Home Antiheroசரி – 05

எபிசோட் – 5

மாலை மெல்ல மெல்ல அந்த வீட்டை இரவாக மாற்றிக் கொண்டிருந்தது. வீட்டில் இருந்த கூட்டம் சற்றுச் சுருங்கியிருந்தாலும், அந்த வீட்டின் காற்றில் இன்னும் சோகத்தின் கனத்த தன்மை அப்படியே இருந்தது.

நாள் முழுவதும் நடந்த சடங்குகள், உறவினர்களின் வருகை, அவர்கள் பேசிக்கொண்ட பேச்சுகள் எல்லாம் சேர்ந்து ஆதினியின் மனதைப் பெரிதாக சோர்வடையச் செய்திருந்தது. 

வீட்டுக்குள் இருந்த சத்தமும், பார்வைகளும் அவளுக்குள் ஒரு அழுத்தத்தை உண்டாக்கியதால், அவள் மெதுவாக வெளியே வந்து பின்புற வராண்டாவில் நின்றாள். அந்த குளிர்ந்த காற்று அவள் முகத்தில் பட்டது. ஆனால் அந்த குளிர் கூட அவள் மனதில் இருந்த கனத்தையும், வெப்பத்தையும் குறைக்கவில்லை. 

ஒரு நாளுக்குள் அவளுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது போல இருந்தது. நேற்று வரை அவள் இந்த வீட்டை வெளியில் இருந்து பார்த்தவள். அத்தை வீடு என்பதைத் தாண்டி, பெரிதாக எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. இன்று அந்த வீட்டின் மருமகளாக அந்த வீட்டில் நின்று கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த இடத்தில் அந்த மருமகளுக்கான எந்த ஒரு உணர்வும் அவளுக்கு உண்டாகவில்லை. அதற்குள் தனக்குப் பின்னே காலடி சத்தம் கேட்க, மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.

வேந்தன்.! அவளுடைய கணவன் வந்து கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் இன்னும் இறுக்கமும் சோகமும் அப்படியே இருந்தது. நாள் முழுவதும் பலருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவன் மனநிலை அமைதியாக இல்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. 

சில அடிகள் தூரத்தில் வந்து நின்றவன், அவளை சில நொடிகள் கவனமாக பார்த்தான். அந்த பார்வையில் ஒரு வகையான கடுமை இருந்தது. பிறகு நேராகவே கேட்டான். “இங்கே என்ன பண்ற.?” அவன் குரல் சாதாரணமாக இருந்தாலும் அதில் ஒரு கடினத்தன்மை இருந்தது. 

ஆதினி சற்றே தயக்கத்துடன், “சும்மா… கொஞ்ச நேரம் அப்படியே வெளிய நிக்கலாம்னு வந்தேன்,” என்றாள். குரல் உள்ளே போயிருந்தது. 

வேந்தன் நக்கலாக சிரித்தான். அந்த சிரிப்பில் ஆதினிக்கு எதுவும் புரியவில்லை. கணவனை கேள்வியாக பார்க்க,

“இந்த வீட்டுல உனக்கு காத்து வாங்குற அளவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?” என்று அவன் கேட்ட விதம் ஏளனமாக இருந்தது.

அந்த வார்த்தை ஆதினியின் மனதை சற்றே உறுத்தியது. அவள் புருவம் சுருக்கியபடியே “நேராக என்ன சொல்லணுமோ சொல்லுங்க?” என்றாள் மெதுவாக.

வேந்தன் ஒரு நொடி அமைதியாக நின்றான். பிறகு மெதுவாக அவள் அருகே வந்து, அவளைப் பார்த்து நேராகவே, “நீ இந்த வீட்டுக்கு வந்த நாளே, மொத்தமா எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.” என்றான் கடினமாக. 

அந்த வார்த்தை ஆதினிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவள் முகத்தில் அதை வெளிப்படுத்தவில்லை. 

“அதுக்காக என்னை குறை சொல்லுறீங்களா?” என்று மிகவும் கவனமாகவே கேட்டாள். வேந்தன் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகத்தில் இருந்த கடினம் அவனுடைய ‘ஆம்’ என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியது. 

சில நொடிகள் கழித்து அவன் மெதுவாக சொன்னான். “கல்யாணம் நடந்து ஒரு நாள் கூட ஆகல, இப்போ என் அம்மா என்கூட இல்லை.” அந்த ஒரு வரி ஆதினியை மொத்தமாக சுழற்றி எரிந்தது. ஆதினியின் முகம் சற்றே மாறியது. அந்த வார்த்தையின் வலி அவளுக்கும் ஏற்பட்டது. 

“நடந்ததுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? அவங்களுக்கு இப்படி ஆகும்னு எனக்கு எப்படி தெரியும்?” என குரலை உயர்த்தாமல் அமைதியாகவே கேள்வி கேட்டாள் ஆதினி.

வேந்தன் சட்டென அவளை பார்த்தான். “ஆனா நடந்தது நடந்துதான்,” என்றவன், “உன்னோட ராசி அவங்களை காப்பாத்தி கொடுக்கும்னு நம்பினேன்.” உணர்ச்சிகளற்ற குரலில் கூற, அவனின் அந்த குற்றச்சாட்டு நேரடியாக அவள் மீது விழுந்தது. 

ஆதினி ஒரு நிமிடம் அவனை தீர்க்கமாக பார்த்தாள். பிறகு மெதுவாக புன்னகைத்தாள். அந்த புன்னகையில் அத்தனை வலி, அத்தனை வேதனை, அத்தனை கோபம்.

“என்ன சொல்ல வரீங்க? இந்த கல்யாணம் நடக்கலன்னா, அத்தை இறந்திருக்கமாட்டாங்களா?” என்றாள். 

“ஏய்..” என கத்தியவன் பின் சட்டென அமைதியானான். சில நிமிடம் பதிலே சொல்லவில்லை. பதில் சொல்லவில்லை என்பதையும் தாண்டி, அவனுக்கு பதில் தெரியவில்லை என்பதே உண்மை. அவன் முகத்தில் கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்ட முடியாத இயலாமை அந்த முகத்தில் தெரிந்தது. 

ஆதினி மெதுவாக சொன்னாள். “இந்த கல்யாணம் என்னோட விருப்பத்துல நடக்கல. இப்போவே இங்க இருந்து போன்னு சொன்னாலும் நான் போய்டுவேன். எனக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்ல.. என் அப்பா மட்டும் சரின்னு சொல்லனும்..” என அவனைப் பார்த்து மிகவும் நிதானமாகவே சொன்னாள். 

வேந்தன் உடனே, “என்ன பேசுற நீ?” என ஆத்திரமாக கேட்டான். அவன் குரலில் எரிச்சலும், கோபமும் சர்பாதியாக இருந்தது. 

“என்னை பேச வச்சது நீங்க?” என்றவள், “இந்த வீட்டுக்கு நான் ஒன்னும் தானா வரல? உங்க அம்மா தான் இந்த கல்யாணம் நடக்கணும்னு சொன்னாங்க என்னை இதுல இழுத்துவிட்டாங்க. அவங்க நிம்மதிக்காக என் அப்பா என்னை கூட கேட்காம சரின்னு சொன்னார். அவங்க நிம்மதியா போயிட்டாங்க. இப்போ நான் தான் நிம்மதியில்லாம தவிக்கிறேன்..” என்றாள் படபடவென.

ஆதினியின் வார்த்தைகள் வேந்தனை ஒரு நொடி அமைதியாக்கியது. அவன் பார்வையும் சற்று மாறியது. ஆனால் அந்த அமைதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

“அது எல்லாம் இப்போ முக்கியம் இல்ல, முக்கியம் என்னனா, இப்போ இந்த வீட்டுல என்ன நடந்திட்டுருக்குனு உங்களுக்கு தெரியனும். தெரிஞ்சு வச்சிருக்கனும்.” என்றான் கடுமையாக.

ஆதினி உடனே பட்டென பதில் சொன்னாள். “எனக்கு தெரியாத மாதிரி பேசாதீங்க. நான் இன்னும் கூட இதே வீட்டுலதான் இருக்கேன்.” அவள் குரல் அமைதியாக இருந்தாலும் அதில் உறுதி இருந்தது. 

வேந்தன் அவளை ஒரு நொடி கவனமாக பார்த்தான். “அப்படின்னா உனக்கு இன்னும் புரிஞ்சிருக்கணும், இந்த வீட்டுல இப்போ யாருக்கும் புது மருமகளை ஏத்துக்கற மனநிலை இல்லை. நீ தான் எல்லாரையும் பொறுப்பா பார்த்துக்கணும்.” என்றான் நிதானமாக.

“அதுக்காக நான் என்ன செய்யணும்? நான் இங்க இருந்து போயிடணுமா? போகனும்னா போயிடுறேன்” என்றாள் வேண்டா வெறுப்பாக.

அத பேச்சில் வேந்தன் முகம் சுருக்கினான். பின் “அது உன்னோட விருப்பம்.” என்றான் பட்டென.

“நான் போயிட்டா உங்க பிரச்சனை தீர்ந்திடுமா?” என்று அவள் உடனே கேட்டாள். 

அந்த கேள்வி வேந்தனை ஒரு நொடி நிதானப்படுத்தியது. ஆதினி தொடர்ந்து  “நான் போனா… உங்க அம்மா திரும்பி வந்துடுவாங்களா?” என்றாள் ஆத்திரமாக.

வேந்தனின் மனம் அந்த வார்த்தையில் திடுக்கிட்டது. அவன் கண்களில் கோபம் ஒரு கணம் மின்னி மறைந்தது. ஆனால் அவள் சொன்னது உண்மை என்பதால் அமைதியாகிவிட்டான். ஆதினி மெதுவாக சொன்னாள். “நீங்க இப்போ கோபத்தில் பேசுறீங்க. அது எனக்கு புரியும். ஆனா அந்த கோபத்துக்கு காரணம் நான் இல்லை.” என நிதானமாக கூற,

சில நொடிகள் யாரும் பேசவில்லை. இருவருக்கும் இடையில் காற்று கனமாக உலாவிக் கொண்டிருந்தது. 

பிறகு ஆதினி மெதுவாக சொன்னாள். கணவனின் கோபத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ “நான் இங்க இருந்து போகனும்னு நினைக்கல.” அவள் பார்வை அவனை நேராக பார்த்தது.

பின் “இந்த கல்யாணம் என் முடிவும் இல்ல. ஆனா இப்போ நான் எப்படி இருக்கணும்னு முடிவு பண்ணுறது நான் மட்டும்தான்.” என்றாள் உறூதியாக.

வேந்தன் எதுவும் பேசவில்லை. அவளை அமைதியாகவே பார்த்தான். அவள் சொன்ன வார்த்தைகளில் பயம் இல்லை. அது அவனை சற்று ஆச்சரியப்படுத்தியது.

“அப்படின்னா உனக்கு விருப்பம் இல்லைன்னாலும் இங்கேயே இருக்கப் போறீயா?” என்று அவன் கேட்க, 

“ஆமாம்,” என்றாள் மிகவும் எளிதாக. “ஆனா ஒரு விஷயம் மட்டும் புரிஞ்சுக்கோங்க. நான் இங்கே யாரையும் கஷ்டப்படுத்த வரல. ஆனா யாராவது என்னை அவமானப்படுத்த நினைச்சா… அதை அமைதியா பார்த்துட்டு சும்மாவும் இருக்கமாட்டேன்.” என்றாள் சற்றே கடினமாக.

வேந்தன் சில நொடிகள் அவளை பார்த்தான். மனைவியின் வார்த்தைகள் அவனை சற்று சிந்திக்க வைத்தது. பிறகு மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். இரண்டு அடிகள் சென்றபின் நின்று,. திரும்பிப் பார்க்காமல் “நீ இங்கேயே இருக்கலாம்.” என்றவன், பின் சிறு இடைவெளிவிட்டு, “ஆனா எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது.” என்றான் கண்டிப்புடன்.

ஆதினி அதற்கு உடனே “எனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்ல.. அப்படியே ஐடியா இருந்தாலும் உங்ககிட்ட கேட்கவே மாட்டேன்.” என்றாள் மிகவும் சீரியசாக.

அந்த பதில் அவன் நடையை ஒரு நொடி நிறுத்தியது. அவன் வேகமாக திரும்பி அவளை பார்த்தான். ஆதினி அங்கே அமைதியாக நின்றிருந்தாள். அவள் முகத்தில் சோர்வு இருந்தாலும், பெரியளவில் வருத்தம் தென்படவில்லை. 

அந்த நேரம் வேந்தனுக்கு  அவள் புதிதாக தெரிந்தாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொல்லாமல் திரும்பி நடந்தான். அவன் காலடி சத்தம் மெல்ல கரையத் தொடங்க, ஆதினியின் மனதில் பாரம் ஏறத் தொடங்கியது..

ஆதினி அங்கேயே நின்றிருந்தாள். அவளுக்கு உள்ளே செல்லவே விருப்பமில்லை. அந்த இரவு காற்று இன்னமும் குளிர்ந்தது. 

ஆனால் அவள் மனதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது. இந்த வீடு அத்தனைச் சுலபமாக தன்னை ஏற்காது என. இத்தனை போராட்டங்கள் அவளுக்குத் தேவையே இல்லை. தாலி கட்டியதற்காக இவற்றையெல்லாம் அனுசரித்து போகவேண்டும் என்ற சட்டமும் இல்லை. ஆனால் அவளின் தந்தைக்கு பிடிக்காது. அவருக்காக இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகவேண்டும். 

அதனால் இந்த வாழ்க்கையை விட்டு அவள் விலகுவதில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.

You may also like

1 comment

M. Sarathi Rio March 16, 2026 - 9:41 pm

அட ராமா..! ஆதினிக்குத்தான் வேந்தனை விட சங்கடமும், சஞ்சலமும் அதிகம். இதுல இவன் அவளை குறை சொல்ல போயிட்டான் பாருங்களேன்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured