Home Antiheroதளிர்- 35

தளிர் 35

ஸ்வாதியின் சிரிப்பைப் பார்த்து பயம்தான் வந்தது நிசப்திக்கு. ஸ்வாதியையும், அவளைச் சுற்றி இருந்த ஆட்களின் தோரணையையும் பார்த்த நிசப்திக்கு விஷயம் பெரிது எனப் புரிந்து போனது. உடனேத் தன் வக்கீல் மூளையைப் பயன்படுத்தலாம் என நினைக்கும் நேரம், “உன்னோட கிரிமினல் மூளையை எல்லாம் இங்க பயன்படுத்தணும்னு நினைக்காத, அப்படி நினைச்சா அங்க உன் அப்பா பரலோகம் போயிடுவார்.” என எகத்தாளமாகக் கூறி அவளையேப் பார்த்தாள்.

“ஏன் இப்படி பண்ற? நாங்க என்ன பண்ணோம் உனக்கு? அந்தக் கொலைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல.”

“என்ன சம்மந்தமே இல்லையா? பார்ரா பாயின்டா பேசுது. வக்கீல் இல்ல, அதான் பாயின்டு. ம்ம்ம்… அப்புறம் ஏன்மா அவன் செத்துக் கிடந்த இடத்துக்கு நீ போன? காத்து வாங்க போனியோ?” என்றவளின் குரலில் ஏகத்திற்கும் நக்கல் வழிந்தது.

“நான் அங்க இருந்தேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” கோபமாகக் கேட்க நினைத்தாலும் குரல் பிசிறியது நிசப்திக்கு.

“அட ரொம்பத்தான் துள்றியேமா நீ? இந்த வீடியோல இருக்குறது நீதானே?” என அன்று கமல் எடுத்து வைத்த வீடியோவைக் காட்ட, அவளால் ஆமென்றும் சொல்ல முடியவில்லை, இல்லையென்றும் சாதிக்க முடியவில்லை. அதிர்ச்சியில் நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது.

கண்கள் இருள அவளையேப் பார்க்க, “என்னடா இதெல்லாம் அப்பவேக் காட்டாம, இவ்ளோ நாள் கழிச்சு இப்போ வந்து காட்டுறேன்னு நினைக்கிறியா? உன் நினைப்பு கரெக்ட்தான், ஆனா அதைக் காட்டியிருந்தா அன்னைக்கு உன்கூட ஜெயிலுக்கு என் புருஷனும்தானே வந்திருப்பார். அவரை எப்படி என்னாலக் காட்டிக் கொடுக்க முடியும்? ம்ம்ம்…” என புருவம் உயர்த்த குழப்பமாக பார்த்தாள் நிசப்தி.

“உன்னை மிரட்டுறதோ, உங்க அப்பாவைக் கொல்றதோ என்னோட இன்டென்ஷன் கிடையாது. எனக்கு உன்னோட உதவி வேணும் அவ்ளோதான்.” என்றவளை இப்போதும் குழப்பமாகவேப் பார்த்தாள்.

“என்ன நான் சொல்றது உனக்குப் புரியலையா?”

“இல்ல, நான் என்ன உதவி பண்ண முடியும்? விக்ரம் சாரால முடியாதது என்னால மட்டும் எப்படி முடியும்? நீங்க அவர்கிட்டயே கேட்டுருக்கலாமே?”

“அட எனக்கு இந்த அறிவெல்லாம் இல்லாம போச்சுப் பாரு. நீ சொன்னதை நான் மைன்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன். அடுத்த டைம் யூஸ் செஞ்சுக்கறேன் ஓகே. பட் இப்போ உன் ஐடியா தேவையில்ல.”

“அப்புறம் விக்ரம் சாருன்னு மரியாதையா கூப்பிடுறியே, ஏன் அவர் மேல ரொம்ப மரியாதையா இல்ல மயக்கமா?”

“என்ன உளர்றீங்க? அவர் என் வாழ்க்கையைக் காப்பத்தினார். அதுக்காக அவர் மேல எனக்கு மரியாதை இருக்கு. அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?”

“சம்மந்தம் இருக்கு, ஏன்னா நீதான் விக்ரமை உருகி உருகி லவ் பண்ணிருக்கியே. அதுக்காகக் கூட நீ விக்கியை ‘அவர்’ன்னு சொல்லிருக்கலாம்.”

“நீங்க நினைக்கிறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. நான் என்ன செய்யணும்? சீக்கிரம் சொல்லுங்க, அப்பா தனியா இருப்பாங்க.”

“ஆமா நீ ஏன் தனியா சுத்துற? உன்கூட ரெண்டு எப்பவும் பாடிகார்ட் வேலைப் பார்க்குமே அதுங்க ரெண்டும் எங்க? கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்ல போல.”

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நீங்க சீக்கிரம் சொல்லுங்க.”

“எனக்குப் பதில் வராம, நீ இங்க இருந்து நகரக்கூட முடியாது.”

“அது நரேன் அண்ணா வேலை விசயமா ராஜஸ்தான் போயிருக்காங்க, வர ஒருமாசம் ஆகும். உஷாவுக்கு இப்போ எக்சாம், அவளுக்கும் இப்போ லீவ் இல்லை. அவ வரவும் ஒருமாசம் ஆகும்.”

“ஒரு மாசமா? அப்போ ஓகே. எனக்கும் இந்த ஒருமாசம் போதும்.”

“என்ன ஒருமாசம்? எதுக்கு போதும்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க, அப்பா தனியா இருப்பாங்க.”

“அவ்வளவு அவசரமா அப்பாவைப் பார்க்கணுமா? அப்போ சரி நாம நாளைக்குப் பேசுவோம் ஓகே.” என்றவள், அருகில் நின்றவனிடம் திரும்பி, “டேய் மாக்கானுக்கு ஃபோன் செஞ்சி, அந்தக் கிழத்தைப் போட்டுடச் சொல்லு.” என சாவகாசமாகச் சொல்ல, பதறிப் போனாள் நிசப்தி.

“இல்ல இல்ல, அப்பாவை ஒன்னும் செய்யாத. நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். சொல்லு நான் என்ன செய்யணும்?” என பதட்டமாகச் சொல்ல,

“ஹான், இது நல்ல பிள்ளைக்கு அழகு. அதை விட்டுட்டு சட்டம் பேசிட்டு இருக்க. எவ்ளோதான் த்ரில்லர், ஹாரர்னு மூவி பார்த்தாலும், இந்த சென்டிமென்ட் மூவி பார்க்குற ஃபீல் எதுலையும் வர்றது இல்லயில்ல.”

“நான் என்ன செய்யணும்?” எனப் பட்டென்றுக் கேட்ட விதத்திலேயே எதிரில் இருந்தவளின் பேச்சுப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

அதையெல்லாம் கணக்கில் வைக்காமல், “பெருசா ஒன்னும் இல்ல, எனக்கு ஒரு குழந்தைப் பெத்துக் கொடுக்கணும், அவ்வளவுதான்.” என அசால்டாகச் சொல்ல,

“என்ன? என்ன சொல்ற நீ? உனக்கு என்ன பைத்தியமா? நான் எப்படி உனக்கு?” என ஆத்திரத்தில் கத்தியவள் ஸ்வாதியின் முகம் மாறுவதை உணர்ந்து சத்தத்தைக் குறைக்க,

“ஆமா நான் பைத்தியம்தான். அந்த விக்ரமை உயிருக்குயிரா காதலிச்ச நான் பைத்தியம்தான். என்னால அவனுக்கு ஒரு குழந்தை பெத்துக் கொடுக்க முடியலன்னு தெரிஞ்சு சாகப் போன என்னை காப்பாத்தி, இன்னும் அவனைக் கஷ்டப்படுத்துற நான் பைத்தியம்தான். என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற மேரேஜ் பண்ணுனு சொல்ற நான் ஒரு பைத்தியம்தான்.” என ஆக்ரோசமாகக் கத்தியவளை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“நீங்க டாக்டர்ட்ட போனீங்களா? என்ன சொன்னாங்க?” என்றவளின் குரல் மிருதுவாகிப் போனது.

“போனோம்…” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி, “விக்ரமிற்காகத்தான் நான் இந்த ரிஸ்க் எடுக்குறேன். அவனுக்கு ஒரு குழந்தை வேணும். அவனை யாரும் எதுவும் ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது. அப்படி நடந்தா அது அவனுக்கு பெரிய அவமானம். அதை வீட்டுல யாராலயும் தாங்க முடியாது. நானும் உயிரோட இருக்க மாட்டேன்.” என நீலிக் கண்ணீர் வடிக்க,

“சாரி, உங்க லைஃப்ல எவ்வளவு கஷ்டம். எனக்குப் புரியுது, ஆனா நான் இதுல எதுவும் செய்ய முடியாதே. நீங்க மறுபடியும் விக்ரம் சார்கிட்ட பேசுங்க.”

“ஓ… அப்போ உனக்கு உங்க அப்பா மேல பாசமே இல்ல போல.” எனத் திடீரென ரௌத்ரமாக பேச,

“என்ன… என்ன?” என நிசப்தியும் பதற,

“உங்க அப்பாவுக்கு பணம் நெறைய செல்வாகும்னு கேள்விப்பட்டேன். உனக்கு ஓகேனா பத்து லட்சம் இப்போ கொடுக்குறேன், ட்ரீட்மென்ட் மிட்ல மீதி பத்து லட்சம் கொடுக்குறேன். சீக்கிரம் யோசிச்சு சொல்லு.”

“என்ன இதுக்கு இருபது லட்சமா? மார்க்கெட்ல ரொம்ப கம்மியாதான் கொடுக்குறாங்க.”

“எனக்குத் தெரியாதா? நான் உனக்கு ஹெல்ப் பண்றதுக்காகத்தான் இந்த அமௌன்ட் கோட் பண்னேன்.”

அவளுக்கும் பணக் கஷ்டம்தான். நகையெல்லாம் விற்றாயிற்று, ஊரில் இருந்த வீட்டையும் நிலத்தையும் கூட விற்றாயிற்று. சென்னை வீடும் கொஞ்சமே கொஞ்சம் சேவிங்க்ஸ் மட்டுமே இருந்தது.

தந்தையின் மருத்துவச் செலவு அவளை சுழல் போல இழுத்துக் கொண்டே சென்றது. நரேனிடம் கேட்கலாம் என்றால் அவன் இப்போதுதான், புதிதாக ஒரு தொழிலில் முதலீடு செய்து இறங்கியிருந்தான் அதனால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டிருந்தாள். வேறு யாரிடம் கேட்க என யோசித்துக் கொண்டிருந்தாள். அப்படியிருக்கும் போது ஸ்வாதி இப்படி கேட்டதும் யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு அவளது வாழ்க்கையில் ஸ்வாதியின் பங்கு என்ன என்று தெரியவேயில்லை. அதோடு அவளது வாழ்க்கையைக் காப்பாற்றிய விக்ரமின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தோன்றியது. அதோடு அவள் ஏன் தன்னை மிரட்டுவது போல கூட்டி வந்தாள் என்ற சந்தேகமும் வர, அதை அப்படியே அவளிடமும் கேட்டாள்.

“இல்ல, எனக்கு உன் மூலமாத்தான் குழந்தை வேணும்னு தோனுச்சு. ஃபர்ஸ்ட் என்னோட சிச்சுவேஷன் சொல்லி, நீ ஓகே சொல்லிட்டா பரவாயில்ல. இல்லைன்னு சொல்லிட்டா என்ன பண்ண. அதான் மிரட்டியாச்சும் காரியத்தை சாதிக்கலாம்னு நினைச்சேன்.”

“ஓ… ஆனா ஏன் அப்பாவை வச்சு என்னை மிரட்டுனீங்க? நான் ஏன் உங்களுக்கு ஓகே சொல்லணும்? கண்டிப்பா முடியாது. இப்போ இப்படி செய்றீங்க, நாளைக்கே மாத்தி பேசினா…?”

“மறுபடியும் மறுபடியும் வக்கீல் மூளை எட்டிப் பார்க்குது. எனக்கு ஓகேனு சொன்னா, நீ இங்க இருந்து போகும் போது உன் அப்பா நல்லா இருப்பார். இல்லையோ உன் அம்மாக்கூட டூயட் பாடிட்டு இருப்பார்.”

அந்தக் குரலில் இருந்த அழுத்தமும், திமிரும் நிசப்தியை பயம் கொள்ளச் செய்தது என்பது உண்மை. இத்தனை பேரையும் தாண்டி அவள் நல்லபடியாக வெளியேச் செல்வது என்பது முடியாத காரியம்.

இப்போது சரியென்றுவிட்டு வீட்டிற்குச் சென்றதும் வேறு யோசிக்கலாம் என நினைத்தவள், “உங்க கண்டிசனுக்கு நான் ஓகே சொல்றேன், பட் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” எனவும்,

“ஓ மை காட்! நிஜமாவா சொல்ற? ஓ மை காட்! ஓகே, ஓகே, நீ சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன். அதுக்கு முன்னாடி ஒரு செக்கப் செய்துக்கலாம். உன்னோட யூட்ரஸ் ஸ்ட்ராங்கா இருக்கானு எல்லாம் பார்த்துட்டு போயிடலாம். ட்ரீட்மென்ட்க்கு ஒரு டூ த்ரீ மன்த்ஸ் போகட்டும்.” எனவும், நிசப்திக்கும் இப்போது இங்கிருந்து முதலில் தப்பித்தால் போதும் என்ற நிலைதான். அதனால் அனைத்திற்கும் சரியென்றுவிட்டாள்.

ஸ்வாதியும் உடனே அவளை அழைத்துக் கொண்டு அந்த மருத்துவமனைக்கு கிளம்பினாள். கிளம்புவதற்கு முன்பே, அழைத்துச் சொல்லியிருக்க, அந்த டாக்டரும் அனைத்தையும் ரெடி செய்து வைத்திருந்தார்.

மருத்துவமனையில் அந்த மருத்துவர் நிசப்தியிடம் சந்தேகமே வராத அளவிற்குப் பேசினார். முதலில் ஸ்கேன், ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு ஒரு மருந்தை ஊசியின் மூலம் செலுத்த, “இதெல்லாம் ஏன்?” எனக் கேட்டவள் அடுத்த நொடி மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

“ஸ்வாதி நமக்கு இன்னுமே டைம் இருக்கு, நல்லா யோசிச்சு சொல்லு. இந்த ரிஸ்க் தேவையா?”

“எனக்கு முன் வச்சக் காலை பின் வச்சு பழக்கம் இல்லை. நம்ம ப்ளான்ல எந்த சேன்ஞ்சும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி ஸ்டார்ட் பண்ணுங்க, ஓவுலேஷன் டைம் பார்த்துட்டு கண்டிஷன் அப்டேட் பண்ணுங்க. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் சொல்லுங்க, நான் வந்து பார்த்துக்குறேன். அப்புறம் அவளோட ஃபோன் நான் வச்சுக்குறேன் தேவைப்படும்.”

“ஒன் மன்த் ஸ்வாதி, இதெல்லாம் ஓவர் ரிஸ்க். அவ்ளோ நாள் இவளை சடேஷன்லயே வைக்க முடியாது. மேக்சிமம் ஒன் வீக், அப்புறம் உன்னோட கஸ்டடிக்குக் கொண்டு போயிடு. நான் அங்க வந்து பார்க்குறேன்.

“ம்ம் ஓகே, அப்படியே செய்யலாம். விக்ரமோட ஸ்பெசிமென் பத்திரம்தானே? நீங்க இன்செர்ஷன் செய்யும் போது நானும் இருக்கணும்.”

“ம்ம்… ஓகே ஸ்வாதி நான் பார்த்துக்குறேன், நீங்க கிளம்புங்க.” சரியென்று ஸ்வாதியும் கிளம்பிவிட்டாள். அவள் முகத்தில் அப்போது தோன்றிய அந்த உணர்வுகளுக்கு யாராலும் பெயர் வைக்க முடியாது.

“கோபம், ஆத்திரம், மகிழ்ச்சி, வெற்றிக் கொண்ட திமிர், நான் ஜெயித்துவிட்டேன் என்ற ஆணவம் என பல கலவைகள் வந்து வந்து போனது.

நிசப்தி முழு மயக்கத்திற்குச் சென்றுவிட்டாள் என்றுத் தெரிந்ததும், ட்ரீட்மென்டை ஆரம்பித்து விட்டனர். அடுத்த நான்கு மணி நேரம் அதிலேயேக் கழிய, அன்று செய்ய வேண்டிய ட்ரீட்மென்டை செய்துவிட்டு அவளுக்கு ஒரு அறையை ஒதுக்கி விட்டனர்.

“மேம், இது தப்பு. சடேஷன்ல வச்சு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் செய்றது சைடெஃபெக்ட் ஆக வாய்ப்பிருக்கு. அப்புறம் அவங்க பாடி எப்படி ரியாக்ட் பண்ணும்னு தெரியல. அலர்ஜி ஆகி யூட்ரஸ் ஃபுல்லா அல்சர் வரவும் வாய்ப்பிருக்கு.” என உடனிருந்த நர்ஸ் சொல்ல,

“எல்லாம் எனக்குத் தெரியும், உன்னோட வேலையை மட்டும் நீ பாரு. அப்புறம் இந்த நியூஸ் வெளியேப் போச்சுனா நீ இங்க இருக்க மாட்ட. உன்னை உள்ள தள்ள எனக்கும் ஏகப்பட்ட ஐடியாஸ் கிடைக்கும்.” என அந்த மருத்துவர் மிரட்ட,

“நோ மேம், நோ. நான் யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன், ஏன் இந்த பொண்ணுக்கிட்டயே கூட சொல்ல மாட்டேன்.” என பயத்தில் பேச,

“தட்ஸ் குட்!” என்றவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டுச் செல்ல, மயக்கத்தில் இருந்த நிசப்தியைப் பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடிந்தது அந்த நர்சால்.

ஒரு வாரம் மின்னலாகக் கழிய, அவளுக்கு மெல்ல மெல்ல சுயநினைவு வர, “ஷப்பா, ஒருவழியா முழிச்சியா? எனக்கு ஒரே பயமா போச்சு. அன்னைக்கு ஊசி போட்டதும் மயக்கம் ஆனவதான், இப்போதான் முழிக்கிற. பயத்துல உண்டான ஸ்ட்ரெஸ்ல நீ அப்படியே கோமாவுக்கு போய்ட்டனு டாக்டர் சொன்னாங்க. சாரிமா, நீ முழிக்கவும்தான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என நிசப்தி கேள்வி கேட்கும் முன்னே ஸ்வாதி பேசி முடிக்க, ‘அப்படித்தானோ’ என நிசப்திக்கும் தோன்றியது.

ஒரு வாரமாக வேலை செய்யாத மூளை இன்னுமே மந்தமாகத்தான் இருந்தது. அதனால் அதிகம் அவளால் யோசிக்க முடியவில்லை. ஸ்வாதி சொன்னதை அப்படியா என்று கேட்டுக் கொண்டாள்.

மூளைத் தெளிவடையும் போது அவளுக்குள் நடந்த மாற்றங்கள் தெரிந்தால் என்ன செய்வாள்.

***

You may also like

Leave a Comment

About Me

Featured