Home Antiheroதளிர் – 47

தளிர் 47

ஸ்வாதியைப் பொறுத்தவரை தனக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவள். வேண்டாமென்றாலும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள். அப்படித்தான் அவளுக்கு விக்னேஷும், நிசப்தியும். நிசப்தியை வேண்டாம் என்பதற்காக, அவள் வாழ்க்கையை நாசம் செய்தாள். விக்னேஷ் வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டாள் பைத்தியக்காரத்தனமாக.

விக்னேஷ் மேல் அவள் வைத்தது உண்மை காதல். அவனுக்காக எதுவும் செய்யும் பைத்தியக்காரக் காதல். உண்மையில் அது காதல் வகையறாவில் வராது. சைக்கோத்தனத்தின் உச்சக்கட்டம்.

தன்னுடைய ஒரு பொருள் அது தனக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற எண்ணம், வெறி!

விக்னேஷ் தன்னை விடுத்து நிசப்தியின் மேல் ஆர்வம் கொண்டான் என்ற கோபம்தான், ஸ்வாதியால் நிசப்திக்கும் விக்னேஷுக்கும் திருமணம் நடக்காமல் போகக் காரணம். விக்னேஷ் தன்னை உதாசீனப்படுத்தியக் கோபம்தான், அவள் நிசப்தியின் வாழ்க்கையை சிக்கலாக்கக் காரணம்.

இப்போதும் அந்த கோபம், வெறி எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இருந்தாலும், விக்னேஷ் மீண்டு வரவேண்டும் என்பது முக்கியமாகப் பட, அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் ஸ்வாதி.

லண்டன் வந்த இத்தனை நாட்களில் விக்னேஷிடம் நல்ல முன்னேற்றம். இந்தியாவில் அந்த மருத்துவர் கூறியது போல, இங்குள்ள மருத்துவர் விக்னேஷ் நலம் பெற, அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்.

அதோடு ஸ்வாதியின் பயத்தையும் பரிதவிப்பையும் பார்த்து, ஸ்வாதிக்காகவாவது விக்னேஷை சரி செய்து, அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார்.

விக்னேஷின் உடல்நிலை முன்னேற்றம் அடைய, அடைய ஸ்வாதியின் கோபம், வெறி, பழிவாங்கும் படலம் எல்லாம் பின்னே போய், அவன் நினைவு மட்டும் முன்னே நிற்க, விக்னேஷிற்கோ நிசப்தியை பழிவாங்கும் எண்ணம் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்ந்தது.

ஸ்வாதியின் போட்டோவை துடைத்து மாலையை மாற்றிக் கொண்டிருந்த மாமியாரை, ஒரு பொருள் விளங்காத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்தி. அவளது பார்வையை உணர்ந்தாலும், அதை அலட்சியம் செய்தபடி தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் மதியழகி.

சில நிமிடங்கள் அதேப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பின் ஒரு முடிவோடு, “ஏன் அத்த, உங்களுக்கு ஸ்வாதி ஹாஸ்பிடல் போனது, நிசாவை மிரட்டி பணிய வச்சது, அவ வாழ்க்கைல விளையாண்டது எதுவும்… எதுவுமே தெரியாதா?” என்றாள் தீர்க்கமாக.

மருமகளின் பார்வையை அலட்சியம் செய்ய முடிந்தவரால், அவளது இந்தக் குரலையும், அது கொடுத்த செய்தியையும் அலட்சியம் செய்ய முடியவில்லை. தன் வேலையை விடுத்து, “தெரியாது.” என்றார் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல்.

“ஆனா உங்களுக்கு தெரியும்னு எங்க ரெண்டு பேருக்கும், ஏன் என் அம்மாவுக்கு கூடத் தெரியும்.” என்றாள் ரித்தியும் அதே குரலில்.

“ம்ம், தெரிஞ்சா தெரியட்டும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு என்ன உங்களப் பார்த்து பயமா? ஹான்! இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு, நடக்குது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? அதோட என் பொண்ணே இப்போ உயிரோட இல்ல, இனி நான் யாருக்காக கவலைப்படணும், வருத்தப்படணும்? ஹ்ம்ம்… என்கிட்ட கேட்டு நீ என்ன தெரிஞ்சிக்க போற? ஒன்னும் சொல்லமாட்டேன். அதனால இந்த புலன்விசாரனை வேலையை விட்டுட்டு, நீயும் உன் புருஷனும் உங்க வேலையைப் பாருங்க.” என்றார் நக்கலாக.

அதில் தெரிந்த நக்கலை உணர்ந்த ரித்தி அமைதியாக பார்த்தாள். பதிலுக்குப் பதில் பேச எழுந்த நாவை அடக்கினாள். கண் முன்னே காலையில் கலக்கமாக ரவி பேசியதே நினைவுக்கு வந்தது.

“நான் வந்து பேசுறவரை அம்மாக்கிட்ட நீ எதுவும் பேசாத ரித்தி.” என்ற ரவியின் குரல் அவளை அடக்க, மாமியாரை ஒரு வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு கடந்து போனாள். பதில் பேச முடியாமல் செல்லும் மருமகளைப் பார்த்து சிரித்துக்கொண்டார் மதி.

அவருக்குத் தெரியாது, இதற்காக மிகவும் வருத்தப்படுவோம் என்றும், தன் மகன் தன்னை மொத்தமாகத் தள்ளி வைத்துவிடுவான் என்றும். அவர் ரித்தியைப் பார்த்து சிரிக்க, விதி அவரைப் பார்த்து சிரித்தது.

அன்று விக்ரமைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தான் ரவி. முகமெல்லாம் புதைகாடு போல் தாடியை வளர்த்து, தன்மேலே அக்கறை இல்லாமல், ஏனோதானோவென்று ஒரு உடையை மாட்டிக் கொண்டிருந்த நண்பனைப் பார்க்க, மிகவும் வருத்தமாக இருந்தது. அதோடு இது எல்லாவற்றிற்கும் காரணம் தன் குடும்பமும் தங்கையும் எனும்போது, அவனுக்குள் ஏற்படும் குற்றவுனர்ச்சியை தவிர்க்கவே முடியவில்லை. இவனை எப்படி சரி செய்வது என்பதுதான் மிகப்பெரியக் கேள்வியே.

நேற்று அவன் கேட்ட செய்தியில் இருந்து, மனைவியின் குற்றம் சாட்டும் பார்வை வேறு அவனைக் கொன்றது. யாருக்காக இல்லையென்றாலும் மனைவிக்காகவாவது இவனை சரி செய்ய வேண்டும் என்று, முடிவெடுத்துதான் விக்ரமைப் பார்க்க வந்திருந்தான் ரவி.

ஆனால் இப்படி ஒரு கோலத்தில் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெருமூச்சோடு, “என்னடா இது, இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி இருப்ப? உன்னைப் பார்க்கவே சகிக்கல.” என்றான் ரவி.

“ம்ச்… எல்லாமே போச்சு. இனி எப்படி இருந்தா என்ன? நீ சொல்லு.” என்றான் விக்ரம் அசட்டையாக.

“நான் சொல்றேன், சொல்லத்தானே வந்துருக்கேன். அதுக்காக நீ எப்படி இருக்கனு கேட்கக்கூடாதா? ம்ச்… நீ சாப்டியா, இல்லையா? அத்தை உன்கிட்ட பேசினாங்களா?” என்றான் விக்ரமை மேலிருந்து கீழ் பார்த்து.

“ம்ச்… இப்போ என்ன வேணும் உனக்கு? எரிச்சலைக் கிளப்பாதே, எல்லாத்துக்கும் இல்லை அது ஒன்னுதான் பதில். அக்கறை எல்லாம் காட்டாம, நீ சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு.” எரிச்சல் வெளிப்பட்டது விக்ரமிடம்.

“ம்ச்… விக்கி ரெண்டு மாசம் ஆச்சு அவ போய். இன்னும் அவளையே நினைச்சு உன் வாழ்க்கையை வீணாக்கப் போறியா? அவளுக்கு உன்கூட வாழ கொடுத்து வைக்கல அவ்ளோதான். போன ஒருத்திக்காக, இருக்குற எல்லாரையும் கொன்னுடாத.” என்று எரிச்சலாக முடிக்கும் முன்னே அவன்மீது பாய்ந்திருந்தான் விக்ரம்.

“ஷட்டப் ரவி! ஜஸ்ட் ஷட்டப்! அவ போயிட்டானு சொல்லாத, அவ இருக்கா. இங்க இருக்கா, என்கூட இருக்கா. அவ இல்லனு சொல்லாத டேமிட். அவ உன்னோட தங்கை. அவளை இப்படி பேச உனக்கு எப்படி மனசு வந்துச்சு? ஷிட்! நீ இப்படி நடந்துப்பனு நான் யோசிக்கவே இல்ல.” என்றவனை உருட்டி கீழேத் தள்ளியவன், அவனை விட்டு எழுந்து தன் சட்டையை இழுத்துவிட்டபடியே, முன் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்தான் ரவி.

“எனக்கு உன்கூட பேசணும் விக்கி. பிசினஸ் அன்ட் சேர்ஸ் பத்தி கொஞ்சம் தெளிவா பேசணும். சோ நீ நிதானமா, தெளிவா இருந்தா சொல்லு பேசுறேன், இல்லைன்னா இன்னொரு நாள் பார்ப்போம்.” என்ற ரவியின் பார்வையில், விக்ரம் தானாக எழுந்து தரையிலேயே அமர்ந்தான்.

“எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்ல ரவி. எனக்குமே என்னைப் பிடிக்கல. நான் என்ன செய்றேன், ஏன் இப்படி இருக்கேன் எதுவும் தெரியல. என்கூட வாழ வந்த பொண்ணு, என்கூட வாழாமலே வாழ்க்கையை விட்டு, இந்த உலகத்தை விட்டுப் போயிட்டா. அவ என்ன பண்றா, ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா, எதுவும் தெரியாம பிஸ்னஸ், கேஸ், கோர்ட்னு ஓடிக்கிட்டே இருந்துட்டேன். இனி அப்படி வேண்டாம், எதுவும் வேண்டாம்னு தோனுது. அதனால இதைப்பத்தி என்கிட்ட, எதைப்பத்தியும் பேச வேண்டாம் விடு.” எனத் தலையைக் கோதிக் கொண்டவனின் பார்வை, அங்கு மாட்டியிருந்த ஸ்வாதியின் போட்டோவின் மீது விழுந்தது.

“ம்ச் விக்கி… நீ உன்னை மட்டும் இல்ல, உன்னைச் சுத்தி யாரையுமே கவனிக்கல. அப்படி கவனிச்சிருந்தா இன்னைக்கு எதுவும் தப்பா நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. நீ செஞ்ச ஒரு தப்பு, அது எங்க எல்லாம் போய், எப்படியெல்லாம் முடிஞ்சிருக்கு தெரியுமா? அந்த பொண்ணோட வாழ்க்கை மொத்தமும் முடிஞ்சது. அவ இன்னைக்கு அனாதையா நிக்க நீ மட்டும்தான் காரணம் விக்கி. அதுக்கு நீ எந்த ஒரு விளக்கமும், காரணமும் சொல்லாத.” என கண்டிப்பாகக் கூற, அதை இல்லையென்று விக்ரமால் மறுத்துக்கூற முடியவில்லை. அதனால் அமைதியாக எதிரே வெறித்துக் கொண்டிருந்தான்.

“விக்கி நான் உன்கிட்ட சொல்லப் போறதை நீ கோபப்படாம, கவனமா கேட்கணும். இப்போ கோபப்பட்டா தெளிவா யோசிக்க முடியாது.” என்றான் ரவி. நண்பனின் சூசகப் பேச்சில் என்னக் கண்டானோ, ‘சொல்லு’ எனும் விதமாக அவனைப் பார்த்தான்.

“நேத்து ஆடிட்டர் வந்து கரென்ட் இயர் டாக்குமென்ட்ஸ் எல்லாம் செக் பண்ணார். அப்போ சில டாகுமென்ட்ல இருக்குற ப்ராபர்டி எல்லாம் சேல் ஆகிருக்கு. அன்ட் லாக்கர்ல இருந்த ஸ்வாதியோட ஜ்வல் எல்லாமே எடுக்கப்பட்டிருக்கு. அப்புறம் ஸ்வாதியோட அக்கவுன்ட்ல இருக்குற பணம் எல்லாமே ஆல்ரெடி டெபிட்டாகிருக்கு.” என்ற ரவியைப் பார்த்து, ‘என்னதான் சொல்ல வர’ என்ற பார்வையைக் கொடுத்தான் விக்ரம்.

“இதெல்லாமே ஸ்வாதிதான் செஞ்சிருக்கா விக்ரம். அவளோட நகை, நீ அவ பேர்ல வாங்கின ப்ராப்பர்டீஸ், அமௌன்ட் எல்லாத்தையும் அவதான் மிஸ்யூஸ் பண்ணிருக்கா. உனக்கு நான் சொல்றது புரியுதா, இல்லையா?” எனக் கேட்டவனிடம்,

“வாட் ஸ்வாதியா? நோ… நோ… ஸ்வாதி ஏன் செய்றா? வாய்ப்பே இல்லை. அவளுக்கு அப்படி என்ன இதுல இன்டென்ஷன் இருக்கு? நோ, நான் நம்பமாட்டேன்.” என ஆங்காரமாகக் கத்தியவனிடம்,

“இதுதான் இதுதான் வேண்டாம்னு நான் படிச்சு படிச்சு சொல்றேன். நீ நம்புற அளவுக்கு அவ வொர்த் இல்ல விக்ரம். நிசா உன்னை விரும்பினானு தெரிஞ்சதுல இருந்துதான், ஸ்வாதி இவ்வளவும் செஞ்சிருக்கா. அவளைப் பழிவாங்கத்தான் இவ்வளவும் செஞ்சிருக்கா. உனக்குப் புரியுதா?” என அவனுக்கு மேலக் கத்த,

“என்ன சொல்ற ரவி?” என விக்ரம் அதிர்ச்சியுடன் கேட்க,

“ம்ம், நீ நினைக்கிற மாதிரி ஸ்வாதி இல்ல விக்கி.” என்றவன் முதல்நாள் தனக்கு தெரிந்தவற்றைக் கூற ஆரம்பித்தான்.

அன்று ரவியைப் பார்க்க அவர்களது ஆடிட்டர் வந்திருந்தார். வந்தவரின் முகம் மிகவும் யோசனையில் இருந்தது. எதை எப்படி சொல்ல என்ற யோசனை அது.

அதைக் கவனித்தவன், “என்ன சுரேஷ், எப்போ ஃபாரின் ட்ரிப் முடிஞ்சு வந்தீங்க? எதுவும் பிரச்சனையா? உங்க ஷேர் வரலையா இந்த மன்த்?” என ரவியே ஆரம்பிக்க,

“நத்திங் ரவி, இது என்னைப்பத்தி இல்ல.” என்றவர், “நான் சொல்ல வந்ததை தப்பா எடுத்துக்கக்கூடாது. எனக்கு தெரியாம நீங்க வேற எதுவும் பிஸினஸ் ஆரம்பிக்கிறீங்களா? இல்ல விக்ரம் சாரா?” என்றார் அவர்.

“என்ன சுரேஷ் திடீர்னு? அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அதுவும் உங்களை விட்டுட்டு, உங்களை கன்சல்ட் பண்ணாம எப்படி? அதுவும் இல்லாம விக்ரம் வாய்ப்பே இல்ல. என்ன பிரச்சனை சொல்லுங்க, சொன்னாதானே எனக்குத் தெரியும்.” என்றான் ரவி.

“பின்ன ஏன் ரவி பிசினஸ் லாஸா? அப்படி இருக்கவும் சான்ஸ் இல்லயே? நான்தான் உங்க அக்கவுன்ட் செக் பண்றேனே…” என்றவர் மீண்டும், “அப்புறம் ஏன் உங்க ப்ராப்பர்டி பாதிக்கு மேல சேல் ஆகிருக்கு? உங்க சிஸ்டர் அன்ட் உங்க மதர் பேர்ல இருக்குற எல்லா ப்ராப்பர்டியும் விக்கப்பட்டிருக்கு. லாக்கர்ல இருந்த உங்க அம்மா அன்ட் ஸ்வாதியோட ஜ்வல்ஸ் எல்லாமே எடுத்திருக்கு. அப்புறம் விக்ரமோட ஹோல் ப்ராப்பர்டியும், அதாவது அவர் பேர்ல இருக்குற மொத்த சொத்தும் அடமானத்துல இருக்கு. இது உங்களுக்கு தெரியாம நடந்திருக்க வாய்ப்பே இல்லையே? விக்ரம்கிட்ட இப்போ போய் இதெல்லாம் விசாரிக்க முடியாது, அதனாலத்தான் உங்கக்கிட்ட வந்தேன்.” என்ற சுரேஷைப் புரியாமல் பார்த்தான் ரவி.

இது எப்படி நடக்கும்? எங்கள் இருவரையும் தாண்டி நடக்க வாய்ப்பே இல்லையே? இவர் ஏதோ புரியாமல் உளறுகிறார்’ இப்படித்தான் ரவியின் எண்ணம். பின் சுரேஷின் முகத்தில் தெரிந்த உண்மைத் தன்மையில் சற்று நிதானித்தான். வேக வேகமாக அனைத்தையும் செக் செய்தான். அவர் சொன்னது உண்மை என்று அடுத்தடுத்த சில நிமிடங்களில் புரிந்து போனது. ஆனால் ஏன், எப்படி? என்ற கேள்வியும், எதற்காக இப்படி என்ற பயமும்… ஒருவேளை ஸ்வாதியை ஏமாற்றி அல்லது மிரட்டி சொத்தை வாங்கிவிட்டார்களோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான்.

பின், “சுரேஷ் இவ்வளவு ப்ராப்பர்டி சேல் ஆகுதுன்னா, உங்களுக்குத் தெரியாம எப்படி? அன்ட் நீங்க ஏன் இதை எங்கிட்ட முன்னமே சொல்லல. உங்களை மீறி எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்ல சுரேஷ்.” என்ற ரவிக்கு, மெல்ல மெல்ல கோபம் எட்டிப் பார்த்தது.

“வாட்! நீங்க என்னை சந்தேகப்படுறீங்களா ரவி? முதல்ல உங்க அம்மாக்கிட்டயும் விக்ரம்கிட்டயும் என்ன நடந்ததுனு கேளுங்க. என்ன நடந்ததுனு தெரியாம நாம எந்த முடிவும் எடுக்க முடியாது. இப்போக்கூட எனக்கு உங்க மேல வருத்தம் இல்லை, மீதி இருக்குற ப்ராப்பர்டீஸ் எல்லாம் லோன்மேல இருக்குறதுனால மட்டும்தான், ஸ்வாதி கை வைக்கலனு என் யூகம். இல்லைன்னா மொத்தமா துடைச்சுட்டு போயிருப்பாங்க. விசாரிங்க, விசாரிச்சிட்டு சொல்லுங்க பார்ப்போம்.” என்ற சுரேஷ் கிளம்பிவிட, இன்னும் கூட அவர் சொன்னதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தான் ரவி.

இதைச் சொன்னால் விக்ரமும் இப்படித்தான் அமர்வான் என்று தெரிய, ஸ்வாதியைக் கவனிக்காத தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து போனான்.

பலமுறை ரித்தி கூட, “ஸ்வாதியும் அத்தையும் வெளியேப் போறாங்க, வராங்க, சிலநாள் நைட் ஸ்டே கூட வெளியே பண்றாங்க. அதை என்னனு விசாரிங்க ரவி. தேவையில்லாத பிரச்சனையில மாட்டிக்கப் போறாங்க.” என அக்கறையாகச் சொன்னதைக் காதில் கூட வாங்காத, தன் திமிர்தனத்தை என்ன செய்ய? அடுத்து எங்கு, எப்படி, யாரிடம் கேட்க எனத் தெரியாமல் அமர்ந்திருந்தவனுக்கு, சட்டென்று ஸ்வாதி எப்போதிருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்தாள் என்று, கண்மூடி யோசிக்க ஆரம்பித்து பட்டென்று திறந்தான்.

அன்று அவளது ஃப்ரண்ட் யாருக்கோ ஆக்சிடென்ட் என்றாள். அன்றுகூட மிகவும் வருத்தமாக இருந்தாளே என்றவன், பிரச்சனையின் நூலைப் பிடித்துவிட்டான். அந்த நொடி இருந்து தன் தேடலை ஆரம்பிக்க, அது கமல், விக்கி, நிசப்தி, அவளது அப்பா, ஹாஸ்பிடல் என வரிசையாகப் போய் நிற்க, ஒரு நொடி ஆடித்தான் போனான்.

‘ஓ மை காட்! எப்படி? எப்படி? அவனால் நம்பவே முடியவில்லை. ஸ்வாதியா இப்படி? விக்ரம் மேல் கொலைப்பழி விழுந்து விடக்கூடாது என்று நினைத்து, விக்னேஷை அவள் காப்பாற்ற நினைத்தாள் என்றாலும், அந்த கேஸ்தான் ஒன்றுமே இல்லாமல் போனதே? அதற்கு ஏன் விக்ரமைக் காப்பாற்ற என்ற நாடகம். அதைக்காட்டி விக்ரமைக் காதலித்தாள் என்பதற்காக இல்லை… இல்லை… விக்ரமைப் பார்த்தாள் என்பதற்காக அந்த பெண்ணிற்கு எவ்வளவு பெரிய தண்டனை? அவள் குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் நாசம் செய்துவிட்டாளே. உடல் இறுகியது.

விக்கியைப் பற்றி அந்த மருத்துவமனையில் விசாரிக்க, அவன் கோமாவில் இருந்தான், இப்போது இறந்துவிட்டான். என்று மட்டுமே பதில் கொடுத்தனர்.

***

You may also like

1 comment

M Sarathi Rio March 31, 2026 - 6:33 pm

இப்பத்தான் மாமனும் மச்சானும் துப்புத் துலக்கவே ஆரம்பிச்சிருக்கானுங்க போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured