முத்தமழை – 29
பாட்டியின் அதட்டல் முடிந்ததும், அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது.
அது சண்டைக்குப் பிறகு வரும் அமைதி அல்ல. பேசப்படாத வார்த்தைகள் காற்றில் நிற்கும் அமைதி.
வனிதா உதட்டை கடித்தபடி நின்றாள். அவள் பார்வை யாழினியைத் தவிர்த்தாலும், அவளின் இருப்பே எரிச்சலை ஏற்படுத்தியது.
ராஜலட்சுமி மட்டும் வேறுவிதமாக இருந்தார். அவர் பேசவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையையும், அங்கிருந்த அனைவரையும் கவனித்தார்.
யார் யாருடன் நிற்கிறார்கள்… யார் யாரை ஆதரிக்கிறார்கள்…
ராஜலட்சுமியின் கண்கள் அமைதியாக கணக்கிட்டன.
கர்ணன் சுவரில் சாய்ந்து நின்றபடியே தன் தாயைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். தன் குழந்தையின் வரவு அவரை எங்கேயும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறதா என கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படியான ஒன்றை அவர் முகத்தில் அவன் பார்க்கவே இல்லை, தாயின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அதுவே அவனுக்கு இதயத்தை துளைத்தெடுக்கும் வலியைக் கொடுத்தது.
ஆனால் அவனின் அமைதி பலருக்கு யாழினிக்கு புரிந்தது. யாழினி அதை கவனித்தாள்.
‘அண்ணா பேசல… ஆனா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருக்கார்… ஏன் இவ்ளோ யோசனை அவர்கிட்ட..’
என்ற அந்த எண்ணமே அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது.
சூழ்நிலை மேலும் கடினமாகிக் கொண்டே செல்வதை உணர்ந்த சீதா, மெதுவாக அந்த சூழலை இலகுவாக்க முயன்றார்.
“சரி… வாங்க, வாங்க சம்மந்தி சாப்பிடலாம். மற்றதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…” என்றார்.
அந்த வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு வேண்டுகோள் இருந்தது
‘இது சந்தோசமான தருணம், இதை இவங்க சண்டை போட்டு கெடுத்துடக்கூடாது’ அது மட்டுமே சீதாவின் பிரார்த்தனையும் கூட.
யாழினி அமைதியாக தலை குனிந்தாள். வனிதா விருப்பமின்றி நகர்ந்தாள். ராஜலட்சுமி மட்டும் மெதுவாக எழுந்தார்.
வெளியில் அமைதி. ஆனால் அவரது மனத்தின் ஆழத்தில் வன்மம் துளிர்த்துக் கொண்டே சென்றது. அவர் நகராமல் நிறபதை கவனித்த சுமித்ரா “அத்தை.. நாம வந்ததுல இருந்து இன்னும் வல்லியை பார்க்கல.. வாங்க போய் பார்த்துட்டு வந்துடலாம்..” என்று ராஜியிடம் கூறிவிட்டு, “கர்ணா மாமாவோட குழந்தைதானே எங்க குடும்பத்துல முதல் வாரிசு.. அதுதான் அத்தைக்கு சந்தோசத்துல பேச்சே வரல..” என தன் மாமியாரைப் பார்த்தபடியே சீதாவிடமும் கூற, மருமகளை நினைத்து எரிச்சல் வந்தது ராஜலட்சுமிக்கு.
அதுவும் உண்மைதான், வல்லியைப் பார்க்க வந்துவிட்டு இன்னும் அவளைப் பார்க்கவில்லை என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.
அந்த சூழலை சரி செய்யும் பொருட்டுதான் சுமித்ரா அப்படி சொன்னது. அது ராஜிக்கும் புரிந்தது. ஆனால் அவருக்கு வல்லியைப் பார்க்க விருப்பம் இருக்க வேண்டுமே..
அந்த இடத்தில் வேறெதுவும் பேச முடியாமல், மருமகளை மனதுக்குள் வறுத்தபடியே வல்லியைப் பார்க்க சென்றார் ராஜலட்சுமி.
அனைவரும் நகர்ந்தபின், யாழினி அங்கிருந்து அசையாமல் நின்றாள்.
கர்ணனைப் பார்த்து “ண்ணா…” என தயக்கமாக, மெதுவாக அழைத்தாள்.
தங்கையைத் திரும்பிப் பார்த்தான் கர்ணன்.
“அவங்க ஏதாவது பண்ணுவாங்களா…?” என்றாள் தாயை மனதில் வைத்தபடி
அவன் ஒரு நொடி தங்கையை ஆழ்ந்துப் பார்த்தான். அந்த பார்வையில் கோபம் இல்லை. தீர்மானம் மட்டும்.
“அவங்க நினைக்கிறதை நான் நடக்கவிட மாட்டேன் யாழி” என்றான் முடிவாக.
அந்த ஒரு வாக்கியம் அவளின் மனதில் இருந்த அழுத்தத்தை மெதுவாக தளர்த்தியது.
அவள் ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.
அந்த இரவு வீடு அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதியின் கீழ் பல மனங்கள் விழித்திருந்தன.
கர்ணனே நால்வரையும் கரூருக்கு அழைத்து வந்திருந்தான். அவனுக்கும் மனைவியோடு இருக்க ஆசைதான். ஆனால் பெண்கள் நால்வரையும் தனியே அனுப்ப மிகுந்த யோசனை. அதோடு சொக்கலிங்கத்தையும் பார்க்க வேண்டுமே. அவர் மிகவும் ஆவலோடு அவனுக்காக காத்திருப்பார் என்றும் தெரியும்.
காரில் மிகுந்த அமைதி. யாருமே பேசவில்லை. அடுத்து என்ன என்பது போல் தான் அனைவரின் எண்ணமும் இருந்தது.
கர்ணன் எதிர்பார்த்தது போலவே ஹாலிலேயே மகனுக்காக காத்திருந்தார் சொக்கலிங்கம்.
“இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி. வல்லியும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..” என்றார் குளறியபடி.
“ம்ம்… அவளுக்கு டயர்ட் ப்பா.. நாளைக்கு கூப்பிட்டு வரேன்..” என்ற கர்ணனிடம்,
“பரவாயில்ல தம்பி.. ரெண்டு நாள் இருந்துட்டே வரட்டும். இங்கே வந்தாலும் ரெஸ்டே இல்லாம வேலை செஞ்சிட்டு இருக்கும்..” என்றவர், “நான் படுக்குறேன்.. நீயும் ரெஸ்ட் எடு..” என பாண்டியனைப் பார்க்க, அவரும் சொக்கலிங்கத்தை வீல் சேரோடு அவரது அறைக்கு அழைத்து சென்றார்.
“மாமா.. பால் கொண்டு வரட்டுமா?” என சுமித்ரா கேட்க,
“ஹான் ஆமா சுமி, ஆனா பால் வேண்டாம். ஒரு டீ கிடைச்சா ஓக்கே.. கொஞ்சம் வொர்க் இருக்கு முடிக்கனும். ஆமா சுந்தர் எங்க.?” என்றான்.
“அவர் இன்னும் வரல மாமா.. அம்மா வீட்டுல இருந்து பசங்கள கூப்பிட்டு இப்போ வந்துடுவேனு சொன்னார்.. நான் டீ கொண்டு வரேன்..” என நகர,
“அண்ணி எனக்கும் டீ கிடைக்குமா.?” என்ற யாழியிடம்,
“தூங்கும் போது எதுக்கு டீ யாழி..?” என வனிதா முறைக்க,
“நானும் அண்ணாவும் தான் ஒர்க் பண்ண போறோம். எனக்கும் டீ கிடைச்சா ஓக்கே மாதிரி இருக்கும். அதான் கேட்டேன்..” என வெடுக்கென பேச,
“ஏய்..” என எரிச்சலில் கத்திய வனிதா, கர்ணனின் கூர்ப்பார்வையில் “அப்போ நான் வெட்டியா இருக்கேன்னு சொல்றியா..?” என எகிற,
“ஆமா புள்ளைங்கள விட்டுட்டு இங்க என்ன பண்ற..? கிளம்பு உன்னை வீட்டுல விட்டுட்டு வரேன்..” என கர்ணன் கூறவும், திக்கென்றானது வனிதாவிற்கு.
“அது அத்தை பார்த்துப்பாங்க..” என திணறவும்,
“என்ன அத்தை பார்த்துப்பாங்க, நீயும் விட்டுட்டு வந்துருக்க, சுமியும் விட்டுட்டு வந்துருக்கா? ஒரு ஆளா நாலு பேரையும் எப்படி பார்த்துப்பாங்க. அறிவு இல்லையா உனக்கு? முதல்ல கிளம்பு.. நாளைக்கு வந்து பேசு..” என எரிச்சலில் பேச,
அந்த குரலில் மறுக்க விரும்பாமல் “சரி..” என்றவள் தாயை முறைத்தபடியே தன்னறைக்கு செல்ல, அவளுக்கு பின்னே வந்த ராஜி அறையின் கதவை மூடி திரும்பினாள்.
“ம்மா… இப்படி அமைதியா இருந்தா நாம நினைச்சது நடக்கவே நடகாது.” கிட்டத்தட்ட கத்தவே செய்தாள்.
ராஜலட்சுமி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். மகளுக்கு உடனே பதில் சொல்லவில்லை. முதலில் மகளின் முகத்தை கவனித்தார்
பயம், அவசரம், கோபம். இதுதான் வனிதா.
“போர் அடிக்கணும்னா…” அவர் மெதுவாக தொடங்கினார், “எதிராளி எங்கே நிக்கிறான்னு முதல்ல பார்க்கணும்.”
“அப்படின்னா?”
“அவ இந்த வீட்டுக்குள்ள வரணும்.”
வனிதா புரியாமல் பார்த்தாள்.
“இங்க வந்தா தான்…
அவள எப்படி உடைக்கணும்னு தெரியும்.”
அந்த வார்த்தைகள் மெதுவாக விழுந்தாலும், மிகவும் அழுத்தமாக, ஒரு வித தீர்க்கமாக விழுந்தது.
வனிதாவின் கண்களில் ஒரு மின்னல். தாயின் இந்த வார்த்தைகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வல்லி பயப்படுவாளாளா? தெரியாது. ஆனால் ‘அவள் பயந்தால்?’ அந்த எண்ணம் அவளுக்குப் பிடித்திருந்தது.
வாசலருகில் ஒரு நிழல் நகர்ந்தது.
சுமித்ரா.
அவள் கேட்க நினைக்கவில்லை. ஆனால் சில வார்த்தைகள் கதவுகளைத் தாண்டி வெளியேறும்.
அவள் அசையாமல் நின்றாள்.
இந்த வீடு இனிமேல் வீடாக இருக்காது என்பது மட்டும் அவள் உள்ளத்தில் ஓடியது.
அவள் யாரிடமும் சொல்ல மாட்டாள். ஆனால் மறைக்கவும் முடியாது. நிச்சயம் ஏதோ ஒரு சூழலில் சொல்லிவிடுவாள். அது நிஜம்.
வனிதாவை அவள் வீட்டில் விட்டு, ரமேஷிடம் சில விசயங்களைப் பேசி, வீட்டிற்கு வந்து யாழினியோடு சேர்ந்து வேலையை முடித்து அவன் நிமிர பாதி இரவு கடந்திருந்தது.
உடல் ஓய்வுக்கு கெஞ்சியது. ஆனால் மனதில் இருந்த மகிழ்ச்சி அதை ஒடுக்கியது.
உறக்கம் வராமல் புரண்டவன், எழுந்து மாடிப்படியில் வந்து வானத்தைப் பார்த்து நின்றான் கர்ணன்.
இரவு வானம் மேகமூட்டமாக இருந்தது. மழை பெய்யாமல் காத்திருக்கும் வானம் போல — அவன் மனம்.
கைப்பேசியை திறந்தான்.
திரையில் ஒரு பழைய புகைப்படம்.
வல்லபி.
மூன்றாண்டுகளுக்கு முன் எடுத்தது.
அவள் சிரிப்பு. அதை விரல்களில் வருடியவனின் இதழ்களிலும் மெல்லிய ரசனை புன்னகை.
அவளி பார்வை. அவன் கண்களை மூடினான்.
“வல்லி…” அவன் உதடுகள் மென்மையாக ஒலித்தது.
அந்த நேரத்தில் திரை ஒளிர்ந்தது.
இதழ்கள் மேலும் சிரிப்பில் விரிந்தது.
வல்லபியிடமிருந்து ஒரு மெசேஜ்.
“மிஸ் யூ..” என
அவன் நீண்ட நேரம் பார்த்தான்.
பின் “மிஸ் யூ டூ..” என்று அனுப்பினான்.
“நாளைக்கு வந்துடுவேன்..”
அவன் பதில் எழுதவில்லை.
ஆனால் அவன் மறுத்தும் விடவில்லை.
அவன் கைப்பேசியை அணைத்தான். ஒரு நாள் கூட தனித்து தாக்குப்பிடிக்க மாட்டள் என்று தெரியும்.
‘வந்துவிடுவாள்’ என்ற புன்னைகயுடனே அறைக்கு வந்தான். அவன் நினைத்ததுதான் நடந்தது. அவள் வந்தாள் தான். ஆனால்?
காலை ஒளி மெதுவாக வீட்டு முன் பரவியது. சுமித்ரா தான் முதலில் எழுந்தாள். அவள் வாசலைத் திறந்து வெளியே பார்த்தாள்.
அந்த நேரத்தில் ஒரு கார் மெதுவாக வந்து அவள் முன்ணே நின்றது.
அவளது இதயம் ஒரு நொடி தன் துடிப்பை தவறவிட்டது.
‘இந்த நேரம் யார்?’ என யோசனையாகவே ஓரடி பின் நகர்ந்து நிற்க
காரின் கதவு திறந்தது.
முதலில் தெரிந்தது ஒரு பெண்ணின் காலடி.
பின்னர் புடவையின் முந்தானை ஓரம் காற்றில் அசைந்தது.
சுமித்ராவின் உதடு தானாக நகர்ந்தது.
“பாட்டி…”
1 comment
அட ராமா..! இப்ப யார் வந்தாங்கன்னே தெரியலையே..?
வல்லியா ? இல்ல வேற யாராவதா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797