Home Antiheroதளிர் – 12

தளிர் – 12

by Vathani S

தளிர் 12

உஷா மனம் வெறுத்து தற்கொலை வரைச் சென்றதை அவர்கள் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று மறுத்த நரேனை, ஒரு முறைப்பில் அடக்கிய விக்ரம், “நான் பேசிக்கிறேன்.” என்று சொல்லி அவனே சென்று பேசியும் இருந்தான்.

என்ன பேசினான், என்ன செய்தான் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீனாட்சி சுந்தரம் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அவர் வரும் நேரம் விக்ரமும் அங்குதான் இருந்தான். மீனாட்சியைப் பார்த்து, “அட நம்ம உஷா அப்பாதானே இது.” என நரேனிடம் கேட்டு அவனிடம் ஒரு முறைப்பையும் பார்சல் வாங்கிக் கொண்டுதான் சென்றான்.

மீனாட்சியை யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லைதான், அவர் தேவையும் இல்லைதான், ஆனால் இருந்தார். காலையில் இருந்து இரவு வரை அங்கேயே இருந்தார். தொடர்ந்த நாட்களும் அப்படியே!

முகம் முழுக்கப் பதட்டமும் பயமுமாக அமர்ந்திருந்தவரைப் பார்த்து மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இந்தப் பயமும், பதட்டமும் தனக்கானதில்லை என்றுப் புரிந்துகொள்ள முடியாதளவிற்கு முட்டாள் இல்லையே அவள்.

அன்று மாலை கிடைத்த தனிமையில் நரேனிடம் அதைப்பற்றிக் கேட்டாள் பெண். அவனுக்கும் அவர் வந்தது சந்தேகம்தான். அவரைப்பற்றி நன்றாக அறிந்தவன் வேறு. வந்த நாளே என்னவென்று அவரிடமே விசாரித்து தெரிந்து கொண்டான்தான். கேட்ட நொடியே உனக்கு இது தேவைதான் என மனதுக்குள் நினைத்தவனுக்கு, இதை எப்படி மனைவியிடம் சொல்வது? என்ற தயக்கம் உண்டாகிவிட்டது.

‘இந்த பாஸ வச்சிக்கிட்டு’ என மனதிற்குள் நொந்துகொண்டவன், ஏற்கனவே விக்ரமின் மேல் மனைவிக்கு கடுங்கோபம். இப்போது இதுவும் தெரிந்தால் அவ்வளவுதான். அதனால் அவள் கேட்டதும் எதை எதையோ சொல்லி மனைவியை ஒருவாறு சமாளித்திருந்தான் நரேன்.

அவளை சமாளித்துவிட்டு வெளியே வந்து விக்ரமிற்கு உடனே அழைத்தான்.

அழைப்பு எடுக்கப்பட்டதும், “பாஸ் இந்தாளை எதுக்கு இங்க கோர்த்து விட்டுருக்கீங்க? நான் நிம்மதியாவே இருக்கக்கூடாது உங்களுக்கு அப்படித்தானே? கொஞ்ச நேரம்கூட அங்க, இங்க அசையாம உக்காந்துருக்கான் ஜடம். என்னால எம் பொண்டாட்டிக்கூட நிம்மதியா பேசக்கூட முடியல. அப்படி என்ன பண்ணீங்க அந்தாளை?” என எல்லாம் தெரிந்தும், தெரியாதது போலத் தன் ஆதங்கத்தைக் கொட்ட, அந்தப்பக்கம் வாய்விட்டுச் சிரித்தான் விக்ரம்.

“டேய் அந்த மனுஷன் வந்த அன்னைக்கே கேட்டுருக்கணும்டா நீ. மூணு நாள் கழிச்சு நிதானமா கேட்குற?” எனச் சிரித்தவன், “அதைவிடு அதுக்குள்ள உஷா சமாதானம் ஆகிட்டாளா? நம்பவே முடியலடா. அவளுக்கும் ஒரு ஃப்ரண்ட் இருக்காளே, கொஞ்சம் அவளுக்கும் ட்ரைனிங் கொடுக்க சொல்லுடா. எப்பப்பாரு சண்டக்கோழி மாதிரி சிலுப்பிக்கிட்டு…” என சிரித்துக் கொண்டேப் பேச்சை மாற்ற,

“பாஸ் இதுதான் பக்கத்து இலைக்கும் பாயசம் போட சொல்றது. அதோட நீங்க எப்போ நிஷாக்கிட்ட இவ்வளவு எதிர்பார்க்க ஆரம்பிச்சீங்க? உங்க மனசுல என்ன ஓடுது?” என விக்ரமை மடக்க, அதற்குப் பதில் சொல்லிவிட்டால் அவன் விக்ரம் அல்லவே!

“அந்தாள் இருக்குறதுல என்ன பிரச்சனை?” என்றான் அந்தப் பேச்சை அப்படியே மாற்றி.

“ப்ச்…” எனச் சலித்தவன், இனி பதில் சொல்லமாட்டான் என்பதும் புரிய, “பாஸ் இந்தாளை இங்க இருந்து அனுப்பிடலாம், இவரைப் பார்த்தாலே உஷா டென்சன் ஆகுறா.” எனக் கொஞ்சம் தடுமாறிப் பேச,

“ம்ம் அப்படியா சொல்ற…” எனத் தன் தாடையைத் தடவி யோசித்தவன், “ஓகே, நான் பார்த்துக்குறேன், நீ அவளைப் பாரு.” எனவும்,

“பாஸ் அந்த மினிஸ்டர் கேஸ் நாளைக்கு ஹியரிங் இருக்கு.” என நரேன் ஞாபகப்படுத்த,

“ஐ க்னோ மேன், அதையும் நான் பார்த்துக்குறேன். நீ உஷா டிஸ்சார்ஜ் ஆகுறவரை கூடவே இரு. நான் மேனேஜ் பண்ணிப்பேன்.” என்றவன் வைத்துவிட்டு வேறு ஒரு நபருக்கு உடனே கால் செய்தான்.

“டேய் அந்த மாங்கா மடையன் என்ன பன்றான்?” என்றதும், அந்தப்பக்கம் இருந்தவனோ, “அண்ணா அவனுக்கு நீங்க சொன்ன ட்ரீட்மென்ட்தான் போயிட்டு இருக்கு. இவனைத் தூக்கினதுக்கு பதிலா இவன் அப்பனைத் தூக்கிருக்கலாம் ண்ணா. பொம்பள புள்ளைங்களை போதையா பாக்குறவனுங்கள எல்லாம் கொதிக்கிற தார் டின்னுல தலைகீழா இறக்கணும் ண்ணா.” என ஆதங்கமாய் பேச,

“விடு முத்தா, இதோட இவனுங்களை விட்டுருவேன்னு நினைக்கிறியா? சீக்கிரம் அந்த அப்பனுக்கும் ஒரு ஸ்கெட்ச்ச போடுறேன். போட்டுட்டுத் தூக்குறேன்.” என்றவன், “அந்த நாய கொண்டுபோய் ரயில்வே சிக்னல்ல எறிஞ்சிட்டு, அவங்க அப்பனுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு.” என்று வைத்துவிட்டான்.

அடுத்து மீனாட்சி சுந்தரத்திற்கு அழைத்து, “இன்னொரு தடவை உஷாக்கிட்ட நீயோ, உன் வீட்டு ஆளுங்களோ திமிரா நடந்தது எனக்கு தெரிய வந்துச்சுன்னா, இன்னைக்கு காட்டினது ட்ரெயிலர்தான். அடுத்து மெயின் பிச்சர் பார்க்க வேண்டிவரும். உன் மகன் வீடு வந்து சேருவான், நீ போய்ச்சேர்.” என்றுவிட, விட்டால் போதுமென்று யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்திருந்தார் மீனாட்சி சுந்தரம்.

அவரது எண்ணமெல்லாம் மகன் நல்லமுறையில் வீடு வந்து சேர வேண்டுமே என்று மட்டும்தான் நினைத்தது. அப்படியில்லை என்றால் வீட்டில் இருக்கும் மனைவியும் மருமகளும் அவரைக் கொல்லக்கூடத் தயங்கமாட்டார்கள், என்று இந்த மூன்று நாட்களில் அறிந்திருந்தார் மீனாட்சி.

அவருக்கு அன்று விக்ரம் வந்தது முதல், அவன் நடந்துகொண்ட அனைத்தையும் நினைத்துப் பார்த்தவருக்கு, இப்போதும் தேகமெல்லாம் நடுங்கியது.

***

“டேய் உன்னை யார் வீட்டுக்குள்ள விட்டது? கதவு திறந்திருந்தா நீ பாட்டுக்கு உள்ள வந்துடுவியா?” என விக்ரமைப் பார்த்து துள்ளிய மீனாட்சியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்த விக்ரமைக் கண்டு, யோசனையாகப் புருவம் சுருக்கினாள் மீனாட்சியின் மனைவி.

“என்னடா நான் பேசிட்டே இருக்கேன், நீ பல்லைக் காட்டிட்டு இருக்க? அந்த ஓடுகாலியைப் பத்திதான் பேச வந்திருந்தா எழுந்து வெளியே போடா. அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.” என ஆக்ரோஷமாகக் கத்தினார்.

அவருக்கு பயத்தில் இப்போது குரல் நடுங்கியது. காரணம் விக்ரம் வந்தாலே நிச்சயம் தன் வீட்டில் ஒரு பிரளயமே நடக்கும் என்று அவருக்குத்தான் தெரியுமே. அதற்கு சாட்சி உஷா, நரேன் திருமணம். அதன்பிறகு மனைவியும் மகனும் அவரை உண்டு இல்லையென்று ஆக்கி, சொந்தத்திலும் தனக்கு மற்றொரு குடும்பம் இருப்பது தெரிந்து பெரும் அவமானத்துக்கு உள்ளானார்.

அதனால்தான் விக்ரம் வந்ததும் யாரும் எதுவும் பேசும் முன்னே முந்திக் கொண்டார். இப்போதும் விக்ரம் எதுவும் புதிதாக ஒரு பிரச்சனையைக் கொண்டுவந்து விட்டானோ என்று பயந்து போனார்.

அதுவரை அவர் பேசுவதை ஒரு ரசனையாக, நக்கல் சிரிப்புடன் கேட்டவன், அவரின் கடைசிப் பேச்சில் கொஞ்சமும் கோபப்படாமல் “ஆஹான்…!” என்று எழுந்து தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டவாறே, அங்கு ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஷோகேஷ் அருகே சென்றான்.

விக்ரம் ஏதோ வில்லங்கம் செய்யப் போகிறான் என்பதை உணர்ந்த மீனாட்சி, “டேய்…” என்க, விக்ரம் அவரைத் திரும்பிப் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

மீனாட்சியின் அந்தச் செயலில் வாய்விட்டுச் சிரித்தவன், “ம்ம் அது… அந்தப் பயம் இருக்கணும்.” என்றவன் அங்கு ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த மகன் மற்றும் மருமகளின் திருமண போட்டோவை எடுத்து தரையில் வீசி நொறுக்கினான்.

அதுவரை அமைதியாக இருந்த மீனாட்சியின் மனைவி புனிதா, “என்ன நடக்குது இங்க? நீ என்ன பண்ற?” என விக்ரமை நோக்கிக் காட்டமாக கத்த,

“பார்த்தா எப்படி தெரியுது? ம்ம்… சாம்பிள் காட்டினது பத்தல போல…” என்றவன் இப்போது பக்கத்தில் அவர்கள் நால்வர் மட்டுமே இருந்த, அந்தக் குடும்பப் புகைப்படத்தை எடுத்து மீண்டும் கீழேப் போட்டு நொறுக்கினான்.

அதைப் பார்த்து இருவரும் அரண்டு நிற்க, “ஆமா உன் பையனும் மருமகளும் எங்கையோ போயிருக்காங்க போல, எப்போ வருவாங்கன்னு தெரியுமா? மீனாட்சி எனி ஐடியா?” என அவரைப் பார்த்து கிண்டல் தொனியில் கேட்க,

“அதை உங்கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல.” என மீனாட்சி பட்டென்று பதில் சொல்ல, “பார்றா…” என்ற விக்ரமின் கிண்டலே அடுத்து ஏதோ செய்யப் போகிறான் என்று உணர்த்த, அதைத் தடுக்கும் பொருட்டு, “இல்ல… அவங்க கூர்க் போயிருக்காங்க. வெக்கேஷன்…” என புனிதா பதட்டத்திலும் பயத்திலும் தடுமாறி பதில் சொல்ல,

“நீங்க சூப்பர் ஆன்ட்டி, எப்படி என்னை சரியா புரிஞ்சுக்கிட்டீங்க. கொஞ்சம் உங்க ஹஸ்பண்டுக்கும் சொல்லிக் கொடுங்களேன், பாருங்க எப்படி முழிக்கிறார்னு…” எனக் கிண்டலாய் சொன்னவன், தன் மொபைல் போனில் இருந்த ஒரு வீடியோவை ஓடவிட்டான்.

அதில் அவர்களின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் ஒரு அறையில் கட்டி வைத்து மயக்கத்தில் வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் பெற்றவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது. அதிர்ச்சி தாங்காமல் புனிதா மயங்கிவிட, அவரைத் தாங்கிப் பிடித்த மீனாட்சி தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் விழுந்தார்.

இருவரையும் பார்த்த விக்ரம், எதுவும் பேசாமல், அவர்களே பேசட்டும் என்று பார்த்துக் கொண்டேதான் இருந்தான்.

முதலில் சுதாரித்த மீனாட்சி, “இது… இது… யார் இப்படி பண்ணது? எங்க இருக்காங்க? உனக்கு எப்படித் தெரியும்? உடனே போலீஸ்க்கு போகணும்.” என நடுங்கியக் குரலில் ஆரம்பிக்க,

“அடடே மீனாட்சிக்கு எமோஷன்ஸ் எல்லாம் வருதுப்பா?” என நக்கலடித்தவன், “ஆனா எதுக்கு இவ்ளோ எமோஷன்ஸ்? அவன் உன் பையன்னா? அப்படி பார்த்தா உஷாவும் உன் பொண்ணுதானே? அவ இப்போ சாகக் கிடக்குறா, அதைப்பத்தி கொஞ்சமும் கவலை இல்லாம நீ உன் குடும்பமா சந்தோசமா இருக்க அப்படித்தானே? உன் பொண்ணு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வந்து வாழ்வா சாவான்னு இருக்க, உன் பையனுக்கு செகன்ட் ஹனிமூன் கேட்குது. ம்ம்ம்…” என்று அதுவரை இருந்த இலகுக் குரல் மாறி இறுகியக் குரலில் கேட்க மீனாட்சிக்கு சர்வமும் ஆடியது.

பக்கத்தில் மயக்கத்தில் இருந்த மனைவியைப் பார்த்தவர், “நீ… நீ… நீதான் அவங்களைப் பிடிச்சு வச்சிருக்கியா? அவங்க எங்க இருக்காங்க? எதுக்காக அவங்களைக் கடத்திருக்க? ஏன்?” பயத்தில் குரல் மேலும் நடுங்கியது.

“நான்… நான்… நானேதான்! என்ன பண்ண முடியும் உன்னால? ம்ம்… போலீஸ் போகப் போறியா? போ, கம்ப்ளைன்ட் பண்ணப் போறியா? பண்ணு. டோன்ட் கேர் ரைட். விக்ரம் பத்தி உனக்கு இன்னும் தெரியல.” என அசால்ட்டாகப் பேச வியர்த்து வடிந்தது மீனாட்சிக்கு.

அவருக்கு விக்ரமை நன்றாகத் தெரியும். அவனை மீறி எங்கும் சென்றிட முடியாது. அதிலும் காவல் நிலையத்தில் இவன் பெயரில் கம்ப்ளைன்ட் கொடுத்தால், நம்மைத்தான் கேவலமாகப் பார்ப்பார்கள். அதோடு அந்தப் புகாரை பரிசீலிக்கக் கூடமாட்டார்கள். அப்படியிருக்க இவனைப்பற்றி எங்கே புகார் கொடுக்க என நினைத்தவர், பயத்தில் அடைத்தக் குரலை முயன்று சிறிதாக்கி, “நான் இப்போ என்ன செய்யணும்?” என்றார்.

“அடேங்கப்பா, ரொம்பத் தெளிவான ஆளுதான்பா நீ! ம்ம்… நான் அடுத்து என்ன சொல்ல வர்றேன்னு கரெக்டா புரிஞ்சிக்கிட்டியே?” எனக் கிண்டல் குரலில் கூறியவன், மீனாட்சி சுந்தரத்தைப் பார்த்து, “நீ என்ன செய்றன்னா இப்போ உடனே கிளம்பி உஷா அட்மிட் ஆகிருக்க ஹாஸ்பிடலுக்கு போற, அவ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போற வரைக்கும் அந்த இடத்தை விட்டு அசையக்கூடாது. அப்படி இல்ல, அதெல்லாம் முடியாதுன்னு சொன்னா…” என்று நிறுத்தியவன் இப்போது ஒரு போட்டோவைக் காட்ட, அதில் அடியாள் போல ஒருவன் மயக்கத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியோடு நின்றிருந்தான்.

“ஒரு போன் கால்! ஒரே ஒரு போன் கால் உன் மகனும் மருமகளும் பரலோகம் போயிடுவாங்க. உன் வசதி எப்படினு பார்த்துட்டு சொல்லு. உனக்கான டைம் ஒரு நிமிசம். ஒரே நிமிசம்!” என்று ஆணை போல் சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் கால்மீது கால் போட்டு தோரனையாக அமர்ந்துவிட, அதற்குள் மீனாட்சி மயக்கத்தில் இருந்த மனைவியைப் பார்த்துக்கொண்டே தன் போனில் யாரையோ அழைத்தபடி, பயமும் பதட்டமும் சூழ வெளியில் நடக்க இல்லையில்லை ஓட ஆரம்பித்தார்.

அவரது ஓட்டத்தைத் திருப்தியாகப் பார்த்தவன், தன்னுடன் வந்தவர்களைக் கண் காட்ட, அவன் பார்வைக்கு கட்டுப்பட்டவர்கள் போல ஒருவர் முன்னே வந்து புனிதாவிற்கு முதலுதவியை ஆரம்பிக்க, அதற்குள் ஒரு வயதான பெண்மணி வர, அவரிடம் புனிதாவை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான் விக்ரம்.

அதைத் தொடர்ந்த நாட்கள் அனைத்தும் நரகம்தான் அவருக்கு. புனிதாவும் அவரது சொந்தங்களும் மீனாட்சியை வாட்டி வதைக்க, விக்ரமின் காலில் விழக்கூடத் தயாராகத்தான் இருந்தார்.

ஆனால் அதற்கு விக்ரம் அசைந்துக் கொடுத்தால்தானே! அவரின் மருமகளை மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுவித்தவன், மகனைத் தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தான். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவருக்கு வீட்டிற்கு சென்றதும், அடுத்து நடக்கப்போகும் சண்டைகளையும் போராட்டங்களையும் நினைத்து கதி கலங்கியது அவருக்கு.

ஆனால் இனி என்ன செய்ய முடியும்? செய்த வினைகளுக்கானப் பலனை அனுபவித்துத் தானே ஆகவேண்டும். அதற்கான தண்டனைகளைப் பாதிக்கப்பட்ட மனைவி, மகள் மூலம் கொடுக்கவில்லையென்றாலும், கடவுள் விக்ரமின் மூலம் கொடுக்க தீர்மானித்தாரோ என்னவோ!

நீ விதைத்தது ஒன்றாக இருக்க,

விளைவது மட்டும் வேறொன்றாக இருக்குமா என்ன?

இப்போது அதுதான் நடந்து கொண்டிருந்தது.

***

இங்கு மருத்துவமனையில் உஷாவிடம் இருந்து இப்போதெல்லாம் எந்தப் பேச்சும் இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக நரேன் பேசிக்கொண்டே இருந்தான். அன்று பேசாததற்கு இன்றுத் தன்னைப் பேச வைக்கிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

அதுவும் அவனுக்குப் பிடிக்கத்தான் செய்தது. அவள் மருத்துவமனையில் இருக்கும்போதே நிஷாவைப் பற்றியும், அவள் இங்கு வந்திருப்பதைப் பற்றியும் சொல்லிவிட்டான்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டாளேத் தவிர, வேறொன்றும் சொல்லவில்லை. அதுவே நரேனுக்கு பலத்த அடி. ஏன் எதுவும் கேட்கவில்லை. ஒரு ஆதங்கமான வாக்குவாதத்தை எதிர்பார்த்தவனுக்கு, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரு நாள் அவளை விட்டுவிட்டு நிஷாவைப் போய் பார்த்து வந்தான். அவளும், ‘வாங்க’ என்பது போல தலையை மட்டும்தான் அசைத்தாள். ரேணுகாதான் பேசிக்கொண்டே இருந்தார்.

அவர் உஷாவைப் பற்றி விசாரிக்கவும்தான் நிசப்திக்கும் தோழியின் நிலை தெரிந்தது. அவள் இப்படியொரு முடிவெடுத்ததற்கு தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் வேறு உண்டாகிவிட, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானாள் நிசப்தி.

உஷாவைப் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும், விக்ரம் அவளை எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்கவே இல்லை. அதுவும் அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக ரவியின் தலையில் இறக்கினாள்.

அன்று மாலை குழந்தைகளை அழைத்துப் போக வீட்டிற்கு வந்த ரவியிடம், “இன்னும் என்னதான் பிரச்சனையாம் உங்க ஃப்ரண்டுக்கு? எதுக்கு இப்படி என் உயிரை எடுக்குறான்? எனக்கு உஷாவைப் பார்க்க போகணும்னு சொன்னா விடமாட்டேங்குறான். என்ன நடக்குது? என்ன பிரச்சனை? எதுக்கு இப்படி நடந்துக்குறாங்க?” எனக் கத்த,

“ஷ்ஷ்… எதுக்கு இப்படி எமோஷ்னல் ஆகுற? நான் விக்கிக்கிட்ட பேசுறேன், பேசிட்டு உன்னை அழைச்சிட்டு போறேன். ஃபர்ஸ்ட் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறதை நிறுத்து.” என கண்டிப்பாகச் சொல்லி, அவளை சமாதானமும் செய்துவிட்டு கிளம்பிவிட்டான்.

ஆனாலும் மனதின் மூலையில் இதை விக்ரமிடம் கேட்க வேண்டும் என்று குறித்துக்கொண்டாலும், தன் மனைவியிடம் மறைக்காமல் சொல்ல அதற்கு ரித்தியோ, “ஏன் ரவி, விக்ரம் இப்படி பண்றான்? எனக்குத் தெரியாம வேற எதுவும் பிரச்சனை இருக்கா? எங்கிட்ட எல்லாரும் மறைக்கிறீங்களா?” என யோசனையாகக் கேட்டவளைப் பார்த்து அரண்டுவிட்டான் ரவி.

‘இவளைப்பத்தி தெரிஞ்சும் இவக்கிட்ட வந்து சொன்ன என்னை…’ என மனதுக்குள் தன்னையே நொந்துகொண்டவன், “ம்ச்… என்னதான்டி பிரச்சனை உங்களுக்கு? நாங்க ஒன்னு சொன்னா நீங்க ஒன்னு யோசிச்சு, அப்படியும் இருக்குமோன்னு எங்களையே மாத்தி யோசிக்க வச்சிடுவீங்க போல. இப்போதைக்கு நிஷா வெளியே போறது சேஃப் இல்லன்னுதான் விக்கி அலோவ் பண்ணாம இருக்கான். அவனுக்குத் தெரியும் என்ன நடக்குது, அடுத்து என்ன செய்யலாம்னு. நீங்க எல்லாம் இப்படி எங்களை டென்சன் பண்ணாம இருந்தாலேப் போதும்.” என்று மனைவியிடம் கத்திவிட அதிர்ந்து போனாள் ரித்திகா.

மனைவியின் அரண்ட தோன்றத்தைப் பார்த்தவன் இந்த நேரத்தில் அதிலும் நிறை மாதத்தில், பயத்தில் இருந்தவளை மேலும் பயப்படுத்தி மிரட்டி விட்டோம் என்று அவனுக்குப் புரிய, வேகமாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், “ஒன்னுமில்ல ஒன்னுமில்லடா… நீ ரிலாக்ஸ் பண்ணு.” என அவளை சமாதானம் செய்வதற்குள் ஒருவழி ஆகியிருந்தான் ரவி.

***

You may also like

1 comment

mriomrio28399 February 12, 2026 - 7:00 pm

இது சமாதானப்படலாம் போல, அவங்கவங்க, அவங்கவங்க பொண்டாட்டிகளை சமாதானப் படுத்துறான்ங்க போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured