Home Antiheroதளிர்- 26

தளிர் 26

“என்ன உளர்ற…?” என எரிச்சலாய் கத்தியவனை, அமைதியாகப் பார்த்தாள் நிசப்தி.

“நீ சொல்லு, உனக்கு இன்னும் நரேன் அண்ணா மேல விருப்பம் இருக்கா?” என அதே நிதானமான குரலில் கேட்க, நரேனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த உஷா, பின் தலையை ஆமாம் எனும் விதமாக ஆட்டினாள்.

“அவனோட பாஸ்ட் உனக்குத் தெரியும், அது தெரிஞ்சும் உனக்கு அவன் மேல கோபம் இல்லையா… அவனைப் பிடிச்சிருக்கா? நாளைக்கு இதனால உங்களுக்குள்ள பிரச்சனை வந்துடாதா… அப்படி வந்தா அதை சரியா உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியுமா? எந்த ஒரு தடையும் இல்லாம அவனை உன்னால ஏத்துக்க முடியுமா?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்க,

“நான் அவரை விரும்புறேன் நிசா… அவரை மட்டும் தான் விரும்புறேன். என்ன பிரச்சனை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்…” என பிசிறில்லாமல் தைரியமாகப் பேசியவளை எரிச்சலாகப் பார்த்தான் நரேன்.

“என்ன, பரிதாபத்துல வாழ்க்கைக் கொடுக்கப் போறியா…? உனக்கு அறிவு இருக்கா, இல்லையா? நான் ஒருத்தியை லவ் பண்ணி வாழ்க்கையைத் தொலைச்சவன், என்கூட நீ இருந்தா உன் வாழ்க்கையும் தான் பாழாப்போகும், தெரிஞ்சே பாழும் கிணத்துல விழுறேன்னு சொல்றியா? அறிவு இருக்கா, இல்லையா முட்டாள்…” என நரேன் கத்த,

“போதும் நிறுத்து…” என அவனுக்கு மேலே கத்தினாள் நிசப்தி. “என்ன நினைச்சிட்டு இருக்க நீ? ஏற்கனவே உன் மேல நான் கொலைவெறில இருக்கேன், அதை இப்போ காட்டக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனாலும் நீ விடுறதா இல்ல. என்ன ஒருத்தியை காதலிச்சேன், காதலிச்சேன்னு டமாரம் அடிக்கிற, அவ உன்னோட காதலுக்கு தகுதியானவளா? சொல்லு தகுதியானவளா? உனக்கும் உன்னோட காதலுக்கும் கொஞ்சமும் தகுதியில்லாத ஒருத்தியைக் காதலிச்சது உன்னோடத் தப்பு. இதுல அவளை மிஸ் பண்ணிட்டோம்னு உனக்கு வருத்தம் வேற, வேண்டாம்… என் வாயைக் கிளறாம இருந்துக்கோ. அதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது…” எனக் கத்த,

“சும்மா இரு நிசா… அவங்களே மனசு கஷ்டத்துல இருக்காங்க, நீயும் ஏன் கஷ்டப்படுத்துற…” என்ற உஷாவைத் தீப்பார்வைப் பார்த்தான் நரேன்.

“நானும் அப்பாவும் மறுபடியும் திருச்சிக்கே போலாம்னு இருக்கோம். என்னோட ஃஃப்யூச்சர்க்காகத்தான் அப்பா எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்தாங்க, இப்போ அதுவே இல்லைன்னும் போது…” என நிறுத்தியவள், “அவர் எனக்காகப் பார்த்தார், நான் அவருக்காகப் பார்க்குறேன். எது அவருக்கு நிம்மதியைத் தருதோ, அதை செய்யலாம்னு இருக்கேன். இங்க இருந்தா அவர் நடந்த எல்லாத்தையும் நினைச்சி வேதனைப் பட்டுட்டு இருப்பார்…” என்றாள் பேசினதற்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல்.

“என்ன லூசு பிரச்சனை உனக்கு? அப்படியெல்லாம் நீ போகணும்னு ஒன்னும் இல்லை. நான் இருக்கேன், இவ இருக்கா… நாங்க போதும் உனக்கு. இன்னும் என்ன? அந்த விக்னேஷ் இனி எந்தப் பிரச்சனையும் செய்வான்னு எனக்குத் தோனல, சோ அதெல்லாம் விட்டுட்டு நீ இனி ரெகுலரா கலேஜுக்கு போற வழியப் பாரு…” என எரிச்சலில் கத்த,

“வாயை மூடு இடியட்… நான் இருக்கேன்னு சொன்ன நீதான், ஒரு பொண்ணுக்காக சாகப் போனியா? எப்போ எங்களை எல்லாம் மறந்துட்டு நீ அந்த முடிவை எடுத்தியோ, இனி உன்னை நம்புறதாவும் இல்ல, உனக்காக நான் எதையும் செய்ய தயாராவுமில்ல…” என்றவளை அதிர்ந்து பார்த்தான்.

“என்னடி பேசுற… ஏன் இப்படியெல்லாம் பேசுற… கொஞ்ச நாள் கழிச்சு இதெல்லாம் பேசலாம்ல, அவங்களுக்கும் இதுல இருந்து வெளிய வர டைம் தேவைப்படும்ல…” என்ற உஷாவிடமும்,

“நான் உங்கிட்ட பேசல…” எனப் பட்டென பதில் சொல்லி வாயை அடைக்க, நரேன் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

யாருக்காகவும் எதற்காகவும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை அவள். அப்படியே நிற்க, கடைசியில் நரேன்தான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது.

“சரி சொல்லு, நான் என்ன பண்ணணும்?” என ஆற்றாமையில் பேசியவனைப் பார்த்துச் சற்றும் இரக்கம் வரவில்லை அவளுக்கு.

“இப்போ இங்க நீ உஷாவை மேரேஜ் பண்ணிக்கணும், தட்சிட்…” என்றாள் அழுத்தமாக, அதே சமயம் தீர்மானமாக.

“வாட்… உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…” எனக் கத்தியவனை சட்டையே செய்யவில்லை அவள். தன் தந்தையையும் அவருடன் வந்தவர்களையும் உள்ளே அழைத்தவள், வேணுகோபாலிடம் இருந்த மாங்கல்யத்தை வாங்கி நரேனின் முன்னே நீட்டினாள்.

“என்ன செய்ற நிசாம்மா? என்னை விடு, லட்சுமி வீட்டுல என்ன சொல்லுவாங்க? ஏன் இப்படி அவசரப்படுற? கொஞ்சம் நிதானமா செய்யலாம்…” என நரேன் அதிர்ச்சியில் பேச,

“உஷா வீட்டுல பேசிட்டேன், அவங்களுக்கு இதுல விருப்பம் இல்ல… அவளைப் பத்தின கவலையும் இல்ல. சோ அது ஒரு பிரச்சனையும் இல்ல…” என்றவளை இயலாமையுடன் பார்த்தான்.

என்ன பேசினாலும் செய்தாலும் அவள் முடிவில் இருந்து மாற மாட்டாள் என்பது புரிந்து போனது. இனி கடவுள் விட்ட வழி என நிசப்தியின் கையில் இருந்த மாங்கல்யத்தை வாங்கி, தன் அருகில் நின்றிருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை இட்டான். பிறகு திருமணத்தை பதிவு செய்யும் பதிவாளரோடு வந்திருந்த, வேணுகோபாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன், முறைப்படி திருமணத்தையும் பதிவு செய்துகொண்டு, மனைவியோடு தன் வீட்டிற்கு புறப்பட ஆயத்தமானான்.

உஷா என்ன ஏது என யோசிக்கும் முன்னமே அவளது கழுத்தில் தாலி ஏறியிருக்க, இதை ஏற்பதா, தவிர்ப்பதா என நினைத்து ஒரு முடிவுக்கு வரும் முன்னமே எல்லாம் முடிந்திருக்க, காதலித்தவனே கணவனாக கிடைத்ததில் ஒரு பக்கம் மகிழ்வாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அவனது இழப்பில்தான் இந்த திருமணமோ, அவனைக் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டாமோ என பல யோசனைகள்.

ஆனாலும் அவனுடன் செல்வதற்கு எந்த மறுப்பும் அவளிடம் இல்லை. நரேன் எவ்வளவோ மறுத்தும் முதலில் இருவரையும் தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்றார் வேணுகோபால்.

“உன் ஹெல்த் சரியாகட்டும், அதுக்குப் பிறகு நீ அங்க போ… இனி நீ உனக்காக இல்லைன்னாலும், உன்னை நம்பி வந்தவளுக்காக இந்த வாழ்க்கையை வாழப்பாரு…” என்ற அறிவுரையோடு வேணுகோபால் முடித்துக்கொள்ள, இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட விக்ரமிற்கு மகிழ்ச்சி என்றால், ஸ்வாதியோ பெருங்கோபத்தில் இருந்தாள். எப்படி எப்படி இது நடந்தது? என கூண்டுப் புலியாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அன்று திருமணம் முடிந்து மூன்றாம் நாள் தங்கள் வீட்டிற்குச் செல்லலாம் என நரேன் முடிவு செய்ய, வேணுகோபாலும் ஒத்துக்கொள்ள, இருவரையும் அழைத்துக் கொண்டு வந்தனர். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்த நிசப்தி அந்த வீட்டில் இதுவரைக்கும் இருந்த மொத்த தோற்றத்தையும் மாற்றியிருந்தாள். எந்த சூழ்நிலையிலும் இருவருக்கும் ரித்தியைப் பற்றிய சிறு எண்ணம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதனாலே அவள் சார்ந்த பொருட்கள் ஒன்று கூட அந்த வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். அதோடு நரேனும் உஷாவும் ஜோடியாக இருப்பது போல் ஒரு அழகான புகைப்படத்தையும் லேமினேட் செய்து ஹாலிலும், அவர்களது அறையிலும் மாட்டி வைத்தாள்.

இத்தனை மெனக்கெடலும் தங்களுக்காகத்தான் என்று அவர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் உடனே இத்தனை பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. தங்களுக்காக இல்லையென்றாலும் அவளுக்காகவாவது இந்த வாழ்க்கையை நல்லமுறையில் கொண்டு போக வேண்டும் என இருவரும் மனதளவில் உறுதி எடுத்துக் கொண்டனர்.

வீட்டிற்குப் பெரிய மனிதராக இருவருக்கும் பல பத்திரங்களையும், அறிவுரைகளையும் கூறிவிட்டு மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் வேணுகோபால்.

பல நாட்களுக்குப் பிறகு பரவசமாகக் காரை ஓட்டும் மகளை ஆதுரத்துடன் பார்த்தார் வேணுகோபால். “ஏன் கண்ணு, அப்பா உனக்கு எதுவும் குறை வச்சிருக்கேனா?” எனக் கேட்டவரிடம், சற்றும் யோசிக்காமல், “இல்லையேப்பா…” என்றாள் நிசப்தி.

“அப்பா மேல கோபம் எதுவும் இருக்கா?” என்றார் அடுத்தக் கேள்வியாக. அதற்கும் “இல்லையேப்பா…” என்றாள். “அப்போ ஏன்மா அவங்க வீட்டுல என்ன நடந்ததுன்னு எங்கிட்ட இப்போ வரை கேட்கல? அப்புறம் அந்த பையன் உன்னைக் கடத்தினதுக்கு நீ கேஸ் கொடுக்கலாம்னு சொல்லும் போதும், நான் வேண்டாம்னு சொன்னேன், அதுக்கும் நீ ஒன்னுமே கேட்கலையேடா…” என்றார் தளர்ந்த குரலில்.

அவரது குரலில் இருந்த வலியில் என்ன உணர்ந்தாளோ காரை பக்கத்தில் இருந்த ஒரு பார்க்கில் நிறுத்தினாள். அங்கு இருக்கும், ‘கும்பகோனம் டிகிரி காஃபி’ கடையில் இருவரும் காஃபி சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் இரண்டு காஃபிக்கு ஆர்டர் கொடுத்தவள், அவருக்குப் பிடித்த வாழைக்காய் பஜ்ஜியையும் வாங்கிக் கொண்டு அவரிடம் வந்தாள். கெட்டிச் சட்டினியுடன் பஜ்ஜியை ஒரு பிடி பிடித்தவளின் மனதில் என்ன ஓடுகிறது என்று அந்தப் பெரியவருக்குத் தெரியவே இல்லை.

மகளின் செய்கைகளைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். “சாப்பிடுங்கப்பா, நாம ரெண்டு பேரும் இப்படி வெளிய வந்து எவ்வளவு நாளாச்சு…” என சிலாகிக்க, அமைதியாகத் தன் பஜ்ஜிகளை சாப்பிட்டு, காஃபியையும் அருந்தி முடிக்க,

“நீங்க கேட்ட எந்த கேள்விக்கும் நான் என்ன பதில் சொல்ல முடியும்ப்பா? உங்க மேல நம்பிக்கை இல்லைன்னா மட்டும் தான், எனக்கு கேள்விகளும் சந்தேகங்களும், கோபங்களும் வரணும், அப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னும் போது நான் என்ன சொல்லப்பா? இப்போ இல்ல, எப்பவுமே எனக்கு உங்கமேல சந்தேகமோ, வருத்தமோ, கோபமோ வராது, வரவே வராதுப்பா.” என்றவள் அவரைப் பார்த்து புன்னகைக்க, நீரிட்ட விழிகளால் மகளைப் பார்த்து, அவரும் பெருமையாகப் புன்னகைத்தார்.

ரித்தி, ரவியுடன் நன்றாகப் பொருந்தி போயிருந்தாள். மதிக்கு அதுவே போதும் போல் இருந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் சிம்லாவிற்கு ஹனிமூன் சென்றுவிட்டனர். ரவி, விக்ரமையும் அழைத்தான்தான். ஆனால் ஸ்வாதியோ இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட, அதற்குமேல் விக்ரமிற்கு பேச ஒன்றுமில்லாமல் போனது.

ஸ்வாதி முதல்நாள் விக்ரமுடன் இருந்ததோடு சரி, அடுத்தநாளே ரவியும் ரித்தியும் ஹனிமூன் சென்றுவிட, “விக்கி அம்மா தனியா இருப்பாங்க, வயசானவங்க வேற, ரித்தி வர வரைக்கும் நான் அங்க இருக்கட்டுமா…?” என வழக்கம் போல் குழைய, மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவன் தலைத் தானாக ஆடியது.

இப்படியே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காரணங்களைச் சொல்லித் தன் தாய் வீட்டில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் ஸ்வாதி. இதெல்லாம் வெறும் பார்வையாளாராக மட்டுமே ரேணுகா பார்த்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் விக்னேஷின் வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பிக்க, ஸ்வாதியின் மனதில் அதுவரை தூங்கிக் கொண்டிருந்த வன்மம் தலை தூக்கியது.

அன்று விக்ரம் ஒரு கேஸ் விசயமாக டெல்லி சென்றிருக்க, ஸ்வாதி வழக்கம்போல் அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள்.

ரித்தியும் ரவியும் அன்யோன்யமாக இருப்பதைப் பார்த்தவளுக்கு வயிறு எரிந்தது. நான் மட்டும் நினைத்த வாழ்க்கை கிடைக்காமல் இருக்க, இவள் மட்டும் நிம்மதியாக, சந்தோசமாக இருப்பாளா என நொடியில் யோசித்தவள், இருவருக்கும் அருகில் சென்று, “ரவி உனக்கு தெரியுமா அந்த நரேன்… எங்க பேஜ் மேட், உனக்கு ஜூனியர், விக்ரம் பின்னாடியே சுத்துவானே…” என ஒன்றுமே தெரியாதது போல் இழுக்க,

“ம்ம் தெரியும், நரேன்னு சொன்னாலேத் தெரியும், அதுக்கு ஏன் இவ்வளவு எக்ஸ்பிளனேசன்…?” எனச் சிரிக்க,

“ஓ… உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றபடியே ரித்தியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

நரேன் பேரை இழுக்கவுமே ரித்திக்கு உடலில் ஒரு நடுக்கம் ஓட ஆரம்பித்திருந்தது. இப்போது ரவிக்கு தெரியும் என்றதும் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தாள்.

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு, நீ என்ன சொல்லணுமோ சொல்லு.” எனவும்,

“நம்ம மேரேஜ்க்கு முதல்நாள் சூசைட் அட்டென்ட் பண்ணிட்டானாம், ஏதோ லவ் ஃபெயிலியர் போல…” என ஏதோ செய்தி சொல்வது போலச் சொல்ல, பக்கத்தில் நின்றிருந்த ரித்தி, பயத்திலும் அதிர்ச்சியிலும் மயங்கி கணவன் மீதே விழுந்திருந்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 8, 2026 - 3:46 pm

நிசாப்தி தெளிவாக யோசிச்சு தன் தோழிக்கும் வளர்ப்பு அண்ணனுக்கும் நல்லதைத்தான் பண்ணி வைச்சிருக்காள்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured