தளிர் 3
அதிகாலை வேளையில் மலர்கள் மௌனமாக அசைந்தாடி, தன் வாசனையைப் பரப்பி ஆதவனை நோக்கி வரவேற்பாக கவிதை வாசித்துக் கொண்டிருந்தது.
‘நான் கீர்த்தனை, நீ பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா’ என்ற பாடல் வரிகளில் உள்ள பிஜிஎம் மியூசிக்கை மட்டும் வைத்து அலாரம் செய்திருந்தாள் நிசப்தி.
‘இது விக்ரமுக்கு ரொம்ப பிடிச்ச சாங்க் நிசா, அப்படியே எனக்கும் பிடிச்சுப் போச்சு. பேபி வயித்துல இருக்கும்போது இந்த சாங் அடிக்கடி கேட்டுட்டே இரு, பேபிக்கும் பிடிக்கும். அப்புறம் பேபி பிறந்ததும் இந்த சாங்க் எங்க ஃபேமிலி சாங்க் ஆகிடும்ல.’ என ஸ்வாதி மகிழ்ச்சியாக சொன்னது, இப்போதும் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் ஸ்வாதிக்குத் தெரியாத ஒன்று, நிசப்திக்கும் அந்தப் பாடல்தான் மிகவும் விருப்பமானதென்று. அன்று ஸ்வாதி சொன்னதும் இவளது விழிகளும் வியப்பால் விரிந்தது. ஆனால் அதை ஸ்வாதி கவனிக்கும் முன் மறைத்துக்கொண்டாள்.
பழைய ஞாபகங்கள் வந்தாலே அன்றைய நாள் மிகவும் சோர்வாகவும் கோபமாகவும்தான் ஆரம்பிக்கும். இன்று அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று நினைத்தபடியேதான் விழிகளைத் திறந்தாள் நிசப்தி. ஆனால் விக்ரம் என்ற ஒருவன் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை என்று அவளுக்குத் தெரியவில்லையே.
அந்த அதிகாலையில் மெல்லிய அலார சத்தத்தில் விழித்தவள், அதை அணைத்துவிட்டு, தன் மார்புக்குள் சுருண்டு கிடக்கும் மகளைப் பார்த்ததும் மனம் கனிய, அவள் நெற்றியில் ஒரு முத்தத்தைக் கொடுத்து, சரியாகப் படுக்கவைத்து குளியலறையை நோக்கி நகர்ந்தாள்.
காலை வேலைகளை முடித்த நேரம் வீட்டின் காலிங் பெல் சத்தம் அழைக்க, ‘இந்த நேரம் யாரென்று’ நினைத்து, கதவைத் திறக்க, அங்கு ரவி தன் அம்மா மற்றும் மனைவியோடு நின்றிருந்தான் புன்னகை முகமாக.
‘என்ன இது காலையிலேயே’ எனச் சலிப்பு வந்தது அவளுக்கு. அதை அப்படியே முகத்தில் காட்டி ரவியை முறைத்துப் பார்க்க, “எப்படி இருக்க நிசாம்மா?” என்றபடியே உள்ளே வந்தார் ரவியின் அம்மா மதியழகி.
அவரைப் பார்த்து பெயருக்கு புன்னகைத்தவள், “நல்லா இருக்கேன், இருங்க காஃபி எடுத்துட்டு வரேன்.” என உள்ளேப் போக இருந்தவளை,
“அதுக்கு முன்னாடி உள்ளே கூப்பிடணும், உட்கார சொல்லணும் அதையெல்லாம் விட்டுட்டு…” என முகத்தைத் திருப்பிய ரவியின் மனைவி ஸ்ரீ, ரவியை முறைத்துவிட்டு மாமியாரை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, ஸ்ரீயின் செய்கையில் பல்லைக் கடித்தாள் நிசப்தி.
மூவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து, மூவருக்கும் காஃபியை வைத்தவள் ஒரு கப்பில் பால் எடுத்துக்கொண்டு வந்தாள்.
பால் கப்பை ஸ்ரீயிடம் நீட்டியவள், மற்ற இருவரிடமும் காபியைக் கொடுத்துவிட்டு, தனக்கானதை எடுத்துக் கொண்டாள். காஃபி அருந்தி முடிக்கும் வரையான நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது.
“விக்ரம் பார்க்க எப்போ அப்பாய்ன்ட்மென்ட் நிசா? நான் வரட்டுமா?” என ரவி ஆரம்பிக்க,
“ம்ம்… ஷார்ப் எய்ட் தர்டி.” என்றவள், “பட் நான் போகப்போறது டென்.” என்றாள் அலட்சியமாக.
“நிஷ்… இது சரியில்ல. அவன் அவ்வளவு நேரம் எல்லாம் வெய்ட் பண்ணமாட்டான். பிறகு நேரா இங்கையே வந்துடுவான்.” என ஸ்ரீ பதட்டமாகச் சொல்ல,
“வாய்ப்பில்ல…” என அப்போதும் அலட்சியமாகச் சொன்னவள், “இந்த நிசப்திக்காக வெய்ட் பண்ணமாட்டாரா, தெ கிரேட் லாயர் விக்ரம்?” என நக்கல் குரலில் சொல்லிவிட்டு, “வெயிட் பண்ணுவார்.” என்றாள் முடிவாக.
“நிசா அவனை சீண்ட வேண்டாம். நமக்கு நம்ம காரியம் ஆகணும். அதுக்கு கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும். இப்படி சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் அவனைச் சீண்டிட்டு இருந்தா, நம்ம ப்ளான் என்னாகும்?” என ரவியும் கொஞ்சம் கண்டிப்பாகப் பேச,
“நீங்க சொல்ற இந்த விக்ரமுக்காகத்தான் வயித்துல புள்ளையோட ஒரு நாள் முழுக்க வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ எல்லாம் அவனோட பங்சுவாலிட்டியை எங்க கழுதை மேய விட்டானாம். லுக் ரவி, எனக்கு இப்போ எல்லாம் பொறுமை ரொம்ப குறைஞ்சிடுச்சு. என்னை சீண்டாம இருக்குறது அவனுக்குத்தான் நல்லது.” என எரிச்சலாகச் சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
“நிசாம்மா இன்னும் தசிக்குட்டி எழுந்துக்கலயா? சத்தத்தையேக் காணோம்.” என அதுவரை அமைதியாக இருந்த மதியழகி கேட்க,
“இல்ல இன்னும் தூங்குறா, புது இடம் நைட் கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தா, லேட் நைட்தான் தூங்கவே செஞ்சா.” எனப் பட்டும் படாமலும் சொல்ல,
“ம்ம், தூங்கட்டும், தூங்கட்டும்… குழந்தைங்க எவ்வளவு நேரம் தூங்குறாங்களோ, அவ்வளவு நல்லது உடம்புக்கு.” என அவரும் பதில் கொடுத்துவிட்டு மகனைப் பார்க்க, அவனோ தாயின் பார்வைக்குக் கட்டுப்பட்டு எழுந்து வெளியேச் சென்றான்.
ஸ்ரீயோ, “எனக்கு கொஞ்சம் படுக்கணும், இடுப்பு வலிக்குது.” என அறிவிப்பாகச் சொல்ல, அதைக் கேட்டுப் பல்லைக் கடித்த நிசப்தி, மகள் உறங்கும் அறைக்குப் பக்கத்து அறையைக் காட்ட,
“ஏன் இங்க எல்லாம் விடமாட்டியா?” எனக் குழந்தை உறங்கும் அறையைக் காட்டிக் கடுப்பாக கேட்க,
“அதெல்லாம் முடியாது, இந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கணும்னா எடுங்க, இல்லாட்டி உங்க வீட்டுக்கு கிளம்புங்க.” என முகத்தில் அடித்தாற்போலப் பேச, அதில் முகத்தைத் திருப்பிக்கொண்டு, நிசப்தி காட்டிய அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
ஸ்ரீ அகன்றதும், “என்ன சமைக்கட்டும்?” என மதியழகியின் முகத்தைப் பார்க்காமலே வேண்டா வெறுப்பாகக் கேட்டவளைப் பார்த்து, “என் முகத்தைப் பார்க்கக்கூட உனக்குப் பிடிக்கலையா நிசாம்மா?” என்றவரின் குரல் தளுதளுத்தது.
அந்தக் குரல் அசைத்துப் பார்த்தாலும், கல்லைப் போலவே இறுகி நின்றாள் நிசப்தி.
“எனக்குத் தெரியும், உன் கோபம் இன்னும் குறையலன்னு. அந்த நேரம் நான் என்ன செய்றதுன்னு தெரியாத ஒரு குழப்பத்துல இருந்தேன் நிசாம்மா. அதுதான் என்னோட தப்பு. அன்னைக்கு நான் சரியா நடந்திருந்தா உனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்காது. எனக்குப் புரியுது, எல்லாம் என்னோட தப்புத்தான்.” என அழுதவரைப் பார்த்துக்கூட அவளுக்கு இரக்கம் வரவில்லை.
அவளின் இழப்புக்கு முன் இவர்களின் அழுகை எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம்தான் அவளுக்கு. அதனால் அப்போதும் அமைதியாகவே இருக்க, அந்த நேரம் சரியாக கைகளில் பெரிய பெரிய பைகளை எடுத்துக் கொண்டு ரவி உள்ளே வர, மதியழகி வேகமாக முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
ரவி தன்னிடம் இருந்த பொருட்களை நிசப்தியிடம் கொடுக்க, அவளோ அதனை வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். ஆனால் அதையெல்லாம் ரவி கண்டுகொள்ளாமல் நீட்டியக் கையை நீட்டியபடியே இருக்க, “இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு உங்கக்கிட்ட ஆல்ரெடி நான் சொல்லிருக்கேன், மறுபடியும் இதென்ன?” என அடக்கப்பட்டக் கோபத்துடன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கத்த,
“எதுக்கு இப்படி டென்சன் ஆகுற? இதுவரைக்கும் நீ சொன்னதை, கேட்டதைத்தான் செஞ்சிருக்கேன். இனியும் அப்படித்தான். ஆனா அதுக்கு நீயும் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணணும். எங்க உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும்.
உன்னோட இழப்பு பெருசுதான், நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே. எங்கப் பக்கம் தப்பு இருக்கப் போய்தான் நாங்க இப்படி வந்து நிக்கிறோம். முதல்ல அதை மனசுல பதிய வை. எந்த நேரமும் இப்படி கடுகடுன்னு இருக்காத.” என ரவியும் அவளுக்கு மட்டும் குரலில் பதிலுக்கு கத்த, அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் நிசப்தி.
அந்த நேரம் சரியாக குழந்தையின் சிணுங்கல் குரல் கேட்க, வேகமாக அங்கு சென்றவள் தசிராவை அணைத்து, சமாதானம் செய்து முகம் கழுவி துடைத்து வெளியில் வர, ரவி அவளுக்கான ஹார்லிக்ஸோடு நின்றிருந்தான்.
குழந்தையை அவனிடம் கொடுத்தவள் கிச்சனுக்குள் நுழைந்துவிட, தாயும் மகனும் குழந்தையுடன் ஐக்கியமாகி விட்டார்கள்.
குழந்தை முதலில் ரவியிடம் இருந்து பெரியவரிடம் செல்ல வெகுவாக யோசித்தது. சில நிமிடங்கள் அவர் பேசிப்பேசி தன் வழிக்கு கொண்டு வந்து, பிறகு தன்னிடம் வாங்கிக் கொள்ள, அப்போதும் முகத்தை ஒரு யோசனையாக வைத்திருப்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்து ரவிக்குச் சிரிப்பு. “ரவி, பாப்பா அப்படியே விக்ரம்தான். அவன் பார்க்குறது, முறைக்கிறது எல்லாம் அவனேதான். வேணும்னா பாரு, அவனுக்கு ரெண்டு மடங்கு வருவா.” எனப் பேத்தியைப் பற்றிச் சந்தோசமாகச் சொல்ல,
அவனோ வேகமாக சமையலறையை நோக்கிவிட்டு, “ம்மா.. உங்கக்கிட்ட என்ன சொல்லிக் கூப்பிட்டு வந்தேன், எந்த இடத்துலயும் ஸ்வாதி பத்தியோ, விக்கி பத்தியோ பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்ல. இப்போ மட்டும் நீங்க பேசினது அவளுக்கு கேட்டது, இனி என்னையும்கூட பக்கத்துல சேர்க்க மாட்டா.” எனத் தாயைக் கடுமையாக எச்சரித்தான்.
அவரும் புரிந்தது என்பது போல் தலையை ஆட்டிவிட்டு, குழந்தையிடம் கவனமானார். அடுத்து காலை உணவை சமைத்துவிட்டு, குழந்தையை வாங்கி குளிக்க வைத்து அவளை ரெடியாக்கியவள், அனைவருக்கும் உணவைக் கொடுத்து வெளியேற மணி ஒன்பதாகியிருந்தது.
மற்ற மூவரும் கிளம்பிய சில நிமிடங்கள் கழித்து அவளும் வீட்டைப் பூட்டிவிட்டு தன் காரை எடுத்தாள். கார் சில நிமிட பயணத்தில் ஒரு வீட்டின் முன் நிற்க, காரின் சத்ததைக் கேட்டு வேகமாக வெளியில் வந்தார் அந்த பெரியவர்.
“வா… வா நிசாம்மா… என்ன இவ்வளவு லேட்? சாப்பிட்டியா? எனக் கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்க,
“ஆச்சு ஆன்ட்டி ரவி வீட்டுல இருந்து எல்லாரும் வந்திருந்தாங்க. அவங்க இப்போதான் கிளம்பினாங்க.” என்றவளிடம், “மதி என்ன சொன்னாங்க? நீ கோபப்படலையே?” எனவும்,
“ம்ச் இல்ல ஆன்ட்டி, நான் ஒன்னும் சொல்லல. சரி நீங்க தசியை பார்த்துக்கோங்க. நான் போய்ட்டு வந்துடுறேன். இப்போ கிளம்பினாத்தான் டைம் சரியா இருக்கும்.” என்றவள் மகளுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்ப,
“நிசாம்மா…” என்றுத் தயக்கமாக அழைத்தவர், “கொஞ்சம் பொறுமையா பேசுடா. நமக்கு காரியம்தான் பெருசு.” எனவும்,
“எதுவும் என் கைல இல்ல ஆன்ட்டி. அந்த விக்ரம் நடந்துக்குறதைப் பொறுத்துதான் நான் பேசுறதும், செய்றதும்.” என விட்டேத்தியாகப் பதில் சொன்னவள், அவர் பதில் சொல்வதற்கு முன்பே கிளம்பிவிட்டாள்.
இங்கு எட்டு மணிக்கே வந்துவிட்டான் விக்ரம். கடந்த நிமிடங்களில் நொடிக்கொரு முறை நரேனை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். விக்ரமின் முறைப்பைத் தாங்க முடியாமல் நிசப்திக்கு கால் செய்ய, அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்று வர நொந்தே போனான்.
இப்போது இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்து, அதை முகத்தில் காட்டாமல் அமைதியாகவே நிற்க, சில நிமிடங்களில் நிசப்தியின் பாதுகாப்பிற்காக வைத்திருந்தவனிடம் இருந்து ஒரு தகவல் வர, அப்போதுதான் அவனுக்கு மூச்சே வந்தது.
“பாஸ் ரவி சாரும் அவங்க ஃபேமிலியும் மேடம் வீட்டுக்கு போயிருக்காங்க, அதனாலதான் மேம் வர லேட்டுன்னு நினைக்கிறேன். அதோட குட்டிப் பாப்பாவுக்கும் டைம் எடுக்கும் இல்ல.” எனப் பொறுமையாகச் சொல்ல,
ரவியின் பெயரைக் கேட்டதும் பல்லைக் கடித்தவன், குழந்தையைப் பற்றிச் சொன்னதும் சற்று அமைதியானான்.
இப்படியே நேரம் செல்ல, “பாஸ் மேம் கிளம்பிட்டாங்க.” என்றதும், “ம்ம்…” என்றானே ஒழிய பெரிதாக முகத்தில் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்பவன் இல்லை விக்ரம். அவனைப் பற்றித் தெரிந்த நரேனும் அமைதியாக அவனுக்குப் பின்னே நின்றிருந்தான்.
அப்போது நரேனிற்கு ஒரு போன் வர எடுத்துப் பேசியவன், “பாஸ், மேம் இப்போ வரைக்கும் எந்த லாயரையும் அப்ரோச் பண்ணலன்னு சொல்றாங்க. நாளைக்கு கேஸ் வச்சிட்டு இப்படி இருந்தா…?” எனக் கேள்வியாக இழுத்தவனைப் பார்த்து யோசனையானவன், “என்னை மாதிரி அவளே ஆஜராகலாம்.” என்றான் விக்ரம். நரேனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரம் அனுமதிகூட வாங்காமல் நேராக உள்ளே வந்தாள் நிசப்தி. அவளது நடை, உடை, நிமிர்வு எல்லாம் பார்த்த விக்ரமிற்கு சற்று ஆச்சரியம்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன் தனக்கு முன்னே வந்து நின்ற இதே நிசப்தியை யோசித்துப் பார்த்தான். அவளுக்கும் இவளுக்கும் எத்தனை வித்தியாசங்கள்.
அவளுக்கு மரியாதைக் குறைவாக ஒரு வார்த்தைப் பேசத் தெரியாது. இவளுக்கு மரியாதை என்றால் என்னவென்றேத் தெரியாது போல, என மனதுக்குள் நினைத்தவனுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது, அவள் தனியாக வந்திருக்கிறாள் என்று.
அதுவரை அமைதியாக இருந்தவன் குழந்தையைக் கொண்டுவரவில்லை என்றதும், கோபம் தலைக்கு ஏறியது. அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தவன் உள்ளே நுழைந்தவளை மேலிருந்து கீழாகப் பார்த்து, “பேபி எங்கே?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.
“வாட்? பேபியா? அவ எதுக்கு உங்களுக்கு? மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணது எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான். இதுல பேபி எங்க வந்தா?” என்றாள் அவளும் அவனுக்கு சளைக்காத ஆத்திரத்துடன்.
“என்ன செஞ்சிட்டு இருக்க நீ? பேபி இல்லாம உன்னை யார் வரச் சொன்னது? ஹான் ஐ திங்க் என் பேபியை எனக்கு காட்டவே கூடாதுன்னு முடிவா இருக்க ரைட்? பட், நான் நினைச்சா இப்போ இங்க இந்த செகன்ட் பேபியை கொண்டு வரமுடியும், பார்க்குறியா?” என கர்ஜித்தவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவள், “கோ கெட்.” என்றுவிட்டு அங்கிருந்த சேரில் சட்டமாக அமர்ந்துவிட்டாள்.
***
1 comment
நான் இதை எதிர் பார்த்தேன், நிசாப்தி குழந்தையோடவும் வரமாட்டாள், வக்கிலையும் வைக்க மாட்டான், அவளே ஆஜராவான்னு. அதைத்தான் இப்ப செய்யுறா.
😀😀😀
CRVS (or) CRVS 2797