Home Antiheroஎன் சரி – 06

எபிசோட் – 6

அந்த துக்க வீடு இன்னும் முழுவதுமாக விழிக்கவில்லை. முதல்நாளின் சோகம் இன்னமுமே அந்த வீட்டை சூழ்ந்திருந்தது. வெளிப்பக்கம் வேலை செய்யும் ஆட்களின் சத்தம் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டு இருந்தது.

விடியற்காலையின் மங்கலான ஒளி ஜன்னல் வழியாக உள்ளே வந்து தரையில் நீளமாகப் பரவி கிடந்தது. அந்த ஒளியில் கூட ஒரு வெறுமை இருந்தது. நேற்று வரை அந்த வீட்டில் உயிர் போல அசைந்தாடிக் கொண்டிருந்த சுமதி இப்போது இல்லை என்ற உண்மை, அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெரிந்தது

ஏனோ அந்த அமைதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆதினியால்..

‘அத்தை உயிரோடு இருந்து, இந்த வீட்டு மருமகளாக வந்திருந்தால், இந்த காலை இத்தனை வெறுமையாக இருக்காதோ?’ என்று ஒரு மனம் யோசிக்க, மற்றொரு மனமோ அப்படி இருந்திருக்க முதலில் தன்னை, தன் அத்தை பெண் கேட்டிருப்பார்களா? என்பதே சந்தேகம் தான் என மற்றொரு மனம் யோசிக்க, ‘ஊப்ஸ்’ தலையை உலுக்கி அந்த எண்ணத்தில் இருந்து வெளியில் வந்தாள் ஆதினி.

‘இப்படியே நடந்து முடிஞ்சதைப் பத்தி யோசிச்சா, சீக்கிரம் பைத்தியம்தான் பிடிக்கும். என்ன நடந்தாலும் இனி எதுவும் மாறப்போறதில்ல.. நம்ம வேலையைப் பார்க்கலாம்..’ என யோசித்தபடியே அந்த அறையைப் பார்த்தாள்.

வேந்தனின் அறைதான். ஆனால் இரவு அவன் இங்கு வரவில்லை என்று புரிந்தது. அதை பெரிதாக யோசிக்கமல், முதல்நாள் கலா கொண்டு வந்து வைத்த பெட்டியிலிருந்து, தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தவளுக்கு வீட்டின் அமைதி முகத்தில் வந்து மோதியது.

அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் சோர்வில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. 

முதல் நாள் முழுக்க நடந்த சடங்குகள், அழுகை, சொந்தங்களின் வருகை… எல்லாமே அவர்களை தளரச் செய்திருக்கும் என்றும் புரிந்தது.. 

“இப்போ என்ன செய்யணும்…?” என்ற கேள்வி அவளுக்கு எழ, எதிரே புகைப்படத்தில் மாலையுடன் சிரித்தபடி இருந்தார் சுமதி.

என்ன நினைத்தாளோ அந்த புகைப்படத்தின் முன்னே இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வணங்கினாள்.

அந்த புகைப்படத்தில் சிரித்தபடியே இருந்த சுமதியைப் பார்த்து “உங்க கூட இருக்க எனக்கு கொடுத்து வைக்கல, எதை நினைச்சு என்னை இந்த வீட்டுக்கு கொண்டு வந்தீங்கன்னு தெரியல.. ஆனா என்னால இங்க சமாளிக்க முடியுற வரை சமாளிப்பேன். என்னை மீறி போயிடுச்சுன்னா, உங்களை மாதிரி பொறுமையா நான் இங்க இருக்கமாட்டேன்..” என முணுமுணுத்துவிட்டு அந்த வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்.

நேற்று வரை இந்த வீட்டில் அவள் ஒரு விருந்தாளியாக கூட வந்ததில்ல. இன்று… இந்த வீட்டின் மருமகள். ஆனால் அந்த மருமகள் என்ற அடையாளம் என்ன செய்யணும், எப்படி நடக்கணும் என்று அவளுக்கே தெரியவில்லை.

சில நொடிகள் அப்படியே நின்றிருந்தாள்.

அவள் கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து பிடித்துக் கொண்டாள். அந்த விரல்களில் சற்றே நடுக்கம் குறைந்திருந்தது.

“இங்க என்ன செய்யனும், யாரையும் கேக்கனும் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் செய்றேன்…” என்று மனதுக்குள் மெதுவாக சொல்லிக் கொண்டாள்.

அந்த ஒரு வரி அவளுக்கே ஒரு தைரியம் கொடுத்தது.

வீடு முழுக்க அமைதி. அவள் நடந்து மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தாள்.

அந்த அமைதியில் அவள் காலடி சத்தமே பெரியதாக கேட்டது.

அந்த இடம் அவளுக்கு புதிது. எந்த பொருள் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் அவள் அலமாரிகளை மெதுவாகத் திறந்து பார்த்தாள்.

முதலில் ஒரு காபியை குடிக்க வேண்டும் என தோன்ற, அதற்கான பொருட்களை தேடி கண்டுபிடிக்கவே அவளுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது.

‘ஷப்பா காபிக்கே இந்தளவுக்கு சிரமமா?’ என்றபடியே பாலை அடுப்பில் வைத்தவளுக்கு, அடுத்து வரும் வேந்தனுடனான நாட்களை எப்படி கழிப்பது என்ற கேள்வியே முன்னின்றது.

“இது என் வீடு… எல்லாத்தையும் சமாளிக்கலாம்” என உருப்போட்டுக் கொண்டே வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை என்ற உண்மை தெரிந்தபிறகு தனக்கான காபியுடன் அங்கேயே இருந்த சேரில் அமர்ந்து, குடிக்க ஆரம்பித்தாள்.

எப்போதும் ஆதினிக்கு இந்த காபிக்கான பொழுதுகள் மிகவும் ஸ்பெஷல். யாரும் அவளைத் தொந்தரவு செய்யாத ஒரு சூழலை உருவாக்கி, அந்த சூழலை மிகவும் ரசித்து தன் காபியை அருந்துவாள்.

இன்றைய நாள் அப்படியே அமைந்துவிட, அவள் மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மெல்ல மெல்ல வடிய ஆரம்பித்தது.

அந்த காபியை பருகிய பிறகே அவளுக்கு மூளையும் உடலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டது.

இனி வெளியாட்கள் வர ஆரம்பித்து விடுவார்கள் என்று தோன்ற,

காபியை டம்ப்ளர்களில் எடுத்துக் கொண்டு, பாட்டி இருந்த அறை கதவை மெதுவாகத் தட்டினாள்.

“பாட்டி…” என்று மெதுவாக அழைத்தாள்.

உள்ளே இருந்து சின்ன சலசலப்பு. “யாரு…?” என்ற தூக்க கலந்த குரல்.

“நான்… ஆதினி…” என்றாள்.

“வா ம்மா…” என்றார் பாட்டி.

அவள் உள்ளே செல்ல, பாட்டி படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தார். அருகில் தாத்தா இன்னும் சாய்ந்திருந்தார்.

“காபி…” என்று அவள்  டம்ப்ளரை பாட்டியிடம் நீட்ட, பாட்டி ஒரு நொடி அவளைப் பார்த்தார். அந்த பார்வையில் ஆச்சரியம்… அதோடு ஒரு மென்மையான நிம்மதி.

பின் “இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா ம்மா…?” என்றார்.

“தூக்கம் வரல பாட்டி…” என்றாள் அவளும் மெதுவாக.

“ஹ்ம்ம்… புது இடமில்ல, போக போக சரியாகிடும்..” என்று தலையசைத்தார்.

“தாத்தாவுக்கும் கொடு ம்மா…” என்றார் அவரே. ஆதினி இன்னொரு டம்ப்ளரை அவரிடம் நீட்டினாள்.

தாத்தா அதை எடுத்துக் கொண்டு, “சுமதியும் இப்படித்தான் கொண்டு வருவா…” என்றார் மெதுவாக.

தாத்தாவின் வார்த்தைகள், அவள் மனசுக்கு ஒரு ஆதரவு போல விழுந்தது. 

அவர்களிடம் தலையசைத்து அவள் வெளியே வரும்போது…

மூர்த்தி வழியிலேயே நின்றிருந்தார். அவர் ஏற்கனவே எழுந்து வந்திருந்தார்.

ஆதினி உடனே கையில் இருந்த டம்ப்ளரை நீட்டி, “காபி மாமா…” என்றாள்.

மறுத்து பேசாமல், மூர்த்தி அதை எடுத்துக் கொண்டு, அவளை சில நொடிகள் கவனமாக பார்த்தார்.

அவள் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது…

“நேத்து… நடந்ததெல்லாம்…” என்று ஆரம்பிக்க, ஆதினி அமைதியாகவே நின்றாள்.

“யார் என்ன பேசினாலும்… மனசுல வச்சிக்காதே ஆதிமா…” என்றார் மெதுவாக.

அவள் தலையை மெதுவாக அவரை அதிர்ந்து தூக்கிப் பார்த்தாள்.

மருமகளின் பார்வையை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்தார்.

“அவங்க இங்க எப்போதுமே இருக்கப்போறவங்க இல்ல… இரண்டு நாள்ல போயிடுவாங்க… அவங்களை எல்லாம் பகைச்சிக்க முடியாது. அடுத்து எப்போ வருவாங்களோ தெரியாது. அவங்க பேசினது உனக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்குப் புரியுது, ஆனா இந்த நேரத்துல அதை பெருசு பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். நீ எதுவும் மனசுல வச்சு குழப்பிக்காதே..” என்றவரின் வார்த்தைகளில் சில நொடிகள் இடைவெளி.

“ஆனா நீ…” அவர் குரல் சற்று மென்மையானது. “நீ தான் இந்த வீட்டோட பொண்ணு… இந்த வீட்டோட மருமகள்…” என்றார் தீர்க்கமாக.

ஆதினியின் கண்கள் சற்றே கலங்கின.

அவர் மேலும் சொன்னார். “இது உன்னோட வீடு. உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ… நீ உரிமையா செய்யலாம். யாரையும் பார்த்து தயங்க வேண்டாம்.” என்றார்.

அந்த வார்த்தைகள் அவளுக்கு எதிர்பாராத ஆதரவாக இருந்தது. நிச்சயம் மூர்த்தியிடமிருந்து இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவள் எதுவும் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.

ஆனா அவள் உள்ளே இருந்த பயம்… கொஞ்சம் குறைந்தது.

அந்த நேரத்தில்…  அவர்களின் உரையாடலை அங்கேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் வேந்தன்.

பின் அவன் அவ்ர்களுக்கு அருகில் வந்து நின்றான்.

ஆதினி திரும்பி பார்த்தபோது தான், அவன் அங்கே இருப்பதை கவனித்தாள்.

ஒரு நொடி அமைதி.

வேந்தன் பார்வை நேராக அவள் மேல் விழுந்தது.

அவன் முகத்தில் இன்னும் சோகமும் இறுக்கமும் இருப்பது தெரிய என்ன சொல்வது என தெரியாமல் நின்றாள்..

ஆனா நேற்று இருந்த அந்த கடுமை… கொஞ்சம் குறைந்திருந்தது.

அவன் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

பின் அமைதியாக , “எனக்கு coffee இல்லையா…?” என்றான் அவளிடம்.

அந்த குரலில்… நேற்று போல் கடினமில்லை.

சற்று சாதாரணமாக… சற்று அவளிடம் இறங்கி வந்த மாதிரி தோன்றியது.

ஆதினி ஒரு நொடி அவனைப் பார்த்தாள். அவளுக்கு அந்த கேள்வி புரிய ஒரு நொடியே எடுத்தது.

“ஹ்ம்ம் எடுத்துட்டு வரேன்” என்றபடியே உடனே திரும்பி சமையலறைக்குள் சென்றாள்.

வேகமாக அவள் காபியை கொண்டு வந்து அவன் பக்கம் நீட்ட, வேந்தன் அதை எடுத்துக் கொண்டே ,“Thanks…” என்றான் மெதுவாக.

இந்த முறை… 

அவள் முகம் லேசாக மலர, சிறிது தலையசைத்தாள்.

அந்த நொடி… யாரும் சொல்லாமல் இருவருக்குள்ளும் ஒரு சிறிய மாற்றம் நடந்தது.

முழுக்க முற்றாக மூடியிருந்த இருவரின் இதய கதவில் ஒரு சின்ன ஆட்டம் உண்டானது.

மூர்த்தி அதை கவனித்தார். அவர் எதுவும் சொல்லவில்லை.  அவர் மனதுக்குள் ஒரு சிறு நிம்மதி.

வேந்தன் காபியை குடிக்க ஆரம்பிக்க, அங்கேயே நின்றிருந்த ஆதினியின் மேல் அவன் பார்வை விழுந்தது.

இந்த பெண்… நேற்று அவன் குறை சொன்ன பெண் தானா…?

இன்று… இந்த வீட்டில் எல்லாரையும் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.

தப்பு செய்துவிட்டேனோ? அவளை அப்படி பேசியிருக்க கூடாதோ? அவன் மனதில் ஒரு சின்ன குழப்பம்.

அதோடு…

ஒரு புதிய எண்ணமும் முளைத்தது.

ஆதினி அமைதியாக அங்கேயே நின்றிருந்தாள். அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனா அவள் மனதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது, ‘இனி இதுதான் என் வீடு’ என்று.

“அப்பா இன்னைக்கு என்ன என்ன வேலை இருக்குனு சொல்லிடுங்க?” என்ற வேந்தனிடம் பதில் சொல்லாமல்,

“பின் பக்கம் கதவை திறந்து விடுமா? ஆளுங்க எல்லாம் வேலை செஞ்சிட்டு இருக்காங்க. வசந்தி இப்போ வேலைக்கு வந்துடுவா. உனக்கு துணைக்கு ஆகும். இப்போ பால் இருந்தா அவங்களுக்கு டீ போட்டு குடுமா.. இல்லைன்னா வெளிய வாங்கிட்டு வர சொல்றேன்..” என்று மூர்த்தி கூற, 

“பால் இருக்கு மாமா, நான் போட்டு கொடுத்துடுறேன். காலை சமையல்..” என இழுக்க,

“கொஞ்ச நேரத்துல ஆளுங்க வர ஆரம்பிச்சிடுவாங்கமா.. எல்லாருக்கும் செஞ்சிட்டு இருக்க முடியாது. வேந்தன் நேத்தே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டான். நீ வந்தவங்களை கவனிச்சா போதும். யார் என்ன சொன்னாலும் கண்டுக்காத..” என்றதும், ‘சரி’யென்றபடி சமையலறைக்குள் நுழைந்துவிட, 

“வேந்தா.. உன் அம்மா உனக்கு ஒரு பொறுப்பை கொடுத்துட்டு போயிருக்கா. ஆதினி உன்னை நல்லா பார்த்துப்பான்னு உன் அம்மாவுக்கு நிம்மதி இருக்கும். அதே மாதிரி நீயும் அந்த பொண்ணை நல்லா பார்த்துக்கனும். அவ இந்த வீட்டுக்கு வந்த மருமக. உன்னோட மனைவி. அதை எப்போதும் மனசுல வச்சிட்டு வார்த்தையை விடனும்.” என்றார் தந்தையின் கண்டிப்புடன்.

“ப்பா.. அது ஒரு கோபத்துல..” என்ற வேந்தனிடம்,

“எந்த கோபமும் உனக்கு ஆதினி மேல இருக்கக்கூடாது வேந்தா.. அப்படி உனக்கு கோபப்படனும்னா உன் அம்மா மேலத்தான் கோபப்படனும். ஏன்னா இந்த வாழ்க்கையில ஆதினியை உள்ள இழுத்து விட்டது அவதான்..” என்றார் தீர்க்கமாக.

“ஸாரிப்பா…” என்றான் சட்டென.

“நீ சாரி சொல்லனும்னு இதை சொல்லல. அதோட நீ சாரி கேட்க வேண்டியதும் எங்கிட்ட இல்ல. ஆதினிகிட்ட தான் நீ சாரி கேட்கனும். அவளுக்கு இங்க எல்லாமே புதுசு. பழக நாள் எடுக்கும். பொறுமையா பேசி பழகு..” என்றார் இப்போது பொறுமையாக.

“சரி ப்பா..” என்றவன், “நான் பாட்டியையும், தாத்தாவையும் பார்த்துட்டு வரேன். நீங்களும் வரீங்களா?” என்ற நேரம், சுப்புவும், கலாவும் பதட்டமாக உள்ளே வந்தனர்.

You may also like

1 comment

M. Sarathi Rio March 19, 2026 - 7:42 pm

பரவாயில்லை, ஆதினி சூழ்நிலையை சரியா புரிஞ்சிக்கிட்டா.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured