Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 2.

உனக்கென பிறந்தவள் நானே – 2.

by infaalocious

பகுதி – 2.

கார்முகில் வண்ணனும், அவன் பெண் பார்க்க வந்திருக்கும் கார்த்திகாவும் அவளது வீட்டின் மொட்டை மாடியில் எதிரும் புதிருமாக நின்று இருந்தார்கள். முகில் அவளை ஆர்வமாகவும் பார்க்கவில்லை, அலட்சியமாகவும் நிற்கவில்லை.

தன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னவள் அவள்தான் என்பதால் அமைதியாகவே நின்றிருந்தான். அவள் எப்படி இருக்கிறாள் என அளவிடக் கூட பிடிக்காமல், அதைச் செய்யாமல் அமைதியாக அவள் முகம் பார்த்திருந்தான்.

கார்த்திகாவின் முகத்திலோ அப்பட்டமாக ஒரு எரிச்சலும் கோபமும் விரவி இருந்ததைப் பார்த்தவனுக்கு புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டன. கார்த்திகாவின் வீட்டில் அவனது புகைப்படத்தைப் பார்த்து, அவர்களுக்கு முழு சம்மதம் எனச் சொன்ன பிறகுதான் இந்த பெண் பார்க்கும் படலத்துக்கே அவன் ஒத்துக் கொண்டான்.

அப்படி இருக்கையில் அவள் இவ்வளவு கோபமாக இருப்பது எதனால் என அவனுக்குப் புரியவே இல்லை.

(இந்த கார்முகில் வண்ணன் – சுமித்ரா பெயர்களை இதற்கு முன்னர் எந்த கதையிலேயோ படித்து இருக்கிறோமே என நீங்கள் யோசிப்பது எனக்குப் புரியுது. நீங்கள் நினைப்பது சரிதான் “பயணங்கள் இனிதாக” கதையில் அதியன் ஆராதனா ஜோடியோடு நட்பாக, உறவாக வந்தவர்களின் கதைதான் இது.

இந்த கதையில் ஆங்காங்கே அதியனும்- ஆராதனாவும் வந்து போவார்கள். அவர்களது கதையை தெரிந்துகொள்ள “பயணங்கள் இனிதாக” கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்).

கார்முகில் வண்ணன் பெயருக்கு ஏற்றது போலவே கருமை நிறம் கொண்டவன். அவனைப் பார்த்த உடனே அனைவரின் மனதிலும் எழுவது ஒரே விஷயம் தான். ‘இதென்ன இவ்வளவு கறுப்பா இருக்கான்’ என்பதாகத்தான் இருக்கும்.

அப்படியென்றால் அவன் என்ன நிறத்தில் இருப்பான் என்பதை உங்கள் அனைவரின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அவனது அம்மா, அப்பா, அவனது தங்கை என யாருமே அத்தனை நிறக் குறைவு கிடையாது.

அவனைப் பெற்ற தாயின் பாட்டி ஒருத்தி அப்படித்தான் இருந்தாளாம். அதுவும் கார்முகிலின் தாய் சுதாவின் சித்தி அன்னம்மா சொன்ன பிறகுதான் அதுவே அவர்களுக்குத் தெரியும். அவன் பிறந்த உடனேயே அவன் உடம்பில் ‘நீலம் பாய்ந்து விட்டதோ?’ என்றுதான் அனைவரும் நினைத்து பயந்தார்கள்.

ஆனால் நாள் ஆக, ஆக அவனது நிறமே கருமைதான் என்பதைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள். இதைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்ட பொழுது, ‘நம் உடம்பின் சேர்க்கை என்பது பெற்றவர்களைக் கொண்டு மட்டும் முடிவாகும் விஷயம் இல்லை.

நமது மூன்று தலைமுறைக்கு முன்னர் உள்ள தலைமுறைகளின் சேர்க்கை ஒரு கருவுக்குள் இருக்கும். எனவேதான் உங்கள் பிள்ளை இந்த நிறத்தில் உள்ளான். இதனால் எந்த பாதிப்பும் இல்லை’ எனச் சொல்லிவிட்டார்கள்.

பெற்றவர்கள் அவனை மனதார ஏற்றுக் கொண்டார்கள். கார்முகிலுக்கு நிறம்தான் குறைவே தவிர முக லட்சணம் கொண்டவன். இதழ்கள் கூட கொஞ்சம் பிங்க் நிறத்தில் இருக்கும். கண்கள் இரண்டும் அத்தனை தூய்மையான வெள்ளையில் இருக்க, அவன் முகத்தில் கண்களும், இதழ்களும் கொஞ்சம் எடுப்பாகவே தெரியும்.

அவனது அடர்ந்த புருவமும், இமைகளின் ரோமங்கள் கூட கொஞ்சம் நீளமாக, அவனது கண்களைப் பார்க்கவே அப்படி ஒரு வசீகரமாக இருக்கும். அவன் மட்டும் கொஞ்சம் மாநிறமாகவோ, வெள்ளையாகவோ இருந்திருந்தால் ‘பேரழகன்’ என அனைவராலும் அழைக்கப் பட்டிருப்பான்.

அவன் தாய் அவனிடம் சொல்லும் ஒரே விஷயம், ‘நீ அழகன் டா’ என்பதுதான். அதைக் கேட்டாலே அவன் சிரித்து விடுவான். “போங்கம்மா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு” எனச் சொல்லி நகர்ந்து விடுவான்.

கார்முகிலிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவனது மன உறுதி, தைரியம். எதையும் நேர்மறையாக அணுகும் அவனது பாங்கு. அவன் பள்ளியில் படிக்கும் வேளைகளில் எல்லாம், அவனுடன் பயின்ற மாணவர்கள் அனைவருமே அவனைக் கேலி செய்வார்கள்.

‘கறுப்பா’ என்பதுதான் அவனது பட்டப் பெயராக இருந்தது. அப்பொழுது எல்லாம் வீட்டுக்கு வந்து தாயின் மடியில் புரண்டு அப்படி அழுவான். ‘நான் ஏன் கறுப்பாக பிறந்தேன்? என்னை ஏன் கறுப்பா பெத்தீங்க?” என தாயிடம் பெரும் சண்டை போடுவான்.

அப்பொழுதெல்லாம் சுதா அவனை இறுக அணைத்துக் கொள்வார். ‘வெளி அழகெல்லாம் இன்னைக்கு இருக்கும், நாளைக்கு போய்டும் முகில். ஆனால் நம் மனதின் அழகுதான் உண்மையான அழகு. அதைப் பார்க்க முடியாத மனிதர்களின் கருத்துக்கு நீ ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றாய்?

“உனக்கு ஒரு குட்டி கதை சொல்றேன் கேட்டுக்கோ. ஒரு முறை புத்தர் போதிமரத்தின் அடியில் இருந்து நல்ல கருத்துகளை, சிறந்த கருத்துகளை, வாழ்வின் தத்துவங்களை மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தாராம்.

“அப்பொழுது அங்கே வந்த ஒரு மனிதன் அவரை மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டிகிட்டே இருந்தானாம். அதைக் கேட்ட மற்றவர்களுக்கு எல்லாம் அவ்வளவு கோபம், வருத்தம். ஆனால் புத்தர் அதனால் எல்லாம் பாதிக்கப் படவே இல்லையாம்.

‘அப்படி ஒருத்தன் அங்கே இல்லவே இல்லை’ என்பதுபோல் அவர் அவரோட சொற்பொழிவை நடத்திட்டே இருந்தாராம். அந்த தகாத வார்த்தைகளால் திட்டின மனிதனும், ஒரு கட்டத்துக்கு மேலே அங்கே இருந்து போய்விட்டானாம்.

“அப்பொழுது புத்தரிடம் கடைசியா ஆசீர்வாதம் வாங்க வந்த மனிதன், அவருக்கு உண்ண சில பழங்களை கொடுக்க முயன்றவாறே, “நீங்க அந்த மனிதனை ஏன் எதுவும் சொல்லவில்லை? அதில் எங்களுக்கு எல்லாம் மிகவும் வருத்தம். அவன் உங்களை இப்படி பேசி இருக்கக் கூடாது” அப்படின்னு சொன்னாராம்.

“அப்போ புத்தர் அந்த மனிதனைப் பார்த்து நிதானமா புன்னகைத்தவாறே கேட்டாராம். “நான் இப்போ நீங்க கொடுக்கும் இந்த பழங்களை வாங்காமல் போனால் நீங்க என்ன செய்வீங்க?’ன்னு அதற்கு அந்த மனிதன் சொன்னானாம், “நான் இதையெல்லாம் அப்படியே திருப்பி எடுத்துட்டு போய்டுவேன்”ன்னு சொன்னாராம்.

“அதைக் கேட்டு புத்தர் புன்னகைத்தவாறே சொன்னாராம், ‘நான் இதையேதான் அவருக்கும் செய்தேன்’னு. அதைக் கேட்ட அந்த மனிதனுக்கு அவ்வளவு ஆச்சரியம். ‘அவன் கொடுத்த எதையுமே நான் வாங்கிக்கலை. அதனால் அவன் அதையெல்லாம் அவனோடவே எடுத்துட்டு போய்ட்டான்’ன்னு சொன்னாராம்.

“நான் இதையேதான் உனக்குச் சொல்றேன். மற்றவங்க சொல்லும் எல்லாத்தையும் நாம வாங்கி சேர்த்து வச்சுக்கணும்னு கிடையாது. நமக்கு தேவையில்லாததை வாங்கிக்கவே கூடாது. நீ எல்லோரிடமும் அன்பா இரு, பாசமா பழகு. நாற்பது பேருக்கு உன்னைப் பிடிக்கலையா கவலையே படாதே.

“உன்னைச் சுற்றி இருக்கும் நாலுபேருக்கு உன்னைப் பிடிச்சிருக்கா, அவங்களைப் பார். அவங்க கூட இரு… உன்னைப் பிடித்த நாலுபேர்கிட்டே ‘ஏன் என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கு’ன்னு நீ கேள்வி கேட்க மாட்ட தானே.

“அதே மாதிரி உன்னைப் பிடிக்காதவங்க கிட்டேயும், ‘ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கலை’ன்னு கேட்காதே. இந்த உலகத்தில் யார் உன்னை வெறுத்தாலும், ஒதுக்கினாலும் உன்னை நேசிக்க, அன்பு செய்ய உன் குடும்பம் எப்பொழுதும் உன் கூடவே இருக்கும். அதை மட்டும் நீ மறந்துடாதே.

“உன் மனசை அழகா வச்சுக்கோ, அதுக்குள்ளே கோபம், வெறுப்பு இப்படி எதையும் சுமக்காதே. அந்த மனசே உனக்கு நல்லதைச் செய்யும்” அவனை சுதா செதுக்கினார். அந்த வயதுக்கு அவனுக்கு அவை எல்லாம் புரிந்ததோ இல்லையோ, ஆனால் தாயின் சொல்லை வேதமாக்கிக் கொண்டான்.

அன்று முதல் அவனைக் கேலி செய்யும் யாரையும் அவன் கண்டு கொண்டதே இல்லை. அவர்களது பேச்சுக்களை காதில் வாங்கியதும் இல்லை. அவனோடு தானாகவே பேசும் மனிதர்களை நட்பாக்கிக் கொண்டான். எளிய மனிதர்களை தேடித் போய் பழகினான்.

அவனுக்கு திருமண வயதை நெருங்குகையில் தான், இந்த சமுதாயத்துக்கு நிறத்தின்மேல் இருக்கும் மோகத்தை உணர்ந்தான். இந்த சமுதாயத்தின் இன்னொரு முகத்தை அவன் கண்டுகொண்டான்.

வரதட்சணை கொடுக்க முடியாமல் இந்த திருமண சந்தையில் பல பெண்கள் தனித்து விடப் படுவதைப் போல, நிறம் இல்லாத ஆண்களையும் இந்த பெண் சமூகம் வெறுக்கும் என்பதை உணர்ந்தான்.

வருடத்துக்கு இரண்டு, மூன்று கோடிகளுக்கு மேலே ப்ராஃபிட் பார்க்கும் அளவுக்கான தொழில் அவர்களுடையது. ஃபர்னிச்சர், பெயின்ட், டைல்ஸ் என அவர்களுக்கு பல தொழில்கள், பல கிளைகள் இருந்தன.

அதுவும் அவர்களது டைல்ஸ் தான் தமிழ்நாட்டில் அனேக மக்கள் விரும்பி வாங்கும் இடத்தில் இருந்தது. தரம், நம்பிக்கை, குறைந்த விலை, இதனாலேயே அவர்களை அந்த இடத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியவில்லை.

டைல்ஸ் வாங்கினால் பெயிண்டில் டிஸ்கவுன்ட்… இவை இரண்டும் வாங்கி இருந்தால் ஃபர்னிச்சரில் குறிப்பிட்ட அளவுக்கு விலைக்கழிவு என அவர்களது கஸ்டமர்களை தக்க வைத்தார்கள். அவர்களது தரமும் அவர்களை விலக விடவில்லை என்பது அசைக்க முடியாத உண்மை.

கார்முகிலுக்குதான் முதலில் திருமணத்தை முடிக்க வேண்டி பெண் தேடினார்கள். முதலில் அவர்களது வசதிக்கு இணையான இடங்களில் இருந்து பெண்களைப் பார்க்கத் துவங்கினார்கள். ஆனால் அந்த பெண்கள் எல்லாம் இவனது பெயரைக் கேட்ட உடனே மறுத்தார்கள்.

‘ச்சீ அவனா? நம்மகிட்டே இல்லாத வசதியா? நாங்க ஏன் அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கணும்’ இதே வார்த்தைகளை வேறு வேறு அர்த்தம் வரும் வார்த்தைகளால் போட்டு நிரப்பி அவனை நிராகரித்தார்கள்.

சுந்தரமூர்த்தி நேரடியாக சிலரிடம் பெண் கேட்க, சிலர் மறைமுகமாகவும், சிலர் முகத்தில் அடித்ததுபோல் கார்முகிலின் நிறத்தைப் பற்றி பேச வெறுத்துவிட்டார்.

‘இது இந்த நிறம் அவனது வாரிசுகளுக்கு வர ஐந்து சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. எனவே அதைப்பற்றி யோசிக்காதீங்க’ எனச் சொல்ல அவருக்கு நுனி நாக்கு வரை வார்த்தைகள் தவிக்கும்.

ஆனால் அவனுடன் வாழவே யோசிக்கும் பெண்களைப் பெற்றவர்களிடம், அவர்களுக்குப் பிறக்கப்போகும் வாரிசைப் பற்றி என்ன சொல்ல வேண்டி இருக்கிறது?’ என்ற எண்ணத்தில் அதையெல்லாம் அவர் செய்யவே இல்லை.

சரி அவர்களது வசதிக்கு இணையான பெண்கள்தான் இப்படி என்றால், ஜாதகம் பொருந்தி வந்த, மிடில்கிளாஸ் பெண்களைப் பார்க்கலாம் என்றால் அவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். தரகர் மூலமாகத்தானே வரன்களின் வேட்டை நடந்தது.

தரகரே வந்து ‘இந்த காலத்து பொண்ணுங்க கொஞ்சம் கலரான மாபிள்ளையை எதிர்பார்க்கறாங்க. பொருத்தமான வரன் வர்றப்போ நானே கொண்டு வரேன்” எனச் சொல்லிவிட, பொறுமை காத்தார்கள்.

கார்முகிலின் இருபத்து ஆறாவது வயதிலேயே துவங்கிய பெண்தேடல், இன்றும் நடந்து கொண்டுதான் இருந்தது. வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கவே, அவனது தங்கை குழலிக்கு முதலில் திருமணத்தை முடித்து விடலாம் என முடித்தும் விட்டார்கள்.

அவளது கணவனுக்கும் ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் முன்னெச்சரிக்கையாகவோ என்னவோ, ‘பெண் எடுத்து, பெண் கொடுப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை’ எனச் சொல்லிவிட கார்முகில் சிரித்துக் கொண்டான். இப்பொழுது அவன் காண வந்திருக்கும் பெண்ணும், இஞ்சினியரிங் முடித்து ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனியில் வேலையில் இருந்தாள்.

வசதி மிகவும் குறைவு என்றாலும், புத்திசாலி ஆகையால் அரசாங்க கல்லூரி, அதன் உதவித் தொகையிலேயே படித்து முடித்துவிட்டாள். மிகவும் வசதி குறைந்த இடம்தான். வாடகை வீட்டில்தான் இருந்தார்கள். அவளுக்கு கீழே இன்னும் இரண்டு பெண் பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தார்கள்.

தரகர் அவர்கள் வீட்டிலும், பெண்ணுக்கும் சம்மதம் எனச் சொல்லி, பெண்ணின் புகைப்படத்தையும் காட்டி இருந்தார். கார்முகில் அதை அசுவாரசியமாக பார்த்திருந்தான். ஆனாலும் பெண்ணுக்கு சம்மதம் எனச் சொல்லி அவனை பெண் பார்க்க அழைத்திருக்கவே மனதுக்குள் சிறு நம்பிக்கை.

முதலில் அவளைக் கொஞ்சம் ஆர்வமாகவே பார்த்தான். ஆனால் அவனுக்கு இருந்த ஆர்வமோ, பரபரப்போ, படபடப்போ அவளிடம் கொஞ்சமும் இல்லை என்பதை அவன் கவனிக்கவே செய்தான். டீ கொடுக்கும் வேளையில், ‘பேசணும்’ என அவள் இதழ் அசைவில் சொன்னதை அவன் கண்டு கொண்டான்.

எனவே பெரியவர்கள் பூ முடிக்கலாம் எனப் பேசத் துவங்க, “எனக்கு பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசணும்” எனச் சொல்லிவிட்டான்.

“என்னப்பா இது?” சுதாதான் மகனிடம் மறுப்பான குரலில் கேட்டார்.

“பேசிட்டு வர்றேன்ம்மா…” என்றவன் அவள் அழைத்து வந்த மொட்டை மாடிக்கு வந்துவிட்டான்.

வந்ததுமுதல் ‘அவள் ஏதாவது பேசுவாளா?’ என அவள் முகம் பார்க்க, அவள் பேச்சை எப்படித் துவங்குவது எனத் தெரியாமல் திணறுவது கண்ணில் பட்டது. ஆனாலும் எதுவும் செய்யாமல் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தான்.

நிச்சயம் அவன் மனதுக்குள் சிறு சலனம், எதிர்பார்ப்பு இருந்தது மட்டும் உண்மை.

நேரம் சென்று கொண்டே இருக்க, “அது… எனக்கு எப்படி சொல்றது? நான் சொல்றது சரியா என்னன்னு தெரியலை. ஏன் ஏழைங்கன்னா எங்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கக் கூடாதா?

“ரொம்ப வசதியான இடம், சொகுசா இருக்கலாம்… பணத்துக்கு பஞ்சமே இல்லை, பெரிய அதிர்ஷடக்காரி… இப்படி என்னென்னவோ சொல்றாங்க. ஆனா இதெல்லாம் மனசுக்குப் பிடிச்ச ஆளோட இருந்தால்தான் நிறைவா அனுபவிக்க முடியும்னு அவங்களுக்குச் சொன்னால் புரியலை.

“நான் ஆடம்பர வாழ்க்கை, கார் பங்களா இப்படி எதையும் எதிர்பார்க்கலை. நாங்க ஜோடியா போகும்போது மத்தவங்களோட பார்வை என்மேலே கேலியா, பரிதாபமா விழற அளவுக்கு ஒரு வாழ்க்கை வேண்டாம்னு நினைக்கறேன்” அவள் சொல்லிக் கொண்டே போக, அவன் ஒரு வார்த்தையும் பேசவே இல்லை.

“என்னங்க… நான் பேசிகிட்டே இருக்கேன், நீங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?” அவன் அமைதியைக் கண்டு கேட்டாள்.

“நீங்க என்கிட்டே கேள்வியே கேட்கவே இல்லையே. உங்க மனசுக்குள்ளே இருக்கற ஆதங்கத்தை, எதிர்பார்ப்பை கொட்டிட்டு இருக்கீங்க, நான் அதை கைகட்டி கேட்டுட்டு இருக்கேன், அவ்வளவுதான். இதில் நான் என்ன சொல்லட்டும்?” அவள் பேச்சில் கொஞ்சம் கூட பாதிக்கப் படாதவனாக கேட்டான்.

அவனது அந்த நிதானமான பேச்சில், அவள்தான் கொஞ்சம் தடுமாறிப் போனாள்.

“கழுத்தில் தாலி ஏறிட்டா எல்லாம் சரியாப் போய்டும்னு சொல்றாங்க. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத வாழ்க்கையை எப்படி நான் காலம் முழுக்க வாழ முடியும்? நீங்களே சொல்லுங்க?” அவனிடம் கேட்க, அப்பொழுதும் அவனிடம் அதே நிதானமே.

“அதுக்கு என்கிட்டே பதில் இல்லைங்க. இப்போ நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க? அதை நேரடியா சொல்லுங்க” பொறுமையாகவே கேட்டான்.

“அது… கீழே போய்… உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடறீங்களா? ரியலி சாரி… நான் இதை உங்ககிட்டே கேட்கறது நியாயம் கிடையாதுதான். ஆனாலும் எனக்கு வேற வழி தெரியலை” அவள் சங்கடமாகச் சொல்ல, அவன் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“சரி… போகலாம் வாங்க…” அவன் முன்னால் நடக்கத் துவங்க,

“சாரி… உங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே…” அவள் கேட்க, நின்று திரும்பி அவளைப் பார்த்தான்.

“நான் எதுக்குங்க வருத்தப்படணும்? இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க எனக்கு யாரும் இல்லை, இனிமேல் ஆகப் போறதும் இல்லை. சோ… வாங்க…” என்றவன் வேக நடையிட்டு படிகளில் இறங்கினான்.

“அம்மா, அப்பா… போகலாம்…” அவன் அவ்வளவுதான் சொன்னான். அவர்கள் எழுந்து கொள்ள, பெண்வீட்டு மனிதர்கள் அவனை குழப்பம் சுமந்த விழிகளோடு ஏறிட்டார்கள்.

“இந்த கல்யாணம் நடக்காதுங்க… எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லை” என்றவன் வெளியே நடந்துவிட, பூ முடிக்கும் அளவுக்கு போன விஷயம், இப்படி பாதியில் நின்று போன அதிர்வு அவர்களிடம்.

அவன் இப்படிச் சொன்னதற்கான காரணம் என்னவாக இருக்கும் என அவர்களுக்கு நொடியில் புரிந்தது. கார்முகிலின் குடும்பம் மொத்தமும் தாங்கள் வந்த காரில் கிளம்பிச் செல்ல, அந்த காருக்குள் அத்தனை அமைதி நிலவியது.

“என்னப்பா அந்த பொண்ணு உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?” அவனது அப்பா மூர்த்தி கேட்க, ‘ஆம்’ என தலை அசைத்தான்.

“என்னங்க… வீட்டுக்குப் போகற வரைக்கும் கொஞ்சம் அமைதியா வாங்க” சுதா சொல்ல, மூர்த்தி வாயை இறுக மூடிக் கொண்டார். கார்முகில் தங்கள் காரை நிதானமாகச் செலுத்தியவன், காருக்குள் இருந்த ரேடியோவை இயக்கினான்.

அதை மூர்த்தி பட்டென நிறுத்த, “ப்பா… என்னப்பா பண்றீங்க?” சிறு புன்னகையோடு கேட்டான். ஆனால் மூர்த்தியால் தான் அதை ரசிக்க முடியவில்லை.

“இப்போ நான் பாட்டு கேட்கற ‘மூட்’ல இல்லை” மூர்த்தி வெடுக்கென சொல்ல, சுதாவின் முகத்திலும் அப்படி ஒரு கவலை அப்பிக் கிடந்தது. இந்த இடம் முடிவாகிவிட்டது, என் மகனுக்குத் திருமணம் ஆகப் போகிறது’ என்ற நினைப்பில்தான் அவர்கள் இருவருமே கிளம்பி வந்து இருந்தார்கள்.

அப்படி இருக்கையில் அது இல்லை எனத் தெரியவர அந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை. வயதாக ஆக, உடலோடு உள்ளமும் சேர்ந்து தளர்ந்து போகிறதே.

“பாட்டு கேட்க என்னப்பா ‘மூட்’ வேண்டிக் கிடக்கு?” என்றவன் இலகுவாகவே இருந்தான்.

பெற்றவர்களின் முகங்களில் இருந்த அதீத கவலைதான் அவனை பெரும் கலக்கத்துக்கு உள்ளாக்கியது. இந்த இடம் முடிவான பிறகு குழலியிடம் சொல்லிக் கொள்ளலாம் என இருந்ததால், மருமகனின் வீட்டினரிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

அவன் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி இறங்கிக் கொள்ள, பெற்றவர்களும் இறங்கினார்கள்.

வீட்டுக்குள் சென்றவுடன், “சுதா, அந்த தரகர் பயலுக்கு ஃபோனைப் போடு. இவங்க தனியா பேசணும்னு சொன்ன உடனேயே ஆள் அங்கே இருந்து காணாமல் போய்ட்டான். நான் அப்போவே சந்தேகப் பட்டேன்…

“அந்த நாய்தான் ப்ரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏதோ திருகுத்தனம் பண்ணி இருப்பான். ஃபோனைப் போடு சுதா…” தன் மகனை ஒரு வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று அவமானப் படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவரைக் கொன்றது.

“அப்பா கூல்… எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? அம்மா நீங்க முதல்ல கொஞ்சம் தண்ணியை எடுத்துட்டு வாங்க” என்றவன் தாயின் முகத்தையும் பார்த்துவிட்டு,

“நீங்க இருங்க, நானே போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்றவன் சாப்பாட்டு மேஜைமேல் இருந்த ஜக்கையும் இரண்டு கண்ணாடி டம்ப்ளர்களையும் சென்று எடுத்து வந்தான். அவர்களுக்கு நீரை ஊற்றிக் கொடுக்க, அவர்களுக்கும் அந்த நேரம் அது தேவையாக இருக்கவே அதை வாங்கிக் குடித்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவன், “அம்மா, நீங்கதானே சொல்லி இருக்கீங்க, நமக்கு ஒன்று கிடைக்காமல் போகுதுன்னா, அதைவிட பெஸ்ட்டான வேற ஏதோ நமக்கு கிடைக்கப் போகுதுன்னு. அப்படி இருக்கும்போது நீங்களே இப்படி அப்சட் ஆகலாமா?” இருவர் தோளிலும் கை போட்டு தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

“உனக்கு வருத்தமா இல்லையா முகில்…? அம்மாகிட்டே உண்மையை மட்டும் சொல்லணும்” நிமிர்ந்து மகன் முகம் பார்த்தார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்… அதாவது கொஞ்சமா எதிர்பார்த்து, கொஞ்சமா ஏமாந்துட்டேன் அவ்வளவுதான். நீங்க ரெண்டு பேரும்தான் ரொம்ப எதிர்பார்த்துட்டீங்க போல. விடுங்கம்மா, எனக்குன்னு பொறந்தவ கண்டிப்பா எங்கேயாவது இருப்பா. நம்மைத் தேடி வருவா… விடுங்க…” அவன் ஆறுதல் சொல்ல, அவனுக்கானவள் மருத்துவமனையில் மற்றவர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.

You may also like

2 comments

Thani February 16, 2026 - 11:25 pm

கருப்பு தான் நமக்கு பிடித்த கலரு,நம்மஹீரோ இவன்😀
ஹீரோ சார் ..!உங்க மனத்தையிரியம் அல்டி மேட் .
சூப்பர்❤️
உங்க கதைகளை எங்கு படிக்கலாம் ஜி..?

Reply
Thani February 16, 2026 - 11:30 pm

கருப்பு தான் நமக்கு பிடித்த கலரூ…,நம்ம ஹீரோ இவன்.
இவனின் மனசு அம்புட்டு வெள்ளை,மனதையிரியம் ரொம்ப இருக்கு சூப்பர்❤️
உங்க கதைகளை எங்கு படிக்கலாம்..?

Reply

Leave a Comment

About Me

Featured