தளிர் 32
விக்ரம் பிடித்து மிரட்டிய விக்னேஷின் நண்பனான கமல், அவனுக்கு முன்னே ஸ்வாதிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லியிருந்தான். விக்ரம் கையில் கிடைத்தால் நிச்சயம் விக்னேஷை ஏதேனும் செய்து சிக்கலில் மாட்டிவிடுவான், அதற்குள் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கமல் சொன்ன இடத்திற்கு ஸ்வாதி அவனுடன் சென்றது.
ஆனால் அதற்குள் விக்ரம் வந்துவிட, இருவரும் புரியாமல் குழம்பி போய் மறைந்து நின்று என்ன நடக்கிறது எனப் பார்க்க, உள்ளுக்குள் எந்த சத்தமும் இல்லை. ஏன் என மேலும் குழம்பியவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, அவர்களது கண்ணில் நிசப்தி படவில்லை. ஆனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்னேஷ்தான் பட்டான்.
விக்ரமின் செய்கையைப் பார்த்ததுமே விக்னேஷ் உயிருடன் இல்லை என்பது புரிய, நொறுங்கிப் போனாள் பெண். இத்தனை நாள் யாருக்காக இதெல்லாம் செய்தாளோ இன்று அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட, அவளால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. உள்ளே இருக்கும் இருவரையும் கொலை செய்யுமளவிற்கான வெறி மலையளவு உயர்ந்தது. அதே வெறியுடன் உள்ளேச் செல்ல போனவளைத் தடுத்தான் கமல்.
‘அமைதியா இரு’ என திமிறிய ஸ்வாதியைப் பிடித்துக் கொண்டவன், அடுத்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரம் அங்குள்ள அடையாளங்களை அழித்துவிட்டு நிசப்தியுடன் சென்றுவிட, இருவரும் வேகமாக உள்ளே ஓடிவந்தனர்.
விக்னேஷை அந்த நிலையில் பார்த்ததும் கதறித் துடித்தாள் ஸ்வாதி. அவளால் விக்னேஷ் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. “விக்கி, கெட்டப் விக்கி. என்னை விட்டுட்டு போயிடாத விக்கி. ப்ளீஸ்… நீ வேணும் விக்கி.” என அவனின் நெஞ்சில் விழுந்து கதறியவளைப் பார்க்க கமலுக்கே பாவமாக இருந்தது.
“ஸ்வே, ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப். முதல்ல நாம இங்க இருந்து போகணும், போலிஸ்க்கு சொல்லணும். நம்ம விக்கியை இப்படி ஆக்கின அவங்க ரெண்டு பேரையும் சும்மா விடக்கூடாது.” என்ற கமலின் பேச்சு அப்படியே நிற்க, வேகமாக விக்னேஷின் கையைப் பிடித்துப் பார்க்க, அவனுக்கு மெலிதாக நாடித்துடிப்பு கேட்டது.
உடனே அவன் உடல் சிலிர்க்க, “ஸ்வே இங்க பாரு, விக்கிக்கு உயிர் இருக்கு. இங்க பாரு கால்ல லேசா உணர்வு வந்துருக்கு, காலை ஆட்டுறான். பல்ஸ் பார்த்தேன், லைட்டா பல்ஸ் காட்டுது. நாம உடனே ஹாஸ்பிடல் போலாம்.” எனப் பரபரக்க, அப்போதுதான் அழுது கொண்டிருந்த ஸ்வாதிக்கு உணர்வு வர, வேகமாக அவனின் நெஞ்சில் தன் காதை வைத்துப் பார்க்க, அதுவோ நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்று மெதுவாகத் துடிக்க, சட்டென்று அவளும் பரபரப்பானாள்.
விக்னேஷிற்கு பின்னந்தலையில்தான் அடிபட்டிருந்தது. இவர்கள் தூக்கவும் ரத்தம் மீண்டும் கொட்ட, அழுதுகொண்டே தன்னுடைய துப்பட்டாவை கழட்டி கமலிடம் கொடுக்க, அதை வாங்கியவன் விக்கியின் தலையில் இறுக்கிக் கட்டிவிட்டுத் தூக்கிக்கொண்டு காரில் கிடத்தினான். பின் வண்டியை எடுக்க முன்னால் ஏறிய நேரம் அவனைத் தடுத்த ஸ்வாதி, “கமல் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். உங்களால முடியுமா, முடியாதா இதெல்லாம் தெரியாது. ஆனா முடியணும், கண்டிப்பா செய்யணும், விக்கிக்காக.” என்றவளின் குரலில் இருந்த பிடிவாதம், கோபம், ஆத்திரம் எல்லாம் என்ன உதவி என்று கேட்காமலே தலையை ஆட்ட வைத்தது.
“ஹாஸ்பிடலுக்கு நான் போயிக்கிறேன், ஆனா என் விக்கியை இப்படி ஆக்கின ரெண்டு பேரையும் சும்மா விடக்கூடாது. அவன் விக்கி இறந்துட்டதா தான் நினைச்சிட்டு இருக்கான். அதோட அவன் கிரிமினல் மைன்ட். கண்டிப்பா இதை வேறமாதிரி மூவ் பண்ணி அந்த நிசப்தி பேரு வெளிய வராத மாதிரி பண்ணிடுவான். அதுக்கு நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்.” என்றவள் தன் திட்டத்தைச் சொல்லி முடிக்க, வாயைப் பிளந்து பார்த்தான் கமல்.
“என்ன உன்னால முடியுமா முடியாதா?” என அதட்டிக் கேட்க, ‘முடியாது’ என அவனால் சொல்லவே முடியவில்லை. என்ன செய்தான், எப்படி செய்தான் என்றெல்லாம் தெரியாது. அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்வாதி சொன்னதைப் போலவே ஒரு டெட்பாடியைக் கொண்டு வந்து அந்த இடத்தில் போட்டவன், ஸ்வாதி கொடுத்த விக்கியின் செயின், மோதிரம் மற்றும் சட்டையை சடலத்திற்குப் போட்டுவிட்டு அங்கேயேக் காத்திருந்தான்.
அடுத்து நடந்தது எல்லாம் விக்ரமின் திட்டம்தான் என்றாலும், அவன் இப்படித்தான் செய்வான் என்பதை உணர்ந்து ஸ்வாதி செயல்படுத்திய விதம், கமலிற்கு ஆச்சரியத்தை உண்டு செய்தது. அந்த அடியாட்கள் வந்தது, விக்ரமிடம் பேசியது, சடலத்தை எடுத்துக் கொண்டு போனது. அதை ஆக்சிடென்டாக மற்றியது என எல்லாவற்றையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.
அங்கு விக்கியை பரிசோதித்த மருத்துவர்கள், “எங்களால கண்டிப்பா ஹோப் கொடுக்க முடியாது. வேற ஹாஸ்பிடல் கொண்டு போறதுனாலும் போகலாம்.” என்றுவிட,
“டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, என்னோட விக்கி எனக்கு முழுசா வேணும். அது எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை. ப்ளீஸ், அவனைக் காப்பாத்துங்க டாக்டர் ப்ளீஸ்.” எனப் பைத்தியம் போல் அந்த மருத்துவரிடம் கத்திக் கொண்டிருந்தாள் ஸ்வாதி.
“எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியுதுமா. ஆனாலும் எங்க பக்கம் நாங்களும் சொல்லணுமே. ஓகே, உங்களுக்காக நான் இவரை ஹேண்டில் பன்றேன்.” என்றவர் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க, முன்னெச்செரிக்கையாக கத்தையான பேப்பர்களில் அவளிடம் வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
கார்டியன் பகுதியில் மனைவி என மென்ஷன் செய்து கையெழுத்திட்டவளை ஆச்சரியமாகப் பார்த்தான் கமல். அவனுக்கும் இப்போது புரிய, அமைதியாகவே அமர்ந்திருந்தான். விக்னேஷ் மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் அவனுக்கு உண்மையான, ஆத்மார்த்தமான நண்பன். அவனுக்கும் அவன் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனை என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க அவனால் முடியாது.
அந்த இரவு நேரம் மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கியது. தலையில் அடி என்பதால் உடனே சிடி ஸ்கேன் பார்த்து சர்ஜரி என முடிவு செய்தனர். இதெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் விக்ரமைப் பழிவாங்கியே ஆகவேண்டும் என்ற வெறிமட்டும் வளர்ந்துகொண்டே இருந்தது.
சர்ஜரிக்கு முன் அழைத்த மருத்துவர், “மிசஸ் ஸ்வாதி, நான் முன்னாடியே சொல்லிருக்கேன் உங்களுக்கு என்னால ஹோப் கொடுக்க முடியாதுன்னு. இப்பவும் அதேதான் சொல்ல முடியும். இந்த சர்ஜரியுமே டென் பெர்சன்டேஜ் கூட பாசிபிள் ஆகும்னு சொல்ல முடியாது. கடைசியா ஒருமுறை யோசிச்சு முடிவு சொல்லுங்க. சர்ஜரி ஃபெயில் ஆனா கோமாக்கு போகவும் வாய்ப்பிருக்கு.” என்றுவிட்டு அவள் முகத்தைப் பார்க்க,
“இட்ஸ் ஓகே டாக்டர். நீங்க ஆரம்பிங்க, என் விக்கி எனக்குத் திரும்பி கிடைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்று விட்டு வெளியில் வந்துவிட, அவளது நம்பிக்கையைப் பார்த்து டாக்டரும் கமலுமே மலைத்துப் போனார்கள்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றாலும் விக்னேஷ் கோமாவுக்குச் சென்றதைத் தடுக்க முடியவில்லை. அடுத்த நாற்பெத்தியெட்டு மணி நேரம் கழித்துப் பார்க்கலாம் என்று விட்டனர் மருத்துவர் குழு.
உயிரைக் காப்பாற்ற முடிந்ததே பெரிய விஷயமாகப் போக, சீக்கிரம் கோமாவில் இருந்தும் சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கை வந்தது ஸ்வாதிக்கு. அதன் பிறகே அவளால் சாதாரணமாக மூச்சு விட முடிந்தது.
இதற்கு காரணமானவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே கமலிடம், “நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன் கமல். அம்மா போன் செஞ்சிட்டே இருக்காங்க. எதாச்சும் ரீசன் சொல்லிட்டு வரேன். நீ அதுவரைக்கும் விக்கி கூட இரு. வீட்டுக்கு போனாதான் அங்க என்ன நடக்குதுன்னு தெரியும்.” என்றுவிட்டுக் கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்தவளை ரவி கோபமாக எதிர்கொள்ள, அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவள் இல்லை. குளித்துவிட்டு சாப்பிட அமர, “எங்க போயிட்டு வர்ற? விக்ரமுக்கும் தெரியல, அம்மாவுக்கும் தெரியல. என்னாச்சு எதுவும் பிரச்சனையா?” என ரவி கேட்க,
“ம்ச்… நேத்து நானும் ஃப்ரண்ட்சும் வெளியே போயிருந்தோம். நாங்க போன கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அதுல ட்ரைவ் பண்ண என் ஃப்ரண்டுக்கு நல்ல அடி. ஹெட் இஞ்சூரி. சர்ஜரி பண்ணிருக்கு. அவ கோமாக்கு போயிட்டா. அவ பேரண்ட்ஸ் வர வரைக்கும் அங்கதான் இருந்தேன். கொஞ்சம் ஸ்ட்ரெஸ் அதான் யாருக்கும் பேச முடியல.” என வரலாற்றில் முதன்முறையாக, நீளமாகப் பேசியத் தங்கையை ஆச்சரியமாகப் பார்த்தான் ரவி.
அவள் முகத்தில் தெரிந்த சோகத்திலும் களைப்பிலும் என்ன கண்டானோ, “யாருக்காச்சும் சொல்லிருக்கலாம், சரி விடு. சாப்பிட்டு ரெஸ்ட் எடு. எதையும் யோசிச்சு மண்டையைக் குழப்பிக்காத. நாம எதுவும் ஃபினான்ஷியலா ஹெல்ப் செய்யணுமா?” எனத் தன்மையாகக் கேட்க,
“எஸ், கண்டிப்பா செய்யணும். நான் ப்ராமிஸ் பண்ணிருக்கேன். இந்த ஆக்சிடென்டுக்கு நானும் கூட காரணம்.” என்றவளின் விழிகள் கலங்க, உடனே அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன், ஒரு ப்ளாங் செக் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு அவள் தலையைக் கலைத்துவிட்டுப் போனான்.
அவன் நகரும் வரை அமைதியாக இருந்தவள், பின் கமலுக்கு அழைத்து விபரம் கேட்டுவிட்டு தான் எப்போதும் பார்க்கும் மருத்துவரைச் சந்திக்க சென்றாள்.
அவரிடம் தன்னுடையத் திட்டத்தைச் சொல்ல, “வாட்? என்ன விளையாடுறீங்களா? இதெல்லாம் அப்யூஸ். வெளியத் தெரிஞ்சா எவ்வளவு பிரச்சினை ஆகும் தெரியுமா? கண்டிப்பா என்னோட ஃப்யூச்சரே போயிடும்.” என அந்த மருத்துவர் சொல்ல,
“இல்ல, அப்படியெல்லாம் நடக்க நான் விடமாட்டேன். கண்டிப்பா நடக்காது. உங்க பெயர் எங்கேயும் வராது. அதுக்கு நான் முழு உத்திரவாதம் தர்றேன். பட் இது நடந்தே ஆகணும்.” எனவும்,
“ஓகே…” என யோசனையாக இழுத்தவர், “ஃபர்ஸ்ட் விக்ரமை ஒரு செக்கப்புக்கு அழைச்சிட்டு வாங்க. அதுக்குப் பிறகு மத்த ஃபார்மாலிட்டிஸ் பார்த்துப்போம். பிரச்சனைனு வந்தா நீங்கதான் என்னை மிரட்டி செய்ய வச்சீங்கனு சொல்லிடுவேன்.” என அந்த மருத்துவர் சொல்ல,
“நோ ப்ராப்ளம், நான் அவனை அழைச்சிட்டு வரும் போது உங்களுக்கு கால் பண்றேன், நீங்க எல்லாம் ரெடி செஞ்சி வச்சிடுங்க.” என்றவள் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
இங்கு மருத்துவர் சொல்லிச் சென்றதைப் போலவே நிசப்திக்கு இரவில் காய்ச்சல் வர, கூடவே ஃபிட்சும் வந்துவிட்டது. நல்லவேளையாக வேணுகோபாலிற்கு பாலில் தூக்கமாத்திரையைக் கலந்து கொடுக்க வைத்திருந்தான் விக்ரம். அதனால் மகளின் கஷ்டங்களும் புலம்பல்களும் எதுவுமேத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அதையெல்லாம் கேட்ட விக்ரமிற்கு உடல் இறுகிப் போனது. விக்னேஷ் உயிரோடு இருந்தால் அவனைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது.
ஒரு பெண்ணை எந்தளவிற்கு தரமிறக்கி அசிங்கப்படுத்தியிருக்கிறான். இவனை… எனப் பல்லைக் கடித்தவன், இப்போது அவன் உயிருடன் இல்லை. இல்லை… என உருப்போட்டுக் கொண்டான்.
மறுநாள் மருத்துவர் வந்து பார்க்கும் வரைக்குமே நிசப்தி கண் விழிக்கவில்லை. அவளைப் பரிசோதித்த மருத்துவர் இனி பிரச்சனையில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி சென்றிருந்தார்.
அடுத்தநாள் டிவி மற்றும் செய்தித்தாள்களில் விக்னேஷ் இறந்துவிட்டதாகச் செய்திகள் ஒளிபரப்பாக, அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். திட்டம் அவனதுதானே. இடுப்பிற்கு மேலே மொத்தமும் அடையாளம் தெரியாதளவிற்கு கருகியிருக்க, அவன் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வரவில்லை.
அடுத்தநாள் அவனது இறுதிக் காரியத்திலும் சென்று கலந்து கொண்டவனுக்கு, கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லை. ஆனால் விக்ரமின் இந்த ஒன்றும் அறியாத பாவனை, ஸ்வாதியின் மனதில் பழிவெறியைக் கூட்டிக் கொண்டே இருந்தது.
இதுவரை நிசப்தியை மட்டுமே தான் பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் ஸ்வாதி. ஆனால் இப்போது விக்ரமின் இந்த செயலில் அவனையும் எழ முடியாதளவிற்கு விழ வைக்க வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என்று நொந்து நொந்தே இந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்று முடிவெடுத்தவள், அதற்கான திட்டத்துடன் அன்று விக்ரமிற்காக காத்துக் கொண்டிருந்தாள், அவன் வீட்டில் அவன் அறையில்.
***
1 comment
Vikram.. unnaippaththi avalukku ellam therinjirukku, nee enna criminal lawyero?