Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 25.

உனக்கெனப் பிறந்தவள் நானே – 25.

by infaalocious

பகுதி – 25.

சுமித்ரா தன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு ஜுரம் குறைந்த உடனேயே அவளை டிச்சார்ஜ் செய்ய, “கொஞ்ச நாள் நான் என் அம்மா வீட்டில் இருக்கட்டுமா?” என அவள் சுதாவிடம் கேட்டு வைக்க, அவர் தன் மகன் முகம் பார்த்தார்.

‘போகச் சொல்லுங்க’ என்பதுபோல் அவன் தலையை அசைக்க, அவருக்கு அத்தனை கவலையாக இருந்தது.

ஆனாலும் அதை மறைத்துக் கொண்டவர், “உன் அம்மா வீட்டுக்குப் போக என்கிட்டே பெர்மிஷன் கேட்கணுமா? தாராளமா போயிட்டு வாம்மா” அவர் சொல்ல, அவள் கார்முகிலை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.

அவளது மனக் கவலை அவனுக்கும் புரிய, கொஞ்சம் விட்டுப் பிடிக்க முடிவெடுத்தான். உடனடியாக சுடச் சுட எதையும் சரி செய்துகொள்ள முடியாது என அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவள் தன் தாய்வீட்டுக்கு சென்றவள், கார்முகிலிடம் இருந்து மொத்தமாக விலகிவிட்டதுபோல் ஒரு நிலைதான்.

முன்பானால் அவன் இருக்கும் இடத்தில், அவனுடனே இருப்பவள், இப்பொழுதோ அவன் இருக்கும் இடத்தில் இருக்க மறுத்தாள். அவனைப் பார்க்க மறுத்தாள், அவளாக பேச மறுத்தாள். அவ்வளவு ஏன் அவனாக பேசினாலும், கேட்ட கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள்.

அவள் அப்படி இருக்க, அவளை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் தடுமாறிப் போனான். அன்றைக்கு அவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு செல்வதாக இருந்தது. அவளிடம் ‘நீ இன்று வருகிறாய்’ என அவன் சொல்ல, அதற்கு அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

‘இட்ஸ் ஓவர்’ என அவள் சொன்னது அவன் மனதுக்குள் பாறாங்கல்லாக கனத்துக் கொண்டிருந்தது. அவளை அழைத்துச் செல்ல வேண்டி காலையிலேயே அவள் வீட்டுக்கு வந்துவிட்டான். அவனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

அதிலேயே அவனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. ‘உன்னோடு வர மாட்டேன்’ என அவள் அனைவரின் முன்னாலும் சொல்லிவிட்டால் அனைத்தும் முடிந்து போகும் என பயம் பிடித்துக் கொண்டது. அவனது நல்ல நேரமா? இல்லையென்றால் சுமித்ராவின் கெட்ட நேரமோ தெரியாது, சுபிதா அன்று அங்கே வந்தாள்.

அவர்களது ஊடல் பற்றி அனிதா சின்னதாக மகளுக்குச் சொல்லி இருக்கவே, கீழே ஹாலில் அமர்ந்து தங்கையின் அறைக் கதவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த கார்முகிலின் அருகே வந்து அமர்ந்தாள்.

அவள் வந்து அமர்ந்தது கூடத் தெரியாமல் அவன் அப்படியே அமர்ந்திருக்க, “முகில்…” மெதுவாக அழைத்தாள்.

அவனுக்கோ எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் இருக்க, “சுபி, ப்ளீஸ் ஹெல்ப் மீ…” நிஜத்தில் கெஞ்சினான்.

அதில் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போக, “முகில் என்ன இது? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நீ முதல்ல வெளியே வா…” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். பெற்றவர்கள் அங்கேயே இருக்க, இவன் முகத்தை இப்படி வைத்துக் கொண்டு பேசினால், அவர்கள் இன்னும் பயந்து போவார்களே என இருந்தது. எனவே அவ்வாறு செய்தாள்.

“என்ன? இப்போ சொல்லு…” அவள் கேட்க, அவள் கரத்தை பற்றிக் கொண்டான்.

“நான் கொஞ்சம் சொதப்பிட்டேன்… எனக்கு அதை சரி பண்ணியே ஆகணும். சுமி என்மேலே கோபமா இருக்கா, ரொம்ப கோபமா இருக்கா. அதுவும் என்னை விட்டு போற அளவுக்கு கோபமா இருக்கா…” என்றவனுக்கு குரல் கரகரத்துப் போக, பேச முடியாமல் அப்படியே வார்த்தைகளை நிறுத்திவிட்டான்.

“என்ன சுமியா? வாய்ப்பே இல்லை. அவளுக்குப் பிடிச்சவங்களுக்கு வேண்டி அவ என்ன வேணா செய்வா? அவங்க மேலே அவளால் கோபப்படவே முடியாது” என்றவள் அவளது குணத்தைப் பற்றி சொல்ல அதெல்லாம் அவனை சமாதானப்படுத்தவே இல்லை.

ஆனாலும் சுமித்ராவைப் பற்றி அவனுக்கு நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

“நீ என்னை நம்பலையா? சரி… இப்போவே அவகிட்டே போய், உனக்கு புடிச்ச எதையாவது அவகிட்டே கேள்… பிறகு என்ன செய்யறான்னு மட்டும் பார்” சுபி அழுத்திச் சொல்ல, அவனுக்கு என்னவோ நம்பிக்கையே இல்லை.

“என்னை நீ நம்பு முகில்… போ… உங்க கல்யாணம் பேசினப்போ நாங்க எல்லாம் கூட கொஞ்சம் தயங்கினோம். ஆனா அவ என்ன சொன்னா தெரியுமா? ‘அவருக்காக நான் இருக்கணும்’ன்னு எனக்குத் தோணுதுன்னு சொன்னா” அவள் சொல்ல, அவன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.

“நம்பிக்கையா போ முகில்… அவளால் உன்னை வெறுக்கவே முடியாது” அவள் அடித்துப் பேச, கொஞ்சம் தைரியமாக அவள் அறைக்குப் போனான். அவனைப் பார்த்தவுடன் மடித்துக் கொண்டிருந்த செய்கையை ஒரு நொடி நிறுத்தியவள், மீண்டும் அதை செய்யத் துவங்கினாள்.

அவளைப் பார்த்தவாறே அறைக்கதவை பூட்டி அவன் தாழ் போட, சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள். வேகமாக அவள் அருகே வந்தவன், அவளை பின்னால் இருந்து இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

அவன் தன்னிடம் பேச வந்திருக்கிறான் என அவள் எதிர்பார்க்க, அவனது இந்த செய்கையை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

“முகி, என்ன பண்றீங்க? விலகுங்க…” அவனை விட்டு விலக முயன்றாள். அதற்கு அவளை அனுமதிக்காமல் இன்னும் இன்னுமாக இறுக்கினான்.

“வா… நம்ம வீட்டுக்குப் போகலாம், அங்கே இருந்து என்னோட சண்டை போடு” அவள் பின்னங்கழுத்தில் முகத்தை அழுத்திக் கொண்டு அவன் பேச அவளுக்கு என்னென்னவோ ஆனது. அவள் தேகம் அவனோடு இழைய முயல, நிஜத்தில் பயந்து போனாள்.

‘இவரை என்னால் வெறுக்கவே முடியாது’ அவள் மனம் அடித்துச் சொல்ல, உள்ளுக்குள் எதுவோ உடைவதுபோல் இருந்தது.

“நான்தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே… என்னை விட்டு விலகுங்க” ‘விலகுங்க’ என்றவள் அவனை விலக்கித் தள்ளிவிட முயலக் கூட இல்லை என்பதை அவனும் கண்டுகொண்டான். அதுவே அவள் மனதைச் சொல்ல, மனதைப் போட்டு பிசைந்தது.

‘இவளையா உன்னால் என்னை நேசிக்கவே முடியாதுன்னு சொன்னோம்? இப்போ இந்த நிலையில் கூட அவளால் என்னை வெறுக்க முடியவில்லையே, இவளைப்போய் என்னவெல்லாம் பேசிட்டேன்’ அவனுக்கு கண்கள் கசியும்போல் இருந்தது.

“என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டு, இப்போ விட்டுப் போகப் பார்க்கறியா? என் வாழ்க்கையை அழிக்கணும்னு எத்தனை நாளா திட்டம் போட்ட? உன்னை கல்யாணம் பண்ணிக்க முன்னாடியே என்னை எவளும் கண்கொண்டு பார்க்கக் கூட மாட்டா.

“இப்போ இவ்வளவு பெரிய பேரழகியை வைத்தே வாழத் துப்பில்லாத துப்புகெட்டவன்னு என்னை சொல்லணும்னு தான் இப்படி எல்லாம் செய்யறியா? என் மனசை இப்படி உடைச்சுட்டுப் போறது நியாயமா?” அவன் பேசப் பேச, அவன்மேல் கோபம் பெருகியது.

“இதென்ன அடுத்த பழியா?” வேதனையாக கேட்டாள்.

“ஆமா…” அவன் ஒத்துக்கொள்ளவே, அவளுக்கு அவன் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

“என்னை விட்டு நீ விலகிப் போனால் இப்படித்தான் பேசுவேன்” அவன் அழுத்தமாக சொல்வதுபோல் இருந்தாலும், தன் முதுகுப் பக்கம் மொத்தமும் ஈரத்தில் நனையும் உணர்வு. ஏற்கனவே தான் மருத்துவமனையில் செய்த செயலுக்காக அனிதாவின் கண்டனத்துக்கு ஆளாகி இருந்தாள்.

மருத்துவமனையில் அவனைத் தன்னோடு இருக்க அனுமதிக்காததில் அவனது மனம் மிகவும் அடிபட்டுப் போயிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் ஒருவார்த்தை அதைப்பற்றி தன்னிடம் கேட்காதது மனதை என்னவோ செய்தது.

‘இவர் அழறாரா?’ அவள் எப்படி அவனை அழவிட்டுப் பார்ப்பாள்?

“முகி…” என்றவள் அவனைப் பார்க்கத் திரும்ப முயல, அதற்கு அவன் அனுமதிக்கவே இல்லை.

“தப்புதான்… நான் பேசினது ரொம்ப பெரிய தப்பு. உன்னைப் புரிஞ்சுக்காமல் போனது அதைவிட பெரிய தப்பு. நீ அன்னைக்கு சொன்னியே… ‘தப்பு நடந்துடுச்சு… இப்போ என்ன செய்யட்டும்?’ன்னு கேட்ட தானே.

“நானும் இப்போ அதையேதான் கேட்கறேன்… என்ன செய்யட்டும்? சொல்லு… செய்யறேன். ஆனா என்னை விட்டுப் போகணும்னு மட்டும் நினைக்காதே, அப்படி மட்டும் நடந்தா நான் நடைபிணமாத்தான் இருப்பேன்” என்றவன் சரேல் என அவளை விட்டு விலகிப் போனான்.

தன் அழுத முகத்தை அவளிடம் காட்டக் கூட அவனால் முடியவில்லை. வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றான். “முகி… இப்போ மட்டும் நீங்க வெளியே போனீங்க..” அவள் சொல்ல, அப்படியே நின்றுவிட்டான். அவள் வார்த்தையை மீறிப் போகும் தைரியம் எல்லாம் அவனுக்கு சுத்தமாக இருக்கவில்லை.

அவள் அவனுக்கு முன்பாக வந்து நிற்க, வேகமாக தன் கரத்தால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“நீங்க அன்னைக்கு ‘கொஞ்சம் டைம் வேணும்’னு கேட்டீங்க தானே, இப்போ எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” ‘என்னைப் புரிந்துகொள்’ என அவள் கண்கள் கெஞ்ச, அமைதியாக தலை அசைத்தான்.

அவன் முகம் இன்னும் தெளியாமல் போகவே, “இன்னும் எதுக்கு முகத்தை இப்படி வச்சுட்டு இருக்கீங்க?” அவன் கன்னம் தாங்கி கேட்டாள்.

“இட்ஸ் ஓவர்’ன்னு…” ‘சொன்னியே’ என முழுதாக கேட்க கூட முடியாமல் அவன் கண்கள் அப்படி ஒரு பயத்தைக் காட்டியது. அவனது அந்த பயம்… அவளை என்னவோ செய்ய, “ஷ்… முகி…” அவன் கலங்குவது தாளாமல் அவனை அணைத்துக் கொண்டாள்.

“உன் மனசுல இருந்து நான் கீழே இறங்கிட்டேனா?” ‘என்னை விட்டுட்ட… எனக்கு வலிக்குது’ என அவன் சொல்லாமல் சொல்ல, அவள் என்ன சமாதானம் சொல்வாள்?

 அவனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பது புரிந்தது. அவனை இப்படியே விட்டால், தனக்குள் மூழ்கி உடைந்து போவான் எனப் புரிய அவனிடம் பேச முடிவெடுத்தாள். “நீங்க என்னைப் பேசினது ரியலா?” வருத்தமாகக் கேட்டாள்.

“இல்ல… இல்ல… அது… நீ என்னைவிட்டு எப்படி விலகிப் போகலாம் என்ற எண்ணத்தோட வெளிப்பாடுதான் அது. என் மனசுக்குள் இருந்து வந்த வார்த்தைகள் இல்லை” அத்தனை வேகமாகச் சொன்னான்.

“நான் சொன்னதும் அப்படித்தான்… ஏன் நம்ம வாழ்க்கையை இப்படி காம்ப்ளிகேட் பண்ணிகிட்டேன்னு இருக்கு” இப்பொழுது அவள் கலங்க துடித்துப் போனான். தான் தன் வாழ்க்கையை எப்படி எல்லாமோ வாழ நினைத்திருக்க, அது இப்படியாகிப் போனதில் அவளுக்கு வருத்தம்தான்.

தன் வாழ்க்கையை சரிசெய்து கொள்ள வேண்டும் என அவள் முடிவெடுத்ததன் விளைவுதான் இந்த பேச்சுக்கள். ஒருவர்மேல் மற்றவர் குறை சொல்லிக்கொண்டே, சண்டை போட்டுக் கொண்டே விலகி இருப்பதால் யாருக்கு என்ன பயன்?

‘இட்ஸ் ஓவர்’ என வலியில் சொன்ன வார்த்தைகளே தவிர, தீர்மானமாக சொன்ன வார்த்தைகள் இல்லையே. அவள் இப்படிச் சொன்னதில் அவனது மன பாரங்கள் எல்லாம் அப்படியே விலகி ஓடும் உணர்வு.

“நீ இல்லை, நான்தான் காரணம்… நீ ன்னா எனக்கு உயிர் ஏலியன். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாரையும், எதையும் விட நீ எனக்கு ஸ்பெஷல். நீ இல்லாமல் என்னால் ஒரு நாள் இல்ல, ஒருமணி நேரம் கூட இருக்க முடியாது” அவன் அப்படிப் பேசவே, அவனை இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக அணைத்து இருந்தாள்.

தானும் அவளை இறுக கட்டிக் கொண்டவனுக்கு ‘இவளால் எப்படி என்னை நேசிக்க முடியும்?’ என்ற சந்தேகம் அப்பொழுது அற்றுப் போயிருந்தது.

சில நொடிகள் கடக்க, அவள் அவனை விட்டு விலகவே, “ஏலியன்… எனக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடேன்” என்றவனை சில நொடிகள் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தாள். அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் பார்வையை விலக்கிக் கொள்ள, அவள் கண்களில் கனிவு வந்து அமர்ந்தது.

‘நான் அவரை வெறுத்துட்டேன்னு பயப்படறார்’ தனக்குள் சொல்லிக் கொண்டவள், அவன் சட்டையைப் பிடித்து அருகே இழுத்தவள், அவன் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழைப் பதித்தாள்.

அந்த கன்னத்து முத்தம் அவனுக்கு ஆறுதலைக் கொடுத்தாலும், முழு நிம்மதியைக் கொடுக்கவில்லை. கண்களில் பயத்தை தேக்கி அவன் பார்த்து வைக்க, “இந்த’ இடத்தில் கிஸ் பண்ண எனக்குமே முழு தைரியம் இல்லை.

“அன்னைக்கு அவ்வளவு சொன்னீங்களே, என் லிப்ஸ்ல மூழ்கிட்டா என்னை விட்டு விலகவே முடியாது. முழுசா என்னைக் கொள்ளையிடாமல் மீள முடியாதுன்னு சொன்னீங்களே, பிறகு எப்படி ‘இங்கே’ கிஸ் பண்ண?” அவன் இதழ்களை விரல்களால் தொட்டுக் கேட்டாள்.

அதில் அவன் முகம் பூவாக மலர்ந்து போக, “இப்போ சந்தோஷமா? நிம்மதியா இருங்க” அவள் சொல்ல, அவன் முகத்திலும் புன்னகை. இருவருக்குள்ளும் உடனே எல்லாம் சரியாகிப் போகும் என நினைக்கவில்லைதான். ஆனால் நடந்ததையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என எண்ணிக் கொண்டார்கள்.

அன்று மாலையில் அவனோடு தங்கள் வீடு செல்ல அவள் மறுக்கவில்லை. சின்னவர்களின் முகங்களில் இருந்த புன்னகையும், தெளிவும் பெரியவர்களை நிம்மதி கொள்ளச் செய்தது.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு வசந்தம்தான். பிடிவாதமாக அவளோடு உடலால் நெருங்க அவன் முயலவில்லை. ஆனால் மனதால் நிறைய நெருங்கினான். வீட்டில் இருந்தால், அவளோடு ஒட்டிக்கொண்டு, அவளைக் கட்டிக்கொண்டுதான் இருப்பான்.

சமையலுக்கு, மேல் வேலைக்கு என அவர்கள் வீட்டில் ஆட்கள் இருந்தாலும், சுதா உடன் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்வார். அன்றைக்கு சமையல் அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, இங்கே வந்தவர் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

அந்த அக்கா சென்ற கொஞ்ச நேரத்திலேயே சுதாவுக்கு காய்ச்சல் வந்துவிட, கணவனுக்கு அழைத்துவிட்டார். விஷயம் கார்முகிலுக்கு சென்று, சுமித்ராவுக்கும் செல்ல, உடனே அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டாள்.

இவர்கள் வீட்டுக்கு வரும் முன்பாகவே, மூர்த்தி மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டிருந்தார். கார்முகில் அப்பாவுக்கு அழைத்துக் கேட்க, அவர்களே வந்துவிடுவதாகச் சொல்லவே, மதியம் சாப்பிட என்ன இருக்கிறது எனப் பார்க்கப் போனாள்.

அங்கே காய்கறி எல்லாம் பாதி வெட்டியும், உலை கொதிக்கும் நிலையிலும் இருக்க, பாதியில் நின்ற சமையலை சுமித்ரா கைகளில் எடுத்துக் கொண்டாள். அவளை கொஞ்ச நேரமாகக் காணாமல் கிச்சனுக்கு வந்து பார்த்தான்.

பார்த்தவன் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான். சென்னை வெயிலுக்கு, மதியம் அவள் சமையலில் ஈடுபட்டிருக்க, அவள் அணிந்திருந்த குர்தாவின் பின்பக்கம் அவள் வியர்வையின் ஈரத்தால் நனைந்து போயிருந்தது.

அதுவும் முடியை எல்லாம் மொத்தமாக தூக்கி ஒரு கிளிப்புக்குள் அவள் அடக்கி இருக்க, கழுத்தின் ஓரம் எல்லாம் வியர்வைத் துளிகள் வைரம்போல் ஜொலிக்க, அவனுக்குள் அனல்.

‘அங்கே இருந்து போய்விடு’ என புத்தி கதற, கால்களோ அவன் அனுமதி இன்றியே அவள் அருகே சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் சற்று சுதாரித்தவன் அவளுக்கு சற்று தள்ளி பின்னாலேயே நின்றுவிட்டான்.

அவனது அசைவு பின்னால் தெரியவே, “என்ன முகி? பசிக்குதா?” என்றவள் உலை கொதிக்கவே கரண்டியால் கிண்டிவிடத் துவங்கினாள்.

“ம்… ஆமா…” என்றவனது குரலில் இருந்த மாறுபாட்டை அவள் நொடியில் உணர, கரம் அப்படியே நின்றுபோனது. அவள் தன்னை உணர்கிறாள் என்பதிலேயே அவனுக்குள் சில பல உருமாற்றங்கள்.

அவள் கரத்தின் மேலாக தன் கரத்தால் கரண்டியைப் பிடித்து அவன் கிண்டி, அவள் முதுகோடு ஒட்டி உரசிக் கொள்ள மனம் தவித்தது. ஆனால் தனக்கு இடைவெளி வேண்டும் என அவள் கேட்டிருக்க, அதை மதித்தான்.

“சாப்பாடு ரெடியாக எப்படியும் கொஞ்ச நேரமாகும், நீங்க போய் ஹால்ல உட்காருங்க, இங்கே ரொம்ப அனலா இருக்கு” அவன் பார்வை மொத்தமும் தன்மீது இருக்கிறது என அவளுக்குத் தெரிகிறதே.

அவனிடம் பதில் இல்லாமல் போகவே அவள் திரும்பிப் பார்க்கையில், நிலைப்படியில் சாய்ந்தவாறு தலையை சற்று சாய்த்து அவளையே பார்த்திருந்தான். அவள் முகத்தில் நிலைத்து, இதழ்களில் இறங்கி, மேலும் அவன் பார்வை பயணிக்க, அவ்வளவுதான் அதற்கு மேலே அவளால் முடியவில்லை.

இதே பார்வையை அவன் வார்த்தைகளை சிதறடிக்கும் முன்பு கொடுத்திருந்தால் அங்கே சுமித்ரா நடந்து கொண்டிருக்கும் விதமே வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது அவன் இப்படிப் பார்க்கையில் மனதுக்குள் என்னவோ செய்தது.

கண்களுக்குள் ஒரு கலக்கம், ஒரு தடுமாற்றம், ‘முடியவில்லையே’ என்ற வருத்தம். அதைப் பார்த்தவன் அதற்கு மேலே அங்கே இருக்க முடியவில்லை.

“இப்படி கஷ்டப்பட்டு சமைக்கிறதுக்கு வெளியே ஹோட்டல்ல இருந்து வாங்கிக்கலாமே…” நிலைமையை சமாளிக்க முயன்றான்.

“அத்தைக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில் எப்படி வெளியே வாங்க? நான் நல்லாவே சமைப்பேன் தான்… நீங்க பயப்படாதீங்க” என்றவள் திரும்பிக் கொள்ள, அவள் கண்கள் கலங்கியதை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டாள்.

அவளது கலக்கம் அவனுக்கும் புரிய, ‘என்னை தொல்லை செய்யும் விதத்தில் நெருங்காதேன்னு அவகிட்டே சொல்லி இருக்கேன் தானே. இப்போ நான்மட்டும் அதைச் செய்யறது நியாயமே கிடையாது’ தன்னைத்தானே நொந்துகொண்டான்.

“சாரி சுமி…” என்றவன் விலகிச் செல்ல, அதுவும் அவளுக்கு வலித்தது. அப்பொழுது வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவே, வேகமாக வெளியே சென்றார்கள்.

மூர்த்தியும், சுதாவும் காரில் இருந்து இறங்கி வரவே, அதற்கு மேலே அங்கே இருக்க முடியாமல் வெளியே வந்தாள். அவன் சுதாவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு உள்ளே வர, சற்று திடுக்கிட்டாள்.

சுதா காலை ஒரு மாதிரி தாங்கி வைத்து நடக்கவே, “அத்த… என்ன ஆச்சு?” அவள் பதட்டமாக அவர்கள் அருகே ஓடி வந்தாள்.

“ஹாஸ்பிட்டல் உள்ளே போன உடனேயே தலை சுத்தி விழுந்துட்டாம்மா. கால் வேற அதில் பிசகிடுச்சு” மூர்த்தி கவலையாகச் சொன்னார்.

“நாம வந்த பிறகு போகலாம்னு சொல்லியும் கேட்காமல் தனியா அழைச்சுட்டு போயிட்டு, இப்போ பார்…” கார்முகிலின் குரலிலும் அவ்வளவு கவலை.

“விடுங்க பார்த்துக்கலாம்” அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

“நாம பார்த்துப்போம் தான், நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா வலியை இவங்க தானே தாங்கி ஆகணும்” அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிய, அமைதியாகிவிட்டாள்.

மதியம் சுதாவுக்குத் தேவையான உணவைக் கொடுத்து, மருந்தையும் போட வைத்துவிட்டு அவரை உறங்க அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.

“சாப்பாடு ரொம்ப அருமையா இருந்தது சுமி. அப்போவே சொல்ல நினைச்சேன், ஆனால் மறந்துட்டேன். சரி நான் கடைக்கு கிளம்பறேன், அப்பாவும் இல்லாமல், நானும் இல்லைன்னா கஷ்டம்” அவன் கிளம்ப முயல அவனைத் தடுத்தாள்.

“அதென்ன சுமி?” அவனது சுமி என்ற அழைப்பு, அவன் தன்னை அவனைவிட்டு விலக்கி நிறுத்துவதாகத் தோன்ற கேட்டுவிட்டாள்.

“அது…” அவள் முகம் பார்க்க முடியாமல் தடுமாறியவன், “உன்னை ஏலியன்னு கூப்ட்டா என்னால் என் கண்ட்ரோல்ல இருக்க முடியாது” அவன் சொல்ல, ஒருமாதிரி கலங்கிப்போய் அவனைப் பார்த்தாள்.

“முகி… அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு…” அவள் வேகமாக எதையோ சொல்லப் போக, அவள் வாயை தன் கரத்தால் மூடினான்.

“உன் கண்ணில் ‘அந்த’ உணர்வை நான் படிக்கும்போது உன்கிட்டே நான் வருவேன். நாம இதை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிக்க வேண்டாம். இதை நான் கோபமா எல்லாம் சொல்லலை, நமக்காகத்தான் சொல்றேன். உனக்குப் புரியுது தானே?” அவன் கேட்க, அமைதியாக தலை அசைத்தாள்.

You may also like

Leave a Comment

About Me

Featured