Home Antiheroதளிர் – 23

தளிர் 23

‘அவசர கோலம் அலங்கோலம்’ என்பது போல விக்ரமின் அவசர செயலால் நான்கு பேரின் வாழ்க்கையும் நான்கு திசையாகிப் போனது. கைத்தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பியவன் அங்கு நின்றிருந்த விக்னேஷைப் பார்த்து அதிர்ந்து, வேகமாகத் தன் கைகளுக்குள் இருந்தவளைப் பார்க்க, அப்போது வரைக்குமே நிசப்திக்கு மயக்கம் தெளிந்திருக்கவில்லை.

நிசப்தியைக் கடத்திய சில மணி நேரத்திலேயே விக்ரம்தான் என்று தெரியவும், அவனைப்பற்றி விசாரிக்க நிசப்தியின் காரை ஓட்டியவன் புதியவன் என்று தெரியவர, பழைய ட்ரைவரைப் பிடித்து மிரட்டி இடத்தைக் கண்டுபிடித்திருந்தான். விக்ரமை உண்டு இல்லை என்றாக்கிவிடும் அளவிற்கான கோபத்தில் வந்தவனின் பார்வையில் விழுந்தது இந்த காட்சி. என்ன என்று மூளை உணர்த்தும் முன்னே வார்த்தைகளைக் கொட்டியிருந்தான்.

“வாவ்! இதுவல்லவோ காட்சி. சினிமாவுலகூட இப்படி ஒரு சீன் பார்த்தது இல்லை. ரியலா இருக்கே!” என நக்கலாகப் பேசியவனின் முகத்தில் இருந்த கோபத்தை எரிச்சலாகப் பார்த்தான் விக்ரம்.

“ஐ க்நோ… ஐ க்நோ… எக்சாட்லி ஐ க்நோ… நான் இப்படித்தான் ஆகும்னு நினைச்சேன். அதே போலத்தான் எல்லாமே நடந்திருக்கு. எனக்குத் தெரியும், இவ எப்படியும் உன்னைவிட்டு இருக்கமாட்டான்னு. நான் அன்னைக்குப் பார்த்தேனே, அவ கண் உன் மேலேயே இருந்துச்சு. அந்த கண்ல அவ்வளவு ஆர்வம் உன்மேல. அப்படி இருக்கும்போது உன்னை மனசுல வச்சுக்கிட்டு எப்படி என்கூட அவளால இருக்க முடியும்? உன்னை மறந்திட்டேன், அது வெறும் ஈர்ப்புன்னு சொன்னதெல்லாம் பொய் போல. நல்லாத்தான் நடிச்சிருக்கா.” என கோபத்தில் கத்திய விக்னேஷிடம்,

“வாட் த ஹெல் இடியட்!” எனப் பதிலுக்கு கத்திய விக்ரம், “லிசன், செஞ்சது எல்லாம் நீ? இப்போ வந்து நல்லவன் மாதிரி வேஷம் போடுறியா? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை போட்டோ எடுத்து எனக்கே அனுப்புவ? உன்னைக் கொன்னாக்கூட என் ஆத்திரம் அடங்காதுடா. அப்படி கொன்னுட்டா எதுக்காக செத்தோம்னு உனக்குத் தெரியாமலே போயிடும். அப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க நான் என்ன முட்டாளா? அதுக்காகத்தான் என்னை மாதிரியே நீயும் கஷ்டப்படணும்னு இவளைத் தூக்கினேன்.” என ஆத்திரமாகப் பேசிய விக்ரமின் தொனி சட்டென்று நக்கலுக்கு மாறியது.

“ஆமா நீ என்ன சொன்ன, இவ என்னை விரும்புறாளா? இவளா…?” என சிரித்தவன், நிசப்தியை ஒருமுறைப் பார்த்துவிட்டு, “இருக்கலாம், அதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா நான் அவளை விரும்பனுமே… அதுக்கு வாய்ப்பில்லையே ராஜா. எல்லோரும் என்னை விரும்பலாம், ஆனா நான் யாரை விரும்புறேன்னு ஒன்னு இருக்கே. யூ க்நோ தட், என்னோட மனசுலயும் ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு மட்டும்தான் இந்த விக்ரம்.” என்று ஆணவமாகப் பேசியவன், விக்னேஷை அருகில் இழுத்து அவனிடம் நிசப்தியை அப்படியேத் தள்ளிவிட்டான்.

அவளை வேகமாகப் பிடித்த விக்னேஷ் கொலைவெறியோடு முறைத்தான் எதிரில் இருந்தவனை.

“அந்த பொண்ணு என்னை விரும்பினாளா என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா நீ அவளை விரும்பியிருக்க, அதனாலதான் உனக்கு இந்த கோபம்னா அது தப்பில்ல. ஆனா அதுக்காக என்ன நடந்ததுனே தெரியாம உன்னை நம்பினவளை சந்தேகப்படுறது ரொம்ப தப்பு. அது ஒருவகையான துரோகம். இப்போ நீ செஞ்சது துரோகம். உனக்கு உண்மையா இருக்கணும்னு நினைச்சிருக்கா, அதனாலதான் எங்கிட்ட என்னை விரும்பினதைப்பத்தி இப்போ வரைக்கும் பேசல.

ஆனா நீ கொஞ்சமும் யோசிக்காம… ஷிட்.” என்றவன், “இப்போ உனக்கு நான் காட்டினது சாம்பிள், இனியும் என் ஃபேமிலில நீ கை வச்சா நான் உன்னை சும்மா விடமாட்டேன் புரியுதா?” என்று அங்கிருந்து நகரப் பார்த்த விக்ரமின் சட்டையைப் பிடித்திருந்தான் விக்னேஷ்.

“என்னடா பெரிய யோக்கியன் போல பேசிட்டு போற? செய்றதெல்லாம் செஞ்சிட்டு, இப்போ ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற. யெஸ் ஐ லவ் ஹெர், ஐ லவ் ஹெர் லாட். பட் ஷீ இஸ் இன் லவ் வித் யூ. ஹவ் டு ரியாக்ட்? டெல் மீ இடியட். ஹவ் டு ரியாக்ட்?” என ஆத்திரத்தில் கத்தியவன்,

“அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க நான் என்ன டேஷா? எனக்கு இவ வேணும், எப்படி இருந்தாலும் வேணும். அதுக்கு நான் எந்த எல்லை வரைக்கும் போவேன் ரைட். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் உன்னை இன்வைட் பண்ண சொன்னாங்களேன்னு உனக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது. இனி எங்க வாழ்க்கையில உன்னைப் பார்க்கவே கூடாது.

அப்படி மறுபடியும் பார்த்தா உன் சாவு என் கைலதான்.” எனக் கர்ஜித்தவன் அப்படியே விக்ரமைத் தள்ளிவிட்டு, நிசப்தியைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தான்.

அவனுக்கே இப்போது குற்ற உணர்ச்சியாகிப் போனது. நிசப்தியைக் காணவில்லை என்றதுமே அவனுக்குப் பயம் பிடித்துக்கொண்டது, ஒருவேளை விக்ரமிடம் சென்றுவிட்டாளோ என்று. அடுத்த நொடியே இல்லை அப்படி இருக்காது என சமாதானம் ஆகிவிட்டான். ஆனால் விக்ரம்தான் அவளைக் கடத்தியிருக்கிறான் என்று தெரிந்த மறுநொடி மீண்டும் பயம் பிடித்துக்கொண்டது.

விக்ரமைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு வந்தவன், அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து கோபம் எல்லையைக் கடந்தது. அதனால்தான் வார்த்தைகளைத் தவறவிட்டான். இப்போது புரிகிறது நிசப்தியிடம் தவறில்லை என்று. அது புரியவும்தான் மனம் சற்று ஆசுவாசமானது. இப்போது விக்ரம் அவன் எண்ணத்தின் தூரத்திற்கு சென்றுவிட்டான். அந்த இடத்தை ஆக்கிரமித்தது அனைத்தும் நிசப்தி மட்டுமே.

அதன்பிறகே அவளது நிலை புரிந்தது. முதலில் அவளை அங்கிருந்து வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதனால்தான் விக்ரமை ஒன்றும் செய்யாமல், நிசப்தியைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தான்.

அடுத்து நடந்ததெல்லாம் யாருமே எதிர்பாரததுதான். வேணுகோபாலை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலிலேயே நிசப்தியையும் சேர்த்திருந்தான். இரண்டு நாட்கள் பேரமைதி அவளிடம். இங்கு விக்னேஷின் வீட்டிலும் இப்போது புதிதாக நிசப்தியின் நடத்தையில் புள்ளி வைக்க ஆரம்பித்தனர். அது விக்னேஷிற்கு தெரிந்தாலும், அவர்களை அடக்காமல் இருந்தான். என்னை விரும்பாமல், அவனை விரும்பியதற்கு இது அவளுக்குத் தேவைதான் என்ற மனநிலை அவனுக்கு.

திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்த தந்தையிடம், “கொஞ்சநாள் போகட்டும்பா, உங்களுக்கு இன்னும் ஹெல்த் சரியாகல, அதுக்குப்பிறகு பேசுவோம்.” என்று அவர் மறுக்க முடியாதளவிற்கு சொல்லிவிட்டாள்.

விக்னேஷின் வீட்டில் இது தெரிய, “அப்படி ஒன்னும் அவதான் வேணும்னு யாரும் இங்க ஒத்தக் கால்ல நிக்கல. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே, அதென்ன கொஞ்சநாள் போகட்டும்னு சொல்றது?” என அவனின் அம்மா பேச, அந்த நேரத்தில் அது யாருக்குமே தப்பாக படவில்லை.

அவர் பேசியது சரியென்பது போல் இருக்க, திருமணப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டனர். இதில் நிசப்திக்கு பெரிதாக எந்த வருத்தமோ கோபமோ இல்லை. ஆனால் பெண்ணை பெற்றவரால் அப்படி இருக்க முடியாதே. விக்னேஷின் வீட்டில் பேச, அவர்கள் இறங்கி வரவே இல்லை.

பின் நேராக விக்னேஷிடம் செல்ல அவனோ, “உங்க பொண்ணுக்கு, தான் ரொம்ப அழகு, நான் அவ பின்னாடியே திரியிறேன்னு திமிரு. அதான் கல்யாணத்தை தள்ளி வச்சிட்டா. இனி அவளா வந்து எங்கிட்ட பேசாம இந்தக் கல்யாணம் நடக்காது.” என முகத்தில் அடித்தது போல் பேச, அந்தப் பெரியவரால அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வீட்டிற்கு வந்தவர் மகளிடம் எதையும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார். நடந்ததை ஓரளவுக்கு யூகித்தவளோ ஒரு விரக்திப் புன்னகையுடன் அதைக் கடக்க முயற்சி செய்தாள்.

இங்கு விக்ரம் வீட்டிலோ மிகுந்த கோபத்துடன் இருந்தார் ரேணுகா. மகன் இப்படியொரு செயலை செய்வான் என்று அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தன் வளர்ப்பு இவ்வளவு மோசமாகப் போய்விட்டதா என்று ஒடுங்கிப் போனார். இதில் ரித்தியின் பிரச்சனை வேறு. நரேன் வந்த அன்று ரித்தி பேசியது மிகவும் தவறு என்று அவருக்குப் புரிந்தது.

ஆனாலும் அந்த இடத்தில் அவரால் மகளைக் கண்டிக்க முடியவில்லை. காரணம் மகன் செய்த செயல். அவன் செய்த செயலை ஜீரணிக்கவே நேரம் தேவைப்பட்டது. அவனைப் பார்த்ததும் ஓங்கி ஒரு அறைக் கன்னத்தில் பளாரென்று விட்டார். அதன்பிறகு பேச்சே இல்லை. அன்றில் இருந்து இருவரும் ஆளுக்கொரு மூலையில் இருந்து கொண்டனர்.

ஸ்வாதி வருகிறாள், மகளோடு அதிக நேரம் செலவழிக்கிறாள், என்னெவென்று கேட்டால் நக்கலாகப் பதில் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள். நரேன் இப்போது வீட்டுக்கு வருவதே இல்ல. மகளிடமோ, மகனிடமோ கேட்டால் பதிலே இல்லை. என்ன நடக்குமோ என பயந்து போய் இருந்தவரின் பயத்திற்கு தகுந்தாற் போலவே அனைத்தும் நடந்தது.

ஸ்வாதி சொன்னது போலவே ரித்தியின் மனதை மாற்றியிருந்தாள். நரேனைப் பற்றி பேசினாளே எரிந்து விழத் தொடங்கினாள். ஏன் இப்படி என யோசிக்கும் நேரம் ரவி தன் குடும்பத்துடன் வந்து பெண் கேட்டான். முதலில் என்ன பதில் சொல்வது என யோசிக்கும்போதே மதி பேச ஆரம்பித்தார். ரித்தி அவளது அறையில் இருந்தாள்.

“அது அண்ணி, உங்ககிட்ட சொல்லாம வந்துட்டோம்னு தப்பா நினைச்சிடாதீங்க. ரவிக்கு ரெண்டு, மூணு இடத்துல இருந்து ஜாதகம் வந்தது. அவண்கிட்ட பேசினா அவன் ரித்தியைக் கேளுங்கன்னு சொல்றான். எனக்கு என்ன சொல்லன்னே தெரில அண்ணி. வெளிய சொல்லலன்னாலும் ரித்தி என் வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு ரொம்ப நாள் நினைச்சிருக்கேன். ரவி கேட்கவும் எனக்கும் சரின்னு தோனவும் உடனே வந்துட்டோம்.”

“அதெல்லாம் சரிதான், ஆனா அது அவங்களுக்கும் விருப்பம் இருக்கணுமே. ரித்திக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. நாங்க இன்னும் அவ கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லையே மதி.”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி. கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும். அவ விருப்பம் எதுவோ அப்படியே பண்ணட்டும். அதோட இன்னொரு விஷயமும் இருக்கு…” என இழுக்க, இன்னும் என்ன என்பது போல் ரேணுகா பார்க்க, அதே நேரம் விக்ரமும் வீட்டிற்குள் வந்தான். வந்தவனின் பார்வை அனைவரையும் பார்த்துவிட்டு ஸ்வாதியிடம் வந்து நின்றது. அவளோ கண்ணில் சிரிப்புடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனும் சிறு புன்னகையை அவளுக்கு கொடுத்தவன், வந்தவர்களை நலம் விசாரித்தபடியே ரவிக்கு அருகே அமர்ந்து கொண்டான்.

“அது அண்ணி… நமக்கு இப்போ தொழில் பெருசாகிட்டு. விக்ரம் அப்பப்போ வந்தாலும், முழுசா பார்க்குறது ரவிதான். அதனாலத்தான் இந்த முடிவு. அதுக்காக நீங்க எங்களைத் தப்பா எடுத்துக்காதீங்க.” எனப் பீடிகையுடன் ஆரம்பிக்க, ரேணுகாவிற்கு கிலி பரவியது என்றால் விக்ரமிற்கு புருவங்கள் முடிச்சிட்டது.

“அது அண்ணி… நம்ம விக்ரமுக்கும் ஸ்வாதிக்கும் கல்யாணம் செஞ்சி வச்சா என்ன? பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குற மாதிரி. எப்படியும் ஸ்வாதி கம்பெனிக்கு போகமாட்டா, விக்ரமும் வரப்போறது இல்ல. விக்ரமுக்கு பதிலா ரித்தி போகட்டுமே. உங்களுக்கும் நிம்மதியா இருக்கும். நாளைக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடாது இல்ல.” எனவும் ரேணுகாவிற்கு சுர்ரென்று கோபம் பொங்கியது.

“ஏன் மதி என் பொண்ணு மட்டும் வேலைக்குப் போய் கஷ்டப்படணுமா?” எனக் காட்டமாகப் பேச, “இல்ல இல்ல அண்ணி அதுவந்து…” எனச் சொல்லும் முன்பே,

“அது அப்படி இல்ல ஆன்ட்டி, ரித்திக்கும் பிசினஸ் மேலத்தானே இன்ட்ரெஸ்ட். அவ கோர்ட் எல்லாம் போக மாட்டாதானே, அதுக்காகத்தான் அம்மா சொல்றாங்க. இது கம்பெல்ஷன் இல்ல ஆன்ட்டி, விக்கியே இல்லன்னாலும் நான் பார்த்துப்பேன். இது உங்களுக்காக அம்மா சொன்னது. மத்தபடி எனக்கு ரித்தியைப் பிடிச்சிருக்கு.” என பட்டென்று ரவி சொல்ல,

“எனக்கும் ஸ்வாதியைப் பிடிச்சிருக்குமா. ரித்திக்கு ஓகேன்னா அடுத்து என்ன செய்யலாம்னு பார்த்து வேலையை ஆரம்பிக்கலாம்.” என விக்ரமும் சொல்ல, மகனை அதிர்ந்து பார்த்தார் ரேணுகா.

‘ஒருவார்த்தை பேசிட்டு சொல்றோம்னு சொல்லிருக்கலாமே’ என மகனைப் பார்த்தவர் சட்டென்று எழுந்து, “நீங்க பேசிட்டு இருங்க, நான் குடிக்க எடுத்துட்டு வர்றேன்.” என யாரையும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட,

அப்போதுதான் ஸ்வாதி மாயையில் இருந்து வெளியில் வந்தான் விக்ரம். தான் செய்த தவறும் புரிய வேகமாக தாயின் பின்னே ஓடினான்.

ரித்தி அவள் அறைக்குள் இருக்க, “இருங்கம்மா நான் ரித்தியை அழைச்சிட்டு வரேன்.” என ஸ்வாதியும் தன் போனை எடுத்துக்கொண்டு போக, பெருமூச்சு விட்டான் ரவி.

“நான் எதும் தப்பா பேசிட்டேனா ரவி?” என மகனிடம் கேட்க,

“பேசின பிறகு என்ன யோசனை. விடுங்க பார்த்துக்கலாம். பிசினஸ் பத்தி பேசினது பிரச்சனை இல்ல, ஆனா ரித்தியும் வரட்டும் சொன்னதுதான் ஆன்ட்டிக்கு கோபம். முடிவு என்னவா இருந்தாலும் நீங்க ஒத்துக்கணும். ஆன்ட்டிக்கு இதுல விருப்பம் இல்லன்னா ஃபோர்ஸ் பண்ணாதீங்க.” என்று விட்டான். மதிக்கும் தான் செய்த தவறு புரிய அமைதியாகிவிட்டார்.

இங்கு சமையலறையில் இருந்த தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்ரம். “ம்மா சாரிம்மா. நான் உங்களை அவமானப்படுத்த அப்படி சொல்லல, எனக்கும் ஸ்வாதியைப் பிடிச்சிருக்கு. இந்த சந்தர்ப்பத்தை விட்டா அடுத்து எதுவும் சரியா அமையாதோன்னு நினைச்சு ஒரு பதட்டத்துல சொல்லிட்டேன். ப்ளீஸ்மா புரிஞ்சிக்கோங்க.” என்றவனை வெறித்துப் பார்த்தவர்,

“அப்போ உன் தங்கை வாழ்க்கை? அவளை என்ன செய்யப் போற? அவளும் ஒருத்தனை விரும்பியிருக்கா. அது உனக்குத் தெரியும்தானே, அவக்கிட்ட கேட்காம எப்படி நீயா ஒரு முடிவுக்கு வரலாம்? அப்போ உன்னோட ஆசையும் விருப்பமும்தான் முக்கியம், மத்தவங்க அது நானோ ரித்தியோ யாரா இருந்தாலும் பரவாயில்லை அப்படித்தானே?” எனக் கோபத்தில் கேட்க,

“ம்மா… இல்லம்மா நரேனைக் கூப்பிட்டு வச்சு பேசினேன். அவன் உங்க தங்கச்சி எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டான். அவங்களுக்குள்ள என்னப் பிரச்சனைன்னு தெரியல, அதைக் கேட்டா அவன் சொல்லல. ஆனா ரித்தியை வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டான். இது ரித்திக்கு தெரிஞ்சா வருத்தப்படுவா, அதுக்கு முன்னாடியே ரவிக்கு மேரேஜ் பண்ணி வச்சிடலாம்னு நினைச்சேன்மா.” என்றவன், நரேன் தன்னை வந்து பார்த்து சென்றதை தாயிடம் சொன்னான்.

“அவன் சொன்னதுல எந்த தப்பும் இல்ல. அவனை மாதிரி ஒரு நல்லவன்கூட உன் தங்கச்சி வாழ கொடுத்து வைக்கல. நீயே அவக்கிட்ட பேசி, மதிக்கு சொல்லிடு.” என்றவர் காஃபி ட்ரேயுடன் வெளியில் நடக்க, விக்ரமிற்குள் மிகப்பெரும் பிரளயம் நடந்து கொண்டிருந்தது. நரேனுக்கு அவன் செய்த துரோகம்தான் கண் முன்னே வந்து வந்து போனது.

“உங்க மேல நான் ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேன் சீனியர். ஆனா நீங்க இப்படின்னு என்னால நினைக்கக்கூட முடியல. விக்னேஷ் சார் செஞ்சிருந்தா நீங்க அவரைத்தான் பழிவாங்கிருக்கணும், இல்லை உங்க சிஸ்டர்கூட இருந்தது நான்னு தெரிஞ்சதும் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கணும். என்னைக் கொன்றுருந்தாகூட நான் சந்தோசப்பட்டிருப்பேன்.

ஆனா ஒன்னுமே தெரியாத ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க சீனியர். அவளோட வாழ்க்கையே முடிஞ்சது. இன்னைக்கு நடைபிணமா அவளும் அவ அப்பாவும் இருக்க நீங்க மட்டும்தான் காரணம். இந்தப் பாவத்தை எங்க போய் துடைப்பீங்க சீனியர்?” என்றவனின் கேள்விகளில் விக்ரம் ஒவ்வொரு முறையும் செத்துப் பிழைத்திருந்தான். அவனால் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை.

அமைதியாக இருந்தவனை ஒரு பார்வை பார்த்தவன் கிளம்பிவிட்டான். விக்ரம்தான் குற்ற உணர்ச்சியில் தவிக்கத் தொடங்கினான். நாளாக நாளாக அந்த தவிப்பு குறைந்தபாடில்லை. அதனால் தன் ஈகோவை விட்டு விக்னேஷிடம் பேசி விடலாம் என்று நினைக்க, விக்னேஷோ அவளாக வந்து தன்னிடம் பேச வேண்டும் என்று இருக்க, யாருமே நிசப்தியைப் பற்றியோ, அவளது உணர்வுகளைப் பற்றியோ யோசிக்கவே இல்லை.

அப்படி அவர்கள் யோசிக்கும் நேரம் அனைத்தும் அனர்த்தமாக நடந்து முடிந்திருந்தது.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 2, 2026 - 5:52 pm

அட போங்கடா.. நீங்களும் உங்க செல்பிஷ் குணமும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured