தளிர் 16
விடியல் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. முதல் நாள் உஷா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் ரவி. அவன் கையில் இருந்த பென்ட்ரைவும் அவள் சொன்னதை உண்மை என்றுதான் நிரூபித்துக் கொண்டிருந்தது.
இது விக்ரமிற்குத் தெரிந்தால் என்ற கேள்வி ஆரம்பிக்கும் போதே அதற்கான பதிலும் வந்தது, அவனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லையென்று. ஆம்! அவனுக்குத் தெரியப்போய் தானே உஷாவை இதிலிருந்து விலகச் சொல்லியிருக்கிறான். ஆனால் ஏன் தன்னிடம் சொல்லவில்லை? என்ன காரணம்? அவனுக்கு இப்போதைய எல்லாமே தெரியுமா? என்றும் பல குழப்பங்கள்.
அதோடு, ‘எப்படி… எப்படி? எங்கே கோட்டை விட்டேன்?’ என்ற யோசனை வேறு அவனுக்கு. இப்போது ஸ்வாதி எங்கே இருக்கிறாள்? இருந்தால் இன்னும் ஏன் தங்களைத் தேடி வரவில்லை? அப்படியென்றால் உயிருடன் இல்லையா? இல்லை சுயநினைவில் இல்லையா? அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ இப்படியான கேள்விகள்தான் இரவு முழுவதும் அவன் மனதையும் மூளையையும் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.
இதில் தங்கை வருவதால் விக்ரமிற்கும் நிசப்திக்கும் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் அவன் யோசிக்க, யோசித்தவனுக்கு ஸ்வாதியின் குணங்கள் புரிய அவளை எப்படி சமாளிப்பது என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஸ்வாதி வந்ததும் விக்ரமைத்தான் கேட்பாள் என்பதும் அவனுக்குத் தெரியும். என்ன செய்வது? எப்படி இதற்கு தீர்வு காண்பது? முதலில் இவள் ஏன் இப்படி செய்தாள்? இப்படி மேலும் பல கேள்விகள் அவன் மூளையை தூங்கவிடாமல் அரித்துக் கொண்டிருக்க, அலுவலகம் கிளம்பாமலே அமர்ந்திருந்தான்.
“ரவி என்னாச்சு? இன்னும் ஆஃபிஸ் கிளம்பாம இருக்கீங்க. உங்க போன் வேற அப்போதிருந்தே அடிச்சிட்டு இருக்கு, எடுக்காம இருக்கீங்க.”
“இல்ல ரித்திம்மா, ஆஃபிஸ்ல ஒரு சின்ன பிரச்சனை. அதை எப்படி சால்வ் பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன், அதனால இதை கவனிக்கல.”
“சின்னப் பிரச்சனைக்கு எல்லாம் நீங்க இப்படி அப்செட் ஆகுற ஆளே இல்லை, என்னாச்சு? நேத்து நிசாவைப் பார்த்துட்டு வந்ததுல இருந்துதான் இப்படி இருக்கீங்க. அங்க எதுவும் பிரச்சனையா? இல்ல உஷா… உஷாவை வச்சு எதுவும் பிரச்சனையா?”
“ம்ச்… அதெல்லாம் இல்லம்மா, இது வேற… உங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டேன். பட் கொஞ்சம் பொறுமையா இரு. எனக்கே முழுசா தெரியல.” என்றவன், “அம்மா எங்க?” என,
“அத்த கிச்சன்ல இருக்காங்க, நீங்க இன்னும் கீழ வரலன்னதும்தான் நான் மேல வந்தேன்.” என்ற மனைவியின் கூற்றிற்குப் பிறகே அவன் மற்றதைக் கவனித்தான்.
ரித்தியின் ஏழாம் மாதத்தில் இருந்தே அவளை மேலேப் படியேறக் கூடாது என மதி சொல்லியிருக்க, அவர்களின் அறையைக் கீழேயே மாற்றியிருந்தான். பிள்ளைகள் இருவரும் பாட்டியுடனே உறங்குவதால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை.
நேற்று இருந்த யோசனையில் ரித்தி உறங்கியதும் மேலேத் தன்னறைக்கு வந்தவன்தான், அதன்பிறகு அந்த பென்ட்ரைவை போட்டு பார்த்து, அந்த யோசனையில் இருந்ததால் கீழே செல்லவே இல்லை. இவனைக் காணோம் என்றதும் அழைக்க மனைவியே வந்திருக்கிறாள் என்று புரிந்தது.
“என்ன ரித்தி இதெல்லாம்? எதுக்கு இப்போ மேல வந்த? கால் செஞ்சிருந்தா நானே வந்திருப்பேன். எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குற? ஏதோ ஒரு விபரீதம் ஆகிட்டா என்ன செய்ய?” எனக் கடுப்படித்தவன், அதுவரை தன் மண்டையை உடைத்த பிரச்சனையைத் தூக்கி மூலையில் போட்டுவிட்டு மனைவியைக் கடிந்து கொண்டிருந்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் கவனமாதான் இருக்கேன். அத்தைதான் கூப்பிட்டாங்க வாங்க.” என்றவள், அவனை யோசனையோடுப் பார்த்துக்கொண்டே நடக்க,
“என்னை சைட் அடிச்சது எல்லாம் போதும், நீ முன்னாடி பார்த்து நடடி.” என கிண்டல் குரலில் கூறி கண்ணடிக்க, “நினைப்புத்தான்…” என்று உதட்டைச் சுழித்தவள் கதவோரமாகவே நிற்க, மனைவியின் எண்ணம் புரிந்தவன் போல, சிறு சிரிப்புடன் அவளருகில் வந்து இரு கைகளிலும் அள்ளிக்கொண்டு, “உன் ப்ளான் என்னனு எனக்குத் தெரியாதா? உன்னை இப்படி தூக்கிட்டுப் போகணும்னு தானே நீ மேலையே வந்த?” என மீண்டும் கண்களைச் சிமிட்ட, “ம்ம்க்கும் ரொம்பத்தான்…” என்றாலும் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்க்கத் தவறவில்லை.
மனைவியை ஏந்திக்கொண்டு கீழே வந்தவன் காலிங் பெல் சத்தத்தில் வாசலைப் பார்க்க, அங்கோ விழிகளில் வழிந்த நீருடன் ஏக்கமாய் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வாதி.
நேற்று அவளைப் பற்றியே யோசிப்பதால்தான் அவளேத் தெரிகிறாள் என்று நினைத்த ரவி பார்வையைத் திருப்ப முயல, “ஸ்வாதி…” என்ற வார்த்தைகளை காற்றாக ரித்தியின் இதழ்கள் உதிர்க்க, அந்த வார்த்தையில் தங்கை வந்திருப்பது, இங்கு நின்றிருப்பது அனைத்தும் நிஜம்தான் என்பது புரிய, மனைவியை இறக்கி விடவேண்டும் என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் சிலையாக நின்றான் ரவி.
***
இங்கு “பாஸ்… ஸ்வாதி மட்டும்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க, விக்கி கூட போகல. என்ன ரீசன் எதுவும் புரியல.” என்றான் நரேன்.
“அது ஒரு பிரச்சனை இல்லை, பட் அவனும் க்விக்கா அந்த வீட்டுக்கு வர மாதிரி பார்த்துக்கோ. அன்ட் நான் அங்க இல்லன்னு அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். சோ நீயும் உன் தங்கச்சியும் மட்டும் சாந்தோம் போயிட்டு வாங்க. விக்கிக்கு அங்க ஒரு மீட்டிங் இருக்கு. என்னோட கெஸ் கரெக்டுனா அவன் மீட் பண்ற ஆள் மனோகர் இல்லைன்னா உஷாவா இருக்கலாம். உஷா பிரச்சனை இல்லை, அவ அவன்கிட்ட இருந்து மேட்டரை வாங்கப் பார்ப்பா. பட் மனோகர் காசுக்காக மாறினாலும் மாறலாம். நீ கவனமா இரு. பாப்பாவை கூப்பிட்டு போக வேண்டாம்.” என்று விக்ரம் கூற,
“இந்த ரிஸ்க் தேவையா பாஸ்? அந்த ராஸ்கலை எதுக்கு உஷா பார்க்கப் போறா? எங்கிட்ட ஏன் சொல்லல? அப்போ முன்னாடியே ஸ்வாதி உயிரோட இருக்குறது அவளுக்குத் தெரியுமா? இது எல்லாத்துக்கும் காரணம் விக்கிதான்னும் தெரியுமா?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்க,
“நான்தான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேனே, உஷா உனக்கு ஓவர் குவாலிஃபைடுன்னு.” என்று சிரித்தவன், “எஸ் அவளுக்கு எப்படியோ இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்சிருக்கு. என் கோவா ப்ளானுக்கு அப்புறம்தான் இதை எல்லாம் கன்ஃபார்ம் பண்ணிருக்கா. இப்ப அது பிரச்சனை இல்லை, நீ அவளை எதுவும் கேட்காத, அவளாவே வந்து சொல்லுவா.” என்று சிறிது நேரம் யோசித்தவன்,
“உஷா சூசைட்லகூட விக்கி ப்ளான் இருக்குமோன்னு எனக்கு தோனுது.” எனவும், “வாட்!” என அதிர்ந்து போனான் நரேன்.
“கன்ஃபார்மா தெரியல நரேன், இப்ப யோசிக்கும்போது அப்படியும் இருக்குமோன்னு க்ளிக்காகுது. ஜஸ்ட் என்னோட கெஸ்ஸிங் அவ்வளவுதான். நீ டென்சன் ஆகாத, உஷாவையும் டென்சன் ஆக்காத, உங்களுக்குள்ள மனஸ்தாபம் வர ஆரம்பிச்சிட்டா, வெளிய நடக்குற பிரச்சனை நமக்கு தெரியாம போக வாய்ப்பிருக்கு.
ஸ்வாதிக்கு இந்த மாதிரி சிச்சுவேஷனை உருவாக்க ரொம்ப நேரம் ஆகாது. உனக்கு சொல்ல வேண்டி இருக்காது. ஆனாலும் இப்ப நீ பொசசிவ்நெஸ்ல இருக்க, அதனால சொல்றேன். உன்னோட முட்டாள்தனத்தால மறுபடியும் உன் வாழ்க்கையை இழந்துடாத.” எனக் கட்டளை போல் சொல்ல அமைதியாகிவிட்டான் நரேன்.
அவன் மனதில் ஸ்வாதி தனக்கும் கிருத்திகாவிற்கும் இடையே நடத்திய நாடகம் படமாய் ஓடிக் கொண்டிருந்தது. தன்னைப் பொருத்தவரை அவர்கள் பிரச்சனையில் ஸ்வாதி என்ன செய்திருந்தாலும், சொல்லியிருந்தாலும் கிருத்திகா அவனை நம்பியிருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் அவள்தான் அவனை நம்பவும் இல்லை, அவன் தரப்பைக் கேட்கவும் இல்லையே.
ஒரு பெருமூச்சை விட்டு அந்த எண்ணத்தை அப்படியே அடக்கியவன், “எஸ் பாஸ், எல்லா நேரமுமே நான் முட்டாளா இருக்கமாட்டேன். ஒரு தடவை செய்த தப்பையே மறுபடியும் நான் செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்றவன்,
“நோ பாஸ்… அது இனி நடக்காது. இங்க நான் பார்த்துக்குறேன், நீங்க வொர்க் முடிச்சிட்டு வாங்க, இங்க சீனியர் ரியாக்ஷன் என்னனு தெரியல.” எனவும்,
“எங்கிட்ட எப்படி சொல்லன்னு யோசிச்சிட்டு இருப்பான், நான் பார்த்துக்குறேன். உஷா வெளியே போகணும் சொன்னா அனுப்பிடு, அவளுக்கு வச்சிருக்க சேடோவ் பார்த்துப்பான். நிசாகூட போகும்போது நீ கவனமா போ. வீட்டுக்கு கார்ட்ஸ் டைட் பண்ணிடு. ஆஃபிஸ் கால் வந்துடுச்சு, நான் ஃப்ரீ டைம் பேசுறேன் பை.” என்று விக்ரம் வைத்துவிட, நரேன்தான் உஷாவை நினைத்துப் பல்லைக் கடித்தான்.
‘யாருக்கும் தெரியாம எந்தப் பிரச்சனையில போய் மாட்டினாளோ தெரியலையே’ என மனதுக்குள் அவளைத் தாளித்தவன், நிசாவை வெளியே எப்படி அழைத்துச் செல்வது என்ற யோசனையுடன் வீட்டுக்கு வந்தான்.
வீட்டிற்குள் நுழையும் போதே கவனித்தான், ரேணுகாவின் முகத்தில் திகில் படம் பார்த்த எஃபெக்ட் தெரிந்ததை. அதை வைத்தே உணர்ந்து கொண்டான், அவருக்கும் ஸ்வாதி பற்றி தெரிந்துவிட்டது என்று.
“ரேணும்மா…” என்று அழைக்க, “நரேன்…” என்றவரின் குரல் இப்பவா, அப்பவா என உடையக் காத்திருந்தது. சுற்றிலும் வேகமாக பார்வையை சுழலவிட்டவன், யாரும் வெளியில் இல்லை என்பதை உணர்ந்து அவரை அழைத்துக்கொண்டு, அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டான்.
“என்ன ரேணும்மா?” என்ற வார்த்தைக்காக காத்திருந்தவர் போல, “என் பிள்ளைங்கள இவ வாழவிட மாட்டா போல நரேன். என்ன பாவம் பண்ணான் என் மகன்? இவளை விரும்பினான், கல்யாணம் பண்ணான். அந்த வாழ்க்கையை ஒழுங்கா வாழாம ஓடிப்போயிட்டா. போனவ அப்படியே போயிட்டான்னு நினைச்சு அவன் வாழ்க்கையை சரி பண்ணாலாம்னு நினைச்சு எல்லாம் செய்யும்போது, இப்போ வந்து இப்படி நிக்கிறாளே? நான் என்ன பண்ணுவேன்? புள்ளையோட நிக்கிறவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” எனக் கதறியவரிடம்,
“ம்மா, கொஞ்சம் அமைதியா இருங்க. நிசாவுக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சனை ஆகிடும். விக்ரம் சாருக்கு எல்லாம் தெரியும். அவருக்குத் தெரியாம எதுவும் நடக்கல. சீக்கிரம் எல்லாப் பிரச்சனையும் சரியாகிடும் ரேணும்மா. விக்ரம் சார் சரி பண்ணிடுவார். நம்புங்க, முதல்ல இப்படி அழறதை நிறுத்துங்க.” என நரேன் ஒருபாடு அவரை சமாதனம் செய்யவும்தான் சற்றே அமைதியானார்.
அதன்பிறகுதான், “உங்களுக்கு எப்படிமா தெரியும்? யார் சொன்னா?” எனக் கேட்டான். ஒருவேளை ரித்தி போன் செய்திருப்பாளோ என்று நினைத்தான்.
“அத ஏன் கேட்குற? இப்போதான் நம்ம பெரிய வீட்டுல இருந்து செக்யூரிட்டி போன் பண்ணான். இவ அங்க போனாளாம், வீட்டுல யாரும் இல்லன்னு சொன்னதுக்கு, அழுதுட்டே இருந்தாளாம். எங்க போனாங்கன்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிருக்கான். அதெப்படி தெரியாம போகும்னு அவனைப் போட்டு காச்சி எடுத்துட்டாளாம். இன்னும் கொஞ்சமும் அந்த திமிர் குறையல பாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் வீட்டுக்கு வந்திருப்பா அவளை…” எனப் பல்லைக் கடிக்க, நரேணுக்கு ரேணுகாவை சமாளிப்பது பெரும்பாடாகிப் போனது.
“ம்மா, நீங்க நினைக்கிற மாதிரி ஸ்வாதியை ஒதுக்குறது சாதாரண விசயம் இல்லை. லீகலா அவதான் சாரோட வொய்ப். அப்படியிருக்கும் போது நாம எதுவும் செய்ய முடியாது. மீறி செஞ்சா கேஸாக வாய்ப்பிருக்கு. நீங்க எதும் செய்ய வேண்டாம். சார் இருக்கார், சீனியர் இருக்கார். ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க. ரவி சார் மறுபடியும் ஸ்வாதியை விக்ரம் சார்கூட சேர்த்து வைக்கிற தப்பை செய்ய மாட்டார்.” என்றான் தீர்க்கமாக.
ரேணுகாவிற்கும் அப்படித்தான் தோன்றியது. அது சற்று நிம்மதியைக் கொடுக்க, “நான் உங்க சீனியரைக்கூட நம்பிடுவேன், ஆனா உன் பாஸை நம்பமாட்டேன். அவ எப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலை செய்வான்னு எனக்கு மட்டும்தான தெரியும். அவன் மட்டும் அந்த ஓடுகாலி பின்னாடி போகட்டும், சோத்துல விசத்தை வச்சு கொன்னுடுறேன்.” என வில்லி போல பேசியவர், “செத்தவ எப்படிடா உயிரோட வந்தா?” என ஆற்றாமையாய் கேட்க,
“அந்த ஸ்வாதி வந்து சொன்னாத்தானே தெரியும், எப்படியும் நம்ம பாஸ்கிட்ட சொல்லுவாங்க, அப்போ தெரிஞ்சிப்போம். இப்போ நான் போய் நிசாவை வெளிய அழைச்சிட்டுப் போகக் கேட்குறேன்.” எனக் கிளம்பிவிட, ரேணுகாவிற்குத்தான் ஸ்வாதியை நினைத்து எரிச்சல் வந்தது.
கூடவே, வந்தவள் என்ன என்ன செய்வாளோ? என்ற பயமும் வந்தது. அப்போது அவரது போன் அழைக்க எடுத்துப் பார்த்தால் ரவிதான் அழைத்துக் கொண்டிருந்தான். எதற்கு என்ற யோசனையோடு போனை காதில் வைக்க, அவன் சொன்ன செய்தியில் ஒரு நிமிடமேனும் அதிர்ந்துதான் போனார் ரேணுகா.
***
1 comment
எதுக்கு எல்லாரும் அந்த ஸ்வாதியைபட பார்த்து பயப்படணும்..? அவ அடிச்சாள் திருப்பி மூணு மடங்கா அவளை அடிக்கணும் தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797