ஈரச் சேலையைக் கலைந்த மாதுவிற்கு‌க் கணவனின் விரல் வெம்மையும் பார்வையின்‌ சிலுசிலுப்பும் தன்னுடன் நீங்காமல் நிலைத்துவிட்டதாக ஒரு கற்பனை. வீட்டிற்கென்று உபயோகப்படுத்தும் பழைய சுடிதாரை அணிந்தவள், குளியலறையில் இருந்து வெளியேறி கதவை மூடினாள். முதன்முறையாக அந்த அறைக்குள் உலாவ அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அவள் மீண்டும் தன் கூந்தலை உலர்த்தியபடி, நிலைப்பேழைக்கு முன்னே வந்து நின்றாள். வெண்ணிற உள்சட்டையும் வெள்ளை வேட்டியுமாகக் கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்திருந்தவனை அதன் கண்ணாடி பிரதிபலித்தது. அவனது முகத்திற்கு நேராக இதயம் வரையப்பட்டிருப்பதைக் கண்டவள், இது யார் செய்த வேலை எனத் தீவிரமாகச் சிந்தித்தும் விடையேதும் கிட்டவில்லை. அடுத்த நாளுக்கான புடவையைச் சலவை செய்து முடித்தவள், கோரைப்பாயை எடுக்கும் நோக்கத்தோடு முன்னேறினாள்.

அவ்வளவு நேரமாக அலைபேசித் திரையைத் தேய்த்துக் கொண்டிருந்தவன் “மறுபடியும் கீழ படுக்கப் போறியா?” என்றான் கச்சிதமாக.

“உங்களுக்குத் தான் உடம்பு சரியில்ல. நீங்களே கட்டில்ல படுத்துக்கோங்க” என்று சொல்லி முடிக்கையிலே அவளுக்குத் தும்மல் வந்துவிட்டது.

“உனக்கும் தான் உடம்பு சரியில்ல. வந்து கட்டில்ல படு” அவனும் ஒவ்வாமை காரணமாக நாசியை அழுந்தத் தேய்த்தான்.

“சொல்லப் போனா ரெண்டு பேருக்கும் தான் உடம்பு சரியில்ல”

“அதுக்குத் தான் சொல்றேன். ரெண்டு பேருமே கட்டில்ல படுத்துப்போம்”

“ரெண்டு பேருமா?” அவன் கணித்ததைப் போலவே அவளின் விழிகள் அகல் விளக்கு அகலத்திற்கு விரிந்தன “எனக்குப் பயமா இருக்கு”

ஒற்றைக் கரத்தைத் தலைக்குக் கொடுத்து, ஒருக்களித்த வண்ணம் அவன் அவளை ஏறிட்டான் “பயமா?”

“ம்ம்” அவள் தன் அதரங்களை ஒன்றுடனொன்று அழுத்தி இறுக்கியபடி ஆமோதித்தாள்.

“இந்தப் பச்சைக் குழந்தையைப் பாத்தா உனக்குப் பயமா இருக்கு. கடவுளே!” அவன் நெற்றியில் அடித்துக் கொண்ட பாவனையே சிறு கவிதை போல விகசித்தது‌.

“அது இல்லைங்க. தூக்கத்துல கை, கால் படும்”

“பரவால்ல.‌ நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்”

“நிஜமாவா சொல்றீங்க?”

“ம்ம் ம்ம்” அவன் வேகமாகத் தலையசைத்தான்.

அவனை நம்பி அவள் கட்டிலைப் பங்கிட முற்பட்டாள். அதனால் உள்ளுக்குள் பொங்கி வந்த பூரிப்பை மறைக்க, தனது அலைபேசியை உற்றுநோக்கலானான் அவன். முதலில் அவனை நோக்கிப் படுத்தவள், பின் வேறுபுறம் திரும்பி மீண்டும் அவனின் பக்கமே திரும்பினாள். அந்த நெருக்கம் அவளை ஏதோ செய்ய, தலையணையை எடுத்து நடுவே வேலிகட்ட முனைந்தாள்.

அதை வாகாகக் கைப்பற்றி தலைக்கு வைத்துக் கொண்டவன் “நான் கை, கால்லாம் தூக்கிப் போட மாட்டேன். கவலைப்படாம தூங்கு” என்றான் வஞ்சமின்றி.

“ம்ம்ம்” அவள் சற்று நேரத்திற்கெல்லாம் நிம்மதியாக உறங்க ஆரம்பிக்க, சட்டுபுட்டென்று அலைபேசியை ஓரங்கட்டியவன் அவளின் புறமாகக் குடை சாய்ந்தான்.

எத்தனை காலமாக அவன் ஆசைப்பட்டு, கனவு கண்டு வைத்திருந்த தருணம் இது! தானும் அவளும் அருகருகே. கைக்கெட்டும் தொலைவில் பௌர்ணமி‌. அந்த இரம்மியமான பொழுதை அவனால் மறக்கவே இயலாது. மரணம் தன்னைத் தழுவும் கணத்தில் மூளையில் பளிச்சிடப் போகும் முதல் மின்னல் முகம்; அவனுக்கு வெகு சமீபத்தில் சாந்தமாக நித்திரையைத் தழுவியிருந்தது‌. இது தான் அவனைப் பொறுத்த வரையில் அமுதினும் இனிய முதலிரவு.

மறுநாள் மாது கண்விழித்தபோது அவன் அவளருகில் இல்லை. அவள் குளித்துவிட்டு வர, தம்பியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“அக்கா, குட் மார்னிங்!”

அவன் இப்படி அன்பைப் பொழிந்தாலே ஏதோ ஆப்பு இருக்கிறதென்று அர்த்தம்.

“தம்பிக்கு ஒரு தௌஸன்ட் ருப்பீஸ் தேவைப்படுது”

“ஆயிரம் ரூபாயா? எதுக்குடா?” அவளுக்கு உண்மையிலேயே நெஞ்சை அடைப்பது போலானது. 

“எக்ஸாம் வரதுக்கு முன்னாடி பசங்களாம் சேந்து ஒரு டிரிப் போறோம். லைஃப என்ஜாய் பண்ணணும்ல!”

“என்கிட்ட அவ்ளோ காசு இல்லையேடா. கைல இருந்ததலாம்  ஹாஸ்பிடலுக்கே செலவழிச்சிட்டேன். மாசக் கடைசி; யூ நோ!”

“அப்போ, நான் எனக்குத் தெரிஞ்சவங்கள்ட்ட கடன் வாங்கிக்குறேன். நீ சம்பளம் வந்தவுடனே தா”

“அது யாரது உனக்குத் தெரிஞ்சவங்க?” அவளுக்கு உடனடியாக அந்தவொரு மாணவியின் நினைவு எழுந்தது‌.

“ஃப்ரென்டு”

‘ஃப்ரென்டுக்குப் பேருலாம் இல்லையா?’ என மனதில் உதித்த கேள்வியை அவள் பின்னுக்குத் தள்ளினாள் “வெளிய கடன் வாங்க வேண்டாம்‌. நான் உங்க மாமாட்டயே கேட்டுப் பாக்குறேன்”

“ஓகே, எப்போ கேக்குற?”

“அவசரப்படாதடா. நேரம் பாத்து பொறுமையா தான் கேக்கணும்”

“அவனுங்கள்ட்ட நான் வரேன், வரலைனு சொன்னா தான் அதுக்கேத்த மாதிரி ப்ளான் போடுவானுங்க”

“புரியுது. ஆனா பொறுமை அவசியம், தம்பி. நிதானமா முடிவெடுத்துக்கலாம்”

“ஹையோ!” அவளின் பதிலில் இளைய இரத்தம் சூடேறியது.

அந்நேரம் அறைக்குள் வந்த சுலோச்சனா “அண்ணி, ஒரு அம்பது ரூபா தாங்களேன்” என்றாள் கரத்தை நீட்டி அவசரமாக. 

“அக்கா, ஆயிர ரூபாய்க்குலாம் கணக்கு பாக்காத. உன் தம்பி பாவமில்லையா?” மறுமுனையில் ஒருவன் இறைஞ்சிக் கொண்டிருந்தான்.

அலைபேசியைக் கழுத்தோடு சரித்த மாது, தனது கைப்பையைத் துலாவி ஓர் ஐம்பது ரூபாய்த் தாளைத் தந்தருளினாள்.

அந்நற்செயலுக்கு நன்றி சொல்லக் கூட நேரமில்லாமல், அதைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினாள் சுலோ. அதைத் தொடர்ந்து மதுவின் குரல் ஓங்கி ஒலிக்கவே, மாதுவின் நெற்றி சுருங்கியது‌‌.

“இருடா, மாரி. திருப்பிக் கூப்புட்றேன்” என்று தம்பியை ஓரங்கட்டியவள் வரவேற்பறைக்கு விரைந்தாள்.

அங்கு அவள் கொடுத்த ஐம்பது ரூபாயை, மதுசூதனன் சூரிய வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“பாப்பா, நான் உன்கிட்ட என்ன கேட்டேன்?”

“ஐம்பது ரூபா” சுலோ திருதிருத்தாள்.

“நான் கொடுத்த ஐம்பது ரூபா எங்கனு கேட்டேன்”

“அது தான்ணா இது”

“இது அதில்ல” என்றவன் அந்த ரூபாய்த் தாளை மடித்து தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தினான்.

“அண்ணா..‌.” கடைக்குட்டி பரிதவித்தாள்.

“அந்த ஐம்பது ரூபாயைக் கண்டுபிடிக்குற வரைக்கும் உனக்கு ஒத்த பைசா தர மாட்டேன். அம்மா, நீயும் இவ கேட்டா காசு எதுவும் கொடுக்காத. அவ்ளோ அலட்சியம்! இல்லை, பாப்பா?” அவன் தன் கரங்களைப் பின்னால் இறுக்கியபடி வினவ, எதிரில் நின்றவளுக்குத் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

“அண்ணா, வெறும் ஐம்பது ரூபா தானண்ணா” தயக்கத்துடனே உரைத்தாள்.

“எனக்குக் கோவம் வரதுக்குள்ள ஓடிடு” அவன் கண்களை மூடி எச்சரித்தான்.

சூழ்நிலை உணர்ந்து மகளை அங்கிருந்து அகற்ற முயன்றார் சிந்தாமணி “ம்ச், போய்த் தேடேன்டி. இங்கத் தான் எங்கயாவது மறந்து வச்சிருப்ப. அதுக்குள்ள அந்தப் பணத்துக்கு ரெக்கை முளைச்சுப் பறந்து போயிடுச்சா?” 

“நீயும் அவ கேக்குறான்னு காசைத் தூக்கிக் கொடுத்துட்டுருக்காத. அவளுக்கு உழைச்ச காசோட அருமை புரியணும்” என்று மாதுவுக்கு அறிவுறுத்தியவன் அறைக்குள் புகுந்தான்.

புயல் வேகத்தில் போகிறவனை ஆவெனப் பார்த்தபடி அத்தையிடம் இவள் கேட்டாள் “இவருக்குக் கோவம்லாம் கூட வருமா, அத்தை?” 

“ரொம்ப வரும். முன்னலாம் அவன் கோவப்பட்டா இந்த வீடே தாங்காது. ஆனா, இப்போ அப்படி இல்லமா. அவங்க அப்பா செத்த அன்னைக்கே, கோவத்தையும் சேத்து எரிச்சுட்டான்” என்றார் அவர்.

சுலோச்சனா அந்த ஐம்பது ரூபாயைத் தேடித் தீர்த்துவிட்டு, கண்ணீர் வடித்தவாறே கல்லூரிக்குப் புறப்பட்டாள்.

“சுலோ… அழாத, சுலோ. கொஞ்சம் நில்லேன்” என்று அழைத்த வண்ணம் இவள் தன் நாத்தனாரைப் பின்தொடர, அவள் நிற்காமல் சென்றுவிட்டாள்.

“விடும்மா. அவளே சரியாகிடுவா” என்ற சிந்தாமணி இவளுக்கு உணவு பரிமாறினார்.

குளியல் முடித்து தலையைத் துவட்டியபடி வந்த மது “சீக்கிரம் கிளம்பு. எனக்கு வேலை இருக்கு” என அதட்டலோடு கூற, மடமடவென்று உணவை விழுங்கினாள் மாது. 

ஐம்பது ரூபாய்க்கே அவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்க, தம்பிக்காக ஓராயிரத்தைக் கேட்க அவள் துணியவில்லை. உடையவன் உர்ரென்று வாகனத்தைத் திருகியபடி வர, அவளுடைய மூளைக்குள் பல எண்ணங்கள் சடுகுடு ஆடின. 

“ஹ்ர்க்கும்…‌ காலேஜ் வந்துருச்சு. அந்த மண்டைக்குள்ள அப்படி என்ன தான் ஓடுதோ!” அவன் முனகிக் கொண்டே வண்டியை நிறுத்தினான்.

அவள் பட்டென வினவினாள் “யார் அந்தப் பொண்ணு?”

“எந்தப் பொண்ணு?” வார்த்தைகள் நிதானமாக வந்தாலும் விழிகள் பதற்றத்துடன் அப்படியும் இப்படியுமாக உருண்டன.

அவள் அழுத்தந்திருத்தமாகக் கொக்கி வீசினாள் “நடிக்காதீங்க. நேத்து நைட் உக்காந்து கதை பேசிட்டு இருந்தீங்களே; அந்தப் பொண்ணு. நீங்களா சொல்லுவீங்கன்னு பாக்குறேன். வாயவே திறக்க மாட்றீங்க” 

“எல்லாம் உன் டிரெய்னிங் தான்” அவன் சமாளிக்க முயன்றான்.

“மழுப்புறீங்கன்னு அப்பட்டமா தெரியுது”

“வேணும்னா நைட்டு கடைக்கு வா; சொல்றேன்” அவன் ஆழ்ந்த குரலில் கூறினான்.

அவள் சளைக்காமல் அவனைக் கேள்வியால் துளைத்தாள் “ஏன், இந்த மாதிரி இரகசியம்லாம் பேச அது தான் இராசியான‌ இடமா?” 

“அப்படியும் வச்சுக்கலாம்”

“அப்படி உங்க பாருக்கு வந்து தான் தெரிஞ்சுக்கணும்னா, அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சுக்காமலே இருந்துக்குறேன்; விடுங்க”

“அப்போ சரி” என்று தோள்களைக் குலுக்கியவன் வாகனத்தை வளைத்துக் கொண்டு கிளம்பினான்.

சில விநாடிகள் கழித்து அவள் திரும்பி நோக்க, அவன் இயல்பாகக் கல்லூரி வாயிலைக் கடந்து மறைந்தான். அவள் எதிர்பார்த்தபடி அவன் மருந்துக்கும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. எதிர்பாரா வகையில் அந்த மர்ம நங்கை அவளின் இதயத்தில் புகைச்சலை மூட்டினாள். ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து அவள் பாடத்திற்கான குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, கல்லூரி முதல்வர் அழைப்பதாக அலுவலகச் சிப்பந்தி வந்து தெரிவித்தார். காலையிலேயே தனக்குக் காத்திருக்கும் வில்லங்கம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபடியே அவள் முதல்வர் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு நின்றிருந்த சத்யா தான் முதலில் பேசினான் “வாங்க, மாது மேம். இந்தப் பையனைப் பத்தி முன்னவே நாம நினைச்சது சரியா போச்சு. இவன் லாஸ்ட் பெஞ்ச்ல உக்காந்துட்டு மொபைல் பாத்தது மட்டுந்தான் இதுவரை நமக்குத் தெரிஞ்சது. நேத்து கிளாஸ் நடத்திட்டு இருக்கறப்ப, கஞ்சாவே அடிக்க ஆரம்பிச்சிட்டான்”

“நீங்க தானே அந்தப் பையனோட கோஆர்டினேட்டர். என்ன மேம் இதெல்லாம்? ஆரம்பத்துலயே கண்டிக்க மாட்டீங்களா? எப்படி இவ்ளோ தூரம் போக விட்டீங்க?‌ இப்டியே போனா நம்ம காலேஜ் ரெப்புடேஷன் என்னாகுறது!” முதல்வர் அவளைப் பேச விடாமல் குதியாய்க் குதித்தார்.

“இவனோட அப்பன், ஆத்தா இவனுக்காகச் சொத்து சேக்குறேன்னு ஃபாரின்ல போய் உக்காந்துருக்காங்க. இவன் என்னனா தருதலையா சுத்துறான். இவனுக்கு இந்த வஸ்துலாம் எப்படிக் கிடைக்குதுன்னே புரியல. பேருக்குச் சாதாரணமா ஒரு டிகிரி கூட வாங்க மாட்டான் போல” அந்த மாணவனுடைய தாத்தா தோள் துண்டால் வாய் பொத்தி அழுதார்.

“இருங்க ஸார் நான் விசாரிக்கிறேன். கிருஷ், உனக்கு டிரக் யூஸ் பண்ணுற பழக்கம் இருக்கா?” என்றாள் அவள் நிதானமாய்.

“நீங்களாம் பதர்ற அளவுக்கு இதுவொரு விஷயமே கிடையாது. கஞ்சா ஒரு சாஃப்ட் டிரக் தான். சில் பண்ணுங்க, கைய்ஸ்” அவன் பேசிய விதம் அப்போதும் அவன் போதைப் பொருளின் ஆளுகையில் இருப்பதாகப் பறைசாற்றியது.

“எவ்ளோ திமிரா பேசுறான்; பாருங்க, மேம்” சத்யாவுமே கொதித்துப் போனான்.

“இது தப்பு, கிருஷ். உனக்கு இப்போ தான் பதினெட்டு வயசு ஆகிருக்கு. எது சரி, தப்புனு இன்னும் உன்னால பிரிச்சுப் பாக்க முடியல. அதனால, பெரியவங்க சொல்றதைக் கேளு”

“சரி, தப்பைப் பத்தி நீங்க பேசாதீங்க. உங்க இல்லீகல் பிசினஸ் பத்தி எனக்குத் தெரியாதா?” அவளின் தனிப்பட்ட சங்கதியைப் பொதுச்சபையில் இழுத்தான் அவன்.

“ஏன்டா இப்படிப் பாடம் கத்துத் தர டீச்சரை எதுத்து எதுத்துப் பேசுற? உருப்படாத பயலே!” அவனின் தாத்தா வசைபாடினார்.

“கிருஷ், உனக்கு நான் ஒரு வித்தியாசத்தைப் புரிய வைக்க விரும்புறேன். டிரிங்கிங் ஆல்கஹால் இஸ் லீகல் இன் அவர் கன்ட்ரி. தமிழ்நாட்டுல இருபத்தியோரு வயசுக்கு மேல யார் வேணாலும் குடிக்கலாம்‌னு சட்டம் இருக்கு. சட்டப்படி அது சரியானதா இருந்தாலும் தார்மீக ரீதியா அது தப்பு. இதையே தான் அன்னைக்குக் கிளாஸ்லயும் நான் சொன்னேன். போதைப் பொருள் மத்தவங்களைப் பாதிக்குதோ இல்லையோ, உன்னையும் உன் குடும்பத்தையும் தான் அதிகமா பாதிக்கும். இப்போ பாரு; நீ டிரக்ஸ் யூஸ் பண்றதால உன் படிப்பு பாதிக்குது; உங்க தாத்தா, இவ்ளோ பெரிய மனுஷன், வயசுல சின்னவங்களான எங்க முன்னாடி கூனிக் குறுகி நிக்கிறாரு. நீ தப்பு செஞ்சதைக் கூட விடு. ஆனா, செஞ்ச தப்பை இன்னுமே உணராம இருக்க பாரு. அது ரொம்ப பெரிய தப்பு, கிருஷ். சத்யா ஸார்ட்டயும் பிரின்சிபால் ஸார்ட்டயும் உன் தப்பான நடத்தைக்காக மன்னிப்பு கேளு”

அவன் தன் தவற்றை ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை; தனது நிலைப்பாட்டிலேயே திண்ணமாக நின்றான்.

“மேம், நீங்க என்ன ஸ்டூடன்ட்ஸ்ட்டலாம் கெஞ்சிட்டு இருக்கீங்க‌! அவனோட அட்டென்டன்ஸ் ரொம்ப லோவா இருக்கு. அதைக் காரணமா வச்சு, இந்த செம் எக்ஸாம அவனை எழுத விடாதீங்க. அப்போ தான் இவனுக்குப் புத்தி வரும்” என்றார் முதல்வர் அதிரடியாக.

“வேணாம், ஸார். அப்படிலாம் பண்ணிடாதீங்க. ஹி இஸ் எ பெலோவ் ஆவெரேஜ் ஸ்டூடென்ட். ஏற்கனவே நாலு அரியர் வச்சிருக்கான். அவனால இந்த பிரஷரைத் தாங்க முடியாது. அவசரப்பட்டுராதீங்க” அவனுக்குப் பதிலாக அவள் முன்வந்து போராடிக் கொண்டிருந்தாள்.

“இனிமே நான் காலேஜுக்கே வர மாட்டேன். போங்கயா, நீங்களும் உங்க காலேஜும்!” என்று கூறி அவன் அலட்சியத்தோடு வெளியேறினான்.

“அவனுக்குப் பயம் இல்ல. வாழ்க்கையில சிலதுக்குப் பயந்து தான் ஆகணும்‌. அந்தப் பயத்தை நாம தான் அவனுக்குக் காட்டணும்” முதல்வர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

முதல்வர் அந்த முதியவரிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்ப, மற்ற இருவரும் வெளியே வந்தனர்‌.  

“ஸாரி, மாது. காலையிலயே டென்ஷன் ஆயிட்டீங்களா? உங்கள்ட்ட முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணி‌ இருக்கணுமோன்னு இப்போ ஃபீல் பண்றேன்”

“அதனால ஒன்னும் பிரச்சனையில்ல, சத்யா ஸார். கிருஷ் பாக்கத் தான் முரட்டுத்தனமா தெரிவான்; பட் ரொம்ப சென்ஸிடிவ் டைப். பிரின்சிபால் ஸார் சொன்னதை அவன் எப்படி எடுத்துக்கப் போறானோ தெரியல‌. அதான் என்னோட கவலையே”

“அவனை இப்படியேவும் விட முடியாதே, மாது. இப்பவே அவனைத் திருத்துனா தான் உண்டு. நல்ல முறைலயோ, கெட்ட முறைலயோ அவன்கிட்ட எதாவது மாற்றம் வருதானு பாப்போம்”

“ஷ்யூர். இன்னும் க்ளோஸா அவனை மானிட்டர் பண்ண முயற்சிக்கிறேன்” 

இருவரும் அந்த மாணவனின் நலனே குறிக்கோளாக உரையாடி, தத்தமது வகுப்புகளுக்குப் பிரிந்து சென்றனர்.

***

அன்று மாலை முதல் காரியமாக மாதுளை போய் நின்ற இடமோ மிஸ்டிக் மது விடுதி. அவளைக் கண்ட தீபக் கௌரா, அதாவது நம் இந்திவாலா, நேரே சென்று மதுசூதனனிடம் தகவல் தெரிவித்தான். அவள் அவ்விடம் வருகை தந்திருப்பதை நம்ப இயலாமல், அவன் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தான்.

“நான் உங்கள்ட்ட பேசணும்” அவள் வாட்டமான முகத்துடன் மொழிந்தாள்.

அவ்விருவரும் கீழேயிருந்த வாகனம் நிறுத்தும் பகுதியை அடைந்தனர்‌. அவள் சங்கடமில்லாமல் அமரும் வகையில், அவன் தன் அலுவல் வாகனத்தைச் சுத்தப்படுத்தினான். அதன் பின்புறம் அவள் வசதியாக அமர்ந்து கொள்ள, அவன் அவளைப் பார்த்தபடி எதிரே அமர்ந்தான். அவள் இன்று காலை கல்லூரியில் நடந்ததை முழுமையாக அவனிடம் ஒப்பித்தாள்.

அதற்குக் கவனமாகச் செவிமடுத்தவன் “விடு. அவனோட செயல்களுக்கான பலனை அவன் அனுபவிக்கிறான். அதுக்காக நீ என்ன செய்ய முடியும்? இருபத்து நாலு மணி நேரமும் கேமரா வச்சு கண்காணிக்கவா முடியும்!” என்றான் ஆறுதலாக.

“அவன் எல்லார் முன்னாடியும் நம்ம கடைப் பேரை இழுக்குறான். இதுக்காகத் தான் நான் இந்தத் தொழில் பிடிக்கலைன்னு சொல்றதே. உங்களுக்குப் புரியுதா?”

காதுமடலைத் தடவியவாறு அவன் தன் மனக் கிடங்கைத் திறந்து காட்டினான் “ம்ம். எனக்கும் நான் பார் வச்சு நடத்துறது பெருமையாலாம் இல்ல. யாராவது என் தொழில் என்னனு கேட்டு பதில் சொல்றப்போ, லைட்டா கூச்சமா தான் இருக்கும். ஆனா, நானா இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கல‌. நான் அன்னைக்குச் சொன்னேன்ல; எங்க அப்பா பத்தி. அவரோட உயிர்த் தியாகத்துக்காக அரசாங்கத்துட்டருந்தும் கட்சி சார்பாவும் அப்பவே இருபது இலட்சத்துக்கும் மேல இழப்பீட்டுத் தொகை கிடைச்சுச்சு. அப்போதைக்கு மாமாவும் பொருளாதார ரீதியா கீழ இருந்தாரு; கைல எடுத்த எல்லா தொழில்லயும் நஷ்டமாகித் தள்ளாடிட்டுருந்தாரு. அவரு இந்தக் காசைத் தாடான்னு என்கிட்ட ஒருநாள் கேட்டாரு. நான் ஏன்னு கூட கேக்காம தூக்கிக் கொடுத்துட்டேன். இந்த விஷயத்துல அம்மாவுக்கும் எனக்கும் மனக் கசப்பாயிடுச்சு. யாரையும் இந்தளவு கண்மூடித்தனமா நம்பக் கூடாதுனு அட்வைஸ் பண்ணாங்க. அதுக்கேத்த மாதிரியே, பணம் வாங்கிட்டுப் போன மாமாவும் கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு எங்க வீட்டுப் பக்கமே வரல. அப்போ நான் அப்பாக்குத் தெரிஞ்சவரோட அரிசி குடோன்ல இன்வென்டரி மேனஜரா வேலை பாத்துட்டு இருந்தேன். அதுல வந்த சம்பளம் மூனு வேளை சாப்பாட்டுக்கே பத்தல. ஒவ்வொரு நாளும் கஷ்டமா தான் போச்சு. அந்த நிலைமைலயும் நான் என் மாமாவத் தேடிப் போகல. அவராவே மறுபடி வந்தாரு. அவரு என்னை முதல் முறையா இந்த பாருக்குக் கூட்டிட்டு வந்த நாள் இன்னும் எனக்கு மறக்கல. அப்போல இருந்து இப்போ வரை எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் இது தான். மாமா நிறைய பிசினஸ் பண்ணி, தோத்து, துவண்டு போய் கடைசியா ஜெயிச்சது இந்தத் தொழில்ல தான். அந்த ஃபார்முலாவ எனக்கும் கத்துத் தந்தாரு. ஒரு கட்டத்துல எனக்கே இந்தக் கடைய எழுதி வச்சிட்டாரு. ஒரு தொழிலை ஸ்க்ராட்ச்லருந்து ஆரம்பிக்குறதுங்குறது அவ்ளோ ஈஸி கிடையாது, மாது. எனக்குப் புது தொழில் யோசிக்குற அளவுக்கு நேரமும் இல்ல. முதல்ல தங்கச்சிங்க படிப்பு, அவங்களோட சடங்கு, கல்யாணம், தங்கச்சிப் பிள்ளைங்களுக்குக் காதுகுத்துனு போனுச்சு. ரிஷிக்கு நாந்தான் சூப்பர் மார்க்கெட் வைக்க உதவுனேன். கொஞ்ச வருசமா அம்மாக்கு ஹெல்த் செக்அப், சுலோக்குக் காலேஜ் ஃபீஸ்னு போயிட்டுருக்கு. இப்போ நம்ம கல்யாணச் செலவு. அடுத்து ரம்யாவோட பொண்ணுங்க வயசுக்கு வரும். அவங்களுக்கு மாமன் சீர் செய்யணும். இதுக்குலாம் இங்க்லீஷ்ல ஏதோ வார்த்தை சொல்லுவாங்களே?”

“கமிட்மென்ட்ஸ்” அவள் அமைதியோடு இயம்பினாள்.

“ஆன், கமிட்மென்ட்ஸ். அடுத்தடுத்து பணத் தேவை இருந்துட்டே இருக்கு. நானும் எனக்குத் தெரிஞ்ச முறையில, இருக்குறதை எப்படியாவது தக்க வச்சுக்கணும்னு ஓடிட்டே இருக்கேன். இத்தனைக்கும் நடுவுல என்னால இந்தத் தொழிலை விட முடியுமா; நீயே சொல்லு. நான் ஒன்னு கேக்குறேன். எனக்காக அதைச் செய்வியா?”

“சொல்லுங்க”

“எனக்குப் பதில் நீயே ஒரு நல்ல பிசினெஸ் ஐடியா யோசி. நம்மளால அந்த யோசனையை நடைமுறைப்படுத்த முடியுதான்னு பாப்போம்”

“என்னால யோசிக்க முடியாதுனு நினைக்கிறீங்களா?” அவள் வில்லெனப் புருவமுயர்த்தி வினா தொடுத்தாள்.

“இல்லை. நான் கேலி பண்ணல; கிண்டல் செய்யல. உன்னால மட்டுந்தான் இது முடியும். இந்த ஊருக்கு, ஏரியாக்கு ஏத்த மாதிரி, நல்லா வியாபாரம் ஆகுற ஒரு தொழில்”

“சரி, யோசிப்போம். இப்போ சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க” அவள் கரங்களைக் கட்டி நிமிர்ந்தாள்.

“என்ன சொல்லணும்?”

“அந்தப் பொண்ணு…” இவ்வளவு நேரமாக அவள் கட்டிக் காத்த நிதானத்தை இப்போது காணவில்லை‌.

“இன்னும் அதை நீ மறக்கலையா?”

அவள் அவனைக் கூர்மையாக உற்றுநோக்கினாள். அந்தப் பார்வை வீச்சை ஆடவனால் தாங்க இயலவில்லை.

“அவங்க நம்ம கடையோட இன்டீரியர் டிஸைனர்; பேரு அனுஷா; ஊரு திருப்பூர்”

“கல்யாணம் முடிஞ்ச இராத்திரி நாம பேசிட்டு இருந்தோமே; ஞாபகமிருக்கா? அப்பவே இந்த ரீடிஸைனிங் வேலைலாம் முடிஞ்சுருச்சுனு சொன்னீங்க!”

“ஆமா…” அவன் ஆட்காட்டி விரலால் நெற்றியைச் சுரண்டினான் “இந்தப் பக்கமா ஏதோ வேலையாம். அப்டியே பாத்துட்டுப் போலாம்னு வந்துருப்பாங்க”

“திருப்பூர் எங்க இருக்கு? நம்மூரு எங்க இருக்கு?”

“அவ்ளோ தூரத்துல இருந்து, வருஷா வருஷம் வந்து அவங்க நமக்கு வேலை பாத்துத் தர்றதில்லையா? அதே மாதிரி தான்”

அவள் மீண்டும் உறுத்து நோக்கினாள்.

“உண்மையச் சொல்லிட்றேன். அந்தப் பொண்ணுக்கு முன்ன இருந்தே என் மேல கொஞ்சம் கிரேஸ் ஜாஸ்தி” முன்னுக்குப் பின் பதங்கள் முரணாய் வந்து விழுந்தன.

“இந்த வார்த்தையலாம் எங்கருந்து கத்துக்கிட்டீங்க?”

“அனுஷா சொன்ன வார்த்தை தான். மது நீங்க முகத்தால மட்டுமில்லாம மனசாலயும் ரொம்ப அழகு‌; ஐ’ம் கிரேஸி அபௌட்‌ யூ அப்படின்னு சொல்லும்” அதைக் கூறும்போது அவன் முகம் வெண்ணெய் திருடி அகப்பட்ட கண்ணன் போல திகழ்ந்தது.

“அனுஷாவும் அழகா தான் இருக்கா; படிச்சிருக்கா; மாடர்னா இருக்கா. அவளையே கல்யாணம் பண்ணிருக்கலாமே”

“ச்ச்ச ச்ச்ச, நமக்கு அதுலாம் செட்டாகாது. ஒன்லி… அரேஞ்ஜ் மேரேஜ் தான் செஞ்சுப்பேன்னு அம்மா மேல சத்தியம் பண்ணிருக்கேன்” தன் விருப்பத்திற்குக் கதையளந்தான் அவன்.

“இதெல்லாம் ஒரு காரணம்!”

“அந்தப் பொண்ணு மேல அவ்ளோவா இன்ட்ரெஸ்ட் வரலைனு வச்சுக்கோயேன்”

“பார்றா.‌ அவ்ளோ லுக்கா இருக்குற பொண்ணையே ஸாருக்குப் பிடிக்கலையா? அப்போ நான்லாம் எந்த மூலைக்கு! அத்தை சொன்னாங்கங்குற ஒரே காரணத்துக்காகத் தான் என்னைக் கல்யாணம் பண்ணிருப்பீங்க போலவே”

“ஹிஹிஹீ” உள்ளுக்குள் புதைந்து கிடந்த காதல் வரலாற்றை வெளிக்கொணரத் தெரியாமல் திணறினான் அவன்.

“அப்போ உங்க வாழ்க்கைல நீங்க யாரையும் காதலிச்சதே இல்லையா? ஃப்ரெஷ் ஹார்ட்டா?”

“யார் சொன்னா? நான்… நான் காதலிச்சிருக்கனே”

“ஸ்கூல் படிக்கும்போதா? புரியாத வயசு; அறியாக் காதல்?”

“இல்லல்ல. நான் வயசுக்கு வந்த அப்பறம்… ச்ச், எனக்கு வயசு வந்த அப்பறம் டீன்ஏஜ்லாம் தாண்டி, தெளிவான மனநிலைல ஒரு பொண்ணைக் காதலிச்சேன்”

“அது யாரு? எந்த ஊர்க்காரி?”

“ரோஜாப்பூ இரவிக்கைக்காரி. ரோஜா தான் அவளோட‌ முகவரி”

அவள் திகைப்படைந்தாள் “என்ன? இதுல செல்லப்பேர் வேறயா?”

“மேல சொல்லவா?”

“ஆஹ்ஹ்… இவ்ளோ அதிர்ச்சிய ஒரே நாள்ல ஹேன்டில் பண்ண எனக்குத் தெம்பில்லப்பா; அல்ரெடி பசிக்க ஆரம்பிச்சுருச்சு; தலைவலிக்குது” அங்ஙனம் புலம்பும் போது அவளின் வெண்டை விரல்கள் நெற்றியை நீவி, வயிற்றை வருடி, நெஞ்சில் அழுந்தப் பதிய அதில் ஒரு மோதிரமாகத் தான் இருந்திருக்கக் கூடாதா என ஏக்கம் கொண்டான் அவன்.

அவனின் மௌன மொழி புரியாமல் அவள் வினாவாய்க் கரம் உயர்த்த, “பசிக்குதா? அச்சோ.‌‌..” என்று அம்சமாக உச்சு கொட்டினான் அவன்.

அவனது பாவனை கண்டு அவளுள் எரிமலையாய் எரிச்சல் மூண்டது; கண், காது, நாசித் துவாரம் வழியே புகை வராத குறை தான்! 

***

You may also like

2 comments

Sivakami February 14, 2026 - 3:45 pm

adei aprasandi

Reply
Ezhilmathi GS February 14, 2026 - 4:53 pm

🤣🤣

Reply

Leave a Comment

About Me

Featured