Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 6.

உனக்கென பிறந்தவள் நானே – 6.

by infaalocious

பகுதி – 6.

கார்முகில் தன் நண்பன் அதியனைத் தேடி அவன் கடைக்கு வந்தான். அவனைப் பார்த்த அதியன் பெரும் முறைப்போடு அவனை வரவேற்றான். அவனது முறைப்பு எதற்கு எனப் புரிந்தாலும் அமைதியாக அவனுக்கு எதிரில் சென்று நின்றான்.

“வாங்க காவல் தெய்வமே… என்ன இந்தப் பக்கம்?” அவன் நக்கலாக வினவ,

“அதியா…” சற்று சங்கடமாக குரல் கொடுத்தான்.

“ஓ மாத்தி சொல்லிட்டனோ, காவல் தெய்வம் இல்ல, ‘காதல்’ தெய்வம்னு சொல்லி இருக்கணுமோ?” அவன் குரலில் ஏக கடுப்பு.

“விடு அதியா, அவனுங்க என்ன புதுசாவா பண்றானுங்க. எனக்கு இதெல்லாம் பழகிப் போய்டுச்சு” கார்முகில் சொல்ல, அதியனுக்கு கோபம்தான் வந்தது.

“என்னடா சொல்ற? அப்போ இதுக்கு முன்னாடியும் இப்படி எல்லாம் செய்து இருக்காங்களா?அவங்க கூட எல்லாம் எதுக்கு சேருற நீ?” தன் நண்பனை அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துவது கண்டு அவனால் தாங்க முடியவில்லை.

“அதெல்லாம் ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே நிறைய அனுபவிச்சுட்டேன். பொண்ணுங்களை சைட் அடிக்கப் போகும்போது, அவனுக கலரா அழகா தெரியணும் என்பதற்காக என்னை சும்மா ஓரமா நிறுத்தி வச்சுப்பாங்க. அப்போதான் அவங்க கலரும், அழகும் பளிச்சுன்னு தெரியும்னு நினைப்பு.

“அப்போவே அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சுட்டேன், இப்போ இவன் ரொம்பவே கெஞ்சி கேட்டுகிட்டதால் தான் போனேன்” கார்முகில் விளக்கம் கொடுக்க அது எல்லாம் அதியனை சமாதானப்படுத்தவே இல்லை.

“கூப்பிடற அவங்களுக்கு புத்தி, மனசாட்சி இருக்கணும். உன்னைச் சொல்லி என்ன செய்ய? நீ வேணா பாத்துகிட்டே இரு, அவனுங்க எல்லாம் அசந்து போற மாதிரி உனக்கு பொண்டாட்டி வரப்போறா. அப்போ இருக்கு அவங்களுக்கு… அப்போ அவனுங்க முகத்தை எங்கே கொண்டு போய் வச்சுப்பானுங்கன்னு எனக்குப் பார்க்கணும்” அவன் குரலில் அத்தனை வேகம் இருந்தது.

அதியன் பேசியதைக் கேட்ட கார்முகில் வாய்விட்டே சிரித்துவிட்டான். “ஏன்டா அதியா, இருந்தாலும் உனக்கு ரொம்ப பேராசைடா. நான் என்ன ‘அப்பாஸ்’ கலர்லேயா இருக்கேன்? ‘பிட்லி’ கலர்ல தானேடா இருக்கேன். எனக்கு அவனுக மூக்கு மேலே விரல் வைச்சு அசந்து போற மாதிரி பொண்ணா? போடாங்…” அவனைப் போலியாக அடிக்க கை ஓங்கினான்.

“நான் சொல்றது கண்டிப்பா பலிக்கும் பாரு” ரோஷமாகச் சொன்னான் அதியன்.

“எங்கே உன் நாக்கை நீட்டு, உனக்கு கரி நாக்கான்னு பார்க்கறேன். நான் ஸ்கூல் படிக்கும்போது பசங்க கரிநாக்குக்காரன் சொன்னால் பலிக்கும்னு சொல்வாங்க” கார்முகில் சொல்ல, அவனை முறைத்தான்.

“உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன், போன வாரம் தரகர் சொன்னாரேன்னு ஒரு காபி ஷாப்ல அந்த பொண்ணைப் பார்க்கப் போனேன்டா. பொண்ணு மாநிறம் தான், அந்த பொண்ணு என்னைப் பார்த்த உடனே என்ன சொல்லுச்சு தெரியுமா?

“’சாரி, நானே கலர் கம்மின்னு எனக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கு. எனக்கு வர கணவர் கொஞ்சம் கலரா இருந்தால்தான், எங்களுக்கு பிறக்கப்போற குழந்தைகளாவது கலரா இருக்கும்ன்னு நான் ஆசைப்படறேன். தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லுச்சு.

“நான் அந்த பொண்ணை குற்றம் சொல்லலை, அந்த பொண்ணுக்கே அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்போது, நல்ல கலரா இருக்கற பொண்ணுங்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? இதில் இவர் வேற… வேலையைப் பாருடா…” கார்முகில் சொல்ல, அதியனுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

“அதைவிட இப்படி யோசிச்சுப் பாரு… அந்த அழகா இருக்கற பொண்ணுங்களுக்கும் தன் வருங்கால கணவனைப் பற்றி எவ்வளவு எதிர்பார்ப்பு, ஏக்கம், ஆசைகள் இருக்கும். என்னைப் போல் ஒருவன் அவங்களுக்கு கணவனா வர்றது நியாயமா சொல்லு?” கார்முகில் கேட்க, அதியனுக்கு வாயடைத்துப் போனது.

அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், தன் நண்பன்… அதுவும் குணத்தில் தங்கம், ஒரு சின்ன கெட்டப் பழக்கம் கூட இல்லாதவன். சீரோ பெர்சன்டேஜ் கூட வெறுக்கும் குணம் இல்லாதவன், தான் என்ற கர்வமோ, அகந்தையோ இல்லாதவன். நேசிக்க மட்டுமே தெரிந்த ஜீவன். அவனைப் பற்றி முழுதாக அறிந்தவன் என்பதால் நண்பனுக்காக மட்டுமே அவனால் யோசிக்க முடிந்தது.  

“சரி, நாளைக்கு நைட் ஷோ போலாமா? ரொம்ப போர் அடிக்குது..” அவன் கேட்க, அதியன் மறுப்பானா என்ன?

“அதுக்கென்னடா போனா போச்சு. இப்போ எந்த படம் நல்லா இருக்கு? அதுக்கே டிக்கெட் போட்டுடு” அதியன் சொல்ல, அவன் கேட்டுக் கொண்டான்.

“சரிடா, அப்போ நீ வேலையைப் பாரு…” கடைக்கு கஸ்டமர்கள் வரவே கார்முகில் கிளம்பி விட்டான். அவன் செல்லவே கனத்த இதயத்தோடு தன் வேலையைப் பார்க்கத் துவங்கினான். அந்த நேரம் அங்கே ஆராதனா வர, அவனது கவனம் கொஞ்சம் திசை மாறியது.

கார்முகில் வீட்டுக்கு வரவே, சுதா அவனை ஆர்வமாக வரவேற்க அது எதனால் என்பது அவனுக்குப் புரிந்து போனது.

‘ஆண்டவா, மீண்டும் மீண்டுமா?’ எண்ணியவன் தாயை ஏறிட்டான்.

“முகி, நம்ம தரகர் ஒரு பொண்ணோட ஃபோட்டோ அனுப்பி இருக்காருப்பா. ஜாதகம் எல்லாம் பக்காவா பொருந்தி இருக்கு. நீ மட்டும் ஓகே சொல்லிட்டன்னா நாம இன்னைக்கே கூட பொண்ணு பார்க்கப் போகலாம்” சுதா சொல்ல, தாயை அழைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

“அம்மா, உங்க ஆர்வம் எனக்குப் புரியுது… ஆனா பாருங்க, இந்த பொண்ணுங்களை எல்லாம் நம்ம வசதியைக் காட்டி ப்ரெயின்வாஷ் பண்ணப் பார்க்கறாங்க. என்னை நேர்ல பார்த்த உடனே அது எல்லாம் பின்னாடி போய்டுது. நானும் எவ்வளவு நாள்ம்மா வலிக்காத மாதிரியே நடிக்கறது?” அவன் விளையாட்டுப் போக்கில் கேட்டு வைக்க, சுதாவின் கண்கள் கலங்கிப் போனது.

“முகி… எனக்கென்னவோ…” தாய் துவங்க,

“கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கலாம்மா. இப்போதைக்கு நான் எந்த பொண்ணையும் பார்க்கறதாகவே இல்லை. என்னை மன்னிச்சுடுங்க” என்றவன் எழும்பிச் சென்றுவிட, சுதா அப்படியே அமர்ந்துவிட்டார்.

செல்லும் மகனது முதுகையே வெறித்தவருக்கு, ‘இவனுக்கு ஒரு நல்லது செய்து பார்க்க முடியவில்லையே?’ என்ற எண்ணம்தான் மனதைப் போட்டு அரித்தது.

சுதா அப்படியே அமர்ந்திருக்க, அவரைப் பார்த்தவாறே வந்தார் சுந்தரமூர்த்தி.

“என்ன சுதா? ஏன் முகி ரூமையே பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க?” மனைவியின் பார்வை மாடியைப் பார்த்தவாறே இருக்க கேட்டார். தன் அருகே அமர்ந்த கணவனின் முகம் பார்த்த சுதாவின் கண்களில் கண்ணீர்.

அதைப் பார்த்த சுந்தரமூர்த்தி பதறிப் போனார். “சுதா, என்ன கண்ணெல்லாம் கலங்கி இருக்கு? எதுக்கு இப்போ நீ அழற?” மென்மையாக கடிந்து கொண்டார்.

“ஏன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றவரின் குரலில் அத்தனை வருத்தம் இருந்தது.

“அட முகி கல்யாணம் தானே… கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு கொஞ்சம் நிம்மதியா இருன்னு சொன்னால் கேட்கவே மாட்டியா? இப்படி கவலைப்பட்டு, கவலைப்பட்டே உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது. அப்படி மட்டும் ஏதாவதுன்னா, எனக்கும் முகிக்கும் யார் இருக்கா சொல்லு?” சுந்தரமூர்த்தி கேட்க, சுதாவுக்கு அழுகைதான் வந்தது.

“அப்போ கடைசி வரைக்கும் என் பிள்ளைக்கு நான்தான் சோறு போடணுமா? அவனுக்குன்னு ஒரு பொண்ணு வர மாட்டாளா? அவனைப் பார்க்க மாட்டாளா? அவன் இப்படியே தனிமரமாவே நின்னுடுவானா?” சுதா மேலும் கவலையாக சுந்தரமூர்த்திக்கும் வருத்தமாகப் போயிற்று.

“நான் எங்கே சுதா அப்படிச் சொன்னேன்? கடவுள் மேலே பாரத்தைப் போடுன்னு சொன்னேனா இல்லையா? கண்டிப்பா நம்ம பிள்ளை அவன் பொண்டாட்டி, பிள்ளையோடு சந்தோஷமா வாழத்தான் போறான். அதை நாம பார்க்கத்தான் போறோம்” சுந்தரமூர்த்தி சொல்ல, சுதாவின் முகம் அப்படியும் தெளியவே இல்லை.

“சுதா, நீ வேணா பாரு… பேரப் பிள்ளைகளோட சண்டையை சமாதானம் செய்தே நான் ஓஞ்சு போயிடறேன்னு நீ என்கிட்டே சுகமா அலுத்துக்கத்தான் போற, அதை நான் பார்க்கத்தான் போறேன்” அவர் சொல்ல சுதாவின் கண்களில் அப்படி ஒரு பிரகாசம்.

“எங்கே…? நம்ம குழலிக்கும் கல்யாணம் ஆகி இந்தா அந்தான்னு மூணு வருஷம் ஓடிப் போச்சு. அவளுக்கும் ஒரு நல்லது நடக்கக் காணோம். நீங்க என்னன்னா… பேரப் பிள்ளைங்க சண்டையை நான் தீர்த்து வைக்கப் போறேன்னு ஜோசியம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க” சுதாவின் பேச்சில் சுந்தரமூர்த்திக்கு நெஞ்சே பாரமாகிப் போனது.

குழலிக்கு ஒரு குழந்தை வந்திருந்தாலாவது மகளை கவனிப்பதில் மனைவியின் கவனம் சென்றிருக்கும். தன் பேரப் பிள்ளையை கொஞ்சுவதில் மற்ற கவலைகள் எல்லாம் அகன்று இருக்கும். இங்கே அதற்கும் வழி இல்லாமல் போக, அவரும் என்னதான் செய்ய?

‘அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? நாங்க யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்? ஏன் அந்த கடவுள் எங்களை இப்படி சோதிக்கறார்?’ உள்ளுக்குள் கலங்கிய மனதை மனைவிக்குக் காட்டாமல் தடுத்தார்.

சுதாவே ஏற்கனவே கலங்கி இருக்கிறார், இதில் தன் வருத்தத்தை வெளியில் காட்டினால் இன்னும் அழுவார் என்பதால் அதை மறைத்தார்.

“சரி சுதா, இன்னைக்கு புதுசா என்ன நடந்தது?” மனைவியிடம் கேட்டார்.

மகனுக்கும் தனக்கும் நடந்த பேச்சை சுதா சொல்ல, “அவன் சொல்றதும் சரிதானே சுதா. கொஞ்ச நாளைக்கு இதை எல்லாம் நிறுத்து. என்னதான் இருந்தாலும் வயசுப் பையன், அவனுக்கும் எதிர்பார்க்கறதும், ஏமாந்து போறதும் கஷ்டமா இருக்கும் தானே? அவனையும் நாம குறை சொல்ல முடியாது” சுந்தரமூர்த்தி சொன்னார்.

“இந்த பொண்ணை மட்டும் பார்க்க போகச் சொல்லுங்க. அவங்க வீட்டுக்கு எல்லாம் வேண்டாம், சும்மா கோவில்ல வச்சு பார்க்கட்டும்” சுதா சொல்ல, அவரால் மறுக்க முடியவில்லை. கார்முகிலிடம் பேசி அதற்கு சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

கார்முகிலும் அன்றைக்கு வேறு வழி இல்லாமல் கோவிலுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் போனான். அதென்னவோ பெற்றவர்களிடம் அவனால் முழு மூச்சாக தன் மறுப்பை காட்ட முடியாமலேயே ஒத்துக் கொண்டான்.

அன்றைக்கு சுமித்ராவின் அக்கா மகனது ஸ்டார் பிறந்தநாள் என்பதால் தாய் வீட்டுக்கு வந்திருந்தாள். அன்றைக்கு கோவிலில் பிரசாதம், பூஜை என அனைத்துக்கும் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கவே அவர்களும் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

இவர்கள் பூஜை முடித்து பிரசாதம் கொடுக்கும் வேளையில் கார்முகில் கோவிலுக்குள் நுழைந்தான். அவன் உள்ளே வருகையிலேயே சுமித்ரா அவனைப் பார்த்துவிட்டாள். ‘அட நம்ம ‘பிட்லி’ அவள் வாய் மெல்ல முணுமுணுத்தது.

“என்ன? என்ன சுமி சொன்ன? எதுவும் கேட்கலை” அவள் அருகே இருந்த சுபிதா கேட்க, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.

கார்முகில் நேராகச் சென்று தெய்வத்தை வணங்கிவிட்டு நெற்றியில் விபூதியை பூசிக் கொண்டு பிரகாரத்தை விட்டு வெளியே வந்தான். வந்தவன் பார்வையைச் சுழற்றி யாரையோ தேட, சுமித்ராவும் அவன் பார்வையைத் தொடர்ந்தாள்.

அங்கே சற்று தூரத்தில் ஒரு பெண் கையைப் பிசைந்தவாறு நிற்க, அவன் அந்தப் பெண்ணை நோக்கிச் செல்வது தெரிந்தது. அதைப் பார்த்தவள், ‘இன்னைக்கு யாருக்கு ஹெல்ப் பண்ண வந்தாராம்?’ நினைத்தவாறே அவர்களையே வெறித்தாள்.

சரியா இரண்டே நிமிட பேச்சு, அந்த பெண்ணிடம் இவன் எதையோ கேட்பதும், அதற்கு அந்த பெண் இவனது முகம் பாராமல் வெட்கப் பட்டுக் கொண்டே ஏதோ பதில் சொல்வதும் சுமித்ராவின் பார்வையில் பட்டது.

‘அட பெண் பார்க்கும் படலமா?’ எண்ணியவளுக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான். அவனது குணத்துக்கு, முழுதாக முடிவு தெரியாமல் இங்கே வந்திருக்க மாட்டான்’ என அவளது மனம் அடித்துச் சொன்னது.

‘நான் எப்படி இப்படி நினைக்கறேன்?’ இதுவரை முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒருவன். அவனது பெயர் கூட அவளுக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் ‘இப்படித்தான்’ என அவள் மனம் உறுதியாகச் சொல்வதை ஆச்சரியமாக உணர்ந்தாள்.

அவளிடம் பேசிவிட்டு அவன் வெளியே செல்ல, அந்த பெண் சில நொடிகள் அங்கேயே தேங்கி நின்றாள். கார்முகில் வெளியே சென்றதை உறுதி செய்த பிறகு, அந்த பெண்ணின் அருகில் ஒருவன் வருவதும், இருவருமாக அங்கே இருந்த சின்ன கல்மண்டபத்தை நோக்கி நடப்பதும் தெரிந்தது.

அதுவும் தோள் உரசும் நெருக்கத்தில், அத்தனை நெருக்கமாக அவர்கள் பேசிச் சிரிப்பதை பார்த்தவளுக்கு எதுவோ சரியில்லை எனத் தோன்றியது.

“அக்கா… நீ இங்கே இரு… நான் இப்போ வர்றேன்…” என்றவள் அக்கா மகனோடு அவர்களுக்கு எதிரில் சென்றாள். அதே நேரம், அந்த பெண்ணிடம் ‘நிச்சயத்துக்கு நாள் குறிக்க முறைப்படி வரவா?’ எனக் கேட்க வேண்டி கார்முகிலும் மீண்டும் கோவிலுக்குள் நுழைந்தான்.

அவள் கோவிலில் இருந்து வெளியேறவில்லை என அவனுக்கு உறுதியாகத் தெரியவே, அவளைத் தேடி உள்ளே நடந்தான். அங்கே கல் மண்டபத்தின் அருகே இவனுக்கு முதுகு காட்டி நின்று யாரிடமோ அவள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“என்னடி இப்படி அட்டைக் கரியா இருக்கான்? நீ கறுப்புன்னு சொன்னப்போ கூட நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை. நீ தியாகி தான்…” அவளுக்கு அருகே இருந்தவன் சொல்லி சிரிப்பது இவனுக்கு கேட்டது.

‘அவளது பதில் என்னவாக இருக்கும்?’ எனத் தெரிந்துகொள்ள கார்முகில் ஆர்வமாக தன் செவிகளை தீட்டிக் கொண்டு காத்திருந்தான். தன்னை திருமணம் செய்துகொள்ள அத்தனை உறுதியாக சம்மதம் சொன்னவள், அதே உறுதியை இப்பொழுதும் எதிர்பார்த்தான்.

“கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்கான்னு மட்டும் பார்த்தால் போதும்னு சொல்வாங்கல்ல, இதுவும் அப்படித்தான். இந்த எண்ணி எண்ணி செலவு பண்றது, ஒரு ட்ரஸ் எடுக்க கூட ஒரு வருஷம் காத்திருக்கறது, நினைச்சதை சாப்பிட முடியாமல், வாங்க முடியாமல் தவிச்சது எல்லாம் போதும்.

“இவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா நாளுக்கு ஒரு புது ட்ரஸ் போடலாம். வருஷத்தில் முன்னூறு நாளும் ஹோட்டல்லையே சாப்பிடலாம். நினைச்சா ஷாப்பிங், வார வாரம் புதுப்படம் தியேட்டர்ல போய் பார்க்கலாம். இதை விட வேற என்னடா வேணும்?” தன் அருகில் நின்றவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அதுக்குன்னு… அவனையா? கொஞ்சம் யோசிடி…” அவள் அருகில் இருந்தவன் சொன்னான்.

“எனக்கு நல்ல வசதியா வாழணும்… என் கழுத்தில் பாத்தியா நூல் அளவுக்கு கூட ஒரு தங்கச் செயின் இல்லை. அவங்க வீட்டில் எனக்கு ஐம்பது சவரன் நகை, அவங்களே போட்டு என்னை அவங்க மகனுக்கு கட்டி வைக்கறாங்களாம்.

“கல்யாணம் முடிஞ்சா கையோட ஒரு பிள்ளையைப் பெத்து அவங்க கையில் கொடுத்துட்டா போதும். மொத்த குடும்பமும் எனக்கு கோவிலே கட்டும்டா. ஒத்து வரலையா, இருக்கவே இருக்கு டிவோஸ்… லம்ப்பா ஒரு அமவுண்டை வாங்கிட்டு விலகிட்டா போச்சு” அவள் பேசப் பேச, கேட்டுக் கொண்டிருந்த கார்முகிலுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.

இதுவரைக்கும் தன்னை மறுத்த பெண்களை எல்லாம் அவன் ஒரு நாள் கூட வெறுத்தது இல்லை. அவர்கள் அப்படி சொன்னதை எல்லாம் கேட்டு வருந்தியது கூட இல்லை. ‘எனக்கானவள் இவ இல்லை’ என கடந்துவிட்டான். இவளை ஒப்பிடுகையில் அவர்கள் எல்லாம் எத்தனை நேர்மையானவர்கள் என்ற எண்ணம் கூட எழுந்தது.

இவை அனைத்தையும் மறு பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுமித்ராவுக்கு அந்த பெண்ணின் மீது அப்படி ஒரு ஆத்திரம் வந்தது.

‘இவ எல்லாம் என்ன பொண்ணு? ஒருத்தனின் வாழ்க்கையை தன் சுயநலத்துக்காக பாழாக்கத் துணிந்து விட்டாளே. அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இவளால் எப்படி இப்படி பேச முடிகிறது? இது அவருக்குத் தெரிய வரும்போது எவ்வளவு வருத்தப் படுவார்’ எண்ணியவளுக்கு அதை அவனிடம் சொல்லி ஆக வேண்டுமே என்ற வேகம் எழுந்தது.

‘ஐயோ… அவர் கிளம்பிட்டாரே… எப்படி அவர்கிட்டே சொல்றது?’ என யோசித்தவள் பார்வையைத் திருப்ப, அந்த ஜோடிக்குப் பின்னால் கசங்கிய முகபாவத்தோடு அவன் நிற்பது தெரிந்தது.

‘ஆண்டவா, போச்சு… எல்லாத்தையும் கேட்டுட்டார் போல?’ அவனுக்கு விஷயம் தெரிய வேண்டும் என நினைத்தவள், இப்பொழுது அவன் இதைக் கேட்டுவிட்டானே என தவித்தாள்.

‘அவன் என்ன செய்வான்?’ என அவள் யோசிக்க, அந்தப் பெண்ணை நோக்கி அவன் நடந்து வருவது தெரிந்தது.

“எக்ஸ்கியூஸ் மீ…” அவன் குரல் கொடுக்க, தன்னைப் பார்த்த அந்த பெண் முழுதாக அதிர்ந்து போவது அவன் பார்வையில் பட்டது.

“நீங்க அப்படி யோசித்ததில் தப்பே இல்லை. எனக்கு வரப்போகும் மனைவி ஆசைப்பட்டால், தினம் ஒரு புதுத் துணி, நாளுக்கு மூணு வேளையும் ஹோட்டல் சாப்பாடு, வாரத்துக்கு ஒரு மூவி எல்லாம் செய்ய நான் தயாரா இருக்கேன். இன் ஃபேக்ட் அதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது.

“நீங்க சொன்னதில் எல்லாம் அடிப்படையா ஒரு சின்ன விஷயம், ‘இப்போ எனக்கு அவரைப் பிடிக்கலைன்னா என்ன? போகப் போக எனக்கு அவரைப் பிடிக்கும்’ எனச் சொல்லி இருந்தாலோ, ‘எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு’ன்னு நீங்க சொல்லி இருந்தாலோ நான் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன்.

“அதனால்தான் நான் இங்கே வந்த உடனே உங்ககிட்டே அந்த கேள்வியைக் கேட்டேன். ‘உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா? நிஜமாகவே என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க விரும்பறீங்களா?’ன்னு கேட்டேன்.

“அந்த ‘பிடித்தம்’ ‘விருப்பம்’ இது ரெண்டும் மிகவும் முக்கியம்னு நான் நினைச்சதால் தான் கேட்டேன். ஏன்… என்கிட்டே இப்போ வசதி வாய்ப்பு இல்லை, ஒரு சாதாரண மாச சம்பளக்காரன் என்றால், நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?

“இல்லன்னா அப்படி பசங்களுக்கு கல்யாணமே ஆகாதா? நீங்க பேசினது ரொம்ப தப்புங்க. அதுவும் கடைசியா அந்த டிவோஸ் எல்லாம்… நேசிக்க மனசு இருந்தா போதுங்க, வேற எதுவும் தேவை இல்லை. இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் எங்க வீட்டில் சொல்லிடறேன். நீங்களும் உங்க வீட்டில் சொல்லிடுங்க” வெகு நிதானமாகச் சொன்னவன் திரும்பி நடந்தான்.

“ஐயோ… என்னங்க நான் சும்மா விளையாட்டுக்குத்தான்…” அவள் வேகமாக அவனைத் தடுக்க முயன்றாள்.

“எதுங்க விளையாட்டு? கோவில் சந்நிதியில் வைத்து நடக்காத கல்யாணத்தின் விவாகரத்து வரைக்கும் பேசறது உங்களுக்கு விளையாட்டா? நான் அவ்வளவு ஜாலி பேர்வழி இல்லைங்க… இதை இங்கேயே நிறுத்திக்கலாம்” என்றவன் திரும்பிச் செல்ல, அவன் பேசுவதைக் கேட்ட சுமித்ரா அப்படியே நின்றுவிட்டாள்.

‘நேசிக்க மனசு இருந்தா போதுங்க, வேற எதுவுமே தேவை இல்லை’ அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் எல்லாம் அவளை என்னவோ செய்தது.

அவன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், அந்த பெண்ணிடம் இவ்வளவு பொறுமையாக, நிதானமாக பேசி இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அந்த பெண்ணை அவமானப்படுத்த மிகப்பெரிய வாய்ப்பு இருந்தும் அதை விடுத்து, அவன் விலகிச் சென்றது அவனது நல்ல குணத்தை அவளுக்குச் சொன்னது.

‘இவருக்கு வரப்போகும் மனைவியை அவர் நிச்சயம் உயிராக நேசிப்பார்’ என அவள் மனம் சொல்ல, அந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் என மனம் எதிர்பார்த்தது. அந்த நினைப்பு வந்தவுடன் சற்று திடுக்கிட்டுப் போனாள்.

“சுமி, இங்கே என்ன பண்ற?” சுபிதாவின் குரல் கேட்கவே, தன் நிலையில் இருந்து கலைந்தாள். வேகமாக தன்னை மீட்டுக் கொள்ளவும் முயன்றாள்.

‘ஐயோ என்ன இப்படியெல்லாம் யோசிக்கறேன்? அதுவும் அவர் யாருன்னே தெரியாதப்போ?’ அவள் தன்னைக் குறித்தே பயந்தாள்.

“சும்மாதான்க்கா… அங்கே எல்லாம் முடிஞ்சதா?” எனக் கேட்டவாறே சுபிதாவோடு நடந்தாள்.

“ஆமா… அதான் உன்னைத் தேடி வந்தேன்” அவள் சொல்லவே, அவளோடு சென்றாள். கூடவே இதைப்பற்றி தன்னைப் பெற்றவர்களிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அன்றைக்கு சுமித்ராவின் அப்பா செல்வம், கார்முகிலின் கடைக்குச் சென்றார். செல்வம் தங்கள் கடைக்கு வரவே, அவரைப் பார்த்த சுந்தரமூர்த்தி தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து வரவேற்றார்.

“அடடே… செல்வம் நீயா? வா, வா… உன்னைப் பார்த்து பல மாசமாகுதேப்பா, எப்படி இருக்க?” என்றவாறு சென்ற தந்தையை புருவம் இடுங்கப் பார்த்தான் கார்முகில்.

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் மூர்த்தி, நீ எப்படி இருக்க? ஒரு முக்கியமான விஷயம், அதான் உன்னை நேர்ல பார்த்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்” அவர் சொல்ல, செல்வத்தை தங்கள் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

“முகி, ஒரு காபி சொல்லுப்பா… அப்படியே நீயும் உள்ளே வா” தன் அப்பா சொல்லவே, கடைப் பையனை அழைத்து காபி வாங்கி வரச் சொல்லிவிட்டு அப்பாவோடு அறைக்குச் சென்றான்.

“பிறகு… என்னன்னு சொல்லு…” மூர்த்தி கேட்க,

“புதுசா ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒருத்தங்க நம்ம கிட்டே கம்பி, ப்ளம்பிங் பொருள் எல்லாம் வாங்கறாங்க. அவங்க பெயின்ட், இன்டீரியர் எல்லாம் எங்கே கிடைக்கும்னு கேட்டாங்க. நான் உன் கடையைச் சொல்லி இருக்கேன்.

“அவங்க கண்டிப்பா பேச வருவாங்க, அதான்… அந்த நல்ல விஷயத்தை உன்கிட்டே நேரிலேயே சொல்லலாம்னு வந்தேன்” என்றவரது முகத்தில் ஏகத்துக்கும் கவலை அப்பிக் கிடந்தது.

“சந்தோஷமான விஷயத்தை எதுக்குப்பா இப்படி சோகமா சொல்ற? ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்க. சரி… காபியை எடுத்துக்கோ” காபி வரவே, ஆளுக்கு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டார்கள்.

“செல்வம், இவன்தான் என் மகன் கார்முகில்… உனக்கு இவனைத் தெரியும் தானே?” மகனை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

“தெரியும் மூர்த்தி… ஆனா நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது. இப்போ நல்ல பெரிய பையனா ஆயிட்டானே” என்றவாறே காபியை குடித்தார்.

“இல்ல, குழலி கல்யாணத்து அப்போ பார்த்திருப்ப” மூர்த்தி சொல்ல, “ஆமா… ஆமா…” உடனே ஒத்துக் கொண்டார்.

“உன் பொண்ணுங்க ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க?” மூர்த்தி கேட்டார்.

“பெரியவளுக்கு ஒரு வயசில் ஒரு மகன் இருக்கான், சின்னவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன்” என்றவர் கார்முகிலை ஒரு பார்வை பார்த்தார். மனதுக்குள் வேகமாக கணக்கு போட்டார். அவரது அந்த யோசனையே அவர் எதைப்பற்றி யோசிப்பார் என கார்முகிலுக்குச் சொன்னது.

‘அடடா… அடுத்ததா? போச்சு…’ கார்முகில் மானசீகமாக தன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

You may also like

1 comment

Thani February 25, 2026 - 7:31 pm

கல்யாணமே இன்னும் நடக்கவில்லை இந்த பொண்ணு விவாகரத்து வரை போய்விட்டது என்ன பொண்ணு ,
முகிலன் சூப்பர் ஹீரோ❤️ அவனது வார்த்தைகள் நிதானமா தான் வந்தது அதுக்கும் மேல அவனுக்கு வரப்போற பொண்ணை எப்படி தாங்கப்போகிறான் என சொன்னது சூப்பர்.
இந்தப்பொண்ணு தன்னுடைய தப்பை புரிந்து கொள்ளவில்லை…
ஐ…..!!!ஹீரோ ஹீரோயின் அப்பாக்கள் நண்பர்கள்😀
சீக்கிரமா இருவரும் சந்திக்றப்போறாங்களா..?இல்லை முகிலன் அப்பாக்கு பொறுமையா இருக்க சொல்லப்போகிறானா..?
சூப்பர்❤️

Reply

Leave a Comment