தளிர் 38
முகமெல்லாம் வீங்கி, முன் பற்களெல்லாம் தெறித்து விழுந்து, வாயெல்லாம் ரத்தம் சொட்ட, துவண்டு கிடந்த கமலின் கைகளைத் தன் சூ கால்களைக் கொண்டு மிதித்து, நசுக்கிக் கொண்டிருந்தான் விக்ரம். அவனின் முகம் கோபத்தில் இறுகி ரத்தமென சிவந்து கிடந்தது.
“சொல்லுடா நாயே, இப்போ சொல்லப் போறீயா, இல்ல இப்படியே அடிவாங்கி சாகப்போறீயா?” எனக் கர்ஜித்தவனைப் பார்த்து உடல் நடுங்கியது கமலிற்கு. ஆனாலும் அவன் வாயில் இருந்து ‘வலிக்குது, வேண்டாம், சொல்லிடுறேன்’ என்ற ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. அதிலேயே அவனது உறுதியும் எஜமானனுக்கு அவன் செய்யும் விஸ்வாசமும் தெரிந்துவிட, “ஷிட்!” என்றபடி மீண்டும் அவன் முகத்தில் ஓங்கி உதைத்து தள்ள, உதைத்த வேகத்திற்கு அந்த அறையின் மூலையில் சென்று விழுந்தான் கமல்.
“நரேன், இனி இவன் வாழத் தகுதியில்லாதவன், ஆனா அதுக்காக இவன் உடனே போய் சேர்ந்துடணும்னு இல்ல. ஒவ்வொரு நிமிசமும் இவனுக்கு நீ நரகத்தைக் காட்டணும். அப்படி காட்டும் போது, அந்த வலியில அவன் துடிச்சு துடிச்சு ஏன்டா என்னை இன்னும் உயிரோட வச்சுருக்கீங்க, சீக்கிரம் கொன்னுடுங்கனு கெஞ்சணும்.” என நரேனுக்கு கட்டளையாய் சொன்னவன், அவனுக்குப் பின்னே மயக்கத்தில் இருந்த மற்றொருவன் முகத்தில் ஓங்கி அறைந்தான்.
அதில் அவன் அதிர்ந்து விழிக்க, “என்ன டாக்டர் சார், ஒரு அறைக்கே மயக்கம் போட்டுட்ட, இன்னும் உனக்கு நான் என்னோட ட்ரீட்மென்ட் என்னனு காட்டவே இல்லையே. அதுக்குள்ளயே மடங்கி விழுந்துட்ட. அப்படி காட்ட ஆரம்பிச்சா, உன் நிலமை…?” என நக்கல் வலிந்த குரலில் கூறியபடியே தன் நாடியைத் தடவ,
“டேய் நான் யாருனு தெரியுமா? என்னோட பேக் க்ரவுன்ட் என்னனு தெரியுமா? எங்கிட்ட மோதினா என்ன நடக்கும் தெரியுமா? நீ சாம்பலாகிடுவடா, ஜாக்கிரதை!” எனத் தன் வலியையும் மீறிக் கத்திய அந்த மருத்துவன் முகேஷின் பேச்சைக் கேட்டு, தன் காதைக் குடைந்த விக்ரம்,
“ம்ச்சே! என்னா சவுன்டுடா? ஹைபிட்ச் தான், நீ கத்துன கத்துல என்னோட காதே போச்சு. ஏன் இப்படி ஹிஸ்டீரியா பேசன்ட் போல கத்துற? நீ டாக்டர்தானே, இல்ல ரவுடியா?” என அவனைக் கிண்டலடித்துவிட்டு பின், “உனக்கு பயம், உன்னை எதுவும் பண்ணிடுவோம்னு பயம். உன் ஃபேமிலியை, உன் ஹாஸ்பிடலை எதுவும் பண்ணிடுவோம்னு பயம், அப்படியா?” எனக் கேலி செய்தாலும்,
அவன் முகத்தில் இருந்த கோபத்திலும் அவன் கடைசியாகச் சொன்ன செய்தியிலும், நிச்சயம் அவன் எதுவும் செய்வான் என்று புரிந்து போனது அந்த பண பைத்திய மருத்துவனுக்கு.
என்ன செய்துவிடுவான் இந்த வக்கீல், மிஞ்சி மிஞ்சி போனால் தன்னை மிரட்டுவான், அடிப்பான், மற்றபடி உயிருக்கு சேதாரம் இருக்காது என்று மெத்தனமாக நினைத்து இருந்துவிட்டான். அவனைக் கடத்திக் கொண்டு வந்த இந்த இரண்டு நாட்களில் அடித்து, மிரட்டி எனப் பெரிதாக எந்தக் கொடுமையும் செய்யவில்லை. அதனாலயே இந்த மெத்தனம். ஆனால் இப்படி கத்தியின்றி, ரத்தமின்றி, கொஞ்சமும் குரலை உயர்த்தாமல், பேசும் அந்த இரும்புக் குரலில் தெரிந்து போனது, விக்ரம் தன்னை வைத்து ஏதோ செய்கிறான் என்று.
“என்ன டாக்டர், பயமா இருக்கா? நான் எதுவும் செய்யக்கூடாது, நீ வந்த மாதிரியே வீட்டுக்கு போகணும்னு நினைச்சா, நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு. இல்ல, மாட்டேன்னு நீ அடம்பிடிச்சனு வையேன், நீ இருப்ப, ஆனா உன்னை சுத்தி ஒன்னுமே இருக்காது. யெஸ், ஒன்னுமே இருக்காது. மொத்தமா அழிச்சிடுவேன். என்ன செய்யலாம், ம்ம்ம்… சொல்லு, என்ன செய்யலாம்? நான் சும்மா உன்னை மிரட்ட, சொல்றேன்னு நீ நினைச்சா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. நடக்காத, செய்யாத ஒரு விசயத்தை நான் சொல்லமாட்டேன், ரைட்!” என விக்ரம் கேட்க,
“இல்ல… இல்ல… எதுவும் பண்ணிடாத. அதுல என்னோட உழைப்பு மட்டும் இல்ல, என் குடும்பத்தோட மொத்த உழைப்பும் இருக்கு. ப்ளீஸ்… நீ எது செஞ்சாலும் அது என் மொத்த ஃபேமிலியையும் பாதிக்கும். ஒன்னும் செய்யாத… நான் சொல்லிடுறேன்.” என முகேஷ் கெஞ்ச,
“அட! இது ரொம்ப நல்லாருக்கே…! அப்ப உன்னை எதுவும் செய்ய வேண்டாம் நீயே சொல்லிடுவ, அப்படித்தான?” என்றவன்,
நரேனிடம் திரும்பி, “என்னடா, இந்த டாக்டர் சரியானத் தொடை நடுங்கியா இருக்கான்?” என்றபடியே அவனுக்கு எதிரில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், பின் அவன் முகத்தை தனக்கு நேராக இழுத்து,
“பொய் சொல்லிட்டு இங்க இருந்து, என்னை ஏமாத்திட்டு தப்பிச்சு போகணும்னு மட்டும் நினைச்ச… அப்புறம் நீ வீட்டுக்கு போகும் போது, நீ இருப்ப, ஆனா உன் வீட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. உன் குடும்பமும் இருக்காது, உன் குட்டி சாம்ராஜ்யமும் இருக்காது. என்ன செய்யலாம்?” என்றுவிட்டு, ‘இப்ப சொல்லு’ என்பது போல் தலையை ஆட்ட,
“விக்ரம் நான் சொல்றது எல்லாம் உண்மை. அதை நீ நம்பணும். இந்த கமல்தான் எல்லாத்துக்கும் காரணம். அவன் அந்தப் பொண்ணு நிசப்தியை லவ் பண்ணானாம். அதுக்காக, அவனுக்கு ஹெல்ப் பன்றதுக்காகத்தான் நான் இப்படி ஒரு தப்பை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்… நானும் லவ் மேரேஜ் பண்ணிருக்கேன், அவங்களோட பெயின் எப்படி இருக்கும்னு எனக்கும் புரியும். அதான் கமல் வந்து ஃபீல் பண்ணி சொல்லும் போது, என்னால ஹெல்ப் பண்ணாம இருக்க முடியல. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அந்தப் பொண்ணையும் அவ அப்பாவையும் கமல் நல்லா பார்த்துப்பான்.” என முகேஷ் பேசப் பேச, கமலுக்கு மயக்கம் வந்துவிட்டது என்றால், விக்ரமின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
‘இதென்ன புதுக்கதை’ என்பது போல் விக்ரம் பார்க்க, ‘இந்த ஸ்க்ரிப்ட் எல்லாம் எப்போ நமக்குத் தெரியாம அவன் கைக்கு போனது?’ எனக் கமலும் பார்க்க, ‘நான் சொல்வது தான் உண்மை என்பது போல் இருவரையும் பாவமாகப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் முகேஷ்.
‘இதென்ன புதுக்கதை?’ என விக்ரம் நினைத்தது எல்லாம் ஒரு நொடிதான்! அடுத்த நொடி, “டேய் ஃபிராடு, நான் லாயர்ன்றதையே நீ மறந்துட்ட போல… என்கிட்டயே உன் பிராடுதனத்த எல்லாம் காட்டுறியா, ராஸ்கல்! யாரை யார் லவ் பண்ணது, இவனா? இவன் நிசாவை லவ் பண்ணானா? இந்த பொறுக்கி அப்படி உன்கிட்ட சொன்னானா? ஓசில பீர் வாங்கி கொடுத்தா, நாய் மாதிரி பின்னாடி சுத்துற பொறுக்கி உண்மையா லவ் பண்ணானா?” என ஆத்திரம் தலைக்கேற கத்தியவன், தனக்கு முன்னே அமர்ந்திருந்தவனின் சேரை அப்படியே ஓங்கி உதைத்து தள்ளியிருந்தான்.
“ஏய் வேண்டாம்…” என்றுக் கத்தியபடியே முகேஷ் சேரோடு ஒரு மூலையில் விழ, வேகமாக சுவற்றில் மோதியதில் தலையில் அடிபட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது. இருவரையும் பார்த்தபடியே நின்றிருந்தவனின் தோற்றம் நிச்சயம் பயப்படும்படிதான் இருந்தது.
இன்று இவன் தங்களை உயிருடன் விடமாட்டான் போலவே, பணத்துக்காக என்று நினைத்து இப்போது உயிருக்கே மோசமாகிவிடும் போலவே… இந்த ஸ்வாதியின் பேச்சைக் கேட்டு பெரிய தப்பை செய்து விட்டோமோ?’ என்றெல்லாம் முகேஷ் யோசிக்க,
கமலோ, முகேஷ் சொன்ன இந்த செய்தியில் ஸ்வாதி தனக்கு ஏதோ ஹின்ட் கொடுத்திருப்பதாக நினைத்தான். அதனால் அதை அப்படியே விட மனமில்லாமல், ஒருவேளை இது ஒரு வாய்ப்பாகக் கூட அமையலாம். அப்படி அமைந்துவிட்டால் தங்களின் திட்டத்திற்கு வெற்றி தானே’ என்று மனதுக்குள்ளே திட்டம் போட்டவன், உடனுக்குடனே அதை செயல்படுத்தவும் செய்தான்.
“போதும், நிறுத்து விக்ரம். உனக்கு எப்பவும் நீ பெரிய அறிவாளினு நினைப்பு. பொண்ணுங்க உன்னை மட்டும்தான் சுத்துவாங்கனும் நினைப்பு. ஆனா நடந்தது என்னனு தெரியுமா? எதுவுமே தெரியாம, என்ன நடந்ததுனும் புரியாம, என்ன செஞ்சி வச்சிருக்கத் தெரியுமா?” என ஆக்ரோசமாகக் கமல் கத்த, கேட்டிருந்த மூன்று பேருக்கும், ‘இவன் என்ன சொல்ல வரான்’ என்று புருவம் சுருங்கியது.
“நிசா உன்னை லவ் பண்ணா அது மட்டும் தான் உனக்கு தெரியும். ஆனா நடந்தது என்ன தெரியுமா? நீனு நினைச்சு விக்னேஷை பார்த்து பேச, அதுல விக்கிக்கு நிசப்தியை ரொம்ப பிடிச்சி லவ் பண்ண ஆரம்பிச்சான். அதை டீசண்டாவே அந்த பொண்ணுக்கிட்டயும் வீட்டுலயும் சொன்னான். முதல்ல நிசப்தி யோசிச்சாலும், நீ ஸ்வாதியை விரும்புறது தெரிஞ்சு, அவளோட அப்பாவுக்காக சரினு சொன்னா. எல்லாம் சரியாத்தான் போச்சு, இடைல நீ வர வரைக்கும். நீ வந்து அந்தப் பொண்ணைத் தூக்கி, அடுத்து நடந்த எல்லாம் உன்னாலத்தான். நீ மட்டும் சும்மா இருந்திருந்தா இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருந்திருப்பாங்க. என் விக்கி அவனும் உயிரோட இருந்திருப்பான்.” என்றவனின் குரல், கோபத்தில் தொடங்கி தழுதழுப்பில் முடிந்தது.
இவற்றையெல்லாம் கேட்டிருந்த விக்ரமோ ஒன்றும் பேசவில்லை. அவனது மனதில் ஓடிய குற்றவுணர்ச்சியும் அதுதான். கமல் சொல்வதும் உண்மைதானே!
ஆனால் அவன் ஏன் செய்தான்? தன் தங்கையின் வாழ்க்கையைக் கெடுப்பதற்காக, விக்னேஷ் கொடுத்த போட்டோக்கள்… அது சரியா? ஏன் அதைக் கொடுக்க வேண்டும்? அதை மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால், அவனும் ஏன் அப்படி ஒரு தப்பை செய்திருக்கப் போகிறான்?
இனி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. அவனால் அதை எப்போதும் பேச முடியாது. நரேனும் இப்போதுதான் அந்த பழைய வலியில் இருந்து வெளியில் வந்து கொண்டிருக்கிறான். ரித்தியும் கணவன், குழந்தை என நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மீண்டும் அதைப் பேசி இன்னும் ஒரு பிரச்சனையை உருவாக்க விக்ரம் விரும்பவில்லை. விக்ரமின் யோசனை இப்படியிருக்க, முகேஷோ, ‘எம்மாடி! என்ன மூளைடா இவனுக்கு? அவ கோடுதான் போட்டுக் கொடுத்தா, இவன் ரோடே போட்டு முடிச்சிடுவான் போல. ஓ மை காட்! தெரியாம இந்த கூட்டத்துல சிங்காயிட்டோம் போல? இப்போ எப்படி இதுல இருந்து வெளிய வரது? இந்த வக்கீல் வேற நம்மளை இன்னும் சந்தேகமாத்தான் பார்க்குறான். எப்படி தப்பிக்க?’ என யோசனையினோடு கமலின் பேச்சில் கவனத்தை வைத்தான்.
நரேனோ, ‘கமல் சொல்வது சரிதான், ஆனால் இதில் கமல் எங்கிருந்து வந்தான்’ என்ற யோசனையில் நின்றான்.
இப்போது மீண்டும் கமல் பேச ஆரம்பித்தான். “அன்னைக்கு விக்கி, நிசாவைக் கடத்திட்டு வரும் போது, நானும் பின்னாடியே தான் வந்துட்டு இருந்தேன். அவனை எதுவும் செய்யவிடாம நான் தடுக்கணும்னுதான் பின்னாடியே வந்தேன். ஆனா… ஆனா… எல்லாம் முடிஞ்சி போச்சு. அதுக்கு முன்னாடியே நிசப்திகிட்ட கேர்ஃபுல்லா இருனு எச்சரிக்கை கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா விக்கி என்னை எங்கேயும் விடல. ஒருவேளை நான் அப்படி செஞ்சிடுவேன்னு என் மேல டவுட் வந்துருக்குமோ என்னமோ? அதனால என்னை அவன் கூடவே வச்சிருந்தான்.
ஆனா என்ன நடந்தது பார்த்தியா? அன்னைக்கும் நீ வந்துட்ட, அப்படி நீ வராம இருந்திருக்கலாம். வந்ததுனாலத்தான் இவ்வளவு பிரச்சனையும்…” எனக் கோபத்தில் கத்த,
“அதெல்லாம் இருக்கட்டும், ஆனா நீ எதுக்கு இதெல்லாம் பண்ற? நீ எப்படி இந்தப் பிரச்சனையில் வந்த? உனக்கும் நிசாவுக்கும் என்ன சம்மந்தம்?” என அதைவிடக் கோபமாக நரேன் கேட்க,
“ஏன், எதுக்கு, எப்படின்னு எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு ஒரே பதில் நான் நிசாவை லவ் பண்ணேன், லவ் பண்றேன். நீங்க நம்பினாலும் இல்லைன்னாலும் அதுதான் உண்மை.” என கமல் திமிராகப் பேச,
“வாட்! இதென்ன புது ப்ளானா? இன்னும் நீ என்ன என்ன சொல்லணுமோ சொல்லு.” என இப்போது விக்ரம் பேச,
“நான்தான் சொன்னேனே, நீ நம்பினாலும் இல்லைன்னாலும் அதுதான் உண்மைன்னு. எனக்கு நிசாவை ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போ மட்டும் இல்ல, முன்ன இருந்தே… காலேஜ்க்கு வந்த முதல்நாள் இருந்தே. ஆனா அப்போ எனக்கு இதை அவக்கிட்ட சொல்லத் தைரியம் இல்ல. பேச்சு வாக்குல விக்கி, நிசாவை விரும்புறதை சொன்னதும், எனக்கு முதல்ல வருத்தமா இருந்தாலும், என்னைவிட அவன் நல்லா பார்த்துப்பான்னு நினைச்சி, என் காதலை நான் அப்படியே மறைச்சிட்டேன். ஆனா அதுக்குப்பிறகு என்னென்னமோ நடந்துடுச்சி.
இப்போ நானும் ஒரு நல்ல பொசிஷன்ல இருக்கேன். என்னால அவளையும் அவ அப்பாவையும் பார்த்துக்க முடியும். என்னை நம்பு விக்ரம், எங்களை விட்டுடு.” என மிகவும் இரங்கியக் குரலில் பேச,
“ஓ…” என்றவன், “நீ சொல்றது எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அதை நான் எப்படி நம்ப முடியும்? முதல்ல அவங்க எங்க இருக்காங்கனு சொல்லு, எப்படி இருக்காங்கனு எனக்குத் தெரியணும். அது தெரியாம என்னால உன்னையோ, நீ சொல்றதையோ நம்ப முடியாது.” என்ற விக்ரம், நரேனைப் பார்க்க,
அவனோ கீழேக் கிடந்த கமலைத் தூக்கி மீண்டும் பழைய மாதிரி சேரில் அமர வைத்து கை, கால்களை இறுக்கிக் கட்டினான்.
“விக்ரம், எனக்கு எல்லாம் தெரியும், விக்கியோட சாவுக்கு நீயும் நிசப்தியும் தான் காரணம்னும் தெரியும். ஆனாலும் நான் உன்னை எங்கேயும் காட்டிக் கொடுக்கல. இத்தனைக்கும் விக்கி என்னோட உயிர் நண்பன். இதெல்லாம் நான் ஏன் சொல்லலனு யோசிச்சுப் பாரு. நிசாவுக்காக உன்னை இழுத்தா, அவ பேரும் வெளியே வரும்னுதான் நான் சொல்லல. ப்ளீஸ் விக்ரம், என்னை விட்டுடு. நானும் நிசப்தியும் எங்கயாச்சும் போயிடுறோம்.” எனக் கெஞ்ச,
இதைக் கேட்ட நரேனும் முகேஷும் அதிர்ச்சியில் விக்ரமைப் பார்க்க,
விக்ரமோ, “உனக்குத் தெரிஞ்சா நீ என்ன பண்ணிடுவ? உன்னால என்ன பண்ண முடியும்? ஒரு ஆணியையும் கழட்ட முடியாது. நிசா பேர் வராம, அவளை இந்த கேஸ்ல கொண்டு வராமலே முடிக்க என்னால முடியும். அதனால இந்த பயம் காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு, அவங்க எங்க இருக்காங்கனு மட்டும் சொல்லு.” என விக்ரம் முடித்துவிட,
முகேஷோ, ‘இந்த விக்ரமை சமாளிக்க முடியாது போலயே, எப்படி தப்பிக்க போறோமோ தெரியலையே…’ என மனதுக்குள்ளே புலம்பியபடி மற்றவர்களைப் பாவமாகப் பார்க்க,
“நரேன் இந்த டாக்டர எப்படி கொண்டு வந்தோமோ, அப்படியே கொண்டு போய் எங்க விடணுமோ அங்க விட்டுடு. நாளைக்குள்ள நமக்கு நியூஸ் வரும்.” என்றுவிட்டுக் கிளம்பிவிட,
“விக்ரம்… விக்ரம்…” என்ற கமலின் கத்தலை அவன் காதில் வாங்கவே இல்லை.
நரேனும் விக்ரம் சொன்னது போல, முகேஷைக் கொண்டு போய் மெரீனாவில், ஆளில்லாத ஒரு படகில் போட்டுவிட்டு வந்திருந்தான். அவன் எப்படி அங்கிருந்து வீட்டிற்கு வந்தானோ, அடுத்தநாள் விக்ரம் சொன்னது போலவே, அவர்களிடமிருந்து செய்தி வந்தது. ஆனால் அதை அனுப்பியது கமலின் எஜமானன் அல்ல, நிசப்தி! ஆம், அவள்தான் என்னைத் தேட வேண்டாம், என் அப்பாவின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறேன்.’ என்று கூறியிருந்தாள்.
***