Home Anti Heroineஅகானா – 69

அகானா – 69

by Vathani S

அகானா –  69 

“என்ன சொல்றாங்க மேடம்..?” என்று நக்கலாக கேட்டபடி வந்து எதிரில் அமர்ந்த அகானாவை உறுத்து விழித்தார் மைதிலி.

“ஹான் அய்யோ… முறைக்கிறாங்களே நவீன் அண்ணா, நீங்களும் பார்த்துட்டு சும்மா இருக்கீங்களே.?” என்றாள் தனக்கு பின்னே நின்ற நவீனைப் பார்த்து முகத்தில் பாவத்தைக் காட்டி.

“பாப்பா..” என பல்லைக் கடித்த நவீன், அகானாவுக்கு முன் வந்து மைதிலியை பிடித்து அந்த சேரோடு கீழேத் தள்ளியிருந்தான்.

“அச்சோ மேடம் விழுந்துட்டாங்களே..” என குரலில் பரிதாபத்தைக் காட்டினாலும், அது முகத்தில் சிறிதும் இல்லை.

செய்தியை கேட்டதில் இருந்து நவீன் நிதானத்திலேயே இல்லை. அகானா அளவிற்கு அவனுக்கு பொறுமையும் இல்லை. 

அவனின் கோபத்தை உணர்ந்து தான் மாலினியை கூடவே அழைத்து வந்திருந்தாள் அகானா.

“நவீ என்ன பண்ற.?” என்ற மாலினியை கண்டு கொள்ளாமல், மீண்டும் மைதிலியை அடிக்க பாய, அவனை அங்கிருந்த யாருமே தடுக்கவில்லை.

“டேய் பிச்சக்கார நாயே.. என் மேலயே கை வக்குறியா? உன்னை இருந்த இடம் தெரியாம ஆக்கிடுவேன்..” என ஆங்காரமாக கத்திக் கொண்டு எழுந்த மைதிலியை இப்போதுப் பிடித்து கீழேத் தள்ளிவிட்டாள் மாலினி.

“ஏய்..” என அவளிடமும் கத்திக் கொண்டு எழ முயறசித்தவள், அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த நபரைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

அதிர்ந்தது எல்லாம் ஒரு நொடிதான். பின் மிக சாதாரனமாக அவரைப் பார்த்தார். அந்த பார்வையில் அத்தனை வன்மம் கொட்டிக் கிடந்தது.

மைதிலிக்கு முன்னே வந்து நின்றவர், “நீ தான் இதுக்கெல்லாம் காரணமா?” என்றார் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி.

“நானா? அப்படியா?” என படு நக்கலாக கேட்டார் மைதிலி. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற எண்ணம் வந்துவிட்டது.

மைதிலியின் திமிரான பார்வையை வெறுப்புடன் பார்த்தவர், தளர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தார்.

அவர் பார்வை அந்த இடத்தைச் சுற்றி அளவிட்டது. அங்கு ஒரு மூலையில் ஹரிஷும், ஹரினியும் வினோத்தின் கைப்பிடிக்குள் அரண்டு போய் அமர்ந்திருக்க, வினோத்தோ மைதிலியின் மேல் கொலைவெறிப் பார்வையோடு அமர்ந்திருந்தார்.

“ஏன் இப்படி.?” என்றார் தளர்ந்து போன குரலில். இத்தனையும் பார்த்தும் இந்த உயிர் இன்னும் இந்த உடலை விட்டு பிரியாமல் இருக்கிறதே என்று அவருக்கே அவர் மீது வெறுப்பாக இருந்தது.

“ஏன் இப்படின்னா.?” என்ற மைதிலி “உனக்கு ஒன்னுமே தெரியாது. அப்படித்தானே.?” என கிண்டலாக கேட்டபடி தரையிலேயே சம்மனமிட்டு அவருக்கு எதிரில் அமர,

அதற்குள் மாலினி குழந்தைகளை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு, வினோத்தையும் கைத்தாங்கலாக அழைத்து சென்றிருந்தாள்.

“நான் இங்க இருக்கனும் மாலினி..” என்ற வினோத்திடம், 

“இப்போ குழந்தைங்க தான் முக்கியம். அவங்களுக்கு ஒன்னும் இல்லைன்னாலும், ரொம்பவே பயந்துட்டாங்க. முதல்ல அத்தைக்கிட்ட கொண்டு போய் காட்டனும் மாமா. அத்தையும் அங்க பயந்து போய் தான் இருப்பாங்க. அதுதான் இங்க இத்தனை பேர் இருக்கோமே, பார்த்துக்கிறோம்..” என வெகுவாக அவரை சமாதானம் செய்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்திருந்தாள் மாலினி.

“நீ பழிவாங்கனும்னா என்னைத்தானே பழி வாங்கிருக்கனும். அவங்களை ஏன்?” என மிகவும் உடைந்து போய் கேட்டார் ரவி.

“உன் பொண்டாட்டியும் பொண்ணும் உன் கண் முன்னாடி வந்துட்டா, நீ எப்படி பச்சோந்தியா மாறி அவ பின்னாடி போவன்னு எனக்குத் தெரியும்..” என்ற மைதிலியயை வெறுப்பாக பார்த்தார் ரவி.

“இதோ இந்த பார்வைதான்.. இதே பார்வைதான் உன் பொண்டாட்டியும் என்னைப் பார்த்தா? அதுக்கு தண்டனையாதான் இப்போ ஆஸ்பிடல்ல கிடக்கா.?” என முடிக்கும் முன்னே “மைதிலி..” என அந்த இடமே அதிரும் அளவிற்கு கர்ஜித்திருந்தார் ரவி.

“ஓ… உனக்கு இப்படியெல்லாம் கூட கோபப்பட தெரியுமா? அதுவும் அவளுக்காகா? அதுவும் எங்கிட்ட..?” என்றபடியே எழுந்தவளை நொடியில் கீழேத் தள்ளிவிட்டாள் அகானா.

அவள் முகத்தில் தெரிந்த ஆக்ரோசத்தில், விழுந்த மாதிரியே ஓரடி பின்னே நகர்ந்திருந்தார் மைதிலி.

ஆனால் அது பிரம்மையோ எனும் விதமாக “ஹான் அப்படியா? இப்போ இவர் எங்களை பார்த்ததும் எங்க பின்னாடி வந்துட்டாரா?” என கதை கேட்கும் பாவத்துடன், சற்று முன் தோன்றிய அந்த ஆக்ரோசம் சிறிதும் இல்லாமல், மைதிலிக்கு எதிரில் இருந்த மேஜையில் அவரைப் போலவே சம்மனமிட்டு அமர்ந்து கொண்டாள் அகானா.

அகானாவின் இந்த பரிணாமம் மைதிலிக்குள் கிலியைப் பரப்பினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இல்லன்னு வேற நீ சொல்லுவியா? இல்ல இங்க உட்கார்ந்துருக்காரே உன் அப்பா, அவர் சொல்லுவாரா? இல்ல நீங்க சொன்னா அதை நான் நம்பிடுவேனா?” என்றார் மிக மிக நக்கல் குரலில்.

“ஹோ… ஏம்மா உனக்கு இந்த பழமொழி எல்லாம் ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்றாள் அகானா மைதிலியின் அதே நக்கல் குரலில்.

“ஏய் என்னை கிண்டல் பண்ற வேலையெல்லாம் வச்சிக்கிட்டா..” எனும் முடிக்கும் முன்னே,

“உன்னால ஒன்னும் புடுங்க முடியாது, அம்மு மேல கை வச்சு பாரு, நீ இந்த இடத்துல இருந்து உயிரோட போக முடியாது..” என நவீன் சீறிக் கொண்டு செல்ல,

“ஹாஹா.. ஏற்கனவே அவ மேல கை வச்சத மறந்தாச்சு போல.. அப்போ எல்லாம் எங்கடா போனீங்க.” என்றார் தன் நக்கல் குறையாமல்.

“ஆமா… அன்னைக்கே.. எனக்கு தெரிஞ்ச அன்னைக்கே உன்னை முடிச்சிக் கட்டிருக்கனும், இதோ இங்க இருக்காரே, இவர் முகத்துக்காக உன்னை விட்டு வச்சது எங்க தப்புதான்..” என மீண்டும் நவீன் சீற,

“நவீன்..” என அவனை அதட்டிய ரவி, மாலினியைப் பார்த்து “நீ அவங்ககூட போகலையா?” என்றார் கோபமாக.

“அப்படியெல்லாம் எங்க பொண்ணை உங்ககிட்ட விட்டுட்டு போக முடியாது..” என பட்டென பதில் கொடுத்தான் நவீன்.

அதில் ரவியின் முகம் செத்து சுண்ணாம்பாகியிருந்தது. அதைப் பார்த்து யாருக்கும் இரக்கம் என்ற ஒன்று தோன்றவே இல்லை.

ஆனால் மைதிலி ரவியின் இந்த இயலாமையை மிகவும் ரசித்தார்.

“ஹாஹா… இதைப் பார்க்கும் போது மனசுக்கு கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்கு..” என்றவர், தன்னை அடிபட்ட பார்வை பார்த்த ரவியை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.

“தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். இதெல்லாம் கேட்டு கேட்டு காதெல்லாம் புளிச்சு போச்சு. என்னை சீண்டின வரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா நீங்க என் அம்மா மேல, என் ஆகன் மேல, என் ஆரி உயிரா நேசிக்கிற அவன் மகி மேல கை வச்சிட்டீங்க. இதுக்கு மேலையும் உங்களை விட்டு வைக்க நான் என்ன முட்டாளா? ஹான்..” என ஆங்காரமாக கத்தியவள், 

“ஹாஸ்பிடல் பிரச்சினையில இவரை ஏன் மாட்டி விட்டுட்டீங்க…” என்றாள் அதே ஆங்கார குரலில்.

“அச்சோ அது உன்னோட ஆகனா? எனக்கு தெரியாம போச்சே..” என பலித்து பேசிய மைதிலி சட்டென, “நான் என்ன தான் பணத்தைக் காட்டி ஆசை வார்த்தை காமிச்சிருந்தாலும், உன் அப்பா நினைச்சிருந்தா என்னை ஒரு தூசு மாதிரி தூக்கிப் போட்டுட்டு உங்க கூட வந்திருக்கலாம், வாழ்ந்திருக்கலாம்.” என நிதானமாக மைதிலி ஆரம்பிக்க, அகானாவின் முகத்தில் கோபம் தீயென தகிக்க, ரவியின் முகமோ அவமானத்தில் சிறுத்துப் போனது.

“போதும்.. இப்படியெல்லாம் பேசினா அம்முவுக்கு அவர் மேல கோபம் வரும். அந்த கோபத்தை காரணம் காட்டி நீங்க தப்பிச்சிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க. இத்தனை வருசத்துல இதை நாங்க பலமுறை கேட்டு கேட்டு சளிச்சுப் போயிட்டோம். அதனால தேவையில்லாம பேசாதீங்க..” என நவீன் மைதிலியை எச்சரிக்க,

“ண்ணா.. விடுங்க. அவங்க பக்கமும் நியாயம் இருக்கும். அவங்களுக்கும் நாம வாய்ப்பு கொடுக்கனும்..” என்ற அகானா மைதிலியை நேராக பார்க்க, அவரோ அகானாவை குதறிவிடும் நோக்கில் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

“உன் அம்மாவை விட நான் எந்த வகையில குறைஞ்சி போயிட்டேன். அழகு, படிப்பு, வசதி எல்லாத்துலயும் அவளை விட அதிகம் தான். ஆனா அவளைத்தான் உன் அப்பனுக்கு பிடிச்சது. உயிருக்கு உயிரான காதல். அதை எங்கிட்டயே வந்து சொல்றான். அப்போ எனக்கு பெருசா எந்த ஈடுபாடும் அவன்கிட்ட இல்ல. ஆனா உன் அப்பன் உருகி உருகி காதலிச்சதை பார்த்து, அந்த காதல் மொத்தமும் எனக்கு மட்டுமே வேணும்னு ஒரு பேராசையே வந்துச்சு. அப்போ அதை என்னால வீட்டுல சொல்ல முடில. சொல்லலாம்னு நினைக்கும் போது உங்க அப்பன் கல்யாணம் பண்ணிட்டான். அப்பவும் நான் ஒதுங்கி தான் இருந்தேன். மறுபடியும் என் கண் முன்னாடி வந்தான், அவனோட இயலாமையை நான் எனக்கு சாதகமா மாத்திக்கிட்டேன், இதுல தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியல. எனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா, ஒரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சும் எங்கிட்ட வந்தவன் மேள தப்பா, இல்ல எப்படியாவது எங்கிட்ட வந்தா போதும்னு நினைச்ச என் மேல தப்பா? உயிரா இருந்த உங்களையே அவன் நினைச்சுப் பார்க்காத போது, எனக்கு யாரோ நீங்க. உங்களை ஏன் நான் நினைச்சுப் பார்க்கனும்..” என்று ஆத்திரமாக கேட்க, அகானாவின் வெறித்த விழிகளில் மாற்றமே இல்லை.

ஆனால் ரவி என்ற மனிதர் கூனிக் குறுகி மிகவும் பரிதாபத்துக்குரியவராகியிருந்தார்.

“உன் குடும்பத்துக்கோ, உனக்கோ நான் தேவையில்ல. என்னோட பணம்தான் தேவைப்பட்டுச்சு. அந்த பணத்துக்காக உன் அம்மாவும் தங்கச்சியும் என் கால்ல விழுகாத குறையா வந்து என் வீட்டுல உக்காந்திருந்தாங்க. அதெல்லாம் மறந்து போயிடுச்சா.. இன்னைக்கு இந்த சமுதாயத்துல பெரிய மனிதர், கைராசியான டாக்டர்.. இவ்ளோ சொத்து இதெல்லாம் எப்படி வந்துச்சுன்னு மறந்து போயிடுச்சு போல. அந்த பிச்சக்காரி கூட வாழ்ந்திருந்தா இன்னும் பிச்சை தான் எடுத்திருக்கனும். அதை நினைச்சு பயந்து தான பாதியில ஓடி வந்த.. ஆனா உன் நடிப்ப குறை சொல்லக்கூடாதுப்பா, அப்படியே உண்மையான புருசன் மாதிரியே எங்கிட்ட நடிச்சியே..” என்றதும் ரவி அதிர்ந்து மைதிலியைப் பார்க்க, மைதிலியின் முகத்தில் அத்தனை ஆக்ரோசம்.

“என்ன பார்க்குற? நானும் ஒருத்தன் கூட வாழ்ந்து, வெளிய வந்தவதான். உண்மையான புருசன் பொண்டாட்டி உறவு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்.” என்றார் ஆத்திரமாக.

“அப்புறம்.. அப்புறம் ஏன்.?” என ரவி ஆயாசமாக கேட்க,

“அப்புறமும் ஏன் என்கூட இருந்தன்னு கேட்கறியா? பின்ன நான் என்ன செய்யனும்? ஏற்கனவே ஒருத்தனை விட்டுட்டு வந்து நீதான் வேனும்னு வம்படியா கட்டிக்கிட்டேன். உன்னை விட்டுட்டா இவளுக்கு புருசன்கூட வாழுற ராசியே இல்லைன்னு சொல்லுவானுங்க. அப்புறம் இந்த ஊர்க்காரங்க, உன் சொந்தக்காரங்க எல்லாம் ஏதோ எனக்கு நீ வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசுறாங்க. அதுலயும் உன் பொண்டாட்டி சொன்ன ‘எங்களை விட்டு, எங்களை மறந்து அவரால இருக்கவே முடியாது’ன்னு என்னைப் பார்த்து சவால் விட்டு சொன்னா. உன்னை அனுப்பி அவளை ஜெயிக்க வைக்க சொல்றியா.? அது என் உயிர் போனாக்கூட நடக்காது..” என்று ரவியின் முன் காளி போல் நின்று கேட்க, அவருக்குத் தொண்டையில் நீர் வற்றிப் போனது.

You may also like

1 comment

mriomrio28399 February 3, 2026 - 8:49 am

ஆக மொத்தம், மைதிலியோட பணத்துக்கு முன்னாடி மஞ்சரியோட காதலும், அகானாவோட பாசமும் விலைக்குப் போயிடுச்சு போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured