Home Anti Heroineஅகானா – 75

அகானா – 75

by Vathani S

அகானா – 75

ஆகன் கூறியதைப் போல மகள் தன் சொந்த ஜாமினில் தான், தன்னை வெளியில் எடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட ரவிக்கு, இதயத்தில் சிறு நிம்மதி.

அவளுக்கும் தன் மேல் சிறு பரிவு உண்டு என்று நினைத்துக் கொண்டார். அடுத்து வினோத்திடமிருந்து  வந்த செய்தியில் அந்த சிறு நிம்மதி கூட இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.

கேட்ட செய்தியை ஜீரணிக்க முயன்றார், முடியவில்லை.! அனைத்தும் தானாக நடப்பது போல் அவருக்குத் தெரியவில்லை. ஏதோ திட்டமிட்டு நடப்பது போல் தான் தோன்றியது. இவை அனைத்தையும்  மைதிலிதான் செய்கிறாள் என்று நினைத்து, அவள் மேல் ஆத்திரத்தையும், கோபத்தையும் வளர்த்துக் கொண்டார்..

அடுத்தடுத்து அழகரின் காரியங்கள் விரைவாக நடந்தது. ஆகனும், மகிழினியும் மருத்துவமனையில் இருக்க, சொந்தபந்தங்களுக்குள் அதுவே பேசு பொருளானது.

வழக்கம்போல வினோத்தும் நித்யாவும் எடுத்து செய்ய, வினோத்தின் பிள்ளைகளை வைத்தே அனைத்து காரியங்களையும் செய்ய வைத்தனர்.

ராகினியின் பெற்றோர் வந்து ரஞ்சனியிடம் கத்திவிட்டு சென்றிருக்க, அழகரின் மரணத்திற்கும் மைதிலி தான் காரணம் என்று கூறியிருக்க, மைதிலியின் மற்றொரு முகம் தெரிந்து, ரஞ்சனிக்கு மிகவும் பயமாக இருந்தது.

இருந்தாலும் இவர்கள் ஒருவேளைத் தன்னை ஏமாற்றுகிறார்களோ என்று நினைத்து, மைதிலிக்கு அழைத்து அழைத்துப் பார்த்து ஓய்ந்து போனார் ரஞ்சனி.

அழகரின் காரியங்கள் விரைவாகவே நடந்து கொண்டிருக்க, ஆகனின் மனைவியாக அந்த வீட்டிற்கு வந்திருந்தாள் அகானா.

அவளைப் பார்த்ததுமே அனைவரும் மரியாதையாக பேச, மகளைப் பார்த்ததும் தந்தைக்கு பெருமை பொங்கியது. அவர் அவளையே விடாமல் பார்க்க, அவளோ அவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், அழகரின் பூத உடலுக்கு மாலையை போட்டுவிட்டு, விருவிருவென வெளியேறிவிட்டாள்.

ரவியின் பங்காளி ஆட்கள் அவளிடம் பேச வர, அவர்களிடம் மரியாதையாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, பக்கத்தில் இருக்கும் தன் பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

இவளைப் பார்த்ததுமே ராகினியின் கண்கள் கலங்க, “நீங்க ஏன் அண்ணி அங்க போனீங்க.?” என்றாள்.

“அத்தை தான்.. அவரை பார்த்துக்க ஆள் இல்ல, நித்யா அத்தை வர வரைக்கும் மட்டும் இருன்னு சொன்னாங்க.. இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல..” என்ற போது கண்ணீர் வழிந்துவிட்டது.

“ஓக்கே ஓக்கே.. அதான் எதுவும் ஆகலயே.. ரிலாக்ஸ் ஆகுங்க..” என முதுகை தடவி சமாதானம் செய்தவள், ராகினியின் உடனிருந்த காயத்ரியிடம் “அக்கா பெரியம்மா இல்லாம நீங்க சமாளிச்சிடுவீங்களா?” என்றாள்.

அதுவரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராகினியின் தாய் விமலா “ராகினியை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் மா.. அங்க நானும் மாலினியும் இருக்கோம் பார்த்துப்போம். நீங்க இங்க மத்த வேலைகளைப் பாருங்க..” என கூற,

“அத்தைக்கிட்ட கேட்கனும் ம்மா.. அவங்க சொல்லாம எப்படி வர..” என ராகினி தாயைப் பார்க்க, சற்றும் யோசிக்காமல் கவிதாவிற்கு அழைத்த விமலா, ராகினியை அழைத்து செல்வதாக கூற, அவருமே சரியென்றுவிட, ஒரு பிரச்சினை தீர்ந்ததில் அங்கிருந்தவர்களுக்கு பெரும் பாரம் விலகிய உணர்வு.

“பாப்பா.. ஆகன் அண்ணா எப்படி இருக்கார்..?” என காயத்ரி கேட்க,

“ம்ம் ஓக்கே தான் க்கா. மகி தான் இன்னும் முழிக்கல. அதுதான் பயமா இருக்கு. ஆரி வெளிய காட்டிக்கலன்னாலும், உள்ளுக்குள்ள ரொம்பவே அரண்டு போய்தான் இருப்பான். மதுரைல இருந்து ஒரு நியூராலஜிஸ்ட் இன்னைக்கு வராங்களாம். என்ன சொல்வாங்கன்னு தெரியல..” என்றாள் வருத்தமாக.

“மகி ரொம்ப தங்கமான பொண்ணு பாப்பா. அதுக்கு எந்த கஷ்டமும் வராது..” என்றார் விமலா.

“சரிங்கத்த.. நீங்க பார்த்துக்கோங்க. நான் கிளம்பனும்..” என வேறு பேசாமல் கிளம்பிவிட, “எப்படி வளர்ந்திருக்க வேண்டிய பொண்ணு.?” என பெருமூச்சுவிட்டார் விமலா. 

சவத்தை எடுப்பதற்கு முன்பே அகானா கிளம்பியது, ரவிக்கு ஏதோ போலானது. வந்தவர்கள் வேறு மைதிலி எங்கே எனக் கேட்டுக்கொண்டே இருந்தது வேறு எரிச்சலைக் கொடுத்தது.

‘அவ இப்போ எங்க இருக்காளோ, அகானா அவளை என்ன செஞ்சிருப்பா?’ என்ற கேள்விகள் வேறு அவரை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது.

வந்தவர்கள் கேட்கும் கேள்விக்கு வாய் பதில் சொன்னாலும், மூளை அகானாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

அகானாவின் பேச்சைக் கேட்டதிலிருந்தே அவளிடம் பேசவே பயந்தார் கண்ணன். அவளுடனேதான் இருக்கிறார். ஆனால் எப்போது இந்த வேலையை செய்தாள் என்று தெரியவில்லை. அதுவே அதிர்ச்சி என்றால், ரவியை கொல்வதற்கு ஆள் செட் செய்துவிட்டு அது தனக்குத் தெரியவே தெரியாது என்பது போல் அவள் இருந்த கோலம், அவரை அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.

‘இனி என்ன செய்வாளோ?’ என்றபடியே காரை ஓட்ட,

“அங்கிள்.. உங்களுக்கு தெரிஞ்சதை உங்களோடவே வச்சுக்கிட்டா பெட்டர். அம்மா காதுக்கோ, ஆகன் காதுக்கோ போகக்கூடாது.” என்றாள் அதிகாரமாக.

அந்தல் குரல் வேகமாக அவரைத் திரும்பி பார்க்க வைத்தது. “பாப்பா..” என அவர் அதிர்ச்சியில் கேட்க, “கேம் முடியப் போகுது அங்கிள். சோ..” என நிறுத்த,

“அப்போ அந்த மைதிலி..” என்றவருக்கு வார்த்தைகள் காற்றாகத்தான் வந்தது.

“என்னோட ப்ளான்ஸ் எல்லாத்தையும், ரொம்ப ஈசியா மூவ் பண்ண வச்சவங்க, எனக்காகவே கிடைச்ச ஒரு காஸ்ட்லி ட்ரம் கார்ட்..” என்றதும் அவர் பார்வை பயத்திற்கு மாறியது.

“துரைப்பாண்டி அண்ணனா?” என அவர் பயத்தில் கேட்க,

“நோ…” என்றவள் “என்னோட பெரியப்பா..” என்றாள் கர்வமாக.

“தாமோதரனா?” என அவர் அதிர்ந்து கேட்க, அந்த அதிர்வை கண்டுகொள்ளாமல் தன் விழிகளை மூடி சீட்டில் சாய்ந்துவிட்டாள் அகானா.

– 

அந்த நியூரோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டரின் முன் அமர்ந்திருந்தார்கள் ஆரியனும் சங்கரும். இரண்டு நாட்கள் கடந்தும் மகிழினி இன்னும் கண் விழிக்கவில்லை என்றதும் நியூரோ ஸ்பெஷலிஸ்டை வரவத்து விட்டான் ஆரியன்.

“நீங்க சொல்றதை என்னால நம்பவே முடியல டாக்டர். இப்படியும் நடக்குமா.?” என்ற சங்கர், மிகவும் பயத்தில் இருக்கிறார் என்று அவர் குரலேக் காட்டிக்கொடுத்தது.

அதற்கு ஒரு புன்னகையைத் தவிர, வேறு பதில் சொல்லவில்லை அந்த டாக்டர்.

“கொஞ்சம் ரேர் கேஸ் தான் மாமா.. சரி பண்ணிடலாம்.. நான் சரி பண்ணிடுவேன்..” என தெளிவாக, சங்கருக்கு பதில் சொன்னான் ஆரியன்.

“தேங்க்ஸ் டாக்டர்..” என்றான் அந்த மருத்துவரிடமும்.

“நோ ஃபார்மாலிட்டிஸ் ஆரியன்.. என்னோட டியூட்டியைத்தான் செய்தேன். நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்கிட்டீங்க. அதுவே நல்ல புரிதல் தான்.” என்றவர் அவன் தோலை தட்டிவிட்டு கிளம்பி விட்டார்.

“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்..?” என சங்கர் மிகவும் வருத்தமாக ஆரியனிடம் கேட்க, 

“மாமா மகி ரொம்ப சின்ன பொண்ணு.. இப்போ நடந்தது எல்லாம் பார்த்து பயந்துட்டா. இந்த வாழ்க்கை அவளுக்கு நிலைக்குமோ நிலைக்காதோ என்று ஒரு பயம், அவ மனசுல ஆரம்பத்துல இருந்தே இருந்திருக்கு. அதை நாம எல்லாம் சேர்ந்து மேலும் வளர்த்துதான் விட்டிருக்கோம். முக்கியமா மகியோட அம்மா அவளை ரொம்பவே டார்ச்சர் பண்ணியிருக்காங்க. இது எல்லாம் சேர்ந்துதான் அவளை இந்த அளவுக்கு மன அழுத்தத்துக்கு கொண்டு வந்திருக்கு.” என்றான் வேதனையாக.

“நான் ஆரம்பத்துல இருந்தே சரியா இருந்திருந்தா, இன்னைக்கு என் பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் இந்த நிலைமை வந்திருக்காது. எல்லா தப்பும் என்னோடது தான். முன்னாடியே ரஞ்சனியை மிரட்டி, என் வழிக்கு கொண்டு வராமல் போயிட்டேன். அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு..” என்றார் கோபமாக.

“மாமா இனி முடிஞ்சதை பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. மகியை இனி நான் இங்க விடுறதா இல்லை. எனக்கும் சிங்கப்பூர்ல வேலை இருக்கு. அகிக்காக  மட்டும்தான் நான் இங்க வந்தேன். அதுதான் சீனியர் இருக்காரே, இனி அகியை அவர் பார்த்துப்பார். நான் முதல்ல மகியே பாண்டிக்கு அழைச்சிட்டு போறேன். அப்புறம் ஒரு டூ மந்த்ஸ்ல சிங்கப்பூர் கிளம்பறேன். இது மட்டும் தான் மகிக்கான ட்ரீட்மெண்ட்..” என ஆறுதலாக சொல்லி முடிக்க, அதுவே சங்கருக்கும் சரியென்றுபட்டது.

“ஓகே மாமா நான் இங்க எல்லாம் பார்த்துக்கிறேன். நீங்க ஊருக்கு கிளம்புங்க. மகியும், சீனியரும் இல்லாம நீங்களும் இல்லன்னா ஊர்ல ஏதாவது பேசுவாங்க..” என்றான்.

சங்கர் மேலும் தயங்க “மாமா அம்மாவும் அப்பாவும் தேனிக்கு வந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல, இங்க வந்துடுவாங்க. நான் இங்க மேனேஜ் பண்ணிப்பேன். நீங்க போயிட்டு வாங்க..” என வெகுவாக அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் ஆரியன்.

அவர் கிளம்பிச் சென்ற பிறகு, மகிழினியின் அருகில் அவள் கைகளைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான் ஆரியன்..

அவனுக்கு அந்த மருத்துவர் மகியைப்பற்றி கூறியதே மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.

“ஆரியன்.. பிசிக்கலி சீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். பட் மென்டலி நாட்… இவங்க மனசுக்குள்ள ரொம்ப பயந்து போய் இருக்காங்க. அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட்ல மஞ்சரிக்கு ஏதோ ஆகிடுச்சுனு அவங்க மூளை பிக்ஸ் பண்ணிடுச்சு. அதை அவங்களால ஏத்துக்க முடியல. ஏற்கனவே மஞ்சரி லைஃப் இப்படியாக அவங்க அம்மாவும் ஒரு காரணம்னு ஒரு குற்றவுணர்ச்சியிலதான் இருந்திருக்காங்க. இப்போ அந்த ஆக்சிடென்ட் அதை மேலும் அதிகமாக்கிடுச்சு. இவங்க முழிச்சிட்டா, மஞ்சரியைப்பத்தி தெரிஞ்சிக்கனும், அதுக்கும் தன் குடும்பம்தான் காரணம்னு தெரிஞ்சிக்கனும். அதையெல்லாம் தெரிஞ்சிக்க பயந்து, தன் மனதைக் கட்டுப்படுத்தி போராடுறாங்க. இது கண்டிப்பா ரிஸ்க்தான். அவங்க மனசை ஃப்ரீயா விட்டு, நாம பேசுறதைக் கேட்டாத்தான் அவங்களால எல்லாத்தையும் உணர முடியும். இல்லைன்னா இப்படியே இருக்க வேண்டியதுதான். இது லைஃப்டைம் கோமாக்கு கொண்டு போகக்கூட வாய்ப்பிருக்கு.. நீங்க அவங்ககிட்ட பேசுங்க. பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைங்க. அவங்க மனசை ரிலாக்ஸ் பண்ணுங்க.. கண்டிப்பா மகிழினி உங்ககிட்ட வந்துடுவாங்க..” என அவர் கூறியதை மனதில் அசை போட்டபடியே அமர்ந்திருந்தான்.

இப்போது அவனுடைய மற்றய கரம் அவளின் முகத்தை மென்மையாக வருட ஆரம்பித்திருந்தது.

“இனி மா..” என்றவனின் குரல் அடைத்தது. கதறியழுது விடுவோமோ என்று பயம் கூட வந்துவிட்டது.

“இனி வந்துடு டி.. நீ இல்லாம என்னால தனியா எல்லாம் இருக்க முடியாது டி… ப்ளீஸ் இனி.. இவங்க யாரும் நமக்கு வேண்டாம். உனக்கு நான், எனக்கு நீ.. நாம ரெண்டு பேர் மட்டுமே இருக்குற மாதிரி ஒரு இடத்துக்கு போயிடலாம். உன்னை எதுக்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது இனி..” என்றவனுக்கு குரல் உடைந்து, அழுகை பீறிட்டது.

அதைக் காட்ட பிடிக்காமல் அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தபடியே தேம்பினான்.

என்ன தோன்றியதோ சில நிமிடங்களில் எழுந்தவன், தன் மொபைலை எடுத்து, அவளுகாகவே செட் செய்திருந்த ப்ளேலிஸ்டில் ஒரு பாடலை ப்ளே செய்ய, அந்த பாடலின் அதிர்வில் மகிழினியின் கால்கள் மெல்ல உணர்வு பெற ஆரம்பிக்க, அதுவரை அழுது, தவித்து, பயந்து போயிருந்தவன், மனைவியின் செயலில் பல்லைக் கடித்தான்.

அதற்குள் ‘நாக்கு முக்க பாடல் முடிந்து, டங்காமாரி ஊதாரி..’ என அடுத்த பாடல் வர, மகிழினியின் கைகளில் உணர்வு வர, சத்தியமாக நொந்தே போனான் ஆரியன்.

You may also like

Leave a Comment

About Me

Featured