பகுதி – 3.
சுமித்ரா தன் அக்காவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் காணும் அனைவருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்து, அங்கே இருந்த செவிலியர் அனைவருக்கும் சின்ன பரிசுகள் கொடுத்து அசத்திவிட்டாள்.
அவர்கள் அனைவரும் மறுத்ததை எல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. நேற்று மாலையில் சென்றுவிட்டு, இப்பொழுது காலையில்தான் வந்திருந்தாள். அவர்கள் வந்த உடனே திலக் அங்கே இருந்து கிளம்பிச் சென்று இருந்தான்.
“குழந்தை ராத்திரி தூங்கினானா சுபி” அனிதா மகளிடம் கேட்டார்.
“கொஞ்ச நேரம் தூங்கினான்ம்மா… நாலு அஞ்சு வேளை முழிச்சுட்டே இருந்தான். அவர்தான் முழுசா பார்த்துகிட்டார்” அவள் சொல்லிக் கொண்டிருக்க, சுமித்ரா தொட்டிலில் தூங்கிய குழந்தையைப் பார்த்தாள்.
“நீ ஏன் அவனை இப்போ தூங்க வச்ச?” தன் அக்காவிடம் கோபமாக கேட்டு வைத்தாள்.
“அடியேய்… அவனே அஞ்சு மணிக்கு மேலேதான் தூங்கவே ஆரம்பிச்சான். நீ வேற அவனை எழுப்பி விட்டுடாதே, நான் தாங்க மாட்டேன்” அவள் அலறினாள்.
“நீ தூங்கு, நான் அவனை பார்த்துப்பேன்” அவள் முறுக்கிக் கொள்ள,
“அவன் நொய் நொய்ன்னு அழுதுட்டு இருக்கும்போது எனக்கு எப்படி தூக்கம் வரும்?” சுபிதா கேட்டு வைக்க,
“நீயெல்லாம் ஒரு பெத்த தாயா?” சுமித்ரா கோபம் காட்ட, “உனக்கும் ஒரு நாள் பிள்ளை பிறக்கும்ல, அப்போ நான் இதையே உன்கிட்டே சொல்றேன். அப்போ தெரியும் உனக்கு. ஒரு நாளுக்கே முடியலை” சோர்வாக கண் மூடிக் கொண்டாள்.
“அக்கா… என்ன பண்ணுது?” பெரும் கவலையானாள்.
“சுமி, அவளுக்கு கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆகி இருக்கும். கூடவே வலி வேற இருக்கும். நைட் சரியான தூக்கம் வேற இருந்திருக்காது. அதனால்தான் இப்படி இருக்கா, சரி ஆயிடுவா… நீ கவலைப்படாதே” தாய் சொல்ல, கேட்டுக் கொண்டாள்.
அதென்னவோ அவளைச் சார்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ளவே மாட்டாள். அவர்கள் நார்மல் ஆகும் வரைக்கும் அவர்களை விட்டு விலகவும் மாட்டாள். அவள் மிகவும் சோர்ந்து விடுவாள்.
அந்த நேரம் அங்கே வந்த நர்ஸ், “நீங்க சாப்ட்டதுக்கு பிறகு இந்த மாத்திரையைப் போடுங்க. அப்படியே குழந்தைக்கு முதல் தடுப்பூசி போட போங்க. கீழே முதல் தளத்துக்குப் போனால், அவங்களே ரூமைக் காட்டுவாங்க” அந்த செவிலி சொல்ல,
“என்ன ஊசியா? குட்டிக்கு வலிக்கும், அதெல்லாம் எதுவும் வேண்டாம்” சுமித்ரா வேகமாக மறுத்தாள்.
அதைப் பார்த்து சிரித்த செவிலியோ, “மேம் குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த வியாதியும் வந்துடக் கூடாது என்பதற்காக போடற தடுப்பூசி இது. நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை” அவள் விளக்கம் கொடுக்க அப்படியும் அவள் முகம் தெளியவில்லை.
“மேடம், நீங்க கொடுத்த கிப்ட் வந்து சேர்ந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சது மேம். நன்றி…” என்றவள் சென்றுவிட, அனிதா மகளை திகைப்பாய் பார்த்தார்.
“சுமி… என்னம்மா பண்ற? எதுக்கு இவ்வளவு செலவு பண்ற?” அனிதா மகளைக் கடிந்துகொண்டார். ஆனாலும் அவள் தன் பேச்சை கேட்டுக் கொள்வாள் என்ற நம்பிக்கை எல்லாம் அவருக்கு இல்லை.
மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது என அவள் முடிவு செய்துவிட்டால் அவளை யாராலும் கையில் பிடிக்கவே முடியாது.
“நான் என்ன தினமுமா செலவு பண்றேன்? நான் சித்தி ஆயிட்டேன், எனக்கு பையன் வந்துட்டான், நான் ஹேப்பியா இருக்கேன். என் சந்தோஷத்தை மத்தவங்களுக்கு நான் கொஞ்சமா ஷேர் பண்றேன் அவ்வளவுதான். மற்றபடி எப்போவாவது அனாவசிய செலவு செய்து இருக்கேனா?” தாயின் மடியில் சலுகையாக படுத்துக் கொண்டாள்.
மகளின் தலை கோதியவர், அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட்டார். “லவ் யூம்மா…” அவள் சொல்ல, அவருக்கு உருகிவிட்டது. மகள் மொத்தமாக நெகிழ்ந்து போயிருக்கிறாள் என்பதை அந்த தாயுள்ளம் கண்டு கொண்டது.
எல்லா நேரங்களிலும் புரிந்துகொள்ளும் பிள்ளையாக, உற்சாகமாக வளைய வரும் மகள், சில நேரங்களில் இப்படித்தான் குழந்தையென மாறிப் போவாள். அந்த நேரம் மகளின் மனதுக்குள் என்ன ஓடுகிறது என்றே அவர்களால் கணிக்க முடியாது.
“அம்மாவும் லவ் யூ தான் செல்லம்மா…” அவரும் நெகிழ்வாகச் சொல்ல, அவர்களைப் பார்த்தவாறே உள்ளே வந்தார் செல்வம்.
“என்ன காலையிலேயே அம்மாவும் பொண்ணும் கொஞ்சிக்கறீங்க?” என்றவாறே அவர் உள்ளே வர, “அப்பா…” என்றவாறு தன் கரத்தை அவர் பக்கம் நீட்டினாள். அவரும் மகளது கரத்தை மென்மையாக பற்றிக் கொள்ள, “லவ் யூப்பா…” என்றாள்.
அவள் இப்படிச் சொல்லவே, சட்டென தன் மனைவியில் முகம் பார்த்தார். அனிதா ‘ஆம்’ என்பதுபோல் தலையை அசைக்க, மகளின் தலையை ஆதூரமாக வருடினார்.
“நாங்க இருக்கோம் டா, இப்போ எதை நினைச்சு எங்க கண்ணம்மா மனசைப் போட்டு குழப்பிக்கறா?” செல்வம் கேட்க, கண் திறந்து தன் அப்பாவைப் பார்த்தாள். அனிதாவாவது தன் தாயின் இரட்டை சகோதரி. அவள் தன்மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அது ஒரு காரணம்.
ஆனால் செல்வம்… அவருக்கு தான் எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவள். ஆனாலும் தன்மேல் அன்பைப் பொழியும் செல்வத்தின் மீது அவள் கொள்ளை நேசம் கொண்டிருந்தாள். அவர் ஒரு விஷயத்தைச் சொன்னால், கொஞ்சம் கூட மறுக்காமல் கேட்டுக் கொள்வாள்.
“நீங்க ரெண்டுபேரும் எனக்கு இல்லாம போயிருந்தா?” இப்படிக் கேட்ட மகளை கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
“சுமி, என்ன பேச்சு இது? என்கிட்டே அடிதான் வாங்கப் போற” என்ற அனிதா அவள் கன்னத்தில் வலிக்காமல் அடிக்கவும் செய்தார். அதை அத்தனை ஆசையாக வாங்கிக் கொண்டவள், அனிதாவின் வயிற்றில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டாள்.
“கண்ணம்மா, எந்திரி நாம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்” தகப்பன் அழைக்கவே, மறுக்காமல் எழுந்து கொண்டாள். தன் அக்காவைப் பார்த்தவள், எழுந்து சென்று அவளை இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
“தேங்க்ஸ்க்கா… ரொம்ப தேங்க்ஸ்…” அவள் கண்ணீர் குரலில் சொல்ல, அங்கே இருந்த அனைவருக்கும் மனதைப் பிசைந்தது.
“ஏன்டி இப்படி பண்ற லூசே? நீ இல்லாத ஒரு நாளைக் கூட என்னால் யோசிக்க கூட முடியலை. அப்படி இருக்கும்போது, நாங்க உனக்கு இல்லாமல் போயிருந்தால்னு எதுக்கு யோசிக்கற?
“நான் நம்ம அம்மா அப்பாவை ஒன்றும் உனக்கு விட்டுக் கொடுக்க எல்லாம் இல்லை, அவங்கதான் உனக்கும் அம்மா அப்பா… இப்படியெல்லாம் பேசாத சுமி, நீ வருத்தப்படறதை என்னால பார்க்க முடியலை” சுபிதா கண் கலங்க, சட்டென தெளிந்துவிட்டாள்.
“அக்கா…” என்றவள் அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தவள், பெற்றவர்களையும் திரும்பிப் பார்த்தாள். அனைவரின் முகங்களிலும் பெரும் கவலையும், கலக்கமும் குடி கொண்டிருக்க, மானசீகமாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“அச்சோ… உங்களை எல்லாம் அப்சட் பண்ணிட்டேனா? நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேனா, அதை எப்படி எக்ஸ்ப்ரஸ் பண்ணன்னு தெரியாமல் இப்படி பண்ணிட்டேன். சாரி…” அவள் காதைப் பிடித்துக் கெஞ்ச, அனைவரும் தங்களை மீட்டுக் கொண்டார்கள்.
“அக்கா, உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நான் வாங்கித் தர்றேன்” அவள் ஆர்வமாக வினவ, அவளை முறைத்தாள்.
“ஏற்கனவே ரெண்டு, மூணு லட்ச ரூபாய்க்கு மேலே செலவு பண்ணிட்ட. இதுக்கு மேலே எனக்கு என்ன செலவு செய்யப் போற? நீ கேட்டதே போதும்…” அவள் சொல்ல, சுமித்ரா எழுந்து கொண்டாள்.
“அப்பா, வாங்க போகலாம்… குட்டி எந்திரிக்கும் போது நான் இங்கே இருக்கணும். சீக்கிரம் வாங்க…” அவள் அவசரப்படுத்த பேரனை பார்த்துக் கொண்டு இருந்தவர் மகளோடு வெளியே நடந்துவிட்டார்.
அவர்கள் செல்லவே, “என்னம்மா திடீர்னு ஒரு மாதிரி ஆகிட்டா? எனக்கு மனசே ஆட்டம் கண்டுடுச்சு” சுபிதா சொல்ல, அனிதா கண் கலங்கிவிட்டார்.
“அவ ரொம்ப தைரியமான பொண்ணு. ஆனா சில நேரம் எங்கேயோ ஒரு இடத்தில் தடுமாறிப் போய்டறா. நான் அவளைப் பார்த்துட்டு திரும்பி வந்துட்ட அந்த ஒரு வாரம், அவளை ரொம்பவே மோசமா அஃபெக்ட் பண்ணிடுச்சு. அது அவளோட ஆழ் மனசுக்குள்ளே எங்கேயோ தேங்கிடுச்சு.
“அதனால் வர்ற விளைவுகள்தான் இது. நான் அவளை அங்கே விட்டுட்டு வந்திருக்க கூடாது. தப்பு பண்ணிட்டேன், பெரிய தப்பு” அவர் கண் கலங்க, சுபிதாவும் வருந்தினாள்.
“நீ கொஞ்சம் கூட பொறாமை இல்லாமல், கோபம் இல்லாமல் எங்களை அவ கூட ஷேர் பண்ணிக்கறியா, அதுவும் அவளோட இந்த செய்கைக்கு ஒரு காரணம். நீ மட்டும், ‘இது என் அம்மா, அப்பா… இது என் வீடுன்னு’ ஒரு பேச்சுக்கு சொன்னா கூட அதை அவ தாங்கிக்க மாட்டா” அவர் சொல்ல, அது அவளுக்கே தெரியுமே.
“என் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்திருந்தா கூட என்மேலே இவ்வளவு பாசமா இருந்திருப்பாளான்னு தெரியாதும்மா” அவள் உணர்ந்து சொன்னாள்.
“உங்க அப்பாகிட்டே அவளோட கல்யாண விஷயமா பேசச் சொன்னேன் சுபி. என்னவோ தைரியமா சொல்லிட்டேன், ஆனா அவளை விட்டு எப்படி இருப்பேன்னுதான் தெரியலை. உனக்கு கல்யாணம்னு யோசிக்கும்போது கூட நான் இப்படி சஞ்சலப்படலை. என்னவோ மனசு கிடந்தது அடிச்சுக்குது” அத்தனை பரிதவிப்பாக சொன்னார்.
“ஏம்மா இப்படி சொல்றீங்க? எப்போ இருந்தாலும் அவளுக்கு கல்யாணம் பண்ணி அனுப்ப வேண்டியது தானே?” அவளுக்கு தாய் சொல்ல வருவது புரியாமல் கேட்டாள்.
“உனக்குத் தெரியாது சுபி, போன வருஷமே அவளுக்கு வரன் பார்க்கட்டுமான்னு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? ‘ஏம்மா என்னை உங்களை விட்டு அனுப்பப் பார்க்கறீங்களா?’ன்னு கேட்டா சுபி. மனசே ஆடிப் போச்சு…” அனிதா சொல்லிவிட்டு அழ திகைத்துப் போனாள்.
“என்னம்மா சொல்றீங்க? அப்படியா கேட்டா அவ? அப்போவே இதை ஏன் என்கிட்டே சொல்லலை? அவ வாயிலேயே நல்லா நாலு அடி போட்டிருப்பேன். இப்போ என்னைக் கட்டிக் கொடுத்து அனுப்பலையா? என்ன பேச்சு பேசறா?” ஆற்றாமையாக கேட்டாள்.
“அவளுக்கு நம்மளை விட்டுப் போக மனசில்லை, அதுக்கு இப்படி எல்லாம் பேசிப் பார்க்கறா. விடு, அவங்க அப்பா கேட்டா என்ன சொல்றான்னு பார்ப்போம். நீ சாப்ட்டு மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு” மகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய பாத்திரத்தை எடுக்கத் துவங்கினார்.
“அப்பா கேட்டா உடனே தலையை ஆட்டி வைப்பா, அது தெரியாதாக்கும்? ஆனா அப்பா அவகிட்டே கேட்கணுமே…” அவள் சலித்துக் கொள்ள,
“அதைச் சொல்லு… அந்த மனுஷன் ஒரு வார்த்தை கூட அவ மனசு கோணக் கூடாதுன்னு நினைக்கறார். ‘நீங்க பெரியப்பா தானே, அதனால்தான் என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?’ன்னு அவ கேட்டுடுவாளாம். என்னென்ன சொல்றாரு தெரியுமா?” புலம்பியவாறே மகளுக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொடுத்தார்.
“யாரு… அவ அப்படிச் சொல்வாளாமா? ஐயோடா… ரொம்பத்தான். அப்பா வரட்டும்… நான் அவ கல்யாணத்தைப் பத்தி கேட்டப்போ, எனக்கு குழந்தை பிறந்த பிறகு பண்ணிக்கறேன்னு சொன்னா” அவள் சொல்ல, அனிதா ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.
“என்ன சொல்ற சுபி…? நீ அவகிட்டே கேட்டியா? இது எப்போ?”.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டேன். எனக்கென்னவோ சந்தேகமா இருக்கும்மா… எனக்கு குழந்தை பிறக்க முன்னாடியே அவளுக்கு கல்யாணமாகி, அவளுக்கு உடனே பிள்ளை வந்துட்டா நாம எல்லாம் வருத்தப்படுவோம்னு தான், அம்மணி இந்த ஒரு விஷயத்திலும் நம்ம மூணு பேர்கிட்டேயும் ட்ராமா பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கறேன்.
“இல்லன்னா நாம ஒன்றைச் சொல்லி அவ எதையாவது மறுத்து பேசி இருக்காளா?” அவள் கேட்க, அனிதா அப்படியே நின்றுவிட்டார்.
“சுபி… நிஜமாவா சொல்ற? அப்படியும் இருக்குமோ?” அப்படி ஒரு கோணம் இருப்பதையே அவர் அப்பொழுதுதான் யோசித்தார்.
“நான் அடிச்சு சொல்றேன், அதுதான் காரணம்… வேற எதுக்காகவும் அவ இப்படி செய்யவே மாட்டா” அவள் அத்தனை உறுதியாகச் சொல்ல, அனிதாவுக்கும் அது சரியாகத் தோன்றியது.
சுமித்ரா பல விரதங்கள், வேண்டுதல்கள், தொட்டில் கட்டுவது என செய்ததை எல்லாம் அனிதா யோசித்தவாறு நின்றுவிட்டார்.
“அந்த குட்டிக் கழுத என் வாயை என்ன சொல்லி அடைச்சிருக்கு பாரேன்” வர சொல்ல சுபிதா சிரித்துவிட்டாள்.
“அம்மா, நீங்களும் சாப்பிடுங்கம்மா” அவள் சொல்ல,
“வெளியே போனவங்க வரட்டும்மா… அவங்களுக்கும் கொடுத்துட்டு சேர்ந்து சாப்பிடறேன். இந்த குட்டி ஒரு வாரத்துக்கு ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்காம்” அவர் சுகமாக சலித்துக் கொண்டார்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, வெளியே கேன்டீனுக்கு மகளை அழைத்துச் சென்றார் செல்வம். “டீ குடிக்கறியாம்மா? வேற ஏதாவது சாப்பிடறியா?” மகளிடம் கேட்டார்.
“நோ’ப்பா… அம்மா டிபன் எடுத்துட்டு வந்திருக்காங்க. இங்கே எனக்கு எதுவும் வேண்டாம், நீங்க காபி குடிக்கறீங்களா? நான் வாங்கிட்டு வர்றேன்” அவள் சொல்ல, அமைதியாக தலை அசைத்தார்.
அவள் சென்று வாங்கி வரவே, அமைதியாக அதை வாங்கிப் பருகினார். அந்த நேரம் அங்கே, அவள் நேற்று காலையில் பார்த்த செக்யூரிட்டி ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமியின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு அங்கே வந்தார்.
“புவி என்ன வேணும்?” அவர் கேட்க,
“எனக்கு பன் வாங்கித் தாங்க தாத்தா. ஜேம் பன் வேணும்…” அவள் சொல்ல, “தம்பி, இந்த பன் ரெண்டு கொடுப்பா” அவர் கேட்க, அந்த கேன்டீன் பையன் அதை எடுத்துக் கொடுத்தான்.
“தாத்தா… எனக்கு கேக் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்களே. நீங்க வாங்கித் தரவே இல்ல…” தாத்தா வாங்கித் தந்த பன்னை பிய்த்து உண்டவாறே தன் தாத்தாவிடம் குறை பட்டாள்.
“தாத்தாவுக்கு சம்பளம் வந்த உடனே உனக்கு வாங்கித் தர்றேன் புவி. இப்போ நீ பன்னை சாப்பிடு” என்றவரின் முகத்தில் அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத துயரம் அப்பிக் கிடந்தது.
“புது ட்ரஸ் கூட வாங்கித் தர்றேன்னு சொன்னீங்க. பிறகு யூனிபாம் வாங்கி கொடுத்துட்டீங்க. போங்க தாத்தா… நீங்க எப்பவுமே இப்படித்தான் பண்றீங்க” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே பன்னுக்கான பணத்தை கொடுத்துவிட்டு அவர் அங்கே இருந்து செல்ல முயன்றார்.
“புவிக்கு யூனிபாம் கிழிஞ்சு போய்டுச்சே, அதான் தாத்தா புது யூனிபாம் வாங்கிட்டு வந்தேன். அடுத்த பிறந்தநாளுக்கு தாத்தா கண்டிப்பா புதுத்துணி வாங்கித் தர்றேன் சரியா?” தன் பேத்தியை சமாதானம் செய்தவாறே அவர் அழைத்துச் செல்வது அவள் பார்வையில் விழுந்தது.
‘ஒரு புதுத்துணியும், ஒரு கேக்கும் கூட கிடைக்காமல் ஏமாறும் குழந்தை’ எண்ணியவளுக்கு மனதைப் பிசைந்தது. மகளது கவனம் தன் பேச்சில் இல்லை எனவும், தானும் அவர்களை கவனித்தார் செல்வம்.
“சுமிம்மா…” என அழைத்து அவள் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றார்.
“இன்னும் இப்படியான எளிய மனிதர்களும் இருக்கத்தான் செய்யறாங்க இல்லப்பா?” அவள் கேட்டு வைக்க, ஆமோதிப்பாக தலை அசைத்தார்.
“நாம ஏதாவது செய்யணும்ப்பா…” அவள் சொல்ல, அவருக்கு மறுக்கத் தோன்றவில்லை.
“செய்யலாம்மா…” அவர் சொல்லி வைக்க, அதற்கு மேலே தான் பேச வந்ததை அவளிடம் பேச முடியவில்லை. அவர்கள் அறைக்குச் செல்ல, ஆர்வமாக பார்த்த மனைவியிடம் மறுப்பாக தலை அசைத்து, மனைவியின் கண்டனப் பார்வைக்கு ஆளாகினார்.
“உங்ககிட்டே ஒரே ஒரு விஷயத்தை தான் அவகிட்டே பேசச் சொன்னேன், அது முடியலை…” கணவனிடம் அடிக்குரலில் கேட்டும் வைத்தார்.
“சூழ்நிலை சரியா அமையலை அனிதா…” அவர் பரிதாபமாகச் சொல்ல,
“அது சரி… நீங்க சாப்பிடுங்க” என கடுப்புடன் சொல்லி, தட்டை கணவனின் கரத்தில் திணித்தார். இப்பொழுது இட்லியை உண்பதா? வேண்டாமா? என மிகப்பெரும் குழப்பத்துக்கு உள்ளானார் செல்வம்.
அதைப் பார்த்த அனிதா, “இன்னும் எதுக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? சாப்பிடுங்க” தேன் ஒழுகும் குரலில், அத்தனை முறைப்போடு நின்ற மனைவியின் சாமர்த்தியத்தில் மிரண்டவராக இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டார்.
“அம்மா எனக்கும்…” சுமித்ரா கேட்க, மகளுக்கும் கொடுத்து, தானும் உண்டார். சுபிதாவும், குழந்தையும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.
“டிச்சார்ஜ் எப்போன்னு சொன்னாங்களாம்மா?” சின்னக் குரலில் தாயிடம் கேட்டாள்.
“இன்னைக்கு சாயங்காலம் போகலாம்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கம்மா. மறுபடியும் டாக்டர் வந்தால் கேட்கணும்” தாய் சொல்ல,
“சரிம்மா, நீங்க இந்த பெட்ல படுத்துக்கோங்க நான் கொஞ்ச நேரத்தில் வரேன்” வெளியே செல்லப் போனாள்.
“நீதான் ஆபீஸ்க்கு ஒரு வாரம் லீவ் ஆச்சே, இப்போ எங்கே போற?” அவளைத் தடுத்தார்.
“அது… ஒரு கேக்கும், நாலு ட்ரசும் வாங்கணும்மா” என்றவள் அது யாருக்கு என்றும் சொல்ல, அனிதா மறுக்கவில்லை.
“நல்ல விஷயம்தான்… செய்…” அவர் சொல்ல, உறங்கும் மற்றவர்களை தொல்லை செய்யாமல் வெளியே வந்துவிட்டாள்.
மனைவியோடு தனித்து இருந்தால் அவரிடம் வாங்கிக் கட்ட வேண்டி இருக்கும் என அனுபவப் பாடம் உணர்த்த, தானும் எழுந்து சின்ன மகளின் பின்னாலேயே வந்துவிட்டார்.
“நான் நம்ம கடைக்குப் போயிட்டு வர்றேன்ம்மா… நீயும் அப்பா கூட வரியா?” அவர் கேட்க, மறுக்காமல் அவரோடு சென்றாள்.
செல்வம் வீடு கட்டும் கட்டுமான கம்பி, ப்ளம்பிங், ஷீட் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வந்தார். அவருக்கும் சென்னைக்குள் மூன்று கடைகள் இருந்தது. நல்ல வசதியான வாழ்க்கை தான்.
சுமித்ரா MBA HR முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் ஹெச்ஆராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது அம்மாவழி தாத்தா பாட்டியின் சொத்துக்கள், அவர்களது வீடு, ஒரு காம்ளக்ஸ் அதிலிருந்து வரும் வாடகை வருமானம் என சுமித்ராவும் வளமாகவே இருந்தாள்.
அவளது சொத்துக்கள், வருமானம் என அனைத்தையும் மேற்ப்பார்வை இடுவது செல்வம் தான். ஆனால் அதில் இருந்து ஒரு பைசா அவர் எடுப்பது இல்லை. சுமித்ரா வேலை பார்ப்பதால் வரும் சம்பளத்தை எல்லாம் மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதற்காகவே செலவழித்துக் கொண்டு இருந்தாள்.
அவளது வசதி வாய்ப்புகளைப் பற்றி அவளுடன் இருக்கும் யாருக்குமே இன்று வரைக்கும் தெரியாது. அவை எல்லாம் கோவையில் இருந்ததாலோ என்னவோ மற்றவர்களுக்குத் தெரிய வராமலேயே போனது.
தந்தையோடு சேர்ந்து கடைக்குச் சென்று இரண்டு நாட்களாக விட்டுப் போயிருந்த கணக்குகளை சரி பார்த்தாள். ஸ்டாக் எல்லாம் செக் செய்துவிட்டு, அவரையும் உடன் வைத்துக் கொண்டு கடைக்குச் சென்று அந்த சிறுமியின் அளவுக்கு மூன்று உடைகள் வாங்கிக் கொண்டாள்.
கூடவே அவர்கள் மருத்துவமனைக்குத் திரும்பும் வழியில் இருந்த பேக்கரிக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தார்கள். குழந்தை அப்பொழுது விழித்திருக்க, அவனைத் தன் கைகளுக்குள் வாங்கிக் கொண்டாள்.
மாலையில் அவர்கள் டிச்சார்ஜ் ஆகும் நேரம் அவள் வாங்கிய உடைகளை எடுத்துக் கொண்டு, அப்பொழுதுதான் வந்த கேக்கையும் வாங்கிக் கொண்டு கீழே சென்றாள். அவளோடு செல்வமும் இணைந்து கொண்டார்.
திலக் மனைவி, குழந்தையை அழைத்துச் செல்ல வந்திருக்கவே, “மாமா… நீங்க அம்மாவையும் அக்காவையும் அழைச்சுட்டு முன்னாடி போங்க. நானும் அப்பாவும் எங்க கார்ல பின்னாடியே வர்றோம்” அவள் சொல்ல, திலக்கும் அவ்வாறே செய்தான்.
மருத்துவமனைக்கு வெளியே அவர்கள் வருகையில் ராமேந்திரன் அங்கே இருக்கவில்லை. வேறு ஒரு புது செக்யூரிட்டி அங்கே இருக்க, “இங்க காலையில் இருந்த அந்த செக்யூரிட்டி தாத்தாவை எங்கே?” அவள் அவரிடம் கேட்டாள்.
“டியூட்டி மாறிட்டோம்… இப்போதான் வீட்டுக்குப் போக வேண்டி ட்ரஸ் மாத்த பூத்துக்கு போனான்” என்றவர் சொல்ல, அவரிடம் வழி கேட்டு அங்கே வந்து சேர்ந்தார்கள்.
உடை மாற்றி, கையில் சிறு சாப்பாட்டு கூடையும், ஒரு சிறு பையுமாக வெளியே வந்தவர் அவளைப் பார்த்துவிட்டு மலர்ந்து புன்னகைத்தார்.
“அம்மாடி… நீயா? என்னம்மா?” அவர்கள் தன்னைப் பார்த்தவாறே அங்கே நிற்கவே கேட்டார்.
“இதை நான் கொடுத்தேன்னு உங்க பேத்தி கிட்டே கொடுத்துருங்க தாத்தா” என்றவாறு அவள் கேக்கையும், உடைகள் அடங்கிய கட்டைப் பையையும் கொடுக்க பதறிப் போனார்.
“ஹையோ… இதெல்லாம் எதுக்கும்மா? எதுவும் வேண்டாம்” வேகமாக மறுத்தார்.
“நான் சித்தி ஆயிட்டேன் தாத்தா. அந்த சந்தோஷத்தைக் கொண்டாடத்தான் இது எல்லாம். என் சந்தோஷத்துக்காக கூட இதை வாங்கிக்க மாட்டீங்களா? உங்க பேத்தி பேரு புவியா?” அவரிடம் கேட்டாள்.
“புவனா… என் மகன் வயித்து பேத்தி. அவன் நெஞ்சு வலியில் போய் சேர்ந்துட்டான். அவ ஆத்தா வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு, இவளை எங்ககிட்டே கொடுத்துட்டு போய்ட்டா. இப்போ நானும் என் பொண்டாட்டியும்தான் எங்க பேத்தியைப் பார்த்துக்கறோம்.
“அவளுக்கு கொஞ்சம் விவரம் தெரியற வரைக்கும் இந்த கட்டை உயிரோட இருக்கணும். இப்போ எங்க வேண்டுதல் எல்லாம் அதுதான்” கண்கள் பனிக்க, தன் தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
அவர் சொன்னதைக் கேட்டு அப்படியே கண் கலங்கிப் போனாள். “உங்க வீடு எங்கே தாத்தா இருக்கு?” அவள் கேட்க,
“இந்த ஹாஸ்பிட்டலுக்குப் பின்னாடி ஒரு பர்லாங்கு தூரம் போனா, அங்கே கொஞ்சம் வரிசை வீடுங்க இருக்கும்மா. அங்கேதான் இருக்கோம்” என்றவர் அப்படியும் அவளிடமிருந்து அதை வாங்கிக் கொள்ள தயங்கினார்.
அவரை வற்புறுத்தி அவற்றை அவரிடம் கொடுக்க, கண்கள் மின்ன, அத்தனை ஆசையும், பூரிப்புமாக அதைப் பெற்றுக் கொண்டார்.
“என் பேத்தி ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தது. காலையில் நாங்க பேசினதை கேட்டியம்மா?” என்றவரின் பார்வை எல்லாம் அந்த கேக்கின் மீதும், உடையின் மீதுமே இருந்தது. அவரிடம் கலக்கத்தையும் மீறித் தெரிந்த அந்த புன்னகை… அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் இருந்தது.
“உன் நம்பர் கொடும்மா… என் பேத்தியை விட்டு பேசச் சொல்றேன். அது ரொம்ப சந்தோஷப்படும்” என்றவர் தன் பட்டன் ஃபோனை எடுக்க, தன் எண்ணை அதில் பதிந்து கொடுத்தாள்.
“ரொம்ப நன்றிம்மா… உங்களுக்கும் தான் அய்யா…” அவர் கையெடுத்து கும்பிட, செல்வத்துக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.
ஆயிரம் நன்றி சொல்லி, அவர் தன் சைக்கிளை அழுத்திக் கொண்டு செல்ல, அவர் செல்லும் விதமே அவர் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார் என சொல்லாமல் சொன்னது.
இவர்கள் வீட்டுக்குச் சென்று குழந்தையையும் தாயையும் நிறுத்தி சுற்றிப் போட்டுவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள். சுபியும் திலக்கும் அவர்களது அறைக்குச் செல்ல, ஹால் சோபாவில் அனைவரும் அமர்ந்தார்கள்.
அந்த நேரம் சுமித்ராவின் அலைபேசி இசைக்கவே, வேகமாக அழைப்பை ஏற்றாள். “பேசு… பேசு… அக்கான்னு கூப்பிடு” ஒரு முதியவரின் குரல் லேசாக கேட்க, அழைத்திருப்பது யார் என அவளுக்குத் தெரிந்து போனது.
“புவனா… கேக், ட்ரஸ் எல்லாம் பிடிச்சிருக்கா? உன் பிறந்தநாளுக்கு என்னோட பரிசு” அந்த ஐந்து வயது குழந்தை பேசத் தயங்கவே இவள் பேசினாள்.
“யாரு?” என அனிதா கணவனிடம் கேட்க, “அந்த செக்யூரிட்டி…” அவர் பதில் கொடுக்கவே, அவளை கவனித்தார்கள்.
“நன்றிக்கா… எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு… ரொம்ப அழகா இருக்கு. கேக் கூட சில்லுன்னு இருக்கு. இது வரைக்கும் நான் இப்படி ஒரு கேக்கை சாப்ட்டதே இல்லை. நீங்க நல்லா இருக்கணும்னு எங்க ஆயா சொல்லிச்சு…” குழந்தை பேச அவளுக்கு தொண்டையை அடைத்தது.
“சந்தோஷமா இருக்கணும் புவி… எதுன்னாலும் எனக்கு கூப்பிடு” அடைத்த தொண்டையை சரி செய்ய முயன்றவாறே சொன்னாள்.
“ம்… சரிக்கா… ஆயா பேசணுமாம்…” என்றவள் அலைபேசியை கை மாற்றினாள்.
“பா…பாட்டி…” அந்தப்பக்கம் இருந்து சத்தம் இல்லாமல் போகவே குரல் கொடுத்தாள்.
“ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தாம்மா. நீ…நீ… சந்தோஷம்மா… நீ நல்லா இரும்மா…” அவர் பேச, அலைபேசியை வைத்துவிட்டாள். அனிதா மகளின் தோளைத் தொட, அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.
அவர் அவள் தலையை வருட, “சுமி… உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கோம். நீ என்னம்மா சொல்ற?” செல்வம் காலையில் கேட்க நினைத்ததை இப்பொழுது கேட்டுவிட்டார்.
சில நொடிகள் அவளிடமிருந்து எந்த பதிலும் இருக்கவில்லை. அடுத்த நொடி, தகப்பனை நேருக்கு நேராகப் பார்த்தாள். “ம்… சரிப்பா… உங்க இஷ்டம்… ஆனா ஒரு ஆறு மாசம் போகட்டும்” அவள் சொல்ல, அவளது அந்த பதிலைக் கேட்டு இனிதாக அதிர்ந்து போனார்கள்.
1 comment
புவிப்பொண்ணின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டாளே,ரொம்ப பாசக்காரி தான் நம்ம ஹீரோயின்.
அழகான பதிவு ❤️