மதுசூதனனும் மாதுளையும் வீட்டினை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவனது அலைபேசி மீண்டும் ஒலித்தது. அதை ஏற்றுப் பேசியவன் மனையாளைப் பாதியிலே விடுத்து, எங்கோ புறப்பட்டுப் போனான். அவள் மட்டும் தனியே நடையைத் தொடர, வழியில் அவளின் பள்ளித் தோழி ஒருத்தி எதிர்ப்பட்டாள். இவள் அவளைக் கண்டுவிட்டு நலம் விசாரித்ததோடு அல்லாமல் வீட்டிற்கே அழைத்துச் சென்றுவிட்டாள். இங்கே தோழியுடன் பேசி ஓய்ந்து, இவளுடைய குழந்தைகளுடன் விளையாடி அலுத்து, இவர்களுக்குத் தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அவள் வீடு வந்து சேர்ந்தாள். அவள் வாசலை அடைந்தபோது வெளியே காலணிகள் பலவும் குவிந்து கிடந்தன. அவள் தன்னுடைய காலணிகளைக் கழற்றிவிட்டு நிமிர, உள்ளிருந்து பேச்சுக் குரல்கள் சத்தமாக எழும்பின.
“அண்ணி உனக்கு இதைத் தான் வாங்கித் தந்தாங்களா? டௌனுல இதை விட விலை கம்மியா; கூடவா?” என்று வினவினாள் ரம்யா.
“யாரு கண்டா?” முல்லையின் குரலில் சலிப்பு மேலோங்கியது.
“எனக்கு அந்த ஃபோட்டோவ அனுப்பு. அது என்ன கிஃப்ட்டுனு நானும் பாக்குறேன். குவாலிட்டி.. குவாலிட்டி எப்படி?” என்றாள் அலைபேசிக்குள் இருந்த சுதா.
அதற்கு முல்லை இராகமாக இழுத்தாள் “மோசம்னு சொல்ல முடியாது. மத்த பிள்ளைங்களுக்கு டிரய்னிங் தர்றதுக்கு வேணா யூஸ் பண்ணிக்கலாம்”
“நான் பெத்த சனங்களா, இனாம வந்த மாட்டைப் பல்லைப் புடிச்சுப் பாக்காதீங்கடி” என்று அங்கலாய்த்தார் சிந்தாமணி.
“எத்தனை பவுனு சீதனமா கொண்டாந்தா உன் மருமக?” இவள் முல்லை.
“அதை எதுக்குடி நான் கேக்கப் போறேன். அதையெல்லாம் நானா எடுத்து மாட்டிக்கப் போறேன்!” நறுக்கென்று விடை கொடுத்தவர், உள்ளுக்குள் மூண்ட புகைச்சலைக் கட்டுப்படுத்த இயலாமல் இளையவளின் சிகையை அழுத்திச் சீவினார்.
அதில் சுலோச்சனாவோ “ஆ, அம்மா! இருக்குற காண்டுல என் முடியப் பிச்சுப்புடாத. வலிக்குது” எனப் பல்லைக் கடித்தாள்.
“அண்ணனுக்கு வசதியான பொண்ணா பாத்திருக்கலாம். அதுவும் எவ்வளவு நாள் தான் உழைச்சிட்டே இருக்கும்?” இவள் ரம்யா.
“வசதியான இடத்துல பாத்து வச்சுருந்தா மட்டும், காலை ஆட்டிட்டு உக்காந்துருக்கவா முடியும்! மாமனாரும் மாமியாரும் மூஞ்சுலயே காரித் துப்பிட மாட்டாங்க. சாகுற நிமிசம் வரைக்கும் நமக்காகவாது நாம உழைச்சுத் தான் ஆகணும். உழைக்கத் தயங்குறவன் தான் பொண்டாட்டி வீட்டை எதிர்பாத்துட்டுருப்பான். என் புள்ளைக்கு யாரும் உழைக்கச் சொல்லித் தரவும் வேணாம்; யாரும் உழைச்சும் தர வேணாம். அவங்கவங்க அவங்கவங்களோட வேலையைப் பாத்தா போதும்” என்று கூறி மகள்களைப் பதங்களால் குட்டினார் அவர்.
“அண்ணனுக்குக் கல்யாணம் ஆனதுல இருந்து உன் பிஹேவியரே சரியில்ல, மம்மி. ஒரேயடியா உன் மருமகளைக் கொஞ்சாத. என்னைக்கா இருந்தாலும் எங்க துணை உனக்குத் தேவை” இவள் சுதா.
“என் மகனும் மருமகளும் இருக்குறப்போ நான் ஏன்டி உங்ககிட்ட வந்து நிக்கப் போறேன். அவங்க என்னைக் கவனிச்சிக்குறாங்க; இல்லை. அது எங்களோட பிரச்சனை; எங்களோட போகுது. நானாச்சு, அவங்களாச்சுன்னு அப்படியே விட்டுடுங்க. நாங்க சண்டை கட்டிக்கிட்டாலும் நடுவுல வராதீங்க; கொஞ்சிக்கிட்டாலும் ஏன்னு கேக்காதீங்க. அவகிட்ட மல்லுக்கு நிக்க உங்களுக்குத் தேவை என்ன கிடக்கு? என்னைக் கேட்டா, உங்களோட சீண்டல், தூண்டல்லாம் உங்க அண்ணனோட நிப்பாட்டிக்கறது நல்லது. உங்க விஷயத்துல அவ எப்பயாவது தலையிடுறாளா? நீங்க மட்டும் ஏன் தான் துள்ளிட்டுத் திரியுறீங்களோ!”
“ஆமாமா. அண்ணி எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாங்க; அண்ணன் என்னைத் திட்டுனாலும் அடிச்சாலும் பாத்துட்டு கம்முனு நிப்பாங்க” இவள் சுலோ.
“அவ தான் அத்தனை முறை கூப்டாள்ல. கண்டுக்காம வெடுவெடுன்னு போனது யாரு!” மகளின் தலையை முன்னும் பின்னும் பிடித்து ஆட்டினார் தாயார்.
“நாங்க ஏதோ நாத்தனார் கொடுமை பண்ற மாதிரியும் அவ என்னமோ உலகத்துலயே இல்லாத மருமக மாதிரியும் ரொம்ப தான் வக்காலத்து வாங்குற!” மீண்டும் முல்லை.
“நீங்கலாம் கூட்டு சேந்துட்டு முதல்ல குறை கண்டுபிடிக்கறத நிறுத்துங்க. நானும் நிறுத்துறேன். நாலு நாத்தி இருக்காங்கன்னு வெளிய யார்ட்டயாவது சொல்லிருந்தா, மூலைக்கு ஒன்னா தெறிச்சு ஓடிருப்பாளுங்க. இந்தப் பொண்ணு அதுபாட்டு அது பொழப்பைப் பாக்குது. நீங்க வீணா மூக்கை நுழைச்சு, உங்க அண்ணன்ட்ட மூக்கறுபடப் போறீங்க. வசதி இன்னைக்கு வரும்; நாளைக்குப் போகும். உங்க அண்ணன் என்ன வக்கில்லாம கிடக்கானா? அவன் நாலு பவுனு வாங்கிப் போட்டா, மாதுவோட தராதரம் தானா உசந்திடப் போகுது. நீங்க என்ன பொறக்கும்போதே தங்கத் தட்டோட பொறந்தீங்களா? செத்த அனத்தாம இருங்கடி. கடைசி வரைக்கும் நாம மட்டுமே அண்ணன் கையால வாங்கிப் போட்டுக்கணும்னு கெட்ட எண்ணம் புடிச்சு அலையாதீங்க”
“என் புருஷனே நல்லா தான் சம்பாதிக்கிறாரு. இஷ்டத்துக்குப் பேசாத” என்று முனகினாள் மூத்தவள்.
“அது சரி! அவரு வேலைல சேந்த நாள்லருந்து மூத்தவன் எவ்ளோ செலவு பண்ணிருக்கான்னு உனக்கு நான் தனியா பட்டியல் போடணுமா?” அவரின் கேள்வியில் தானாக மூத்தவளின் வாய் அடைபட்டது.
“எல்லாம் சரி தான்மா. படிப்பை மட்டும் வச்சுட்டு என்ன பண்ணுறதாம்? நாள பின்ன குழந்தை பொறந்துட்டா, வேலைக்கா போக முடியும்?” மீண்டும் ரம்யா.
“உன்னால ஒரு நாள் தனியா பேங்க் பக்கம் போயிட்டு வர முடியுதா? எத்தனை நாள் பாரம் எழுதத் தெரியாம மத்தவங்க கையைப் பாத்துட்டு நின்னுருக்க! உங்க அக்கானால பசங்களுக்கு ஒரு பாடம் சொல்லித் தர முடியுதா? அதுக்குத் தான் படிப்பு தேவைங்குறது. இதலாம் நீங்க எனக்குச் சொல்லணும். இங்க நான் உங்களுக்குச் சொல்லிட்டு இருக்கேன். கஷ்ட காலம்!” அவர் வேதனையோடு பெருமூச்சுவிட்டார்.
“எங்களுக்கும் வாய்ப்பு கிடைச்சுருந்தா, நாங்களும் படிச்சிருப்போம்” முல்லையின் கூற்றுப்படி முருங்கை மரத்தில் மல்லிகை பூக்குமாம்!
“ஆமாடி. நாந்தான் படிக்குற புள்ளையைப் பிடிச்சு, கல்யாணம் கட்டி வச்சுட்டேன். எட்டாவதுலயே ஸ்கூல் போக மாட்டேன்னு, அதோ, அந்தத் திண்ணையில படுத்துட்டு அழுதவ தான நீயு. உன்னைப் பத்தாவது வரைக்கும் படிக்க வைக்கறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே; அந்த ஈசனுக்குத் தான் தெரியும். அதுலயும் ஃபெயிலு. இதோ இது ஸ்கூலைக் கட்டடிச்சுட்டு ஊரைச் சுத்துனதால, பன்னெண்டாம் வகுப்பு பரீட்சையே எழுத முடியாம போயிடுச்சு. இன்னொன்னு ப்ளஸ் டூவோட சரி. இந்தக் கடைசிக் குட்டி காலேஜ் போதுன்னு தான் பேரு”
“ஏன்மா, இவ ஒழுங்கா படிக்கிறது இல்லையா?” மீண்டும் சுதா.
“கிழிக்குறா நல்லா!” அவர் தன் ஆத்திரத்தை மறுபடி இவளது தலையில் காண்பித்தார்.
“அம்மா!” இளையவள் வலியில் கத்தினாள்.
“உங்க அண்ணி காலேஜுல டீச்சரா தான இருக்கா. அவகிட்ட என்னைக்காச்சும் நீ பாடம் படிச்சிருக்கியா? அப்படிப் படிச்சா தான் உருப்பட்ருவியே!”
“அவங்க படிப்பு வேற. நான் படிக்கிறது வேறம்மா”
“என்ன வேறயோ! மூனு வாரத்துல உங்க அண்ணிக்குத் தாலி பிரிச்சுக் கோக்கணும். எல்லாரும் வந்துருங்க. சம்பந்தி வீட்டுக்குப் போகணும். அப்பறம் கூப்பிடலை, வரலை, போகலைனு அளந்துவிடக் கூடாது” அவர் கறாராகத் தெரிவித்தார்.
“நான்லாம் அங்க வர மாட்டேன். அக்கா வீட்டுல ஃபங்க்ஷன் நடத்துங்க. அங்க தான் வசதியா இருக்கு” சுதா அவசரமாக அறிவித்தாள்.
“நீ வரவே தேவையில்லை. பிரசவம் கூட சென்னைலயே பாத்துக்க” என்றார் தாயார் உதட்டுக்கடியில் சிரிப்பை மறைத்து.
“அம்மா…” மூன்றாமவள் சிணுங்கினாள்.
“என்ன நொம்மா?” அவருடன் சேர்ந்து மற்ற புதல்வியரும் கலகலத்த நேரம் மாது உள்நுழைந்தாள்.
“அத்தை, நான் வெளிய போயிட்டு வந்துட்டேன். அவரு ஏதோ வேலைன்னு கிளம்பிப் போயிருக்காரு” என்றவள் யார் முகத்தையும் காண விரும்பாமல் அறைக்குள் புக முயன்றாள்.
“வாம்மா. வந்து உக்காரு” எனும் அத்தையின் சொல் அவளை அவ்விடமே கட்டிப் போட்டது.
அவள் அங்கிருந்த கட்டிலில் அமர, அச்சூழலைப் பெரும்பாலும் நிசப்தமே ஆட்சி செய்தது. அதுவரை நடந்த விவாதத்தை அவள் கேட்டுவிட்டாள் என்பதை அவர்களும் உணர்ந்து கொண்டனர். சற்று நாழி மேம்போக்காகப் பேசியிருந்துவிட்டு முல்லையும் ரம்யாவும் விடைபெற முனைந்தனர்.
“நாங்க வரோம்மா. வரோம், அண்ணி” இருவரும் ஒருசேரக் கூற, சிறு தலையசைப்போடு மாது சிரிக்க முயற்சித்துத் தோற்றாள்.
சுலோவும் அங்கிருந்து நழுவி, அலைபேசியுடன் மாடிக்குச் சென்று ஐக்கியமானாள்.
அடுத்ததாக, அத்தையார் அருகில் இருந்தவளுக்கு ஆறுதலளித்தார் “மாது, அவளுங்க அப்படித் தான். நீ எதையும் மூளையில ஏத்திக்காத. உன் வாழ்க்கை அவளுங்க கூட நகரப் போறதில்ல. ஏதோ நல்ல நாள், கெட்ட நாள்னா வருவாளுங்க; ஒரே இராத்திரில அவ அவ வீட்டுக்கு ஓடிருவாளுங்க. நீ மதுவை மட்டும் மனசுல வச்சுக்கோ. அவன் உன்னை வருத்தப்பட வைக்குற மாதிரி எதுவும் நடந்துகிட்டான்னா என்கிட்ட சொல்லு. இவளுங்களலாம் கணக்குலயே எடுத்துக்க வேணாம்”
அந்நேரம் கச்சிதமாக மது உட்புகுந்தான். “இங்க என்ன நடந்துச்சு? எதுக்கு இவளோட முகமெல்லாம் வாடிக் கிடக்கு? யார், என்ன சொன்னாங்க?” அவன் சட்டைக் கையை ஏற்றிவிட்டபடி மேல்மூச்சு வாங்கக் கேட்டான்.
அவளிருந்த கலவரத்தில் அவனது சீரற்ற சுவாசத்தைக் கவனத்தில் ஏற்றவில்லை.
“அவங்க பேசுறதுலயும் நியாயம் இருக்கு தானே, அத்தை. உண்மை கசக்கத் தான் செய்யும். நான் சமாளிச்சுக்குறேன்” அவள் மிகுந்த பொறுமையோடு மொழிந்தாள்.
“என்கிட்ட என்னனு சொல்ல மாட்டியா?” அவனின் நேரடிக் கேள்விக்கு அவள் அமைதியையே திருப்பித் தந்தாள்.
“உன் தங்கச்சிங்க தான்டா யப்பா. லொடலொட வாய வச்சுட்டு அவளுங்களால சும்மாவே இருக்க முடிய மாட்டேங்குது” என்றார் தாயார் அதிருப்தியுடன்.
அவள் அத்துடன் அறைக்குள் செல்ல முற்பட, அவன் எளிதில் விடுவதாக இல்லை. “மாது…” என்றபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
அவளோ முகங்கொடுத்துப் பேசக் கூட தயாராயில்லை “ம்ச், ஒன்னும் ஆகல. அதையே தோண்டாதீங்க”
அவன் அலைபேசியை எடுத்து அழுத்த, அவள் விரைந்து பறித்தாள். “யாருக்கு ஃபோன் போடுறீங்க? சும்மா இருங்க, மது” அவனது எண்ணிலிருந்து முல்லைக்கு அழைப்பு போய்க் கொண்டிருக்க, அதை உடனடியாகத் துண்டித்தாள்.
“அப்பறம் நான் யாருட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறதாம்?” என்றவன் சிந்தனை வந்தவனாய் “சுலோ, சுலோ…” என்று கூவினான்.
“ஷ்ஷோ, மது. நீங்க ஒரு சின்ன விஷயத்தைப் பிடிச்சுட்டு, காம்ப்ளிகேட் பண்ணிட்டு இருக்கீங்க” அவள் சங்கடத்தோடு பற்களுக்கிடையே சொற்களை மென்று துப்ப, அவன் கண்டும் காணாமல் இளையவளைத் தேடிச் சென்றான்.
கடைக்குட்டி வேறு வழியின்றி நடந்தேறிய அனைத்தையும் மனப்பாடமாகத் தமையனிடம் ஒப்பித்தாள்.
அறைக்குள் திரும்பி வந்தவன் சீற்றத்துடனே “என் ஃபோனைக் குடு” என்றான்.
“மாட்டேன். நான் சண்டைக்காரி ஆக விரும்பல. புரிஞ்சுக்கோங்க” அவனின் துணைவி அவனது கைப்பேசியைப் பின்புறமாக மறைத்தாள்.
“மாது, சண்டை வராத குடும்பமே இல்ல. என்னை என்ன வேணா சொல்ல என் குடும்பத்துக்கு உரிமை இருக்கு. இங்க வாக்கப்பட்டதாலயே உன்னை அவங்க எது வேணாலும் பேசலாம்னு அர்த்தம் கிடையாது. இதுக்கு ஆரம்பத்துலயே முற்றுப்புள்ளி வைக்கணும்”
“அதென்ன என் குடும்பம்? நம்ம குடும்பம் இல்லையா? சொல்றதைத் திருந்தச் சொல்லுங்க. என் அப்பா உங்களை எதுவுமே பேசாத மாதிரி… தினம் தினம் சண்டையப் பாத்து வளந்தவ நானு. என்னால இந்தக் குடும்பத்துல என்னைக்குமே சண்டை வந்ததா இருக்கக் கூடாது. உங்களுக்கு வேலை இருந்தா கடைக்குக் கிளம்புங்க. இல்லையா, படுத்துத் தூங்குங்க. என் நிம்மதியக் கெடுக்காதீங்க” அவள் அவ்வாறு புகன்றதால் அவனுடைய நிம்மதி சிதையத் தொடங்கியது.
இப்போது அவன் அவளுக்கு முகங்காட்டாமல் வெளியேறிவிட, அவளின் நெஞ்சில் சுமையேறியது. “எனக்கு மனசு நோகுனா, நானே முகத்துக்கு நேரா கேட்டுடுவேன். நீங்க இதுல தலையிட வேணாம். சொல்லப் போனா, இந்த உரையாடல நான் கேட்டுருக்கவே கூடாது. கேக்கலைன்னே நினைச்சுட்டுக் கடந்துடுவோம்” என நான்கு வரிகளுக்குத் தட்டச்சு செய்தவற்றை அழித்து, ஒற்றை வரியை மட்டும் அவள் விட்டு வைத்தாள். அதுவும் அறவே நற்பலன் தரவில்லை.
தனது அலைபேசி சிணுங்கிட, மது விடுதியின் மின்னும் விளக்கொளியில் அவன் எடுத்து நோக்கினான். “நீங்க இதுல தலையிட வேணாம்” எனும் வரியே திரையின் மேற்புறம் விரவி மறைந்தது. அதற்கு மேல் அவன் என்னவென்று விளம்புவான்? அவனால் சிலை போல் கரங்களைக் கட்டிக் கொண்டு வேடிக்கை காணவும் இயலுமோ? முன்னொரு காலத்தில் இயன்ற காரியம் தான். இப்போது அதுவே சிரமமாகப்பட்டது. அவள் அவனை நம்பி வந்தவள். அவளை அவ்விதம் யாரிடமும் விட்டுக் கொடுக்க இருதயம் இடந்தரவில்லை.
அதன் பிறகு அவனிடமிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, அவளுக்கு உறக்கம் என்பதே மறந்தாகிற்று. அவனுக்காகவே காத்திருந்து நள்ளிரவில் கதவைத் திறந்தவள் “சாப்புட்றீங்களா?” என்றாள் அக்கறை ததும்ப.
அவளிடம் மறுப்பாய்த் தலையசைத்தவன் டீசர்ட்டுக்கு மாறினான்; முற்றிலுமாக அவளைக் காண்பதையே தவிர்த்து படுக்கையில் விழுந்தான். அவனுடன் சேர்ந்து அவளுமாக, இருவரும் அப்பொழுதிற்குக் கொலைப் பட்டினி கிடந்தனர்.
மறுதினம் அதிகாலையில் மது விடுதிக்குச் சென்றவன் காலை உணவிற்குக் கூட திரும்ப வரவில்லை.
ஒன்பது மணிக்கு மேல் அன்னையார் அவனுக்கு அழைப்பு விடுத்தார். “ஏன்டாப்பா, நைட்டு வைச்ச சோறு அப்படியே இருக்கு. இப்பவும் நீ வருவியானு பாத்துட்டே இருந்து, மாது சாப்பிடாம போயிருக்கா. என்ன தான்டா உங்க கதை?” அவருக்கு ஆற்றாமை பொங்கியது.
“லஞ்ச் எடுத்துட்டுப் போனாளா?”
“எடுத்து வைச்ச மாதிரி தான் ஞாபகம்”
“நான் பேசிக்கிறேன். விடு”
“எதனால இப்படி முறுக்கிட்டுத் திரியுறீங்க? நேத்து நடந்ததை இன்னுமே ரெண்டு பேரும் மறக்கலையா?”
“எல்லாரையும் பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு, இப்ப வந்து கேளு. பேசாம வைமா” வழக்கத்தை மீறி அவன் கடுப்படித்தான். அவன் உடனே தன்னவளுக்கு அழைக்க, அழைப்புகள் ஏதும் ஏற்கப்படவில்லை. வகுப்பில் இருப்பாள் போல எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
மதியவேளை அவள் நேரடியாக அழைப்பதைத் தவிர்த்து, புலனத்தின் ஊடாகச் செய்தி அனுப்புவதைத் தொடர்ந்தாள். தான் அவனைக் காயப்படுத்தி விட்டோமோ என்கிற எண்ணம் வேறு அவளை வாட்டியது. “சாப்டீங்களா?” என்று கேட்டனுப்பினாள் சுருக்கமாக.
சமயம் அவளுக்குச் சாதகமாக அமையாததால், அவன் அதைத் தாமதமாகவே கவனிக்க நேர்ந்தது. “ம்ம். இப்போ தான்” எனும் பதிலை அவன் தட்டிவிட்டபோது மணி இரண்டைக் கடந்திருந்தது.
அச்செய்தியைத் திறந்தவள் சில நொடிகளுக்கு எதையோ தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக இருந்தாள். மூன்று புள்ளிகள் அலையலையாக ஒளிர்ந்து மங்குவதைத் தவிர வேறொன்றையும் காணோம்.
அவனே மீண்டும் சேதி அனுப்பினான் “நீ சாப்டியா?”
“லஞ்ச் டைமே முடிஞ்சுருச்சு” பட்டெனப் பதில் வந்தது.
அவனுக்கும் அதில் மிகுந்த வருத்தம் தான் எனினும் அவளிடம் வெளிப்படுத்த விழையவில்லை. அடுத்த கட்டமாக “எத்தனை மணிக்குக் காலேஜ் முடியும்?” என்றான்.
அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து, அவளை அவன் அழைத்துக் கொண்டான். வழிநெடுக இருவரும் வாயை இறுக மூடியிருந்தனர்.
வீடு வந்ததும் அவள் அறைக்குள் நுழைய, அவன் சோற்றுத் தட்டோடு பின்சென்றான். “ஏன் இப்படிப் பண்ணிட்டுருக்க? ஒழுங்கா சாப்பிடத் தெரியாதா உனக்கு?” அவனது பாவனையில் கோபம் தெறிக்க, அவளிடமும் அதுவே துளிர்த்துக் கிளைவிட்டது.
“நேத்து சாப்பிட்டதே இங்க நிக்குது” தொண்டையைச் சுட்டிக் காண்பித்தவளின் முகக் குறிப்பில் கலக்கமும் போட்டியிட்டுத் ததும்பிற்று. தான் அவனுக்குப் பொருத்தமில்லையோ என்கிற உறுத்தலே அத்தனைக்கும் மூலம்.
“மரியாதையா சாப்பிடு” அவன் சுட்டு விரல் நீட்டி, நெறிந்த புருவங்களோடு அதட்டினான்.
“இப்படி மிரட்டி மிரட்டியே காலத்துக்கும் சாப்பிட வைச்சுடலாம்னு நினைக்காதீங்க” அவள் முகத்திற்கு முகம் ஏறிட்டு துணிவோடு நவின்றாள்.
“பின்ன, வந்து கொஞ்சவா?”
அதைக் கேள்வியுற்றவள் அலட்சியம் மேலிட உதடுகளைச் சுழித்தாள். அத்தருணம் அகல விரிந்த கமலத்தையொத்த கன்னக் கதுப்புகளைக் கரங்களில் ஏந்தி, அவனை ஏளனம் செய்யும் அதரங்களைத் தீண்ட வேண்டுமென அவனுதடுகள் துடியாய்த் துடிக்க ஒருவழியாகப் பிடரியைக் கோதிச் சமன்படுத்திக் கொண்டான். அவள் மீது எழும் விபரீத ஆசைகளுக்கான முகாந்திரம் ஏனோ மன்னவனுக்குப் பிடிபடவில்லை. அவள் தான் அவனை என்னவோ செய்துவிட்டாள். இன்று, நேற்று அல்ல; திருமணம் ஆவதற்கு நீண்ட காலம் முன்னிருந்தே இங்ஙனம் தான் அவனை அவள் பேயாய், பூதமாய், அணங்காய் ஆட்டுவிக்கிறாள்.
“சாப்பிடு. நான் இராத்திரி கேட்டப்பவே, சாப்பிடல; உங்களுக்காகத் தான் காத்துட்டுருக்கேன்னு தெளிவா சொல்லிருக்கணும். நீ சொல்லாம எனக்கு எப்படித் தெரியும்?”
“இது மூலமா என்ன சொல்ல வரீங்க? எனக்குப் பசிச்சா உங்களுக்கும் பசி வந்துருமா? நான் சாப்புட்றீங்களான்னு கேட்டேன்ல. நீங்க ஒரு வார்த்தை சாப்டியான்னு திருப்பிக் கேக்கறது?”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? உன்னைக் கொஞ்ச தான் முடியல. கெஞ்சிக் கேட்டுக்கிறேன். சாப்பிடு, தாயே”
அவனை உறுத்துப் பார்த்தவாறே உண்டு முடித்தவள், தட்டை ஓரங்கட்டி “உக்காருங்க” என்றாள் தனக்கருகே இருந்த வெற்றிடத்தைச் சுட்டி.
“சொல்லுங்க, மேடம்” அவன் அவளை இலையும் கிளையுமாக ஒட்டி அமர்ந்தான்.
நேற்று நடந்த நிகழ்வைப் பற்றி அவள் சிறிதே சிறிது மனந்திறந்தாள் “எங்க வீட்டுல வசதி போதலனு எனக்குத் தெரியாம இல்ல. ரெண்டு தெரு தள்ளி அம்மா பேருல மனை ஒன்னு இருக்கு. அப்பா, அம்மாக்குக் கல்யாணம் ஆன புதுசுல, அப்பா ஓரளவு சம்பாதிச்சுட்டு இருந்தப்போ வாங்கிப் போட்ட இடம். அதுல ஒரு வீடு கட்டணும்னு ரொம்ப நாள் கனவு. அதுக்காகவே தனியா கொஞ்சம் சேத்து வச்சிருக்கோம். மாசச் சம்பளத்தை மிச்சம் பண்ணி, மெது மெதுவா, ஹாலோ பிளாக் வச்சாவது சின்னதா வீடு கட்டிடணும். ஆனா, அதுக்கு உங்க உதவி வேணாம்”
வேண்டும் என்று சொல்லி இருந்தால் அவன் பெருமகிழ்வு அடைந்திருப்பான். அவளோ வேண்டாம் என்கிறாளே! “நமக்குள்ள இந்தக் கல்யாணம் எதுக்குனே தெரியல. எந்தக் காரியத்துலயும் என் உதவியே உனக்குப் பிடிக்கிறதில்ல. ஏன், மாது? இதுக்கும் என் தொழில் தான் காரணமா?” உள்ளம் வெதும்ப வினவினான்.
“அப்படிலாம் இல்ல. நீங்க என் புருஷங்கறதுக்காக எல்லா பாரத்தையும் உங்க மேலயே இறக்கிட்றதா! என்னைப் பொருத்தவரை, எங்க வீட்டை நான் கட்டுனதா இருக்கணும்”
“நேத்து என்னமோ நம்ம குடும்பம்னு சொன்ன. இப்போ மட்டும் உங்க வீடு ஆயிடுச்சா?”
அவள் மென்மேலும் வாதம் புரியும் நாட்டமின்றி, பாவமாக அவனை ஏறிட்டாள். அப்போதும் அவனுக்கு நெஞ்சம் ஒப்புவில்லை.
“நைட்டு வர லேட்டாகும். சாப்பிட்டுத் தூங்கு” என்றவன் வேட்டியை மடித்துக் கட்டி, வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
முன்பெல்லாம் வாரமொரு முறை வேட்டி உடுத்துபவன், இப்போது அடிக்கடி இந்த உடையில் தான் கட்சியளிக்கிறான். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டுவதில்லை. அத்துணை அழகு! இப்போது கூட தன்னை நிராசையோடு கண்ணுற்று, வேட்டியைக் காலால் எத்திக் கைப்பற்றியபோது ரோமங்களுடன் கூடிய அந்தக் கெண்டைக் கால் வசீகரத்தை என்னவென்று விவரிக்க! இந்தக் கவிஞர்கள் யுவதிகளை மட்டுமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வர்ணித்து வைத்திருக்கின்றனர். ஆடவர்களின் சுந்தரத்தை விவரிக்க செம்மொழில் பஞ்சமோ, என்னவோ! தன்னவனே ஒரு கவிதையென இருக்கையில் தனியே எதற்குக் கவிதை? இவ்விதம் அவளது கற்பனை விருட்சம் ஓங்கி வளர, இதென்ன அற்பத்தனம் என நெற்றியில் தட்டிக் கொண்டாள். மறுபடியும் அவளின் சிந்தை பழைய சிக்கலை நினைவில் மீட்டது. தன்னிலையை அவனுக்குப் புரிய வைத்திட முடியும் என்று அவள் திடமாக நம்பினாள். இரவு உணவு சமைப்பதற்காக அவள் வெளியில் வர, அத்தையார் வெகுவாக அவளைக் கடிந்து கொண்டார். அவரிடம் அவளுக்கு மறுமொழியேதும் ஆற்றத் தோன்றவில்லை. அன்றிரவும் தம்பதியர்களின் பார்வை எதிரெதிர் திசைகளில் நிலைத்திருந்தது. ஒருவருடன் ஒருவர் பேசிட வேண்டும்; சமாதானம் ஆக வேண்டும்; முகத்தோடு முகம் நோக்கி துயில் கொள்ள வேண்டும் என்றவாறெல்லாம் இருவரின் இதயமும் தள்ளாடியதும் உண்மை. வெட்டி வீராப்பினால் இருவரும் சமரசத்திற்கு ஒத்துழைக்காததும் உண்மை.
அடுத்த நாள் அம்சமாகச் சேலையில் தயாராகி நின்றவள் “நான் அம்மா வீட்டுக்குப் போறேன்” என்றாள் அவனிடம்.
“போயே ஆகணுமா?” என்ற அவனது வினா அவளுக்கு விளங்கவேயில்லை. எப்போதும் போல கேள்வியாகக் கண்களை உருட்டினாள். இவள் ஒருத்தி எதற்கெடுத்தாலும் விழிகளை உருட்டிட வேண்டியது என்று நினைத்தவன் “நானே விட்றேன்” என்றான் குளிக்காமல் கொள்ளாமல்.
இருவரும் அங்குச் சென்றபோது, முத்துமாரி தோள்பட்டையில் பிளாஸ்திரியுடன் குளிக்க முடியாமல் குளித்துக் கொண்டிருந்தான்.
“என்னடா இது கையில?” தமக்கை இயல்பாக வினா வீசினாள்.
இவனோ மாமனின் முகத்தை ஒருமுறை ஆராய்ந்து, மெல்லிய குரலில் விடை பகர்ந்தான் “கிரிக்கெட் விளையாடும்போது கை பிசக்கிடுச்சு”
அவனைக் கடந்து உள்ளே நுழைந்தவள் “அம்மா, நம்ம தெருவுல ஒருத்தர் சோப்புத் தூள் வித்துட்டுப் போவாருல்ல. அவரு வந்தா எங்க வீட்டுக்கும் சேத்து ரெண்டு கிலோ வாங்கி வைக்கிறியா? கடையில வாங்குற பவுடர் எவ்ளோ போட்டாலும் நுரையே காண மாட்டேங்குது” என்று கோரிக்கை வைத்தாள்.
“இதுக்குத் தான் இவ்ளோ தூரம் வந்தியா? இதை ஃபோன்லயே சொல்லிருக்கலாமே” என்றார் அர்ச்சனா பாரா முகமாய்.
“நேத்திலருந்து இங்க வரணும்னு தோனிட்டே இருந்துச்சு. இன்னைக்குத் தான் வர முடிஞ்சுது. என்ன, நம்ம வீட்டுப் பாம்பு ஆட்டம் ஆடாம பொட்டிக்குள்ள அடங்கிருக்கு?” தந்தையார் பதவிசாக இருந்ததால் மிதமிஞ்சிய வியப்பு அவளிற்கு.
தந்தையோ அவளையும் மருமகனையும் ஏறிட்டும் காணவில்லை. ஞாயிறு மாலை வீடு திரும்புகையில் அமுதா அவர் செய்த களேபரத்தை அலைபேசியில் கசியவிட, வேக எட்டுக்களில் மது அவ்வில்லத்திற்கு விரைந்திந்தான். இராமசாமிக்குப் போதை தெளியும் வரையில் பொறுத்திருந்தவன், அவரின் புத்தியில் உறைக்கும்படி சிலவற்றைப் புகட்டினான். அந்தப் பாடம் இரு நாட்களுக்குத் தாக்குப் பிடித்திருப்பதே பேரதிசயம் அல்லவா?
“மாது, போலாமா?” என்றுமில்லா விநோதமாகக் கணவன் அவளை துரிதப்படுத்தினான்.
“அம்மா, வரேன். அம்மா…” அந்த அழைப்பினில் அவர் அரைகுறையாகத் திரும்பியதிலேயே, அவருடைய முகம் ஒருபுறமாக வெந்து சிவந்திருப்பதை அவள் கண்டறிந்தாள். “அம்மா, என்னதிது?” அதிர்ச்சியில் அவளுடைய விழிப்பாவைகளும் சேர்ந்து இருமடங்கு விரிந்தன.
“வேலைக்குப் போன இடத்துல, பலகாரம் சுடும்போது எண்ணெய் தெறிச்சுருச்சு” அவர் வற்றிப் போன உணர்வுகளுடன் இயம்பினார்.
அவரை நம்ப இயலாமல் கூர்ந்தாள் மகள் “என்னங்க, இவங்களைப் பாருங்களேன். என்ன நடந்துச்சுனு நீங்களாவது கேளுங்க” உடையவனைத் துணைக்கு இழுத்தாள்.
“கவலைப்படாத. உன்னைக் காலேஜ்ல விட்டுட்டு, நானே டாக்டர்ட்ட கூப்டுப் போறேன்” அவன் தெருவில் நின்றே கூறலானான்.
“கண்ணால பாக்காமலே சொல்றீங்க?” அந்நொடி அவன்மேல் அவளுக்குச் சந்தேகம் பாய்ந்தது.
“உன் ஃபேஸ் ரியாக்ஷன்லருந்தே எவ்ளோ சீரியஸான விஷயம்னு என்னால புரிஞ்சிக்க முடியுது” என்ற அவனது சமாளிப்பில் அச்சந்தேகம் மேலும் வலுத்தது.
“நான் சாயந்தரம் வந்து பாக்குறேன். வேலைக்கு எதுவும் போக வேணாம். வீட்டுலயே ரெஸ்டு எடு” எனத் தாய்க்கு அறிவுறுத்தியவள், அடுத்து தம்பியிடம் நகர்ந்தாள் “எக்ஸாம் டைம்ல எதுக்கு இந்த விளையாட்டுலாம்? பத்திரமா இருக்க மாட்டியா?”
இளையவன் அவளின் முன்னிலையில் வெறுமனே தலையசைத்து வைத்தான்.
வாசலைப் பெருக்கியபடி அவர்களின் இல்லத்தைக் கண்காணித்த அமுதாவை மாது பார்த்துவிட்டாள் “அமுதாக்கா… மாரி தெருவுல சுத்துனா ஒரு வார்த்தை சொல்ல சொன்னேன்ல?”
“சொல்றேன், மாது” இவள் ஒப்புக்குக் கூறினாள்.
அங்கிருந்த அனைவரும் பேரமைதியுடன் செயல்பட்டனர். அதுவே மாதுவிற்கு விசித்திரமாகப்பட்டது. அவளறிந்த வரையில், அவர்கள் சாதாரணமாக உரையாடினாலே அடுத்த தெருவிற்குக் கேட்கும். இன்று காதும் காதும் வைத்தாற்போல பேசினர். அவர்களிடம் எந்நாளும் பொழியும் குதூகலத்தை மருந்துக்கும் காணவில்லை. அங்கிருந்து அவள் யோசனையோடே புறப்பட, அதை மதுவும் கண்டுகொண்டான். பக்கவாட்டுக் கண்ணாடி வழியே அவளைப் பார்த்திருந்தவனின் பார்வையில், ஒரு கட்டத்தில் வினோத் அகப்பட்டான். இவனைக் கண்டதும் அவனது தாடை எஃகு போல இறுகியது. நேற்றிரவு அவன் கேட்டறிந்த சங்கதி அப்படி!
***