Home Antiheroதளிர்- 37

தளிர் 37

கடவுளின் நகரம் என்றழைக்கப்படும் கேரளம். அது எத்தனை உண்மை! இங்கு கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை ரசிக்க நம் இரு கண்கள் போதாது. எர்ணாகுளம் சிவன் கோவில்! கடவுளின் நகரம் என்று ஏன் இந்த மண் அழைக்கப்படுகிறது என, நொடிக்கு நொடி வியக்க வைக்கும் எம்பெருமான் சிவனின் கோவில்.

அந்தக் கோவிலின் பின் பக்கம் அமைந்திருந்த குளக்கரைப் படியில் அமர்ந்திருந்தாள் நிசப்தி. உடலும் உள்ளமும் அமைதியாக இருந்தது. இங்கு வந்த இந்த இரண்டு மாதத்தில் முதல் ஒரு வாரம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்க, அடுத்த நாள் மெல்ல மெல்ல ஊரைப் பழக்கியிருந்தாள்.

இங்கு அவளும் தந்தையும் கூடவே உதவிக்கென்று ஒரு வயதான தம்பதிகள். முதலில் பயந்தது போல், இப்போது பயமெல்லாம் இல்லை. அந்த வயதான தம்பதிகள் இருவரும் அவர்களை மிகவும் நன்றாகவேப் பார்த்துக் கொண்டனர். முதலில் அவர்களது வற்புறுத்தலின் பேரில் தான் கோவிலுக்கு வர ஆரம்பித்தாள். பிறகு இங்குள்ள இயற்கையில் தன்னைத் தொலைக்க, அதிலயே லயிக்க ஆரம்பித்திருந்தாள்.

இப்போதைய தனிமை அவளை வெகுவாகப் பக்குவப்படுத்தி இருந்தது. இப்போது அவளுக்கு யார் மீதும் கோபமோ, வருத்தமோ இல்லை. ஸ்வாதி சுயநலமாக செய்திருந்தாலும், தனக்கு நல்லதையே செய்திருக்கிறாள் என்றுதான் தோன்றியது. அன்று ஸ்வாதி பேசியதை இன்று யோசித்துப் பார்த்தாள்.

“நாம உடனே கேரளாவில் இருக்குற எர்ணாகுளம் போறோம்.” என்று திடீரென்று ஸ்வாதி சொன்னதும், நிசப்திக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது.

“ஏன்… ஏன்… எதுக்கு…?” எனப் பதட்டமாகக் கேட்க,

“உன் அப்பா உயிர்மேல உனக்கு ஆசையே இல்ல போல?” என்ற ஸ்வாதியின் குரலில் என்ன இருந்தது என்றே நிசப்தியால் கணிக்க முடியவில்லை.

ஆனாலும் அதை ஒதுக்கி, “அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்?” என புரியாமல் கேட்க,

“சம்மந்தம் இருக்க போய்தானே நான் பேசறேன், இல்லைனா எனக்கு என்ன வேண்டுதலா உனக்கு உதவணும்னு?” என எரிச்சலைக் காட்டிய ஸ்வாதி,

“என் ஃப்ரண்டோட அம்மாவை இன்னைக்குப் போய் பார்த்துட்டு வந்தோம், கிட்டத்தட்ட உன் அப்பா மாதிரிதான் இருந்தாங்க. கேரளால ஆயுர்வேத சிகிச்சை எடுத்து இப்போ குணமாகிட்டாங்க. அவங்ககிட்ட உன் அப்பா பத்தி சொல்லவும், உடனே என் ஃப்ரண்ட் அந்த டாக்டர்கிட்ட பேசி அப்பாயின்மென்ட் எல்லாம் ஃபிக்ஸ் செஞ்சு கொடுத்தான். அதெல்லாம் சாதாரணமா கிடைக்கக் கூடியதா? ஏதோ உனக்கு உன் அப்பாதான் எல்லாம், அவர் பிழைக்கணும்னு நான் நினைக்கிற அளவுக்கு கூட நீ நினைக்க மாட்டேங்குறியே?” எனக் கிண்டல் குரலில் பேசி பின்,

“அப்பா இல்லாத கஷ்டம் எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும். அதனால உன் அப்பாவாச்சும் உனக்கு இருக்கட்டும்னு நினைச்சேன். ஆனா உனக்குத்தான் அதுல இஷ்டம் இல்ல போல?” என்று சென்டிமென்ட்டாக முடித்து தோளைக் குலுக்கியபடி நகர, வேகமாக முன்னே வந்து நின்றவள், ஸ்வாதியின் கையைப் பிடித்தாள் நிசப்தி.

“நில்லுங்க ஸ்வாதி, என்ன சொல்றீங்க நீங்க? எனக்குப் புரியல, அங்கே போனா அப்பாவுக்கு குணமாகிடுமா? அவருக்கு எல்லாம் சரியாகிடுமா?” எனப் பதட்டமும் பரபரப்புமாக கேட்டாள் நிசப்தி.

நிசப்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வமும் பரபரப்பும், பதட்டமும் தான் ஸ்வாதிக்கு வேண்டியது. அது அப்படியே நடக்க, உள்ளுக்குள் மகிழ்ச்சி அருவியாகப் பாய்ந்தாலும், வெளியேக் காட்டிக் கொள்ளாமல்,

“இதோ பாரு நிசப்தி, எனக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. ஆனால் என் குழந்தை நல்லமுறையில் பிறக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு நீ நல்ல மனநிலைமையில் இருக்கணும். உன் அப்பா நல்லா இருந்தாதான், நீ நல்லா இருப்பனு அம்மா சொன்னாங்க. அதுக்காகத்தான் உனக்கு இந்த உதவியை செய்யலாம்னு நினைச்சேன். ஆனா உனக்கு அதுல ஆயிரம் சந்தேகம் வருது. எனக்குத் தேவையா இதெல்லாம்? நீ என்னமோ பண்ணு.” என்றவள், அங்கிருந்த சிஸ்டரை கண்ணைக் காட்ட, அவளோ ஸ்வாதியின் பேச்சைக் கேட்டு பிரமித்துப் போயிருந்தாள்.

‘சாமி! இதெல்லாம் பொண்ணா, இல்ல பேயா? எப்படியெல்லாம் திட்டம் போடுது. தெரியாம இதுக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனோ? இப்போ இடைல வெளியே போகவும் முடியாது, இதைப்பத்தி வெளியேப் பேசவும் முடியாது. இப்படிப்பட்ட பொண்ணு கொலை செய்யக் கூட தயங்கமாட்டா. இருக்குறவரை எதையும் வெளியே சொல்லாம ஓடிடணும். இல்லைன்னா நமக்கு சங்கு ஊதிடுவா.’ என மனதுக்குள் பயந்து போனவள், ஸ்வாதியைப் பாவமாகப் பார்க்க, அவளோ நிசப்தியைப் பார்வையால் காட்டி, ‘நீ பேசி சம்மதிக்க வை.’ எனும் பார்வையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

“என்ன பாப்பா யோசனை. உனக்கு வேற எதுவும் பிரச்சனையா? அதனாலத்தான் அங்க போகலாம்னு அந்தம்மா சொல்லும் போது வேண்டாம்னு சொன்னியா?” வாசலில் ஒரு கண்ணும், நிசப்தியிடம் ஒரு கண்ணும் வைத்தபடி கேட்டாள் கோமதி.

“எனக்கு எதையும் யோசிக்க முடியல சிஸ்டர். நான் தப்பு பண்றேனோ? எதோ ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்ட மாதிரியே தோனுது சிஸ்டர்.” என மனதில் இருந்ததை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள்.

நிசப்தியின் பேச்சைக் கேட்டதும் கோமதிக்கு உள்ளுக்குள் ஒரு பயமும் குற்ற உணர்ச்சியும் தன்னாலே உண்டானது. அவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று கூட ஒரு நொடி யோசிக்கத்தான் செய்தாள். ஆனால் அப்படி சொல்லிவிட்டால் இந்த பெண்ணின் பாதுகாப்பு, அவளது அப்பாவின் நிலை என எல்லாவற்றையும் யோசிக்க, இப்போதைக்கு சூழல் சரியில்லை, நடப்பது எதையும் சொல்ல வேண்டாம். ஆனால் காலம் மீறும் முன்பு சொல்லிவிட வேண்டும் என நினைத்த கோமதியின் எண்ணம் மட்டும் நடக்கவே இல்லை.

“சரி பாப்பா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. அப்படியே அவங்க சொன்னதையும் யோசிச்சு பாரு. அதோட இந்தக் குழந்தைக்கு அப்புறம் உனக்கு உன் வாழ்க்கைல யார் இருப்பாங்கன்னும் யோசிச்சுப்பாரு. உன் அப்பா இருந்தா நீ தொலைச்ச எல்லாம் உன் கைக்கு வந்தமாதிரி.” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் கோமதி.

கோமதியின் எண்ணம் ஸ்வேதாவை எட்டியதோ என்னவோ, அவளை அழைத்து ஒரு வாரம் விடுமுறை அளித்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் நிசப்தியுடன் பேசினாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க நிசப்தி? உன்னோட முடிவுதான் இப்போ முக்கியம். அங்க எல்லா அரேன்ஞ்ச்மெண்ட்சும் ரெடி. அங்க போனதும் எந்த தொந்தரவும் இருக்காது. ஃபர்ஸ்ட் ஃபிஃப்டீன் டேஸ் மட்டும் அங்க இருக்குற ஆசிரமத்துல தங்கிருக்கணும். அப்புறம் நம்ம பக்கத்துலயே வீடு பார்த்து வந்துக்கலாம். எல்லாம் செட்டப்பும் ரெடி. நீ ஓகே சொன்னா ஆம்புலன்ஸ் கூட ரெடி.” என்றவளை என்னக் கணக்கில் சேர்க்க என, நிசப்தியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

குழந்தைக்காக என்றாலும் இவ்வளவு செய்வாளா? என்ற சந்தேகம் கூட வந்தது. சரியென்று சொன்னால் அப்பாவின் உயிரை முடிந்தளவிற்கு காப்பாற்றிக் கொள்ளலாம். வேண்டாமென்றால் இப்படியே இங்கேயே கோமாவில்தான் அப்பா இருக்க வேண்டும்.

இந்த ஒரு மாதத்தில் அவர் விழித்து ஒரு வார்த்தையாவது, இல்லை ஒரு பார்வையாவது கொடுக்க மாட்டாரா? என ஏங்காத, ஏன், வேண்டாத நாளே இல்லை. அது நடக்கவே நடக்காது என டாக்டர்கள் கை விரித்த நிலையில், ஸ்வாதி எடுத்திருக்கும் இந்த முயற்சியை அவளால் ஒதுக்க முடியவில்லை. வேண்டும் என்றும் தோன்றுகிறது, வேண்டாம் என்றும் ஒதுக்குகிறது அவளது மனது. அவளால் நிலையாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.

அதனால், “ஸ்வாதி நான் ஈவ்னிங்குள்ள உங்களுக்கு என் முடிவைச் சொல்றேன், ப்ளீஸ்… அதுவரைக்கும் கம்பெல் பண்ணாதீங்க.” என்றவள் நகர்ந்துவிட, தன்னைத் தாண்டிச் சென்றவளைக் கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வாதி.

“பாப்பா, நீ செய்றது எதுவும் சரியா படல. யாரோ ஒருத்திக்கு ஏன் இவ்வளவு செலவு செய்ற? குழந்தைக்காகனு நீ செய்றதை என்னால ஏத்துக்க முடியல. எப்படித்தான் காப்பத்தினாலும் அந்தாளு இன்னும் கொஞ்சநாள் தான் உயிரோட இருக்கப் போறார். அதுக்கு ஏன் நீ இப்படி செலவு செய்ற? இதெல்லாம் விக்கிக்கும் ரவிக்கும் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.” என மகளின் செய்கையைப் புரியாமல் கேட்டார் மதியழகி.

“ம்மா எல்லாம் எனக்குத் தெரியும். அவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்கணும் என்றும் எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நேரம் என்னை டென்சன் செய்யாம இரு. முக்கியமா இங்க நடக்குறதைப் பத்தி யாருக்கிட்டயும் பேசாம இரு, போதும்.” என எரிச்சலாய் கத்த,

“பாப்பா நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், நாளைக்கு உனக்கு எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாதுனுதான் நான் யோசிக்கிறேன். ஒரு குழந்தைக்காக நீ இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா சொல்லு. எனக்குத் தெரியும், உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு. எதுக்காக குழந்தை வேண்டாம்னு நீ இப்படி ஒரு முடிவு எடுத்த?” என வழக்கத்துக்கு மாறாக மதியழகி மகளை அதட்டிப் பேச,

“ம்மா…!” என அதிர்ந்த ஸ்வாதியைப் பார்த்து,

“நான் உனக்கு அம்மாங்கிறதை அப்பப்ப மறந்து போயிடுற. இந்தக் கல்யாணம் கூட யாரையோ பழிவாங்க, யாரையோ என்ன இந்த பொண்ணையோ, இல்லை விக்கியையோ பழிவாங்கத்தான் செஞ்சிருக்கனு கூட எனக்குத் தோனுது, அப்படித்தானா?” என மேலும் அதட்ட,

“ம்மா, உனக்கு என்ன பைத்தியமா? நான் ஏன் யாரையும் பழிவாங்கணும்? அதுவும் விக்கியை! கண்டிப்பா இல்லம்மா, நம்பு. குழந்தையைப் பத்தி நீ சொன்னது உண்மைதான். எனக்கு குழந்தை பெத்துக்க பயம். அதோட குழந்தை பிறந்துட்டா அழகு குறைஞ்சிடும்னு சொன்னாங்க. கேட்க முட்டாள் தனமாத்தான் இருக்கும், ஆனா அதுதான் உண்மை. மத்தபடி நான் யாரையும் பழிவாங்க நினைக்கல. இதை நீ நம்பணும். அப்புறம் இதெல்லாம் வேற யாருக்கும் தெரிஞ்சா, அடுத்து நீ என்னை உயிரோட பார்க்கவே முடியாது.” எனக் கோபமாகக் கத்திவிட்டு வெளியேறியவளை, கவலை அப்பிய முகத்தோடு பார்த்தார் மதியழகி.

இங்கு தனியாக வந்த நிசப்திக்குள் பல யோசனைகள். குழந்தை பிறந்த பிறகான அவளது வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். தான் எங்கே, எப்படி வாழ்வது என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி ராட்டினமாக நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது என்ற கேள்விதான், அவளைப் போட்டு உலுக்கியது.

நரேனும் உஷாவும் அவளுக்கு எப்போதும் துணை இருப்பார்க்கள் தான். ஆனால் தனக்காக அவர்கள் இருவரின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். அது சரியல்ல! அப்படி நடக்கக்கூடாது, நான் நடத்தி வைத்தது அந்த திருமணம். எந்தக் குறையுமின்றி அவர்கள் நன்றாக வாழவேண்டும், அவர்களைத் தொல்லைச் செய்யக்கூடாது என முடிவுக்கு வந்துவிட்டாள். துணைக்கு யாருமற்ற ஒரு வாழ்க்கை என்றால், நிச்சயம் அது பாலைவனம் தான். அப்படி தன்னால் வாழமுடியுமா என்று யோசிக்கும் போதே, உடல் ஒருமுறை பயத்திலே அதிர்ந்து நடுங்கியது.

முடியாது! முடியாது! நிச்சயம் முடியாது! இந்தக் குழந்தைக்குப் பிறகு தனக்கான வாழ்க்கையில் தன் தந்தையாவது இருக்க வேண்டும். அதற்காகவாவது அவர் உடல்நிலைத் தேறி தன்னிடம் வரவேண்டும் என்று எண்ணியவள், ஸ்வாதியின் திட்டத்திற்கு சரியென்றுவிட்டாள்.

நிசப்தி வந்து சொன்ன அடுத்த நிமிடமே அவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியவள், தன்னுடைய நண்பனின் மூலமே அவர்களை எர்ணாகுளம் அனுப்பி வைத்தாள்.

அதோடு நரேனுக்கும் உஷாவிற்கும் கடிதம் மூலம், ‘தன்னைத் தேட வேண்டாம், அப்பாவின் மருத்துவத்திற்காக சென்றுவிட்டதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும்’ தகவல் கொடுக்க வைத்தாள். புதிய மனிதர்கள், அறியாத ஊர், புரியாத மொழி என முதல் மூன்று நாட்கள் மிகவும் சிரமமாகத்தான் போனது.

வேனுகோபாலைப் பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் நம்பிக்கை வார்த்தை கொடுக்க, அதுவே நிசப்திக்கு போதுமானதாக இருக்க, முதல் பதினைந்து நாட்கள் அங்கேயே இருந்தவர்கள், அதற்கடுத்து அதே ஊரில் ஸ்வாதி ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

அந்த வீட்டில் அவள் செய்வதற்கு எதுவுமில்லை. அனைத்து வேலைகளுக்கும், வயதான தம்பதிகளை வேலைக்கு வைத்திருந்தாள் ஸ்வாதி. சென்னையில் பார்த்த டாக்டரின் தோழியின் மருத்துவமனையிலேயே நிசப்திக்கான ட்ரீட்மெண்டும் தொடங்க ஆரம்பித்தது.

தந்தையின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்க, வேறென்ன வேண்டும் அவளுக்கு. தன்னுடைய ட்ரீட்மெண்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் நிசப்தி.

ஆனால் இங்கு சென்னையிலோ நிசப்தியைக் காணோம் என்றதிலேயே, மூன்று ஆண்களும் துவண்டுதான் போயிருந்தனர். முக்கியமாக நரேன் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்திருக்ககூடாதோ, கூடவே இருந்திருந்தால் இப்படி தொலைத்திருக்க மாட்டேனோ, எங்கே எப்படி இருக்கிறாளோ? இருக்கிறாளோ இல்லை…’ என்று, அடுத்து அவனால் யோசிக்க முடியாமல் பைத்தியம் போல், சென்னைத் தெருக்களில் சுத்திக் கொண்டிருந்தான்.

விக்ரமும் ரவியும் தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் விசாரித்து, அதோடு நரேன் சொல்லியிருந்த, வேனுகோபால் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனையிலும் போய் விசாரித்தனர்.

“சார் நான் ரிஸ்க் எடுக்காதீங்கனு சொன்னேன் சார், பட் அந்த பொண்ணு கேட்கவேயில்லை. பணம் இல்ல, பார்த்துக்க முடியாது, உடனே டிஸ்சார்ஜ் பண்ணுங்க, அதோட யார் எங்களைக் கேட்டு வந்தாலும் எங்களைப் பற்றின தகவல்களைக் கொடுக்காதீங்க, அப்படினும் சொல்லிட்டுப் போச்சு சார். கண்டிப்பா எதாச்சும் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல தான் சார் சேத்துருக்கும். அங்க போய் எதுக்கும் விசாரிச்சுப் பாருங்க.” என ஸ்வாதியின் கையாளான அந்த டாக்டர் பேச, ரவி அமைதியாகக் கிளம்பினாலும் விக்ரமிற்கு அவன் மேல் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது.

அந்த டாக்டரை மேலும் கீழும் பார்த்தபடி நகர்ந்தவன், தன் காரில் சாய்ந்தபடியே அந்த மருத்துவமனையை நோட்டம் விட்டான். அப்போது வெளியில் நின்றிருந்த செக்யூரிட்டியை பார்த்து கையாட்டிவிட்டு நகர, அவனும் விக்ரமின் தோரணையில் யாரும் பார்க்கிறார்களா, என்றபடியே அவன் காருக்கு முன்னே வந்து நின்றான்.

“என்ன சாரு, எதுனா தகவல் வோணுமா? சொல்லு, அதுலாம் கமுக்கமா உஷார் பண்ணிடலாம்.” என விக்ரமின் கையில் இருந்த பணத்தைப் பார்த்துக்கொண்டே பல்லை இளிக்க,

“ஆஹான்! பணம் பத்தும் செய்யும்னு சொல்றது இப்பதான் புரியுது.” என விக்ரமும், பணத்தை விசிறி போல விசிறியபடி தனக்குத் தேவையானதைக் கேட்க, கேட்ட தகவல்கள் அனைத்தும் அடுத்த பத்து நிமிடத்தில் அவன் கையில் வந்து விழுந்தது.

அதில் இருந்த தகவல்களைப் பார்த்தவனுக்கு கண்மண் தெரியாதளவிற்கு கோபம். அதற்கு காரணமானவளை உண்டில்லை என்றாக்கிவிடும் கோபம். அதேயளவு கோபம், கொஞ்சமும் குறையாமல் நிசப்தியை வைத்திருந்த அவனது கெஸ்ட் அவுஸிற்கு கிளம்பிச் சென்றான்.

ஆனால் அவனுக்கு ஸ்வாதியைப் பற்றித் தெரியவில்லை. அவனுக்கு செய்தி தெரியும் முன்னமே, தெரிந்தால் அடுத்து என்ன செய்வான் என்பதை உணர்ந்துதான், இருவரையும் கேரளாவிற்கு பேக் செய்திருந்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 21, 2026 - 10:13 pm

இந்த ஸ்வாதியோட கொட்டத்தை யாராவது வந்து அடக்குங்களேன்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured