• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 34

வருடம் கடந்திருந்தபோதும் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமுமில்லாமல் அதே அமைதியுடனே கழிந்தது. என்ன? அந்த அமைதியின் சிறு ஏகாந்தமாய் அவன் இருந்தான். ‘அதிதேவ் மாதவ வர்மன்.’ அவனின் குறும்பு சிரிப்பில், மழலை மொழியில், தன்னையே இழந்துக்கொண்டு இருந்தார் சம்யுக்தா! ஜெயதேவோ, சம்யுக்தையின் நிலை எப்போது சீர்ப்படும் என்று கவனிப்பதில் மூழ்கியிருந்தார்.

இவை எதர்க்கும் சௌந்தர்யா தடை சொல்லவில்லை. பிள்ளை இழந்த அவர்களின் வலி உணர்ந்தவர்களாக அமைதிக்காத்தனர். அவர்களின் சூழல் மிக மிக மெதுவாக மாற ஆரமித்தது அதிதேவின் ஒன்றை வயதில் தான். ஓடியாடி விளையாட ஆரமித்தவனின் மழலை மொழிகள் ஏராளம்.

தங்களுக்கும் இதுப்போன்று ஒரு சிசு கிட்ட வேண்டும் என்று மனதில் ஏக்கம் துளிர்விட ஆரமித்தது ஜெயதேவிற்கு. ஏன்? ஒருமுறை தவறிவிட்டால், அதன்பின் வாழ்வே அவ்வளவு தானா என்ற எண்ணம் தலைதூக்க, சம்யுக்த்தையை மாற்றும் முயற்சியில் இறங்கினார். வருடங்கள் கடந்தும் அவரின் அமைதியும் ஒதுக்கமும் ஜெயதேவை கொன்றது.

அனைத்தையும் சேனாம்மா பார்த்துக்கொண்டு இருந்தாலும், ஒருநிலைக்கு மேல் அவராலும் சம்யுக்த்தையின் மனதை மாற்ற முடியவில்லை. எப்படியோ அதட்டி உருட்டி அவரின் வாயை திறக்கவிடாமல் செய்தாயிற்று. ஏனினும், அடுத்து என்ன செய்து தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சீர்ப்படுத்துவது என்று எண்ணி எண்ணி கரைந்துப்போனார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஆதித்யா தான், அடுத்து செய்ய வேண்டியதை குறித்துக்கொண்டார். என்னதான் தாய்மை கூட விட்டுக்கொடுக்கும் மனைவியை கண்டு நெகிழ்ந்திருந்த போதிலும், இப்படியே விட்டால் தங்கை மற்றும் மச்சானின் வாழ்க்கை சரியாகாது என்பதை உணர்ந்தவராய் அந்த காரியத்தை செய்தார்.

அன்று காலை, குழந்தை அழுதுக்கொண்டு இருக்க, வேலையாளிடம் பணிந்து அவனுக்காக சத்துமாவு கஞ்சியை கரைத்துக்கொண்டு இருந்தார், சௌந்தர்யா. பிள்ளையை மடியிலிட்டு சமாதானம் செய்ய முயன்ற சம்யுக்த்தையின் பலத்தையும் மீறி அவளிடமிருந்து திமிர முயன்றுக்கொண்டு இருந்தான் குட்டி அதிதேவ். ஏற்கனவே காலையில் இருந்து வயிறு வலியாய் இருக்க, பாலை குடிக்கவும் மறுத்துவிட்டான். இப்போது பசியும் சேர்ந்துக்கொள்ள அலறல் அந்த அரண்மனையையே ரெண்டாய் பிளந்தது.

எப்போதும் போல் அன்றும் குழந்தையை தன மடியிலேயே இருத்தி அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்த தன தங்கை சம்யுக்த்தையையே ஆழ்ந்து பார்த்தபடி இறங்கி வந்துக்கொண்டு இருந்தார், ஆதித்யா. அவரின் பார்வை பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து இவர்களையே வலி மிகும் கண்களோடு பார்த்துக்கொண்டு இருந்த ஜெயதேவ் மேல் படிந்தது. பெருமூச்சை வெளியிட்டவர், என்ன நினைத்தாரோ?

ஏதோ ஒரு முடிவு எடுத்து விட்ட தீவ முகத்தோடு கீழே இறங்கி சம்யுக்த்தையின் அருகே வந்தவர், குழந்தையை அவரிடமிருந்து பறிக்காத குறையாக வாங்கினார். அதையெல்லாம் உணரும் நிலையில் சம்யுக்த்தை இல்லை போல,

“அண்ணா பாருண்ணா, இவன் எப்படி விடாம அழுறானு! பால் கூட குடிக்கலை. பாவம் குழந்தை” தாய்க்கு நிகரான பாசத்தோடு பரிதவித்த சம்யுக்த்தையை அழுத்தமாக பார்த்தவர்,

“நீ பரிதவிக்கறதாள இவன் அழுகை நின்னுடுமா? என்ன தான் உருகி உருகி பாசத்தை கொட்டினாலும் பெற்றா தான் தெரியும் குழந்தைக்கான உண்மையான தேவைகள் என்ன என்ன இருக்கும்னு...

குழந்தை விம்மி விம்மி அழுறான் எங்க போனா நீ... அவளுக்கு என்ன தெரியும்? குழந்தையா குட்டியா? நம்ம குழந்தையோடவே இருந்தா அவன் தேவை என்னனு அவளுக்கு புரியுமா என்ன? தாய் ஆகின உனக்கு தானே தெரியும்? அறிவில்லை? சீக்கிரம் வா” என்று முதலில் சம்யுக்த்தையிடம் முகத்தில் அடித்தது போல் சொன்னவர், அங்கே கஞ்சியோடு நின்றுக்கொண்டு இருந்த சௌந்தர்யாவை பிடித்து கத்தியவிட்டு குழந்தை அலற அலற அவனொடு விடு விடுவென தங்கள் அறைநோக்கி நகர, எதிர்பட்ட சேனாம்மாவை கண்டு நிமிடம் தயங்கியவர், பின் நிற்காமல் சென்றுவிட்டார்.

கணவர் பெரிய பேச்சில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றுவிட்ட சௌந்தர்யா, குழந்தையின் அலறல் கலைக்க, சம்யுக்த்தையின் அதிர்ந்த நிலை புரிந்தாலும், முதலில் அதிதேவே முக்கியாய் பட, அவர் பின்னோடு ஓடினார்.

கலங்கிய கண்களோடு நின்ற சம்யுக்த்தையை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த சேனாம்மா, “என்ன தான் இருந்தாலும், ஊர் பிள்ளை தன் பிள்ளை ஆகாது சம்யுத்தை. இதே போலவே உங்கள் வாழ்க்கையை கண்டந்து விட முடியாது. இறந்த காலத்தை மறந்துவிட்டு, இனி வரும் காலத்தை நல்லபடியாக வாழுங்கள். உங்களுக்கென ஒரு குடும்பம் நிச்சயம் வேண்டும்” அழுத்தமாக இருவரையும் பார்த்து கூறிவிட்டு தானும் விலகி செல்ல, பொத்திய வாயுடன் கதறலை அடக்கியபடி ஓடிய சம்யுக்த்தையின் பின்னோடு சென்றார் ஜெயதேவ்.

******************

நான்கு வயதை எட்ட போகும் அதிதேவ் தன அத்தையின் பெரிய வயிற்றை சுற்றி சுற்றி பார்த்தவன் அதில் முகத்தை வைத்து தேய்க்க, சிரிப்போடு அவனை பார்த்துக்கொண்டு இருந்தனர் பெரியவர்கள். ஆறு மாத கைக்குழந்தையுடன் அமர்ந்து அவனை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த சௌந்தர்யாவிடம் ஓடி வந்தவன்,

“ம்மா...அப்போ இந்த பேபி மாதிரியே அத்த வயித்து இருந்து இன்னொரு பேபி வருமா?” என்று கேட்க,

“ஆமாடா பட்டு, இதைவிட அழகா சூப்பரா ஒரு பேபி வரும்” தான் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக சுற்றி சுற்றி வெறுத்து போயிருந்த அதிதேவிற்கு தம்பி பிறந்ததே பெரிய சந்தோசமாக இருக்க, தனக்கு பிடித்த செல்ல அத்தையின் குழந்தையும் வர போவது அவனுக்கு விண்ணில் பறப்பது போல் இருந்தது.

“ஐய்......ஜாலி...அப்போ தம்பியும் வளந்துடுவான், நானும் தம்பியும் சேத்து பேபிய நல்லா பாத்துப்பம்” என்று மழலையில் குதித்தபடி ஓடிக்கொண்டு இருந்தான்.

இவனின் இந்த எதிர்ப்பார்ப்பும், ஆசைகளும், ஆர்ப்பரிப்பும், சந்தோசமும் நிலைக்க போவதில்லை என்பதை உணராமல்.

*******************

பாலில் லேசாய் கலந்த ரோஜாவின் நிறம் எப்படி இருக்கும்? வெண்மையா இளம்சிவப்பா என்று பிரித்து பார்க்க முடியாது. அப்படி தான் இருந்தாள் குட்டி மாயா. பிறந்து பத்தே நாட்கள் ஆன பிஞ்சுடல். தாய் பால் வாசத்தோடு எந்நேரமும் தூங்கிக்கொண்டு இருந்தது. தாயின் ஸ்பரிசம் சிறிது சிறிதாக பழகிக்கொண்டு இருந்தது. பிறர் ஸ்பரிசம் இன்னும் சரியாய் தெரியவில்லை ஒருவனினதை தவிர.

அது, மாதவனின் ஸ்பரிசம்.

சில நேரம் பசியால் விழித்த, விழிப்பும் துயிலும் கலந்திருக்கும் நேரம், மாதவன் வந்தால், அவள் தாயின் ‘மாதவா’ என்ற அழைப்பில் தன் கோலிகுண்டு விழிகளை திறந்து திறந்து பார்ப்பாள். அவளின் வழி அசைவை பார்ப்பதில் மாதவனுக்கு அல்லாதிய இன்பம்.

“அத்தமா...பாரு...பேபி என்னை பார்த்து சிரிக்குறா...” சந்தோசமாய் கத்தியபடி அவன் தன அத்தையின் தாவ,

“டேய்...டேய்...மெதுவா பேசு..” என்று சேனாம்மா சொல்லிக்கொண்டு இருந்தார். பிறந்த குழந்தை இவனின் கத்தலில் பயந்துவிட கூடாதே?

தங்கள் அறையில் அன்னை தம்பியை தூங்க வைப்பதில் இவனை வேலையாளுடன் அனுப்பி வைத்திருக்க, அங்கிருந்து தப்பி இங்கு வந்திருந்தான். நாளை தொட்டிலிடும் விழா, என்ற அளவில் இன்று மாளிகையே கோலாகலமாக இருந்தது. தோரணுமும் அலங்காரமும், உணவும் உறவும் என கலைகட்டியது.

ஒருவர் மாற்றி ஒருவர் முதலில் சம்யுக்த்தையின் குழந்தையையும் பின் சென்று, சௌந்தர்யாவின் இளையமகன் கிருஷ்ணாதேவ வர்மனையும் சென்று பார்த்து வர, இரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டு இப்போது தான் அவரவர் அறையில் தஞ்சமடைந்திருந்தனர்.

அன்று ஆதித்ய வர்மனின் பேச்சுக்கு அடுத்து உடனடியாக மனம் மாறவில்லை என்றாலும், சிறிது சிறிதாக சேனாம்மாவின் பேச்சின் மூலம் மனம் கரைந்து இன்று தங்களுக்கென ஒரு வாரிசுடன் சந்தோஷித்து இருக்கின்றனர் ஜெயதேவ் மற்றும் சம்யுக்த்தை.

நாளை தொட்டிலிடும் விழா.

கையில் பிஞ்சு குழந்தை.
வீடு முழுவதும் குதுகலம்.

எனினும் சம்யுக்த்தையின் முகத்தில் ஒரு தெளிவில்லை. ஒரு வித சோகமும், ஏக்கமும் விரவியிருந்த முகத்தை சாதாரணமாக கண்டால் எவருக்கும் ஒன்றும் தெரியாது. தாய்மையின் சோபை என்றே நினைப்பார். ஆனால், விவரமரிந்த சேனாம்மாவிற்கு உண்மை காரணம் தெரியாமல் இருக்குமா?

சிறிது நேரத்திலேயே குழந்தையின் கையை பிடித்தபடி மாதவனும் உறங்கிவிட, பணிப்பெண்ணை வெளியே அனுப்பிய சேனாம்மா, கதைவை உள்புறமாக தாழிட்டுவிட்டு சம்யுக்த்தையின் அருகே வந்தார்.

இன்னும் எவ்வளவு நாள் அதையே நினைச்சுட்டு உன் வாழ்க்கையை நரகமாக்கிக்க போற சம்யுக்த்தை.? நான் சொல்லுறதை கேளு, எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்து ஆக வேண்டியதை பாரு... இன்னும் உனக்கு குழந்தைகள் பிறக்கும்...அதுங்க வளரும் அவங்களோட எதிர்க்காலம் இதிலெல்லாம் உன் கவனத்தை திருப்பு. பிரிந்த உயிர் திரும்ப வர போறதில்லை...”

“பறிச்சதே நான் தானே அத்தை?” கலங்கிய கண்களுடன் கேட்டவளை என்ன செய்ய என்று தெரியவில்லை...

“இப்படியே முட்டாள் தனமா பேசிட்டு இருக்காத சம்யுக்த்தை... நீ அவனுக்கு கொடுக்க தானே நிறைவயிரா மலை ஏறின அதை அவனே எடுத்துக்குட்டானு நினைச்சிக்கோ...”

“ஆமா....நான் கொடுக்க தான் போனேன். ஆனா...ஆனா... பறிச்ச அப்புறம் தானே இந்த தாய்மன தவிப்பு முழுசா புரியுது...அதுவும்...நடந்ததுக்கும் நினைத்ததற்கும் சமந்தமில்லாம... என் மூத்த பையன...இந்த வீட்டு முதல் வாரிசை...இந்த வம்சத்தின் புது தளிரை...இந்த ராஜியத்தின் அடுத்த கிளையை அல்லவா முழசா எரிச்சி சாம்பல் ஆக்கிட்டேன்? இனி...இனி...இந்த உணர்வு என்னை முழுசா வாழ விடாதே அத்த...” என்று வருடங்கள் கடந்த பின்பும் அடக்கி வைத்திருக்கும் எண்ணங்கள் மொத்தமும் வெளியில் வெடித்து சிதற, அதன் துளிகளோ படகூடாதவர்கள் மேல் பட்டு அமிலமாய் தகித்தது.

ஆம், பேசிக்கொண்டே தங்கள் வேதனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தவர்கள், வெளியறை கதவு திறக்கபட்டதையோ, குழந்தையை காண உள்ளே வந்த ஜெயதேவின் குருதி வெளுத்த முகத்தையோ பார்க்க தவறினர்.

யாருக்கு முக்கியமாய் தெரிய கூடாது என்று நினைத்து, பயந்து பயந்து மறைத்தனரோ அவருக்கு முழு உண்மையும் தெரிந்துவிட, ரௌத்திரமாய் நின்றவரை கண்டவர்கள் முகத்தில் பயம், பயம், பயம் மட்டுமே.

முதலில் தெளிந்த சேனாம்மா, “வா...வாடா...உள்ளே..உள்ளே வா, சம்யுக்த்தை அவன் குழந்தையை பார்க்க வந்துருக்கான் பாரு...கொடு அவனிடம்” நிலைமையை சமாளிக்க முயன்றவராய் சம்யுக்த்தையையும் நிகழ்காலத்திற்கு இட்டு வர, ஒரு அதட்டல் போடா,

“என்னங்...” என்று ஆரமித்தவரை கையுயர்த்தி தடுத்த ஜெயதேவ், “இ...இந்த...இந்த பூமிக்காக...உன்..என்...என்னோட குழந்தையையே அழிச்சிட்டிங்களே...இந்த மூட நம்பிக்கைகளை விட்டோழிங்க விட்டோழிங்கனு தலைபாடா அடிச்சிக்கிட்டனே கேட்டிங்களா?” என்று கத்தியவர், விடுவிடுவென குழந்தையின் அருகே சென்று அவளை தூக்கியவர், திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டார்.

தனதறைக்கு தான் எடுத்து செல்கிறார் என பெண்கள் இருவரும் அமைதியாக இருக்க, அவரும் நேராக அவர்கள் அறைக்கு தான் சென்றார். பின் தான் பணிப்பெண் ஒருவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள கூறியவர், மடமடவென அந்த ஊரை விட்டு கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரமித்தார், தனியாக!!!.

மழை தூறும்...!!!
 
Top