Home Anti Heroineஅகானா – 70

அகானா  – 70 

“போதும்.. உங்க குடும்ப சண்டையை போய் உங்க வீட்டுல வச்சிக்கோங்க.. எங்களை இந்த நிலமைக்கு கொண்டு வந்த உங்களை பழி வாங்கனும்னு எனக்குள்ள வெறியே இருந்தது. அதுல நியாயமும் இருக்கு.. ஆனா நீ நடந்துக்கிட்ட இந்த கேவலமான செயலுக்கு என்ன பேர்.. ஹ்ம்ம்.. ஏற்கனவே உயிரா இருந்த ரெண்டு பேரை பணத்துக்காக விட்டுட்டு வர ஒரு ஆள், உனக்கு மட்டும் எப்படி உண்மையா இருப்பாங்கன்னு யோசிக்க மாட்டியா..?” என அகானா ஆத்திரமாக கேட்க, ரவிக்கு மகளின் பக்கம் பார்வையைத் திருப்பக்கூட முடியவில்லை.

“என் அம்மாவுக்கு உன் மேல கோபமோ, ஆத்திரமோ எப்பவும் இருந்தது கிடையாது. இந்த சுயநலவாதிங்க குடும்பத்துல போய் சிக்கிட்டியேன்னு பரிதாபம் தான் பட்டாங்க. ஆனா அவங்களுக்கு தெரியல, இந்தாளுக்காக தன்னோட வாழ்க்கையை வேணும்னே தொலைச்சு, அந்த குடும்பத்துல போய் சேர்ந்த நீ ஒன்னும் நல்லவ கிடையாதுன்னு..” என்றதும், மைதிலிக்கு எரிச்சல் தான் வந்தது.

“இதோ பார்.. நான் செஞ்சதை இல்லன்னு சொல்லமாட்டேன். என் வாழ்க்கை, அதை எப்படி வாழனும்னு எனக்குத் தெரியும். அப்படித்தான் இப்போ வரை வாழ்ந்திருக்கேன். நீ பேசினதெல்லாம் கேட்டு எனக்கு ரோசம் வந்துடுமா? இல்ல உங்க மேல பரிதாபம் தான் வந்துடுமா? எதுக்கும் வாய்ப்பில்ல.” என அலட்சியமாக மைதிலி கூற,

“ஹ்ம்ம்ம் நீ பரிதாப படனும்னா இவரைப் பார்த்து தான் படனும். நீ பரிதாபப்படுற அளவுக்கு நானோ, என் அம்மாவோ ஒன்னும் குறைவா இல்ல..” என்ற அகானா, “இப்போ உன்னை மாமியார் வீட்டுக்கு அள்ளிட்டு போக வருவாங்க, அங்க போய் உண்மையான மாமியார் யாரு, அவங்க எப்படி நடத்துவாங்கன்னு பாரு..” என மைதிலியை விட அலட்சியமாக கூறித் தோளை குலுக்கிக் கொண்டாள். 

“எங்கிட்ட இருக்குற பணத்தோட மதிப்பு உனக்குத் தெரியுமா? ஹான் நீ என்னை இப்படி அனுப்பினா, நான் அப்படி வந்துடுவேன். அப்புறம் அந்த கேசை ஒரு இருபது வருசம் நடத்திட்டு, ஒன்னுமே இல்லாமாக்கிட்டு போய்ட்டே இருப்பேன்..” என அகானாவைப் பார்த்து கிண்டலாக கூறிய மைதிலியிடம்,

“ஓ.. அப்படி.! நான் இதை யோசிக்கவே இல்ல பாரேன். ஆனாலும் உன் அளவுக்கு எனக்கு வில்லத்தனம் வராது தான். என் அம்மாவும் அப்படி வளர்க்கலதான். ஆனா நீ ஒன்னை மறந்துட்ட.! இந்த குடும்பத்தோட ஜீன் எனக்குள்ளயும் சரிபாதியா இருக்குமில்ல, அந்த ஜீன் உன்னை இங்கேயே முடிச்சிவிட சொல்லுது. என்ன செய்யலாம்.. முடிச்சு விட்டுடவா?” என மிக மிக சாவகாசமாக, அதே நேரம் அழுத்தமாக கேட்க, அந்த குரலின் அழுத்தத்தில் மைதிலிக்கு அதிர்வுதான்.

அகானாவின் பேச்சைக் கேட்டு மைதிலி அதிர்ந்ததை விட, அதிகமாக அதிர்ந்தது ரவிதான்.

தன்னுடைய செய்கை தன் பெண்ணை எந்தளவிற்கு மாற்றி வைத்திருக்கிறது என்று அதிர்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

அதிலும் கொலை செய்யும் எண்ணம் தன் குடும்ப ஜீனில் வந்திருக்கிறது என்ற அவளின் வார்த்தை, அவரை அந்த நாளில் இரண்டாவது முறையாக உயிருடன் கொன்றிருந்தது.

அதுவரை இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நவீன் “அம்மு நமக்கு டைம் இல்ல..” என நியாபகப்படுத்த,

நவீன் கூறியதும், ரவீந்திரன் முன் வந்த அகானா “நீங்க ஒரு டாக்டர். நீங்க தான் என் அம்மாவுக்கு சர்ஜரி பண்ணனும்னு ஆரி சொல்றான். ஒரு டாக்டரா கூட நீங்க என் அம்மாவை தொடுறதுல எனக்கு விருப்பம் இல்ல. ஆனா..” என தன் உள்ளக் கொதிப்பையும், ஆத்திரத்தையும் காட்ட முடியாமல், தத்தளித்தாள்.

மகளின் வேதனையை உணர்ந்த ரவி, யார் இருக்கிறார்கள் இல்லையென்று எதையும் யோசிக்காமல் பட்டென அவளின் காலில் விழுந்திருந்தார்.

‘அய்யோ’ என மாலினி அதிர்ந்து கத்த, அகானாவோ அந்த இடத்தைவிட்டு வெகுதூரம், அந்த அறையின் மூலையில் போய் சுவரோடு சுவராக சரிந்து ரவியையே அதிர்ச்சி விலகாமல், “என்னை மன்னிச்சிடு அம்மு.. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு..” என கதறிக் கொண்டிருந்தவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

*****

இங்கு வினோத்தோடு குழந்தைகளைப் பார்த்த பிறகுதான் நித்தியாவை சமாளிக்கவே முடிந்தது. அவர்களைப் பார்த்தும் கூட, அது நிஜம் என உணரவே சில நிமிடங்கள் பிடித்தது. அதுவரை அவள் அனுபவித்த வேதனை அப்படியானது என அங்கிருப்பவர்கள் உணர்ந்து கொண்டனர்.

“ஏன் பாப்பா.? நான் தான் யார் கூப்பிட்டாலும் போகக்கூடாதுனு சொல்லிருக்கேனே.?” என ஹரினியை அனைத்துக் கொண்டு அழ,

“ம்மா மைதிலி பெரியம்மா தான் கூப்பிட்டாங்க. அவங்ககூட நாங்க ஏற்கனவே ஸ்கூல்ல இருந்து வந்திருக்கோம், அதனாலதான் வாட்ச்மேன் அங்கிளும் எங்களை அவங்ககூட அனுப்பி வச்சாங்க.” என ஹரிஷ் கூற,

“பெரிம்மா கூப்பிட்டா போகக்கூடாதுனு நீங்க சொல்லவே இல்லையே..” என இடை புகுந்தாள் ஹரினி.

பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லையென்பதால் தான், குழந்தைகள் மிகவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று, அங்கிருக்கும் அனைவருக்கும் புரிந்தது.

அதோடு இந்த கடத்தலைப் பற்றி குழந்தைகள் முன் பேச வேண்டாம் என அகானா ஏற்கனவே எச்சரித்திருக்க, அதனாலே பெரிதாக உணர்ச்சிவசப்பட்டு குழந்தைகளை பயமுறுத்தாமல், அந்தப் பேச்சை பெரிது படுத்தாமல் விட்டனர்.

ஆனாலும் நித்யாவின் பயத்தை யோசித்து, இருவரையும் பொறுமையாக பரிசோதித்தான் ஆரியன். அவன், பயப்பட எதுவுமில்லை என்று சொன்னபிறகே, அவரால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

“நீ பசங்களை கூப்பிட்டு வீட்டுக்கு கிளம்பு நித்தி, ரெண்டு நாளைக்கு ஸ்கூலுக்கும் அனுப்ப வேண்டாம். நடந்த பிரச்சினையை ஸ்கூல்ல சொல்லி, இனி அவளோ, அவ சம்மந்தபட்ட ஆட்களோ யார் வந்தாலும் புள்ளைங்கள அனுப்பக்கூடாதுனு சொல்லி வைங்க. இப்போ போய் முதல்ல புள்ளைங்கள குளிக்க வச்சி, பாண்டி பூசாரிகிட்ட மந்திரிச்சுட்டு வாங்க..” என கவிதா, நித்யாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்க, நித்யாவும் ‘கிளம்பலாம்’ என்பது போல தன் கணவனைப் பார்த்தார்.

வினோத்தின் முகம் மிகவும் கடினப்பட்டு போய் இருந்தது. அவர் கன்னத்தின் ஓரத்தில் தெரிந்த சிவப்பும், நெற்றியில் இருந்த புடைப்பும், அவருக்கும் அடிப்பட்டிருப்பதை உணர்த்தியது. அப்போதுதான் நித்யாவுக்கும் புரிந்தது, பிள்ளைகளோடு வந்து இவ்வளவு நேரமாகியும் இன்னும் கணவன் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையென்பது.

“என்ன ப்பா?” என கணவனின் அருகில் செல்ல,

“ம்ச்.. ஒன்னுமில்ல.. கிளம்பலாம்..” என முன்னே நடக்க, அங்கிருந்தவர்களுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, பிள்ளைகளோடு கணவனின் பின் நடந்தாள் நித்யா.

வீட்டிற்கு சென்று குழந்தைகளை குளிக்க வைத்து, சாப்பிட வைத்து என அவர்களை சாதாரணமாக்கினாலும், நித்யாவிற்கு கணவனின் மேலேயே தான் பார்வை இருந்தது.

வினோத்தோ அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

அவன் மூளை சில மணி நேரங்களுக்கு முன்னே நடந்ததில் மரத்துப் போயிருந்தது.

பிள்ளைகளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை வியாபித்திருக்க, தன் காருக்கு முன்னே பின்னே யார் வருகிறார்கள் என்று கவனிக்காமலே, பள்ளியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தான். 

ஒரு திருப்பத்தில் காரை ஒடித்து திருப்ப, அதற்கு எதிரே வந்த வண்டியோடு மோதியிருந்தான்.

இவன் அவசரம் எதிரில் வந்தவனுக்கு தெரியாதே! வினோத்தோடு வாதம் செய்ய ஆரம்பிக்க, சிறு கூட்டமே கூடிவிட்டது.

அப்போது அங்கு சிலர் வினோத்துக்கு ஆதரவாக பேசி, அவனைக் காருக்குள் தள்ளுவது மட்டுமே அவனுக்கு தெரிந்தது.

அடுத்து அவன் விழித்தது, குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் தான்.

பிள்ளைகளின் வாயில் பிளாஸ்டரும், கைகளைப் பின்னால் கட்டியும் கிடத்தப்பட்டிருந்தனர்.

இவனுக்கு கையும் காலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. மிகவும் சிரமத்திற்கு பிறகே, என்ன நடந்தது என யோசித்து, ‘தன்னைச் சுற்றி நடந்த அனைத்துமே நாடகம்’ என புரிந்து கொண்டார்.

நாடகத்தை நடத்தியவர் மைதிலி என்பதும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அனைத்தும் புரிய அவரது ரத்தம் கொதித்தது. இதே மைதிலிக்காக அவர் செய்த செயல்கள் எத்தனை? இன்று அதையெல்லாம் மறந்து தன் பிள்ளைகளையே கடத்தும் அளவிற்கு சென்றுவிட்டாரே, என வினோத்தின் கோபம் கரையை உடைக்க காத்திருந்தது.

“என்ன கொழுந்தனாரே..?” என்ற கிண்டல் பேச்சுடன் அந்த அறைக்குள் வந்தார் மைதிலி.

அவரைப் பார்த்து முறைக்க, “உன் மூளையில என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..!” என அதே கிண்டல் குரலில் கூற, அவரை வெறித்துப் பார்த்தார் வினோத்.

“கொழுந்தனாரே.. நான் மட்டும் தான் உனக்கு அண்ணியா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா நீ அப்படி நினைக்கலயே, உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு, பழைய சொந்தத்தை புதுப்பிக்க பார்த்த.. அதை பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா? ஹ்ம்ம் தப்பில்ல.. உங்க தேவைக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டு, தூக்கி எரிஞ்சா? ஹ்ம்ம் சொல்லு கொழுந்தனாரே.. நான் என்ன செய்யனும்.. நான் வாழாத அந்த குடும்பத்தோட ஆணி வேர் வரைக்கும் அழிக்கனுமா? இல்லையா?” என நக்கலாக ஆரம்பித்து, ஆக்ரோசமாக பேச, 

இந்த மைதிலியை, இப்படியான மைதிலியை முதல் தடவை பார்க்கிறான் வினோத்.

இந்த கோபமும், ஆத்திரமும் நல்லதற்கல்ல என்று அவனுக்கு புரிகிறது. அதோடு அவள் பேசிய ஆணி வேர் வரை என்றால், வினோத்தின் பார்வை வேகமாக குழந்தைகளிடம் பயத்துடன் சென்றது.

“ஹாஹா.. என்ன பயந்துட்டியா?” என வினோத்தையே பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, பரிகாசமாக சிரித்துக் கொண்டே கேட்க,

“நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க.? அண்ணியோ, அம்முவோ உங்க வாழ்க்கையில வந்து எந்த பிரச்சினையும் பண்ணல. அவங்க தனியா ஒதுங்கிதான் இருக்காங்க. நீங்க ஏன் இவ்ளோ பிரச்சினை கொடுக்குறீங்க?” என கோபமும் எரிச்சலும் கலந்து கேட்க,

“அதுக்குத்தான்.. நீ அவளை இன்னும் அண்ணின்னு கூப்பிடுற பார்த்தியா அதுக்குத்தான். உன் அண்ணனை விட்டு, அவனோட வாழ்க்கையை விட்டு போயிட்டா, முறையா விவாகரத்தும் வாங்கிதான் அவளை அனுப்புனீங்க. அதுக்குப் பிறகு அந்த உறவுக்கு மதிப்பே இல்லையே. அப்படி இருக்கும் போது இன்னும் அவளை நீ அண்ணின்னு கூப்பிட்டா, அப்போ நான் உன் அண்ணன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்.. சொல்லு என்ன அர்த்தம்.. இந்த ஊரும் உலகமும் சொல்ற மாதிரி, அவ வாழ்க்கையை பறிச்சிட்டு உள்ள வந்துருக்கேனா?” என அகங்காராமாக கேட்க,

வினோத்திற்கும் மைதிலியின் பேச்சில் கோபம் வந்துவிட்டது.

“அப்படி இல்லைன்னு சொல்ல வரீங்களா?” என நிதானமாக கேட்க, மைதிலியின் புருவம் நெற்றி மேட்டுக்கே சென்று வந்தது.

“ஓ.. அப்போ அதுதான் உண்மை..” என மைதிலி கேட்க.

“ஆமாம்.. அது மட்டும் தான் உண்மை. எங்க சித்தி வாழ்க்கையை பிடுங்கி தூர எறிஞ்சிட்டு, ஜிகினா பேப்பர் போல அந்த வீட்டுக்கு வந்தவ தான் நீ..” என அழுத்தமாக கூறியபடி அகானா மற்றும் மாலினியுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் நவீன்.

You may also like

1 comment

mriomrio28399 February 6, 2026 - 11:42 pm

எல்லாரும் இப்ப உணர்ந்து என்ன பிரயோஜனம்..? அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்…. என்கிறது தான் நிசம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to mriomrio28399 Cancel Reply

About Me

Featured