தளிர் 15
விக்கிக்கு இப்போது ஸ்வாதியின் மனநிலையோ, அல்லது அவளது எண்ணங்களோ, இல்லை அவளது உணர்வுகளோப் பெரிதாகத் தெரியவில்லை. அவனது பழிவாங்கல் திட்டம் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது.
இத்தனை வருடங்கள் காத்திருந்தது, விக்ரமையும் நிசப்தியும் பழிவாங்கத்தான் என்பது ஸ்வாதிக்கும் தெரியும். அப்படியிருக்க ஸ்வாதி பெரிதாக எந்தப் பிரச்சனையும் செய்யமாட்டாள் என்று நினைத்துக்கொண்டான்.
அவன் நினைத்திருந்தால் இந்த இரண்டு ஆண்டில் இருவரையும் நிச்சயம் பழிவாங்கியிருக்க முடியும். யார் என்றேத் தெரியாமல், கண்டுபிடிக்கவும் முடியாமல், எழவே முடியாமல் என அடித்திருக்கவும் முடியும். ஆனால் அப்படி செய்தால் அதில் என்ன திருப்தி இருக்கப் போகிறது.
அதோடு அப்போது இருவரும் ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாக இருந்தனர். அப்படி வலிக்க வைத்தால் அதில் என்ன பெரிதான நிம்மதியும் கிடைத்திடப் போகிறது.
இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். இருவரையும் வலிக்க வலிக்க அடிக்க வேண்டும். அதைப் பார்த்து இருவரும் கதற வேண்டும் என்பதுதானே அவனது முழுத் திட்டமே.
அதற்காக இரண்டு வருடங்கள், ‘ஒற்றைக்கால் கொக்கைப் போல’ காத்திருந்தான். அப்படியொரு சந்தர்ப்பம் அமையும்போது விட்டுவிடுவானா என்ன?
அடுத்தநாள் காலையில் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒருமுறை யோசித்துக்கொண்டான். அடுத்து ஸ்வாதியிடம் பேசுவதையும் ஒருமுறை தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக்கொண்டான். அவள் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டான்.
கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு, அறைக்குள் வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஸ்வாதியைப் பார்த்தான்.
அவளைப் பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த மோகம் கிளர்ந்தெழ, தான் போட்டு வைத்திருந்த அனைத்து திட்டங்களும் தவிடு பொடியாக, வேகமாக அவளை நெருங்கித் தன் கைக்குள் முரட்டுத்தனமாக அள்ளிக்கொண்டான்.
அவனது முரட்டு அணைப்பில் விழித்தவள், “வாட் விக்கி?” எனச் சோம்பலாய் கேட்க,
“ஐ நீட் யூ… நீட் நவ் ஸ்வே…” என மோகம் கலந்த கரகரத்தக் குரலில் கூறியவன், அவள் பதிலுக்குக் கூட காத்திராமல் பெண்னவளின் மென்னிதழை, தன் வன்னிதழால் சிறை செய்துகொண்டான்.
ஆணவனின் கரங்கள் அவளை நெருக்க, என்றுமில்லாத இந்த நெருக்கத்திலும் முரட்டுத்தனத்திலும் முதலில் பயந்தாலும் பின் அவனுக்கு ஈடாக அவளும் நெருக்கத்தைக் காட்ட, மோகத்தின் உச்சத்தில் இருந்தவன் அப்படியே அவளைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டான்.
ஆடைகள் தடையாக அவசரக் கதியில் அவற்றை அகற்றியவன், அவளை மொத்தமாக தனக்கே தனக்கானவளாக மாற்றிக்கொண்ட பிறகும், அணைப்பை விலக்காமல் இருக்க, அவன் மார்பில் இருந்து முகத்தைத் தூக்கியவள் மெல்லியக் குரலில், “வாட் ஹேப்பன்ட் விக்கி?” என ஆதரவாக அவன் தலை கோத,
“ஐம் நாட் ஓகே ஸ்வே. ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப். என்னுடைய இத்தனை நாள் கோபத்திற்காக உன்னை பலியிட என்னால் முடியாது பேப். நாம இங்க இருந்து போயிடலாம், உன்னை கஷ்டப்படுத்தி எனக்கு எந்த சந்தோசமும் வேண்டாம்.
நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது. வீ ஆர் லீவ் டுமாரோ. நாம லண்டன் போகலாம்.” என்றவன் அணைப்பை மேலும் இறுக்க, அவன் குரலில் இருந்த வருத்தமும் நடுக்கமும் ஸ்வாதிக்கு வித்தியாசமாக இருந்தது.
விக்கியின் கேசத்தைக் கோதிக் கொண்டிருந்த விரல்களில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்து, அவனைத் தன் முகத்தைப் பார்க்க வைத்தாள். பின் அவன் அலைப்புறும் விழிகளில் மெல்லிய முத்தங்களைப் பதித்தவள், “பயப்படுறியா விக்கி, அந்த விக்ரமைப் பார்த்து பயப்படுறியா?” என்றாள்.
‘நோ’ என்று தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டிவிட்டு, “அவன் எனக்கு ஒரு ஆளே இல்ல ஸ்வே. நான் நினைச்சா இப்போ இந்த நிமிசம் அவனை ஒன்னுமில்லாம ஆக்க முடியும். ஆனா எனக்கு அது பிரச்சனையில்லை. நீ… நீதான். நீ மட்டும்தான்!” என்றான் கலங்கிய குரலில்.
அதைக் கேட்டு அதிர்ந்தவள், “வாட்? நானா? நான் என்ன பண்ணேன் விக்கி? நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா? என்னாச்சு?” என பயந்து போய் கேட்க, அந்தப் பயம்கூட அவன்மீது வைத்த அளப்பரியக் காதல்தான் என்பது விக்கிக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இப்போது அவன் இல்லை.
“நோ… இல்ல, நம்ம ப்ளான் நாளைக்கு ஸ்டார்ட் ஆகிடும். அப்போ நீ உங்க வீட்டுக்கு போகணும். அங்க எல்லாரும் உன்னை கேள்வி கேட்பாங்க. சிலர் நம்பலாம், சிலர் நம்பாமகூட போகலாம். அதை நீ எப்படி சமாளிப்ப? உன்னை அவங்க ரொம்பவே கஷ்டப்படுத்துவாங்க.
என்னால அதையெல்லாம் பார்க்க முடியும்னு தோனல ஸ்வே. சோ என்னோட பிரச்சனை எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன். உன்னை இதுல இழுக்க வேண்டாம்னு யோசிக்கிறேன். எனக்கு என் உயிரைவிட நீ ரொம்ப முக்கியம் ஸ்வே. அது உனக்குப் புரியுதா?” என்றான் மனதில் உதித்த வன்மத்தை வெளியில் காட்டாமல்.
“விக்கி நான் ஏற்கனவே உனக்கு பலமுறை சொல்லியிருக்கேன், உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு. அப்படி இருக்கும்போது நீ ஏன் கண்டதையும் யோசிச்சு டென்சன் ஏத்திக்கிற? விடு பார்த்துக்கலாம்.
உன் ப்ளான் என்னனு மட்டும் சொல்லு, எங்க வீட்டை நான் சமாளிச்சுக்கிறேன்.” என விக்கியை வெகுவாக சமாதானம் செய்து, அவன் திட்டத்தில் தானாக சென்று விழுந்தாள். அவனும் அவளிடம் சமாதானம் ஆனதைப் போலக் காட்டிக்கொண்டாலும், விழிகளில் விக்ரமைப் பழிவாங்கும் குரோதம் தாண்டவமாடியது.
‘ஹேய் விக்ரம் உன்னைப் பார்க்க நான் வந்துட்டேன்டா. உனக்கு முடிவு கட்ட வந்துட்டேன்டா. உன் விரலாலயே உன் கண்ணைக் குத்துற வலி எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும்! அது உனக்கும் தெரியணும், தெரிய வைப்பேன். இனி என் ஆட்டம் தொடரும், அதை நீயும் அந்த நிசப்தியும் பார்க்க ஆவலுடன் வெயிட் அன்ட் வாட்ச்’ என மனதில் நினைத்தவனுக்கு, ஸ்வாதியை சமாளித்து தன் திட்டத்தை ஒத்துக்கொள்ள வைத்துவிட்ட ஆசுவாசமும், விக்ரமை மரண அடி அடிக்கும் வேகமும் தோன்றியது.
***
இங்கு மும்பை சென்ற விக்ரமிற்கு அவனால் தன் வேலையை சரிவர செய்யவே முடியவில்லை. இதுவரை அவன் இந்த மாதிரி இருந்ததே இல்லை. இப்படி பிசினஸ் ட்ரிப் என்று வந்துவிட்டால், யார் அழைத்தாலும் எந்த ஒரு அவசரம் என்றாலும் அலைபேசியைத் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டான்.
ஆனால் இப்போது நொடிக்கொரு முறைத் தன் அலைபேசியை எடுத்து நிசப்திக்கு மெசேஜைத் தட்டிக்கொண்டிருந்தான். அவளோ அவனது மெசேஜைத் திறந்து பார்ப்பதே பாவம் என்பது போல் அந்த குறுந்தகவல்களைத் திறக்கக்கூட இல்லை. அதுவே விக்ரமின் பிபியை ஏகத்துக்கும் ஏற்றியது.
‘திமிர்… திமிர்… உடம்பெல்லாம் திமிர்.’ என மனதுக்குள் அவளை வறுத்து எடுத்தவன், வேறுவழியே இல்லாமல் ரேணுகாவிற்கு அழைத்தான். அவனது அழைப்பைப் பார்த்தவர் விக்ரம், ‘ஹலோ’ என்று சொல்வதற்கு முன்பே, “அட இன்னைக்கு சென்னைல மழைன்னு கூட வெதர் ரிப்போர்ட் சொல்லலயேடா தம்பி.” எனக் கிண்டலில் இறங்க, தாயின் பேச்சில் பல்லைக் கடித்தான் விக்ரம்.
“ம்மா… நீங்க அடிக்கிற ஜோக்குக்கு எல்லாம் நான் ஃப்ரீ டைம்ல உக்காந்து சிரிக்கிறேன். இப்போ என் பொண்ணுக்கிட்ட போன் கொடுங்க.” என விக்ரம் பல்லைக் கடித்து பேசுவது இங்கு ரேணுகாவிற்கே கேட்டது.
அதில் சிரித்துக் கொண்டே, “ரவி பசங்களை அழைச்சிட்டு வந்துருக்கான் விக்கி. பாப்பா அவங்ககூட விளையாடிட்டு இருக்கா. அந்த ரெண்டும் வந்தாதான் உன் பொண்ணு முகத்துல சிரிப்பே பார்க்க முடியுது.
அவங்க இருக்கும்போது சாப்பிட கூப்பிட்டாகூட வரமாட்டா, அவங்க அம்மாவையே திரும்பி பார்க்கமாட்டா. இப்போ போய் நீ பேசுறன்னு சொன்னா, என்னை முறைச்சிட்டே இருப்பா. அதனால அவங்க போனதும் பேச சொல்றேன்.” என்று அவன் பதிலைக் கூட கேட்காமல் வைத்துவிட்டார்.
‘இந்த அம்மாவை…’ எனப் பல்லைக் கடித்தவன், போனின் வால்பேப்பரில் ஓவியப் பாவையாய் ஜொலித்துக் கொண்டிருந்த மகளின் படத்தை ரசித்துப் பார்த்தான். ‘சேட்டைக்காரி’ அப்படியே அம்மா மாதிரி என்றுத் தனக்குள்ளேச் சிரித்தவனுக்கு குடும்பமாக வாழும் ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.
நிசப்தியையும் குழந்தையையும் தள்ளி வைத்துப் பார்க்கும் போது தோன்றாத உணர்வுகள் எல்லாம், இப்போது அருகில் இருக்கும்போது தாறுமாறாக எகிறி அவன் ஏக்கத்திற்கு நெய் வார்த்தது.
தசிரா இங்கு வந்த இத்தனை நாளில், தன் சித்திரப் பெண்ணை ஒரு நாளேனும் தரிசிக்காமல் அந்த நாள் நகர்ந்தது இல்லை. இத்தனை நாட்கள் இந்த உயிரோவியத்தைப் பார்க்காமல் எப்படி இருந்தேன் என்று அவனுக்குள்ளே கேள்வி தோன்றித் தன்னையே உருக்கி எடுத்தது.
யாரையோ பழிவாங்க நினைத்து, தன் ரத்தத்தைப் பழிவாங்கி விட்டேனோ? யாருக்கும் எந்த பிரச்சனையும் வராமல் இந்தப் பிரச்சனையை முடித்து விடவேண்டும் என்று நினைத்தது தவறோ? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான். அமைதியாக யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் பிரச்சனையை முடிக்க நினைத்தான்.
ஆனால் அப்படி அமைதியாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை, நிசப்திக்கு நடந்த விபத்தில் புரிந்துகொண்டான். இதற்கு முன் அவனுக்கேத் தெரியாமல் கிளை கிளையாய் புதுப்புது பூகம்பங்கள் அவன் வாழ்வில் நடந்து முடிந்திருந்தது. அது அவனது முட்டாள் தனத்தாலும், காதலெனும் மயக்கத்தாலும் நடந்தது.
ஆனால் இனியும் அப்படியே இருப்பான் என்றால், அது சாத்தியம் இல்லையே. நடக்கவும் நடக்காதே. ஒருமுறை ஏமாறலாம், ஒவ்வொரு முறையும் ஏமாற அவன் என்ன பழைய விக்ரமா?
‘விக்கி நீ சாதாரணமா பயமே இல்லாம நடமாடணும்னுதான் நான் இங்க வந்து உக்காந்திருக்கேன். ப்ளானை ஸ்டார்ட் பண்றது நீயா இருந்தாலும், முடிக்கப் போறது நானா மட்டும்தான் இருப்பேன். நீ ஆரம்பிச்சு உன் கேமை ஸ்டார்ட் பண்ணு, நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.
இந்த கேம்ல இனி எந்த ஓர் உயிரும் போயிடக்கூடாது’ என்று அவன் நினைக்க, ஆனால் அவனாலே ஒரு உயிர் போகும் என்று அப்போது அவன் நினைத்திருக்கவில்லை.
ரித்தியின் பிரசவ நாள் வேறு மிகவும் அருகில் இருக்க, ரேணுகா குழந்தைகளை இங்கேயே இருக்க வைத்துக்கொண்டார். மதியழகியும் ரவியும் அவளுடனே இருப்பதால் ரித்தியைப் பற்றி பெரிதாக கவலைகள் எதுவும் இல்லை அவருக்கு.
அதோடு நிசப்தியைத் தனியே விடவும் அவரால் முடியாது. அதனால்தான் குழந்தைகளையாவது பார்த்துக் கொள்ளலாம் என்று இன்று ரவியிடம் சொல்லி இங்கு கொண்டு வந்துவிட சொல்லியிருந்தார்.
“அத்தை என்னாச்சு போனை கையில வச்சிட்டு யோசனைக்குப் போயிட்டீங்க…” என்றபடியே ரவி அங்கு வந்து அமர,
“எல்லாம் உன் மச்சான்தான், பொண்ணுக்கிட்ட பேசணுமாம். நம்மளப் பார்த்தா எப்படி இருக்காம்? அதெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லி போனை வச்சு கடுப்பாக்கிட்டேன்.” என்று சிரிக்க,
“அத்தை நீங்க அவனை ஏன் டென்சன் பண்றீங்க? அந்த வேலையில சின்ன தப்பு நடந்தாலும் மொத்தமா அவனைத்தான் தப்பு சொல்வாங்க.” என,
“ரவி ஏற்கனவே உனக்கு சொல்லிட்டேன், அவனுக்கு சப்போர்ட் பண்ணி எங்கிட்ட பேசாதன்னு. அப்படியே தப்பு செஞ்சாலும் மாட்டிக்கிட்டு முழிக்கட்டுமே யாருக்கு என்னாகப் போகுது. சரி அதை விடு ரித்தி, வாக்கிங் போறாளா? எங்கிட்ட போறேன் போறேன் சொல்லிட்டு, உங்களை ஏமாத்துற மாதிரி என்னையும் ஏமாத்துறாளா?” என மகளின் பேச்சுக்குத் தாவ,
“அதெல்லாம் போறா அத்த, என்ன கூடவே நானும் போகணும் அவ்வளவுதான்.” என்று சிரிக்க,
“அவ்வளவு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்க, வேற என்ன சொல்ல?” என்றவர் குழந்தைகளிடம் செல்ல, அப்போது அறைக்குள் இருந்து நிசப்தியும் உஷாவும் வெளியில் வர, வழக்கம்போல் நிசப்தி அவனை முறைக்க உஷாவோ, “ரவிண்ணா” என்றபடி ஓடிப்போய் அவன் கையைப் பிடிக்க,
உஷா பிடித்தக் கையைப் பட்டென்று விலக்கியவன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறையை இறக்கியிருந்தான் ரவி.
“ரவிண்ணா…” என அவள் முழிக்க,
“ஓ… மேடம்கு எங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கா? பாரேன்… எனக்குத் தெரியாம போச்சு.” எனக் கிண்டல் குரலில் பேச,
“ரவிண்ணா ப்ளீஸ்…” எனவும்,
“போதும்.” என்றுக் கத்தியவன், “இப்போ வந்து வார்த்தைக்கு வார்த்தை ரவிண்ணா, ரவிண்ணான்னு சொன்னா என் மேல பாசம் பொங்குதுனு நான் நம்பணுமா? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை என்ன செய்வேன்னே தெரியாது. அன்னைக்கே நான் சொன்னேன், அந்த ராஸ்கலை டிவோர்ஸ் பண்ணு, வேற லைஃப் நான் அமைச்சுத் தரேன்னு. அதையெல்லாம் கேட்காம அவன் திருந்துவான், சரியாவன்னு சொல்லி கடைசில என்னாச்சு? சொல்லு என்னாச்சு? உனக்கு பைத்தியம்தான் பிடிச்சது.” எனக் கத்த,
“போதும் ரவிண்ணா… அவ ஏற்கனவே தப்பு பண்ணிட்டோம் என்ற குற்றவுணர்வுலதான் இருக்கா. ஆளாளுக்குப் பேசி அவளுக்கு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம்.” எனத் தோழிக்கு ஆதரவாக நிசப்தி பேச, நிசப்தி பேசியபின் மறுமொழி பேச ரவிக்குத் தைரியம் இருக்கா என்ன? அமைதியாகிவிட்டான்.
குழந்தைகளின் சத்தம் மட்டுமே அந்த அறைக்குள் கேட்க, ரேணுகா அவர்களை வேடிக்கைப் பார்க்க, மற்ற மூவரும் அமைதியாக இருக்க, அந்த அமைதியைக் கலைப்பது போல் “ரவிண்ணா…” என உஷாவே ஆரம்பித்தாள்.
“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” எனத் தயங்கியவள், தன் செயினில் மாட்டியிருந்த ஒரு பென்டன்டைக் கழட்டி அவனிடம் கொடுத்து, “இது நான் இப்போ ரீசன்டா இன்வெஸ்டிகேட் பண்ண கேஸ் பத்தின டீடைல்ஸ் இருக்குற பென்ட்ரைவ். ரொம்பவே சீக்ரெட் டீடைல்ஸ் இருக்கு. இதை யாருக்கிட்ட கொடுக்க, என்ன பண்ணனு எதுவும் எனக்கு சரியாத் தெரியல. எங்க எடிட்டர்கிட்ட கொடுக்கலாம்தான், ஆனா அவர் எவ்வளவு நம்பிக்கையானவர்னு தெரியல அதான்…” என இழுக்க நிசப்தி அமைதியாக இருக்க, ரவி அதை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இது விக்ரம் டீல் பண்ற அந்த மினிஸ்டர் கேஸ் டீடைலா?” என கேட்க, இல்லையெனும் விதமாகத் தலையாட்டினாள் உஷா.
‘பின்னே’ என மற்ற இருவரும் அவளை யோசனையாகப் பார்க்க, “இது ஸ்வாதி கேஸ் பத்தின டீடைல்ஸ். நான் அதை விசாரிக்க ஆரம்பிக்கவும்தான் எனக்கும் விக்ரம் சாருக்கும் பிரச்சனை ஆரம்பிச்சது.” என்றவள், “நாம எல்லாம் நினைக்கிற மாதிரி ஸ்வாதி இறக்கல.” எனவும்,
“வாட்…!” என அதிர்ச்சியில் ரவி எழுந்துவிட, நிசப்திக்கு அப்படி ஒன்றும் பெரிய அதிர்ச்சி இல்லை இது. ஸ்வாதி இருந்தாலும் இல்லையென்றாலும் அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எதற்காக இப்படி செய்திருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தால் போதும்.
அதிர்ச்சியில் இருந்த ரவியின் கையைப் பிடித்த உஷா, “ஃபர்ஸ்ட் இதை நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, அதுக்குப் பிறகு நாம பேசலாம்.” என ஆதரவாகப் பேச, ரவிக்கு என்ன பேசுவது, என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை. அவன் பார்வை சட்டென்று நிசப்தியைத் தொட்டு மீண்டது.
அவளது இயல்பான பார்வையில் சற்றே ஆசுவாசம் ஆனவன், “ம்ம்…” என்றுவிட்டு ரேணுகாவிடம்கூட சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
***
1 comment
அடப்பாவி..! அப்படின்னா இந்த விக்கி ஸ்வேதா கிட்ட கூட உண்மையான நேசத்தை காட்டலையா…?
😀😀😀
CRVS (or) CRVS 2797