தளிர் 40
உஷாவின் அப்பாவிற்கு மாரடைப்பு என்று மருத்துவர்கள் கூறி, சற்று சிரமமான சூழல்தான் என்றிருக்க, உஷாவால் அன்று அங்கிருந்து நகர முடியாத நிலை.
அவளின் பெரியன்னை சுமதியோ அவளைப் பார்த்ததுமே “எங்கடி வந்த? அதுதான் உன்னை மொத்தமா தலை முழுகி தொலைச்சாச்சு இல்ல. இன்னும் இங்க ஏன் வந்த, உங்கப்பன் இருக்காரா இல்ல, போயிட்டாரானு பார்க்க வந்தியா?” என கத்த தொடங்க,
“இல்ல இல்ல, நான் பார்த்துட்டு உடனே போயிடுறேன்.” என்றவளின் முன்னே ஆங்காரமாக ஏதோ பேச வந்தவரை, வேகமாகத் தடுத்து நிறுத்தினான் அவரது மகன் சுதாகர்.
“ம்மா, கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க. இப்ப இருக்குற சிச்சுவேஷன்ல அவ நம்மக் கூட இருக்குறது தான் நல்லது. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.” என்ற மகனை முறைத்துப் பார்த்தவர்,
“நம்ம குடும்பத்தோட மொத்த நிம்மதியையும் கெடுக்க வந்தவ, அவளைப் போயா வந்தது நல்லதுனு சொல்ற? உனக்கு எதுவும் மூளை குழம்பி போச்சா?” என அதே கோபத்துடன் கேட்க,
“ம்மா எனக்கு எல்லாம் புரியுது, எனக்கு மட்டும் அவ மேல என்ன பாசம் வழிஞ்சி ஊத்துதா என்ன? இப்போ அது பிரச்சனை இல்லை. அதெல்லாம் நாம அப்புறம் பேசி தீர்த்துக்கலாம். நான் சொல்ல வர்றது அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ண, எப்படியும் ஒன் வீக் ஆகும். அதுவரைக்கும் ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் நீங்களும் நானும் அலைய முடியுமா? முதல்ல இன்னைக்கு நைட் உங்களால இங்க இருக்க முடியுமா? சொல்லுங்க, நான் இருந்தா என் பொண்டாட்டி என்னை உண்டு இல்லனு ஆக்கிடுவா? நீங்க பார்த்துக்குவீங்கனா அவளை அனுப்பிடலாம்.” எனவும் சுமதி முறைத்துப் பார்க்க,
“முடியாது இல்ல, உங்களுக்கு இங்க இருக்க முடியாதுல்ல. அதனாலத்தான் சொல்றேன், அவளை அப்படியே அமுக்கி வைங்க. வீட்டுக்குப் போனதும் நீங்க என்ன செய்யணுமோ செஞ்சி, அவளை விரட்டி விட்டுருங்க?” என, எங்கே தன்னை மருத்துவமனையில் தங்க வைத்துவிடுவாரோ என்ற பயத்தில் சுதாகர் பேச, அவருக்கும் அப்போதுதான் அன்றைய நிலவரம் புரிய, ‘என்னமோ செய்’ என வேண்டா வெறுப்பாக போய் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்.
தாயை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு உஷாவிடம் வந்தவன், “அப்பாவுக்கு இப்படி ஆக நீதான் காரணம். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அப்போ அங்க இருந்த ரிலேடிவ்ஸ் எல்லாம் உன்னைப் பத்தி பேச, அப்புறம் அம்மா பேசனு ஒரே வாக்குவாதம். வீட்டுக்கு வந்து அமைதியாவே இருந்தார். இன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்துட்டார்.” என்று அவளுக்கு இரக்கம் வரும்படியாக ஏற்ற இறக்கத்துடன் பேச,
“இதுக்கு நான் என்ன பண்ண? அவர்தானே என்னை வீட்ட விட்டு போகச் சொன்னார்.” என்று உஷாவும் எரிச்சலில் பேச,
“வீட்ட விட்டு போகச் சொன்னா நீ அப்படியே போய்டுவியா? உனக்கும் சில பொறுப்புகள் இருக்கு, அவர் உனக்கும் அப்பாதான். அதை மறந்துடாத. இவருக்கு முடியல, இவரால அம்மாவுக்கு முடியல. என் வொய்ஃப் கன்சீவா இருக்கா. நான் ஒரு ஆள் என்னதான் பண்ண முடியும்? நீயே யோசிச்சுக்கோ…” என அவளை விட சுதாகர் எரிச்சலில் பேச,
“இப்போ என்ன செய்யணும்?” என உஷா சற்றே இறங்கி வர,
“நீ செய்னு நான் எப்படி சொல்ல முடியும்? நாளைக்கு உன் புருஷன் அதை ஒரு பிரச்சனையாக்கவா?”
“அவர் ஏன் பிரச்சனை பண்றார், அதெல்லாம் மாட்டார். அதோட அவர் அப்படிபட்டவரும் இல்ல. நான் என்ன செய்யணும், அதை மட்டும் சொல்லுங்க.”
“அப்பா டிஸ்சார்ஜ் ஆகுறவரைக்கும் கூட இருந்தா போதும். அம்மாவுக்கு இங்க இருக்க முடியாது. என் வொய்ஃப்பையும் தனியா விட முடியாது. எமர்ஜென்சினா நான் வந்துடுறேன், அதுவரைக்கும் கூட இருந்தா போதும்.”
“ம்ம், சரி நான் பார்த்துக்குறேன். நீங்க அவங்களைக் கூப்பிட்டு கிளம்புங்க.” என்றவள் போனை எடுத்து நரேனுக்கு அழைக்க, அது நெட்வொர்க் இல்லை என்று வர, “ம்ச்…” என்றுவிட்டு நிஷாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றவளிடம் அனைத்தையும் சொல்ல, “நல்லது தான் உஷ், நீ கண்டிப்பா அவர்கூட இருக்கணும். அப்போதான் உன் அம்மாவுக்கு செஞ்சதுக்கு அவருக்கு குற்றவுணர்ச்சி வரும். நான் நாளைக்கு வரேன்.” என்று வைத்துவிட்டு, ஒரு ஆசுவாச மூச்சை விட்டு வேகமாக வீட்டைப் பூட்டிக் கிளம்பினாள் கெஸ்ட் ஹவுசிற்கு.
இங்கு, “சீனியர் நீங்க ஏன் இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” என நரேன் கேட்க,
“ம்ச்…” என்ற விக்ரம் மிகுந்த யோசனையில் இருந்தான்.
“உங்களுக்கு அவக்கிட்ட எதுவும் கேட்கணும்னா வாங்க, அவ இப்போ வீட்டுலதானே இருப்பா, போகலாம், நேராவே கேளுங்க.” எனவும்,
“அவ வீட்டுல இருப்பானு இன்னும் நீ நம்புறியா? இருக்கமாட்டா! எப்போ நமக்கு எதுவும் தெரியக்கூடாது, நாம எதுலயும் இன்வால்வ் ஆகக்கூடாதுனு நினைக்கிறாளோ அப்போவே புரிஞ்சது, அவ ஏதோ ப்ளான் பண்ணித்தான் எல்லாத்தையும் செய்றானு.” என்ற விக்ரமிடம்,
“இல்ல சீனியர், நான் பார்த்த வரைக்கும் நிசா அப்படியெல்லாம் கிடையாது. கண்டிப்பா இதுல யாரோ இருக்காங்க. அதைக் கண்டுபிடிச்சா போதும்.” என நரேன் அவசரமாக சொல்ல,
“ம்ச் இல்லடா, அவளுக்குப் பின்னாடி யார் இருந்தாலும், அவளுக்குப் பிடிக்கலனு போது, நாம ஒதுங்கிக்கிறது தானே நல்லது. இனி என்ன வந்தாலும் அவளே பார்த்துக்கட்டும், நான் எங்கேயும் இல்ல.” என்று விக்ரம் போய்விட, நரேனுக்கு என்ன சொல்வது என்றேத் தெரியவில்லை.
நிசப்தி ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என எரிச்சல்தான் வந்தது நரேனுக்கு. உடனே வீட்டுக்கு கிளம்ப, அங்கே பூட்டியிருந்த வீடுதான் அவனை வரவேற்றது. விக்ரம் சொன்னது போலவே அவள் கிளம்பியிருந்தாள்.
அவள் போனுக்கு அழைக்க, அது ஸ்விட்ச் ஆஃப் என்று வர மனம் கலங்கிவிட்டது. உடனே உஷாவிற்கு அழைக்க, அவளோ இப்படி என்றுத் தந்தைப் பற்றிச் சொல்ல, கடவுளே எங்கே போனாள் இந்தப் பெண் என்ற பயம்தான்.
“சரி நீ பாரு, நான் கால் பண்றேன்.” என்றவன், நிசப்தி பற்றி பேசவில்லை. சொல்லி அவளையும் டென்சன் செய்ய மனமில்லை. இனி விக்ரமை நம்பி பலனில்லை என்று, அவனே தன் தேடுதலைத் துவங்க, நாட்கள் வாரமாகியும் அவனது தேடுதல் முடிவுக்கு வரவில்லை. இடைப்பட்டக் காலத்தில் மனைவியைப் பற்றி சுத்தமாக மறந்திருந்தான்.
விக்ரமோ அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் நடந்து கொண்டான். அதனால் ரவியும் ரித்தியும் கூட அதைப்பற்றி கேட்கவில்லை.
பலநாள் தேடலுக்குப் பிறகும் தோல்வியேக் கிடைக்க, என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவித்தவன், மனைவியிடம் சென்றான்.
“என்ன நரேன், நிசா பத்தி எதுவும் தெரிஞ்சதா?”
“ம்ச்… தெரியாம காணாம போனா கண்டுபிடிக்கலாம், இப்படி யாருக்குமே தெரியக்கூடாதுனு ப்ளான் பண்ணி காணாம போறவங்களைப் பத்தி என்னத் தெரிஞ்சிடப்போகுது?” எனச் சலிப்பாக சொன்னவன், “இப்போ எங்க எப்படி இருக்காளோ தெரியல. அப்பாவை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுவா. யாரும் அவளை மிரட்டுறாங்களானும் தெரியல. அப்படி இருந்தாலும் நம்மக்கிட்ட சொன்னாதானே தெரியும்.” எனப் புலம்பிக் கொண்டே இருந்தவனைப் பார்க்க உஷாவிற்கு வருத்தமாகப் போனது.
அதோடு எல்லாரையும் இவ்வளவு வருத்தப்படுத்தும் நிசாவின் மேல் கோபமும் வந்தது. என்ன நடந்தது என்று யாரிடமும் சொல்லாமல் போனதே, ஏதோ இருக்கிறது என்றுதான் யோசிக்க வைத்தது.
“நரேன் அந்த கமல்… அவன் என்ன ஆனான்? அவனுக்குத் தெரியாம இருக்க வாய்ப்பே இல்ல.”
“ம்ச்… அவன் இன்னும் நம்ம கஷ்டடிலதான் இருக்கான், சீனியர் அவனை விட வேண்டாம் சொல்லிட்டார்.”
“அவனை விட்டா கண்டிப்பா நிசா இருக்குற இடத்துக்கு போக வாய்ப்பிருக்கு, அப்போ அவனைப் பிடிச்சிடலாமே…”
“ம்ம், உனக்குத் தெரிஞ்சது சீனியருக்குத் தெரியாதா? அவர் ஏதோ ப்ளான் பண்றார், என்னனு தான் தெரியல. வெயிட் செஞ்சிப் பார்க்கலாம், சரி நீ என்ன வீட்டுக்கு வரலையா?”
“ம்ம், அவருக்கு இன்னும் சரியாகல. டாக்டர்ஸ் சர்ஜரிதான் பெஸ்ட்னு சொல்லிட்டாங்க. அவங்க எல்லாம் யோசிக்குறாங்க. என்ன பண்றாங்க எதுவும் தெரியல. டிஸ்சார்ஜ் ஆனாதான் நான் வரமுடியும்.”
“ஓ… அன்னைக்கு வேண்டாதவங்க எல்லாம், இன்னைக்கு வேண்டியவங்க ஆகிட்டாங்க போல, அதான் நிசாவைப் பத்திக் கொஞ்சமும் கவலையே இல்லாம நீ நிம்மதியா இங்க இருக்க.” என்றவனின் குரலில், என்ன இருந்தது என்று உஷாவால் உணர முடியவில்லை.
“என்ன சொல்றீங்க நரேன்? அவ போனதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என் தப்பு என்ன? நீங்க என்னை ரொம்ப ஹர்ட் பண்றீங்க.” என்றாள் அதிர்ச்சியானக் குரலில்.
“என்ன ஹர்ட் பண்றாங்க? அப்பாவும் நிசாவும் இல்லைனா இன்னைக்கு நீ எங்க இருந்திருப்பனு யோசிச்சுக்கோ. உனக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவங்க மேல, கொஞ்சம் கூடவா உனக்கு நன்றியுணர்ச்சி இல்ல. ச்சே…!” என்றான் அப்பட்டமானக் கோப வெளிப்பாட்டுடன்.
“நரேன் என்ன பேசுறீங்கனு யோசிச்சுப் பேசுங்க. இந்தக் கல்யாணம் எனக்காக நடக்கல, உங்களுக்காக. உங்களுக்காக மட்டும் தான் நடந்துருக்கு. எல்லாம் மறந்துட்டீங்க போல? உங்க முன்னால் காதலி உங்களை ஏமாத்திட்டுப் போயிட்டாங்க, அதுல நீங்க பைத்தியம் ஆகிடக்கூடாதேனு பயந்து என்னை கன்வின்ஸ் செஞ்சி இந்த மேரேஜை நடத்திருக்காங்க. நான் என்னமோ உங்களுக்காக ஏங்கித் தவிச்சு காத்துக் கிடந்த மாதிரி பேசுறீங்க.” என உஷாவும் பதிலுக்குப் பேச,
“ஹேய்… என்ன… நான் பைத்தியம் ஆகிடக்கூடாதுனு கல்யாணம் செஞ்சி வச்சாங்களா? ஆமா… அதுதான் அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலியாகும்னு அவ போனதும், கிடைச்சது சான்ஸ்னு வந்து என் வீட்டுல உக்காந்துட்ட இல்ல…? இன்னும் என்ன உனக்கு? யார் எப்படி போனாலும் உனக்கு என்ன கவலை? என்ன பொண்ணுடி நீயெல்லாம்…” என்றவன், தன் கன்னத்தில் விழுந்த அறையில் பேச்சை நிறுத்தியவன், பதிலுக்கு அவள் கன்னத்திலும் ஓங்கி ஒன்று விட்டிருந்தான்.
“என்னடி திமிரா? கட்டின புருஷனையே கை நீட்டி அடிக்குறியே… நீயெல்லாம் என்ன… ச்சே! கடைசில உன் புத்தியைக் காட்டிட்ட இல்ல. நன்றி கெட்ட ஜென்மம். உன்னைப் பார்த்தாலே கொல்லணும் போல் வெறி வருது. இதுதான் நான் உன்னைப் பார்க்குற கடைசி முறை. இனி உன் மூஞ்சிலக் கூட முழிக்கமாட்டேன். என் முன்னாடியும் வந்து நின்னுடாத.” என்றவன் வேகமாக அங்கிருந்து நகர,
அதுவரை அவன் பேசியதிலும் அடித்ததிலும் அதிர்ச்சியில் இருந்தவள், அவன் நகர்ந்ததும் தான் சூழ்நிலையை உணர்ந்தாள், கூடவே தன்னிலையும்.
வேகமாக ஓடியவள் கணவனுக்கு முன்னே நின்று, “சாரி, சாரி நரேன். நான் அப்படி செஞ்சிருக்கக்கூடாது. தப்புத்தான்… எல்லாம் என் தப்புத்தான்… ஆனா நீங்களும் என்னை அப்படி பேசியிருக்கக்கூடாது தானே! அண்ணன் திண்ணைனு சொல்லவும், அது என்னோட கேரக்டர தப்பா பேசுறமாதிரி அதான்…” எனக் கலங்கியக் குரலில் பேசியவளை, ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான்.
பிறகு உதட்டை ஏளனமாக வளைத்து, “அப்படி பேசினாலும் தப்பு இல்லைதானே!? என்னமோ ஒழுக்கமான குடும்பத்துல இருந்து வந்த மாதிரி…” என நக்கலாகச் சொல்லிவிட்டு, சிலையாக நின்றவளை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் விறுவிறுவென நடந்துவிட்டான்.
இந்த உலகம் அப்படியே தன் சுழற்சியை நிறுத்தி விட்டது போல் உணர்வு. நரேனா… நரேனா அப்படி பேசினான்? அதையே அவளால் நம்ப முடியவில்லை. எங்கே, எப்படி தவறு நடந்தது. அப்படியென்றால் இத்தனை நாளும் இதை மனதில் வைத்துதான் தன்னிடம் பேசினானா என்ற நினைவு வரும்போதே, உயிர் இப்போதே பிரிந்துவிட்டால் என்ன என்றுதான் தோன்றியது.
***
1 comment
எல்லாருமே சரியான கேணக் கிறுகன்ங்களா இருப்பானுங்க போலவே.
😀😀😀
CRVS (or) CRVS 2797