Home Anti Heroineஅகானா – 77

அகானா – 77

by Vathani S

அகானா -77

“சீனியர்..” என்று ஆரியன் பயந்து போய் கேட்க,

“ம்ச் விடுடா..” என்ற ஆகன், விமலை பார்க்க,

“அகானா தான் செஞ்சாங்க என்பதற்கு, எந்த எவிடன்ஸ்சும் இல்ல மச்சான். எல்லோரோட பார்வையும் மைதிலி ஆன்டி மேல தான் இருந்தது, அவங்களுக்கு வசதியா போச்சு. இந்த ஆக்சிடென்ட் மட்டும்தான் மைதிலி ஆன்டியோட பிளான். அது கூட மஞ்சரி ஆன்டிதான் டார்கெட், நீங்களும் கூட வருவீங்கனு மைதிலி ஆன்டியே நினைக்கல.. மத்த எல்லாமே அகானாவோடது தான்.” என்றான் விமல் பெருமூச்சோடு.

பின் “ஹாஸ்பிடல் ரைடு, நித்யா ஆன்ட்டி மேல கேஸ் பைல் பண்ணது. மகி கிட்னாபிங், டாக்டரோட அரெஸ்ட் வாரண்ட் அண்ட் அவரை மர்டர் பண்றதுக்கு ஆல் செட் பண்ணிட்டு, அவரை சேவ் பண்ற மாதிரி வெளியே கொண்டு வந்தது, எல்லாமே அகானாவோட பிளான் தான்.. அதோட,” என நிறுத்து ஆகனை வருத்தமாய் பார்க்க, ஆகன் தன் இறுகிய பார்வையை மாற்றவே இல்லை.

“பாட்டியோட டெத்துக்கும் கூட..” என்றான் விமல் தளர்ந்து போய்.

மகியோட கிட்னாப்பிங், சரஸ்வதியோட டெத் மட்டும்தான் ஆரிக்குத் தெரியும். மற்றதெல்லாம் அவன் யோசிக்க கூட இல்லை. 

‘அகியா.. அவர்கள் வளர்த்த அகியா? அவளுக்குள் இத்தனை கோபமும், வெறியும் இருந்ததா? கேட்க கேட்க தலையை சுற்றியது. ஆகனைப் பார்த்தான் கண்கள் சிவக்க, உடல் இரும்பென இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.

“ஆகன்..” என விமல் அழைக்க, “ஹ்ம்ம்..” என்று பெருமூச்சுவிட்டு தன் இறுக்கத்தை தளர்த்தினான் ஆகன். 

பின் “மேகமலைக்கு இன்ஸ்பெக்ஷன் போயிட்டு வரும்போது நடந்த ஆக்சிடென்ட் அப்பவே எனக்கு எல்லாமே அகானாவோட பிளான்தான்னு தெரியும். அதுவே எனக்கு ஷாக். அப்புறம் அந்த வீர்பாண்டி ஹைவேல நடந்த ஆக்சிடென்ட். அது தற்செயலா நடந்த ஒன்னுதான். அதை வெரி க்ளெவரா மைதிலி அத்தை பக்கமா திருப்பிட்டா..”

“தன்னையே அழிச்சிக்கிற அளவுக்கு எங்க எல்லார் மேலையும் இருக்குற கோபத்தை அப்போதான் நான் உணர்ந்தேன். அதுக்குப் பிறகு என்னால வேற எதையும் யோசிக்க முடியல, அவளை அப்படியே விட்டா, எங்களை எதுவுமே செய்ய முடியாத இயலாமையில தன்னைத்தானே அழிச்சிக்குவாளோன்னு பயம் வந்துடுச்சு. அதனால மஞ்சரி அத்தைக்கிட்ட எல்லாம் சொல்லி, எங்க கல்யாணத்தை நடத்திக்கிட்டேன்..” என்றான் ஆகன் உணர்ச்சியற்ற குரலில்.

“சீனியர் உங்களுக்கு என்ன பைத்தியா பிடிச்சிருக்கு. என்கிட்டயாவது சொல்லிருக்கலாமே.” என்றான் ஆரியன் கோபமாக.

“ம்ச் ஆரி.. நீ அவளை என்ன புரிஞ்சி வச்சிருக்க. அவளை அமைதி படுத்த நான் எந்த முயற்சியும் எடுக்கலனு நினைக்கிறியா? என்னால முடிஞ்சளவுக்கு முயற்சி செஞ்சேன் தான். ஆனா, அப்பா அவளோட கோபம் நியாயமானது தானேனு என்கிட்ட சொன்ன பிறகு என்னால அவளுக்கு எதிரா எதுவும் செய்ய முடியல.” என்றான் ஆகன் இறுக்கமாக.

“உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு சீனியர். அவ இப்போ எந்த எல்லைக்கு போயிருக்கான்னு உங்களுக்கு புரியுதா?” என்றான் ஆரியன் காட்டமாக.

“தெரியும்.. ஆனா அதுக்குப் பிறகு அவ நிம்மதியா இருப்பா இல்ல..” என்றான் ஆகன் வேதனையாக.

“ம்ச் சீனியர்.. அவளை முதல்ல கன்ட்ரோல் பண்ணனும், அதுக்கு என்ன பண்றதுனு யோசிங்க.. விமல் உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா.?” என பதட்டமாகவே இருவரையும் பார்த்து எரிச்சலாக கத்தினான் ஆரியன்.

“ஆரி.. டூ டேய்ஸே அதிகம்.. அதுக்குள்ள கம்ளீட்டா எல்லாத்தையும் முடிச்சிட்டு வருவா? அவளுக்கு எதிரா நான் எதுவும் செய்ய மாட்டேன். அவளைக் கன்ட்ரோல் பண்ணவும் மாட்டேன்..” என ஆகன் இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிவிட, 

“டேமிட்… ரெண்டு பேருக்கும் பைத்தியம் முத்திப் போயிடுச்சு..” என அந்த அறையைவிட்டு வேகமாக வெளியேறினான் ஆரியன்.

அவன் சென்று சில நொடிகளுக்குப் பிறகுதான் ஆகனுக்கும், விமலுக்கும் மூச்சே சீரானது.

“மச்சான்.. நீ நினைச்ச மாதிரி ஆரிக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. பட் ஆரியோ, அவனோட பேரன்ட்ஸோ சொன்னா அகானா கேட்பாங்களான்னு எனக்கு இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு. நீ சொல்லியே கேட்கமாட்டங்கன்னு சொல்ற?” என இழுத்தான் விமல்.

“நானா இல்ல அவளோட பழிவாங்குதலான்னு கேட்டா, கண்டிப்பா, யோசிக்காம என்னை தூக்கி எரிஞ்சிட்டு போயிடுவா அகானா? அப்படியொரு உதாசீனத்தை என்னால எப்பவும் தாங்கிக்க முடியாது விமல். எனக்குமே இது டவுட் தான். பட் ஆரியோட பேச்சுக்கு மதிப்பு கொடுப்பான்னு நம்புறேன். வெய்ட் பண்ணி பார்ப்போம்..” என்றான் சோர்வாக.

“ஓக்கே நீ ரெஸ்ட் எடு.. அடுத்து என்னனு நான் உனக்கு அப்பப்போ அப்டேட் பண்றேன்..” என விமல் எழுந்துகொள்ள, அவன் பேச்சுக்கு அமைதியாக இருந்த ஆகன், “அம்மு ஏன் இதுல உன்னை உள்ள கொண்டு வந்தானு நீ எப்போவாவது யோசிச்சிருக்கியா?” என்றான் ஆகன் திடிரென்று.

விமலின் முகத்தில் அதிர்ச்சி.. ‘என்ன சொல்ற?’ என்பது போல் பார்க்க,

அவளோட ஸ்பை நம்ம மீட்டிங்கை அவளுக்கு சொல்லிருக்கனும், சோ அவளுக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சிடக்கூடாதுனு தான், உன்னை அவ பக்கத்துலையே வச்சிக்கிட்டா..” என்ற ஆகனுக்கு, இப்போது மனைவியின் புத்திசாலித்தனத்தில் சிறு கர்வம் கூட உண்டானது.

“வாட்..” என அதிர்ந்து எழுந்தா விமல், அதே வேகத்தில் அந்த சேரில் தொப்பென விழுந்தான்.

“சீ இஸ் வெரி டேஞ்சரஸ் கேர்ள்..” என அதிர்ச்சியில் முனகினான் விமல்.

“எஸ்… சீ இஸ் வெரி வெரி டேஞ்சரஸ் கேர்ள்தான்..” என புன்னகைத்த ஆகன், “நீயும் கவனமா இரு டா..” என விமலையும் எச்சரித்து அனுப்ப, ஒரு வித பயத்துடனே கிளம்பினான் விமல்.

விமல் கிளம்பியதுமே, உடலும் மனமும் துவண்டு போல,  கண்களை மூடி பின்னால் சாய்ந்துவிட்டான். மனம் கடந்த நாட்களை மனதில் அசை போட ஆரம்பித்தது.

ஆகனுக்கு  உண்மை தெரிந்த அன்று மனதளவில் மரித்து தான் போனான்.

மேகமலை விசிட்டிங்கில் நடந்த ஆக்சிடென்ட்டின் போது, அவனுக்கு சிறு சந்தேகம் இருந்தது தான். அவள் மீதிருந்த நம்பிக்கையில் அதை அவன் துருவவில்லை.

ஆனால் ஹைவேயில் நடந்த ஆக்சிடென்டின் போது ‘எப்படியாவது என்னை காப்பாத்திடு, உங்களை எல்லாம் பழி வாங்காமல், நான் சாகக்கூடாது.’ என முனங்கியபடியே அவன் மேல் சாய்ந்த பிறகு, அவனின் சந்தேகம் உறுதியானது.

மனைவியின் வேண்டுதலில், அவளுக்கு தன் குடும்பத்தின் மீது எத்தனை வெறுப்பு இருக்கிறது என்று அப்போதுதான் புரிந்தது.

பழி தீர்க்காமல் இந்த வெறுப்பு மறையாது என்றும் புரிந்தது.

ஆனாலும் மனம் இருக்குமோ, இருக்காதோ என்ற இரண்டுக்கும் இடையில் அல்லாட, மன அழுத்தமும், அதனால் வேலையில் கவனமின்மையும் தான் கூடியது. இப்படியே இருந்தால் தனக்கு பைத்தியமே பிடித்துவிடும், இதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தான்.

அதன் பிறகு தான் மனம் ஒருநிலைக்கு வர, விமலின் உதவியோடு, அவளை கண்காணித்து முழு உண்மையையும் தெரிந்து கொண்டான்.

தெரிந்த உண்மையில் ஆடித்தான் போனான் ஆகன். உள்ளம் வேதனையில் புழுங்கியது.

தன் நெஞ்சை வேக வேகமாக நீவிக் கொண்டான். ஏதோ அடைத்தது போல, இதயமே துடிப்பதை நிறுத்தியதைப் போல மூச்சுக்கள் தாறுமாறாக வெளியேறியது.

வாயைக் குவித்து, காற்றை ஊதி ‘ஊப்ஸ்.. ஊப்ஸ்..’ என தன் மனதின் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்க முயன்றான்.

முடியவேயில்லை! 

‘நானும், என்னுடைய காதலும் அவளுக்கு எப்போதுமே தேவையில்லை’ என்று மண்டையில் பலமாக கொட்டி சொல்லியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

இதில் முட்டாள்தனமாக அவளைப்பற்றித் தெரியாமல், அகானா காலப்போக்கில் அனைத்தையும் மன்னிக்க முடியவில்லை என்றாலும், மறந்து விடுவாள் என்று அனைவரும் நினைத்தது போல, அவனும் நினைத்து, அவளை தப்பாக கணித்து விட்டான்.

ஆனால் அவளோ அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, தன் திட்டங்களை வெகு நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுத்தி இருக்கிறாள்.

அவளின் அறிவுத்திறமையை நினைத்து அவனுக்கு பெருமை தான். ஆனால் அங்கு துடித்துக் கொண்டிருக்கும், துடிக்கப் போகும் உறவுகள் அனைத்தும், அவனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள் ஆயிற்றே. 

அவர்களை அப்படியே விட்டுவிட்டு அவளைப் பற்றி பெருமைப்பட மனம் இடம் கொடுக்கவில்லை.

இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள், மைதிலி அத்தையை வேறு அடைத்து வைத்திருக்கிறாள். மனைவியின் இந்த செய்கையால், அவளின் பதவிக்கு ஏதேனும் பிரச்சினை வருமோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் மயக்கத்தின் பிடியில் இருந்த, மஞ்சரியின் அருகில் அமர்ந்திருந்தார் தாமோதரன். அவருக்கு அருகில் விழிகள் கலங்க கவிதா நின்றிருந்தார்.

“மாமா..” என கணவனின் தோளைத் தொட்ட கவிதாவிடம்,

“நிமிர்ந்து பார்க்கவே பயந்து, யார் என்ன சொன்னாலும் கண்ணுல தண்ணிய வச்சிக்கிட்டு, நம்ம முன்னாடி வந்து நின்ன மஞ்சு, இன்னைக்கு அவ புள்ளைய எப்படி வளர்த்திருக்கா தெரியுமா கவி? அந்த வீட்டு ஆளுங்களை எல்லாம் எதுவுமே செய்ய முடியலையேன்னு, நான் எவ்வளவு நாள் தனிமையில அழுதிருக்கேன் தெரியுமா கவி.? இந்த மனசுல இருக்குற கோபம், ஆத்திரம் அவங்களை ஒன்னுமே செய்ய முடியலன்ற இயலாமை எல்லாமே இன்னைக்கு போன இடம் தெரியல. என் பொண்ணு இன்னைக்கு அதையெல்லாம் மொத்தமா கொட்ட வச்சிருக்கா? அவங்க கொட்டத்தை மொத்தமா அடக்கி வச்சிருக்கா?” என கர்வமாகவும், திமிறாகவும் கூற, கவிதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்ன சொல்றீங்க மாமா?” என புரியாமல் கேட்க,

“இனி நம்ம மஞ்சுவுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்றேன். அவளோட பொண்ணு அவளை ராணி மாதிரி, இல்ல இல்ல மகாராணி மாதிரி வச்சிக்க போறா? அந்த குடும்பமே சிதைஞ்சு, சின்னாபின்னாமா போகப் போகுதுனு சொல்றேன்..” என இப்போது சற்று ஆணவம் கூடிய குரலில் கூற,

“மாமா.. புதுசா எந்த பிரச்சினையும் வேண்டாம். அந்த வீட்டுல ஏற்கனவே நிறைய இழப்புகள், பிரச்சினைகள் போயிட்டு இருக்கு. நீங்களும் இதுல எதையும் ஆரம்பிக்காதீங்க மாமா.” என்றாள் கவிதா கெஞ்சலாக.

“கவி..” என அதட்டிய தாமோதரன் “நாம செய்ய நினைச்ச எல்லாத்தையும், என் பொண்ணு தனியா, புரியுதா தனியா, யாரோட உதவியும் இல்லாம செஞ்சிருக்கா, அதை நினைச்சு பெருமைப்படனும். இப்படி அழுது, மஞ்சுவையும் பயமுறுத்தி, அம்முவையும் குற்றவுணர்ச்சிக்கு தள்ளக்கூடாது. என் அம்மு அவளுக்கான நீதியை தேடிக்கிறா?” என்றவரின் குரலில் கோபமும், பெருமையும் வழிந்தது.

“மாமா நீங்க.. நீங்க அவளுக்கு கொம்பு சீவி விட்டுட்டீங்களா? ஏற்கனவே அவங்களை கொல்ற அளவுக்கு கோபத்துல இருந்தா, இப்போ அவளுக்கான நீதின்னு என்னமோ சொல்றீங்க? அவளுக்கான நீதின்னா?” என இழுக்க,

“வதம்.. அசுர வதம்.. அவங்களை வதம் செய்றதுதான் அவளுக்கான நீதி..?” என கர்ஜனையாக கூற, அந்த அறைக்குள் பதட்டமாக உள்ளே வந்தான் நவீன்.

You may also like

Leave a Comment

About Me

Featured