வினவினான் ஆதி. சற்றுமுன் சினத்துடன் இருந்தவள்.. திடீரெனத் தானாய் நெருங்கி வந்தால், பயம் வரத்தானே செய்யும்.

சட்டென்று கணவனின் இதழ்களில் விரல் வைத்து அவனை அமைதியாகும் படி செய்கை செய்தவள், அடுத்த நொடியே ஆதியைத் தொடர்ந்து பேசுமாறு கட்டளையிட்டாள்.

சிசுவின் அசைவு தொடர.. நிற்க இயலாது மெல்ல நடந்து சென்று படுக்கையில் அமர்ந்து ஒரு புறமாய்க் கையை ஊன்றிக் கொண்டாள். மனையாளின் நடவடிக்கைக்கான காரணம் புரியவில்லை எனினும், அவள் உரைத்ததற்காகப் பேசியபடியே இருந்தான் ஆதி.

சில நொடிகளில் அவனது கைப்பற்றித் தனது வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டவள்.. கிசுக்கிசுப்பான குரலில், "அத்தான் ஒரு கிஸ்.."

மனையாளைக் குறும்பாய் நோக்கியவன்.. அதே குரலில், "கோபமா இருந்தீங்க மொளகா மேடம்.?"

"ச்சு.. எனக்கு இல்ல, பேபிக்கு. அப்பா பேசும் போது ரியாக்ட் பண்ணுறாங்க!" எனக் குரல் தாழ்த்தி உரைக்க.. மகிழ்ச்சியில் மனம் ஆர்ப்பரித்திட, இதழ்களை மனையாளுக்குப் பகிர்ந்தான் ஆதி.

அவனிடம் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவள், "அச்சோ அத்தான், பேபிக்குக் கொடுக்கச் சொன்னா எனக்குக் கொடுக்கிறீங்க.?"

"எனக்கு ரெண்டு பேருமே ஒண்ணுதான்டி மொளகா."

அவள் வியப்பாய் நோக்க, "இன்னும் அசையிதா.?"

அவள் 'ஆம்' என்பதாய்த் தலையசைக்க.. குழந்தைக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்தவன், மிச்சத்தை மனையாளிற்குப் பரிசளித்தான்.



வந்ததில் இருந்து கைப்பேசியுடன் காதல் மொழி பேசிக் கொண்டிருந்தான் அகிலன். இரவு உணவிற்காக மட்டும் அதைப் பத்து நிமிடம் தள்ளி வைக்க, மீண்டும் அவனது செவியோடு ஒட்டிக் கொண்டது.

கணவனின் தொடர்ந்த பேச்சுகளில் எரிச்சலடைந்த சுனித்தா.. எதிரே சென்று நின்று அவனின் தோளில் தட்ட, கேள்வியாய்ப் பார்த்தான்.

கைப்பேசியைப் போல் சைகை செய்திட.. "கால் யூ லேட்டர்!" என இணைப்பைத் துண்டித்தவன், "மொபைல் வேணுமா, உன்னோடது என்னாச்சு.?"

"காது வலிக்கலயா? எவ்வளவு நேரம் தான் பேசுவீங்க.?"

அகிலன் புரியாமல் பாரக்க.. வியர்த்திருந்த அவனது காதில் இருந்த ஈரத்தைத் தனது விரலில் தொட்டுக் கண்முன்னே காட்டினாள்.

அனிச்சையாய் அவனின் இடதுகை, இடது காதைத் தேய்க்க, "இந்த அளவுக்கா பேசுவாங்க.?"

"ஆஃபிஸ் போய் ஒரு மாசம் ஆச்சு. நாளைக்குப் போகணும். அதான் மேனேஜர்கிட்ட மீட்டிங்க்கு அரேஞ்ச் பண்ணச் சொல்லிக்கிட்டு இருந்தேன்."

"பாவம் அந்தாளு!"

அவன் குழப்பத்துடன், "ஏன்.?"

"மணி பதினொன்றரை! இந்நேரம் வரைக்கும் இப்படிப் படுத்திக்கிட்டு இருக்கீங்க? இந்தப் பக்கம் கேட்ட எனக்கே, காது வலிக்க ஆரம்பிச்டுச்சு. அந்தப்பக்கம் இருந்தவருக்கு இரத்தம் வந்திருக்கும், இல்லேனா செவிடாகி இருப்பாரு!" என்றுவிட்டு நகர, ஆடவனின் இதழ்களிலோ மெலிதான புன்னகை.

"நீ ஏன் இவ்வளவு நேரமா தூங்காம, என்னை வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்க.?"

"எங்க, தூக்கம் வந்தா தான.? ஒரு இடத்துக்குப் போய் அங்க செட் ஆகுறதுக்கு உள்ள, அடுத்த இடம்! அதைவிட.. முணுமுணுனு பேச்சுச் சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தா, எப்படித் தூங்க முடியும்.?"

"சரி ரெஸ்ட் எடு. நான் இனி பேசல.."

நொடி நின்று திரும்பிப் பார்த்தவள், "ஓஹோ.." என்றுவிட்டு மீண்டும் திரும்பிட, "இது என்ன ரியாக்ஷன்.?"

"என்ன ரியாக்ட் பண்ணுறதுனு தெரியாதனால, வந்த ரியாக்ஷன்!" என்றவளின் பதிலில் ரசனை துளிர்விட, அருகே சென்று அவளின் கையைப் பற்றினான் அகிலன்.

புரியாமல் பார்த்தவள், "என்ன.?"

"நிஜமாவே அந்த மலையன் மேல உனக்குக் கோபம் இல்லையா சுனித்தா.?"

"எதுக்குத் திடீர்னு அவரைப் பத்திக் கேட்கிறீங்க.?"

"நேத்து நீ ஆனந்திக்கிட்ட பேசினதைக் கேட்டேன். அதான்."

"கோபப்பட்டு என்னாகப் போகுது? போன என்னோட அப்பா திரும்பி வருவாரா? இல்ல எங்கம்மா பட்ட கஷ்டம் தான் இல்லனு ஆகிடுமா.?"

"இந்த அளவுக்கு யோசிப்பியா நீ.?"

அவள் முறைக்க, "என்னோட விசயத்தையும் இதேமாதிரி கன்சிடர் பண்ணலாமே!"

"கன்சிடரா எப்படி.?"

ஆழப் பார்வையுடன் நோக்கியவன், "இப்படி.?" என்றபடி, கரத்தைப் பிரித்து இடையோடு கோர்த்தான்.

ஆடவனின் செயலில் திணறியவள், "அ..கில் எ..ன்..ன?"

மனையாளின் கண்களை நேருக்கு நேர் நோக்கியவன், "ஃப்ளைட்ல வரும் போது, உன்னோட அளவுக்கு நான் உண்மையா இல்லனு சொன்ன இல்ல.? இப்ப என் மனசுல இருக்கிறதைச் சொல்லட்டுமா.?"

கணவனின் புதிதான நெருக்கத்தில் அவளிற்குப் பேச்சே வரவில்லை. இமைக்க மறந்து அவனையே பார்த்திருக்க, மற்றொரு கையால் கழுத்தைச் சுற்றி இருந்த துப்பட்டாவை பிரித்து எடுத்தான்.

"இதுதான.. நம்மளை அறிமுகம் செஞ்சு வச்சிச்சு. முதல் சண்டையில இருந்து, ரெண்டு நாளைக்கு முன்னாடி அரசநல்லூர் ரோட்டுல நடந்த பேச்சு வார்த்தை வரை.. எல்லாத்துக்கும் இதுதான காரணம்.? இதைக் கொஞ்சம் தூக்கி ஓரமா வச்சிடலாமா.? இப்பச் சொல்லு, நான் யாரு.?"

அவள் பேச்சை மறந்து மறுப்பாய்த் தலையசைக்க, அகிலனின் மூச்சுக்காற்று பாவையவளின் முகத்தில் மோதி கழுத்தின் வழியே இறங்கி, உடலெங்கும் உடைக்குள் பரவி இம்சித்தது.

எச்சில் விழுங்கியவளின் தொண்டை அசைவில் அவனின் கவனம் பதிய, பெண்ணவளின் இதயத்துடிப்புத் துல்லியமாய்ச் செவியில் கேட்டது. ஆடவனின் மூச்சுக் காற்றும் அதற்குத் துணை சேர, இருவருமே அந்த நொடி சுயம் தொலைத்தனர்.

அகிலனின் இதழ்கள் அவளது தொண்டையில் பதிய.. இமைகள் அனிச்சையாய் மூடிட, சுவாசிக்க மறந்தாள் பெண்ணவள்.

"பயமா இருக்கா சுனிமா.?"

அவளிடம் இருந்து பதில் இல்லை. அடுத்ததாய் தாடையில் பதித்துக் கன்னத்தில் முன்னேறிடிய நொடி, திடீரென்று ஒலித்த கைப்பேசி இருவரையும் இயல்புக்கு மீட்டு வந்தது.

அகிலன் மெல்ல விலகி, "ஹலோ." எனப் பேச்சைத் துவக்கிட.. எதிர்புறம், "சார், கால் பண்ணுறதா சொன்னீங்க.?"

"ஸாரி ஸாரி, கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். ரெஸ்ட் எடுங்க. மீதிய காலையில ஆஃபிஸ்ல பேசிக்கலாம்!" என இணைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்பிப் பார்க்க, விழிகளில் நீரோடு நின்றிருந்தாள் சுனித்தா.

சற்றே பதற்றமடைந்தவன், "சுனிமா, என்னாச்சு?" என அருகே செல்ல, "ஏன், இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க அகில்.?"

"நான்தான் உனக்குப் பயமா இருக்கானு கேட்டேன் இல்ல.?"

"பிடிச்சிருக்கானு கேட்டீங்களா.?"

"போன தடவை, பயமா இருக்குனு தான சொன்ன நீ.?"

அவனை முறைத்தவள், "எனக்குத்தான் இப்ப பயம் இல்லயே.?"

"அப்புறம் என்னதான்டி உனக்குப் பிரச்சனை?"

"போடா!" என்றவள் கண்களைத் துடைத்தபடி நகர, இம்முறை எவ்வித தயக்கமும் இன்றி உரிமையுடன் மனையாளை பின்புறமாய் அணைத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான் அகிலன்.

"உனக்குப் பிடிக்கல, அப்படித்தான.?"

அவள் மௌனம் காக்க, "யாரோ.. நான் அழுது ஒப்பாரி வைக்கிற ஹீரோயின் இல்லனு சொன்னதா ஞாபகம்!"

"அது வில்லனைப் பார்த்து தான, பயந்து அழமாட்டேன்னு சொன்னேன்.?"

"ஹோ.. அப்ப நான் உனக்கு வில்லன் இல்ல. ஓகே! வேற யார்க்கிட்ட இப்படிக் கண்ணுல தண்ணிய கொட்டுவீங்களாம்.?"

அவளின் இதழ்களில் மெலிதான புன்னகை மலர, "நீங்க பொய் தான சொன்னீங்க அகில்?"

"என்ன பொய்?"

"உங்களுக்குக் கல்யாணத்துலயும், பொண்ணுங்க மேலயும் இண்ட்ரெஸ்ட் இல்லனு!"

அவன் மெலிதாய்ச் சிரிக்க, "அகில்.."

"ம்ம்.."

"டூ யூ லவ் மீ.?"

ஆடவன் அவளிடம் இருந்து விலக, "உண்மையைச் சொல்லுங்க!"

"உனக்கும் என்னைப் பிடிக்கும் தான? அது என்னைக்குக் காதலா மாறுதோ, அதை நீயும் எப்ப உணர்றியோ.. அன்னைக்கு எல்லா உண்மையையும் சொல்லுறேன்!" என்று விட்டு அவன் படுக்கையில் விழ, "எல்லாம்னா? இன்னும் எவ்வளவு பொய், சொல்லி இருக்கீங்க என்கிட்ட.?"

"கணக்குப் பார்க்கலயே சுனிமா?" எனச் சிரித்தவனைக் கண்டு ஒருபுறம் சினம் துளிர்த்தாலும், ஏனோ அந்தச் 'சுனிமா'வில் மனம் கரையத்தான் செய்தது.

அத்தோடு ஆடவனின் சுவாசத்தையும் அணைப்பையும் இதழ் ஒற்றல்களையும் அந்நியமாய் விலக்காது, வெகு இயலாய் தனது உடல் ஏற்பதை வியப்பின் உச்சியில் உணரத் துவங்கினாள் சுனித்தா.

'இதெல்லாம் என்ன? எப்படி, இப்படி ஆச்சு.?' எனக் குழப்பம் மேலிட, அதற்கான விடையைச் சிந்தித்தபடியே படுத்தாள். அருகில் அகிலன் உறக்கத்திற்குள் மூழ்கியிருந்தான்.

'அதுக்குள்ள தூங்கிட்டான்.?' என எண்ணியவளின் எண்ணங்களை வேறு எங்கும் செல்ல அனுமதிக்காது, நித்திரா தேவி தன்வசம் இழுத்துக் கொண்டாள்.

இமைகளை மூடியிருந்த ஆடவன்.. ஒருநொடி திறந்து அவளைப் பார்த்துவிட்டு, புன்னகையுடன் இரவின் நீட்சியில் தொலையத் துவங்கினான்.

 
Top