ரிஷியை இவனது அங்காடியில் இறக்கிவிட்டு, மதுசூதனன் மீண்டும் வந்து பார்த்தபோது மாதுளை அவ்விடம் இல்லை. அன்றிலிருந்து அவள் தனியாகத் தான் சுற்றி வந்தாள். பலமுறை மதுவின் கண்களில் சிக்கியிருக்கிறாள். ஒன்றிரண்டு முறை பார்த்துப் பழகினாலே ஒருவரின் முகம் மூளையில் நிரந்தரமாகிவிடும். அவளோ முதல் முறையே அவனின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டாள். அடுத்தடுத்த முறை அவளைக் கண்டபோது அவனுள் அவளின் பாதிப்பு கூடிக் கொண்டே போனது. அவளுடைய இருப்பிடம், உத்தியோகம், குடும்பம் என அவன் அலசி ஆராயாமலே தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

மாதுவின் எதிர்வீட்டுப் பெண்ணான அமுதா, அவனுக்கு ஒரு வகையில் சொந்தமாக அமைந்தது கூடுதல் பலமாகப் போயிற்று. இவளிடம் ஆரம்பத்திலேயே அவளைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துத் தெளிந்தான் அவன்; மதி மாமாவிடமும் சிந்தாமணியிடமும் வெவ்வேறு தருணங்களில் அவளைக் காண்பித்து ஒப்புதலும் வாங்கியிருந்தான். அவளிடத்தில் தன் காதலைத் தெரிவிப்பதா, வேண்டாமா என அவனுக்குள் பயங்கரத் தவிப்பு. இவ்வாறே மூன்றாண்டுகள் உருண்டோடிப் போயின. பின்பொரு நாளில், அமுதாவின் மூலமாக, அவளிற்கு வரன் தேடும் சேதி கிடைக்கப் பெற்றது. அவனும் நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருக்கத் தான் நினைத்தான்.

அதே வேளை, இதயத்தை இருள வைக்கக் கூடிய ஆழமான ஒருவித பயம் அவனை ஆட்டுவித்தது. அவளை யாரிடமும் விட்டுத் தர முடியாத அளவு உள்ளுக்குள் ஒரு தடுமாற்றம். முதலாவதாக அவளிற்கு ஒரு வரன் வாய்த்திருக்க, மாப்பிள்ளை மற்றும் மகளின் சோதிடத்தை எடுத்துக் கொண்டு பொருத்தம் பார்க்கக் கிளம்பினார் அர்ச்சனா தேவி. அவரிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்திடும் கட்டாயத்தில், மது அவரை ஓசையின்றி பின்தொடர்ந்தான். அந்நேரம் ஒரு கறுப்புப் பூனை அவர் சென்ற பாதைக்குக் குறுக்கே பாய்ந்தோடியது‌. அதைக் கண்டவர் தன் பயணத்தை மேலே தொடராமல், பாதியிலேயே வீடு திரும்பிவிட்டார். அடுத்த இரு தடவைகள் அதே பூனையைக் குறுக்கிட வைத்து, அவரிடம் வசமாக அகப்பட்டும் கொண்டான் அவன்.

“தம்பி, யாருப்பா நீ? உனக்கு என்ன வேணும்? ஒரு நல்ல காரியமா போறப்போ எதுக்காக இப்படி இடைஞ்சல் பண்ணிட்டு இருக்க? இதோட மூனாவது தடவையா உன்னை அந்தப் பூனையோட பாக்குறேன்” என்றார் அவர் கத்தாமல் கொள்ளாமல்.

“ஐயோ! அத்தை…” அவன் திணறினான்.

“எது? அத்தையா?” அவர் திடுக்கிட்டார்.

“அது முத தடவை அதுவா தான் குறுக்க வந்துச்சு. ரெண்டாவது தடவை தான் நானா…”

“உன்னை எனக்குத் தெரியுமா?”

அவன் மெலிதாகத் தொண்டையைச் செறுமினான் “என் பேரு மதுசூதனன். பஸ் ஸ்டான்ட் பின்னாடி சொந்தமா பார் வச்சு நடத்திட்டு இருக்கேன்”

அவர் குறுகுறுப்பாய் நோக்க, அவன் தொடர்ந்தான். “தனிப்பட்ட முறையில எனக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. எனக்கு உங்க பொண்ணு மாதுளையைப் பிடிச்சிருக்கு. இந்த விஷயம் அவங்களுக்கே இதுவரை தெரியாது. அவங்களை எனக்கு… கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?” என மிதமிஞ்சிய தயக்கத்துடனே கோரினான்.

அவனது முதல் முயற்சிக்கு உடனடியாகப் பலன் கிட்டவில்லை. அர்ச்சனா கலவரமடைந்த நெஞ்சத்துடனே விலகி நடந்தார். பின்பு மெல்ல மெல்ல அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அமுதாவின் நம்பிக்கையான சொற்கள் அவருக்கு மிகுந்த ஊக்கமளித்தன.

ஒரு மாலை வேளையில் கோவிலில் வைத்து அவனை அவர் சந்தித்தார். “இங்கப் பாருப்பா. நாங்க அந்தளவு வசதியில்ல. எங்களால எப்பவுமே உங்க அளவுக்கு வரவும் முடியாது‌. உங்க வசதிக்கு ஆசைப்பட்டு என் பொண்ணை நான் கட்டி வைக்கல. உங்க குடும்பத்தைப் பத்தியும் உன்னைப் பத்தியும் நாலு பேரு நல்ல விதமா சொல்றாங்க. அதனால மட்டுந்தான் இந்த முடிவு. உங்களுக்கு விருப்பப்பட்டா வர வாரம் வந்து பொண்ணு கேளுங்க. அப்புறம்… இந்த விஷயம் நமக்குள்ளயே இருந்தா நல்லது. முக்கியமா, என் பொண்ணுக்கு உன் காதல் விவகாரம்லாம் தெரிய வேணாம்” என்று அவர் பேச, மனதிற்குள் குதியாட்டம் இட்டான் அவன்.

அவனிற்கு மிகவும் உதவிகரமாக இருந்த அந்தக் கறுப்புப் பூனையை, அவன் தன் உறவாக்கிக் கொண்டான். இரவானால் அது அவனது மது விடுதியைத் தேடி வந்துவிடும். அதற்காகவே ஒரு புட்டிப் பால் விடுதியின் குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் இடம் பெற்றிருக்கும். அங்ஙனம் அரும்பாடுபட்டு, போராடி கரம் பிடித்தவளோ தான் தான் அவனுடைய முதல் காதல் என்பதையே அறியாமல் அழுது வடிக்கிறாள்.

“நீ தான்டி அந்த ரோஜாப்பூ இரவிக்கைக்காரி, என் தங்க மயிலு!” அவன் தித்திப்புடன் மொழிந்தான்.

அவள் திகைத்து விழிக்க “என்னை நம்பலயா? அன்னைக்குக் கடைவீதில நீ ரோஜாப்பூ போட்ட ப்ளௌஸ் போட்ருந்த; சிமென்ட் கலர்ல புடவை கட்டிருந்த. அதனால தான் உனக்கு அந்தப் பேரே வச்சேன். ஆனா, அந்தக் காம்பினேஷன் உனக்கு எடுப்பாவே இல்ல; பாக்கவே சகிக்கல. இதைப் பாரு” என்றவன் ஒரு மேசையைத் திறந்து, அதிலிருந்த புதுப் புடவையை நீட்டினான். “இது நம்ம கல்யாணம் முடிவான பிறகு, நான் உனக்காக அலசி ஆராய்ஞ்சு எடுத்தது. உனக்குப் பிடிச்ச அதே ரோஜாப்பூ போட்ட வெள்ளை கலர் ஸாரி. இது கூட சிவப்பு கலர் பிளௌஸ் மேட்ச் பண்ணிப் போட்டா, உனக்கு எப்படி சூட் ஆகும்; தெரியுமா! கணேஷும் நீயும் பிரிஞ்சப்போ உனக்கு எப்படி இருந்துச்சோ தெரியாது. அதை எனக்கான வரமா தான் நான் பாக்குறேன். அப்போலருந்து நீ என் கண்ணுல அதிகமா பட ஆரம்பிச்ச. இந்தக் கடையோட மொட்டை மாடியிலருந்து, கட்டுப்பாட்டை மீறி உன்னை நான் ஸைட் அடிச்சிருக்கேன். அது தப்பு தான். எனக்கும் தெரியும். நீயின்னு வரும்போது என்னை என்னாலயே கட்டுப்படுத்திக்க முடியல‌. எப்பவுமே உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்குள்ள பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். அது சந்தோஷமோ, சோகமோ, வலியோ பிரிச்சுப்‌ பாக்கத் தெரியல. ஆனா, பிடிச்சிருந்தது‌‌. உன் சம்பந்தப்பட்ட எல்லாமே பிடிச்சிருந்தது‌. உன் தம்பி உனக்கு அடிக்கடி ரோஸ் தரதை நான் எட்ட இருந்து பாத்துருக்கேன். அது உனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சதனால தான் இப்படி வரிசையா ரோஜாச் செடிங்களை வாங்கி அடுக்கிருக்கேன். நீ வர்ற வரைக்கும் இதுங்க பூத்துப் பூத்து உதிர்ந்துட்டு இருந்துச்சு. இப்போ தான் இதுங்களுக்கான நோக்கமே நிறைவேறிருக்கு. இதெல்லாம் உனக்கா புரியும்னு நினைச்சேன். நீ தான் சரியான பல்பா இருக்கியே. இந்த நிமிஷம் வரை உன்கிட்ட என் காதலைக் கூட சொல்லத் தெரியாத அரைவேக்காடு நான்‌” என்றவாறு தன் மொத்த காதலையும் அவளின் முன்பாகக் கொட்டியிருந்தான் அவன்.

அவளுக்கு நம்பவா, கூடாதா என்றிருந்தது.

“நீ அழுது இதோட அஞ்சாவது தடவை நான் பாக்குறேன். முத தடவை அந்த கணேஷுக்காக அழுத”

“நான் ஒன்னும் அவனுக்காக அழல‌. அவனால அழுதேன். ரெண்டுத்துக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு” என்றாள் அவள் இடைப்புகுந்து‌.

“சரி. அவனால அழுத‌. ரெண்டாவது, அமுதா வீட்டுல உக்காந்துட்டு கண்ணைக் கசக்குன. உன்னைப் பொண்ணு பாக்க வந்த நாளுல, தனியா பாத்துப் பேசி உன்னோட விருப்பத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு முயற்சி செஞ்சேன். அப்போ என்னைப் பிடிக்கலைன்னு சொல்லி அழுதிட்டுருந்தியே. அதையும் நான் பாத்துட்டேன். அப்பவும் என்னால உன்னை விட்டுப் போக முடியல. ஏதோ என் மாமியார் செஞ்ச புண்ணியத்துனால நீ எனக்குக் கிடைச்ச. அப்பறம் அம்மா வீட்டுக்கு விடலைனு குழந்தைத் தனமா ஒரு அழுகை. சமீபமா, கணேஷுக்குக் கல்யாணம்னு ஒரு ஒப்பாரி வச்ச”

“மறுபடியும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவன் மேல, ஒரு நாள்னாலும், நட்பைத் தாண்டி ஒரு சின்ன ஆசை எனக்கு இருந்தது உண்மை. அதை உங்கள்ட்ட சொல்லாம, என்னால நிம்மதியாவே இருக்க முடியல. அதை நினைச்சுத் தான் ஃபீல் பண்ணனே தவிர, அவனுக்குக் கல்யாணம் முடிவானதுல எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது”

“அதான் எல்லாமே தெரிஞ்சுருச்சே. இனிமே எதுக்காகவும் அழாத‌. சின்ன வயசுல சரியான அழுமூஞ்சியா இருந்துருப்ப போல”

அவள் சிரிப்பையும் முறைப்பையும் கலந்த பாவனையைப் பதிலாக வழங்கினாள்‌ “ரொம்ப ஓவரா தான் போறீங்க”

“இப்ப நீ இந்த ஓவியத்தைப் பாரு. தெளிவா புரியும். இந்த ஆலமரம் நானு. சுத்தி தொங்குற விழுதுகள் தான் என் குடும்பம். நான் அவங்களைத் தாங்குவேன். சமயத்துல, அவங்க என்னைத் தாங்குவாங்க. இவங்க இத்தனை பேரு இருந்தும், எனக்குள்ள ஒரு வெற்றிடம் இருக்குறதை என்னால இப்பயுமே உணர முடியுது. அந்த வெற்றிடத்துல கூடு கட்ட வந்த பறவை தான் நீயு. உன்னைச் சேர முடியாம போயிடுமோங்குற பயத்துல இருந்தப்போ தோனுன வரி இது. இதை நல்லா கவனிச்சீனா தெரியும். கடைசியில இருக்குறது கேள்விக்குறி இல்லை; ஆச்சரியக் குறி. இந்த வரிக்கு நீயில்லாத சுமைய என்னால தாங்க முடியாதுன்னு அர்த்தமாகுது. நீயில்லாம என் வாழ்க்கை முழுமை அடையாது, கண்மணியே!” அவளின் கன்னங்களைப் பற்றி இடம் வலமாக ஆட்டினான் கணவன்.

அவனது கைவளைவிலிருந்து நழுவி எழுந்தவள் “வீட்டுக்கு வாங்க. பேசிக்கலாம்” என்றதோடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.

அவன் நள்ளிரவில் வீடு வந்து சேர, அவள் எம்மொழியும் வெளிப்படுத்தாமல் உணவு பரிமாறினாள். பொறுமையாக உண்டு முடித்து அவன் அறைக்குள் நுழைய, அவள் பட்டென்று கதவடைத்தாள். கதவில் சாய்ந்து நின்றவளின் தோரணை கண்டு, அவனின் புருவம் கேள்வியாக வளைந்தது.

“இல்ல… நீங்க என்னை இவ்ளோ புரிஞ்சு வச்சிருக்கீங்க. எனக்கும் என் குடும்பத்துக்கும் வேண்டியதெல்லாம் செய்றீங்க. நான் எதாச்சும் சொதப்புனாலும் கோவப்பட மாட்றீங்க‌. நான் கோவப்பட்டுத் திட்டுனாலும் என் பக்கம் நிக்குறீங்க‌. இதுக்குலாம் ஒரு தேங்க்ஸ் சொல்லணும் போல இருந்துச்சு”

“உன் ஆசையை ஏன் கெடுப்பானே‌. சொல்லு” என்றான் அவன் அநாயாசமாக.

அவனிருந்த திசையில் ஓரடி முன்னேறியவள், அவனது கழுத்தை வளைத்து இதழோடு இதழ் ஒற்றியெடுத்தாள். அந்த சில விநாடி அணைப்பினில் அவனின் விழிகள் மடைதிறந்தன. அவளின் வடிவான முகத்தில் தூரல் போல ஐந்தாறு கண்ணீர்த் துளிகள் இறங்க, அவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்.

“என்னாச்சு, மது? நான் எதுவும் தப்பா நடந்துகிட்டேனே?” அவளுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது.

அவளது கரத்தை இழுத்து உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டவன் “எனக்குள்ள இருந்த வெற்றிடம் முழுமையடைஞ்ச தருணம் இது‌. சந்தோஷத்துலயும் அழலாம், மாது. நான் இப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என விளம்ப, ஆதரவாக அவனுடைய விரல்களில் அழுத்தம் கொடுத்தாள் அவள்‌;

மறு கரத்தால் அவனது இதயத்தின் மேற்பகுதியில் இதமாக வருடினாள். சிறு ஆசுவாசத்திற்குப் பின்னதாக அவன் அவளின் கன்னங்களைத் தாங்கி, பிறை நெற்றியில் ஆதுரமாகப் பதியமிட்டான். கன்னத்திலும் கழுத்திலும் அவனது அமுத எச்சில் நீர் பாய்ச்சியது. அவனின் ஆசையெனும் விருட்சம் இதழ்களில் முளைவிட்டு, இடையில் கிளை பரப்பியது. மண்ணைக் கவ்வும் வேர் போல அவன் அவளை அணைத்து ஊடுருவினான். இருவருமே இரசனையான முத்தச் சந்தத்தில் திளைத்து மூழ்கியிருந்தனர். அவள் காதல் கற்கும் மாணவி ஆகியிருக்க, அவனே அவளுக்கு ஆசிரியன் ஆனான்‌. ஒருபடி மேலேறி கூந்தலெனும் சோலைக்குள் விரல்களை அலையாடவிட்டு ஈடுபாட்டுடன் அவன் அவளைக் களவாட முனைய, காற்றினூடே வந்தடைந்தது ஒரு கூச்சலொலி.

“அண்ணா! அண்ணி!” என்று முதலாவதாகக் கூவினாள் சுலோச்சனா.

“அவங்களா வெளிய வரட்டும். செத்த பொறேன்டி” என்றார் சிந்தாமணி அதட்டலாய்.

“எவ்ளோ சீரியஸான விஷயம். நீ சும்மா இரும்மா” என்று ஆதங்கப்பட்டாள் சுதா. சென்னையை நீங்கி பூமி பூசைக்கெனத் தாயகம் வந்தவள், பிரசவத்திற்கு இங்கேயே தங்கிவிட்டாள் போலும். 

மாது வேகவேகமாகச் சேலையைச் சீர்ப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள் “என்னாச்சு, அத்தை?”

“ரம்யாவோட சின்ன பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம்மா. வயித்தாலையும் வாந்தியுமா போகுதாம். ரெண்டு நாளா ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலைஞ்சு பாத்துட்டு, அதுக்கு மேல முடியாம அட்மிட் பண்ணிட்டாங்களாம்” அவர் தவிப்புடன் இயம்பினார்.

“எந்த ஹாஸ்பிடல்?” என்று வினவியவாறே அடுத்ததாக மது வெளிப்பட்டான்.

சுலோ அந்தத் தனியார் மருத்துவமனையின் பெயரைச் சபையில் உதிர்த்தாள்.

உடனே மனைவியை ஏறிட்டவன் “வீட்டைப் பாத்துக்கோ. சுதாவும் சுலோவும் பத்திரம். பையன் பத்திரம். கதவை நல்லா சாத்திக்கோங்க. நாங்க முதல்ல போய்ப் பாக்குறோம். மத்ததை நாளைக்குப் பேசிக்கலாம்” என்றபடி தன் வாகனத்திற்கு விரைந்தான்.

“பாத்துப் போயிட்டு வாங்க” என்று அத்தையாரையும் அவனையும் வழியனுப்பியவள், அறைக்குள் வந்ததும் நிலைப்பேழைக் கண்ணாடியை உற்றுநோக்கினாள்.

அவனது மீசை ரோமம் ஒன்று சட்டமாய் அவளின் கன்னத்தில் நிலைகுத்தி நிற்க, ‘இதோடவா வெளிய போனோம்!’ என நெற்றியில் தட்டிக் கொண்டாள் அவள்‌.

அடுத்த இரு நாட்களுக்கு அவன் மது விடுதி, மருத்துவமனை, வீடு என மாற்றி மாற்றி அலைந்து கலைத்தான்.

அன்றைய இரவு “எல்லாம் ஓகே தான? மறுபடியும் ஏன் அப்செட்டா தெரியுறீங்க?” என்றாள் அவள் அக்கறை பொங்க‌.

“தெரியல, மாது. ஏனோ டயர்டாவே இருக்கு. இன்னைக்குத் தான் ரம்யா பொண்ணுக்கு உடம்பு குணமாச்சு. அடுத்து சுதாவுக்கு வளைகாப்பு வைக்கணும். ஒரே நேரத்துல ரெண்டு வீடு கட்டுறோம். இத்தனை கணக்கு வழக்கையும் எழுதி எழுதி வேற மாயணும்” என்றான் அவன் சட்டையைக் கலைந்தபடி.

“உக்காருங்க. நான் உங்களுக்கு உதவி செய்றேன்” என்றவள் அவனது கணக்கு நோட்டுகளை எடுத்துப் பிரட்டிய கையோடு, மோவாயில் விரல் வைத்தாள் “என்னங்க இது? செலவுலாம் அஞ்சு டிஜிட், ஆறு‌ டிஜிட்ல இருக்கு”

“அதனால தான் என்னால திடுதிப்புனு பார் வேலைய விட முடியாதுன்னு சொல்றேன். இப்போவாச்சும் என் நிலைமை புரியுதா?”

“அச்சோ, என் புருஷன் பாவம். வீட்டுக்காக எப்படி மாடா உழைக்கிறாரு! உங்க தங்கச்சிங்க சொல்ற மாதிரி, பேசாம பணக்காரப் பொண்ணா பாத்துக் கட்டிருக்கலாம்” அவனது தோள்பட்டையை வலி போக அழுத்திய வண்ணம் அவள் அவனைச் சீண்டினாள்.

“இப்படிலாம் பேசுன. வாயைக் கடிச்சிருவேன்டி” என்றவன் பின்புறமாகக் கரம் வளைத்து அவளைப் பிடிக்க முயல, அவன்வசம் அகப்படாமல் தப்பியவாறே கலகலவெனச் சிரித்தாள் அவள்.

அந்தச் சிரிப்புக்குப் போட்டியாக அவனது அலைபேசி ரீங்காரமிட்டது. “கடையில எதையோ காணோமாம். நான் போயிட்டு வந்துட்றேன்” என்றவன் அசிரத்தையோடு சட்டையை அணிந்து வெளியே புறப்பட்டான்.

மது விடுதிக்குச் சென்று அதனை மூட ஆயத்தப்படுத்தியவன் “சரி, தீபக். நீ கெளம்பு. அப்பறம்… இனிமேல் நீ தான் கடையைப் பொறுப்பா கவனிச்சுக்கணும். எனக்கு வெளி வேலை ஜாஸ்தி ஆயிடுச்சு. அட்ஜஸ்ட் பண்ணிப் பாத்துக்க; சரியா?” என்றான்‌ வாஞ்சை குறையாமல்.

“ஓகே, பையா” என்ற இவன் விழியாய் விழிக்க

“என்னடா?” என்றான் அவன் குழப்பத்துடன்.

“பையா… காவியா ப்ரெக்னன்ட்டா இருக்கா” என்று இவன் மனந்திறக்கவும் அவன் தாமதியாமல் இவனை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“கங்ராட்ஸ்டா. உனக்கு யாருமே ஆதரவா இல்லைன்னு மட்டும் நினைச்சுக்காத. நான் இருக்கேன். மாது இருக்கா. அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போ. அம்மாட்ட‌ காவியாவைக் காட்டிவிட்டா, அவங்க நல்லபடியா பாத்துப்பாங்க. என்ன சந்தேகம்னாலும் அவங்கள்ட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. காவியாட்டயும் அவங்க நம்பரைக் கொடுத்து வை. உனக்கு என்ன உதவினாலும் தயங்காம கேளு”

“தெரியும், பையா. எனக்கு ஒன்னுனா நீங்க நிப்பீங்கன்னு தெரியும். தேங்க்ஸ், பையா” இவனின் கூற்றில் மதுவின் உள்ளம் கனிந்தது.

“வீட்டுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போ” என்றவன் ஓர் ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து இவனது சட்டைப்பையில் திணிக்கப் போக, இவன் அதிவேகத்தில் பின்வாங்கினான்.

“நஹி! இதுலாம் வேணாம், பையா. மழை வர மாதிரி இருக்கு. நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன். நாளைலருந்து கடைய நான் சாத்திக்கிறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கங்க” என்றபடி இல்லம் நோக்கிப் பறந்துவிட்டான்.

அதே நேரம் வீட்டிலிருந்த நம் மாது “என்ன, மழை பெய்யுது! இதோ வரேன்னுட்டு போனவரையும் ஆளைக் காணும். ஃபோனும் ரிங் போயிட்டே இருக்கு. என்னவா இருக்கும்?” என முணுமுணுப்பாய்ப் புலம்பலானாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளின் மின்னல் நடையால் மது விடுதியின் வாசலில் நின்றாள் காரிகை.

அவளைக் கண்டுவிட்டு அதிர்ச்சியுற்றான் நம் மது “இந்த நேரத்துல இங்க என்னடி பண்ற?”

“நீங்க என்னடான்னா பாதிலயே விட்டுட்டு வந்துட்டீங்க. மறுபடியும் அந்த மனோஜ் வந்து பிரச்சனை பண்ணிட்டானோ, என்னமோன்னு பயந்துட்டேன். உங்க அம்மாட்ட திட்டு வாங்கிட்டு வந்திருக்கேனாக்கும். உங்களைப் பாத்ததும் தான் எனக்கு நிம்மதியே வருது‌‌. ஃபோன் பண்ணா ஏன் எடுக்கல?” அவள் இரயில் வண்டி போல கடகடத்தாள்.

தள்ளியிருந்த அலைபேசியை எடுத்துக் கண்ணுற்றவன் “தெரியாம ஸைலன்ட்ல விழுந்திருக்கும் போல. தீபக்ட்ட பேசிட்டு இருந்ததுல இதை நான் கவனிக்காம விட்டுட்டேன். நிஜமா எனக்காகத் தான் வந்தியா? வேற எவளாச்சும் கூட இருக்காளான்னு பாக்க வந்தியா?” என்றான் குதர்க்கமாக.

“ம்க்கும்.‌‌..” அவள் ஒரேயடியாக உதட்டைச் சுழித்தாள்.

விடுதியின் உயர்தர இருக்கைகளைப் பிரத்தியேகமான கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தவாறே அவன் கூறினான் “விஷயம் தெரியுமா? காவியா ப்ரெக்னன்ட்டா இருக்காளாம்”

“ஓ!”

“அவங்களுக்கு நாம தான் கல்யாணமே செஞ்சு வச்சோம். நமக்கு அப்பறம் கல்யாணம் பண்ணவங்க”

“அதுக்கென்ன செய்யணும்குறீங்க?” அவள் தன் மெல்லிடையில் கரம் தாங்கி கனலோடு கேட்க, அவன் வேலையை விடுத்து நிமிர்ந்தான்.

“ஐயோ! பொட்டு வழிஞ்சு மூக்குல ஊத்துது. போய் முகம் கழுவு” என்கவும் அவள் கழிப்பறைக்குள் புகுந்தாள்.

கழிப்பறைக் கண்ணாடி முன் அவதரித்தவள் தன் பின்னலைக் கட்டவிழ்த்து, தலையை இடம் வலமாக ஆட்டினாள். அதில் சிதறித் தெறித்த கார்குழலின் மழைத் துளிகள் கண்ணாடிக்குக் கூடுதல் கலை சேர்த்தன‌. மூன்றே முக்கால்வாசி நனைந்திருந்த ஈரச் சீலையை ஒழுங்கு செய்தவள், முன்னும் பின்னும் தன்னை அழகு பார்த்தாள்‌. கச்சிதமாக அக்கணத்தில் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அவன். சற்று முன்பு துப்புரவுப் பணியாளர் ஒருவர் வந்து கழிப்பறையைக் கழுவிவிட்டுச் சென்றிருக்க, அப்பகுதி முழுவதும் இரசாயன நெடி நிரம்பி வீசியது. அதன் காரணமாக நாசியை நிரண்டியவன், இமைகளைத் தாழ்த்தி கீழிருந்து மேலாக அவளைப் பார்வையால் சலித்தான்.

“என்ன பார்வை அது?” அவனது ஊசி இரக உற்றலால் உடல் வெலவெலத்து, உள்ளம் கூச அவள் வினவினாள்.

“ஒன்னுமில்ல. வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி, தன்னைத் தானே மீட்டெடுத்து, அவன் நகர முனைந்தான்.

“நில்லுங்க. தனியா நிக்க பயமாருக்கு” என்றவள் அவனைத் தடுத்து நிறுத்திய பிற்பாடே, நெற்றியைத் தேய்த்துக் கழுவலானாள்.

அவன் கண்ணாடியின் வழியாக அவளைக் கண்ணுற்ற வண்ணம் செப்பினான்‌ “எனக்கும் பயமா தான் இருக்கு”

“நானென்ன பேயா?”

“இல்ல, பிசாசு!” என்றவன் ஒரே வீச்சில் அவளின் முந்தானையைப் பற்றியிழுத்து, அவளைத் தன் கரங்களுக்குள் அடக்கி சுவற்றில் சாய்ந்தான்.

அவளின் பின்னங்கழுத்தில் வாசம்பிடித்து நடுமுதுகில் அவன் முத்தமிட, அவனது உதட்டு வெப்பமும் மீசை ரோமங்களும் செய்த மாயையில் சிலிர்த்தாள் பெண் “மது…”

“நீ தான அன்னைக்குக் கிஸ் கொடுத்து ஆரம்பிச்சு வைச்ச?” அவளுடைய கழுத்து வளைவில் தாடையைப் பதித்து அவன் வினா எழுப்பினான்.

அவனுடைய கரங்களின் எல்லைக்குள் இருந்து கொண்டே அவன் புறமாகத் திரும்பியவள் “டேக் மீ” என்றாள் திருத்தமாக.

“அப்படீனா?”

“ஆன், என்னை முழுசா எடுத்துக்கோங்கன்னு அர்த்தம்”

“அதைக் கூட திமிரா தான் சொல்லுவியா? திமிர் பிடிச்சவளே!” அவன் மிரட்டும் தொனியில் கீழுதட்டைக் கடித்தான்.

அவளோ அசரவில்லை “இந்தத் திமிர் பிடிச்சவளைத் தான ஸாருக்குப் பிடிச்சிருந்தது”

எதையோ சாதித்த மகிழ்வோடு நிமிடக் கணக்கில் அவளின் கண்களோடு கண்கள் கலந்தான் அவன்.

பின்னர் அவளை அலேக்காகத் தூக்கியவன் ஓர் அகன்று விரிந்த இருக்கையில் அமர்ந்து, அவளையும் மடியில் இருத்திக் கொண்டான்; மிக அண்மையில் வைத்து, மீண்டும் அவளின் முக வடிவை ஆசை தீர இரசித்தான். அவனது முத்தப் பயணம் நெற்றி, கன்னம், கழுத்து எனப் படியிறங்கத் துவங்கியது.

இருவரின் மூச்சுக் காற்றும் சீரற்ற திசையில் பயணிக்க “மது… நீங்க எப்படியும் தயக்கப்பட்டுட்டு சொல்ல மாட்டீங்க. நானே சொல்றேன். ஐ லவ் யூ!” என்றாள் அவள்.

அதற்கு விழி விரிய புன்னகைத்தவன், அவளின் இதழ்களை உரிமையோடு சுவைத்தான்.

கிடைத்த இடைவெளியில் “நீங்க திருப்பிச் சொல்ல மாட்டீங்களா?” என்றாள் அவள் ஐயத்தோடு.

சாந்தமாக “சொல்றேன்” என்றவன் அவளை இருக்கையில் கிடத்தி, அவளின் அங்கங்கள் அனைத்தையும் ஈரிதழ்களாலே அளவெடுத்தான்.

உள்ளங்கை சூட்டில் இளகும் தேங்காய் எண்ணெய் போல உருகித் தவித்தவள் “மது… ஐ லவ் யூவே சொல்லல” என்றாள் தலையை உயர்த்தி.

“சொல்றேன்” என்றவன் கூச்ச மிகுதியால் பஞ்சு இருக்கையில் பதிந்து கசங்கிக் கொண்டிருந்த அவளின் விரல்களைப் பிரித்தெடுத்து, முத்த ஈரத்தால் சலவை செய்தான்; அவளின் விரல்களைத் தன் பொன்மேனியில் படர விட்டு, மிக கவனமாய் ஆடையெனும் திரை விலக்கினான்.

ஆயிரம் முறை “மது! மது!” என்று அவள் விதவிதமாகக் குழைந்தாலும் சேய்க்குச் செவிமடுக்கும் தாய் போல ஒவ்வொரு அழைப்பிற்கும் இசைந்து, சலிக்காமல் தொண்டூழியம் செய்தான் அவன்.

இத்தனை காலமாக எதிரெதிர்ப் புள்ளியில் வீம்பு செய்த மதுவும் மாதுவும் தங்களின் வேறுபாடுகளை ஏற்று, ஒரே கோட்டில் சங்கமித்தனர்.

இறுதியாக “ஐ லவ் யூ எ லாட், மது! இந்த நிறைவான வாழ்க்கைய எனக்குக் கொடுத்ததுக்காக ஜென்மம் முழுக்க உங்களுக்கு நான் முத்தக் கடன்பட்ருக்கேன்” என்று மிதமிஞ்சிய பெருமிதத்துடனும் அலாதி அன்புடனும் தெரிவித்தவள், அவனுடன் இதழ்கள் கோர்த்தபடியே ஆனந்தமாகத் துயில் கொண்டாள்.

அவள் நடுவில் கண் விழித்தபோது அவளின் முன்னுச்சியைக் கோதியபடியே இன்ப நிலையில் இலயித்திருந்தவன் “ஐ லவ் யூ, பொண்டாட்டி!” என்றான் கிசுகிசுப்பாக.

அதில் நெக்குருகி அவனோடு தன்னை மேலும் பிணைத்துக் கொண்டாள் பாவை.

***

You may also like

Leave a Comment

About Me

Featured