- Joined
- Jul 23, 2021
- Messages
- 104
தூறல் 38
மானா, மினியா, ஜுவாலினி, ஜித்தன், என்று நால்வருக்கும் முதல் தளத்திலேயே பக்கம் பக்கம் அறைகள் முதலிலேயே கொடுக்க பட அவரவர் தங்கள் அறைக்குள் சென்று மறைந்தனர். ஜேகப் எங்கே என்று யாரும் கவனம் கொள்ளவில்லை. அவனுக்கும் பக்கத்திலேயே ஏதாவது ஒரு அறையை ஒதுக்கியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டனர்.
நால்வரும் தயாராகி வெளியே வந்துவிட, அவர்களுக்காகவே காத்திருந்த வேலையாள் அவர்களை கீழே அழைத்து செல்ல, படிகள் பக்கம் விரைய, அதே சமயம் மேலிருந்து ஜேகப் இறங்கி வந்துக்கொண்டு இருந்தான், பிருந்தனுடன்.
அதிதேவை பற்றி முன்னமே மதுரினி கூறியதால் அறிந்து இருந்தவர்களுக்கு, மது மற்றும் ஜேகப்பிற்கு அங்கே கிடைக்கும் வரவேற்ப்புகளும் நடத்தையும் வித்தியாசமாகவேபட்டது. அதுவும் அதிதேவ் மற்றும் மதுரினியை ஒன்றாக நிற்க வைத்து குடும்பம் போல் ஆர்த்தி எடுக்க மண்டையை பிய்த்து கொள்ளாத குறைதான்.
இப்போது ஜேகப் மேலிருந்து உரிமையுடன் பிருந்தனுடன் பேசியபடி வர அவர்களை பே’வென பார்த்தனர் நால்வரும். இருந்தாலும், வேலையாட்கள் மற்றும் அந்த ஊரின் ஆளான பிருந்தன் (அவன் யார் என்று இன்னும் சரியாக தெரியாத நிலையில்) தனிமை என்பது இல்லாததால் அனைவரும் அமைதியாக உணவு கூடம் நோக்கி விரைந்தனர்.
அவர்களின் பார்வை உணர்ந்தாலும் ‘ம்ம்....சமாளிப்போம்...’ என்ற தோரணையுடன் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ஜேகப் அவர்களுடன் இணைந்துக்கொள்ள, உணவு கூடத்தில் இன்னும் யாரும் வந்திருக்கவில்லை.
சௌந்தர்யா அனைத்து பதார்த்தங்களையும் உணவு மேஜையில் அடுக்க வேலையாட்களை வைத்து பணித்துக்கொண்டு இருக்க, மயூரிக்கா அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துகொண்டு இருந்தாள்.
இவர்களை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றார், சௌந்தர்யா. “வாங்க... வாங்க... உட்காருங்க...மீதி பேர் இப்போ வந்துடுவாங்க” என்று கூறியவர், முதலில் நுழைந்த ஜெகப்பை நெருங்கி வாஞ்சையுடன் தலையை தடவிக்கொடுத்தார்.
சில நிமிடங்களிலேயே சேனாம்மா மற்றும் அத்தித்ய வர்மன் வந்துவிட, அவர்களை தொடர்ந்து அதிதேவ் மாதவ வர்மனும்...! எப்போதும் போல் மதுரினி லேட்.!!! சற்றே தன்னிலை மறந்த நிலையில் இருந்தவள், கிளம்பி வர நேரமாகிவிட்டது.
ஆனால், பதற்றம் என்பது சிறிதுமின்றி பொறுமையாக வந்தவள், அன்று போல் இன்றும் மேஜையின் மையத்தில் முக்கிய இருக்கையில் அமர்ந்திருந்த சேனாம்மாவின் நேர் எதிரே அடுத்த மூலையில் இருக்கும் முக்கிய இருக்கையில் சென்று அழுத்தமாக, அமைதியாக, அவருக்கு நிகரான ஆளுமையுடன் பொய் அமர்ந்தாள்.
பழைய நினைவுகளுடன் உழன்றுகொண்டு இருந்தவளுக்கு, உண்மை நிலை புரிய அனைத்தையும் எதிர்க்கொள்ள தன்னையே மனதளவில் தயார் செய்துக்கொண்டாள். இயல்பிலேயே அனுசரிப்பு, அன்பு, அழகு, ஆளுமை, கம்பீரம், அழுத்தம், வீரம், மனோதிடம், எதையும் எதிர்க்கொள்ளும் திறமை என அந்த அஹிலாவதியின் வம்சம் என நிறுபித்துக்கொண்டு இருப்பவளுக்கு விரைவிலேயே அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொடுக்கும் மனப்பான்மையை சிறிது மனதில் ஏற்றவளின் பரிமாணமே அந்த பான்மை.
தன் கோவத்தை தீர்த்துக்கொள்ள, அவளின் அந்த தவறை சுட்டிக்காட்டி அவளை அதட்ட தயாரான சேனாம்மா கூட, அவளின் அந்த நடத்தையில் அவளின் மனதை இடை போட்டபடி அமைதியாகிவிட்டார்.
மானா எப்போதும் போல் துடுக்குதனம் தலை தூக்க மினியாவிடம் ‘என்னடி நடக்குது இங்கே’ என்று துணிந்து முணுமுணுக்க அவளை திரும்பி முறைத்த மினியா அமைதியாக இருக்கும்படி செய்கை செய்ய, அதை கவனித்த ஆதித்தியா “என்ன விஷயம்” என்று ஒன்றும் அறியாதவர் போல் ஆரம்பித்து வைத்தார்.
“ஹிஹி இல்லை...யாரு என்னனு...” என்று மானா மென்று முழுங்க, ஒரு முடிவிற்கு வந்த மாயாதேவியோ, கையில் வைத்திருந்த முள்கரண்டியை கீழே வைத்தவள், அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, பின் தன் பேச்சை தொடங்கினாள்.
“வெல்.... நான் ஆரம்பிச்சி வைக்கலாம்னு நினைக்கிறேன். முழுசா இல்லை என்றாலும் இவர்களை பற்றி எனக்கு தெரியும், கொஞ்சம்” என்று அழுத்தி கூறியவள், ஒவ்வொருவராக அனைவரையும் அறிமுக படுத்தியபடி வந்தாள்.
எஸ்கபேட்டின் உரிமையாளர்களா என்று வாயை பிளந்தவர்கள் திருதிருவென முழிக்க ஆரம்பிக்க, இறுதியாக அவள் கூறிய வரிகள் அவர்களுக்கு மூச்சடைப்பையே கொடுத்தது.
“ம்ம்..இறுதியாக... இது அதிதேவ் மாதவ வர்மன், நான் மதுரினி மாயாதேவி இவரின் மனைவி! மற்றும் இது..” என்று அப்போது தான் சம்யுக்த்தை இடுப்பில் ஓயாரமாக அமர்ந்து கதை பேசியபடி வந்த குழந்தையை காண்பித்து “அஸ்வந் தேவ வர்மன், எங்கள் குழந்தை.” என்று முடித்து வைக்க, புதியவர்கள் நால்வருக்கும் எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரிய கூட இல்லை.
ஏதோ படத்தில் எல்லாம் காண்பிப்பது போல் சட்டென மாறிய சூழ்நிலையில் அவ்வளவு பேர் மத்தியில், அதுவும் தங்கள் முதலாளியுடன் அவர்களுக்கு நிகராக சரி சமமாக அமர வைக்க பட்டிருக்கும் இந்த நேரத்தில் என்னவென்று எதிர் பேச்சோ/கேள்வியோ எழுப்புவது என்று கூட தெரியவில்லை.
இப்போது சிறிது சிறிதாக யோசிக்கும்போது எல்லாம் புரிந்தது அவர்களுக்கு!
முதலாளியின் நெருங்கிய சொந்தம் என்று கூறி வந்த அதிதேவ், முதலாளியாக வந்த கிருஷ்ணா தேவ்!, சம்மந்தமில்லாமல், அவர்களுக்கு கிடைத்த இந்த பெரிய ப்ராஜெக்ட், அளவுக்கு அதிகமாக மதுரினியின் மேல் விழுந்த அக்கறைகள்! அஸ்வந்தை அலுவல் வேலையில் கூட, கூட அழைத்து வந்தது, அவனுடனான அதிதேவின் அதிகபட்ச நெருக்கம், எல்லாவரிற்க்கும் பதில்களாக அந்த குடும்பம் கண் முன்னே!
அதிதேவாவது பரவாயில்லை ஆனால் மதுரினி? இவ்வளவு காலம் ஒன்றாக இருந்தும் எப்படி சாதாரண ஆள் போல் கூடவே இருந்தாள்? இங்கு வரும்போது கூட வாயை திறக்கவில்லையே. இப்போது எதற்கு எங்களை இங்கே அழைத்து வந்து இருக்கின்றனர்?
அப்படி என்றால், இந்த வேலை – புது ப்ராஜெக்ட் எல்லாம் உண்மையா அல்லது வெறும் கண் துடைப்பா? எதற்கு இந்த மறைத்தல்? என்று மாறி மாறி எண்ணியபடி உணவை கூட உண்ணாமல் அமர்ந்திருக்க, அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல், தனியாக இப்படி எல்லாம் வந்து மாட்டிக்கொள்ளாமல் குழுவாக வந்ததே!
அவர்களின் மனநிலையை உணர்ந்த அதிதேவ் மாதவ வர்மன், “ஒன்றும் குழப்பிக்கொள்ள வேண்டாம், அமைதியாக சாப்பிடுங்க! உணவுக்கு பின் நன்றாக ரெஸ்ட் எடுங்க! மத்திய நேர உணவு அறைக்கே வந்துடும். மாலை நான்கு மணிக்கு குழு பேச்சு வைத்துக்கலாம்!” என்று கூறியவன், மீண்டும் உணவில் கவனத்தை செலுத்த, அந்த குரலுக்கு எதிர் பேச்சு பேச முடியாமல், அவர்கள் முன் அமர்ந்திருப்பதே ஒருவித அசௌகர்யத்தை கொடுக்க, அமைதியாய் உண்டு எழுந்தனர்.
மீண்டும் வேலையாள், அவர்களை அவரவர் அறையில் கொண்டு சென்று விட, சொன்னது போலவே மத்திய உணவு அறைக்கே வந்தது.
யாரையும் எதிர்க்கொள்ள முடியாமல், யாரிடமும் அப்போது பேசும் மனநிலை இல்லாததால், தானும் உண்டு எழுந்தாள். அஸ்வந்தை குளிக்க வைத்து உடை மாற்றி உணவும் ஊட்டி முடித்திருந்தார் சம்யுக்த்தை. ரத்த தொடர்பின் மாயமோ என்னவோ?
அனைவரிடமும் அஸ்வந் மிகவுமே நெருக்கமாகி விட்டது போல் தோன்றியது மாயாதேவிக்கு. அவளை இதுவரையிலும் தேடவில்லை அவன்! அதுவும் நல்லதிற்கு தான் என்று தோன்றியது. அவளும் அவர்களை பிரிக்க நினைக்கவில்லை அவள்.
ஏனினும் அவனிடம் நெருங்க, துடிக்கும் மனதோடு அவளோடு பேச துடித்த சம்யுக்த்தை, அவளின் ஒதுக்க பார்வையில் அமைதியாகிவிட, குழந்தையிடம் குனிந்த மாயாதேவி, “பாப்பு, நீ இவங்களோட இருக்கியா? அம்மா கொஞ்ச நேரம் ரூம்ல இருக்கேன்?” என்று கேட்க, அதுவும் சமத்தாக தலையாட்டியது.
அறைக்கு வர அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி.
அந்த ஜன்னலில் அமர்ந்திருப்பது???
அது ஹெட்விக்கே!!!
கண்களில் நீர் கோர்த்துவிட்டது அவளுக்கு... அவனின் சிறு வயது முதலான தோழன்! கிட்டதட்ட நன்கு வருடங்கள் ஒன்றாகவே நகமும் சதையுமாக இருந்தவர்கள்! அவனை அவள் தான் வளர்த்தாள், இல்லை அவனோடு சேர்ந்து அவளும் வளர்ந்தாள்! இரண்டும் சரியே!
“ஹெட்விக்...” மெதுவாக உதிர்ந்த வார்த்தைகளில் தான் எத்தனை கணம்? தோழமையின் உணர்வு முழுதும் மனதில் படர, அதனை நெருங்கினாள்.
வெள்ளை கழுகு ஆயிற்றே? இப்போது எட்டு வயது இருக்கும்! முழு வளர்ச்சி அடைந்திருந்தது. முன்பை விட இப்போது பார்பவர்களை அச்சமடைய செய்யும் அழகுடன்! ஆம்! அழகு தான்!
முழு வெள்ளை நிறம் உடலில் போர்த்தி இருக்க, ஆங்காங்கே பழுப்பு நிறம் கலந்திருந்தது! அளகு மட்டும் வெளீர் மஞ்சள் நிறத்தில். இறகை விரித்தால், ஒரு ஆளையே உள்ளே பதுக்கிகொள்ளும்மோ என்று எண்ண வைப்பது போல் இருந்தது.
பொதுவாக கழுகுகள் யாரின் மேலும் நம்பிக்கை வைத்துவிடாது. மற்ற விலகுகள் மற்றும் பறவைகளிடம் காணும் வளர்பவர்களிடம் காட்டும் விசுவாச செயல்கள் எதுவும் கழுகிடம் காண படாது. ஆனால், ஒருமுறை நம்பிக்கையை பெற்றுவிட்டால், காலத்திற்கும் அழியாது.
“ஹெட்விக்...” மீண்டும் அழைக்க முகத்தை திருப்பாமல் அப்படியே அமர்ந்திருந்தது.
அவனின் கோவம் புரிந்து அருகே சென்று அதன் கழுத்து பகுதியை தடவிக்கொடுக்க சிலிர்த்துக்கொண்டு நகர்ந்தது.
“டேய்...ரொம்ப பண்ணாதேடா” என்று அதனுடன் பேசியபடி ஹெட்விகை கட்டிக்கொள்ள, அதுவும் நகர்ந்து அவளோடு ஒன்றியது! கசியும் கண்ணீரை அடக்கியபடி அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ? கதவு படீரென திறக்கப்பட, சட்டென விலகி யாரென்று பார்க்க, அங்கே மாதவன் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனை கண்டதும் உள்ளேயே பறந்து சென்ற ஹெட்விக் கம்பீரமாக அவன் தோள்களில் ஏறி அமர, ஹெட்விக்கை யார் இவ்வளவு நாட்கள் பார்த்திருப்பார்கள் என்று அவளுக்கு புரிந்தது.
உயர்தர கைதேறி கால்சட்டை மற்றும் ரோப் அரௌன்ட் சட்டை அணிந்து பாதி மார்புவரை வெளியே தெரிய நின்றவின் மேல் கழுகு.! கட்டுடல் கொண்டவனின் தோள்மேல் ஓயாரமாக அமர்ந்திருக்கும் ஹெட்விக் பார்ப்பதற்கே அவ்வளவு ‘ராவிஷிங் பியுட்டி’ என்பார்களே அது போல் ஒரு கவர்ச்சிகரமான தோற்றமாக இருந்தது. அவர்களையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள், மாயாதேவி!
ஹெட்விகை கீழே இறக்கிவிட்ட மாதவன், தன் தொண்டையை செருமியபடி அவளருகே வந்து, “கொஞ்சம் பேசலாமா?” என்று அனுமதி கோரி நின்றான்.
அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தது, அவர்களின் அறையில் தான். ஆம், அவளும் அவனும் கூடி இருந்த அறை தான்! அவள் அவளுக்கான அறைக்கு செல்லாமல் இங்கே தான் நேராக வந்தாள்! தெரிந்து செய்தாளா தெரியாமல் செய்தாளா என்று அவளே அறியாள். அன்றைய நாட்களின் நினைவுகள் அவர்களை துரத்தினாலும் அதனை விரட்டிவிட்டு அமர்ந்தனர் இருவரும்!
“கொஞ்சம் எனக்கு உன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும்! இனி...இனி இதுபோல் ஒரு சமயம் கிடைக்குமா என்று தெரியாது...சோ...லெட் மீ...!?
நீ போன பின்பு நிறைய...நிறைய மாற்றம், இங்கே! தவறிக்க முடியாத இழப்புகள்! குழப்பம், வெறுமை... யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாத ஒருநிலை தான்.
அத்தையம்மா உனக்கு இங்கிருந்து தப்பிக்க உதவியது கூட இங்கே எல்லாருக்கும் தெரியும்...இருந்தாலும் யாருக்கும் தடுக்க தோன்றவில்லை. என்னவென்று சொல்ல?
இது உணர்வுபூர்வமாக – உணர்ச்சிகரமாக நடக்க வேண்டிய விஷயம். உண்மை தான் இதெல்லாம் வெளி ஆட்கள் கேட்டால் முட்டாள்தனமாக பைத்தியகாரதனமாக தான் நினைப்பார்கள். ஆனா, கண்முன் நடக்கும் உண்மைகள் நமக்கு தெரியுமில்லையா?
உங்க அப்பா இங்கிருந்து உன்னை தூக்கி செல்லும்போதே, எனக்கு பயங்கர வெறுப்பு தான். உன் அப்பாவின் மீது இருக்கும் வெறுப்பு அப்படியே உன்மீதும் திரும்பியது! ஏனா வளர்ந்த பிறகாவது உனக்கு எங்களை பற்றி எல்லாம் தெரிய வந்திருக்கும் இல்லையா? அப்படியும் நீ.. நீ இங்கே..ம்ம்..தேடி வரவில்லை என்று ஒரு வெறுப்பு.
பள்ளிவரை தான் நானும் இங்கே இருந்தேன்! அதன்பின் இங்கு நடக்கும் விஷயங்களை கையாள தெரியாமல், தடுமாறினேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆம், உண்மை தான். எனக்கும் எந்த ரகசியங்களும் பகிரப்படவில்லை. ஆனா ஒவ்வொரு சுபநிகழ்ச்சியின் போதும் நடக்கும் உயிரழப்புகளை பற்றி கேள்வி படும்போது என்ன இது முட்டாள் தனம். இதன்பின் ஏதோ இருக்கிறது. யாரோ செய்யும் சூழ்ச்சி அல்லது இயல்பாக நடக்கும் இழப்புகளுக்கு நாங்களே முடிச்சி போட்டு கொள்கிறோமோ என்று தான் தோன்றியது.
ஆனால், எங்களையே நம்பி இன்னுமும் இருக்கும் மக்களை தவிர்க்க தோன்றவில்லை. அதற்காக என்றாலும், சேனாம்மா மற்றும் அத்தமாவிற்கு உன்னை அழைத்து வந்து பலி கொடுக்க மனம் முன்வரவில்லை. எத்தனை எத்தனை மந்திரவாதிகள், ஆத்திகர்களை அழைத்து வந்தும் எதுவும் சரியாகவில்லை. பெரியவர்கள் அனைவரும் விதியின் மேல் பாரதத்தை போட்டுவிட்டு தத்தம் வாழ்கையை எதிர்க்கொள்ள, சிறியவர்கள் படிப்பு, வேலை என்று வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.
நானுமே மேற்படிப்பு என்று கூறிவிட்டு வெளிநாடு சென்றவன் பின்பு இரண்டு வருடம் வேலை என அங்கேயே இருந்துவிட்டேன். திடீரென ஒரு நாள் அழைப்பு வந்தது! உடனே இங்கே கிளம்பி வருமாறு...!!!
ஏன் எதற்கு என்று எதையும் தெளிவாக சொல்லாமல் “நீ வரவில்லை என்றால் நம் பரம்பரை மானமே போய்விடும், இவ்வளவு நாள் கட்டி காத்த மரியாதையும், தாங்கிய சோதனைகளும் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடும்” என்று அழாமல், ஆனால், துக்கம் தொண்டையை அடைக்கும் குரலில் கூற,
ஒரு பக்கம் அவன் அத்தை சம்யுக்தையும் “மாதவா... என் பொண்ணையும் நம் மண்ணையும் எப்படியாவது காப்பாத்திடுடா” என்று கதற, ஒன்றும் புரியாமல் அடித்து பிடித்து இந்தியா வந்து சேர்ந்தேன். வந்தபின்பு தான் புரிந்தது விஷயத்தின் வீரியம். கூறிவிட்டு திரும்பி அவள் முகம் பார்க்க,
என்ன அப்படி ஒரு அவசரம்? ஏன் என்ற கேள்வியை கண்களில் தேக்கி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளின் வாழ்வின் திருப்பதிற்க்கான காரணமும் அதுவல்லவா? அவனையே அவள் பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
மழை தூறும்...!!!