பகுதி – 18.
மாடியிலோ வெயில் காய்ந்து கொண்டிருக்க, அங்கே போட்டிருந்த ஷீட் கூட அதன் வெம்மையைக் குறைக்கவில்லை. ‘இங்கே எப்படி இருக்க முடியும்?’ அவள் யோசிக்க, கார்முகில் அவள் அருகே வந்தான்.
“ரொம்ப வெயிலா இருக்கு… இங்கே இருக்க முடியாது” என்றவனது குரலில் அத்தனை ஏமாற்றம். அது அவளை அதிகம் பாதிக்க, “இப்படியே இந்த ஸ்டெப்ஸ்ல வேணா கொஞ்ச நேரம் உட்காருவோமா?” அவன் ஏக்கம் புரியவே அவனிடம் கேட்டாள்.
“உனக்கு ஓகேவா? இங்கேயும் அனல் அடிக்கும்…” கவலையானான்.
“நானும் இந்த ஊர்க்காரி தான்… எனக்கும் இந்த வெயில், அனல் எல்லாம் பழக்கம் தான்… நீங்க வாங்க” என்றவள், அவனையும் அமர்த்தி, தானும் அவன் அருகே அமர்ந்து கொண்டாள். அவனது இடக்கரத்தை மொத்தமாக கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ஏலியன்… நிஜமாகவே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா? நீ இப்போ என் மனைவியா?” அவன் கேட்க, அவன் தோளில் இருந்தே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இவ்வளவு கிட்டே உட்கார்ந்து இருக்கேன், அதுவும் கையை வேற கோர்த்திருக்கேன். நீங்க கட்டுன மஞ்சள் கயிறு இதோ என் கழுத்தில் இருக்கு, இதுக்கு மேலேயும் சந்தேகமா? இப்போ வேற என்ன பண்ணா உங்க சந்தேகம் தீரும்?” என்றவளது முகம் அவனுக்கு அத்தனை அருகே இருந்தது.
அவளது அந்த மதி முகத்தை இமைக்க மறந்து பார்த்திருந்தான். இருவரின் மூச்சுக்காற்றும் சுடும் அளவுக்கான நெருக்கம். அவள் நெற்றி வகிட்டு குங்குமம், அவளது துறுதுறு கண்கள், வழவழப்பான கன்னம், அந்த சிவந்த அதரங்கள்… பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு மூச்சடைத்தது.
‘இவ எனக்கே எனக்கா?’ என எண்ணியவன் அவள் நெற்றியோடு முட்டி, மூக்கோடு மூக்கை உரசினான். இருவரின் மூச்சுக்காற்றும் அனலாக கலந்து வெளியேற, ஒருவர் மூச்சை மற்றவர் பகிர்ந்தார்கள்.
அவன் மீசை ரோமங்கள் அவள் இதழ்களில் மெல்லியதாக பட்டு உரச, அந்த உரசலுக்கே அவளுக்குள் நெருப்பு மூண்டது. அவளது அதரங்கள் மெல்லியதாக நடுங்க, அதன் நடுக்கத்தை தன் முரட்டு இதழ்களால் மூடும் வேட்கை.
ஆனால் அவள் அதரங்களை மட்டும் தீண்டிவிட்டு விலகிவிடும் துணிவு அவனுக்கு சிறிதும் இருக்கவில்லை. அந்த இதழ்களைத் தீண்டிய மறு நிமிடம், தன் கரங்கள் அவள்மேல் ஆளுகை செய்யத் துவங்கிவிடும் அபாயம் இருப்பதை அவன் மனம் நன்கு உணர்ந்தது.
தன் முகத்தை சரித்து, தன் மூக்கால் அவள் கன்னம் தீண்டி, அவள் காதுமடலை உரசி, அப்படியே அவள் கழுத்தில் உரச, அவளது கண்கள் கிறக்கத்தில் அப்படியே மூடிக் கொண்டன. கீழுதட்டை தன் இதழ்களுக்குள் இழுத்து கடித்துக் கொண்டாள்.
அவள் கழுத்தில் அப்படியே அழுத்தமாக முகத்தைப் புதைத்துக் கொண்டு அனல் மூச்சை வெளியேற்றினான். “ஏலியன்… நான் உன்னை இப்போ கிஸ் பண்ணா என்னால விலகவே முடியாது. உன்னை முழுசா கொள்ளையிடாமல் அது ஓயாது. உனக்குப் புரியுதா?” என்றவனது குரல் உணர்வுகளின் பிடியில் அத்தனையாக கரகரத்து ஒலித்தது.
அவன் சிகை கோதி நெரிக்க கைகள் பரபரத்தாலும், தன் செய்கை அவனை இன்னும் தூண்டிவிடக் கூடாதே என்ற நினைப்பில் அவனது அனல் மூச்சை வாங்கி, அமைதியாக இருந்தாள்.
“யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இது நிஜமான்னு கேட்டாங்க. இப்போ என்னன்னா இப்படி சொல்றாங்க?” என்றவள் மென்மையாக சிரிக்க, அவள் கழுத்தில் இன்னும் அழுத்தமாக தன் முகத்தைப் புதைத்தான்.
அவனது மீசை, தாடியின் குறுகுறுப்பும், அவனது அனல் மூச்சின் வேகமும், அவளுக்குள் இறங்க, ‘இந்த தவிப்பெல்லாம் உங்களுக்கு மட்டும்தானா? எனக்கும்தான்…’ உள்ளுக்குள் உருகினாள்.
“ம்ஹும்… இதுக்கு மேலே முடியாது… எழுந்து போய்டு ஏலியன்…” அவனது மறு கரம் எப்பொழுது அவளது இடையை அழுத்தத் துவங்கியது என இருவருக்கும் தெரியவே இல்லை.
“இன்னும் கொஞ்ச நேரம் தான்… ரிலாக்ஸ்… நாம வேற ஏதாவது பேசலாம்” அவன் நிலை மோசமாவது தெரிய, அவனை சரிப்படுத்த முயன்றாள். அவள் அவனை விட்டு விலகி அமர, ஆழமாக மூச்செடுத்தான்.
“நான் இங்கே வந்திருக்கவே கூடாது” என்றவனது பார்வை அவள் மேனியில் பயணிக்க, அவளுக்கு என்னென்னவோ ஆனது.
“ஒரே ஒரு விஷயம் கேட்கவா?” அவனது குரலும், பாவனையும் அவன் எதையோ ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என அவளுக்குச் சொன்னது.
“என்ன கேளுங்க…” என்றவள் அவன் முகம் பார்த்தாள்.
“உன் முகம், கை எல்லாமே இவ்வளவு கலரா இருக்கே, அப்போ…” என்றவன் அவள் பக்கம் சாய்ந்து, அத்தனை வெளிப்படையாக அவளிடம் அடுத்ததை கேட்டு வைக்க, மொத்தமாக சிவந்து, திணறி, திண்டாடிப் போனாள்.
அவள் கண்கள் அப்படி ஒரு அதிர்ச்சியை காட்ட, “ச்சீ… என்ன கேட்கறீங்க நீங்க? ஐயோஓஓ… உங்க டவுட்டை எல்லாம் நைட் நீங்களே பார்த்து தீர்த்துக்கோங்க. இப்படி என்கிட்டே கேட்டு வைக்காதீங்க” ‘அம்மம்மா… இவருக்கு என்ன இப்படியெல்லாம் சந்தேகம் வருகிறது’ என்றுதான் இருந்தது அவளுக்கு.
“நீ சொல்லு…” அவன் குறும்பாக கண்ணடிக்க,
“ச்சீ… உங்களுக்கு இப்படியெல்லாம் கூட பேசத் தெரியுமா? என்னை அழுத்தமா நேருக்கு நேர் கூட பார்க்க தயங்குன ஆளா நீங்க?” அவள் வாயில் கைவைத்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“பேச மட்டும் இல்லை… இன்னும் என்னென்ன தெரியும்னு நீ நைட் பார்க்கத் தானே போற?” அவன் சொல்ல, அவளுக்கோ அடிவயிற்றில் அப்படி ஒரு அவஸ்தையான உணர்வு எழுந்து அவளை ஆட்டி வைத்தது.
“இப்படியே இந்த இடத்திலேயே உன்னை சரித்து…” அவன் இன்னும் எதையோ பேசப் போக, பட்டென எழுந்துவிட்டாள். இந்த அவஸ்தையை இதற்கு மேலே தாங்க முடியும் என்றே தோன்றவில்லை.
“நா…நான் போறேன்… பேச்சைப் பார்…” அவள் அங்கிருந்து செல்ல முயல, நொடியில் அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
அவன் இப்படிச் செய்வான் என எதிர்பாராமல், பூமாலையாக அவன்மீதே விழுந்து வைத்தாள். மொத்தமாக இருவரின் தேகமும் உரசிக் கொள்ள, அவனை உணர்ந்தவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. விழுந்த வேகத்தில் அவனை விட்டு விலகி அவனைப் பார்த்தாள்.
பார்வை அனிச்சையாக அவன் மேனியில் பதிய, அவனைக் கண்டுகொண்டவள் முகத்தை கரத்தால் மூடிக் கொண்டாள். “கடவுளே… ஆப்பிரிக்கா க*தை”” அவள் கீழ் படியில் நின்று புலம்ப, அவனோ அவள் சொன்னதைக் கேட்டு வாய்விட்டே சிரித்தான்.
அவளை உணர்ந்த திளைப்பில் மூழ்கி அவளைப் பார்த்தவன், வாய்விட்டே சிரித்தான். பட்டென அவன் அருகில் அமர்ந்தவள், அதே வேகத்தில் அவன் வாயை தன் கரத்தால் மூடினாள். முகம் மொத்தமும் சிவந்து போனது.
அவளது அந்த முகச் சிவப்பை இமை கொட்டாமல் ரசித்தான். ‘என் மனைவி என்னிடம் மயங்குகிறாள்’ அந்த நினைப்பில் அவனுக்கு உள்ளுக்குள் என்னென்னவோ உணர்வுகள். அவளுக்குள் புதைந்து, திளைத்து, அவளுக்குள் மட்டுமே மூழ்கித் திளைக்கத் தவித்தது.
“இப்போ எதுக்கு இப்படி சிரிச்சு வைக்கறீங்க? யாராவது கேட்டுடப் போறாங்க” ‘என்னால இதுக்கு மேலே முடியாதுடா சாமி’ என உள்ளுக்குள் அலறியவள் எழுந்து ஓடியே போனாள். அதுவும் அவன் பார்வையில் தெரிந்த வேட்கை அவளைச் சுட்டது.
அதற்கு மேல் அவனுக்கு அருகே இருக்கவே முடியாத நிலை. அவள் விருட்டென விலகிச் செல்ல, அவனது சிரிப்பு மட்டுமே அவளைத் தொடர்ந்தது. தங்களுக்கு கொடுத்த அறைக்குச் சென்றவள், நேராக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் தேகம் அவனது முரட்டுத்தனத்தை உணர்ந்த திகைப்பில் இருந்து அவளால் வெளியே வரவே முடியவில்லை. ‘ஆண்டவா, நைட்டு நான் செத்தேன்… எப்படி முடியும்? அதுவும்…’ எண்ணியவள் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
தேகம் மொத்தமும் கிளர்ந்த உணர்வுகள் அடங்க மறுத்தது. மனதுக்குள் ஒருவித எதிர்பார்ப்பும், ஏக்கமும் முளைவிட, அதை அவளுக்கு அடக்கும் வழி தெரியவில்லை. ‘ஓடிபோய் அவர் கரத்துக்குள்ளேயே அடங்கிக் கொள்வோமா?’ மனதுக்குள் வேட்கை எழ, அதில் தன்னைக் குறித்தே நாணினாள்.
‘எனக்கே இப்படின்னா அவரோட நிலை?’ அவனை நினைத்தவுடன் அவளது நினைப்பு இன்னும் அதிகரிக்கவே செய்தது. அவள் அப்படியே நின்றுவிட, அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.
கதவை படபடவென தட்டிய சுபிதா, “சுமி… சுமி… உள்ளே என்ன பண்ற? அங்கேயே தூங்கிட்டியா என்ன?” அவள் கேட்ட பிறகுதான் சற்று கலைந்தாள்.
“இதோ வர்றேன்க்கா…” குரல் கொடுத்தவள், முகத்தை நீரால் அடித்துக் கழுவிவிட்டு வெளியே வந்தாள். சுபிதா அவளையே குறுகுறுவென பார்த்து வைக்க, அவளுக்கு மூச்சடைத்தது.
“அம்மா உன்கிட்டே பேசணும்னு சொல்றாங்க, என்னன்னு கேளு” அவள் சொல்ல, தாயின் அருகே சென்றாள். மகளை தன் அருகே கைபிடித்து அமர வைக்க, அத்தனை நேரமாக இல்லாத பிரிவின் வலி, சட்டென அவளுக்குள் எழுந்தது.
“ம்மா…” என்றவள், தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளது கண்கள் கசிய, அனிதாவுக்குமே கண்கள் கலங்கியது.
“அம்மா, அவதான் குழந்தை மாதிரி பண்றான்னா, நீங்களும் ஏம்மா?” சுபிதா தாயைக் கடிந்தவள், தானும் அவர்கள் அருகே அமர்ந்தாள். தான் அவளைப் பெறவில்லை என்றாலும் அனிதாவுக்கு தன் இல்லாமல் போன இரட்டை சகோதரியின்மேல் அவள் கொண்ட நேசத்தையும் இவளிடம் கொட்டி வளர்த்தார்.
“அம்மாடி… இந்த அம்மா உனக்கு எதையுமே சொல்லிக் கொடுக்கத் தேவையே இல்லை. ஏன்னா எல்லாத்தையும் நீயே புரிஞ்சு நடந்துப்பன்னு எனக்குத் தெரியும். உன்கிட்டே ஒரே ஒரு விஷயம்தான் சொல்லணும், நீ சர்ப்ரைஸ் பண்ற விஷயங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
“ஆனா அதுக்கு முன்னாடி செய்வியே ஒரு விஷயம், அதை எல்லோராலும் சாதாரணமா எடுக்க முடியாதும்மா. அதுவும் உன்னைப்பற்றி தெரிய முன்னாடி அது அவங்களுக்கு ஒரு வலியை, பதட்டத்தைக் கொடுத்துடும்.
“அதனால் இங்கே உள்ளவர்களுக்கு உன்னைப்பற்றி அவங்களுக்கு முழுசா தெரிய முன்னாடி, இங்கே நீ அப்படி எதையாவது செய்து வைக்காதடா” தாய் சொல்லவே அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டாள்.
“அவங்களுக்கு நான் எதுக்காக அப்படிச் செய்தேன்னு தெரிய வர்றப்போ அவங்க சந்தோசம் ரெண்டு மடங்கா ஆகுமேம்மா. அதைப் பார்க்க செமையா இருக்கும் தெரியுமா?” என்றவள் தாயின் முகம் பார்த்தாள்.
“எங்களுக்குத் தெரியாதாடா தங்கம்? சரி… மாப்பிள்ளை கிட்டேயாவது அப்படி கொஞ்ச நாள் விளையாடாமல் இரு… சரியா?” தாய் சொன்னதை அவள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கே அவ்வளவு யோசிப்பவள், அவனுக்கு என எவ்வளவு யோசிப்பாள்… அவன் நிலை கடினம்தான்.
அவள் செய்து வைக்கக் காத்திருக்கும் விஷயத்தின் கனம் அவளுக்கு கொஞ்சம் கூடத் தெரியவே இல்லை.
“சாயங்காலம் பியூட்டி பார்லர்ல இருந்து ஆட்கள் வராங்களா இல்லையா?” சுபிதா தங்கையிடம் கேட்டாள்.
“அவங்க வந்தாலும் இவ அவங்களை மேக்கப் பண்ண விட மாட்டேங்கறா. எப்படியும் ஹேர் டிஸைன் மட்டும்தான் பண்ணப் போறாங்க, பண்ணிட்டு போகட்டும்” தாய் சொல்ல, அதற்குள் அவர்களுக்கு குடிக்க டீ வர எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிப் பறந்தது. அழகு நிலையத்திலிருந்து வந்த பெண்கள், அவளது உடைக்கு ஏற்ற விதத்தில் அழகாக தலை அலங்காரம் செய்தார்கள். கூடவே சிம்பிள் மேக்கப் செய்து விட, சுமித்ரா தேவதை என ஜொலித்தாள்.
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்ற அனிதா மகளுக்கு நெட்டி முறித்தார்.
“அக்கா, மேக்கப் ஜாஸ்தியா இருக்கா? கொஞ்சம் கம்மி பண்ணிடவா?” சற்று கவலையாக சுபிதாவிடம் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்கவே, “மேம்… உங்களுக்கு மேக்கப் போடவே இல்லை, கண்மையும், லிப்ஸ்டிக்கும் மட்டும்தான் போட்டிருக்கோம். முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க, ஒரு ஃபவுண்டெயின் அப்ளை பண்ணி இருக்கோம் அவ்வளவுதான். இதில் எதை கலைக்கப் போறீங்க?” அந்த அழகு நிலையைப் பெண்கள் கேட்டு சிரித்தார்கள்.
“நீங்க இயற்கையாகவே நல்ல கலர் மேம்…” மற்றவள் சொல்ல, அதற்கு மேலே அவர்கள் எதுவும் செய்யவில்லை. நேரம் ஆறு மணியை நெருங்கவே அங்கே வந்தார் செல்வம்.
“கண்ணம்மா… தயாராயிட்டியா?” என்றவர் மகளை நின்று ரசித்தார்.
அவரைப் பார்த்தவுடன், “அப்பா…” என்ற சுமித்ரா ஓடிப் போய் அவரை கட்டிக்கொண்டு கண் கலங்க, அனிதா கணவரை முறைத்தார்.
“உங்களை கிளம்பிப் போகற வரைக்கும் இவ கண்ணு முன்னாடி வராதீங்கன்னு தானே சொன்னேன்? இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க?” கணவனைக் கடிந்து கொண்டார்.
“போச்சு… இப்போ கண்மை, மேக்கப் எல்லாத்தையும் கலைச்சுட்டு அழுது ஊரைக் கூட்டப் போறா. ஏங்க இப்படிப் பண்றீங்க?” அனிதா கடுப்பும், சலிப்புமாக கணவனை கொலைவெறியில் முறைத்தார். அனிதா பயந்தது போலவேதான் சுமித்ராவும் செய்து வைத்துக் கொண்டிருந்தாள்.
செல்வத்தைக் கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதாள். “அப்பா… எங்க போயிருந்தீங்க? காலையில் இருந்து நான் உங்களைப் பார்க்கவே இல்லை… எனக்கு உங்களை விட்டுப் போக வேண்டாம்… நீங்க என் கூடவே இருங்க…” சுமித்ரா தேம்பித் தேம்பி அழவே துவங்கி விட்டாள்.
“அம்மாடி… கண்ணம்மா… தங்கம்… இங்கே பார்… இப்படி அழக் கூடாதும்மா” மகளை பல விதங்களில் சமாதானம் செய்ய முயன்று, அந்த முயற்சி எல்லாம் தோல்வியை மட்டுமே தழுவியது. அவள் போட்டிருந்த மேக்கப் எல்லாம் கரைந்து அவர் சட்டையில் அப்பிக் கொண்டது.
சுமித்ராவுக்கு அனிதாவை விட, செல்வத்தின்மீது ஒரு படி பாசம் அதிகம்தான். அவர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக் கொள்வாள். அவர்மேல் உயிரையே வைத்திருந்தாள். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே, ‘உங்களை விட்டு நான் எப்படிப்பா அங்கே இருப்பேன்?’ என்றுதான் செல்வத்திடம் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
எனவேதான் அனிதா கணவனிடம் ‘அவ கண்ணு முன்னாடி நடமாடிகிட்டே இருக்காதீங்க. கெஸ்ட் கிட்டே மட்டும் பேசுங்க… அவகிட்டே வராதீங்க’ என அவ்வளவு சொல்லி இருந்தார். அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே வந்து நின்ற கணவன்மேல் கோபம்தான் வந்தது.
மகளை எவ்வளவோ சமாதானம் செய்யப் பார்த்தும் முடியாமல் போக, “அனிதா, என்ன பார்த்துட்டு இருக்க? வா வந்து இவளைப் பிடி” மனைவியிடம் கெஞ்சல் பார்வையை செலுத்தியவாறே அழைத்தார்.
“எப்படி எப்படி? நீங்க அழ வைப்பீங்க, நாங்க சமாதானப்படுத்தணுமா? அதையும் நீங்களே செய்ங்க. அப்படியே அவளுக்கு மேக்கப்பும் பண்ணி விட்டுட்டு போங்க” அனிதா சொல்ல, செல்வத்துக்கோ மகள் அழுவதில் கண்கள் கலங்கிவிட்டது.
அதைப் பார்த்த சுபிதா, “அப்பா, அவளை சமாதானம் செய்யச் சொன்னா, நீங்களும் அவ கூட சேர்ந்து அழறீங்க? என்னப்பா இது?” அவள் கேட்க, அது சுமித்ராவிடம் வேலை செய்தது.
“அப்பா… நீங்க எதுக்குப்பா அழறீங்க? நான் உங்களையும் அழ வச்சுட்டேனா? சாரிப்பா… நான் அழலை, நீங்க அழாதீங்க” என்ற சுமித்ரா அதற்கும் அழ, அவர்களால் முடியவே இல்லை. சரியாக அந்த நேரம் அங்கே வந்தார் சுதா.
இவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தவர், அதுவும் சுமித்ராவின் முகமே வீங்கிப் போய், கண்கள் பொங்கி, முகம் சிவந்து அவள் நின்றதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
“அண்ணே… என்னண்ணே இது? இவ எங்கே போய்டப் போறா? எங்க வீட்டுக்கு தானே வரா. நீங்க கூப்பிடற தூரத்தில் இருக்கா. வான்னு கூப்ட்டா வரப் போறா… நீங்களே கூட தினமும் வந்து பார்க்கலாம்.
“அப்படி இருக்கும்போது எதுக்கு அவளை இப்படி அழ வைக்கறீங்க? என்னம்மா இது? உன்னை நாங்க அப்படியா கொடுமை பண்ணிடுவோம்?” சுதா எப்படி பேசினால் அவர்களை தெளிய வைக்க முடியும் எனத் தெரிந்தே பேசினார்.
“ஐயோ என்னம்மா சுதா இப்படி பேசற? நீ நினைக்கற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை” செல்வம் வேகமாக தன்னை மீட்டுக் கொண்டார். சுமித்ராவுக்கு சுதாவின் முன்னால் தான் இப்படி அழுது வைத்தது ஒரு மாதிரியாகி விட்டது.
செல்வம் அங்கிருந்து வெளியேற, மீண்டும் சுமித்ராவை முகம் கழுவ வைத்து, காபி கொடுத்து, ரிலாக்ஸ் ஆக வைத்து அதற்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட்டு விட்டார்கள். சுதா அவள் அழுததை மகனிடமும் சொல்லிவிட, அவனும் அங்கே வந்து நின்றான்.
அவன் அங்கே வரவே, மற்றவர்கள் எல்லாம் வெளியேற, அவள் அருகே வந்தவன் அவள் முகத்தையே கவலையாகப் பார்த்தான்.
“நீ அழுதன்னு அம்மா சொன்னாங்க. இதை… இந்த சூழலை எந்த பொண்ணாலும் அவாய்ட் பண்ணவே முடியாது. இருபத்தஞ்சு வருஷமா பிறந்து வளர்ந்த இடம், பெத்தவங்க அவங்களை எல்லாம் விட்டு வர்றது கஷ்டம் தான், எனக்குப் புரியுது. பட் நானும் கொஞ்சம் நல்லவன் தான்… உன்னை நல்லா பார்த்துப்பேன்.
“எப்போ உங்க வீட்டுக்கு போகணும்ன்னாலும் நீ தாராளமா போயிட்டு வரலாம். நானும் அழைச்சுட்டு போறேன்… நீ இப்படி அழுதா…” என்றவனது முகத்தில் அவ்வளவு கவலை அப்பிக் கிடந்தது. தான் அழுவது அவனை அதிகம் பாதிக்கிறது என்பது புரிய, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.
“முகி… நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் அவ்வளவுதான். மற்றபடி எதுவும் இல்லை. குழலி அண்ணிக்கு கல்யாணமாகிப் போனப்போ அவங்களும் இந்த எமோஷனலை தாண்டி வந்திருப்பாங்க, நீங்களும் அதை ஃபேஸ் பண்ணி இருப்பீங்க தானே? அதுதான் இதுவும்” அவனுக்குச் சொல்லி புரிய வைக்க முயன்றாள்.
“அவளும் சரி, அப்பாவும் சரி… உன் அளவுக்கு அழலையே. ரொம்ப கஷ்டமா இருக்கா?” அவன் குரல் கனிந்து கிடக்க, முகமும் அவன் கவலையை அப்பட்டமாக காட்டியது.
சற்று நேரத்துக்கு முன்னர் அவன் தன் அருகில் இருந்ததற்கும், இப்பொழுது அவன் இருப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசத்தைக் காட்டியது. அது இரண்டுமே தன்னால், தன் மனநிலையால் என்பது புரிய, மானசீகமாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
‘அவர் எவ்வளவு சந்தோஷமா இருந்தார்… அவரோட நாளை, மூடை நான் ஸ்பாயில் பண்றேன்’ மனதுக்குள் நொந்து போனாள்.
“முகி… நான் ஓகே தான்… என்னைப் பாருங்க… நான் ஹேப்பியா தான் இருக்கேன்” தான் சந்தோஷமாக இருந்தால்தான் அவன் நிம்மதியாக இருப்பான் எனப் புரிந்துபோக, தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள்.
“நிஜமா?” அவன் உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்டான்.
“ப்ராமிஸா… போதுமா…” அவன் கரத்தை பற்றிக் கொண்டாள். அவள் என்ன சொன்னாலும் அவன் மனநிலை அதற்குப் பிறகு மாறவே இல்லை. அது அவளுக்கும் புரிய மிகவும் கவலையாகிப் போயிற்று.
வரவேற்பு துவங்கி, உறவினர்கள் அனைவரும் வரத் துவங்கிய பிறகும் கூட, கார்முகில் அவ்வப்பொழுது அவளைக் கவலையோடு பார்த்துக் கொண்டே இருந்தான். அது அவளை அதிகம் பாதித்தது.
“நீ ஓகே தானே?” அவன் சீரான இடைவெளியில் கேட்டு வைக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கே முடியவில்லை.
“முகி… போதும்… இப்போ நீங்க பண்றதைப் பார்த்தால்தான் எனக்கு கவலையா இருக்கு” அவள் சொல்லிவிட, அதற்கு மேலே அவன் எதையும் கேட்கவில்லை. உறவினர்கள் நண்பர்கள் என எவ்வளவோ பேர் வந்தாலும், வாழ்த்துகளுக்கு இடையே சில எதிர்மறை விமர்சனங்களும் எழவே செய்தது.
அவளது தோழியர் சாருமதியும், புவனாவும் வரவேற்புக்கு வந்து இருவரையும் வாழ்த்தினார்கள். அவர்கள் ஏதும் சொல்வார்களோ என அவன் எதிர்பார்க்க, எதிர்மறையாக அவர்கள் எதுவும் சொல்லவில்லை.
“எங்க சுமி ரொம்ப நல்லவ… அவளைக் கண் கலங்காமல் பார்த்துக்கோங்க” எனச் சொல்ல, அவன் புன்னகை முகமாகவே அவர்களுக்கு பதில் கொடுத்தான். வேறு விருந்தினர்கள் என்னென்னவோ சொல்லி வைத்தார்கள்.
அதைக் கேட்டாலும் இருவரும் அதைக் கடக்கப் பழகி இருந்தார்கள். அப்பொழுதுதான் அங்கே வந்தாள் ஆராதனா. அவளைப் பார்த்தவுடன், அகமும், முகமும் மலர வரவேற்றாள் சுமித்ரா.
“வாங்க ஆரு… என்ன லேட்டா வந்திருக்கீங்க?” அவளிடம் கேட்டாள். தன் நெருங்கிய தோழி அன்புச் செல்வியின் இடத்தை, அவள் ஏற்படுத்திய வெற்றிடத்தை ஆராதனாவைக் கொண்டு நிரப்ப முயன்றாள். அதுகொஞ்சம் வேலையும் செய்தது.
“சீக்கிரமே வந்துட்டேன்… ரொம்ப கூட்டமா இருந்ததா, அதனால் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், இந்த கிப்ட் உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே வாங்கி இருக்கேன். அதனால் சேர்ந்தே வாங்கிக்கோங்க” ஆராதனா சொல்ல புன்னகை முகமாகவே வாங்கிக் கொண்டார்கள்.
கார்முகில், ஆராதனாவுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சுமித்ராவையும் அழைத்துச் சென்று இருந்தான். ஆராதனாவைப் பற்றி சொல்லியே அழைத்துச் சென்றிருக்க, அவளைக் காணும் முன்பே சுமித்ராவுக்கு அவளைப் பிடித்துவிட்டது.
அதுவும் தன்னைப் பார்த்தவுடன் சின்னதாக அதிர்ந்து, ஆச்சரியமாகி வரவேற்று உபசரித்த அவளை மிகவும் பிடித்தது. தன்னை விட மிஞ்சிப் போனால் ஒன்றோ இரண்டோ வயது அவளுக்கு அதிகம் இருக்கலாம் எனத் தோன்றியது.
இதையெல்லாம் விட, ஆராதனா கார்முகிலிடம் ஒரு சின்ன சுணக்கத்தையோ, அவன் நிறத்தையோ வேறாக பார்க்காமல் அவனிடம் வெகு இயல்பாக பேசியதால் அவளை இன்னும் அதிகம் பிடித்தது.
ஆராதனா அவர்கள் இருவரையும் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என கட்டாயப்படுத்தி அமர வைத்து விருந்தே சமைத்துப் போட்டாள். அப்படி பார்த்தவுடன் தன்னிடம் பழகிய அவளை அவளுக்கும் பிடித்தது.
அவளிடம் விடைபெற்று கிளம்பிய பொழுது சுமித்ரா அவனிடம் கேட்டாள், “அதென்ன உங்க ஃப்ரண்ட்ஸ் யாருக்கும் என்னை இன்ட்ரோ பண்ணலை, ஆனா இவங்க வீட்டுக்கே என்னை அழைச்சுட்டு வந்திருக்கீங்க. அது ஏன்?” அவனிடம் கேட்டாள்.
“வாழ்க்கையில் நமக்குன்னு ஒரு நாலு மனிதர்களையாவது சம்பாதிச்சு வச்சுக்கணும்னு சொல்வாங்கல்ல, அப்படி ஒருத்தங்கதான் இவங்க. இன்னொன்னு அதியன்… உனக்கு அவனைத் தெரியுமே” அவன் சொல்லி இருக்க, அவளும் ஆராதனாவோடு நெருக்கம் காட்டினாள்.
“ரொம்ப நன்றிக்கா…” கார்முகில் சொல்ல, அவனை முறைத்தாள்.
“சுமி, அவரை விட ரெண்டு வயசு சின்னவ, என்னைப் போய் அக்கான்னு கூப்ட்டு டென்ஷன் பண்றார். நீ அவர்கிட்டே சொல்லி வை” கூட்டம் அப்பொழுது குறைவாக இருக்கவே நின்று பேசினார்கள்.
“ஆக்சுவலா ஆன்ட்டின்னு கூப்பிடணும்” அவன் சொல்ல, சுமித்ரா அவன் விலாவில் இடித்தாள்.
“சு… அப்படில்லாம் சொல்லாதீங்க” சுமித்ரா சொல்ல,
“சரி இனிமேல் சொல்லலை…” அவன் சரண்டர் ஆக, உடன் இருந்த அதியன் வாய்விட்டே சிரித்தான்.
“கொஞ்சம் கூட கூச்சமே இல்ல?” அவன் காதுக்குள் அதியன் நக்கலாக கேட்டு வைக்க, “இல்லையே… இல்லவே இல்லை” அதையும் அவன் ஒத்துக்கொள்ள, அதியனுக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது. அவன் கரத்தில் மஹதி அத்தனை சலுகையாக அமர்ந்திருக்க, அவளுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.
அதுவும் அதியன், ஆராதனா புகைப்படம் எடுத்துக்கொள்ளப் போகையில், அவன் அங்கிருந்து செல்ல முயல அதற்கு கார்முகில் அனுமதிக்கவே இல்லை.
“நீயும் இருடா…” அவன் தன்னுடனே இருத்திக் கொள்ள, ஆராதனாவும் கொஞ்சம் தயங்கினாலும் அவளும் விலகிச் செல்லவில்லை என்பதை கவனித்தாள்.
அவர்கள் இருவரும் விடைபெற்றுச் செல்லவே, “அவங்களுக்குள் ஏதாவது ஓடுதா?” அவனிடம் கேட்டுவிட்டாள்.
“என்ன? அப்படியெல்லாம்…” எனத் துவங்கியவன், “அப்படி ஏதாவது உனக்குத் தோணிச்சா என்ன?” அவளிடம் சற்று ஆர்வமாகவே கேட்டான்.
அவனது அந்த ஆர்வத்தில் அவளது புருவம் இடுங்க, “ஆரு விஷயம் எனக்குத் தெரியும்… அவர்… அவருக்கும் அவங்க மேலே இன்ட்ரஸ்ட் இருக்கா என்ன? அவர் மேரீடா? பார்த்தால் அப்படித் தெரியலையே…” சற்று குழம்பியே கேட்டாள்.
“அவன் விஷயத்தைப் பற்றி பிறகு சொல்றேன். அவனுக்கு அவங்கன்னா ரொம்ப இஷ்டம். அதுவும் மஹதின்னா உயிரையே விடுவான்னா பார்த்துக்கோ. ஆராதனா எப்படின்னுதான் தெரியலை… இவங்க ரெண்டுபேரும் வாழ்க்கையில் சேரணும்னு எனக்கு ரொம்ப ஆசை” அவன் எதிர்பார்ப்பாய் சொல்ல அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“எனக்கென்னவோ அவங்களுக்கும் அவர் மேலே விருப்பம் இருக்கும்னு தோணுது” அவள் சொல்ல, அவன் முகத்தில் அப்படி ஒரு வியப்பு.
“எப்படி சொல்ற?” படபடத்தான்.
“அவங்க குழந்தையை அவர் கூட நம்பி பழக விட்டிருக்காங்க. அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்க மறுக்கலை. இதையெல்லாம் வச்சுதான் சொல்றேன்” அவள் சொல்ல, அவன் முகம் வாடியது.
“அதுவா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி மஹதியை சிலபேர் கிட்னேப் பண்ணப் பார்த்தாங்க. அப்போ அதியன்தான் அவனோட உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அவளைக் காப்பாற்றிக் கொடுத்தான்.
“அதுக்கு முன்னாடி வரைக்கும், ஆராதனா அவன் முகம் பார்த்து கூட பேச மாட்டாங்க. அவளையும் அவன் கடைக்கு அனுப்ப மாட்டாங்க, இப்போ இந்த பிரச்சனைக்குப் பிறகு தான் அவன் கூட பேசறாங்க. சோ… நீ அதை வச்சு சொல்லாதே” இடை இடையே ஆட்கள் வந்தாலும் இவர்களது பேச்சு தங்கு தடையின்றி நடந்தது.
“நான் அதை வச்சு மட்டும் சொல்லலை… அவங்க கண்ல எனக்கு சம்திங் தெரிஞ்சது. அவங்க அவரைப் பார்க்கும் பார்வையில் ஒரு சொந்தம் தெரியுது” அவள் அழுத்திச் சொல்ல, அவனுக்கு அது உண்மையாக இருக்க வேண்டும் என மனம் விரும்பியது.
“நடந்தால் நல்லாதான் இருக்கும்… பார்ப்போம்…” என்றவன் அதை அத்தோடு நிறுத்திக் கொண்டான். அடுத்ததாக அங்கே அவர்களுக்குப் பேச நேரமின்றி போக, தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.
அங்கே அனைத்தும் முடிகையிலேயே நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்க, செல்வம் குடும்பத்தார் அப்படியே தங்கள் வீட்டுக்கு கிளம்ப முயன்றார்கள். அனைவரும் விடைபெற, செல்வம் மகளிடம் வந்தவர் அவள் தலையை வருடிவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் அகன்றுவிட்டார்.
“அம்மாடி பார்த்து நடந்துக்கோ… நாளைக்கு காலையில் நாங்க வந்து பார்க்கறோம்” அனிதாவும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
மணமக்கள் காருக்கு வரவே, “நீ ஓகேயா?” அவன் அதைக் கேட்ட பொழுது அவளை நெருங்கி அமர்ந்து கேட்க, அதைப் பார்த்து அவள் தேகம் சூடானது. அவனது எதிர்பார்ப்பு புரிய அது அவளை இன்னும் என்னவோ செய்தது.
“டபிள் ஓகேதான்…” அவன் காதுக்குள் இதழைப் பொருத்தி அவள் சொல்ல, அவனோ அவளோடு இன்னும் இழைந்தான்.
அது அவளை என்னவோ செய்ய, தானும் அவனோடு இழைந்தாள். ஒரு வழியாக வீடு வந்து சேர, பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அவர்களை அப்படியே அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அறைக்குள் வந்த உடனேயே அவளை பின்னால் இருந்து அணைத்து, அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவன் அதிரடியில் அவள் தேகம் சிலிர்க்க, “முகி குளிக்கணும்…” அவள் முனக, அவளை விட்டு விலகினான்.
அவளது நகைகளை எல்லாம் கழட்ட அவன் உதவி செய்ய, அந்த லாங் கவுனை அங்கேயே கழட்டியாக வேண்டிய கட்டாயம். அவள் தயக்கமாக அவன் முகம் பார்க்க, மெல்லிய சிரிப்போடு அவன் அவளையே பார்த்திருந்தான்.
அவன் பார்வையின் வீச்சை தாளாமல், “முகி ப்ளீஸ்…” அவள் சிணுங்க,
“இன்னைக்கு… அதுவும் இப்போ மட்டும்தான்…” என்ற நிபந்தனையோடு அவன் திரும்பி நின்றுகொள்ள, வேகமாக உடை மாற்றி, டவ்வலால் தன்னை மூடிக் கொண்டாள். அப்படியே மாற்ற வேண்டிய உடையையும் எடுத்துக் கொண்டு அவள் உள்ளே சென்று மறைய ஒரு பெருமூச்சை தாராளமாக வெளியேற்றினான்.
அவளோ உள்ளே சென்ற வேகத்தில், “முகி… என் ஹேண்ட் பேகுக்கு உள்ளே ஒரு கவர் இருக்கும் பாருங்க, அதை எடுத்துத் தாங்களேன்” அவள் தலையை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டியவாறு கேட்டாள்.
அந்த முகத்தையும், அதில் இருந்த நீர்த்துளிகளையும் விழுங்கும் பார்வை பார்த்தவாறே அவளது கைப்பையை தேடி எடுத்தான். ‘அவள் எதைக் கேட்டாள்?’ என்ற தேடலோடு அவன் உள்ளே துழாவ, அதில் இருந்ததோ ஒரே கவர் தான்.
அதைக் கையில் எடுத்தவன், பெரும் திகைப்போடு அவள் முகம் பார்க்க, அவளோ தனக்குள் பொங்கிய சிரிப்பை முயன்று அடக்கிக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.
1 comment
ஐயோ பாவம் முகில்🤪🤪🤪🤪