பகுதி – 22.
சுமித்ரா ஆதவனை தூக்கிக் கொள்ள, சம்பந்தி வீட்டினர் வந்து, சுதாவை அழைத்துச் செல்ல, செல்வம் மூர்த்தியை பார்த்துக் கொண்டார். சுமித்ரா அப்படி ஒரு மாதிரி திகைத்துப்போய் நின்ற கோலமே சுபிதாவுக்கு எதுவோ சரியில்லை எனச் சொன்னது.
“சித்தி… கார்… ரிமோட் கார்… வேணும்…” ஆதவன் அவள் இடுப்பில் இருந்தே குதித்துக் கொண்டிருந்தான்.
திலக் வந்து கார்முகிலை அழைக்க, “நீங்க வந்திருக்கும் கெஸ்ட்டை எல்லாம் பாருங்க. நாங்க என்ன அந்நியமா? இது நம்ம வீட்டு விசேஷம், நாங்க வர்றோம்…” அவன் இன்முகமாகவே சொல்ல, திலக் அதற்கு மேலே அவனை வற்புறுத்தவில்லை.
“சரி வாங்க…” என்றவன் “சுபி…” மனைவியிடம் கண் காட்டிவிட்டு சென்றுவிட்டான்.
“சுமி… உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா? எதுக்கு இப்படி நிக்கற? சியரப்… என்ன பெருசா பின்னாடி வருதா?” என்றவள் அவள் தோளை அழுத்த, சுமித்ராவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“அக்கா, அது…” ‘நான் நிஜமாகவே மறந்துவிட்டேன்’ எனச் சொல்ல முடியாமல் தவித்தாள்.
“ஷப்பா… உன் பில்ட்டப் தாங்கலை போ… சரி நீ முதல்ல உள்ளே வா… வா முகில்…” அவனையும் அழைத்தாள். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரி, ஒரே பேட்ச் ஆனால் வேறு பிரிவு என்பதால் அவர்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும்.
சுபிதா முதலில் அவனை ‘அத்தான்’ என அழைத்ததில் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான். “சுபி ப்ளீஸ்… இந்த அத்தான் ரொம்ப வியர்டா இருக்கு, என்னை முகில்ன்னே கூப்பிடு… அதே மாதிரி உன்னைப் பார்த்தால் வாங்க, போங்கன்னு எல்லாம் கூப்பிட வர மாட்டேங்குது, சாரி…” என அவளிடமே சொல்லிவிட்டான்.
அதைக் கேட்டவளோ, “தேங்க் காட்… உன்னை எப்படி கூப்பிடறதுன்னு எனக்கும் பயங்கர குழப்பம் இப்போ தான் நிம்மதியா இருக்கு” ஒருவித சந்தோஷத்தில் சொல்லி இருந்தாள்.
“உன் அவருக்கு நான் உன்னை இப்படி கூப்பிடறது எதுவும் பிரச்சனை இல்லையே?” அவன் கேட்டு வைத்தான். அவனது மச்சான் குமார் செய்யும் அலட்டல் எல்லாம் அவனுக்குத் தெரியுமே.
“அவர்கிட்டேயே வேணாலும் கேட்டுக்கோ…” என்று திலக்கையும் அவனிடம் தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்தாள். சற்று தயக்கத்தோடு தான் அவனைப் பார்த்தான். ஆனால் திலக் அத்தனை இனிமையானவனாக இருந்தான்.
“முகில்… சில விஷயங்களை, உறவுகளை நாம அப்படியே கேரி ஓவர் பண்றதுதான் அழகே. உங்களை உறவா நினைப்பதை விட, ஒரு ஃப்ரண்டா பார்க்கறது இன்னுமே நமக்குள்ளே ஒரு ஒட்டுதலை கொடுக்கும். சோ… நீங்க அப்படியே இருங்க…” அவன் சொல்ல, அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
“ஆனால் நான் உங்களை அண்ணான்னு தான் கூப்பிடுவேன்…” அவன் உரிமையோடு சொல்ல, “ஆமா எனக்கும் தம்பியா இருந்து போர் அடிக்குது, உங்களுக்கு அண்ணாவா இருந்துட்டு போறேன்” அவன் சொல்லி சிரித்தது நினைவுக்கு வந்தது.
“சுபி… நீ போ… நாங்க வர்றோம்…” அவளையும் குழந்தையையும் கொஞ்சம் கட்டாயப்படுத்தியே அங்கே இருந்து அனுப்பி வைத்தான். ஆதவன் அந்த அளவுக்கு தன் சித்தியை விட்டு போக மாட்டேன் என அடம் பிடித்தான்.
“சுமி… நிஜமாவே கிப்ட் வாங்கலையா?” அவளிடம் கேட்க, அவள் கண்கள் அப்படியே கலங்கிப் போனது. அவள் பரிதாபமாக அவனைப் பார்த்து வைக்க, அவனுக்கு உருகிற்று.
“நீ வா…” என்றவன் தங்கள் காருக்கு அவளை அழைத்துச் சென்றான்.
“முகி… முகி… நான்…” தன் செய்கையை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாமல், அவளுக்கு மூச்சடைத்தது. இன்று வரைக்கும் அவள் இப்படி செய்ததே இல்லையே. தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றி மட்டுமே யோசிப்பவள் அவள். அப்படி இருக்கையில் அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
“ஷ்…ஷ்… சுமி… ரிலாக்ஸ்… முதல்ல இந்த அளவுக்கு எமோஷனல் ஆகாதே. தண்ணி குடி” என்றவன் அவளைப் பிடிவாதமாக தண்ணீர் குடிக்க வைத்தான்.
அவள் குடித்து முடிக்கவே, “இப்போ என்ன? கிப்ட் வாங்க மறந்துட்ட அவ்வளவுதானே. நாம என்ன அண்டார்ட்டிக்கா காட்டுக்குள்ளேயா இருக்கோம்? வெளியே போனால் ஆயிரம் கிப்ட் ஷாப் இருக்கு.
“நீ என்ன வாங்கணும்னு ப்ளான் பண்ணி இருந்த, அதை மட்டும் சொல்லு, நான் போய் வாங்கிட்டு வர்றேன். நீ இங்கே இல்லைன்னா உன்னைத் தேடுவாங்க, அதனால்தான் நான் மட்டும் போறேன்னு சொன்னேன்” அவள் தானும் வருவதாக சொல்லவே வேகமாகச் சொன்னான்.
“ஆது குட்டி ரிமோட் கார் வேணும்னு கேட்டுட்டே இருந்தான். நான் அவனுக்கு சின்னப் பசங்க ஓட்டற ரியல் ரிமோட் காரே வாங்கிக் கொடுக்கலாம்னு இருந்தேன்” அவள் சொல்ல, அவளை இழுத்து, அவள் முகத்தை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டான்.
“அவ்வளவுதானே… நான் பக்கத்தில் ஒரு கடையைப் பார்த்தேன், நான் போய் வாங்கிட்டு வர்றேன்” அவன் சொல்ல, அவனைத் தடுத்தாள்.
“நீங்க எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா நான்…” சொல்லிக் கொண்டே வந்தவள் அவன் பார்த்த பார்வையில் வாயை கப்பென மூடிக் கொண்டாள்.
“சாரி…” அவள் மெல்லியதாக முனக, அவளது அந்த அழுத கண்களும், சிவந்த முகமும், துடிக்கும் அதரங்களும் அவனை என்னவோ செய்தது. இந்த ஒரு மாதமாக உள்ளுக்குள் உரு போட்ட அனைத்தும் கரைந்து காணாமல் போகும் உணர்வு.
அவளை அப்படியே இழுத்து அணைத்து, அவள் அதரங்களை கவ்விக்கொள்ள மனம் தவிக்க, அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை மொத்தமும் தன்மீதே நிலைத்திருக்க, அதுவும் அவன் தன் இதழ்களை விழுங்கி விடுவதுபோல் பார்க்க, அதை அவள் கண்டுகொண்டாள்.
அவனது தவிப்பு இப்பொழுது அவளுக்குள் இடம் பெயர, “முகி…” அவள் அழைக்க, அவள் தன்னைக் கண்டுகொண்டதை அவன் உணர்ந்தான். வேகமாக தன் அலைபேசியை தேடி எடுத்தவன், அதில் பார்வையைப் பதித்த மறு நிமிடம் ஒருமாதிரி இறுகிப் போனான்.
அது அவளுக்கும் புரிய, “முகி…” மீண்டுமாக அழைத்தாள்.
“நீ பார்ட்டி நடக்கற இடத்துக்குப் போ, நான் இப்போ வர்றேன்” அவன் சொல்ல, அவனையும் அவன் கரத்தில் இருந்த அலைபேசியையும் பார்த்தவள், பார்த்த வண்ணமே இருந்தாள். ஒரு மாதங்களுக்கும் மேலான பிறகு அவன் கண்களில் சிறு இளக்கத்தைக் கண்டாள்.
ஆனால் அவன் அதை மாற்றிக்கொண்ட விதம்… அந்த அலைபேசியை வாங்கிப் பார்க்க மனம் தவிக்க, அதை அவனிடமிருந்து வாங்கியும் விட்டாள்.
‘முடியாது, கொடுக்க மாட்டேன்…’ என்று எல்லாம் அவன் எந்த விதமான மறுப்பையும் காட்டவே இல்லை. அதை வாங்கியவள், அந்த திரையைப் பார்த்த மறு நிமிடம் அந்த அலைபேசியை தவறவிட்டாள்.
அந்த திரையில் ஒளிர்ந்த கோமாளி புகைப்படம் அவள் முகத்தில் அறைய, அத்தனை வேதனையோடு அவனைப் பார்த்தாள்.
“இது நம்ம நேரமில்லை… நாம போகணும்” அவன் சொல்ல, அவனை இழுத்து இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
“நீங்க இதை மறக்கவே மாட்டாங்களா?” வேதனையாக கேட்டு வைக்க,
“மறக்கக் கூடாதுன்னுதான் அதை தினமும் பார்த்துக்கறேன்” ஒரு மாதிரி இறுகிப் போய் உரைக்க, அதற்கு மேலே அங்கே இருக்க முடியாமல் காரில் இருந்து இறங்கிவிட்டாள். மனம் ஒரு மாதிரி விண்டு வலிக்க, அதை அவளால் தாங்கவே முடியவில்லை.
‘நான் என்ன செய்யட்டும்?’ மனம் ஓலமிட, அவளால் அழக் கூட முடியவில்லை. தன் சின்ன முக மாற்றம் கூட அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிடும் என்பது இன்னும் கவனமெடுக்கச் செய்தது.
தன் அழுகையை அவள் எத்தனை தூரம் அடக்க முயன்றாளோ, அந்த அளவுக்கு அது அவள் கழுத்தை இறுக்கிப் பிடிக்க, தொண்டைக்குழி கசந்து வழிந்தது. அங்கேயே இருக்க முடியாமல் அவள் வீட்டுக்குள் சென்று தாயின் அருகே அமர்ந்துவிட்டாள்.
தாய் ஒரு நொடி அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, அந்த பார்வையில் தெளிந்துவிட்டாள். “அக்கா… என்ன வேலை இருக்கு? நான் ஏதாவது செய்யணுமா?” என்றவாறு அவள் செல்ல, அனிதாவின் முகம் தெளியவில்லை.
“மாப்பிள்ளையை எங்கே சுமி?” தாய் கேட்க, ஒரு நொடி பொய் சொல்லத் தெரியாமல் தடுமாறிப் போனாள்.
“அது… அவங்க… அவங்களுக்கு ஒரு ஃபோன்… ஃபோன்ம்மா, பேசிட்டு இப்போ வந்துடுவாங்க” அவள் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியே போனாள். வெளியே பார்ட்டி நடக்கும் இடத்தில் அவள் சென்று நின்றுகொள்ள, சுதாவிடமிருந்து விலகி, சுபிதாவைத் தேடிச் சென்றார் அனிதா.
அந்த நேரம் அவள் கிச்சனுக்குள் எதையோ எடுக்க வர, “சுபி… நம்ம சுமி…” அவர் துவங்க, “என்னவோ சரியில்லைம்மா…” அவள் முடித்து வைக்க, இருவரின் முகங்களிலும் கவலை அப்பிக் கொண்டது.
“அவங்களுக்குள்ளே ஏதும் பிரச்சனையா இருக்குமா சுபி? என் மனசு கிடந்தது அடிச்சுக்குது?” அனிதாவின் குரலில் அப்படி ஒரு கவலை.
“அம்மா, நாமளா எதையும் யூகிக்க முடியாது. அவளும் அவ பிரச்னையை நம்மகிட்டே சொல்ல மாட்டா” சுபிதாவிடமும் தாய்க்கு குறையாத கவலை தொனித்தது.
“இப்போ என்னடி செய்ய? மாப்பிள்ளை கிட்டே பேசிப் பார்க்கறியா?” மகளது வாழ்க்கை குறித்த பயம் அவரிடம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அம்மா… இங்கே நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் நேரத்தில் அவர்கிட்டே பேசுவது சரியா இருக்காதும்மா. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, நாம பேசிக்கலாம்” வேலைகள் அவளைக் கட்டி இழுக்கையில் நின்று எப்படி பேச முடியும்?
அதோடு அந்த ‘கிப்ட்’ விஷயத்தை வேறு அவரிடம் சொல்லி, தாயை இன்னும் கலவரப்படுத்த அவள் விரும்பவில்லை. சுமித்ரா ‘இல்லை’ என ஏமாற்றுவாள்தான். அதேபோல்தான் இதுவும் என்று தாயைப் போலவே அவளும் முதலில் நினைத்தாள்.
ஆனால் தங்கையின் கண்களில் தெரிந்த அந்த அப்பட்டமான அதிர்ச்சி… சுபிதா இதுவரை தன் தங்கையிடம் கண்டிராதது. அதுவே அவளுக்குள் ஒரு அபாய மணியை ஒலிக்க விட்டது. அதை அவள் தாயிடம் சொல்லாமல் மறைத்தாள்.
“நீ பாரு… நான் அவகிட்டே போறேன்” என்ற அனிதா சின்ன மகளைத் தேடித் போனார். அங்கே தோட்டத்தில் குழந்தைகளோடு குழந்தையாக அவள் விளையாடிக் கொண்டிருக்க, பார்த்தது பார்த்தபடி நின்றார்.
அடுத்த சில நிமிடங்களில் கேக் கட் செய்யலாம் எனச் சொல்லி, அனைவரையும் ஒருங்கிணைக்க, “சுமி, முகிலை எங்கே?” சுபிதா தங்கையிடம் கேட்டாள்.
“இப்போ வந்துடுவாங்கக்கா… நீங்க கேக் கட் பண்ணுங்க” என்றவள் அலைபேசியில் அவனுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தாள். எப்படியும் அவன் கடைக்குச் செல்ல வேண்டும், வேண்டியதை தேர்வு செய்ய வேண்டும், விலை கேட்டு, முடித்து பே செய்துவிட்டு, பிறகு திரும்பி வர வேண்டும். எப்படியும் நேரம் ஆகத்தானே செய்யும்.
இடையில் ‘இதுவா?’ ‘இல்லை இதுவா?’ ‘இது ஓகேயா?’ ‘இது பிடிச்சிருக்கா?’ “இல்லையென்றால் இது பெட்டரா?’ என வரிசையாக புகைப்படம் வந்துகொண்டே இருக்க, அதற்கு வேறு நேரமானது. ஒரு வழியாக அவன் ஒரு அழகான ஜீப்பை தெரிவு செய்துவிட்டு அதை வாங்கிக் கொண்டு வந்தான்.
வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பரிசுகளை வழங்க, சுதா தன் மகனைத்தான் தேடினார். சுதா ஆதவனுக்கு என ஒரு சின்ன கைச்செயின் ஒன்றை வாங்கி இருந்தார். எனவே அவர்கள் சபையில் அதைக் கொடுத்துவிட்டு, சுமித்ராவைத்தான் பார்த்தார்கள்.
அவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என சுத்தமாகத் தெரியவில்லை. அவளைக் கொஞ்சம் கலவரப்படுத்திவிட்டு, கார்முகில் வந்து சேர்கையில் கேக் கட்டிங் முடிந்து, புப்ஃபே உணவும் துவங்கி இருந்தது. அவன் வந்து சேர, அவனை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
“அம்மாடி பார்த்து…” அவள் சென்ற வேகத்தைப் பார்த்து சுதா பதறினார். கார்முகிலுமே அவளது வேகத்தைப் பார்த்தவன், மீதி தூரத்தை அவன் கடந்தான். அப்படியும் அவனை நெருங்கிய நேரம், கால் இடற, விழப் போனவளை கைபிடித்து தடுத்தான்.
“எதுக்கு இவ்வளவு வேகம்? நான் வர மாட்டேனா?” அவளை மென்மையாக கடிந்து கொண்டான்.
“வாங்கிட்டீங்களா?” அவனிடம் படபடத்தாள்.
“வாங்கிட்டேன்… ஆனா காருக்குள்ளேயோ, டிக்கியிலேயோ நிக்கலை. சோ… லோட் ஆட்டோவில் பின்னாடி வருது” அவன் சொல்ல, அவளது முகம் சற்று வாடித்தான் போனது. அதைப் பார்த்தவன், அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தான்.
ஆதவன் விளையாடிக் கொண்டும், புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து, மறுத்து என செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது தன் சித்திடம் காரைக் கேட்க மறக்கவில்லை.
விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லத் துவங்கவே, சுமித்ராவிடம் வந்த திலக், “உன் சஸ்பென்ஸ் கிப்ட் எல்லாம் இவ்வளவு லேட் ஆகாதே” அவன் கேட்க, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. அவளுக்கு அருகே அப்பொழுது கார்முகிலும் உடன் இருந்தான்.
“என்ன சஸ்பென்ஸ் கிப்ட்…?” அவன் கேள்வியாக நிறுத்த, அதற்கு பதில் சொல்லப் போகையில் ஒரு நண்பன் திலக்கைத் தேடி வந்தான். அதில் அவன் பதில் சொல்லவே மறந்தும் போனான். அப்பொழுது மட்டுமா? அதைத் தொடர்ந்து வெளி ஆட்கள் அனைவரும் விடைபெற்றுச் செல்ல, குடும்பத்தினர் மட்டுமே மிச்சம் இருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண, பெரியவர்கள் அனைவரும் சீக்கிரமே தங்கள் உணவை முடித்துக் கொண்டார்கள். பேச்சு ஒவ்வொன்றாக இடம் மாறி, சுமித்ராவிடம் வந்து நிற்க, அனைவரிடமும் முகம் மாறாமல் காக்க மிகுந்த சிரமப்பட்டாள்.
“முகில்… உங்களுக்கு சுமித்ராவைப் பற்றி இந்த நேரம் தெரிந்து இருக்குமே, சுமி… உன் ஐத்தானுக்கு என்ன கிப்ட் எல்லாம் கொடுத்த?” திலக் கேட்க, அவள் என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாற, கார்முகிலோ புருவம் நெரித்தான்.
“என்ன? என்ன சொல்றீங்க?” அவன் புரியாமல் கேட்டு வைக்க,
“என்ன முகி இப்படி கேட்கறீங்க? அப்போ இது வரைக்கும் சுமி உங்களுக்கு கிப்ட்டே கொடுக்கலையா?” பெரும் அதிர்வோடு கேட்டான் திலக்.
“சுமி…?” அவன் கேள்வியாக அவளைப் பார்க்க, சுமித்ராவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கார்முகில் அப்படியும் குழப்போத்தொடு அவளையே பார்த்திருக்க, திலக் வாய்விட்டு சிரித்தான்.
“ஒ ஹோ… அப்போ ஏதோ ரொம்ப பெருசா ப்ளேன் பண்றியா? எனக்கு புரிஞ்சுபோச்சு… முகில்… வெயிட் அண்ட் வாட்ச்” திலக் சொல்லிக் கொண்டே போக, அந்த நேரம் அவனது அலைபேசி இசைத்து அவனைக் கலைத்தது.
“வந்துட்டீங்களா? இதோ வர்றேன்…” என்றவன், “சுமி… கிப்ட் வந்துடுச்சு. ஆதவனைக் கூப்பிடு…” அவன் சொல்ல, சுமித்ரா ஆதவனைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள். அவள் பின்னாலேயே பெரியவர்கள் அனைவரும் செல்ல, பார்த்தவர்கள் அப்படியே நின்றுவிட்டார்கள்.
“என்ன ஜீப்பா? அவனுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது” சுபிதா சொல்ல, அதோடு கூட ஒரு பைக்கும் இறங்க, இரட்டை அதிர்வு.
சுமித்ரா தன் கணவனை ஆச்சரியமாகப் பார்க்க, “எனக்கென்னவோ அவனுக்கு பைக் இன்னும் புடிக்கும்னு நினைக்கறேன்” அவன் சொல்லி முடிக்கும் முன்னர், ஆதவன் அந்த பைக்கை நோக்கி ஓடி இருந்தான்.
“சுமி… அவன் ரிமோட் கார் கேட்டா, இதென்னடி பண்ணி வச்சிருக்க?” சுகமாக சலித்தாள்.
“அதையெல்லாம் விடு… அவன் எவ்வளவு என்ஜாய் பண்றான்னு பார்” அவள் சொல்ல, நிஜத்தில் ஆதவன் அப்படித்தான் குதித்துக் கொண்டு இருந்தான். அவனது அந்த சந்தோஷத்துக்கு முன்னால் மற்றது எல்லாம் அடிபட்டுப் போனது.
எப்படியோ அங்கே ஆதவனின் கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு, இறுதியாக அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.
வீட்டுக்கு தங்கள் அறைக்குள் வந்த உடனேயே அவனைக் கட்டிக்கொண்டு அவள் தன் நன்றியை வெளிப்படுத்த, அவளை விலக்கி நிறுத்தினான். அதில் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போக, அவனோ அவள் முகம் பார்க்காமல் விலகிச் சென்றான்.
‘இப்படியே போனால் எப்படி?’ அவள் மனதுக்குள் ஆயாசமாக இருந்தது. பேச முயன்றால் அதற்கும் அனுமதிக்கவில்லை. சமாதானப்படுத்தலாம் என்றால் அதற்கும் ஒத்துழைக்காமல் போனால் அவளும் என்னதான் செய்ய?
அவன் குளித்துவிட்டு வெளியே வர, “முகி… இப்படியே இருந்தால் எப்படி?” தவறு தன் பக்கம் இருக்கவே கேட்டாள்.
“எனக்கு மட்டும் இப்படி இருக்கறது பிடிச்சிருக்குன்னு நினைக்கறியா?” நிதானமாகவே கேட்டான். அவன் கோபமாக கேட்டிருந்தால் எப்படியோ, அவன் இப்படிக் கேட்டால் அவளும் என்ன செய்ய?
“எல்லாத்தையும் மறந்துடலாம்… புதுசா…” அவள் சொல்ல, அவன் பார்த்த அந்த பார்வையில் அவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
அந்த பார்வையில் கோபம் இல்லை… குற்றம் சொல்லவில்லை… மாறாக ‘உன்னால் என்னை நேசிக்க முடியாது’ என்ற பாவனை… அது அப்படியே இன்னும் அவன் கண்களில் தொங்கி நிற்க, அவள் எப்படி தன்னை நிரூபிக்க? அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“எல்லோருக்கும் நீ சர்ப்ரைஸ் பண்ணுவியாமே… எனக்கு நீ கொடுத்தது ஷாக் மட்டும்தான்” அவன் விரக்தியாகச் சொல்ல, அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.
“நான் தெரியாமல் தூங்கிட்டேன் முகி…” என்னைப் புரிந்து கொள்ளேன் என அவள் பார்வை அவனிடம் கெஞ்சிற்று.
“அது அங்கே விஷயமே இல்லை… என்னோட மொத்த உணர்வையும் அப்படியே உன் காலடியில் போட்டு நசுக்கிட்டு… என்னால் இப்போ உன் கிட்டே வர்றதை யோசிக்க கூட முடியலை” அவன் சொல்ல, விலகி எழுந்துவிட்டாள்.
இதயம் விண்டு வலிக்க, அவனை எப்படி மாற்ற என்றோ? அவன் மனக் காயத்தை எப்படி குறைக்க என்றோ எதுவும் புரியவில்லை. ‘ஆண்டவா எனக்கு ஒரு வழி காட்டு’ என கடவுளிடம் தான் அவளால் முறையிட முடிந்தது.
அவள் அழுதுகொண்டே அப்படியே தூங்கிவிட, அவனுக்குத்தான் தூக்கமே வரவில்லை. அவள் அழுதது வேறு நெஞ்சை அழுத்த, உறங்க முடியாமல் தவித்தான். அன்று காலையிலேயே விழிப்பு வந்துவிட, மாடிக்குச் சென்றுவிட்டான்.
நாட்கள் இப்படியே கடக்க, உறங்கி எழுந்த சுமித்ரா, எழுந்து வெளியே வந்தாள். அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் தாமதமாகவே எழுந்து வர, சுதா அவளை வரவேற்றார். “வாம்மா… காபி எடுத்துக்கோ… முகில் மொட்டை மாடிக்குப் போயிருக்கான். ஒரு குரல் கொடுக்கறியா?” அவர் கேட்க, அவனது காபியை வாங்கிக் கொண்டாள்.
“நானே அவங்களுக்கு கொடுக்கறேன் அத்த” என்றவள் மாடியேற, அங்கே தொடுவானத்தை வெறித்தவாறு நின்றிருந்தவனைப் பார்த்து மனம் கலங்கிப் போனது.
அதை மறைத்தவாறே அவனைப் பார்த்தவள், “முகி… காபி…” அவனிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான்.
“கடைக்குப் போகலையா?” அவள் கேட்க,
“ம்… போகணும்…” என்றவனது பார்வை கூர்மையாக, அவன் பார்த்த திக்கில் அவளும் பார்த்தாள். அங்கே ஆராதனா புடவையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயல்வது புரிய இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“சுமி… வா…” என்றவன் கப்பை அங்கே வைத்துவிட்டு படிகளில் விரைய, அவளும் அவன் பின்னால் ஓடினாள்.
“அதியா… வா…” அங்கே கடைக்கு முன்னால் நின்றிருந்த அதியனையும் அவன் அழைக்க, மூவரும் ஆராதனாவின் வீட்டுக்கு ஓடினார்கள்.
ஆராதனாவின் வீட்டுக் கதவை உடைத்துவிட்டு இவர்கள் உள்ளே சென்று கார்முகில் அவள் காலை பிடித்துக் கொள்ள, அதியன் கிச்சனுக்குச் சென்று கத்தியோடு வந்து, புடவையை கட் செய்து அவளைக் காப்பாற்றினார்கள்.
சுமித்ரா கிச்சனுக்குச் சென்று அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவள், “என்ன ஆரு இது? எதுக்கு இப்படி ஒரு முடிவு? உன்னையே நம்பி இருக்கும் குழந்தையைப் பற்றி ஒரு நிமிஷமாவது நீ யோசிச்சுப் பார்த்தியா?” சுமித்ரா அவளிடம் கேட்டாள்.
“என்னக்கா? இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி ஒரு முடிவு?” கார்முகில் கேட்க, அவள் விஷயத்தைச் சொல்லவே, அனைவரும் அதிர்ந்து போனார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணிய கார்முகில், அதியனைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, அவளது பதிலை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
அந்த அதியன், ஆராதனாவின் திருமணம்தான்… தங்கள் பிரச்னையை உடைக்கப் போகும் துருப்புச் சீட்டு எனப் புரியாமல், அதில் மிகுந்த சந்தோஷத்தோடு ஈடுபாடு காட்டினாள் சுமித்ரா.
1 comment
அவள பத்தி முகில் கிட்ட சரியா சொல்ல விடாம என்ன ஒரே இடைஞ்சல்