தளிர் 13
உஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. முதல் இரண்டு நாட்கள் நரேன் மனைவியின் கூடவே இருந்தான்.
அவனது வேலைகள் பற்றி அவளுக்குத் தெரியும் என்பதால், தன்னுடனே இருந்தவனை யோசனையாகவே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளாகப் பேச ஒரு தயக்கம். இன்னும் இருவருக்குள்ளும் ஒன்றும் சரியாகவில்லையே. அதோடு நரேன் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! அது இன்னமும் நெருஞ்சி முள்ளாய் அவளைக் குத்திக்கொண்டுதானே இருந்தது.
அதோடு அவன் இப்போது என்ன நினைக்கிறான் என்று வேறு அவளுக்கு குழப்பமாக இருக்க, ஒருவேளை பரிதாபத்தில் அல்லது குற்ற உணர்ச்சியில் அழைத்து வந்திருப்பானோ என்றெல்லாம் யோசித்து மனதைக் குழப்பியவள், முடிவாக அவனாக சொல்லாமல் எதையும் கேட்டு மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்ற முடிவில் இருந்தாள் உஷா.
அன்றும் அப்படித்தான் அவளை செக்கப்பிற்காக மருத்துவமனைக்கு முகுந்தன் வரச் சொல்லியிருக்க, அதன்பொருட்டு இருவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அதற்குள் நரேனுக்கு பல போன் கால்ஸ் தொடர்ந்து வர, அவன் எதற்கும் பதிலளிக்காமல் விட யோசனையாகப் பார்த்தாளேத் தவிர ஒன்றும் கேட்கவில்லை.
சில நிமிடங்களில் முகுந்தன் வர அவளை ஒருமுறை செக் செய்தவன், அவளிடம் தனியாகப் பேச வேண்டும் என்று நரேனை வெளியில் அனுப்ப, அவனும் மனைவியைப் பார்த்து தைரியமாக இரு எனும் விதமாக தலையசைத்துவிட்டுக் கிளம்ப முகுந்தன் பேச ஆரம்பித்தான்.
“வெல் உஷா! இப்போ எப்படி இருக்கீங்க?” என ஃபார்மலாக ஆரம்பிக்க,
‘ஐம் ஓகே’ எனும் விதமாக அவளும் தலையை ஆட்ட,
“நான் பிசிக்கலி கேட்கல உஷா, மென்டலி எப்படி இருக்கீங்க?” என்றவன் இப்போது அழுத்தமாக கேட்க, அவளுக்கேத் தெரியாத விடையை அவள் எப்படி சொல்லுவாள். அதனால் அமைதியாகவே அமர்ந்திருக்க,
“என்ன ஓடுது உங்க மனசுல? ஸ்பீக்கவுட் உஷா. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சாதான் நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்.” என்று தைரியம் கொடுத்தான் முகுந்தன்.
அவனைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவள், “நான் என்ன நினைக்கிறேன், என்ன பன்றேன், ஏன் இப்படி நடந்துக்குறேன், நான் என்ன தப்பு செஞ்சேன், என்னை ஏன் யாருக்கும் பிடிக்கல, எனக்கு என்ன ஆச்சு, நான் செய்றது சரியா, தப்பா? என்னால யாரும் கஷ்டப்படுறாங்களா? நான் சரியா நடந்துக்குறேனா? இப்படி நெறையக் கேள்விகள் எனக்குள்ள… ஆனா இந்த எந்த கேள்விக்குமே எனக்குப் பதில் தெரியல டாக்டர். பட் நவ் ஐம் ஓகே. சீக்கிரம் சரியாகிடுவேன்னு நம்புறேன்.” என்றவளின் உணர்வுகளற்ற குரலைக் கேட்ட முகுந்தனுக்கும், அவன் போன் வழியேக் கேட்ட நரேனுக்கும் நெஞ்சைப் பிசைந்தது.
ஒரே நாளில் அனைத்தையும் சரி செய்திட முடியாது என்பது இருவருக்கும் புரியத்தான் செய்தது. விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருப்பவளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்யமுடியும். அது நிச்சயம் நரேனால் மட்டுமே முடியும் என்பதும் புரிய, “ஹேய் என்ன கேர்ள் நீ, இவ்வளவு விரக்தியா பேசுற? உன்னையும் விட வாழ்க்கையில் கஷ்டப்படுறவங்க இருக்காங்க. அவங்களை எல்லாம் நினைச்சுக்கோ, எங்கேயும் போக வேண்டாம். உன் ஃப்ரண்ட் நிசப்தியையே எடுத்துக்கோ, அவளை விடவா நீ வாழ்க்கையில கஷ்டப்பட்டுட்ட? எல்லாம் சரியாகும் நம்பு.
யாருக்கும் எதுக்கு உன்னைப் பிடிக்கணும்? முதல்ல உன்னை உனக்குப் பிடிக்கணும். உனக்கே உன்னைப் பிடிக்காமத்தானே சூசைட் வரைக்கும் போயிருக்க. முதல்ல நீ உன்னை நேசி, அப்புறம் சுத்தியிருக்கிற எல்லாரும் உன்னை நேசிப்பாங்க. செல்ஃப் லவ் ரொம்பவே தேவை. அதுதான் தன்னம்பிக்கையின் முதல் படி.” என்று கூறி அவளை யோசிக்க வைத்தவன் நரேனை உள்ளே வரச் சொன்னான்.
இருவரையும் பார்த்து பொதுவாக, “எல்லாருக்கும் செகண்ட் சான்ஸ் கடவுள் கொடுக்கிறது இல்ல. ஆனா உங்களுக்கு கொடுத்திருக்கார். ஒரு நரகத்தில் இருந்து விடுதலைக் கொடுத்திருக்கார். அதைப் புரிஞ்சுட்டு உங்க வாழ்க்கையை சரி செய்துக்கோங்க. அதுதான் உங்களுக்கும் உங்களைச் சுத்தி இருக்குற எல்லாருக்கும் நிம்மதி, சந்தோசம்.” என்று நீளமாகப் பேசி இருவரையும் அனுப்பிவைத்தான் முகுந்தன்.
அன்று இரவு உறங்கும் முன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளை நோக்கி வந்தான் நரேன். அவனைப் பார்த்துக் கேள்வியாக நோக்கியவளை, “அதுவந்து உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என மெல்ல ஆரம்பிக்க, அவளும் யோசனையாக சரியென்று அங்கிருந்த கல் மேடையில் அமர சற்றுத் தள்ளி அவனும் அமர்ந்தான்.
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய தன் தொண்டையைச் சரி செய்தவன், “நாளைக்குப் போய் நிசாவைப் பார்த்துட்டு வந்துடலாம். அவ வெளியே எங்கேயும் வரக்கூடாதுனு பாஸ் நினைக்கிறார். அது அவளுக்கும் பாப்பாக்கும் அவ்வளவு சேஃப் இல்லன்னு சொல்றார். அதனாலதான் ஹாஸ்பிடல் வந்து உன்னைப் பார்க்கல. உனக்கு ஓகேன்னா நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்.” என்றவன் அமைதியாகி விட,
தோழியைப் பற்றிப் பேசியதும் அவளது எண்ணங்கள் எல்லாம் பின்னோக்கிப் பயணிக்க, கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் பெண்.
அவளது மூடிய விழிகளில் கனாக்காலமாய் தோன்றிய கல்லூரிக் கால நினைவுகள் வந்து அலை மோதின. தான் காதல் உணர்ந்த நிமிடம், அதை மறைக்கத் தோன்றாமல் உடனே நரேனிடம் சொன்னதும் அதற்கு அவன், “உன் அம்மா புத்தி அப்படியே உனக்கும் இருக்கு. ஒரு பையன் பரிதாபத்துல, அனுதாபத்துல உங்கிட்ட நல்லா பேசினா, உடனே காதல் கன்றாவினு கிளம்பி வந்துருவியா? உனக்கெல்லாம் சென்ஸே இருக்காதா? என்ன பொண்ணு நீ? முதல்ல இங்க இருந்துப் போ, என் முன்னாடி நிக்காத?” என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, பூத்துக் குலுங்கியக் காதல் மரத்தை ஒரே நாளில் வேரோடு வெட்டி சாய்த்திருந்தான். அதை நினைத்தவளின் உடல் தூக்கிப்போட, அமர்ந்திருந்த கல் மேடையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
மனைவியின் மூடிய இமைக்குள் உருண்ட மணி விழிகளை வைத்தே அவள் எதைப்பற்றி யோசிக்கிறாள் என்று புரிய, எழுந்து அவளது காலடியில் அமர்ந்தவன், கல் மேடையைப் பற்றியிருந்த அவளது கைகளில் மெல்ல அழுத்தம் கொடுத்தான்.
அதில் விழித்தவளின் விழிகளில் இருந்து அணைத் திறந்த வெள்ளமாய் நீர் கடகடவென இறங்க, அதில் பதறி அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, “ஸாரி… ஸாரி… ஸாரிடாமா… நிஜமா ஸாரி… நீ இவ்ளோ ஹர்ட் ஆகிருப்பன்னு அப்போ நான் நினைக்கவே இல்லை. அதோட அன்னைக்கு என்னோட சூழலையும் நீ புரிஞ்சிக்கணும் ப்ளீஸ்.
எஸ்… என் தப்புதான். முழுக்க, முழுக்க என் தப்புத்தான். என்னதான் எனக்கு பிரச்சனை என்றாலும், உன்னை அந்த வார்த்தைகள் சொல்லியிருக்கக் கூடாதுதான். தப்பு… அது ரொம்ப பெரிய தப்பு. அதுக்கு சாரி கேட்டு என்னை நியாயப்படுத்திக்க விரும்பல. உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கணும்னு நினைச்சாலும் கொடு. ஆனா இப்படி அழாதே ப்ளீஸ்…” எனக் கிட்டத்தட்டக் கெஞ்சியவனைப் பார்த்து,
“நான் அந்த மாதிரி பொண்ணு இல்லதானே… அப்போ எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது. அது காதல்னு எனக்குத் தோனின நொடி, மறைச்சு வைக்கணும்னு எல்லாம் நினைக்கல. அதுதான் நிசாக்கிட்டகூட சொல்லாம, உங்ககிட்ட உடனே வந்து சொன்னேன். ஆனா அப்படி வந்து சொன்னது தப்புன்னு அப்பவே புரிய வச்சுட்டீங்க. ஒருவேளை நிசாவுக்கு சொல்லியிருந்தா அந்த சம்பவம் நடக்காமலேப் போயிருக்கலாம் இல்லையா? எனக்கு எதுலையும், எல்லாத்துலையும் அவசரம். அவசரக் கோலம் அலங்கோலம்னு பெரியவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க.” என்றவள் அவனிடமிருந்து பிரிந்து உள்ளே செல்ல ஆரம்பித்தாள்.
விரக்தியின் விளிம்பில் மனைவி வீசிச் செல்லும் வார்த்தைகளை உள்வாங்கிய நரேனுக்கு, அவளை எப்படி சரி செய்யப் போகிறேன் என்ற பெருங்கேள்வி மனதில் எழுந்து பயமுறுத்தியது.
இருவருக்கும் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்துகொள்ள, எப்படி இதை சரி செய்வதென்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
அடுத்த நாள் யாருக்கும் காத்திராமல் விடிய, பேசி வைத்ததைப் போலவே மனைவியை அழைத்துக்கொண்டு நிசப்தியின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அவர்களுக்கு முன்னமே விக்ரம் வந்திருக்க, “பாஸ்…” என்றவனைப் பார்த்து இரு பெண்களும் முறைக்க,
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “உனக்கு இங்க வேலை இருக்கா மேன்?” என்ற விக்ரமைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நிசப்தி.
“நோ பாஸ், கிளம்பலாம். எனக்கும் ஆஃபிஸ்ல வேலை இருக்கு.” என விக்ரமிற்கு பதில் சொன்னவன், மனைவியிடம் திரும்பி, “லட்சுமி நீ இங்க இருமா. நான் ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்றவனிடம் தலையை மட்டும் அசைத்தாள் உஷா. மறந்தும் இரு ஆண்களும் நிசாவின் பக்கம் திரும்பவில்லை.
“டேய் சாப்பிட்டு போ.” என்ற ரேணுகாவிடம் குழந்தையைக் கொடுத்தவன், “ஆஃபிஸ்ல பார்த்துக்குறேன்.” என்ற விக்ரமும் நரேனோடு கிளம்பிவிட்டான்.
காரில் ஏறியதும் தன்னிடமிருந்த பென்ட்ரைவை விக்ரமிடம் நீட்டி, “பாஸ் நீங்க கேட்ட டீடைல்ஸ் எல்லாம் இந்த பென்ட்ரைவ்ல இருக்கு. அதோட சாஃப்ட் காப்பி உங்க மெயிலுக்கு பார்வர்ட் பண்ணிட்டேன். நான் கேட்ட வரைக்கும் நார்மல் கான்வெர்சேசன்தான். இந்த வாய்ஸ் விக்கியோடதுன்னு நாம எப்படி ப்ரூஃப் பண்ண முடியும்? அப்படியே ப்ரூஃப் பண்ணாலும், அதுல நமக்கு என்ன இன்ஃபர்மேஷன் இருக்கு? அந்த ஆடியோல எனக்கு எந்த இன்ஃபர்மேஷனும் இல்லாத மாதிரிதான் தோனுது.” என்ற நரேனை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான் விக்ரம்.
அந்த சிரிப்பில் விக்ரம் ஏதோ செய்யப் போகிறான் என்று புரிய, “பாஸ்!” என்று அழைக்க,
“ஹாஹா… என்ன மேன் புரிஞ்சிடுச்சா?” என்று மேலும் சிரித்தவன், “இப்படி ஒரு வில்லன் இருக்கான்னு கண்டுபிடிக்கவே நமக்கு ஆறு மாசம் ஆகிருக்கு. ஆனா அவன் ரெண்டு வருசமா நம்மளை வச்சு செஞ்சிருக்கான். எவ்ளோ தில்லு பார்த்தியா அவனுக்கு? ஹ்ம்ம்… இதுவரைக்கும் கண் முன்னாடி வராம, எங்கயோ இருந்து ஆட்டம் காண்பிச்சிட்டு இருந்தான். இனி என் முன்னாடி நின்னு மோதப் போறான். வரட்டும், அவன் இங்க வரட்டும். இந்த விக்ரம் யாருன்னு தெரிஞ்சிட்டு இங்க இருந்து போகட்டும்.” என்ற விக்ரமின் குரலில் என்ன இருந்தது என்று நரேனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டான் என்று மட்டும் புரிந்தது.
“பாஸ் நீங்க நாளைக்கு மும்பை கண்டிப்பா போகணுமா?”
“கண்டிப்பா போகணும் நரேன். ஐபிஎல் ஏலம் எடுக்குறாங்க. நாம அந்த பார்ட்டிக்கு லீகல் அட்வைசர். அங்க இல்லன்னா சரியா இருக்காது. மேக்சிமம் த்ரீ டேய்ஸ். ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சு கிளம்பிடுவேன். அதுவரைக்கும் நீ இங்கப் பார்த்துக்கோ, அன்ட் இன்னைக்கு ஈவ்னிங் விக்கி சென்னை வந்துடுவான்.” என்று சொல்ல, “பாஸ்…” என்று அதிர்ந்த நரேனைப் பார்த்து விசமமாகச் சிரித்தான் விக்ரம்.
***
சென்னை விமான நிலையம்…
அந்த அலுமினியப் பறவை தன் சத்தத்தைக் கூட்டி, அங்கிருந்த மற்றவர்களின் காதைக் கிழித்துக் கொண்டேத் தரையிறங்க, தன் மேல் சாய்ந்து ஆழ்ந்த சயனத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து குற்ற உணர்ச்சி உண்டானது அவனுக்கு.
தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு பெண்ணை ஏமாற்றி, அவள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டது அவனுக்குப் புரியத்தான் செய்தது. தன் மேல் எத்தனைக் காதலை வைத்திருந்தால் தான் சொன்ன ஒவ்வொன்றையும் கண்ணை மூடிக்கொண்டு செய்திருப்பாள். அவளது அன்பிற்கு அவன் பொருத்தாமானவன் இல்லை என்று அவனுக்கேத் தெரியும். நடந்தவற்றை எல்லாம் நினைக்கும் போதே நெஞ்சம் கனத்துப் போனது.
ஆனாலும் அதையெல்லாம் மனதின் மூலையில் தள்ளிவிட்டு, தன்னுடைய குறிக்கோளை மனதில் நிறுத்தி தன் கைவளைவில் இருந்தவளின் கன்னத்தை வருடியபடியே, “ஸ்வே வேக்கப். ஃப்ளைட் லேன்டாகிடுச்சு.” என்ற விக்கியின் சத்தத்தில் மெல்ல கண்விழித்தவள் அவனைப் பார்த்து புன்னகைக்க,
அதில் தானும் சிரித்தவன், “பேப் என்னாச்சு உனக்கு? ஆஃப்டர் டூ யேர்ஸ்க்கு அப்புறம் நாம இங்க வந்திருக்கோம். உன் முகத்துல சிரிப்பே இல்லையே?” எனக் கன்னத்தை வருடியவனின் கைகளிலேயேத் தன் கன்னத்தைப் பதித்துக் கொண்டவள்,
“ஐ டோன்ட் க்னோவ் விக்கி. சம்திங்க் ஏதோ நடக்கப் போகுற மாதிரியே ஃபீல் ஆகுது. ஏதோ தப்பா…” என்றவள், “என்ன நடந்தாலும் என்னை விட்டுட மாட்டதானே விக்கி..?” என்றப் பெண்ணின் கண்களில் இருந்து மெதுவாக கண்ணீர் இறங்கியது.
அதில் மனதுக்குள் எழுந்த வலியை மறைத்தவன், “ஹேய் பேப்! வாட்ஸ் ராங்க் வித் யூ? என்னப் பேச்சு இது? நான் எப்படி உன்னை விடுவேன்? எனக்கு அந்த நிசாவைப் பழிவாங்கணும்தான், அந்த விக்ரமை ஒன்னுமே இல்லாம ஆக்கணும்தான். ஆனா அதுக்காக உன்னை விட்டுடுவேன்னு எப்படி நினைக்கிற? ம்ம்… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்ற விக்கியின் வாயை மூடினாள் பெண்.
“நோ… நோ விக்கி. நான் அந்த மீனிங்க்ல சொல்லல. நான் உன்னை நம்புறேன், உன்னை மட்டும்தான் நம்புறேன். உன்மேல நம்பிக்கை இல்லாம பேசவும் இல்லை. ஆனா மனசுல ஒரு கலக்கம். இத்தனை நாள் நான் உயிரோட இல்லன்னு நினைச்சிட்டு இருந்தவங்க முன்னாடி, நான் உயிரோட போய் நின்னா அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்? அதுலயும் விக்ரம்… அவன் என்னைப் பைத்தியம் போல லவ் பண்ணான். அவன்… அவனோட ரியாக்ஷன் நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.” என்றவளின் பேச்சில் இருந்த உண்மை அவனுக்கும் புரியத்தான் செய்தது.
ஆனால் அதையெல்லாம் பார்த்தால் அவர்களை எப்படி பழிவாங்குவது? இவளுக்காகப் பார்த்தால் தன் மொத்த திட்டமும் பாழாகிவிடும் என்று புரிய, “டோன்ட் வொரி பேப், அதுதான் நான் உன் கூடவே இருப்பேனே, அப்புறம் என்ன பயம்? நான் பார்த்துக்கிறேன். டோன்ட் பேனிக். சில் பேப்.” என ஒரு வழியாக அவளை சமாதானம் செய்தவன், தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினான்.
***
1 comment
வாங்கடா வாங்க..! இங்கே உங்களுக்கு ட்ரிபிள் மடங்கு ட்ரீட்மென்ட் காத்திருக்கு வாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797