பகுதி – 9.
கார்முகில் கண்மண் தெரியாத கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். அவனால் தன் பெற்றவர்கள் சொன்னதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சாதாரண அழகுள்ள பெண்களே அவனை வேண்டாம் எனச் சொல்லி இருக்க, இது?
“அம்மா… நீங்க அறிவோடதான் பேசறீங்களா?” தாயிடம் கத்தினான்.
“என்னடா? என் பொண்டாட்டி அப்படி என்ன அறிவில்லாம பேசிட்டா?” மூர்த்தி வேகமாக இடையிட்டார்.
“ப்பா… நீங்களுமா? அந்த ஆள் அன்னைக்கு கடைக்கு வந்துட்டு என்னை குறு குறுன்னு பார்க்கும் போதே நினைச்சேன். இப்படி எதையாவது உளறி வைப்பார்ன்னு. அது மட்டும் இல்ல, இதில் என் ஃபோட்டோ ம*ரரு வேற…” இதை அவன் தன் வாய்க்குள் சொல்லிக் கொண்டான்.
“என்னடா அங்கே முனகிட்டு இருக்க? சொல்றதை சத்தமா சொல்லு” சுதா கேட்க, தாயை ஆன மட்டும் முறைத்தான்.
“அம்மா, உங்களுக்கே இது நியாயமா இருக்கா? கொஞ்சம் அந்த பொண்ணு மூஞ்சியையும், அப்படியே என் முகத்தையும் பாருங்க. பிறகு சொல்லுங்க…” அவன் கேட்க, சுதாவுக்குள் அத்தனை தடுமாற்றம்.
அதை மறைத்துக் கொண்டவர், “என் பிள்ளைக்கு என்னடா குறைச்சல்? நீ ராஜாடா…” அவன் கன்னம் வழிக்க, வேகமாக அவர் கையை தட்டி விட்டான்.
“அம்மா… நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” அவன் முடிவாகச் சொன்னான்.
“அந்த பொண்ணே ஒத்துகிச்சு, உனக்கு என்னடா வந்தது?” இப்படி புரியாமல் நடந்துகொள்கிறானே என எண்ணினார்.
“இதை என்னை நம்பச் சொல்றீங்களா?” பெரும் கோபமாகவே கேட்டான்.
“நீ நம்பலைன்னா இரு, நான் அனிதாவுக்கு ஃபோன் பண்றேன்” தாய் அலைபேசியை எடுக்கவே,
“இது யாரு புது கேரக்டர்?” புரியாமல் கேட்டான்.
“அனிதா சுமியோட அம்மாடா…” ரகாத் சொல்ல,
“ஓ… அவங்கதான் அவ மண்டையை கழுவினதா? ஃபோனைப் போடுங்க, நானே நாக்கைப் பிடுங்கற மாதிரி நல்லா கேட்கறேன்” அவன் வேகமாக, சுதா தன் முயற்சியை கைவிட்டார். இவன் வேறு கோபத்தில் ஏதாவது வார்த்தயை விட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அவருக்கு.
அதைப் பார்த்தவன், “என்ன பேசல?” தாயிடம் கேட்க, அவரோ அவனை முறைத்தார்.
“நீ இப்போ இருக்கற நிலைக்கு எதையாவது பேசி வச்சன்னா அது நல்லா இருக்காது” தாய் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவன் தன் அலைபேசியை எடுத்து செல்வத்துக்கு அழைத்தான்.
அந்த நேரம் செல்வத்துக்கு அருகில்தான் சுமித்ராவும் அமர்ந்து இருந்தாள். அவனது அழைப்பு விடியற்காலையிலேயே வர, “சுமி, இங்கே பார்… முகில் கால் பண்றான். அவன்கிட்டே விஷயத்தை சொல்லிட்டாங்க போல” அவர் சொல்ல,
“அப்பா… ஸ்பீக்கர்ல போடுங்கப்பா” அவள் சொல்ல அவ்வாறே செய்தார்.
“முகில், குட் மார்னிங்ப்பா…” செல்வம் சொல்ல, ஒரு வேகத்தில் எதையோ சொல்லப் போனவன் சட்டென தெளிந்தான்.
“ஹாங்… மார்னிங் அங்கிள்… நான்…” அவனுக்கு சொல்ல வந்தது சட்டென மறந்துபோக, ஆழமாக மூச்சு விட்டான். அவன் அப்படி தன்னை நிதானப்படுத்த முயல்வது இங்கே இருந்த அனைவருக்குமே தெரிய, சுமித்ராவின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
அங்கே அனிதா, சுபிதா என அனைவருமே கூடிவிட, அவன் பேச்சை அனைவருமே கேட்கத் தயாரானார்கள்.
“அங்கிள்… இந்த கல்யாணம், உங்க முடிவு… அது சரியே கிடையாது அங்கிள். நானே உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கறேன். அவங்க அழகுக்கும் திறமைக்கும் ஏற்ற மாதிரி மாப்பிள்ளை பார்க்கறதுதான் நியாயம்” அவன் சொல்லிக் கொண்டே போக,
“உனக்கென்னப்பா குறை? ஏன்… நீயே உன்னை குறைச்சு சொல்லிக்கற? என்னவோ இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ன்னு சொல்வாங்களே… அப்படி ஃபீல் பண்றியா என்ன?” அவர் இப்படிக் கேட்கவே, ஒரு நொடி அவனிடம் ஆழ்ந்த அமைதி.
“அங்கிள் நீங்க சொல்ற மாதிரி இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்சும் இல்லை சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்சும் இல்லை. இது… இது எப்படி ஒத்து வரும்னு நினைக்கறீங்க? காலம் முழுக்க அவங்க என்னை… ம்ச் வேண்டாம் அங்கிள் ப்ளீஸ்… சாரி…” என்றவன் அலைபேசியை பட்டென வைத்துவிட்டான்.
அவன் இப்படிச் செய்யவே, “என்னம்மா இவன் இப்படிச் சொல்றான்? ரொம்ப வேகமா இருக்கானே…” மகளிடம் கேட்டார்.
“நீங்க ப்ரொசீட் பண்ணுங்கப்பா… என்ன பண்றார்ன்னு பார்ப்போம்” அவள் சொல்ல, செல்வத்துக்கு சிறு தடுமாற்றம்.
அவர் அமைதியாக இருக்கவே அதைப் பார்த்தவள், “என்ன ஆச்சுப்பா? ஏன் திடீர்ன்னு அமைதி ஆகிட்டீங்க?” அவரிடம் கேட்டாள்.
“இல்லம்மா… அவனுக்கு உன்னைப் பிடிச்சு கல்யாணம் பண்ணா பரவாயில்லை. இது…” அவர் சொல்ல,
“அதை நான் பார்த்துக்கறேன்ப்பா… அவருக்கு கண்டிப்பா என்னைப் பிடிச்சிருக்கு. அவர் இப்போ யோசிக்கிறது கூட எனக்காகத்தான். நீங்க அதை கவனிச்சீங்க தானே?” அவள் சொல்ல, செல்வத்துக்குப் புரிந்தது.
“சரிம்மா… நான் மூர்த்திகிட்டே பிறகு பேசறேன்” என்றவாறு அவர் செல்ல, அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.
கார்முகில் அலைபேசியை வைத்த மறு நிமிடம், அனிதா அழவே துவங்கி விட்டார். அதைப் பார்த்தவன் பதறிப் போனான்.
“அம்மா, அழறீங்களா? என்னம்மா இது?” என்றவன் தாயின் அருகே அமர்ந்தான்.
“நீதானே என்கிட்டே சொன்ன, நான் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும், அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு, இப்போ இப்படி மாத்தி பேசற. அதுவும் இவ்வளவு அழகான பொண்ணு உன்னைப் பிடிச்சிருக்குன்னு என்கிட்டேயே சொன்னாடா…” தாய் சொல்ல,
“அதை என் முகத்துக்கு நேரா சொல்லட்டும், அப்போ பார்த்துக்கலாம்” அவன் வேகமாகச் சொல்ல, அவனை முறைத்தார்.
“அப்போ பொண்ணு பார்க்கப் போகலாமா?” சுதா ஆர்வமாக அவனோ தாயை விட்டு எழுந்து நின்றுவிட்டான்.
“இதுவரை நான் தனியா போய் பட்ட அவமானம் எல்லாம் போதாதா? இதில் குடும்பத்தோட போய் அவமானப்படணுமா?” அவன் ஆற்றாமையாக கேட்டான்.
“அந்த பொண்ணுங்க மாதிரி சுமி கிடையாதுப்பா. செல்வத்தோட பொண்ணுங்களை எனக்கு நல்லா தெரியும். அதுவும் இந்த பொண்ணு அவன் பெத்த பொண்ணு கிடையாது, அனிதாவோட இரட்டை சகோதரியோட பொண்ணு. அவளோட பெத்தவங்க போன பிறகு, இவங்கதான் வளர்க்கறாங்க” மூர்த்தி சொல்ல,
“ஓ… அதுக்காக வளர்த்த கடனை இப்படி தீர்க்கச் சொல்வாங்களா? இல்லன்னா அந்த பொண்ணு மேலே அவருக்கு என்ன அப்படி ஒரு கோபம்?” அவனுக்கு கோபம் கரையைக் கடக்க முயல அதற்கு அணை கட்ட முயன்றான்.
“செல்வத்துக்கு அந்த பொண்ணுன்னா உயிர்ப்பா. தான் பெத்த பெண்ணை விட, ஒரு படி மேலேதான் இந்த பொண்ணு மேலே அவன் பாசம் வச்சிருக்கான். ஒரு நல்லவன் கையில் அவளைப் பிடிச்சு கொடுக்கணும், அவளோட மதிப்பு தெரிஞ்சு அவளை வச்சுக்கணும்னு அவனுக்கு ஆசை” தகப்பன் சொல்ல, தலையை மறுப்பாக அசைத்தான்.
“அதுக்கு… நான் என்ன அவங்களை தலையில் தூக்கி வச்சு ஆடுவேனாமா? என்னப்பா பேசறீங்க?” சலிப்பாக கேட்டான்.
“நீ அவளை நல்லபடியா பார்த்துப்பன்னு அவன் நம்பறான் முகி. அந்த நம்பிக்கைதான் வெளி அழகை எல்லாம் அவங்களை பார்க்க வைக்கலை” அவர் சொல்ல, கார்முகில் சமாதானம் ஆகவே இல்லை.
“இல்லப்பா… முடியாதுன்னு சொல்லிடுங்க…” என்றவன் சென்றுவிட, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஆனால் தன் மகனுக்கு ஒரு பெண் சம்மதம் என சொல்லி விட்டாலே சுதா சும்மா இருக்க மாட்டார். சுமித்ரா தன் மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதம், அவனைப் பிடித்திருக்கிறது எனச் சொன்ன பிறகு சும்மா இருப்பாரா என்ன?
மகனிடம் விடாமல் பேசினார் அவன் எதற்கும் ஒத்துவரவே இல்லை. அவனது தங்கை குழலியிடம் சொல்லி புலம்பித் தள்ளிவிட்டார்.
விஷயத்தை கேள்விப்பட்ட குழலி உடனே வீட்டுக்கு கிளம்பி வந்துவிட்டாள். அவளும் அவள் பங்குக்கு பேச, “அம்மாதான் என்மேலே இருக்கற பாசத்தில் கண்மூடித்தனமா பேசறாங்கன்னா, நீயும் என்ன குழலி இப்படி இருக்க.
“இப்போ உன்னையே எடுத்துக்கோ, உனக்கு நாங்க இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தா நீ சம்மதம் சொல்லி இருப்பியா? உண்மையா, நேர்மையா பதில் சொல்லு… சும்மா பேசணும்னு பேசாதே” தங்கையிடம் கிடுக்கிப் பிடி போட்டான்.
“அது… அவங்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்களே ண்ணா. நீ ஏன் அதை யோசிக்க மாட்டேங்கற?” அண்ணனிடம் கேட்டாள்.
“அவங்க உன்கிட்டே சொன்னாங்களா?” அவன் கேட்க,
“ஆமா, நானும் அம்மாவும் அவங்ககிட்டே பேசினோம். அவங்க முழு மனசோட தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க” அவள் சொல்ல, அவனுக்கு இவர்களிடம் பேசிப் பேசி தலையை வலித்ததுதான் மிச்சம்.
அவன் போராடி சோர்ந்து போக… இறுதியாக, “நான் இப்படி கவலைப் பட்டே சீக்கிரம் போய் சேரப் போறேன் பார். இவளை நீ கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லலைன்னா, இனிமேல் நான் உனக்கு எந்த பொண்ணையும் பார்க்கவே மாட்டேன். உன்கூட பேசவும் மாட்டேன், இது சத்தியம்…” தாய் சொல்ல, அப்படியே நின்றுவிட்டான்.
“ம்மா… என்னம்மா இது?” அவன் அதிர்வாகக் கேட்க,
“ஆமா முகி… இந்த பொண்ணை கட்டிக்க சம்மதம்னு சொல்லிட்டு பிறகு என்கிட்டே பேசு. இல்லையா அது வரைக்கும் பேசாதே” என்ற சுதா எழுந்து சென்றுவிட்டார்.
“குழலி… அம்மா என்ன இப்படி சொல்லிட்டு போய்ட்டாங்க?” ஆற்றாமையாக கேட்டான்.
“அவங்களுக்கு அண்ணியை அவ்வளவு பிடிச்சு இருக்குண்ணா. அவங்களுக்கு மட்டும் இல்லை, எங்க எல்லாருக்குமே அவங்களைப் பிடிச்சு இருக்கு. கல்யாணத்துக்கு ஒத்துக்கோண்ணா” அவளும் சொல்ல, தாய் இப்படி சொன்ன பிறகு அவன் எப்படி மறுக்க?
அவனால் அங்கே இருந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் போகவே, தன் நண்பன்… அங்கே மளிகைக் கடை நடத்தும் அதியனைத் தேடித் போனான்.
அதென்னவோ ஒருவரைப் பார்த்த உடனே காதல் தோன்றுவதைப் போல, அதியன் இங்கே கடை துவங்குகையில் கார்முகில் கல்லூரி மாணவன். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்த உடனே நட்பு துளிர் விட்டு இருந்தது.
வீட்டை விட்டு வெளியேறி, அதியனின் கடை நோக்கி நடந்தான். அந்த இருள் பிரியாத அந்த நேரத்தில், குளிரையும் பொருட்படுத்தாமல் சென்றான். அவன் சென்ற நேரம் அதியன் இன்னும் கடைக்கு வந்திருக்கவில்லை. எனவே அவனுக்காக காத்திருக்கத் துவங்கினான்.
அவன் சென்று பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அதியன் அங்கே வந்தான். அவனைப் பார்த்தவுடன்…
“என்ன அதியா… இன்னைக்கு கொஞ்சம் லேட் போல? நான் உனக்காக அப்போ இருந்து காத்துட்டு இருக்கேன்” கார்முகில் சொல்ல, அவன் குரலில் சட்டென திரும்பி அவனைப் பார்த்தான்.
“முகில்… வாடா… என்னை இவ்வளவு காலையிலேயே தேடி வந்து இருக்க? என்ன விஷயம்?” என்றவன் வேலையில் கவனமாக, கார்முகிலும் அவனுக்கு உதவத் துவங்கினான்.
முன்னர் எல்லாம் கடைக்கு வெளியே இருந்துதான் பொருட்களை வாங்கிச் செல்வதுபோல் வைத்து இருந்தான். வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருளை, இவன்தான் எடுத்து, கட்டிக் கொடுப்பான். ஆனால் இப்பொழுதோ கீழே இருந்த மூன்று கடைகளை ஒன்றாக்கி, நடுவில் இருந்த சுவர்களை எல்லாம் எடுத்துவிட்டு ஒரே கடையாக்கி இருந்தான்.
அதில் ‘S’ வடிவில் பாதை இருக்க, வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து அவர்களே தேவையானவற்றை எடுத்துக் கொண்டு பில் போட்டுக் கொள்ளலாம். இதற்கு ஐடியா கொடுத்தது எல்லாம் நம் கார்முகில் தான்.
அவனிடம் பதில் இல்லாமல் போகவே அதியன் நின்று அவனைப் பார்த்தான். கார்முகிலோ தன் அலைபேசியில் பார்வையை பதித்திருக்க, “என்னடா? மறுபடியும் பொண்ணா? எப்போ பார்க்கப் போறீங்க?” வேறு எதற்கும் நண்பன் இப்படி நிற்க மாட்டான் என்பதால் கேட்டான்.
“பொண்ணுதான்… ஆனா… நீ கொஞ்சம் பாரேன்…” அவன் சொல்ல, நின்று அவனை முறைத்தான்.
“என்ன விளையாடுறியா? உனக்கு பார்த்திருக்கற பொண்ணை நீ முதல்ல பார்த்துட்டு, முடிவு பண்ணிட்டு வா. அதற்குப் பிறகு நான் பார்க்கறேன். உனக்கென்ன குறைன்னு பொண்ணுங்க உன்னை வேண்டாம்னு சொல்லுதுக? கொஞ்சம் கலர் கம்மி அவ்வளவுதானே?” அவன் சொல்ல, நண்பனை முறைத்தான்.
“கொஞ்சம்…?” அவன் ஒரு மாதிரி இழுத்து சொல்ல,
“சரி… அதுக்குதான் இந்த டாக்டருங்க எல்லாம் என்னென்னவோ பேர் சொல்றாங்கன்னு சொன்னியே, அதை சொல்லிப் பார்க்கறது தான?” அவன் கேட்க, கார்முகிலின் நிலையில் கொஞ்சம் கூட மாற்றம் இருக்கவில்லை.
அவன் பார்வையைக் கண்டவன், “என்ன?” என்றவாறு தான் விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
“ஆமா… பார்க்கற பொண்ணுங்ககிட்டே எல்லாம் விளக்கிட்டு இருப்பாங்க. என்னை வெறியேத்தாமல் இந்த ஃபோட்டோவில் இருக்கற பொண்ணைப் பார்த்துட்டு நான் என்ன செய்யட்டும்னு சொல்லு. ஒரு மாசமா வீட்டில் தினமும் போராட்டம் தான்.
“இவளைப் பார்க்கப் போகவா? வேண்டாமான்னு சொல்லு. வீட்ல ரொம்ப கம்பல் பண்றாங்க, எனக்கு போகக் கூட பிடிக்கலை” இப்படிச் சொன்னவனை வேகமாக திரும்பிப் பார்த்தவன், அதே வேகத்தில் அவன் அருகே வந்தான்.
“சரி காட்டு… எப்படியும் நீ விடப் போறதில்லை… பார்த்துட்டு சொல்றேன்” என்றான்.
“இங்கே பாரு…” என அவன் காட்டிய புகைப்படத்தில், கார்முகிலுக்கு எதிரான நிறத்தில், பளீர் வெண்மையில் முத்துப் பற்கள் தெரிய, அழகாக புன்னகைத்து இருந்தாள் சுமித்ரா என்னும் பேரழகி. நிஜத்தில் அப்படித்தான் சொல்ல வேண்டும்.
மாநிறம் கொண்ட பெண்களே கார்முகிலை ‘வேண்டாம்’ என மறுத்திருக்க, ‘இவ எப்படி இவனைப் பார்க்க வர ஒத்துகிட்டா?’ என்பதுதான் அதியனுக்கு எழுந்த முதல் கேள்வியே. அதியனையும், கார்முகிலையும் ஒப்பிட்டால், நிறத்தில் அதியன் இன்னுமே அதிக மதிப்பெண் வாங்குவான்.
ஆனால் கார்முகிலிடம் இரண்டு பட்டங்கள் வாங்கிய நிமிர்வு, உடை தேர்வில் நேர்த்தி, பணக்கார களை என ஒன்றைச் சொல்வார்களே அது எல்லாம் அதிகம் இருந்தது. ஆனால் நிச்சயம் லட்சணமானவன்.
“இவ எப்படிடா?” என்றவன், “இவங்க எப்படிடா உன்னைப் பார்க்க ஒத்துகிட்டாங்க?” அதியன் நண்பனிடம் வேகமாகக் கேட்டான்.
“உனக்கு தோணுது தானே, எனக்கும் இதேதான் தோணுது… எனக்கென்னவோ என்னைக் கூப்ட்டு வச்சு அசிங்கப் படுத்தப் போறன்னு தோணுது டா. இந்த அம்மாவும் தங்கச்சியும் சேர்ந்துட்டு, இந்தப் பொண்ணை நேர்ல போய் பார்த்தே ஆகணும்னு சொல்றாங்கடா” அவன் சொல்ல, அதியன் இதழ் மூடி தன் சிரிப்பை அடக்கினான்.
“சிரிச்சுத் தொலையாதடா… கடுப்பு ம*ராவுது…” கார்முகில் அவனிடம் கத்தினான்.
“முகி… ரிஸ்க் வேண்டாம்… நான் இப்போவே சொல்லிட்டேன். உன்னை கூட்டு போய் சோலியை முடிச்சு விடப் பார்க்கறாங்கடா. எதுக்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கோ” என்றவன்,
“ஆனாலும் பொண்ணு ரொம்ப அழகா, லட்சணமா இருக்காங்க டா” அவன் சொல்ல, கார்முகில் சலிப்பாக தலையை அசைத்துக் கொண்டான்.
“சாதா பொண்ணே நம்மளை காறித் துப்பும், இதில் இவளை… ஹையோ, என் வீட்ல இருக்கறதுங்களுக்கு மறகிற கழண்டுடுச்சோ என்னவோ? இதில் எங்க அம்மா வேற இவளை கட்டிக்கலைன்னா என்கிட்டே பேசாதன்னு, புதுசா மௌன விரதம் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க” வாய்விட்டே புலம்பிக் கொண்டான்.
“உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே அமையும் டா” அவன் சொல்ல,
“என்ன சொன்ன? நல்ல… நல்ல… கொம்மால வாயில நல்லா வருது, சொல்ல வேண்டாம்னு பார்க்கறேன்” என்றவன் நண்பனை குனிய வைத்து முதுகிலேயே குத்தினான்.
“ஸ்… ஆ… டேய்… அவங்க மேலே இருக்கற கோபத்தை ஏன்டா என்மேலே காட்டற? ஆ… வலிக்குதுடா நாயே…” கிட்டத்தட்ட அலறினான். அதே நேரம் அங்கே வந்தாள் ஆராதனா. அவளைப் பார்த்தவுடன் கார்முகில் விலகிக் கொள்ள, அதியனுக்கோ உள்ளுக்குள் மெல்லிய தடுமாற்றம்.
அவள் முகத்தில் கவிழ்ந்திருந்த சோகம் அவனை வெகுவாகத் தாக்கியது மட்டும் உண்மை. அவள் கேட்டதை அவன் கொடுக்க, கார்முகில் அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“அக்கா, உங்களுக்கு பால் போடறவர் வரலையா?” ஆராதனாவிடம் கேட்டான். அவள் இந்த ஏரியாவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகி இருக்கவே, அவளிடமும் அவனுக்கு பழக்கம் தான் எனவே கேட்டான்.
“நான் உனக்கு அக்காவா? உன்னை விட ரெண்டு வயசு சின்னவ நான்” ஆராதனா அவன் முகம் பார்த்து பேசினாள். அவள் நேரடியாக முகம் பார்த்து பேசும் ஆண்களில் கார்முகிலும் ஒருவன். இதில் அதியன் முழுதாக மாறுபட்டவன், அவள் முகத்தையே பார்க்க மாட்டான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஒரு குட்டி போட்டா நீங்க எல்லாம் ஆன்ட்டி தான். ஆனா பாருங்க… ஆன்ட்டின்னு கூப்ட்டா அடிப்பீங்களே, அதான் அக்கா. அக்கா…” அவன் ஒரு மாதிரி இழுத்து அழைக்க, அவளோ முறைத்தாள்.
(அதியன், ஆராதனா கதையைப் படிக்க “பயணங்கள் இனிதாக” கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்).
ஆராதனா தனக்கு வேண்டியதை வாங்கிவிட்டு கிளம்ப, “அவங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்டா…” அவன் சொல்ல, சற்று நேரம் ஆராதனாவைப் பற்றி பேசிவிட்டு,
“சரிடா முடிந்தால் கேட்கறேன், இல்லையா நீயே கேளு. எனக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை இதில் நான் கேட்பது ஒன்றுதான் குறைச்சல். நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றவன் வீட்டுக்குச் செல்ல முயன்றான்.
அவன் கிளம்ப முயலவே, “எனக்கென்னவோ அந்த பொண்ணுகிட்டே நீ தனியா பேசிப் பார்த்தால் நல்லா இருக்கும்னு தோணுதுடா” அதியன் சொல்ல, நிஜத்தில் தனக்கும் வேறு வழியே இருக்கவில்லை என கார்முகிலுக்குப் புரிந்துதான் இருந்தது.