பகுதி – 7.
அதே நேரம் மூர்த்திக்கு, ‘உன் பெண்ணை என் மகனுக்கு கொடுக்கிறாயா?’ என நுனி நாக்கு வரை வந்த கேள்வியை முயன்று உள்ளே தள்ளினார்.
“ரெண்டாவது பொண்ணுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சா?” அந்த செல்வத்தின் இரண்டாவது பெண் சின்ன வயதிலேயே அத்தனை நிறத்தில், கொள்ளை அழகோடு இருந்தது அவர் கண்ணுக்குள் நிழலாடியது.
“இதென்ன மூர்த்தி அப்படிக் கேட்டுட்ட? அவளுக்கு ஒரு வருஷமா மாப்பிள்ளை தேடி அலைஞ்சுட்டு இருக்கேன்” என்றவரிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.
“என்னப்பா சொல்ற? அவளுக்கு என்னப்பா குறை? கண்டிப்பா நல்ல இடமாகவே அமையும்” அவளைத் தெரியும் என்பதால் அத்தனை உறுதியாகச் சொன்னார்.
“என் சின்னப் பொண்ணை நீ இப்போ பார்த்தது இல்லையே…” என்றவாறு தன் அலைபேசியை இயக்கி, அதில் புன்னகைத்துக் கொண்டிருந்த சுமித்ராவின் புகைப்படத்தை அவரிடம் காட்டினார்.
அதை வாங்கிப் பார்த்த மூர்த்திக்கு அந்த சின்னப் பெண் வளர்ந்து இப்பொழுது பேரழகியாக மாறி இருப்பதைக் கண்டு கொண்டார்.
“ரொம்ப அழகா இருக்கா…” என்றவாறு சுந்தரமூர்த்தி அலைபேசியை அவரிடம் திருப்பிக் கொடுக்க,
“உன் மகன்கிட்டேயும் காட்டுப்பா” என்றார் செல்வம்.
அவர் சொன்னதைக் கேட்டவனோ, ‘இவர் ஒரு முடிவோடதான் இருக்கார் போல’ என உள்ளுக்குள் எண்ணியவாறு தகப்பனிடம் இருந்து அலைபேசியை வாங்கிக் கொண்டான். அதில் பார்வையைப் போட்டவன் சுகமாக அதிர்ந்தான்.
‘இவங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேனே…’ எண்ணியவன் அலைபேசியை மீண்டும் தன் தகப்பனிடம் கொடுத்துவிட்டான். உள்ளுக்குள் வேகமாக யோசனை சுழல, நொடியில் கண்டுகொண்டான்.
‘அட நம்ம மால்ல பார்த்த அழகி. அவங்க இவரோட பொண்ணா?’ உள்ளுக்குள் யோசனை ஓட, சட்டென அவனுக்கு அந்த வரிகள் ஞாபகத்துக்கு வந்தது.
‘கட்டுனா இவளைக் கட்டணும் டா, இல்லன்னா இவளைப் பெத்த அப்பனோட காலைத் தொட்டாவது வணங்கணும் டா’ வரிகளை தனக்குத் தக்கன ஒரு மாதிரி மாற்றிப் போட்டுக் கொண்டான். அதை நினைத்துப் பார்த்த உடனே வாய்விட்டு சிரிக்க வேண்டும்போல் ஒரு எண்ணம்.
அவனால் தன் சிரிப்பை அடக்க முடியாமல் போகவே, அங்கே இருந்த பீரோவில் இருந்து எதையோ எடுக்கும் சாக்கில் அந்தப் பக்கம் நகர்ந்து கொண்டான். ‘எப்படி இவ்வளவு அழகா அந்தப் பொண்ணை பெத்திருப்பார்?’ அந்த நினைப்பு மட்டும் அவனை விட்டு அகலவே இல்லை.
‘சாதாரணமா கொஞ்சம் அழகும், கலரும் இருக்கற பொண்ணுங்களே என்னை மதிக்காதுங்க. இதில் பேரழகி… கர்த்தரே… என்னை ரொம்ப சோதிக்கறியேப்பா…’ தனக்குள் ஒரு பெருமூச்சை தாராளமாக வெளியேற்றினான்.
மூர்த்தி செல்வத்திடம் அலைபேசியைக் கொடுக்க, மற்ற இருவரும் அறியாதவாறு கார்முகிலை அவர் தன் அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள முயன்றார். செல்வத்துக்கு கார்முகிலை அவன் பிறந்தது முதலே தெரியும்.
அவனிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இல்லை என்றாலும், அவனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தார். அவர்கள் தொழில் முறை பார்ட்டிகளில் கூட அவன் கலந்துகொள்ள மாட்டான். அது அவனது தாழ்வு மனப்பான்மையால் கிடையாது, அங்கே ஹாட் டாப்பிக் அவனாக மாறிப் போவான் என்பதாலேயே அதை தவிர்த்து விடுவான்.
அதைவிட என்னவோ காணாததைக் கண்டதுபோல், அனைவரின் பார்வையும் ஒரு மாதிரி வெறிக்க வெறிக்க அவன்மேல் படிவது அவனுக்கு ஒருவித அசவுரியங்களைக் கொடுக்கும் என்பதால் முழுதாக தவிர்ப்பான்.
எந்தவிதமான கெட்ட பழக்கங்களோ, சேர்க்கையோ கிடையாது என அவருக்குத் தெரியும். எனவே அவனைப்பற்றி தன் மகளிடம் பேசிப் பார்க்கலாம் என எண்ணினார். ஆனால் அவருக்குள் சிறு தயக்கம் இருந்தது என்னவோ உண்மை.
அவ்வளவு அழகான பெண்ணுக்கு, இவனை மாப்பிள்ளையாக பார்ப்பது அவருக்கு கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் குணம் தங்கம், அப்படி ஒரு தங்கமானவனைத்தான் மகளும் எதிர்பார்க்கிறாள் என்கையில் பேசிப் பார்க்கலாம் என நினைத்தார்.
மகளிடம் பேசி, அவளது கருத்தை தெரிந்து கொள்ளாமல், இவர்களிடம் பேசி, கார்முகிலின் மனதுக்குள் எந்த விதமான நினைப்பையும் அவர் வளர்த்துவிட விரும்பவில்லை. அப்படி தான் செய்வது அவனுக்குச் செய்யும் துரோகமாகப் பட்டது.
கார்முகிலை புகைப்படம் எடுக்க, மூர்த்தி தடையாக இருக்கவே, “விலைப்பட்டியல், கமர்ஷியலுக்கு என்று நீ தனியா வச்சு இருப்பியே, அது இருந்தால் தரியா? எனக்கு பார்க்கணும்” செல்வம் கேட்க, மூர்த்தி அதை எடுக்கப் போனார்.
அந்த இடைவெளியில் கார்முகிலை வேகமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மூர்த்தி அதை கவனிக்கவில்லை என்றாலும், கார்முகில் அதை கவனிக்கவே செய்தான்.
அவரது செய்கையைப் பார்த்தவன், ‘போச்சு, மத்த பொண்ணுங்களாவது என்னைப் பார்த்துட்டுதான் வேண்டாம்னு சொன்னாங்க. இந்த அழகி என்னை பார்த்துட்டு வாந்தியே எடுக்கப் போறா. என் மானமே போகப் போகுது.
‘இவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? அதைவிட என் மூஞ்சியை இவர் பொண்ணுகிட்டே காட்டற அளவுக்கு இவருக்கு முதல்ல தைரியம் வருமா? அப்படியே வந்தாலும் அவ கேட்கப்போற கேள்விகளுக்கு எல்லாம் இவர் என்ன பதில் சொல்வார்?’ தனக்குள் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.
மூர்த்தி அந்த விலைப் பட்டியலோடு திரும்பி வரவே, “அப்போ நான் கிளம்பறேன் மூர்த்தி. அந்த டீம் வந்தாங்கன்னா எனக்குச் சொல்லு” என்றவாறு கிளம்ப முயன்றார்.
“கண்டிப்பா சொல்றேன் செல்வம், இந்தக் காலத்தில் யார் மற்றவர்களுக்கு ஆர்டர் புடிச்சு கொடுக்கறாங்கன்னு சொல்லு? உன்னோட இந்த நல்ல மனசு வேற யாருக்கும் வராதுப்பா. அவங்க வர்றாங்களோ இல்லையோ, நீ எங்களைப்பற்றி அவங்ககிட்டே சொன்னதே எனக்குப் போதும்” மூர்த்தி சொல்ல, மறுப்பாக அவரைப் பார்த்தார்.
“நீயும் நானும் இன்றைக்கு நேற்றா பழகறோம்? என்கிட்டே ஒருத்தங்க கேட்டு, அதற்கு நான் இதைக் கூடச் செய்யலன்னா எப்படி?” எனக் கேட்டவாறு வெளியே நடந்தார்கள். அவர்கள் கடைக்குள் வர, உள்ளே பெயின்ட் வாசனையோடு கூடிய நெடியை அவரது நாசி உணர்ந்து கொண்டது.
“உன் மகனுக்கு பொண்ணு பார்க்கற தானே…” செல்வம் இப்படி திடுமெனக் கேட்கவே புருவம் நெரித்தார்.
“உனக்குத் தெரியாததா? எல்லா விதத்திலேயும் பார்த்துட்டோம். நமக்கு இணையா, கொஞ்சம் வசதி குறைந்த இடமா, அதுக்கும் மேலே நாமளே நகை போட்டு கட்டிக்கற மாதிரி கூட பார்த்தாச்சு. எதுவும் வேலைக்கு ஆகலை, இப்போ எனக்கும் சுதாவுக்கும் இருக்கும் ஒரே கவலை இவனோட கல்யாணம் மட்டும் தான்.
“சுதா ஒவ்வொரு நாளும் சொல்லி அழும்போது எனக்கு என்ன செய்யன்னே தெரியலைப்பா. நானும் என் மன வருத்தத்தை கொட்டினால் அவ தாங்க மாட்டாளேன்னு அவகிட்டே தைரியமா காட்டிக்க வேண்டி இருக்கு” தனக்கு சொல்லி, மன ஆறுதல் பட்டுக் கொள்ள ஒரு தோள் கிடைக்கவே அவரிடம் புலம்பினார்.
“எல்லாம் சரியாப் போய்டும் மூர்த்தி… நீ வருத்தப்படாதே” தானும் அதே நிலையில் இருப்பதால் செல்வத்தால் அவரது வலியை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
“அப்போ நான் வர்றேன்… நாம பேசுவோம்” என்றவாறு விடைபெற்றுச் சென்ற செல்வத்துக்கு காரில் செல்கையில் எல்லாம் பலத்த யோசனை தான்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், ‘பாலா’ என்பவன் அவர்கள் வீட்டில் வந்து அமர்ந்து செய்த செயலைத்தான் அவரது மனம் அசை போட்டது.
அவனுக்கு தன் மகளை பிடித்திருக்கிறது, அதனால் சுமித்ராவின் மறுப்பையும் மீறி தங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான் எனத் தெரிந்த பிறகும் அவரால் கோபப்பட முடியவில்லை. தன் மகளை நேசிப்பவன், அவளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம்தான் அவருக்கு.
அவருக்கு வேண்டியதும் அதுதானே… தன் மகளைப் புரிந்து, அவளை நேசித்து மனமொத்த வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால் மகள் கோபமாக மாடிப் படிகளில் இறங்க முயல, சற்று பதைத்துப் போய் அவளைத் தடுத்தார்.
“அம்மாடி சுமி, கொஞ்சம் நிதானமா… அவர் உன்மேலே வைத்த நேசத்தால் இப்படி செய்து இருக்கலாம். உனக்கும்…” சொல்லிக் கொண்டே வந்தவர் மகளது முகத்தில் இருந்து என்ன உணர்ந்தாரோ, சட்டென வார்த்தைகளை நிறுத்திவிட்டார்.
“என்னம்மா?” அவளிடம் கேட்டார்.
“என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசாதீங்கப்பா” அவள் சொல்ல, புருவம் நெரித்தார். தகப்பனிடம் அவன் சொன்னது, அவனிடம் மிகவும் தெளிவாக ‘விருப்பமில்லை’ என தெரிவித்தது என அனைத்தையும் அவள் சொல்லி நிறுத்த, அவரிடம் ஒருவித அமைதி நிலவியது.
அவரது அமைதியை வித்தியாசமாகப் பார்த்தவள், “என்னப்பா எதுவுமே சொல்லாமல் சைலன்ட் ஆகிட்டீங்க?” அவரிடம் கேட்டாள்.
“இல்லம்மா… ஒரு வேளை அந்த வயசுக்கு அவர் அப்படி பேசி இருக்கலாம். இப்போ அவர் மாறி இருக்கலாமே, உண்மையாகவே உன்னை நேசித்து, உன்னை மறக்க முடியாமல் உன்னையே சுற்றி வரலாமே” அவளிடம் சொன்னார்.
மகளது வயதுக்கு அவள் ஒரே கோணத்தில் யோசிக்கலாம், ஆனால் அவரது அனுபவத்துக்கும், வயதுக்கும் ஒரே நிலையில் அவர் யோசிப்பது சரி இல்லையே. எனவே மற்றொரு கோணத்திலும் அவர் யோசித்து சொன்னார்.
“என்னங்க, அவளுக்கு அவர்மேலே விருப்பம் இல்லை என்றால் நாம கட்டாயப்படுத்தறது சரி கிடையாதுங்க” அனிதா சொல்ல,
“நான் அதுக்குச் சொல்லலை அனிதா, ஒரு வேளை ஒரு நல்ல மனிதரை இவ இழந்துடக் கூடாதே என்ற அர்த்தத்தில்தான் சொல்றேன். அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் நாம அவளை கட்டாயப்படுத்தி எதையும் செய்யப் போறது இல்லை” செல்வம் சொல்ல, சற்று கோபமாக இருந்தவள் நிதானித்தாள்.
“சரிப்பா… நான் பேசிப் பார்க்கறேன், வாங்க…” என்றவளுக்கு அந்த பாலாவை முழுதாக நம்பவே முடியவில்லை.
அவள் கீழே இறங்கி வர, அவளை எதிர்கொண்டான் பாலா, அவனைப் பார்த்தவள், “நான் ஏற்கனவே என் முடிவை சொல்லிட்டேனே பாலா” என்றாள்.
தன்னைப் பெற்றவர்களை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், “நாம கொஞ்சம் தனியா போய் பேசலாமா?” அவளிடம் கேட்டான்.
“சரி வாங்க…” என்றவள் அவனை தோட்டத்துப் பக்கம் அழைத்துச் சென்றாள்.
“சரி சொல்லுங்க… நான் இத்தனை முறை என் மறுப்பைச் சொல்லியும் நீங்க என்னைச் சுற்றியே வரக் காரணம் என்ன? காதல்ன்னு சொல்லாதீங்க, ஏன்னா உங்க கண்ணில் அந்த காதல் இல்லை” அவள் அதிரடியாகச் சொல்ல, அவனோ திகைத்தான்.
தன்னை மீட்டுக் கொண்டவன், “கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே… நீ என் வாழ்க்கையில் இருக்கணும்னு நான் ரொம்ப ஆசைப் படறேன்” என்றான்.
“அதாவது உங்க இந்த ஹை ட்டெக் வாழ்க்கையில், நான் உங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா இருக்கணும். இந்த அழகி என் மனைவின்னு நீங்க எல்லார்கிட்டேயும் காட்டி பெருமைப் பட்டுக்கணும் அவ்வளவுதானே?” அவள் கேட்க, அவன் முகம் சற்று விகாரமாக மாறியது.
“நீ இப்படி உடைச்சுப் பேசுவதால், நானும் அப்படியே பேசறேன். மத்தவங்ககிட்டே இல்லாதது எப்பொழுதும் என்கிட்டே இருக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்படுவேன். என் வாழ்க்கையில் இது வரைக்கும் எல்லாமே அப்படித்தான் எனக்கு அமைஞ்சு இருக்கு.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம், உன் விருப்பப்படி நீ எப்படி வேணா இருக்கலாம், நான் எந்த விதமான கேள்வியும் கேட்க மாட்டேன். ஆனா நீ என்கூடத்தான் இருக்கணும், இருந்தாகணும்” ஒரு மாதிரி சைக்கோத் தனமாக பேசினான்.
அதைப் பார்த்தவள், “உனக்கு சரியா நடிக்கக் கூட வரலையே பாலா” என்றாள்.
அவளது பேச்சில் அவனது பொறுமையும், நடிப்பும் பறந்து போனது. “ஏய் என்னடி… நம்ம சர்க்கிள்ள எல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பலுக்காக மட்டும்தான் கல்யாணம் எல்லாம். அதுக்கு மேலே என்ன? ஜஸ்ட் ரெண்டு வாரிசு வேணும்… பிறகு வாழ்க்கையை எஞ்சாய் பண்றோம் அவ்வளவுதான்” அவன் பேசப் பேச அவனை என்னவோ வினோத ஜந்து போல் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.
அவன் குரல் உயர்த்தி கத்தியதில் வீட்டுக்குள் இருந்து அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள்.
“டேய்… வந்த இடத்தில்… என்ன பாலா இது?” அவனது தாய் குரல் கொடுக்க, அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
“உனக்கு அப்படியா இருக்கலாம் பாலா, ஆனால் எனக்கு அப்படி இல்லை. காதலோட இணைந்த ஒரு வாழ்க்கையைத்தான் நான் வாழ விரும்பறேன். மற்றபடி ஸ்டேட்டஸ் சிம்பலுக்காக எல்லாம் இல்லை” அவள் சொல்ல, அவளை ஆத்திரமாக உறுத்து விழித்தான்.
“நீ… நீ… என்னைத்தான் கல்யாணம் செய்தாகணும்… அப்பா… இவங்ககிட்டே சொல்லுங்க…” என்றவன் தன் முழுக்கை சட்டையை மடித்து விட்டவன், தலையை ஒரு மாதிரி அசைத்து, பின்னங்கழுத்தை பரபரவென தேய்த்துக் கொண்டான்.
“அப்பா, இவன் ஒரு ட்ரக் அடிக்ட்… அவன் கையைப் பாருங்க” தன் அருகே வந்த செல்வத்திடம் அவனது கரத்தை சுட்டிக் காட்டி அவள் சொன்னாள்.
“என்னம்மா சொல்ற?” அனிதா பதற, அவனோ வேக வேகமாக காருக்கு விரைந்து, டேஷ்போர்டுக்குள் எதையோ பரபரவென தேடினான். அதைப் பார்த்த அவனது பெற்றவர்கள் பதறிப் போனார்கள்.
“பாலா… பாலா… கண்ட்ரோல் யுவர்செல்ப்…” அவனது தகப்பன் சொல்ல,
“சார்… இப்போவே நீங்க இங்கே இருந்து கிளம்பியாகணும். இல்லைன்னா நான் போலீசுக்கு கால் பண்ண வேண்டி இருக்கும்” செல்வம் மகளை மனைவியோடு உள்ளே அனுப்ப முயன்றார்.
சுமித்ரா அங்கே இருந்து செல்லப் போகிறாள் என்பதை உணர்ந்தவன், “நீ எனக்குத்தான்… என்கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறன்னு பார்க்கறேன். உன்னைக் கட்டிக்கிட்டு, உன் அழகையும் திமிரையும் அடக்கிக் காட்டறேன்டி. என்னையவா பிடிக்கலைன்னு சொன்ன? உன்ன…” என்றவன் அவள்மேல் பாயப் போக, அவனது தகப்பன் அவனைத் தடுத்துப் பிடித்தார்.
அவனது மூர்க்கத்தனத்துக்கு முன்னால் யாராலும் ஈடுகொடுக்கவே முடியவில்லை. அவன் பயன்படுத்தும் போதைப் பொருள் அவனை கண் மண் தெரியாத நிலைக்கு ஆளாக்கி இருந்தது.
“அம்மாடி நீ உள்ளே போ… செக்யூரிட்டி… யாராவது வாங்களேன்” செல்வம் போட்ட சத்தத்தில், அக்கம் பக்கம் வீடுகளில் இருந்த செக்யூரிட்டிக்கள் விரைந்து வந்தார்கள். அவர்களில் இரண்டு மூன்றுபேர் சேர்ந்துதான் அந்த பாலாவை காருக்குள் அடைக்க முடிந்தது.
அவனை பின்னிருக்கையில் தள்ளி கதவைப் பூட்டிய அந்த நொடி, அவனது அப்பா காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். நிஜத்தில் செல்வம் நிறைய பயந்து போனார். எந்த புற்றுக்குள் எந்த பாம்போ என வெலவெலத்துப் போனார்.
தன் மகள் வரும் வரைக்கும் அத்தனை பவ்வியமாக, நல்லவன் போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனா இவன்?’ என அசந்து போனார்.
‘அத்தனை நேரமாக தன் மூர்க்கத்தனத்தை, முரட்டுத்தனத்தை, தன் உண்மை நிறத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்திருக்கிறானே?’ என திகைத்தார். அவர் அதில் இருந்து மீண்டு வரவே ஒரு வாரத்துக்கும் மேல் ஆனது.
எங்கே அந்த பாலாவால் தன் மகளுக்கு ஏதும் ஆபத்து வருமோ என்று கூட அஞ்சினார். ஆனால் என்னவோ அவர் பயந்த அளவுக்கு எதுவும் நடக்கவில்லை.
அதற்குப் பிறகு மகளுக்குப் பார்க்கும் வரன்களை எல்லாம் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு பார்ப்பது எனச் சொல்வோமே, அப்படி பார்க்கத் துவங்கினார். வெளிப் பார்வைக்கு அவனும் அவனது குடும்பமும் எப்படி இருந்தாலும், உள்ளுக்குள் அவன் எப்படி இருக்கிறான் என ஆராய்ந்தார்.
அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவருக்கே பிடிக்கவில்லை. வீட்டுக்குள் நல்ல பிள்ளை வேஷம் போடும் பலர், வெளியே அப்படி இருக்கவில்லை. நண்பர்கள், பார்ட்டி, ஆல்க்கஹால், போதைப் பொருள் என ஏதோ ஒரு வீக்னஸ் அவர்களுக்கு இருந்தது.
சிலர் எல்லாம் பொறுப்பில்லாமல் ஊதாரிகளாக மட்டுமே இருந்தார்கள். அப்பா சம்பாதித்த பணத்தில் குளிர் காய்வது, பெயருக்கென ஏதோ ஒரு வேலையைப் பார்ப்பது என இருந்தார்கள்.
அதையெல்லாம் பார்த்த பிறகு மனதளவில் கொஞ்சம் பயந்து போனார். மகளை ஒரு நல்லவன், பொறுப்பானவன் கரத்தில் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது. எனவேதான் இப்பொழுது கார்முகிலைப் பார்த்த பிறகு அவனது வெளித் தோற்றம் அத்தனை பெரிய பாதிப்பை அவருக்கு கொடுக்கவில்லை.
செல்வம் மூர்த்தியைப் பார்த்துவிட்டு நேராக வீட்டுக்கே சென்றார். அவருக்கு தன் மனைவியிடம் பேச வேண்டி இருந்தது.
கணவரைப் பார்த்த அனிதா, “என்னங்க… இப்போதான் கிளம்பிப் போனீங்க, உடனே வீட்டுக்கு வந்துட்டீங்க?” கணவனிடம் கேட்டார்.
“உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசணும் அனிதா, அதான் மூர்த்தியைப் பார்த்து பேசிட்டு, அப்படியே உன்கிட்டே பேச வந்துட்டேன்” கணவர் சொல்ல, அவரை அழைத்து அமர வைத்து தண்ணீர் கொடுத்தார்.
“அப்படி என்னங்க முக்கியமான விஷயம்?” கணவரிடம் கேட்டார்.
“அது… உனக்கு மூர்த்தியோட மகன், கார்முகிலைத் தெரியும்தானே?” இப்படிக் கேட்ட கணவனை குழப்பம் சுமந்த விழிகளோடு பார்த்தார்.
“என்னங்க இப்படிக் கேட்கறீங்க? முகிலைத் தெரியாமல் போகுமா? நல்லாவே தெரியும், அவ்வளவு ஏன் சுதாகிட்டே கூட பேசினேனே, அவனுக்கும் பொண்ணு பார்க்கறதா சொன்னாங்க. ஆனால் எதுவும் செட் ஆகலைன்னும்…” சொல்லிக் கொண்டே வந்த அனிதா தன் பேச்சை நிறுத்தி கணவனின் முகம் பார்த்தார்.
“முகில் ரொம்ப நல்ல பிள்ளைங்க… ஆனா…” அவனது நிறத்தைப் பற்றி எப்படி குறையாகச் சொல்வது எனத் தெரியாமல் நிறுத்தி விட்டார்.
“நான் நினைக்கறதையே தான் நீயும் நினைச்சிருக்க” மூர்த்தி படபடப்பாகச் சொன்னார்.
“இதை எப்படிங்க நம்ம பொண்ணுகிட்டே சொல்ல முடியும்? அப்படிச் சொல்லி, அவ நம்மளை எதுவும் தப்பா நினைச்சுட்டா? எனக்கென்னவோ இது சரியாப் படலைங்க. அதனால்தான் அவங்களும் நம்மகிட்டே பொண்ணு கேட்கவே இல்லை” அனிதா சொல்ல, மூர்த்திக்கு பலத்த யோசனை, குழப்பம்.
“அப்படிங்கறியா அனிதா?” கொஞ்சம் ஏமாற்றமாகவே கேட்டார். “அவன் ரொம்ப நல்ல பிள்ளை அனிதா. நான் இப்போ பார்த்த அவன் வயசு பசங்களிலேயே சொக்கத் தங்கம்னு சொல்வேன்” அவர் சொல்ல, அனிதாவுக்குள் ஊசலாட்டம்.
“நீங்க சொல்றது புரியுது… ஆனாலும்… நீங்க பெத்த பொண்ணா இருந்திருந்தால் இப்படி மாப்பிள்ளை பார்ப்பீங்களான்னு அவ கேட்டா என்ன பதில் சொல்றது?” மனைவி இப்படிக் கேட்கவே, மூர்த்தி தன் நினைப்பை கைவிட்டார்.