தளிர் 14
விக்ரமும் நரேனும் வெளியில் கிளம்ப, தோழிகள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று நினைத்த ரேணுகா, தசிராவை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்.
அவர் தலை மறையும் மட்டும் அமைதியாக இருந்த நிசப்தி, ரேணுகா கதவை அடைத்த நொடி உஷாவின் கன்னத்தில் இடியை இறக்கியது போல, தன் பலம் கொண்ட மட்டும் ஒரு அறையை இறக்கியிருந்தாள்.
அந்த ஒற்றை அடியில் நிசப்தியின் கோபமும் ஆற்றாமையும் வலியும் அப்பட்டமாகத் தெரிந்தது. அப்போதும் தலையை நிமிர்த்தாமல் இந்த அடி தனக்குத் தேவைதான் என்பது போல, குனிந்தபடியே தான் நின்றிருந்தாள் உஷா.
“உயிர கொடுத்த கடவுளுக்கு அதை எப்படி எடுக்கணும், எப்ப எடுக்கணும் என்றுத் தெரியும். அப்படி என்ன உனக்கு வாழ்க்கை மேல வெறுப்பு வந்துடுச்சு. நீ செத்துட்டா எல்லாம் சரியாகிடுமா? செத்துட்டா பிரச்சனை எல்லாம் சரியாகும்னு தெரிஞ்சா இன்னைக்கு யாரும் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க.
உன் அம்மா உங்கிட்ட வாங்கின சத்தியத்தைக்கூட மறந்துட்ட இல்ல? நீயெல்லாம் என்ன பொண்ணு? உன்ன நம்பி இருக்குற எங்களைக்கூட நீ நினைக்கல தானே? யாரோ ஒருத்தருக்காக உயிர விட போயிருக்க அப்படித்தான? உன்னையெல்லாம் ச்சே… சொல்லுடி! வாய திறந்து பதில் சொல்லுடி.” என நிசப்தி ஆங்காரமாகக் கத்த,
“ப்ளீஸ் நிஷ், நீயாச்சும் என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. ஐ ஆம் டோட்டலி டயர்ட், பிசிக்கலி அன்ட் மென்டலி.” என அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் தளர்வான குரலில் சொல்லிவிட்டு, தலையைக் கைகளில் தாங்கியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். அவளது உடல் வெகுவாக நடுங்கத் தொடங்கியிருந்தது.
அதைப் பார்த்ததும், “ஏய் உஷா… ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்லடா… நீ டென்சன் ஆகாத. என்ன செய்யுது உனக்கு? சாப்டியா? டேப்லெட் போட்டியா? ரேணுமா இங்க வாங்களேன்…” எனப் பதட்டத்துடன் அவரையும் அழைக்க, அதில் பதறியபடி ஓடி வந்தார் ரேணுகா.
“அவளுக்கு இன்னும் ஹெல்த் சரியாகல நிசாம்மா, நீ கொஞ்சம் தள்ளி நில்லு. உன் கைல அடிப்பட்டுடப் போகுது. இப்படி ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் பண்றத நிறுத்தினாலே போதும். அவ நார்மல் ஆகிடுவா. ஏற்கனவே தப்பு செஞ்சுட்டமோன்னு குற்ற உணர்ச்சியில இருக்கா.
இதுல நீங்க எல்லாம் சேர்ந்து அவளைக் கஷ்டப்படுத்துறீங்க. அவளை அந்த குற்ற உணர்ச்சியில இருந்து வெளியில் கொண்டு வரத்தான் நாம முயற்சி செய்யணுமே தவிர, பேசிப்பேசி அவக் கூட்டுக்குள்ளயே ஒடுங்க விடக்கூடாது.” என்ற ரேணுகா, “உஷாம்மா நீ போய் முகம் கழுவிட்டு வா, சூடா காபி தரேன். அப்புறம் மத்ததை பேசலாம்.” என்று அவளை உள்ளே அனுப்பினார்.
நிசாவின் அருகில் வந்து, “நிசாம்மா உன் கோபம், ஆதங்கம் எல்லாம் எனக்குப் புரியத்தான் செய்யுது. ஆனா இப்போ அவ இருக்குற நிலைமையில எதையும் சொல்ல வேண்டாம்டா கண்ணம்மா. அவளே எல்லாத்தையும் உணர்ந்து சரியாகிடுவா. தான் எடுத்த முடிவு தப்பானதுன்னு அவளுக்கு சீக்கிரமே புரியும்டா.
இனி அதைப்பத்தி பேசாம அவ மனசை மாத்துறதுக்கு முயற்சி பண்ணு. ஒன்னும் செய்ய வேண்டாம், நம்ம தசிக்குட்டியை அவளுக்கு ஃப்ரண்டாக்கி விட்டுடு, சீக்கிரமே சரியாகிடுவா.” என நிசாவிடம் சொன்னவர், இருவரையும் கேள்வியாக நோக்கிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு,
“குட்டிம்மா உங்களுக்கு ஒரு புது அத்தை வந்திருக்காங்க பாருங்க. அவங்கக்கூட நீங்க ஃப்ரண்ட் ஆகிடுறீங்களா? சமத்து குட்டிக்கு ஏத்த சமத்து அத்தை அவங்க.” எனக் குழந்தையிடம் கூறிக்கொண்டே தசிராவை உஷாவிடம் கொடுக்க, அவளோ கைகள் நடுங்க அந்த சின்னப் பிஞ்சைத் தன் கைகளில் வாங்கிக்கொண்டாள்.
குழந்தை இருவரையும் மாறி மாறிப் பார்க்க அதற்குள் ரேணுகா காபி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நிசா இப்போது அவசரம் இல்லாமல் தோழியை அளவெடுக்க ஆரம்பித்தாள். இந்த இரண்டு வருடத்தில் ஏகப்பட்ட மாற்றம். உடல் இளைத்து கருத்துப் போயிருந்தாள்.
தோற்றமும் வெகுவாக மாறிப் போயிருந்தது. உடையும் ஏனோதானோவென்ற ஒரு சுடிதாரை அணிந்திருந்தாள். பார்க்க பார்க்க நிசப்தியின் கோபம் ஏறிக்கொண்டே சென்றது. ஆனாலும் பல்லைக் கடித்துத் தன் பொறுமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தாள் நிசப்தி.
தசிராவை இறக்கி விடாமலே காபியை பருகியவள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருக்க, நிசப்தியும் எதுவும் பேசவில்லை. ஆனால் இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தார் ரேணுகா. உஷாவைப் பற்றித் தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பேசி அது நிசாவுக்கும் தெரியும்படி பார்த்துக்கொண்டார்.
மதிய உணவிற்குப் பிறகு நிசப்தியும் தசிராவும் உறங்கச் சொல்ல, ரேணுகா உஷாவோடு அமர்ந்திருந்தார். நேரம் மதிய உணவைத் தாண்டி மாலையையும் தொட்டது.
“உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு உஷாம்மா?” என்று அவரே ஆரம்பித்தார்.
“ம்ம்… பரவால்லம்மா.” என்றுத் தயங்கியவள், “நீங்களும் நான் முட்டாள்தனமான முடிவை எடுத்துட்டேன்னு நினைக்கிறீங்களா?” என மெல்லக் கேட்க,
“நான் எப்போ அப்படி சொன்னேன்? உன்னோட பார்வையில அது சரின்னு படும்போது நான் எப்படி அதை முட்டாள்தனம்னு சொல்ல முடியும். ம்ம்ம்… உயிரை விடணும்னு முடிவு எடுக்குறது என்ன சாதாரண விஷயமா? ஒரு மனுஷன் சாகணும்னு நினைக்கிறான்னா அவன் வாழ்க்கையில் எந்தளவுக்கு அடிபட்டு, அந்த வாழ்க்கையை வெறுத்திருப்பான்னு எனக்குத் தெரியாதா?
அந்த முடிவை எடுக்க அவன் எவ்வளவு போராட்டம் தனக்குள்ளயே போராடிருப்பான்னும் தான் எனக்குத் தெரியாதா? அவனோட வலியும் வேதனையும், அடுத்து நமக்கு யாருமே இல்லேங்கிற ஒரு வெறுமையான உணர்வும் வந்தாதான், இந்த உலகத்துல வாழ வேண்டாம்னு முடிவெடுப்பான். உனக்கும் அப்படியான எண்ணங்கள் வந்திருந்தா அது யாரோட தப்பு. நீயே சொல்லு?
உன் அப்பா, அவரோட குடும்பம் இது எதுவுமே உனக்கு சொந்தமில்லன்னு உனக்கு முன்னாடியேத் தெரியும். அடுத்து நரேன், எல்லா தப்பும் அவன் மேலத்தான். ஆனா அவன் தப்பு செய்யக் காரணம் நான் பெத்த ரெண்டு பேரும்தான்.” எனப் பெருமூச்சு விட்டவர், இன்றோடு இவளது குற்ற உணர்ச்சியை நீக்கி நரேனோடு நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வைத்துவிடும் நோக்கத்தோடு பேச்சை மேலும் தொடர்ந்தார்.
“உஷாம்மா! இந்த விஷயத்தை நான் இப்போ பேசக்கூடாதுதான், ஆனா இதைவிட்டா அடுத்துப் பேச சமயம் வாய்க்குமோ என்னமோ? அதனால இப்பவே பேசிடுறேன். உன்னையும் எனக்குத் தெரியும், நரேனையும் எனக்குத் தெரியும். உங்க ரெண்டு பேர்லயும் தப்பில்லன்னும் எனக்குத் தெரியும்.
நரேன் ஒரு கட்டாயத்தால உன் கழுத்துல தாலிக் கட்டியிருந்தாலும், இனி நீதான் அவனோட வாழ்க்கைன்னு முடிவு செஞ்சுதான் அந்த மாங்கல்யத்தை உன் கழுத்துல கட்டினான். அது எனக்கு நல்லாத் தெரியும். ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்தது, அவன் என்ன பேசினான், பதிலுக்கு நீ என்ன பேசின எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா அதுக்காக தாலியைக் கழட்டி எறியிறது, வீட்டை விட்டுப் போறது எல்லாம் என்ன பழக்கம் சொல்லு?
அவனுக்கு யாருமே இல்லைன்னு உனக்குத் தெரியும். அவன் வாழ்க்கையில ரொம்ப மோசமா தோத்துப்போய் வந்து நின்னான். அவனை நம்ப வச்சு ஏமாத்திட்டா ஒருத்தி. அந்த வலி உடனேப் போயிடுமா சொல்லு? அந்த வலிக்கு மருந்தா இருப்பேன்னு தானே நீ அவ்வளவு பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் செஞ்ச. அப்படின்னா அவனை நீ பொறுத்துத் தானேப் போயிருக்கணும். கொஞ்ச நாள்ல அவனே மாறியிருப்பானே, இவ்வளவு கஷ்டம் வந்துருக்காதே தங்கம்.
ரெண்டு பேரும் நீங்களா பேசி, நீங்க ஒரு முடிவெடுத்து இப்போ அதுல யாரு நிம்மதியா இருக்கீங்க? ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில கஷ்டப்பட்டுட்டுத்தானே இருந்தீங்க.
உஷாம்மா எனக்கு முழுசா தெரியல என்றாலும் ஓரளவுக்கு என்ன நடந்ததுன்னு தெரியும். கிருத்தியும் நரேனும் விரும்பினது, ஸ்வாதி இடைல வந்து கிருத்தி மனசை மாத்தினது, அவ போட்ட நடிப்புல கிருத்தி ஏமாந்தது எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகுதான் எனக்குத் தெரியும். முன்னமே தெரிஞ்சிருந்தா நிச்சயமா கிருத்தியை இந்த முடிவை எடுக்க விட்டுருக்கமாட்டேன்.
நான் பார்த்து வளர்ந்த புள்ள நரேன். அவனை விடவா எனக்கு ஒரு நல்ல மருமகன் கிடைச்சிடுவான். ஆனா ரவி வந்து கேட்கும்போது எங்க யாருக்கும் மறுக்கத் தோனல. காரணம் இதேதான், அவனும் நான் பார்த்து வளர்ந்த புள்ளதான். அதோட கட்டினா ஸ்வாதியைத்தான் கட்டுவேன்னு விக்ரம் ஒத்தக்கால்ல நின்னான்.
மதிக்கும் கிருத்தியை ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்துடலாம்னு முடிவு பண்ணி எல்லா ஏற்பாடும் செஞ்சோம். ஆனா இந்த ஸ்வாதி இப்படியெல்லாம் செஞ்சு எங்க குடும்பத்தை சிதைச்சிடுவான்னு நாங்க நினைக்கவே இல்லைம்மா.
அவ இறந்த பிறகுதான் நிசப்தி பத்தியே எனக்கு தெரிய வந்தது. அதுக்கு முன்னாடி விக்ரமும் சரி, ஸ்வாதியும் சரி, ஏன் விஷயம் தெரிஞ்ச மதியும் சரி எங்கிட்ட மூச்சே விடல. நான் என்ன பண்ணட்டும் சொல்லு?” என்றவர் கண்களில் நீர் இறங்க, அதை நாசூக்காக புடவையில் துடைத்தார்.
“ம்மா… நீங்க எதுக்கு இவ்வளவு விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க? இங்க நடந்தது எதுவும் எனக்குத் தெரியல என்றாலும், நரேன் லைஃப்லயும் நிசா லைஃப்லயும் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும். அதனால இந்தப் பேச்சே இனி வேண்டாம்.” என்று சின்னவள் மறுத்துப் பேசினாலும், அவள் குரல் சிறு பிசிறு தட்டியது.
அது ரேணுகாவிற்கும் புரிந்தது. அதனால் உஷாவின கைகளைப் பிடித்து, “இதெல்லாம் நீ பயந்துக்கணும்னு நான் சொல்லலடாமா, உனக்கும் தெரிஞ்சிருக்கணும்னு சொன்னேன் அவ்வளவுதான். சரியா? நிசாவைப் பத்தி எந்தக் கவலையும் உனக்கு வேண்டாம். நீ உன் வாழ்க்கையைப் பாரு, நரேனைப் பாரு.
சீக்கிரம் குழந்தைப் பெத்துக்கோ. உங்க வாழ்க்கையை அழகா மாத்து. நிசாவுக்கு நான் இருக்கேன், விக்ரம் இருக்கான். பார்த்துக்குறோம் சரியா? இனி அவளுக்காக பழிவாங்குறேன்னு விக்ரம் பின்னாடி அலையாத.” என்றவர் லேசாக சிரித்துவிட, உஷாவிற்கும் மெல்ல சிரிப்பு எட்டிப் பார்த்தது.
அதேநேரம் விக்ரம் மட்டும் வீட்டினுள் நுழைய, அவனைக் கேள்வியாகப் பார்த்தார் ரேணுகா.
“ம்மா… நான் இப்போ மும்பை கிளம்புறேன், த்ரீ டேய்ஸ் ஆகும் ரிட்டர்ன் ஆக. ஐபிஎல் டீம் ஏலம் நடக்கப்போகுது, அந்த டீம்ல நானும் ஒரு லீகல் அட்வைசர். சோ கண்டிப்பா போயே ஆகணும்.”
“கிளம்பு… கிளம்பு… முதல்ல கிளம்பு. உன் பொண்ணு எந்திரிச்சி வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ண போறா.”
“ம்மா என் பொண்ண குறை சொல்லலன்னா உங்களுக்கு தூக்கமே வராதா? அவ கொஞ்சம் பெரியவளாகட்டும், அப்ப இருக்கு உங்களுக்கு…” எனத் தாயிடம் வாயடித்துவிட்டு, “ஆமா எங்க ரித்தி பசங்கள காணோம்? வரலயா? அம்மு ஏங்கி போயிருப்பா இல்ல?” எனக் கேட்க,
“உன் பொண்ணுக்காக அவங்க இங்கேயே இருக்க முடியுமா? பல மாசம் கழிச்சு இப்பத்தான் ஸ்கூல் திறந்திருக்காங்க, அவங்க ஸ்கூல் போக வேண்டாமா?” என்று அவனை வாரிவிட்டு, கிச்சனுக்குள் நுழைய, இப்போது விக்ரமும் உஷாவும் தனித்து விடப்பட்டிருந்தனர்.
அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. பேச்சுகளற்ற அமைதி. அதை கலைப்பதைப் போல, “கொஞ்சம் இருக்கியா? பஜ்ஜி பண்றேன்.” என்ற ரேணுகாவை முறைத்துப் பார்த்தான் விக்ரம்.
“ஏன்டா, வேணும்னா வேணும் சொல்லு, இல்ல வேண்டாம் சொல்லு. அதுக்கு ஏன் இவ்வளவு பாசமா பார்க்குற?”
“ம்மா… இந்த காமெடிக்கு நான் ரிமைண்டர் வச்சு ஒரு வாரம் கழிச்சு சிரிக்கிறேன். இப்போ எனக்கு டைம் ஆச்சு, நான் வர வரைக்கும் உங்க மருமகளை எங்கேயும் போகாம வீட்டுல இருக்கச் சொல்லுங்க.
இவ பின்னாடி அலைய இங்க நான் இல்ல. நரேனுக்கும் வேலை அதிகம். கிருத்தியை விட்டு ரவியும் வர முடியாது. அதனால உங்க மருமகளை சாகசம் பண்ணாம இருக்கச் சொல்லுங்க.” எனச் சொல்லி முடிக்கும் முன், அவன் மேல் ஒரு டவல் வந்து விழ, வேகமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு அக்கினிப் பார்வையுடன் அறை வாசலில் நின்றிருந்தாள் நிசப்தி.
ரேணுகா நமுட்டுச் சிரிப்புடன் மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்துவிட, வந்த வேகத்தில் நிசப்தியும் அவளது அறைக்குள்ளேச் சென்றுவிட, “இவளையெல்லாம் எப்படித்தான் சமாளிச்சாங்களோத் தெரியல? நீயெல்லாம் அவ ஃப்ரண்ட்தானே சொல்ல மாட்டியா? ஒரு மரியாதை கிடையாது.” என விக்ரம் எரிச்சலாகச் சொல்ல,
“இதோட முடிஞ்சதுன்னு சந்தோசப்பட்டுக்கலாம், நான் அடி வாங்கிட்டு உக்காந்திருக்கேன்.” என மெல்லியக் குரலில் உஷா சொன்னாலும், அதில் கிண்டலும் சிரிப்பும் இருந்ததை அவன் உணர்ந்துகொண்டான்.
அவளை முறைத்தவன் இப்போது நிசாவின் அறைக்குச் சென்றான். குழந்தை அப்போதுதான் முழிப்பதற்காக மெல்ல சினுங்க ஆரம்பித்தது. அதன் அருகில் அமர்ந்தவன் தலையை வருடிக் கொடுத்தபடியே நிசாவைப் பார்த்தான்.
இதுவரை இருந்த கிண்டல் தொனி போய் தீவிர முகபாவனை வந்துவிட, “என் பேச்சைக் கேட்கக்கூடாதுன்னு எல்லாம் முடிவு பண்ணிருந்தா, அதை இப்போ மட்டும் மறந்திடு. நான் வர வரைக்கும் தயவுசெய்து ரெண்டு பேரும் வெளியே போகாதீங்க.” என்றதும் அவள் புருவம் சுருக்க, “எஸ், எஸ்கார்ட்ஸ் எப்பவும் இருப்பாங்கதான். ஆனாலும் கவனமா இருந்துக்குறது நல்லதுதானே.” என்றவனின் கலங்கியக் குரலில் எதிர்த்துப் பேச வேண்டும், என்று வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது.
அவனை யோசனையாகப் பார்க்க, நிசப்தியின் அருகில் வந்தவன் அவள் என்னவென்று யோசிக்கும் முன்னே இறுக அனைத்தவன், “சாரி… இந்த மூணு நாள்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம். அதுக்காக எல்லாம் நீ இங்க இருந்து போகவோ, என்னை அவாய்ட் பண்ணவோ கூடாது. தசிரா என் பொண்ணு. அது இனி எப்பவும் மாறாது, மாறவும் விடமாட்டேன். நீ மட்டும் கண்டதையும் யோசிச்சு பைத்தியக்காரத்தனம் பண்ணாம இருந்தா சரி ப்ளீஸ்…” என்றவன்,
“நரேனும் உஷாவும் இங்கதான் இருப்பாங்க. அவங்களை உன்னாலத்தான் சரி பண்ண முடியும்னு இங்க வரச் சொல்லியிருக்கேன். தப்பு யார்மேல இருந்தாலும், இனி எல்லாம் சரியாகி அவங்க ஒரு நல்ல வாழ்க்கை வாழணும். அது உன் கையிலதான் இருக்கு.” என்றவன் அவளை மீண்டும் ஒருமுறை இறுக்கிவிட்டு அணைப்பை விலக்க, ‘இந்த லூசு என்ன பேசுது’ என்ற யோசனை ஓட, பேயறந்தைப் போல் நின்றிருந்தாள் நிசப்தி.
***
அந்த ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றபடி, இரவை ஒளிர வைத்துக்கொண்டிருந்த பால்நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் விக்கி. அவனது யோசனையெல்லாம் ஸ்வாதியை எப்படி பிரிவது என்ற யோசனையிலேயே இருந்தது.
நாளை அவளைக் கொண்டுபோய் அவள் வீட்டில் விடவேண்டும். நிச்சயம் பிரச்சனைகள் வெடிக்கும், அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று ஏற்கனவே அவன் முடிவெடுத்திருந்தான். இப்போது அது அவன் பிரச்சனையில்லை, ஸ்வாதிதான் பிரச்சனை. ‘என்னை விட்டுச் செல்’ என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளமாட்டாள் என்றுத் தெரியும். முதலில் அவளிடம் தன் திட்டத்தை விலக்கி, அதன்பிறகே மற்ற விசயங்களைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
இதை முன்னமே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அதற்கு ஆரம்பத்திலேயே, ‘பெரிய முடியாது’ சொல்லியிருப்பாள். அவளைப் பற்றி இந்த இரண்டு வருடத்தில் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான் விக்கி. அதனாலயே அவளிடம் தன் திட்டம் எதையும் சொல்லாமல் அழைத்து வந்திருந்தான்.
அடுத்தடுத்து தான் கொடுக்கப் போகும் குடைச்சல்கள், அதனால் விக்ரமிற்கும் நிசப்திக்கும் உண்டாகும் பிரச்சனைகள்தான் அவன் மனதில் வந்து போனது. இப்போது அவனுக்கு ஸ்வாதி முக்கியமாகத் தோன்றவில்லை. விக்கியின் இந்த எண்ணம் ஸ்வாதிக்குத் தெரிந்தால்…?
***
1 comment
விக்கியோட இந்த எண்ணம் தெரிஞ்சால் அழுவாள், புலம்புவாள், கதறுவாள், கெஞ்சுவாள்… அதற்கப்புறம் தான் தன்னோட நிலைமை ‘அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையா’ ஆகிடுச்சேன்னு ரியலைஸ் பண்ணுவாள்.
😀😀😀
CRVS (or) CRVS 2797