ஏற்கனவே துரோகமெனும் நஞ்சைச் சுவைத்துக் கொண்டிருந்த மதுசூதனனுக்கு, அடுத்த அதிர்ச்சியை வாரி வழங்கியது முத்துமாரியிடமிருந்து வந்த அழைப்பு.
“மாமா, மாமா… அக்… அக்காக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. ஜி. ஹெச். ல இருக்கோம். உடனே வாங்க” மாரி ஒரே வரியில் அமிலத்தைக் கொட்டித் தீர்த்தான்.
அவ்வரி ஏற்படுத்திய அதீத அழுத்தத்தால் மதுவின் புலன்கள் ஐந்தும், அடுத்த சில நிமிடங்களுக்கு, மூளையின் கட்டளைகளுக்கு ஒத்துழைக்க மறந்து உறைந்துவிட்டன. பின் அவனே சுதாரித்து இருக்கையிலிருந்து எழுந்தான் “தீபக், கடையக் குளோஸ் பண்ணணும். சாவி எடுத்துட்டு வா. கஸ்டமர்ஸைக் கிளியர் பண்ணு”
“என்னாச்சு, பையா? நீங்க வீட்டுக்குப் போறதுனா போயிட்டு வாங்க. நான் கடையைப் பாத்துக்குறேன்” எவ்வித அலட்டலும் இன்றி சொன்னான் இவன்.
இவனை மதுவிற்கு ஐந்தாறு வருடங்களாகத் தான் தெரியும். இவன் சிறு தவறு இழைத்தாலும் மனம் எரிச்சல்படும். இவன் மீது அடிக்கடி நம்பிக்கை இழப்பு ஏற்படும். அதுவே மனோஜ் நெடுங்காலத்திற்கு முன்னரே அறிமுகமானவன்; தாய் மாமன் பணிக்குச் சேர்த்த ஆள்; பதின்வயது முதற்கொண்டே இந்த மது விடுதியில் தான் பணிபுரிகிறான்; வேலையில் அனுபவம் அதிகம் என்பதால் அதிகமாக ஆடுவான்; புது வேலையாட்களிடம் தன் ஆதிக்கத்தைக் காண்பிப்பான்; சம்பளத்தைத் தாண்டி, மாதாமாதம், வீட்டுத் தேவைக்கெனச் சொற்ப ஆயிரங்கள் கேட்டு மதுவை நச்சரிப்பான்; கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்க மாட்டான்; மீந்து போன சரக்குகளில் வாய் வைக்கும் பழக்கமும் உண்டு. அந்த அநாகரிக நடைமுறைகளை மது ஒரு நாளும் கண்டுகொண்டதே இல்லை. சில வாரங்களுக்கு முன்னதாகக் கூட, வீடு மாற்ற வேண்டும் எனவும் அதற்கு முன்பணம் செலுத்த பணம் தேவை எனவும் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் கடனாகக் கேட்டான். இவனுக்குக் குடிப்பழக்கமும் ஊதாரித்தனமும் உண்டு என்பதால் இவனிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு, இவனது மனைவியிடம் ஐந்தாயிரத்தை ரொக்கமாக வழங்கினான் மது. இப்படிப் பார்த்துப் பார்த்து தம்பியைப் போல வளர்த்தெடுத்தவன் இன்று பெரியளவில் காயப்படுத்திவிட்டான்.
அதனால் பாரமான இதயத்தைச் சமாளித்துக் கொண்டு, அவன் மருத்துவமனைக்குப் புறப்பட்டான். அங்குப் போய்ச் சேர்ந்த நேரம் மாதுவிற்குச் சிகிச்சை அரங்கேறிக் கொண்டிருந்தது. அர்ச்சனா ஒருபுறமும் மாரி ஒருபுறமும் நின்று கண்ணீர் வடித்தனர். முயன்று அவர்களுக்குச் சமாதானம் கூறிவிட்டு, மதி மாமாவிற்கு அழைப்பு விடுத்தான் மது. வீட்டினர் ஒவ்வொருவராக வந்தடைந்த பின்பே, அவனும் அர்ச்சனாவும் சற்று ஆறுதலாக உணர்ந்தனர். மாதுவின் உயிருக்குப் பங்கமில்லை எனத் தெரிந்த பின்னர், காலையில் வருவதாகக் கூறி பார்வையாளர்கள் அங்கிருந்து அகன்றனர். பின்னர் கடைச் சாவியுடன் அன்றைய தினத்தின் வருமானத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தான் தீபக். இவனிடமும் தான் போக்குவரத்திற்கென்று தனியே வாகன வசதியில்லை. இருப்பிடம் வாடகை வீடு தான். அண்டை மாநிலத்தில் இவனையே நம்பி ஒரு குடும்பமும் உள்ளது. இவனிற்கில்லாத பணத் தட்டுப்பாடா? இவன் ஏன் இந்தப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடவில்லை? மனோஜ் மட்டும் ஏன் அங்ஙனம் நடந்து கொண்டான்? இவனைக் கண்ட விநாடியில், இவ்விதம், மதுவின் நெஞ்சத்திற்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள்.
“பாபிக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொல்றாங்க?” தன்மையாக வினவினான் தீபக் கௌரா.
“பெருசா சிக்கல் இல்லை. ஒரு கால்ல தான் ஹெவியா அடிபட்டுருச்சு போல” உணர்ச்சிகள் வடிந்த நிலையில் அவன் பதில் இயம்பினான்.
அவனுடைய கரத்தின் மீது ஆதரவுக் கரம் நீட்டினான் இவன் “கவலைப்படாதீங்க, பையா. எல்லாம் சரியாகிடும். நான் உங்களோட துணைக்கு இருக்கேன்”
“வேணாம், தீபக். அத்தையும் மச்சானும் இருக்காங்க; பாத்துப்பாங்க. காவியா வீட்டுல தனியா இருப்பா. நீ கிளம்பு”
“பையா, இந்தப் பணம்… நீங்க வாங்கி வைக்கிறீங்களா? உங்க வீட்டுல கொண்டு போய்க் கொடுத்துரவா?” இவன் திருடர்களுக்குப் பயந்து இடையோடு கட்டிக் கொண்டு வந்திருந்த பணக்கட்டுகளைச் சுட்டினான்.
“உன் வீட்டுக்கு எடுத்துட்டுப் போ. நான் அப்பறமா வாங்கிக்கிறேன்”
“எங்க வீட்டுக் கதவு ரெண்டு தட்டு தட்டுனாலே உடைஞ்சுட்டு வந்துரும். எதுக்கு வீணா ரிஸ்க் எடுத்துட்டு? நான் அம்மாட்டயே ஹேன்ட்ஓவர் பண்ணிட்றேன். எனக்கு உங்க வீடு தெரியும்”
“கணக்கு?” அவனது கேள்வியில் தயக்கமே விஞ்சி ஒலித்தது.
“ஆன், பக்காவா எழுதி லாக்கர்ல பூட்டி வச்சிட்டேன். கடையில இருக்குற ரெண்டு ஷட்டரையும் சாத்தியாச்சு. லைட்லாம் ஆஃப் பண்ணியாச்சு. ஆல் டன்!”
இவனை நேருக்கு நேர் நோக்க இயலாமல் அவன் தரை நோக்கினான் “தீபக், மனசு ஒன்னும் சரியில்ல. ஒரு வாரம் கடைக்கு லீவு விடலாம்னு இருக்கேன். நீ காவியாவைக் கூப்டுட்டு, எங்கயாவது வெளியப் போறதா இருந்தா போயிட்டு வா”
“ஒரு வாரமா? உங்க கல்யாணத்துக்கே கூட நீங்க ரெண்டு நாள் சேத்து லீவ் விடலையே. எதுக்காக இப்போ வாழ்க்கையே வெறுத்த மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க. இன்னைக்கு ஒரு நைட்டு தூங்கி எழுந்திரிங்க. காலையில எல்லா கவலையும் பறந்தோடிப் போயிடும். கடைச் சாவி என்கிட்டயே இருக்கட்டும். காலையில கடையைத் தொறந்து வைக்கிறேன். அப்பறமும் லீவு விடணும்னு தோனுனா சொல்லுங்க. ஓகே தான?” இவன் பரிவாகப் பேசப் பேச, அவனது மன பாரம் கூடிக் கொண்டே போயிற்று.
அவன் ஏதும் மொழியாமல் சுவர் மீது சாய்ந்து அமைதியாக நின்றான்.
“நீங்க நல்ல மூட்ல இல்ல. ஸோ இப்பத்திக்கு உங்களைத் தொந்தரவு பண்ணாம கிளம்புறேன். பாபியக் கேட்டதா சொல்லுங்க. பை” இவன் அவனது தோள் தட்டி, கரம் பற்றி, ஆறுதல் உரைத்து, அருகில் இருந்தவர்களிடமும் விடைபெற்றான்.
அந்த இடைவெளியில் சிகிச்சை முடிந்து, இராமசாமியும் மாதுவும் பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தனர். இராமசாமி நெற்றியில் கட்டோடு வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டேயிருந்தார். அடுத்திருந்த படுக்கையில் மகள் மீளா மயக்கத்தில் படுத்துக் கிடந்தாள்.
“உடம்பு எப்படியா இருக்கு? தலை எதும் சுத்துதா?” அர்ச்சனா விழித்திருந்த கணவனை நலம் விசாரித்தார்.
“என்னை ஏன் காப்பாத்துனீங்க? அப்படியே விட்ருக்கலாம்ல” அவர் துக்கத்தில் குமுறினார்.
“குடிச்சுக் குடிச்சு மண்டை குழம்பிடுச்சா? என்னையா பேசிட்டுருக்க?”
“ஐயோ! பெரிய பாவம் பண்ணிட்டனே. பாவம் பண்ணிட்டனே. என்னால ஒரு உசுரு போய்டுச்சுடி” அவர் கதறினார்.
“என்னையா சொல்ற?” அர்ச்சனாவிற்கு அங்கமெல்லாம் உதறியது.
“நம்ம மாதுவோட… மாதுவோட வயித்துல இருந்த குழந்தை என்னால கலைஞ்சிருச்சு” அவர் கண்ணீர் விட்டுக் கரைந்தார்.
அந்நேரம் உள்ளே நுழைந்த மதுவிற்கு அவரது கூற்றைக் கேட்டு நெற்றி சுருங்கிற்று.
“லூஸு மாதிரி உளறாம கம்முனு இருயா” அர்ச்சனா சூழ்நிலை கருதி அவரை அடக்க முயன்றார்.
“புள்ளை என்னைக் காப்பாத்த வந்து அது அடிபட்டுக்கிச்சு. எவ்ளோ இரத்தம்! எவ்ளோ இரத்தம்! போட்ருந்த சீலை முழுக்க இரத்தத்துலயே குளிச்சிருச்சு. என்னால நடந்தத ஜீரணிச்சுக்கவே முடியல, அர்ச்சு” அவர் வேதனையில் தவித்தார்.
அப்போது அங்கு வந்த செவிலியோ அவரின் செய்கையால் எரிச்சலடைந்தார் “எதுக்கு இப்படிக் கத்திட்டு இருக்கீங்க? பேஷன்ட்ஸ்லாம் தூங்கிட்டு இருக்காங்கல்ல. உங்களைக் காலைல வரைக்கும் வச்சு மானிட்டர் பண்ணணும்னு டாக்டர் சொல்லிருக்காரு. அமைதியா இருக்க முடிஞ்சா இருங்க. இப்படிச் சத்தம் போட்டுட்டே இருந்தா, வீட்டுக்குத் துரத்தி விட்ருவேன்”
அந்த இரைச்சலில், புருவங்கள் முடிச்சிட, மாது மெல்ல இமைகள் திறந்தாள். கட்டு இடப்பட்டிருந்த தனது ஒற்றைக் காலை அவளால் உணரவே இயலவில்லை. அவள் கண் விழித்ததைக் கண்டு கொண்ட மது, ஓடோடி வந்து அவள் எழுந்தமர உதவினான்.
“எம்மா, உன் பொண்ணுக்கு எதாவது சாப்பிட வாங்கிக் கொடு. சுலபத்துல செரிக்குறதா பாத்துச் சாப்பிட வைங்க” இங்ஙனம் அர்ச்சனாவை ஏவிய செவிலி, அப்படியே மாதுவை நெருங்கி “மயக்கமோ, வாந்தியோ வந்தா சொல்லணும்; சரியா? நான் பேசுறது கேக்குதா முத?” என்றார்.
இவரின் சொல்லுக்குத் தலையசைத்தவள், நேரமெடுத்து “கேக்குது, சிஸ்டர்” என்றாள் கம்மிய குரலில்.
அவர் “குட்” என்றதோடு அடுத்த நோயாளியின் புறம் நகர்ந்தார்.
“உனக்கு ஒன்னும் ஆகல. நான் இருக்கேன்” என்று பதங்களின் மூலமாகத் தன்னவளுக்கு வலுவளித்த மது, “மாரி, வா” என்றபடி மச்சானைத் தன்னுடன் அழைத்துச் சென்று உணவுப் பொட்டலங்களோடு திரும்பினான்.
அவர்கள் வாங்கி வந்த உணவை மாதுவும் தொடவில்லை. இராமசாமியும் நாட்டம் செலுத்தவில்லை.
“சாப்பிடுயா. தனியா ஊட்டி விடணுமா உனக்கு? குழந்தையா நீ?” என்று கணவரை அதட்டியும் பயனில்லாமல் போக, அர்ச்சனா தன் மகளிடம் கெஞ்சலானார் “மாது, நீயாவது ஒரு வார்த்தை சொல்லுடி. இந்த மனுஷன் கொலைப் பட்னியா கெடக்காரு”
“ஆமா. கரு கலைஞ்சுருச்சு” என்றவளோ வேறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டு விசும்பினாள்.
அவளின் வாக்கில் மது ஒன்றும் விளங்காமல் விழியாய் விழித்தான். அதைச் செவிமடுத்த இராமசாமி மீண்டும் குற்றவுணர்வில் தள்ளாடலானார். பின்னர் அவ்விருவரையும் கெஞ்சிக் கூத்தாடி உண்ண வைப்பதற்குள் பெரும் பாடாவதியாகிப் போனது. மறுநாள் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து, மதுவே கவனித்தும் கொண்டான். அவளை நீராட்டுவதற்கு, உடுத்துவதற்கு மட்டுமே அத்தையார். மற்ற அனைத்திற்கும் கணவனே உடனிருந்து பணிவிடை புரிந்தான். திருமணமாகி இத்தனை நாட்களில் அவள் கூட அவனுக்காக இவ்வளவு செய்திருக்க மாட்டாள். அவன் ஏதோ அவளுக்கெனப் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பாதுகாவலன் போலவும் யுகம் யுகமாக அவளுக்குச் சேவை புரியவே காத்திருந்தவன் போலவும் நடந்து கொண்டான். சுருக்கமாகச் சொல்ல முற்பட்டால், அவளைக் கரங்களில் ஏந்தாத குறை தான்! அவள் அனுமதித்திருந்தால் அதையும் ஈடேற்ற ஆயத்தமாகவே இருந்தான் அவளின் கண்ணாளன்.
அடுத்து வந்த ஓர் இரவுவேளை…
“நான் எங்க அம்மாட்டயே போய்க்குறேன். என்னால உங்க எல்லாருக்கும் எவ்ளோ சிரமம்! இது வேண்டாமே” என்றாள் அவள் மிதமிஞ்சிய வருத்தத்துடன்.
“ஒரு தடவை இதையே நான் சொன்னதுக்கு, எப்படிச் சண்டை கட்டுன? நீ அம்மா வீட்டுக்கும் போ வேணாம்; ஆட்டுக்குட்டி வீட்டுக்கும் போ வேணாம். இதான் உன் வீடு. நீ இங்கத் தான் இருக்கணும்” மது உறுதியாக மறுத்தான்.
“நாளும் பொழுதும் என்னையே பாத்துட்டு உக்காந்துருக்கீங்களே. கடைய யார் பாத்துக்குறா?” அவள் விழிகளை உருட்டி வினவினாள்.
“ஒரு வாரம் கடை லீவ் விட்றதா இருந்தேன். தீபக் தான் அதெல்லாம் வேணாம்ணேன்னு சொல்லி, கடையைக் கவனிச்சுட்டுருக்கான். நான் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை விஸிட் அடிச்சிட்டு வந்தா போதுமானதா இருக்கு. அவன் அடுத்த மாசம் சொந்த ஊருக்குப் போறானாம். கல்யாணம் ஆனதுலருந்து இது தான ஃபர்ஸ்ட் டைம் அங்கப் போறது. திரும்பி வர மாசம் ஆனாலும் ஆகுமாம். அதுக்கும் சேத்து இப்பவே ஷிஃப்ட்டு பாக்குறான்”
அதிலிருந்த மறைமுக அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டாள் “ஓ! அவன் மேல இருந்த சந்தேகம் கிளியர் ஆயிடுச்சு போல”
“ம்ம்” அவன் தலையசைத்து ஆமோதித்தான்.
“அப்போ திருடுனது யாருன்னும் கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“ம்ம். நான் முன்னவே சொன்ன மாதிரி, நம்ம கடையில வேலை பாத்த ஒருத்தன் தான். அதோட அவனை வேலைய விட்டும் அனுப்பியாச்சு. கொஞ்சம் சலம்பல் பண்ணான். நமக்கும் வேற வழியில்லயே”
அந்தப் பாவி யாரென அவள் கேட்டறியவில்லை; அவனே பகரட்டும் எனப் பொறுமை காத்தாள் “தப்பு என் மேல தான். நான் கவனமா இருந்துருந்தா இவ்ளோ சங்கட்டம் ஆயிருக்காது”
அவனும் அதை மறுக்கவில்லை; இருப்பினும் அவள் மீது துளி கோபமுமில்லை. “இனிமே அலட்சியமா நடந்துக்காத. கவனமா இரு. ரெண்டு பேரும் தூங்கலாமா?” என்று வினவியவாறு அவளுடைய கால்களை உயர்த்தி, கட்டிலின் மேற்பரப்பில் வைத்தான்.
“எப்போ தான் இந்தக் கட்டு பிரிப்பாங்க? ஒரு கால்லைக் கட்டு போட்ருக்கறதே, என்னை யாரோ கட்டி வச்ச மாதிரி இருக்கு” அவள் அலுத்துக் கொண்டாள்.
“ரோட் கிராஸ் பண்ணும்போது ரெண்டு பக்கமும் பாத்துப் போகணும். இல்லைனா, இப்படித் தான் ஆகும். நீ செஞ்ச சாகசத்துக்குக் கால் உடையாம போச்சேன்னு சந்தோஷப்படு” மென்மையாகச் சிரித்தவன் அவளுக்குத் தலையணையை நேர்ப்படுத்திக் கொடுத்துவிட்டு அருகே படுத்தான்.
“மது… மேஜிக் பில்லோ வேணும்” அவள் தயக்கத்துடன் கேட்க, அவன் பெருமகிழ்வுடன் தனது கரத்தைச் சிறகு விரித்தான். அவ்விரு காதற்பறவைகளும் அப்பொழுதில் உடலளவிலும் மனதளவிலும் மிக நெருக்கமாக உணர்ந்தனர்.
அடுத்த நாள் அழையா விருந்தாளி ஒருவன் வந்து அவ்வீட்டுக் கதவைத் தட்டியிருந்தான்.
“வணக்கம்! மாதுளை இருக்காங்களா?” சீரான உடை அணிந்து, பவ்யமாகக் கேட்டு வைத்தான் அவன்.
“வாப்பா. நீ…” சிந்தாமணி கேள்வியாக இழுத்தார்.
“மாதுக்குத் தெரிஞ்சவன்”
“மாது, யாரோ உன்னைப் பாக்க வந்துருக்காங்க” என்று குரல் கொடுத்த அத்தையார் “இருப்பா. தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு சமையற்கட்டிற்கு அகன்றார்.
காலின் இரணம் முழுதாகக் குணமாகி இராததால் தாங்கித் தாங்கி வெளியே நடந்து வந்தாள் மாது. கண்ணெதிரே அவனைக் கண்டு அவளிற்கு அதீத திகைப்பே. அந்தக் கிராதகன் இவ்வளவு தூரம் வருவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“எனக்குக் கல்யாணம். வந்துரு” என்று கூறி அவன் அழைப்பிதழை நீட்ட, அவள் ஆவென்று பார்த்திருந்தாள்.
அத்தையார் அவ்விதழைக் கைகளில் பெற்றுக் கொண்டு அவனுக்கு அருந்த குடிநீர் தந்தருளி, அவனை வழியனுப்பி வைக்கலானார். அவள் அழைப்பிதழே கண்ணாக நாடாக் கட்டிலில் அமர்ந்துவிட, மது இல்லம் வந்து சேர்ந்தான்.
“வாட் ஈஸ் தீஸ்?” அவன் அநாயாசமாக அத்தாளைப் பிடுங்கி, அவளை இடித்தபடி அருகே அமர்ந்தான்.
“கணேஷ்னு ஒருத்தர்; காலேஜ் படிக்கும் போதுலருந்து ஃப்ரென்டு. அவருக்கு அடுத்த வாரம் கல்யாணமாம். இன்வைட் பண்ணாங்க” சொல்லும்போதே அவளின் உதடுகள் கட்டுப்பாட்டை இழந்து நடுக்கமுற்றன.
அவனிற்கு அந்தப் பெயரைத் தெரியும்; நன்றாகவே தெரியும். ஆயினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “உனக்கு வசதிப்பட்டா கல்யாணத்துக்குப் போகலாம். இப்ப வா. சாப்பிடலாம்”
கணவனுடன் ஒரே தட்டில் உண்டு முடித்து, படுக்கையில் விழுந்து விழிகளை மூடியவளுக்குக் கண்ணீர்க் கோடாய் வழிந்தது. அவனோ விழி மூடாமல் அவளைத் தான் பார்த்திருந்தான்; அவளுடைய நெஞ்சம் கனமுற்று கசிவதையும் கண்டு கொண்டான். அவளின் தவிப்பு இன்னதென, அவள் வெளிப்படையாகக் கூறுமுன்னே, அவனுக்குத் தெரிந்திருந்தது.
“மாது!” அவன் மிருதுவாக அழைத்தான்.
அதில் அவள் அஞ்சி ஒடுங்கவெல்லாம் இல்லை. அவனது உள்சட்டையைப் பிடித்திழுத்து, அவனுடைய நெஞ்சிலேயே முகம் புதைத்து அவனோடு மேலும் ஒன்றிக் கொண்டாள் பாவை.
அடுத்த இரு நாட்களில் அவளுடைய கட்டு பிரித்து அகற்றப்பட்டது; கால் வீக்கமும் கணிசமான அளவு குறைந்திருந்தது. அவளது விருப்பத்தின் பேரில் மது அவளைத் தாயகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
“உண்மையைச் சொல்லுடி, புள்ளையே!” அர்ச்சனா தன்னால் இயன்றவரை அவளை உருட்டி மிரட்டிப் பார்த்தார்.
“எந்த உண்மையைச் சொல்லணும்?” அவள் வீராப்பாக வினா வீசினாள்.
“பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்திப்புடும்டி”
“அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்னு இராமசாமி சொல்லிருக்காரு. உன் புருசன் இராமசாமி இல்ல. ஈ. வெ. இராமசாமி. அவரோட வாக்கு உண்மைன்னு ப்ரூவ் பண்றியே, மம்மி”
அவள் பேசிய பேச்சில் அவருக்கு மேல் மூச்சு வாங்கும் போலிருந்தது.
“கடவுள்ங்கறது ஒரு நம்பிக்கை. அவரை நம்பிக்கைக்காக மட்டும் பிடிச்சு வச்சுக்கோ. மத்தபடி, உன் கண்கட்டு வித்தைக்குக் கடவுள் பேரை இழுக்காத. அப்பா குடிச்சுச்
சீரழியுறதையா அந்த ஆண்டவன் விரும்புவாரு? அவரு மேலருந்து இறங்கி வந்து ஒன்னும் நம்ம விதிய மாத்தப் போறதில்ல. நம்ம வாழ்க்கைய நாமளே தான் முன்னேத்திக்கணும். அப்பாவோட நல்லதுக்காகத் தான செய்றோம். அப்போ நான் சொன்னது பொய்யில்ல. உண்மை” அவள் தன் கணவனின் வழியிலே பொய்யில் புலவரின், வாய்மை குறித்த, வாக்கினைப் பின்பற்றலானாள்.
அன்னையாரோ நச்செனத் தலையிலடித்துக் கொண்டார் “ஐயோ… படிச்சுட்டு கண்டதை உளர்றாளே!”
“உளர்றனா! உன்னைலாம் ஆயிரம் இராமசாமி வந்தாலும் திருத்த முடியாது, அர்ச்சனா. நீ உன் புருசனுக்கு உண்மையாவே இருந்துட்டுப் போ. இது தான் அவரோட கேடுகெட்ட குடிப் பழக்கத்த மறக்கடிக்கறதுக்கான ஒரே துருப்புச் சீட்டு. இதை மட்டும் கைநழுவ விட்டா, ஜென்மத்துக்கும் அந்தாளைத் திருத்த முடியாது. எனக்கு என் அப்பா திரும்ப வேணும். குடியால அவரை விட்டுப் போன தன்மானம், மரியாதை, ஒழுக்கம்னு எல்லாமே வேணும்” அவளின் கண்களில் எதிர்காலத்தைக் குறித்த ஆசை மின்னிற்று.
அவ்வேளை இராமசாமி வீட்டினுள் புகுந்தார். இப்போதும் அவர் குடியின் வசம் தான் இருந்தார். மாதுவைக் கண்டதும் குற்றவுணர்ச்சி பொங்கி வர “ஐயோ! ஐயோ! ஐயோ!” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“மாமா!” பதறிக் கொண்டு மது அவரிடத்தில் விரைய, அவர் விட்டேத்தியாகத் தரையில் உட்கார்ந்துவிட்டார்.
“நான் செத்துர்றேன். நான் உயிரோடயே இருக்கக் கூடாது” அவர் மீன் போல கிடந்து துள்ளினார்.
“மாமா, அப்படிலாம் பேசாதீங்க. நிதானமா இருங்க” அவன் அவரின் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்படுத்த முயன்றான்.
“என் சாமிக்குத் துரோகம் பண்ணிட்டனே. அந்த ஆத்தா என்னை மன்னிப்பாளா? மாப்ள! என்னை மன்னிச்சிடுங்க, மாப்ள!” என்றவாறு அவனது காலைத் தொட முனைந்தார் அவர்.
“ஐயோ! மாமா!” அவன் பதறி இரண்டடிகள் பின்வாங்கினான்.
“மாது! அம்மா, மாது…” அவர் தவழ்ந்த வண்ணம் நகர, அர்ச்சனா தன் மகளை வில்லியாக உருவகித்து நோக்கினார்.
இந்நாடகங்கள் யாவும் தந்தையின் நலத்திற்காகத் தானே என எண்ணி, தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவரருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.
“அப்பா, போதும். இப்போ நீங்க அழறதால எதுவும் திரும்ப வரப் போகுதா?”
அவர் திருப்பி அடிபட்ட பார்வை பார்க்க, அவளுக்கும் வலித்தது.
தனது சிரமத்தைத் தனக்குள்ளே புதைத்து பார்வையைத் தாழ்த்தியவள், அவரின் கரங்களை ஆதரவாகப் பற்றிப் பேசலானாள் “நான் ஒன்னு கேப்பேன். செய்வீங்களா?”
அவளின் சொல்லில் அவர் விருட்டென நிமிர்ந்தார். மகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் உத்வேகம் அவரிடம் மூண்டது.
“தயவு செஞ்சு இந்தக் குடிய விட்ருங்க, அப்பா. நானும் அம்மாவும் ஓராயிரம் தடவை இதுக்காகக் கெஞ்சிட்டோம். ஆனா, இது தான்பா கடைசி தடவை. இந்த முறையும் நீங்க மாறலைனா, வேற வழியே இல்லை. என்னையும் இவரையும் நீங்க பாக்குறது இதான் கடைசியா இருக்கும். அப்பறம் நாங்களும் இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம். நீங்களும் எங்களைத் தேடிட்டு வராதீங்க” என்றவள் தன்னுடைய கணவனைக் கைப்பிடித்து இழுத்தாள்.
ஒரு விநாடி தாமதித்து “ஃபோன் பண்ணுங்க, அத்தை. பேசிக்கலாம்” என்றவன் எப்போதும் போல் அவள் இழுத்த இழுப்பிற்குச் சென்றுவிட்டான்.
வீட்டினை அடைந்து, வாகனத்தை நிறுத்தி, சாவியை உருவியவன் சற்று முன்பு நிகழ்ந்ததைப் பற்றி பேசலாம் என்ற யோசனையோடே அறைக்குள் பரபரத்தான். அங்கோ அவள் சூழ்நிலை மறந்து, அலைபேசியும் கையுமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளின் புன்னகை முகம் கண்டு, அவன் தன் வேகத்தை மட்டுப்படுத்தினான்.
“யாரு?” இயல்பாக அவன் வினா எழுப்பினான்.
“நம்ம சத்யா. என்னைப் பாக்க வரவான்னு கேட்டாரு. வேணாம்னுட்டேன். இந்த நிலைமைல யாரும் என்னைப் பாக்குறதயே நான் விரும்பல” அவள் நேற்றிரவு அழுததன் பின்னணியும் இது தான். போயும் போயும் இந்தக் கதியிலா முன்னாள் காதலனை எதிர்கொள்ள வேண்டும் என்ற சுய பட்சாதாபம். கடந்த காலத்தைக் குறித்து கணவனிடம் மனந்திறவாமல் இருக்கிறோமே என்கிற மனத் தாங்கலும் சேர்ந்து கொண்டதால் வெளிப்பட்ட அழுகை அது. அவனிடத்தில் உள்ளும் புறமும் படம் போடும் வாய்ப்பு எப்போது கிட்டுமோ என்ற சிந்தனையுடன் அவள் அவன் விழி நோக்கிச் செப்பினாள் “வேலை எப்படிப் போகுதுன்னு அவர்ட்ட கேட்டேன். அங்கயும் கூப்டுப் போய் மணி அடிக்க விட்ருவாங்களோன்னு பயமா இருக்காம். அப்படி ஒரு மெசெஜ் பாத்ததும் சிரிப்பு வந்துருச்சு”
அவனும் அந்தப் பதிலைக் கேட்டுச் சிரித்தான். “அது சரி… நீ எப்போ கவெர்ன்மென்ட் வேலைல போய் உக்காரப் போற?” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி.
“தெரியலையே” அவள் கரங்களை விரித்தாள்.
“நான் கேட்ட அந்த பிசினெஸ் ஐடியா?”
“யோசிக்கணும்”
“நம்ம கல்யாண வாழ்க்கை?”
“நல்லா தானே போயிட்டு இருக்கு” அவளுடைய அந்த விடையில் மட்டும் அத்துணை உறுதி தெரிந்தது.
“க்க்கும்” அவனோ சலிப்புற்றான்.
“என்ன?”
“நீ முதல் இராத்திரில சொன்னது ஞாபகம் வந்துச்சு. பேசாம நானே நடத்திக்கலாம்னு இருக்கேன்” அவன் கூர்பார்வையோடு இயம்ப,
உள்ளம் படபடத்தாலும் தன் உணர்ச்சிகளுக்கு வேலியிட்டு அவனைக் கூர்ந்தவள் “மது!” என்றழைத்தாள் அழுத்தமாக.
அவன் சட்டெனப் புன்னகையை உதிர்க்கவும் அக்கணம் தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சே திரும்பிற்று.
“நீங்க ரொம்ப மோசம்!” அவள் அவனின் தோள் தட்ட, அதில் அவன் குலுங்கிச் சிரிக்க, தம்பதியர் இருவரும் வாய்விட்டுக் கலகலத்தனர்.
***