Home Anti Heroineதளிர் – 08

தளிர் – 08

by Vathani S

தளிர் 8

இங்கு இந்தியாவில் அனைவரும் அவரவர் யோசனையில் இருக்க, அங்கு லண்டன் பாரிஸ்டரிலோ குறுக்கும் நெடுக்குமாக நடந்தது அந்த நெடிய உருவம். கையிலிருந்த சிகரெட்டை ஆழ்ந்து ஒருமுறை உள்ளிழுத்து விட்டப்படியே நடந்து கொண்டிருந்தது.

அந்த நடையின் வேகத்திலும், இழுத்து விடப்பட்டப் புகையிலும் நொடிக்கொரு முறை, ‘ஷிட், ஷிட்…’ என்பதிலேயுமேத் தெரிந்தது அவனின் கோபம்.

“ஹேய் டார்லிங்! கூல் மேன். எதுக்கு இவ்வளவு டென்சன்? இந்த ப்ளான் எல்லாம் ஜஸ்ட் நம்ம இன்னும் இருக்கோம்னு காமிக்க மட்டும் தானே. இப்படி ஒரு எதிரி இருக்காங்கன்னு அந்த நிசப்திக்கு தெரியணும் அவ்வளவுதானே. அதைக் காட்டியாச்சு. இனிதான் நம்ம ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது.

இந்த ரெண்டு வருஷமா நம்ம யோசிச்சு வச்ச எல்லா ப்ளானையும் எஸ்கியூட் பண்ணப் போறோம். ஒரு ப்ளான் ஃபெயிலியர் ஆனாலும், இன்னொன்னு சக்சஸ் ஆகும். இதுக்காக ஏன் மேன் உனக்கு டென்சன்? பாரு இந்தக் குளிரிலும் உனக்கு எப்படி ஸ்வெட் ஆகிருக்கு?” என்றபடியே சட்டையில்லாத அவன் தேகத்தில், மார்பின் ரோமங்களைப் பிடித்து இழுத்தபடியே மையலாகப் பேசியவளின், விழிகளில் தெரிந்த மோகத்தில் வழக்கம் போல் சொக்கிப் போனவன், அடுத்த நொடி அவளது இதழ்களை சிறையெடுத்தான் காதலனாக.

நீண்ட முத்தத்திற்குப் பிறகு சோர்வாகிப் பிரிந்தன இதழ்கள் நான்கும். “மை லவ்” என மோகங்கள் கொட்டிய வார்த்தையோடு அவளை இறுக்கி அணைத்தான். அவளுக்கும் அவனது அந்த அணைப்புத் தேவைப்பட்டது என்பது போல அவனுக்குள் புதைந்து போனாள்.

அவளின் கட்டைக் கூந்தலுக்குள் இவனது விரல்கள் விளையாட, சட்டெனக் கைகளில் அள்ளிக்கொண்டுப் படுக்கைக்குச் சென்றான் அந்த நெடியவன்.

அகன்று கிடந்த அந்தப் படுக்கையின் ஓரத்தில் அவளைக் கிடத்திவிட்டு, அவள்மீது மொத்தமாகக் கவிழ்ந்தான். அந்தக் காலை வேளையில் காமன் வந்து தன் பணியினைத் தொடர, அங்கே அசுர வேகத்தில் ஆடைகள் களையப்பட்டது.

சில மணி நேரங்களில் ஓய்ந்து விழுந்தவனைப் பார்த்து ஒய்யாரமாகச் சிரித்தாள் அவள். அவன் கைகளை எடுத்து மீண்டும் தன் இடையை இறுக்கிக் கொண்டவாறே, “என்னாச்சு மேன் உனக்கு? அதுவும் இவ்வளவு யேர்லி மார்னிங்க்ல…” என அவன் மேல் கொண்ட மையலைக் கண்களில் தேக்கியபடியே கேட்க,

“ஐ டோன்ட் க்னோ ஸ்வே. என்னோட இந்த டூ இயர்ஸ்ல நான் இவ்வளவு டிஸ்டர்பா இருந்ததே இல்லை. எனக்கு என்னமோ ஏதோ தப்பு நடக்குற மாதிரியே இருக்கு.” என்றுவிட்டு மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

அவனது குழப்பமான முகத்தைப் பார்த்தவள் எழுந்து அவன் தோளில் சாய்ந்தமர்ந்து, “உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் விக்கி. நீ என் வாழ்க்கையைக் காப்பாத்திக் கொடுத்திருக்க, எத்தனையோ பேர் என் பின்னாடி சுத்தியிருந்தாலும், நான் உன் பின்னாடி உன் காதலுக்காக சுத்தியிருக்கேன். நீ எனக்கு கிடைச்சது வரம் விக்கி. உன்னை என்னால யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது விக்கி. ஐ லவ் யூ விக்கி. லவ் யூ சோ மச்…” என்றவளை இறுக்கியனைத்தவனும், “லவ் யூ டூ பேபி.” என்க, அவள் மேலும் அவனுள் புதைந்து போனாள்.

அணைத்திருந்தவனின் உடல் நெகிழ்ந்திருந்தாலும், உள்ளமோ நிசப்தியைக் கொன்றே ஆகவேண்டும் என்ற வெறியில் ஜொலித்தது. ‘எனக்குக் கிடைக்காத ஒரு பொருள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதற்கு இந்த விக்கி ஒருபோதும் விடமாட்டான்.’ என உள்ளுக்குள் கறுவியவன், நொடியில் தன் கைகளில் இருந்த ஸ்வாதியின் கழுத்தில் வாசம் பிடித்தான்.

சில நிமிடங்களில் அவளிடமிருந்து பிரிந்தவன், “இந்தப் பிரச்சனைக்காக உன்னை பணயம் வைக்கணுமா என்று இருக்கு ஸ்வே. இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோன்னு தோனுது. இந்த போராட்டத்துல என்ன என்றாலும் நடக்கலாம். நீயோ, நானோ இல்லாமல்கூட போகலாம்.” என்றவனின் இதழ்களைத் தன் விரல்களால் மூடியவள்,

“எல்லாம் ஏற்கனவே பேசி முடிச்சது தானே, மறுபடியும் என்ன?” என்ற ஸ்வாதி, “எனக்கு உன்கூட இருந்தா போதும் விக்கி, வேற ஒன்னும் வேண்டாம்.” என்று மென்மையாக உரைத்திட, அவளது குரலில் தெரிந்த மென்மையில் ஒரு கணம் ஆடித்தான் போய்விட்டான் அந்த நெடிய ஆண்மகன்.

எல்லாம் நொடி நேரம் மட்டுமே… அடுத்த நொடி, ‘இடியட்.. உனக்கு பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? உன்னையெல்லாம் செருப்பாலயே அடிக்கணும்.’ என்ற நிசப்தியின் வார்த்தைகள் மனதில் சத்தமாக வந்துவிழ, மீண்டும் கண்கள் ரௌத்திரமானது.

“வரேன்டி… இதுவரை உனக்கு காட்டினது எல்லாம் சாம்பிள்தான். இனிதான் மெயின் பிக்சரே இருக்கு, வெய்ட் அன்ட் வாட்ச்.” என்றவன் அருகில் இருந்த ஸ்வாதிக்குள் மூழ்கிப் போனான்.

***

இங்கு அன்று நரேனுடன் வீட்டுக்கு வந்து அறைக்குள் நுழைந்தவள்தான் உஷா. அடுத்த இரண்டு நாட்களும் அந்த அறையில் இருந்து வெளியில் வரவேயில்லை. யாரின் சமாதானமோ, சண்டையோ எதுவும் அவளை சரி செய்யவில்லை.

“அவன்தான் வேணும்னு நீயாதான் போன, போன வேகத்துல அவன் வேண்டாம்னும் நீயாதான் வந்த. நாங்க யாரும் உன் பிரச்சனையில இதுவரைத் தலையிடல, இனிமேலும் தலையிடமாட்டோம். ஆனா இங்க இருக்கிறதா இருந்தா எங்களுக்கு அடங்கி, நாங்க சொல்றதைக் கேட்டு நடக்கணும். இல்லைன்னா உன்னோட விருப்பம்.” கடைசியாக உஷாவின் அப்பாவின் வார்த்தைகள் வந்து அழுத்தமாக விழ,

‘ஏன் இந்த வாழ்க்கை’ என்ற சுயபச்சாதாபமும், யாருக்குமே நான் வேண்டியவள் இல்லையா என்ற கழிவிரக்கமும் சேர, வாழ்வே வெறுத்துப் போனது பெண்ணவளுக்கு.

இனி யாருக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நொடியில் விதையென விழுந்து, விருட்சமென வளர்ந்து அவளுக்குள் பேயாட்டம் போட ஆரம்பித்தது.

யாரிடமும் பேசத் தோன்றவில்லை. தன் அறையே சிறையென இருக்க ஆரம்பித்தவளின் மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்க்க அது மனோகர் என்ற பெயரைக் காட்டியது.

உடன் பணிபுரியும் ஒருவனுக்கு இருக்கும் அக்கறைகூட உறவென்று இருக்கும் யாருக்குமே இல்லையே என எண்ணம் வேறு ஓட, சில நொடி அந்த போனைப் பார்த்தவள் பின் காலை கட் செய்து, போனையும் அணைத்து ஓரமாக வைத்துவிட்டு, ஒரு முடிவோடு தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை பார்த்தாள். விரக்தியான ஒரு முறுவலுடன் அதை விழுங்கியவள், அறையை விட்டு வெளியில் வந்தாள்.

உஷாவின் அப்பா ஹாலின் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த செட் காபியை ஆற்றியபடி அவளது அம்மா நின்றிருந்தார்.

அவளது அண்ணனோ மனைவி கொண்டு வந்து தட்டில் போடும் சூடான பூரியிலேயே கவனமாக இருக்க, இவளைக் கவனிக்கத்தான் ஆளில்லை.

அதே விரக்திப் புன்னகை மேலும் விரிய, அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தவள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க, “எங்கடி போற? உங்க அப்பா சொன்னதைப்பத்தி என்ன முடிவு எடுத்துருக்க?” என்றத் தாயைக் கூர்மையாகப் பார்த்து, “நான் இங்க இருந்து போறேன்.” என்றாள் அமைதியாக.

“போறதா இருந்தா போ, ஆனா திரும்பி வரக்கூடாது. நீ நினைச்சா போறதுக்கும், நினைச்சா வந்து தங்குறதுக்கும் நான் ஒன்னும் சத்திரம் கட்டி வைக்கல.” எனக் காட்டமாகச் சொன்ன தந்தையைப் பார்த்து அமைதியாகச் சிரித்து, “வரமாட்டேன்.” என்று நடக்க, வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் இளக்காரமானதொரு புன்னகை வந்து அமர்ந்தது.

வீட்டை விட்டு வெளியில் வந்த உஷா தன் போக்கில், கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். எண்ணங்கள் மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்து அவளது கல்லூரிக் காலத்தில் வந்து நின்றது.

***

சென்னை சட்டக்கல்லூரி…

ஒரு பயத்துடனும் படபடப்புடனும் சந்தோசமாகவும் முதல்நாள் வகுப்பிற்கு கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர் மாணவ மாணவிகள்.

அப்போது கேட் வாசலிலேயே சிலர் நின்று மாணவிகளை வம்பிழுத்துக் கொண்டிருப்பது தெரிய, அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் நின்றவளின் தோளில் ஒரு கரம் விழ, பதட்டத்துடன் யார் என்றுத் திரும்பி பார்க்க, அவளைப் போலவே ஆனால் பதட்டமும் மகிழ்ச்சியுமாக ஒரு பெண் நின்றிருந்தாள். கூடவே ஒரு ஆணும்.

இருவரையும் புருவம் சுருக்கிப் பார்த்தவளை, “ஹாய் ஐ ஆம் நிசப்தி ஃபர்ஸ்ட் இயர். இது நரேன் நமக்கு சீனியர். என்னோட அண்ணா.” என தங்களை அறிமுகப்படுத்த அதில் சற்றே தெளிந்தவள், “ஹாய் ஐ ஆம் உஷா, நானும் ஃபர்ஸ்ட் இயர்தான்.” எனத் தயங்கி தயங்கி சொல்ல,

“யாரு, இந்த பிடி உஷாவா?” என நரேன் கிண்டலாகக் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தவள், “உஷா லட்சுமி.” என்றாள் அலட்சியமாக.

அவள் செய்கையைப் பார்த்து, “இருக்கட்டும் இருக்கட்டும்…” என நரேனும் அலட்சியமாகச் சொல்லிவிட்டு நிசப்தியிடம் திரும்பி, “நிஷ், க்ளாஸ்க்கு டைமாச்சு ஓடு. யார் கேட்டாலும் நான் உன் அண்ணான்னு சொல்லு சரியா? கிளம்பு.” எனத் துரத்த,

“நானே சமாளிப்பேன்தான், ஆனா ஃபர்ஸ்ட் டே பாரு, அதான் அடக்கி வாசிக்கிறேன்.” என்றவளின் தலையில் கொட்டியவன், “போடி.” என்றுவிட்டு தன் நண்பர்கள் கூட்டத்தைத் தேடிச் சென்றுவிட்டான்.

அன்றிலிருந்து பெண்கள் இருவருமே நல்ல தோழிகளாகிவிட்டனர். நிசப்திக்கு உஷாவைப் பற்றித் தெரிந்தபிறகு அவள்மீது ஒரு பாசம் உருவாகியிருக்க, அவளைத் தனியே விடவேயில்லை. அதிலும் நரேன், நிசப்தி தனியே சிக்கும் நேரமெல்லாம் திட்டியதைக்கூட காதில் வாங்காமல் உஷாவின் உடனே இருந்தாள்.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கொடூர நாள் வரும்வரை. அவர்கள் மூவரின் வாழ்க்கையும் மொத்தமாக மாறிப்போக ஒரு நாள் வந்தது.

***

யோசனையின் பிடியிலேயே நடந்து வந்தவள், “சாவு கிராக்கி, உனக்கு வுழுந்து சாவ என் வண்டிதான் கெடச்சிதா? போய் அந்தால வுழுமே…” என்ற ஆட்டோக்காரனின் சத்தத்தில் நினைவுக்கு வந்தவள், அவனிடம் ஒரு மன்னிப்பை வேண்டிவிட்டு ஓரமாக நடந்தாள்.

அவளது கால்கள் வழக்கம் போல அவள் செல்லும் சாந்தோம் சர்ச்சை வந்தடைய, நிமிர்ந்து அதன் கோபுரத்தை விழிகள் விரியப் பார்த்தாள்.

வாய் தானாக, “ம்மா… நீ எங்கிட்ட வாங்கின சத்தியத்தை என்னால காப்பாத்த முடியலமா. இப்போ எனக்கு உன்கூட இருக்கணும் போல இருக்கு. அதனாலதான் நான் இந்த முடிவை எடுத்துட்டேன். என்னை மன்னிச்சிடுமா, நான் வந்துடுறேன்மா’ என மனதுக்குள்ளே தாயிடம் பேசியவள், தொலை தூரமாய் தெரிந்த கடலைப் பார்த்தபடியே அங்கிருந்த தூணில் சாய்ந்தமர்ந்தாள்.

முதல் நாள் தவிர்த்து அடுத்து வந்த நாட்களில் விக்ரம் மருத்துவமனை செல்வதைத் தவிர்த்துவிட்டான். ரேணுகா கேட்டதற்கு வேலை என்று சொல்லி சமாளிக்க, அவனைப் பற்றி அறிந்தவர், ‘நீயெல்லாம் திருந்தவே மாட்டடா.’ என்றுவிட்டு நிசப்தியோடு மருத்துவமனையில் இருந்துகொள்ள, குழந்தை பகலில் ரித்தியிடமும் இரவில் விக்ரமிடமும் இருந்தது.

மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று முகுந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வேகமாக வந்தான் ரவி. வந்தவன் விக்ரமின் அருகில் நின்ற நரேனின் சட்டையைப் பிடித்து, “உஷாவை என்ன பண்ண? உனக்குப் பிடிக்கலன்னு சொன்னதுமே அவ ஒதுங்கி வந்துட்டாதானே… இன்னும் ஏன்டா அவளை டார்ச்சர் பண்ற?” என உலுக்க,

“ரவி விடுடா, என்ன நடந்ததுன்னு சொல்லாம ஏன் இப்படி வந்து கத்துற?” என ரவியின் கையைப் பிடித்து இழுத்த விக்ரமைப் பிடித்து தள்ளியவன், “நீதான்டா எல்லாத்துக்கும் காரணம். அன்னைக்கே அவளை நாலு அறை அறைஞ்சி இந்த லவ்வெல்லாம் இந்தப் பரதேசி நாயிக்கு செட்டாகாது, நீ உன் வேலையைப் பாருன்னு சொல்லி அனுப்பிருந்தா இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? நான் பார்த்துக்குறேன், நான் சொன்னா நரேன் கேட்பான், கிழிப்பான்னு சொன்ன. இப்ப என்ன நடந்துருக்கு? அவளைக் காணோம்னு சொல்றாங்க.” என அது ஹாஸ்பிடல் என்பதையும் மறந்து கத்த,

ரவி எதற்கு இப்படி நடந்து கொள்கிறான் என்று புரியாமல் இருந்த மற்றவருக்கு, உஷாவைக் காணவில்லை என்றுதான் சொல்கிறான் என்பது புரிய, யாரையும் எதுவும் கேட்காமல் வேகமாக அங்கிருந்து ஓடினான் நரேன்.

அவன் ஓட்டத்தைப் பார்த்த விக்ரம், “இனி அவன் பார்த்துப்பான், இப்ப நீ சொல்லு என்ன நடந்தது?” எனத் தன் சட்டையின் சுருங்கலை நீவியபடியேக் கேட்க ரவியும், “எனக்கும் தெரியல, மனோகர் கால் பண்ணும்போது எடுக்கலயாம், அடுத்து ஸ்விட்ச் ஆஃப். லேண்ட் லைனுக்கு கூப்பிட்டிருப்பான் போல, அவ வீட்டைவிட்டு போயிட்டதா அவங்க சித்தி சொல்லிருக்காங்க.” என ஓய்ந்து போன குரலில் சொல்ல விக்ரமின் முகம் யோசனையானது.

இருவரும் அமைதியாக இருக்க முகுந்த் தான், “டேய், உஷாவை நிசப்திகூட அவளுக்குத் துணையா இருக்க வைக்க வேண்டியது தானே. தேவையில்லாம அவளுக்கு கொம்பு சீவிவிட்டு, இப்போ யார் கூடவும் ஒட்டாம, தனியா இருக்கா. இதெல்லாம் எப்படி சரி வரும் சொல்லு?” என்றவன் விக்ரமைப் பார்த்து,

“விக்கி உன்கூட இருக்குற எல்லாருமே உன்னை மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்க்கக்கூடாது. இந்த டூ இயர்ஸ்ல நரேனை எவ்வளவோ சமாதானம் செய்து, உஷாகூட சேர்த்து வச்சிருக்கலாம். அதை விட்டுட்டு எல்லா பிரச்சனையையும் பெருசாக்கி வச்சிருக்க.

உனக்கு முன்னமே தெரியுமில்ல, உஷா வீட்டுல அவளுக்கு சரியான கவனிப்போ, அரவணைப்போ இருக்காதுன்னு. அப்புறம் எப்படி அங்க இருக்க விட்ட?” என கடுப்பில் கத்த, ரவியும் அதே கேள்வியோடு விக்ரமைப் பார்க்க,

‘இவனுங்க வேற குறுகுறுன்னு பார்த்துட்டு’ என மானசீகமாகத் தலையில் தட்டிக் கொண்டவன், “ம்ம்… இனி சரியாகிடும்.” என்றவனை ‘இதெல்லாம் மனுச ஜென்மமே இல்ல’ என மற்ற இருவரும் முறைத்து நின்றனர்.

மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த நரேனோ, புயல் வேகத்தில் காரை எடுத்துக்கொண்டு சாந்தோம் சர்ச்சை நோக்கிப் பறந்தான்.

***

You may also like

1 comment

mriomrio28399 February 5, 2026 - 5:13 pm

லண்டன்ல இருக்கிறது, ஸ்வேதா விக்கின்னா, அப்ப இந்தியாவுல இருக்கிற விக்ரம் யாரு ? ரெண்டுப் பேரும் ஒரே ஆளா, இல்ல வேற வேறயா ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured