சற்று நேரத்திலேயே மாதுளை உறங்கிவிட, மதுசூதனனின் அலைபேசி அலறியது. அதை எடுத்து நோக்கியவன் அவசர கதியில் அர்ச்சனாவின் இல்லத்திற்குச் சென்றான்.

அங்கே “மாப்ள! என்னால குடிக்காம இருக்க முடியாது, மாப்ள. குடியை நிறுத்தணும்னு நினைச்சாலே கையெல்லாம் நடுங்குது. கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது. இது எதுவும் மாதுளைக்குத் தெரிய வேணாம், மாப்ள. எனக்கு என் பொண்ணு வேணும். எனக்கு என் குடும்பம் வேணும்” என்றபடியே இராமசாமி கிறங்கி விழப் போனார்.

உடனடியாகத் தாங்கிப் பிடித்தவன் “மாரி, தூக்கு. தூக்கு” என ஏவ, இருவருமாய்ச் சேர்ந்து அவரை ஒரு நான்கு சக்கர வாகனத்தில் அள்ளி நிரப்பினர்.

அடுத்த நாள் பணி முடித்துத் திரும்பிய மாதுவின் வாசம், அன்னை வீட்டுப் பக்கம் வீசியது.

சிறிது நாழி அன்னையாரிடம் பேசியிருந்துவிட்டு “அப்பா எங்கம்மா?” என்று அவள் வினவ, அவரிடம் பதிலில்லை.

“அம்மா… எம்மேல கோவமா இருக்கியா? அப்பா எங்கன்னு கேட்டேன்” அவரை உலுக்கியெடுத்தாள் மகள்.

“அவரு வெளியூர் போயிருக்காரு. மாப்ள உன்ட்ட சொல்லலையா?”

“ம்ஹூம்”

“நீங்க ரெண்டு பேரும் எதைத் தான் பேசிப்பீங்களோ? எனக்கும் முழு விவரம் தெரியல. மாப்பிள்ளைட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்று அவர் இயம்பவும் மாது மூளையைக் கசக்கலானாள்.

அவள் தனது அலைபேசியை எடுத்து அழுத்த, கணவனவன் அழைப்புகள் எதையும் ஏற்கவில்லை. தீபக் தன்னுடைய பூர்வீகத்திற்குச் சென்றிருப்பதால் வேலைப் பளு அதிகமிருக்கும் என்று மது கூறியது நினைவில் மீண்டது. அத்துடன் தங்களின் மது விடுதிக்குப் புறப்பட்டவள், வேலையாள் ஒருவனிடம் தகவல் தெரிவித்துவிட்டு மொட்டை மாடியில் காத்திருந்தாள். நேரம் கழித்து மது வந்து சேர்ந்த போது, சுற்றிலும் இருள் கவியத் துவங்கி இருந்தது‌.

“அப்பா எங்கப் போனாரு, மது?” அவளின் விழிகள் சிறு பிள்ளையின் தேடலைப் பிரதிபலித்தன.

“இருக்காரு. நல்லா தான் இருக்காரு. ஏன் கேக்குற?”

“என்ட்டயே சீக்ரெட் மெயின்டய்ன் பண்றீங்களா?” கண்டிப்புடன் அவள் விழிகளை உருட்டினாள்.

“ஏன்? உன்கிட்ட ஒவ்வொன்னுத்தையும் சொல்லிட்டுத் தான் செய்யணுமா? சுயமா நான் எந்த முடிவும் எடுக்கக் கூடாதா?” வேண்டுமென்றே சொற்களில் வன்மையைக் கூட்டினான் அவன்.

“நிஜமாவே அப்பா பத்திரமா தான் இருக்காரா?”

“ஆமா. என்னை நம்பு”

“நம்பிக்கைலாம் இருக்கு…”

“பின்ன ஏன் இவ்ளோ தூரம் வந்த?”

“எனக்குத் திடீர்னு உறுத்தலாயிடுச்சுங்க. உங்களை அன்னைக்குக் காயப்படுத்துனேன்ல. எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொன்னேன். உங்களைப் பிரிச்சுப் பேசுனேன். இன்னைய வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேக்கல. நானும் மன்னிப்பு கேட்டுடணும்னு தான் நினைச்சேன். அடுத்தடுத்து நடந்த சம்பவத்துனால, மனசுல நினைச்சதைப் பரிமாறிக்க முடியல. நான் அந்தளவு மோசமானவளா இருந்தும் நீங்க இப்போ வரைக்கும் நல்ல மருமகனா, நல்ல கணவனா தான் நடந்துக்குறீங்க”

அவன் ஒற்றைக் கரத்தை இடையில் தாங்கி, மற்றொரு கரத்தைக் காற்றிலாட்டினான் “என்னாச்சு உனக்கு? எதுக்காக இப்ப இவ்ளோ விளக்கம் கொடுத்துட்டு இருக்க?”

“ஐ’ம் ஸாரி, மது‌. இத்தனை நாளா உங்களைப் புரிஞ்சுக்காம பேசுன எல்லா வார்த்தையையும் வாபஸ் வாங்கிக்கிறேன்”

“பரவால்ல. ஏதோ கோபத்துல தான அந்த மாதிரிலாம் பேசுன. மன்னிச்சு விட்டுரலாம். ஓகே தான?” அவன் பெருவிரலை உயர்த்திக் கேள்வி எழுப்பினான்.

புன்சிரிப்போடு தலையசைத்தவள் வெளியே பார்வையை நீளவிட்டாள் “பாருங்களேன். இங்கருந்து பாத்தா நம்மூர் பஸ் ஸ்டான்ட் தெரியுது. அதோ அங்கத் தான் நான் காலேஜ் பஸ் ஏறுவேன்”

அவன் அவளையே கண்ணுற்றபடி “ம்ம்ம்” கொட்டினான்.

“அங்கப் பாருங்க. மாரியோட ஸ்கூல் யூனிஃபார்மைப் போட்டுட்டு கூட்டமா பசங்க நிக்குறாங்க. இன்னையோட எக்ஸாம் முடியுதில்ல. நாமெல்லாம் இங்க் அடிச்சு விளாடுவோம். இதுங்களப் பாருங்க. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி, செல்ஃபியா எடுத்துத் தள்ளுதுங்க. அந்தக் கும்பலுக்குள்ள தான் நம்ம மாரியும் இருப்பான்.‌ கால் வலினால அவனைச் சரிவர கவனிக்க முடியாம போச்சு. அவனை ஒரு நாள் கூட படிக்க வைக்கவும் இல்லை. பரீட்சைல முட்டை வாங்குறானோ, என்னமோ!” ஒரு தமக்கையாக இளையவனை எண்ணிக் கவலையுற்றாள் அவள்.

“அவன் எப்படியும் பாஸ் ஆயிடுவான். வருத்தப்படாத. எக்ஸாம் பாஸ் பண்ணிட்டான்னா, அவனுக்கு ஒரு ஃபோன் வாங்கிக் கொடுத்துருவோமா?”

“அவன் இன்னைக்குத் தாங்க லெவென்த்தே முடிச்சிருக்கான். அவனுக்கு எதுக்கு ஃபோன்லாம்?”

“ரொம்ப நாளா அவனும் கேட்டுட்டு இருக்கான். பாவமில்லையா? அவன் செட்டு பசங்க எல்லாரும் வச்சிருக்கப்போ, அவனுக்கு வலி வருத்தம் இருக்காதா?”

“உங்ககிட்ட ஃபோன் கேட்டானா அவன்? அவன்ட்ட நான் பேசிக்கிறேன்”

“அவன் அவங்க மாமாட்ட கேக்குறான். உனக்கு ஏன் பொத்துட்டு வருது?”

“ஆன், மாமா மெதுமெதுவா அக்காவோட பொசிஷன டேக் ஓவர் பண்ணிட்டே வராரே. அதான் போறாமையா இருக்கு” இதழ்களைச் சுளித்து விரித்தாள் பாவை.

“அடியே! கடமை முடிஞ்சுதேன்னு சந்தோஷப்படு”

“சந்தோஷம் இல்லைனு யார் சொன்னது?”

“ம்ஹூம்ம்!” அவன் அவளை நெருங்கி நிற்க, அவள் ஆதரவிற்குத் தடுப்புச் சுவற்றை நாடினாள்.

“பன்னெண்டாம் வகுப்பு முடிச்சதும் வாங்கிக் கொடுங்க. நான் தடுக்க மாட்டேன்”

தன்னுடைய சட்டைக் கைகளை உயர்த்திவிட்டவன் “தடுத்துத் தான் பாரேன்” என்றவாறு அவளுடன் காதல் சீண்டலில் இறங்க முனைந்தான்.

அவளோ தவிப்புற்று, வியர்வை துளிர்க்கும் உதட்டின் மேற்பகுதியைத் துடைத்துக் கொண்டாள் “மது, உங்கள்ட்ட ஒன்னு சொல்லணும்”

“ஷ்ஷ்ஷ்” ஆழமான அதட்டலோடு அவளுடைய அடர் சிவப்பு அதரங்களில் விரல் வைக்க முற்பட்டான் அவன்.

முத்தத்திற்கான அனைத்து அனுகூலங்களும் கூடி வந்திருந்த அச்சூழ்நிலையில் ஒரு குறுக்கீடு. படிக்கட்டுப் பகுதியில் இருந்து பணியாள் ஒருவனின் கூக்குரல் மேலெழ, அவளை விடுத்து ஓரடி தள்ளி நின்றவன் ஒற்றை விரலால் தலையைக் கீறிக் கொண்டான்.

“கடமை உங்களை அழைக்குது. போங்க. போயிட்டு வாங்க” எனச் சிரிப்பு பெருக மொழிந்தவள், விட்டால் போதுமென வீட்டிற்கு ஓடி வந்துவிட்டாள்.

தங்களின் அறைக்குள் நுழைந்தவள் நீராடி முடித்து மாற்றுச் சேலைக்குள் புகுந்தாள்; நெற்றி நிறைய பொட்டு வைத்தாள்; மல்லிகையும் ரோஜாவும் கலந்து சூடிக் கொண்டாள்.

சில மணி நேரங்களில் அவன் வீடு வர, “என்னடா இது நாத்தம்?” என்றார் தாயார் எடுத்தவுடனேயே.

“சொல்றேன்மா” என்றவன் உட்சென்று ஆடை மாற்றலானான்.

உள்ளே இருந்தவளுக்கு அவன் மீதிருந்து மது வாடை குப்பென வீச, அவனைக் கடந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். அவன் உடை மாற்றிவிட்டு திரும்பியபோது அவளை அங்குக் காணவில்லை. அவன் வரவேற்பறையை வந்தடைய பழைய சுடிதாரில் உட்கார்ந்திருந்தவள், நிதானமின்றி தொலைவியக்கிப் பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தலானாள்.

“மாது!” அவனது அழைப்பிற்கு அவள் செவி சாய்க்கவில்லை.

அன்னையார் சமையற்கட்டிலிருந்து மகனுக்குச் சைகை செய்யலானார். “அவளே இன்னைக்குத் தான் சந்தோஷமா இருந்தா. அதுக்குள்ள உனக்குப் பொறுக்காதே‌. எந்த வினையயாச்சும் இழுத்துட்டு வந்து தான் நிப்பியாடா?” என்று அவனை வன்மையாகக் கடிந்து கொண்டார்.

அந்தப் பேச்சு மாதுவின் செவிகளையும் சென்றடைந்தது.

“நான் என்னமா செய்ய? அந்த மனோஜ் குடிச்சிட்டு வந்து பிரச்சனை பண்ணிட்டான்‌. என் மேல அவன் உருண்டு பிரண்டதுல இப்படி ஆயிடுச்சு. ஒரு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறான். அவன் செஞ்சது நம்பிக்கைத் துரோகம்மா. அதை என்னால மன்னிக்க வேணா முடியும்; மறக்க முடியாது. பழைய மாதிரி அவனோட கொஞ்சிக் குலாவவும் முடியாது”

தாயின் சொல்லாடலில் அக்கறை கசிந்தது “அடி தடியா என்ன?”

“அதெல்லாம் இல்லமா” அவன் சமாதானம் பறைந்தான்.

“பணத்தையும் திருடுவானாம்; பிரச்சனையும் பண்ணுவானாமா? பொறம்போக்கு! அவனுக்கு எத்தனை நாளு என் கையால சோறு போட்டுருப்பேன். இதான் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றதுங்குறது. இந்தக் கன்றாவிக்குத் தான் யாரையும் முழுசா நம்பக் கூடாதுன்னு சொல்றேன். நீ கேக்க மாட்டேங்குற”

“இது தான் சாக்குனு ஆரம்பிச்சுடாத. ஏற்கனவே நொந்து போயிருக்கேன்” அவன் சட்டையின் மேல் பொத்தானைத் துளைக்குள் சிக்க வைத்தபடி, தோள்களைக் குலுக்கினான்.

சிந்தாமணி விழிகளை உருட்டி மருமகளைச் சுட்டிக் காட்டினார் “பதமா சொல்லிப் புரிய வையு”

அவன் தயக்கத்தோடு அவளருகில் வர, அவளோ பட்டென எழுந்து அறைக்குள் அடைந்து கொண்டாள். நிராதரவாகத் தாயாரை ஏறெடுத்தவன் பிழைப்பைப் பார்க்கும் நோக்கில் மது விடுதிக்குப் புறப்பட்டான். அன்றிரவு அவன் இல்லம் வந்தடைய, அன்னையாரும் சுலோவும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். மனைவி அவனது வாகனச் சத்தத்தைக் கணித்து வெளியே வந்தாள்.

அவள் கடமையே என உணவு பரிமாற, “நைட்டிலாம் போட்ருக்க. உனக்குத் தான் புடிக்காதாச்சே?” என்றான் அவன் தணிவான குரலில்.

“பிடிக்கலைன்னாலும் சில விஷயங்களைத் தவிர்க்க முடியறதில்லயே. என்ன பண்றது? எல்லாத்தையும் சகிச்சுட்டு…” அவள் எச்சிலைக் கூட்டி மீதியைத் தொண்டைக்குள் விழுங்கினாள்.

“முழுங்காம சொல்லு”

“என் வாயைக் கிளறாதீங்க. மறுபடி மறுபடி உங்களைக் கஷ்டப்படுத்த நான் விரும்பல” பதங்கள் வீச்சோடு வந்து விழுந்தன.

“ஸாரி” அவன் கனிவாய் மொழிந்தான்.

பெருமூச்சொன்றை இழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் “சாப்பிட்டு உள்ள வாங்க” என்று சொல்லி அகன்றாள்.

உண்டு முடித்து, மீசையை நீவிக் கொண்டே உள்நுழைந்தவன் “இங்கப் பாரு” என்றவாறு ஒரு விளக்கப்படத்தை நீட்டினான்.

“என்னது இது? ஏதோ வீடு மாதிரி தெரியுது”

“நம்ம வீடு தான்”

அதைக் கண்டு அவளுக்கு அளவிலா வியப்பு மேலிட்டது “ரொம்ப பெருசா இருக்கே. நமக்கு ரெண்டு மாடி தேவை தானா?”

“என்னால கட்ட முடியாதுன்னு நினைக்கிறியா?”

“உங்களால முடியாதது எதுவும் இருக்கா? உங்களுக்கு எது சரின்னு தோனுதோ செய்யுங்க”

“உனக்கும் இது பிடிக்கணும். இந்தப் புது வீட்டை உன்னோட கனவா நீ மாத்திக்கணும். அப்போ தான் ரெண்டு பேருக்குமே திருப்தி” என்றவன் வினைகெட்டு அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் அவளுக்கு விவரித்தான்.

“நல்லாருக்கு, மது. இதுக்கேத்த இடம் நம்மள்ட்ட இருக்கா?”

“நாளைக்கே உன்னை நேருல கூப்டுப் போய்க் காட்டுறேன்”

“இந்தப் படத்தைக் காட்டி அத்தைட்டயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க”

“அவங்கள்ட்ட கேட்டா போதுமா? இன்னும் என் தங்கச்சிங்கள்ட்ட கேக்கணும்‌. வீட்டு மருமகங்க கிட்ட கேக்கணும். என்னோட அத்தை, மாமாட்டயும் கேக்கணும்” என்று அவன் அவளுடைய குடும்பத்தாரையும் கணக்கில் எடுத்தான்.

அதில் அவளின் மனம் மலைத் தேனாய் இனிக்க “கேளுங்க. கேளுங்க” என்றுரைத்து, புன்னகையால் அவனது நெஞ்சைத் தைத்தாள் தையல்.

ஒரு சுப தினத்தில் பூமி பூசைக்கு ஏற்பாடாக, அவன் அவளைப் போல அல்லன் என்று நிரூபித்தான்; சொந்த பந்தங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். அவனுக்கு மதிப்பு கொடுத்து ஒருவர் விடாமல் வந்து சேர்ந்தனர்‌. சென்னையில் இருந்து சுதாவும் சுரேஷும் வந்திருந்தனர். சத்யா மற்றும், நடுவில் காணாமல் போயிருந்த, இராமசாமி கூட வருகை தந்திருந்தனர். அவரிடம் இன்றளவு நிறையவே மாற்றங்கள் தெரிந்தன. மது விடுதியின் பணியாளர்கள் பலரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி முடித்து தம்பதியர் இருவரும் மது விடுதிக்கு நடந்தனர். வார நாளின் பகல்வேளை என்பதால் முதல் மாடியில் கூட்டம் குறைவாக இருந்தது. இரண்டாவது மாடி முற்றிலும் காலியாக இருக்க, குளிர் சாதனத்தை உயிர்ப்பித்து இருக்கையின் மீது சாய்ந்து நின்றாள் மாது. அங்கிருந்த சுவற்றில் ஓர் ஓவியம் தீட்டப்பட்டிருக்க, அன்று தான் அதை முழுமையாகக் கவனித்தாள் அவள். அங்கே ஓர் ஆண் முகம் தரித்த ஆலமரம் சாந்தமாக எழுந்தருளி இருக்க, அதில் ஒரு பறவை அமராமல் போக்கு காட்டியது. அதன் நடுப்பகுதியில் ஒரு வாசகம் இடம்பெற்றிருந்தது.

“சிறு பறவையின் சுமை தாங்குமா ஆலமரம்!” அவள் வாய்விட்டுப் படித்தும் அர்த்தம் ஒன்றும் பிடிபடவில்லை.

அந்நேரம் எலுமிச்சையும் சோடாவும் கலந்து குளிர்பானம் தயாரித்துக் கொண்டு வந்தான் மது. அவளுக்கு ஒரு குவளையைத் தந்துவிட்டு அவனும் ஓவியத்தை உற்றுநோக்கினான்‌.

“இது பாக்கவே ரொம்ப நல்லாருக்குங்க. நெட்ல இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்தீங்களா?”

“இங்க இருக்குற ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு ஆர்ட்டும் என்னோட சொந்த யோசனை. சிலது மட்டும் அனுஷாவோட இரசனை”

அனுஷாவைக் குறித்த உரையாடலை அவள் கவனமாகத் தவிர்த்தாள் “எப்படி இது உங்க மூளைல உதயமானுச்சு? இந்தக் கவிதையும் உங்களோடது தானா?”

“இதைக் கவிதைனு சொல்ல முடியாது. என்னோட எண்ணம்னு வேணா சொல்லலாம்”

அவள் அமைதியாக அதையே கண்ணுற, அவன் அவளது தோளில் கரமிட்டு வளைத்தான்.

“இந்த ஆலமரம் நானு. இந்தப் பறவை… என்னோட ரோஜாப்பூ இரவிக்கைக்காரி” என்ற அவனின் கூற்றில் அவள் ஆவேசப்பட்டு விலக, அதற்கு இடங்கொடாமல் அவளை இழுத்துப் பிடித்தான் அவன் “ஹே!”

“அனுஷாவப் பத்தி பேசுனீங்க. பொறுத்துக்கிட்டேன். தயவு செஞ்சு உங்க எக்ஸைப் பத்திலாம் பேசாதீங்க”

“எக்ஸா? யாரு சொன்னது அவ என் எக்ஸுன்னு? நாங்க இப்பவும் காதலிச்சுட்டுத் தான் இருக்கோம்”

அவளுக்குச் சட்டென முகம் மாறிற்று‌. கண்கள் இரண்டும் உணர்ச்சிப் பெருக்கில் கலங்கிக் கொண்டு வந்தன.

“மாது… நீ சரியான மக்குப் பொண்டாட்டிடி” அழுத்தமாகக் கூறி அவளின் கன்னத்தை வருடியவன், அவளை இருக்கையில் அமர்த்தி தானும் அமர்ந்தான். பின் “அன்னைக்கு மொட்டை மாடில வச்சு ஏதோ சொல்லணும்னு சொன்னியே. முதல்ல அதைச் சொல்லு. கேப்போம்” என்றான் சாவகாசமாக.

“இப்போவா?”

“பின்ன எப்போ?”

“நான் சொல்லப் போற விஷயத்துனால நீங்க அப்செட் ஆனாலும் ஆவீங்க”

“நீ முன்னவே மூஞ்சைத் தூக்கியாச்சு. அதனால, தாராளமா நீ பேச நினைக்கிறதைப் பேசலாம்” கால் மேல் காலிட்டு தோரணையாய் நாசியை நீவினான் அவன்.

“அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்ல; கணேஷ். அவரு… அவரு… ஆக்சுவலா…” அவளின் அழுகையும் சோகமும் அதிகரித்ததே தவிர வேறொன்றுமில்லை.

“மயிலு, என்னடி? நீ இவ்ளோ வீக்கா? எதுக்கெடுத்தாலும் ஓன்னு ஒப்பாரி வைக்கிற?”

“என்னால முடியல, மது. ஐ கான்ட்” அவள் குலுங்கி அழுதாள்.

“சரி. நீ எதும் சொல்ல வேணாம். இந்தப் பேச்சை இதோட விட்ரலாம்”

“என்னால சொல்லாம இருக்க முடியல. குற்றவுணர்ச்சியா இருக்கு. உங்களை ஏமாத்துறனோன்னு தோனுது. அசிங்கமா இருக்கு”

அவன் அவளின் கண்ணீரைத் துடைத்தான் “ம்ச்ச்… மாது… நான் ஆரம்பத்துலயே இதெல்லாம் சொல்லிருக்கணும். எனக்கு உன்னைப் பத்தி தெரியும். ‘அ’லருந்து ‘ஔ’ வரைக்கும். எல்லாமே தெரியும்”

“சத்தியமா புரியலைங்க” அவள் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

“நமக்கு நடந்தது அரேஞ்ஜ் மேரேஜே இல்லைங்குறேன்”

அவளின் நெற்றி சுருங்கி உதடுகள் பிளக்க, முகம் தெளிவற்ற தன்மையைச் சுமந்து காட்சியளித்தது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு…

அப்போது சுதாவிற்குத் திருமணமான புதிது. இவள் மட்டும் தனியே அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். இவளை சென்னைக்குப் பேருந்து ஏற்றி விட பேருந்து நிலையம் சென்றான் மது. தங்கை கழிப்பறைக்கு என நகர, இவன் அங்கிருந்த இரும்பு இருக்கையில் இடம்பிடித்தான்‌. அவ்விடம் ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பள்ளி மாணவியைச் சீண்டிக் கொண்டிருக்க, அந்த அநீதியைக் கவனித்த இவனுக்கு எரிச்சல் மூண்டது.

“ஹலோ! என்ன பண்றீங்க?” இவன் அடித் தொண்டையில் இருந்து சீறினான்‌.

“எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ பொத்திட்டு உன் வேலையைப் பாரு. அது எனக்குத் தெரிஞ்ச பொண்ணு தான்” என்றான் அந்தக் கயவன் திமிராக‌.

அந்த மாணவி மிகுந்த பயத்தில் வாயடக்கி நின்றாள்; மதுவைக் கூட நிமிர்ந்து பாரவில்லை. இருக்கையில் மேலும் சாய்ந்தமர்ந்த இவன், தனது அலைபேசியைக் கையிலெடுத்தான்.

அந்த எச்சில் புத்தி உடையவன் அச்சிறுமியைத் தொட முயல, “நீ நடத்து, ராஜா!” என்றபடி காணொளிப் பதிவைத் தொடங்கியிருந்தான் மது.

அதைக் கண்டு கொண்ட அவனுடைய கரங்கள் தாமாகப் பின்வாங்க, அச்சிறுமி அப்போதும் மௌனம் சாதித்தாள்.

‘கூச்சப்பட்டுட்டு இந்தப் பாப்பா நாலு பேரைக் கூப்பிடவும் மாட்டேங்குது. தப்பிச்சு ஓடவும் மாட்டேங்குதே. வீட்டுல என்ன தான் சொல்லிக் கொடுத்து வளத்தாங்களோ!’ என்று நொந்து கொண்ட இவன், அவளைப் பாதுகாப்பதென உறுதியெடுத்தான்.

அந்நாதாரி தன் காரியம் ஈடேறாத நிராசையால் பத்தடி தள்ளிச் சென்று, இவனை முறைத்த வண்ணமே புகை பிடிக்கலானான்.

அங்கிருந்த சின்னஞ்சிறியவர்கள் அந்த நச்சுப் புகையால் இருமத் தொடங்க, அக்கணம் ஓர் உரிமைக் குரல் எழும்பியது “ஹலோ, மிஸ்டர்! இப்படிப் பொது இடத்துல நின்னு ஸ்மோக் பண்ணாதீங்க. குழந்தைங்க, ஸ்டூடன்ஸ்லாம் இருக்காங்க; பாருங்க”

மதுவினால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனோ அவளிடம் கனலைக் கக்கினான் “எனக்கு ரூல்ஸ் போட நீ யாரு? உனக்கு அந்த உரிமையை யார் தந்தா?”

“நான் ரூல்ஸ் போடல. உங்களுக்கு மேனெர்ஸ் சொல்லித் தந்தேன். அவ்ளோ தான்” அவள் நிதானத்தோடும் கூரிய பார்வையோடும் செப்பினாள்.

“அக்கா, வேணாம்க்கா. நமக்கெதுக்கு வீண் வம்பு? சும்மா இருக்கா” என்று முணுமுணுத்தான் அருகிலிருந்த மாரி.

“பொது இடத்துல புகை பிடிக்கக் கூடாதுங்குறது காமன் சென்ஸ். ஈஸியா கத்துக்கலாம். முயற்சி பண்ணுங்க” அவனிடம் அவள் தன் வாதத்தைத் தொடர்ந்தாள்.

“அதிகமா பேசாத. எனக்கு டென்ஷன் ஆகுது. அப்பறம் நான் என்ன செய்வேன்னு…” புகையிலைக் குச்சியைப் பிடித்திருந்த விரல்களால் அவன்‌ தன் நெற்றியை அழுந்த நீவினான்.

“உங்களுக்கும் எனக்கும் முன் விரோதம் ஒன்னும் கிடையாது. நீங்க அந்தப் பக்கமா போய் ஏதோ பண்ணிக்கங்க. இங்க நிறைய ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க. உங்களால அவங்க கெட்டுப் போனதா இருக்க வேணாம்” அவள் பேசப் பேச வெறுப்பின் உச்சத்திற்குச் சென்றவன், ஆத்திரத்தோடு புகையிலைக் குச்சியை விட்டெறிந்தான்.

அதனைக் காலணியால் மிதித்து அணைத்தவள், “தேங்க்ஸ். ஐ அப்ரெசியேட் யுவர் எஃபர்ட்ஸ்” என்றாள் அதே நிதானத்தோடு.

அவன் பற்களைக் கடித்துக் கொண்டு முன்னேற, மாரி குறுக்கே பாய்ந்தான்.

“அண்ணா… அண்ணா… என்னாச்சு?” என்ற தங்கையின் குரல் கேட்ட பின்பே சுதாரித்து எழுந்தான் மது.

“ஒன்னும்ல. வா, போகலாம்” என்ற இவன் இவளைப் பேருந்தில் அமர்த்திவிட்டு, கழுத்தைத் திருப்பி அவர்களைத் தேடினான்.

“ண்ணா! எங்க அக்காவுக்குப் பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், ணா. என் அக்காவ எதுவும் செஞ்சுடாதீங்க, ணா” என மாரி இறைஞ்சிக் கொண்டிருக்க,

“போடா! கடுப்பக் கெளப்பிட்டு” என்றான் அந்த மானங்கெட்டவன்.

“நீ என்னடா தப்பு பண்ண? நீ எதுக்கு ஸாரி கேட்டுட்டு இருக்க? பைத்தியமே!” என்று மாது இளையவனை வஞ்சினாள்.

“நீ என்ன பெரிய இவளா? ஓவரா பேசிட்டுருக்க!” அவன் திமிறிக் கொண்டு வர

“அப்படித் தான்டா பேசுவான். அப்படித் தான் பேசுவேன். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு” என்று அவளும், விடாப்பிடியாக, விரல் நீட்டி எச்சரித்தாள்.

“அண்ணா… அண்ணா… பை! நான் போயிட்டு வரேன். அப்படி என்ன தான் வேடிக்கை பாக்குறியோ?” என்று சுதா புலம்பினாள்.

இவளுக்குக் கையசைத்துவிட்டு இவன் பார்வையைச் சுழற்றியபோது, அங்கிருந்த ஒருவரையும் காணவில்லை. ஆனால், ஊர் பெயர் தெரியாத அந்த மங்கை இவனுடைய மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாள். அவள் பேசிய இலட்சணத்தின் விளைவாக, இவன் இதழோரம் புன்னகை அரும்பிற்று.

மாதுவும் இதே ஊர் தான் எனினும் இந்தப் பகுதிக்கு அவள் புதிது. படிப்பு முடிந்து ஒரு சில தற்காலிகப் பணிகளுக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். தனக்கான நிரந்தர வேலையைத் தேடிக் கொண்டிருந்த நேரம். அதே பகுதியில் அவளின் கல்லூரித் தோழன் ஒருவனும் வசித்து வந்தான். மாதக் கணக்காக இருவரும் ஒரே பேருந்தில் பயணிக்க நேர்ந்தது. அடிக்கடி சந்தித்துக் கொண்டமையால் இருவரிடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் நட்பு கனிந்து, காதல் ஏணி ஏறக் காத்திருந்தது.

ஒரு பகல் வேளையில் மது ரிஷிவர்த்தனுடன் கடை வீதிக்குப் பயணப்பட்டிருந்தான்.

எதிர்ப்புறம் அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்தில் தான், மாது தன் ஆண் நண்பனுக்காக வழி மீது விழி வைத்துக் காத்திருந்தாள். எங்கிருந்தோ வந்த கணேஷ் அவளை விரைந்து நெருங்க, “ஏன் லேட்டு?” என்றாள் அவள் சினம் தெறிக்கும் தொனியில்.

“இந்தச் சேலைல செஞ்சு வச்ச சிலையாட்டம் இருக்க” அவளை மடை மாற்றும் விதத்தில் அவன் சிலாகித்தான். பதிலுக்கு அவள் வெட்கித்து வைக்க, “செலக்ஷன் யாரு, ஐயாவாச்சே!” என்று தனது பெருமையைப் பறைசாற்றினான்.

“அப்புறம்…” அவள் ஏதோ கூற வர, அதற்குள் அவளது கன்னத்தில் பச்சென்று முத்தம் பதித்திருந்தான் அவன்.

பிறகே சொன்னான் “ஐ லவ் யூ!”

அவளோ விநாடி கூட யோசியவில்லை. சப்பென்று அவனை அறைந்தே விட்டாள். அந்தத் திகைப்பினில் கன்னத்தைப் பற்றியவன் சில விநாடிகள் உறைந்து, பின்னர் வெகுண்டு விலகினான்‌. அவன் நீங்கியதும் பொங்கி வந்த அழுகையை அடக்க அவள் பெரும்பாடு பட்டாள். மற்றவர்கள் அவளின் அவல நிலையை ஆராய, அவள் தலையை நிமிர்த்தவே தயங்கினாள். அவளுடைய விழி விளிம்புகளைத் தாண்டி விழுந்த கண்ணீர் தரையை நனைத்திற்று. இக்காட்சியைத் தள்ளி இருந்து கண்ட மதுவிற்குப் பாவமாகப் போய்விட்டது.

பேருந்து நிறுத்தத்தை விட்டு இவனிருந்த திசையில் சிலர் முன்னேற, “அங்க என்ன பிரச்சனை?” என்று இவன் முனைப்போடு விசாரித்தான்.

“அது லவ்வர்ஸுக்குள்ள ஏதோ பஞ்சாயத்துப்பா” என்று முனகிவிட்டு அவர்கள் நகர்ந்தனர்.

அவ்வேளை ரிஷி வந்து தோளைத் தட்ட, அவளை ஒருமுறை கூர்ந்து கவனித்துவிட்டு இருசக்கர வாகனத்தின் கைப்பிடியை முறுக்கினான் இவன்.

***

You may also like

Leave a Comment

About Me

Featured